Tuesday, October 14, 2014



தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (6)

 

  ‘தமிழ்க் கூட்ட அழிவு நோய்’ - (TCCD)'

  ‘நோயாளிகள்’ மருத்துவரான விந்தை


"2100க்கு முன்னேயே இந்திய மொழிகளில் மரணமடைவதில் தமிழ் முதல் இடத்தைப் பிடித்தாலும் வியப்பில்லை." என்பதற்கான சான்றுகளை முந்தையப் பதிவுகளில் பார்த்தோம்.


 “கிராமங்களில் கூட விளையாட்டுப்பள்ளி முதலே குழந்தைகளை ஆங்கில வழியில் படிக்க வைக்கும் போக்கு , அதிவேகமாக வளர்வதும், அது போலின்றி , 'வறுமையின் காரணமாக' அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளும், அவர்களின் பெற்றோர்களும் தமிழ் வழியில் படிப்பதால் , தாழ்வு மனப்பான்மையில் உழல்வதும் அதிகரித்து வரும் நாடாகத் தமிழ்நாடு இருக்கிறது. பேச்சு, நடை,உடை, பாவனைகளில்  ‘திரிந்த மேற்கத்தியப் பண்பாட்டு நோய்' இப்போதே கிராமங்களில் வேகமாக வளரத் தொடங்கியுள்ளது.” என்பதையும்,

தமிழ்நாட்டில் உள்ள இந்த நோயானது, ‘தமிழ்க் கூட்ட அழிவு நோய்’ -  “ Tamil colony collapse disorder” (TCCD)”  என்று இந்த நோயை அடையாளப் படுத்தக்ககூடிய வகையில், அமெரிக்காவில் தேனீக்கள் அழிவை ஏற்படுத்தி வரும்  ‘கூட்ட அழிவு நோய்’[ “colony collapse disorder” (CCD)] என்பதுடன் ஒப்பிடக்கூடிய அளவில் உள்ளது." என்பதையும் முந்தைய பதிவுகளில் பார்த்தோம்.

இந்த நோயிலிருந்து விடுபட்டு, தமிழின் மரணப் பயணத்தைத் தடுத்து நிறுத்த வழியில்லாதவாறு,தமிழ்நாட்டில் இந்த நோயில் சிக்கியவர்களில் ‘வீரியமான நோயாளிக'ளே  மருத்துவர்களாக செயல்படும் விந்தையும் நிகழ்ந்து வருகிறதா? என்பதும் முக்கியமான ஆய்விற்குரியதாகும்.

தமிழின் மரணப் பயணத்தைத் தடுத்து நிறுத்தி,‘தமிழ்க் கூட்ட அழிவு நோயி'லிருந்து(TCCD) தமிழர்களையும் தமிழ்நாட்டையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, 'தமிழ், தமிழுணர்வு' அமைப்புகளுக்கு உண்டா? இல்லையா?

அந்த அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும், முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களும் தங்கள் குடும்பப் பிள்ளைகளை ஆங்கில‌வழியில் படிக்க வைத்துக்கொண்டிருந்தால், அவர்களும் அந்த நோயில் சிக்கியுள்ள நோயாளிகள் தானே? தமது பாரம்பரியப் பண்பாட்டு சூழலில் தாய்மொழி வழியில் அடிப்படைக்கல்வி கற்பதே, குழந்தைகளின் புலன் உணர்வுகள் தொடர்பான மூளை வளர்ச்சிக்கு நல்லது என்பதை உலக ஆய்வுகள் உணர்த்தியுள்ள நிலையில், அவர்களும் ஆட்டுமந்தைப் போக்கில் 'நோயாளி’களாகப் பயணிப்பது எந்த வகையில் சரி? ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்களில் பெரும்பாலோர் இந்தி தாய்மொழியிலேயே பள்ளிக்கல்வி கற்று,  இந்தியிலேயே நுழைவுத் தேர்வு எழுதியவர்களா என்பது பற்றியும்,  தமிழ்நாட்டில் விளையாட்டுப் பள்ளி முதல் ஆங்கில வழியில் படித்த மாணவர்கள், 8- ஆவதிலேயே நுழைவுத் தேர்வு பயிற்சியைத் தொடங்கினாலும், ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மிகக்குறைவு என்பது பற்றியும் கவலைப்படாமல், மற்ற தமிழர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டியவர்கள், இவ்வாறு ஆட்டுமந்தைப் போக்கில் பயணிப்பது சரியா?
 

ஒரு மனிதனாகட்டும், சமூகமாகட்டும், தமக்குள்ள பிரச்சினைகளில் எது எதற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவது என்பது தானே, அறிவுபூர்வ அணுகுமுறை? புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், அதற்கான மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளாமல், தனது முக அழகை அதிகரிக்கச் செய்வதற்கான ஆலோசனைகள் பெறுவதிலும், சிகிச்சைகள் பெறுவதிலும் ஈடுபடுவது புத்திசாலித் தனமா? உணர்வுபூர்வமாக தாம் ஈடுபடும் செயல்களை அறிவுபூர்வ விவாதத்திற்கு உட்படுத்தாமல் பயணிப்பது விட்டில் பூச்சி கதையாகிவிடாதா? உதாரணமாக, கீழ்வரும் பிரச்சினையையும், அது தொடர்பான போராட்டத்தையும் அறிவுபூர்வமான  கேள்விகளுக்கு உட்படுத்தலாம்.

“ ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்திருக்கும் 'கத்தி' திரைப்படம் தீபாவளி அன்று திரைக்கு வரவிருக்கிறது. அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கிறது.

“ ராஜபக்சே ஆதரவு பெற்ற நிறுவனம் லைக்கா. ஆகையால் 'கத்தி' படத்தை எதிர்க்கிறோம் என்று தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்த தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு அறிவித்திருந்தது. தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் தலைவர் வேல்முருகன் பத்திரிக்கையாளர்களிடம் கூறியது:

"'கத்தி' படத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தும், மதிக்காமல் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்து இருக்கிறார்கள். 'கத்தி' படத்தை பொறுத்தவரை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளார் சங்கம், சென்னை திரையரங்க உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களிடம் பேசி படத்தை வாங்கி வெளியிடாதீர்கள் என்று வலியுறுத்த இருக்கிறோம்.”

தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்த தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பில் உள்ள தலைவர்கள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் தமிழ்வழியில் படிக்கிறர்களா? ஆங்கில வழியில் படிக்கிறார்களா? அந்த அமைப்புகளுக்கு தமிழின் மரணப் பயணம் தொடங்கிவிட்டது தெரியுமா? அது தொடர்பாக கவலைப்பட்டு, இது வரை என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டார்கள்?

ராஜபக்சே ஆதரவு பெற்ற நிறுவனம் லைக்கா என்பதற்காக, அந்நிறுவனம் தயாரித்த திரைப்படம் தமிழ்நாட்டில் திரையிடப்படுவதை எதிர்ப்பவர்கள், ஐ.நா உள்ளிட்டு உலக அமைப்புகளில் ராஜபட்சேயின் 'பாதுகாவலராக' செயல்படும் சீனாவை இது வரை கண்டித்ததுண்டா? சீனப் பிரதமர் அண்மையில் இந்தியா வந்தபோது, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நின்றாவது அந்த வருகையை எதிர்த்து கறுப்புக் கொடி காட்டினார்களா? ராஜபட்சேக்கு சீனாவை விட வலிமையான ஆதரவை வழங்கும் நிறுவனமா லைக்கா?

கடந்த 10 வருடங்களில் வரைமுறையில்லாமல் சீனாவில் தயாரான பொருட்கள் தமிழ்நாட்டுச் சந்தையில் நுழைந்து, தமிழ்நாட்டின் சிறுதொழில் உற்பத்தியாளர்களின் வாழ்வாதார‌ங்களைச் சிதைத்தனவா? இல்லையா? அதனால் எத்தனை லட்சம் தமிழர்கள் வேலையிழந்தனர்? அவர்களில், வறுமை காரணமாக‌ தற்கொலை செய்து கொண்ட தமிழர்கள் எவ்வளவு பேர்? திருடர்களாக மாறிய தமிழர்கள் எத்தனைப் பேர்? அரசியல் கட்சிகளிடம் மனித சங்கிலியில் நிற்க ரூ 250, மொட்டை போட ரூ1000, பொதுக்கூட்டத்தில் அரங்கை நிரப்ப குவார்ட்டர், பிரியாணி, இலவசப் பயணத்துடன் ரூ 250 என்று , வேறு வழி தெரியாமல் பிழைத்து வரும் தமிழர்கள் எத்தனை பேர்? என்று பல்வேறு கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்த தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பில் உள்ளவர்கள் கவலைப் பட்டதுண்டா? அல்லது அவர்களும் 'எங்கிருந்தோ' கிடைக்கும் பணத்திற்காக இப்படி 'பிழைப்பு'ப் போராட்டங்கள் நடத்துகிறார்களா?


தமிழ்நாட்டில் உள்ள கீழ்வரும் ஆபத்து பற்றி இந்த அமைப்புகளுக்குத் தெரியுமா?

கடந்த பல வருடங்களாக, தமிழ்நாட்டில் பல்கலைக்கழகத் தேர்வுகளில் ஆங்கில வழியில் பயின்ற மாணவர்களும், தமிழ்வழியில் பயின்ற மாணவர்களும் ஆங்கிலத்தையும் தமிழையும் கலந்து 'தமிங்கிலீஸ்' என்ற புதிய மணிப்பிரவாள நடையில் விடைத் தாள்களில் எழுதி வருகிறார்கள். தமிழக அரசு ஆங்கில வழி மாணவர்கள் ஆங்கிலத்திலும், தமிழ்வழி மாணவர்கள் தமிழிலும் தேர்வுகள் எழுத வேண்டும் என்று ஆணைப் பிறப்பித்தது. உடனே 'தமிழுணர்வுத்' தலைவர்கள் அதை எதிர்த்தனர். அரசும், வாக்கு வங்கி அரசியலில், அந்த உத்திரவை ரத்து செய்தது. தமிழின் மரணப்பயணம் இந்த 'தமிங்கிலீஸ்' ஆதரவுப் போக்கால் துரிதமானது.இந்த தகவல் உலக அரங்கில் பரவும் வேகத்தில், உலக நிறுவனங்கள் இந்தியாவில் தமிழ்நாட்டுப்பல்கலைக் கழகப் பட்டங்களை வேலைவாய்ப்பில் தரமற்றதாகக் கருதும் வாய்ப்பிருக்கிறது. பல்கலைக் கழக மானியக் குழு விதிகளின் படி, அந்தந்த மொழி வழியில் படித்த மாணவர்கள் அந்தந்த மொழியில் எழுத வேண்டும் என்ற விதியை மீறியதாக, எவரும் உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தால், தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகப்பட்டங்கள் சட்டப்படி அங்கீகாரமற்றதாகக் கருதப்படவும் வாய்ப்புண்டு. இவை பற்றியெல்லாம் இனியாவது இந்த அமைப்புகள் கவலைப்படுவார்களா?

மனித சமூக அமைப்பில் இரத்த நாளங்களாக சமூக பிணைப்புகளும், நுண்ணிய இரத்த நாளங்களாக சமூக இழைகளும் உள்ளன. சமூக ஆற்றல் செயல்பாடு என்ற இரத்த ஓட்டத்தில் லாப நட்டம் பார்க்கும் 'கள்வர்'என்ற நோய்க்கிருமி நுழைந்த பின், தமிழ்ச் சமூக இரத்தமே அந்த நோயில் பண்புமாற்றம் அடைந்த பின், அந்த சமூகத்தில் மொழியும், மொழி சார்ந்த பாரம்பரியமும், பண்பாடும் அழிவதில் வியப்புண்டோ? அந்த நச்சு நோயின் விளைவாக திரிந்த மேற்கத்திய பண்பாட்டு நோயில் சிக்கி, ஆங்கிலத்தில் திரிந்த தமிழ் பேசும் நோயாளிகளாக தமிழர்கள் மாறுவதில் வியப்புண்டோ? தேனீக்கள் சுவடின்றி அழிந்தது போல, தமிழும், தமிழ்ப் பாரம்பரியமும் பண்பாடும் சுவடின்றி அழிவதில் வியப்புண்டோ? இவை போன்ற கேள்விகளை தமது மனசாட்சிக்குட்பட்டு, இது போன்ற அமைப்புகளில் உள்ளவர்கள் இனியாவது பரிசீலிப்பார்களா? இல்லையென்றால், இப்படிப்பட்டவர்கள் மூலம் ‘நோயாளிகள்’ மருத்துவரான விந்தை தமிழ்நாட்டில் அரங்கேறுகிறதா? இல்லையா? என்ற ஆய்வை தாமதமின்றி தொடங்க வேண்டியது அவசியமா? இல்லையா?

4 comments:

  1. ஐயா

    உங்கள் கேள்வி 'தமிழின் மரணப்பயணம் தொடங்கி விட்டதா' என்பது மிகை போல் தோன்றினாலும், அதில் பல உண்மைகள் உள்ளன.

    இந்த‌ த‌மிழின் அழிவு பாதைக்கு கார‌ண‌ம் தூய‌த‌மிழ் இய‌க்க‌மும், தெரிந்தோ தெரியாம‌லோ அத‌ற்கு ஆத‌ர‌வாக‌ போகும் த‌மிழ‌ர்க‌ளும்தான். ஸ்வாமி வேதாச‌ல‌ம் என்ற‌ ம‌றைம‌லை அடிக‌ளின் சிந்த‌னையில் 'த‌மிழ்' என்ப‌து ப‌ல‌நூறு ஆண்டு முன்பிருந்த‌ - அதாவ‌து ச‌ங்க‌ கால‌த்திய‌ - த‌மிழ் ; அதில் ச‌ம‌ஸ்கிருத‌ போக்கு க‌ல‌ந்துவிட்ட‌து. தூய‌ த‌மிழ் என்ப‌து வேளாள‌ர்க‌ள் த‌மிழ் என‌ அப்ப‌ட்ட‌மாக‌ ஜாதி அடிப்ப‌டியில் ஒரு க‌ற்ப‌னைத் த‌மிழை வைத்தார். மேலும், அது பேச்சுத்த‌மிழுட‌ன் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌து அல்ல‌; த‌மிழ் என்றால் எழுத்துத்த‌மிழ் . அது தொல்காபிய‌ கால‌ இல‌க்க‌ன‌த்துட‌ன் எழுத‌ப்ப‌ட‌ வேன்டும் . அத‌ற்கு முத‌ல் எதிரி ச‌ம‌ஸ்கிருத‌ம் , அத‌னால் வ‌ந்த‌ கிர‌ந்த‌ எழுத்து. இந்த‌ சிந்தனைப் போக்கில்தான் ம‌றைம‌லை அடிக‌ள், பார‌திதாச‌ன், ஞான‌முத்து தேவ‌நேச‌ன் ஆகிய‌வ‌ர்க‌ள் எழுதி, த‌மிழின் வீரிய‌த்தையும், வசீகரத்தையும் குறைத்து , அதை செல்லுப‌டியாகாம‌ல் செய்தனர். த‌மிழ் பிழைக்க‌ வேன்டும் என்றால், த‌னித்த‌மிழையும், அத‌ன் ஆத‌ர‌வான‌ ம‌றைம‌லை அடிக‌ள்- பார‌திதாச‌ன்-தேவ‌நேச‌ன் மொழிக்க‌ருத்தாக்க‌த்தை த‌மிழ‌ர்க‌ள் எடுத்தெறிய‌ வேண்டும். இல்லாவிட்டால் ஒரு ப‌க்க‌ம் தூய‌த‌மிழ் துதியையும் ம‌ற்றொரு ப‌க்க‌ம் த‌மிழை இளைய‌ த‌லைமுறை கை (அல்ல‌து வாய்?) விடுவ‌தையும் பார்க்க‌லாம், கேட்க‌லாம். இவ்விர‌ண்டும் ஒரே நாண‌ய‌த்தின் இரு ப‌க்க‌ங்க‌ள் . 100 ஆண்டுக‌ளாக‌ தூய‌த‌மிழ் இய‌க்கத்தின் சாத‌னை என்ன‌? த‌மிழை வாழ்க்கையில் இர‌ண்டாம் த‌ர‌ம் ஆக்கிய‌து.

    வ‌.கொ.விஜ‌ய‌ராக‌வ‌ன்

    ReplyDelete
    Replies
    1. Sir,
      Kindly bear with me for replying in English, due to unavoidable reasons.

      Your comments are valuable to explore the scope for arresting the Tamil death process.

      The following two posts in this blog explained, how the emotionally dominant ‘pure Tamil’ extremists succeeded to implement their misunderstanding of the word ‘orIi’ in Tholkapiam, even in scientific and technical terms. This, in turn, had caused the damage to Tamil, especially in the medium of instruction for the science & technology courses. Also they explained how the rules in Tholkappiam permitted the phonetic adoption of Sanskrit words into Tamil, even in Tamil poems. The same rules could be extended to all non-Tamil languages, especially, while importing the words in science & technology, like in Japanese language.
      ‘The Pitfalls in the Study & Translation of the Ancient Tamil Texts ‘(11)Dt.August 28, 2013; & (12) Dt. August 28, 2013

      Delete
    2. ஐயா

      விஞ்ஞான தமிழைப் பற்றிய உங்கள் கட்டுரையை படித்தேன்; உங்கள் கருத்துகளுடன் எனக்கு உடன்பாடே. அதே சமயம் தற்காலத் தமிழுக்கு ஏன் தொல்காப்பியத்தையே பிடித்து தொங்க வேண்டும்; தொல்கப்பியர் 2000 ஆண்டு முன் இருந்த , அவர் வட்டார (தமிழ்நாட்டின் தெற்கு கோடி?) இலக்கியத் தமிழை ஆதாரமாக வைத்து எழுதினார். 2000 ஆண்டுகள் பின்பு அதையே வைத்து 2014 வருடத்தின் பொருளாதார, தொழில்சார், விஞ்ஞான, சமூகவியலை எழுதப்பார்ப்பது விவேகம் அல்ல; அது தமிழை குழியில்தான் புதைக்கும். தமிழை 700 காலத்திய நன்னூல் வழியாக பார்ப்பது, ஆங்கிலத்தில் கேண்டர்பரி டேல்ஸ் எழுதிய சாஸர் காலத்திய ஆங்கில இலக்கணத்தை தற்காலத்தில் புகுத்துவது போல் இருக்கும்.

      தூயதமிழ் இயக்கம் 1960ல் இருந்து எப்படி விஞ்ஞான எழுத்து/படிப்பை நாசப்படுத்தியது என எழுதினீர்கள்; அதே சமயம் மற்ற புலங்களிலும் தூயதமிழ் சேதம் விளைவித்து உள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் எந்த முக்கிய (அல்லது சிறிய) தமிழ் இலக்கியகர்த்தாவை பார்த்தாலும் அவர்கள் தூயதமிழுடன் ஒத்துப் போகவில்லை; சுப்ரமணிய பாரதியில் இருந்து புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அசோகமித்ரன், ஜெயமோகன் வரை சாதாரண தமிழில்தான் எழுதியுள்ளனர். தூயதமிழ் பற்றாளர்கள் எவரும் இலக்கியத்திலேயோ, விஞ்ஞானத்திலேயோ, பொருளாதாரத்திலேயோ, சமூக சாஸ்திரங்கிளேயோ ஒன்றும் எழுதவும் இல்லை, விருப்பமும் இல்லை. 2000 ஆண்டு முன்னாளைய தூய (??) தமிழ் துதி ஒரு பக்கம், மறு பக்கம் எல்லாம் ஆங்கிலத்திலேயே படிப்பது/செய்வது. இதில் வேதாசலம் என்ற மறைமலை அடிகளே உதாரணம்; தன் டைரியையும், வணிகவிவகாரங்களையும் ஆங்கிலத்தில்தான் எழுதினார். தூயதமிழ் ஹிபாக்ரசி அவரிடமே ஆரம்பித்தது.

      மேலும் தற்கால பேச்சுத்தமிழை உதாசீனப்படுத்தி, தமிழர்கள் தமிழில் பேசுவது நாகரீகக் குறைவு என்று தூயதமிழாளர்கள் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் 90 வருடங்களாகிய புழங்கி வரும் தூயதமிழ் நச்சுவாயு கடந்த 20 வருடங்களில் தன் தீயவிளைவுகளை வெளிப்படுத்தி வருகிரது.

      மதிப்புடன்

      விஜயராகவன்

      Delete
    3. ஐயா,
      "தற்காலத் தமிழுக்கு ஏன் தொல்காப்பியத்தையே பிடித்து தொங்க வேண்டும்?" என்ற உங்களின் கேள்வி சரியே.
      தற்காலத் தமிழில் வட மொழிச் சொற்களைப் பயன்படுத்தக்கூடாது என்பதற்கு தனித்தமிழ் ஆர்வலர்கள் தொல்காப்பியம் 'ஒரீஇ' சூத்திரத்தைச் சான்றாகக் காட்டியதால், அவர்களின் புரிதல் தவறு என்பதை விளக்கியுள்ளேன்.மற்றபடி இலக்கணத்தைப் பொறுத்தமட்டில், கால மாற்றங்களுக்கு ஏற்ப மாறுதலுக்கு உட்படுத்திப் பயன்படுத்த வேண்டும் என்பதையும், காலுக்குத் தான் செருப்பு பொருத்தமாக இருக்க வேண்டுமே ஒழிய, செருப்புக்கு காலை மாற்ற முடியாது என்பதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.(தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (3) 'சமூகத்தின் சீரழிவும், இலக்கணத்தின் வீழ்ச்சியும்' Dt. September 27, 2014)

      மதிப்புடன்
      செ. அ . வீரபாண்டியன்

      Delete