Saturday, November 1, 2014


தமிழ்நாட்டு ‘திராவிட’ ‌அரசியலில் சிக்கிய 'ஐந்திறம்'



தொல்காப்பியம் பாயிரத்தில் 'ஐந்திர‌ம் நிறைந்த ' என்று உள்ளது. மறைந்து போன தமிழ் நூல்கள் வரிசையில் முக்கியமானதாக 'ஐந்திர‌ம்' கருதப் படுகிறது. அது தொடர்பான ஒரு 'சர்ச்சை' காரணமாக, அச்சிடப்பட்டு.வெளிவந்து, பின் 'சர்ச்சையில்' சிக்கி எரிக்கப்பட்டும், மீண்டும்  அச்சிட்டு வெளிவருவது தடுக்கப்பட்டதுமான சோதனைக்கு தமிழில் உள்ளான ஒரே நூல் 'ஐந்திறம்' ஆகும். அந்த 'சர்ச்சை' பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

“அண்ணாதுரையின் செல்வாக்கில் பெரியார் நீதிக்கட்சியை 1944இல் 'திராவிடர் கழகம்' என்று மாற்றினார். பிராமணர்களுக்கு திராவிடர் கழகத்தில் இடமில்லை என்பதோடு,  செல்வத்திலும் புலமையிலும் ஒழுக்கத்திலும் உயர்ந்திருந்த நீதிக்கட்சியில் இருந்த‌ பிராமணரல்லோதோரும் இல்லாமல், 'திராவிடர் கழகம்' பயணித்தது” என்பதை  ' இந்தியாவில் ‘வித்தியாசமான’ தமிழ்நாடு ' என்ற தலைப்பிலான‌  முந்தையப் பதிவில் பார்த்தோம்.

அதன் தொடர்விளைவாக தமிழ்நாட்டில் அறிவுபூர்வக் கூறுகள் பலகீனமாகி, உணர்ச்சிபூர்வ கூறுகள் வலுவடைந்ததா? என்பதும், அந்த போக்குகளில் சிக்கியதால், தமிழுக்கு பெரும் பாதிப்புகள் விளைந்ததா? என்பதும் ஆய்விற்குரியவையாகும். அந்த பாதகமானப் போக்குகளுக்கு விதி விலக்காக, இடையில் எம்.ஜி.ஆர் முதல்வரான பின்,  கி.ஆ.பெ.விஸ்வநாதன் போன்றோர் ஆலோசனைகளால், தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கி, அரசியல் தலையீடு, ஊழல் போன்றவற்றிற்கும், நிதிப் பற்றாக்குறைக்கும் இடமில்லாமல் பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்து, பேரா.வி.அய்.சுப்பிரமணியத்தை முதல் துணை வேந்தராக அமர்த்தினார். தமிழ்ப் பல்கலைக் கழகக் கட்டிடங்கள்,  கண‌பதி ஸ்தபதி மேற்பார்வையில் பாராம்பரிய வடிவமைப்பில், ஊழலுக்கும், ‘க‌மிசனுக்கும்’ இடமின்றி உருவாகின.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் இது போன்றவை தமிழுக்கு எதிர்பாராமல் கிடைத்த நல்ல வாய்ப்பாகும்.ஆனால் அந்த பாதகமான போக்குகளில் எம்.ஜி.ஆரும் சிக்கி தோற்றதற்குச் சாட்சியாக, 'ஐந்திறம் சர்ச்சை' (ainthiRam controversy)  விளைந்தது. அது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

உ.வெ.சா வழியில் தெய்வசிகாமணிக் கவுண்டர் பழம்சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து, மறைந்து போன தமிழ் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். மறைந்து போன தமிழ் நூல்களில் அவர் முயற்சியால் வெளிவந்த நூல் - சிலப்பதிகார உரையாசிரியர்கள் குறிப்பிட்ட - 'பஞ்ச மரபு' முக்கியமான இசை நூல் ஆகும்.

பின்னர் சென்னை Institute of Asian Studies   முயற்சியால் 'கூத்த நூல்' வெளிவந்தது. யோகியாரின் 'கூத்த நூல்' -உம் வெளிவந்தது.அந்த இரண்டு நூல்களுமே  சிலப்பதிகார உரையாசிரியர்கள் குறிப்பிட்ட 'கூத்த நூலாக' இருக்க முடியாது, என்பதைத் தகுந்த காரணங்களோடு நிறுவினார் இசை அறிஞர் வீ.பா.கா. சுந்தரம். ஆனாலும்  அந்த இரண்டு நூல்களின்  சிறப்புகளையும் அவர் வெளிப்படுத்தினார். இத்தகைய முயற்சிகள் எம்.ஜி.ஆர் சம்பந்தமில்லாமல் நடந்ததால், 'தி.மு.க ஆதரவு தமிழ்ப் புலமையாளர்கள்' அவற்றைக் கண்டு கொள்ளவில்லையா? என்ற கேள்வியையும் ஐந்திறம் சர்ச்சை எழுப்புகிறது.

இவ்வாறு மறைந்து போன நூல்கள்  controversy -சர்ச்சையுடன் வெளிவந்தாலும் , அவை ஒவ்வொன்றும் வெளிப்படுத்திய புதிய கருத்துக்களால் தமிழும் வளர்ந்தது. அந்த சர்ச்சைகள் காரணமாக அச்சிடப்பட்ட அந்நூல்கள் வினியோகிக்கப் படாமல் எரிக்கப்படவில்லை. அத்தகைய 'சர்ச்சை'யைப் பயன்படுத்தி அச்சிடபட்டு. எரிக்கப்பட்டும், மீண்டும்  அச்சிட்டு வெளிவருவது தடுக்கப்பட்டதுமான சோதனைக்கு தமிழில் உள்ளான ஒரே நூல் 'ஐந்திறம்' ஆகும்.

ஐந்திறம் பற்றிய   சர்ச்சை தமிழுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிய,‌ அந்த‌ 'சர்ச்சை' என்ன? என்பது தெரிய வேண்டும்.

                                

 

                            ஐந்திறம் பற்றிய  ‘ சர்ச்சை’ 


தொல்காப்பியம் பாயிரம் குறிப்பிட்ட நூல் ‘ஐந்திரம்’. கணபதி ஸ்தபதி முயற்சியால் எம்.ஜி.ஆர் வெளியிட்ட நூல் ‘ஐந்திறம்’. Pre-Pallavan index (University of Madras)  குறிப்பிடும் நூல் ‘ஐந்திரம்’. அந்நூல் ஒரு சமஸ்கிருத இலக்கண நூல். தொல்காப்பியம் குறிப்பிட்ட நூல் சமஸ்கிருத இலக்கண நூல் அல்ல‌ என்றும் ,  அது ஐந்திறம் என்றும் , அது  'எழுத்து, சொல், பொருள், அணி, யாப்பு' ஆகிய ஐந்தினைக் குறிக்கும் என்றும் தமிழ் அறிஞர் கே. சுப்பிரமணியம் பிள்ளை வெளியிட்ட கருத்தும் அதில் பதிவாகியுள்ளது. சென்னை மகாபலிபுரம் 'அரசு கட்டிடவியல் மற்றும் சிறபக் கல்லூரி' (govt College of architecture & sculpture) முதல்வராக திரு.வி.கணபதி ஸ்தபதி பணியாற்றிய காலத்தில், புலவர் வீரபத்திரனார்  அவரிடம் கீழ்வரும் தகவலைத் தெரிவித்தார். சரஸ்வதி மஹால் நூலகத்தில் இருந்து, பின்னர் காணாமல் போன, ‌ ‘ஐந்திறம்’ சுவடியைத் தான் பார்த்ததாகவும், அதை முழுவதும் மனப்பாடம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.  உடனே திரு.வி.கணபதி ஸ்தபதி அதை ஒலிப்பதிவு செய்து,  ஆராய்ந்தார். அதில் 'மயன் ஐந்திற தொழில் நுட்பம்' இருப்பதை அறிந்து, தமிழக அரசு அதைப் புத்தகமாக வெளியிடலாம் எனக் கருதி, அன்றைய கல்வி அமைச்சர் அரங்கநாயகத்திடம் கொடுத்தார். அரங்கநாயகம் அதை முதல்வர் எம்.ஜி.அர் கவனத்திற்குக் கொண்டு சென்றார். அது தொடர்பாக பொள்ளாச்சி மகாலிங்கம் போன்றோரைக் கலந்தாலோசித்த பின், அவர் தமிழக அரசு சார்பில் ‘ஐந்திறம்’  நூலை வெளியிட்டார். உடனே ஓளவை நடராஜன் போன்ற 'தி.மு.க ஆதரவு தமிழ்ப் புலமையாளர்கள்' அதைக் கடுமையாக ஊடகங்கள் வாயிலாக எதிர்த்தனர். 'தினமணி' போன்ற இதழ்கள் அந்த எதிர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. அந்த எதிர்ப்பின் காரணமாக, அரங்கநாயகம் கல்வி அமைச்சர் என்ற பதவியை இழந்தார். தினமணி ஆசிரியராக இருந்த ஐராவதம்.மகாதேவன் அப்பொறுப்பிலிருந்து விலகினார். இவை யாவும் திரு.வி.கணபதி ஸ்தபதி என்னிடம் தெரிவித்த தகவல்களாகும்.

‘ஐந்திறம்’ நூலின் அறிமுக உரையில்,  ' ஓவியக் கலை, சிற்பக் கலை, கட்டிடக் கலை, இசைக் கலை, நாட்டியக் கலை ' ஆகிய ஐந்தினைக் குறிப்பிட்டு , இசைக் கலையில் இலக்கியக் கலை ஒன்றியது என்று சொல்லி, இந்த ஐந்து கலைக்குமான நூல் ஐந்திறம்  என்று கணபதி ஸ்தபதி விளக்கியுள்ளார். எம்.ஜி.ஆர் வெளியிட்ட 'ஐந்திறம்' ஆனது, தொல்காப்பியம் பாயிரம் குறிப்பிட்ட நூலா இல்லையா என்பது விவாதத்திற்கு உரியது.  சுவடிகளிலிருந்து படியெடுத்து அச்சிடப்பட்ட, பழந்தமிழ் இலக்கியங்களில் இருக்கும் பாட பேதங்கள் பற்றி நிறைய ஆய்வுகள் உள்ளன. அதே போல் சரஸ்வதி மஹால் நூலகத்தில் இருந்த சுவடியை  புலவர் வீரபத்திரனார்        பல‌ வருடங்களுக்கு முன்  மனப்பாடம் செய்து , வாய் மூலம் வெளிப்படுத்தி, படியெடுக்கப்பட்டு அச்சான 'ஐந்திறம்' நூலில் நிறைய பாட பேதங்கள் இருக்க வாய்ப்புண்டு. இவற்றையெல்லாம் முன்னுரையில் குறிப்பிட்டு, மீண்டும் வெளியிடுமாறு முந்தைய ஆட்சியில் முதல்வராக இருந்த தி.மு.க தலைவரை, கணபதி ஸ்தபதி பலமுறை வற்புறுத்தினார். அதில் வெற்றி பெறாமலேயே மனமுடைந்து அவர் மரணமடைந்தார்.


கணபதி ஸ்தபதி வற்புறுத்தலின் பேரில், கட்டிடக்கலையில் உறைந்துள்ள இசையை (Frozen Music) பிரித்தெடுக்கும் 'லாஜிக்' (Logic) தொடர்பான 'ஐந்திரம்' சூத்திரங்கள் அடங்கிய கட்டுரையினை சமர்ப்பித்து, கணபதி ஸ்தபதி உருவாக்கிய கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை இலச்சினையாகக் கொண்டகோவையில் நடந்த உலக தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் பங்கேற்றேன். அம்மாநாட்டில் கணபதி ஸ்தபதி, முதல்வர் கருணாநிதியை சந்திக்க முயன்று, இயலாமல் போனதை, என்னிடம் தெரிவித்து மிகவும் வருந்தினார்.


தஞ்சை பெரிய கோவில் 1000 ஆவது ஆண்டு விழாவினை, அன்றைய தமிழக முதல்வர் 'கலைஞர்' கருணாநிதி வெகு சிறப்பாக கொண்டாடினார். (http://www.brihadeeswarartemple.com/millennium-celebrations.htm ) அவ்விழாவில் பங்கேற்க தமக்கு அழைப்பு வரும் என்று எதிர்பார்த்து, கணபதி ஸ்தபதி, அக்கோவிலின் தொழில் நுட்பங்கள் பற்றி ஒரு சிறு நூல் எழுதி, என்னை வற்புறுத்தி, அதற்கு ஒரு முன்னுரையும் எழுதி வாங்கினார். ஆனால் அவருக்கு அழைப்பு வராத செய்தியை கண்கலங்கி என்னிடம் தெரிவித்த சில காலத்திற்குப்பின், அவர் மறைந்தார்.

அறிவுபூர்வமாக நடைபெற வேண்டிய விவாதத்தை , எம்.ஜி.ஆர் எதிர்ப்பு காரணமாக உணர்ச்சி பூர்வமாக்கியது கலைஞர் கருணாநிதியும், அவர் சார்பு தமிழறிஞர்களுமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.(தமிழ்நாட்டுதிராவிடஅரசியலில் சிக்கிய திருக்குறள் ஆய்வுகள்; http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html)


இந்த உணர்ச்சி பூர்வ விவாதத்தில், கீழ்வரும் முக்கியமான லாபத்தை தமிழ் உலகம் இன்று வரை இழந்துள்ளது என்பது வேதனைத் தருவதாகும்.


                      ஐந்திறம் சர்ச்சையால் ஏற்பட்ட இழப்பு



ஐந்திறம் நூலில் வெளிப்பட்ட‌ ஓவியக் கலை, சிற்பக் கலை, கட்டிடக் கலை, இசையுடன் கூடிய பாடல் கலை, நாட்டியக் கலை ஆகிய ஐந்து கலைகள் ஒன்றுடன் ஒன்று  தொழில் நுட்ப ஆற்றல் வழி சம்பந்தப்பட்டது என்பதும், அவை - தமிழ் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள‌ - மயன் தொடர்புடையவை என்பதும், ஒரே சூத்திரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கலைகளின் தொழில் நுட்பத் தகவல்களைப் பெறமுடியும் என்பதும், அதனை செயல் விளக்கம் செய்து காட்ட முடியும் என்பதும் முக்கியமாகும்.

கணபதி ஸ்தபதியின் தூண்டுதலின் பேரில், 'ஐந்திறம்' நூலில் உள்ள சூத்திரங்களையும் பயன்படுத்தி , கட்டிடக் கலையில் உறைந்துள்ள இசையை(Frozen Music) எவ்வாறு பிரித்தெடுக்க முடியும் (decipher)  என்பதற்கான 'லாஜிக்'குகளையும்(Logic), இசையில் இயக்கமாக(Dynamic)  இருக்கும் கட்டிடக்கலையை ( Dynamic Architecture)  எவ்வாறு பிரித்தெடுக்க முடியும் (decipher) என்பதற்கான 'லாஜிக்'(Logic)குகளையும் நான் கண்டுபிடித்து, கணபதி ஸ்தபதியின் முன் விளக்கினேன். அதன் காரணமாகவே அவர் என் மீது சொற்களால் விளக்க முடியாத 'அன்பு வெள்ளத்தில்' என்னை மூழ்கடித்தார். அவரின் மரணத்திற்குப் பின், அவர் ஏற்படுத்தியிருந்த 'டிரஸ்டில்' (Trust) நானும் உறுப்பினர் என்பது எனக்குத் தெரிய வந்தது.

அவர் முன்னிலையில் 2008-இல் வெளிநாட்டு கட்டிட நிபுணர்களுக்கு சென்னையில் செயல் விளக்கம் செய்து காட்டினேன். அவர் வற்புறுத்தியதன் காரணமாகவே, கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கிலும் அதனை நிகழ்த்தினேன். அதன் மலரிலும் அக்கட்டுரை இடம் பெற்றது.இது தொடர்பான கணிணி வழி மென்பொருள் ( computer based application software) உருவாக்கும் ஆய்வில் நான் ஈடுபட்டுள்ளதையும் கணபதி ஸ்தபதி அறிவார்.

ஓவியக் கலை, சிற்பக் கலை, கட்டிடக் கலை, இசையுடன் கூடிய பாடல் கலை, நாட்டியக் கலை ஆகிய ஐந்து கலைகள் ஒன்றுடன் ஒன்று  தொழில் நுட்ப ஆற்றல் வழி சம்பந்தப்பட்டது என்ற அடிப்படையில், அவை தொடர்பான 'லாஜிக்கு'களைக் கண்டுபிடித்து, கணினிவழி பயன்பாட்டு மென்பொருட்கள்(Computer based Application Software)  உருவாக்குவது என்பது எவ்வளவு தொழில் வாய்ப்புகளையும், வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்பதை அறிவியல் தொழில்நுட்ப அறிவுள்ளவர்கள் அறிவார்கள். தமிழில் மட்டுமே புலமையுள்ளவர்களுக்கு அவை விளங்காததில் வியப்பில்லை.

சிற்பக்கலை வல்லுநராகிய கணபதி ஸ்தபதிக்கு புரிந்ததானது, தமிழில் மட்டுமே புலமையுள்ளவர்களுக்கு புரிய வாய்ப்பில்லை என்பதை கலைஞர் கருணநிதியும், அவர் சார்பு ஓளவை நடராசன் போன்ற 'தமிழ்ப் புலமையாளர்களும்' அறியவில்லையா? அல்லது எம்.ஜி.ஆர் எதிர்ப்பு அவர்க‌ள் கண்களை மறைத்ததா ? என்பது ஆய்விற்குரியது. 'கூத்த நூல்' எம்.ஜி.ஆரால் வெளியிப்பட்டவில்லை. எனவே அந்த கூத்த நூல் வெளிவந்ததை பற்றியோ , அது சிலப்பதிகார உரையில் குறிப்பிடப்பட்ட நூலா இல்லையா என்ற விவாதத்தைப் பற்றியோ, கலைஞர் கருணாநிதியோ ,அவர் சார்பு 'அறிஞர்களோ'  கண்டுகொள்ள‌வில்லை. ஆனால் எம்.ஜி.ஆர் வெளியிட்ட 'ஐந்திறம்' அவர்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.  அச்சிடப்பட்ட நூல்கள் வினியோகிக்கப் படாமல் எரிக்கப் பட்டன என்பது தமிழ் உலகிற்கு எவ்வளவு பெரிய இழப்பு? கணபதி ஸ்தபதி அவற்றைப் பற்றி என்னிடம் விவரித்தபோது, கண் கலங்கியதை, என்னால் மறக்க முடியாது.

அவர்கள் எதிர்க்காமல் இருந்திருந்தால், எம்.ஜி.ஆர் ஆதரவுடன் என் போன்றோரின் ஆராய்ச்சிகள், அந்த ஐந்திற தொழில்நுட்ப அடிப்படைகளில் எவ்வளவு வியாபார வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருக்க முடியும்? அதன் மூலம் திராவிடக்கட்சி ஆட்சிகளில் உலகப் பல்கலைக் கழகங்களில் மூடப்பட்டு வந்த தமிழ்த் துறைகள் மீண்டும் திறக்கப்பட்டிருக்குமா? இல்லையா? உலக அளவில் பல்கலைக் கழகங்களிலும், தனியார் ஆராய்ச்சி மையங்களிலும் பழந்தமிழ் இலக்கியங்களை நோக்கி, புதிய தொழில் நுட்பங்களுக்கான ஆய்வு படையெடுப்புகள் தொடங்கியிருக்குமா? இல்லையா? என்பது போன்ற கேள்விகளுக்கு தெளிவான விடையளிக்கும் நோக்கில், எனது ஆய்வு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

அவற்றில் மேலேக் குறிப்பிட்ட, திரு.கணபதி ஸ்தபதி வெகுவாகப் பாராட்டிய இசை‍ - கட்டிட தொடர்பு பற்றிய ஆய்வு, அவரின் மறைவிற்குப் பின், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உயர்க் கல்வி நிறுவனத்தில், தற்போது  என்னைத் திட்ட ஆலோசகராகக் கொண்டு(Project Consultant to R & D ) ,   கட்டிடவியல் (architecture), கணினிவியல் (Computing Technology)  வல்லுநர்கள் கொண்ட ஆய்வுக்குழு மூலம் வளர்ந்து வருகிறது. அதே போல், தொல்காப்பியம் அடிப்படையில் இசை மொழியியல் (Musical Linguistics)  பற்றிய நூல் எழுதும் திட்டமும் வளர்ந்து வருகிறது. இது போன்ற எனது ஆய்வுகளுக்கு மேற்கத்திய நாடுகளில் உள்ள பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் வெளிப்படுத்தியுள்ள ஆதரவை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.(https://tamilsdirection.blogspot.com/2018/09/4-social-comparison-infection-passions.html )

அடுத்து, கடைசியாக‌, திராவிடர் கழகத்தின் தோற்றத்தில் உணர்ச்சி பூர்வ போக்குகளுக்கான விதை உருவாகி, அதன் 'விளைச்சலில்' 'ஐந்திறம் சர்ச்சை' வெளிப்பட்டதா? என்பதை அடுத்து பார்ப்போம்.

1944இல் தி.க உருவானதற்கு முன், பெரியாரோடு சேர்ந்து சமூகப் பணியாற்றிய ஜீவா, முத்துச்சாமி வல்லத்தரசு போன்றவர்கள் பெரியாரை 'அறிவுபூர்வமாக' விமரிசித்து எழுதிய மடல்களை, அப்படியே தன் 'குடி அரசு' இதழில் வெளியிட்டு, பெரியார் தனது நிலைப்பாடுகளையும் தெளிவுபடுத்தினார். அவர்களெல்லாம் பெரியாரை விட்டு விலகி, செல்வத்திலும் புலமையிலும் ஒழுக்கத்திலும் உயர்ந்திருந்த நீதிக்கட்சியில் இருந்த பிராமணரல்லோதோரும் விலகிய பின், அண்ணாதுரை செல்வாக்கில் தி.க உருவானது. அதன்பின் அண்ணாதுரைக்கும், பெரியாருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மேற்குறிப்பிட்ட 'அறிவு பூர்வ' திசையில் நடந்ததா? அல்லது உணர்ச்சிபூர்வ போக்குகள் தலை தூக்கியதா? 'ஈ.வெ.ரா' என்ற பெயர் மறைந்து, 'பெரியார்' என்ற பட்டமே பெயரானதும், அந்த 'உணர்ச்சிபூர்வ' போக்கின் விளைவா?  இவ்வாறு பெயர் மறைந்து, 'பட்டமே' பெயரானது உலகில் வேறு எந்த தலைவருக்கும் நிகழ்ந்திருக்கிறதா?அதன்பின் பாரதிதாசனுக்கும், அண்ணதுரைக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் பற்றியும், பாரதிதாசனுக்கும் கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவிற்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் பற்றியும், பாரதிதாசனின் இதழ்களில் வெளிவந்துள்ளவை எல்லாம், அறிவுபூர்வமா?  உணர்ச்சிபூர்வமா? அதன்பின் தான், பொதுஅரங்கில் அரசியலில், எதிரெதிராக உள்ள‌ தலைவர்கள் மீது, 'ஆபாச உணர்ச்சிபூர்வ' பேச்சுக்களும், எழுத்துக்களும் செல்வாக்கு பெற்று, அதை 'ரசித்து மகிழும்' போக்கில்,  தமிழ்நாட்டுத் தமிழர்கள் சீரழிந்தார்களா?அந்த போக்கிலேயே, 'உணர்ச்சிபூர்வ' மற்றும் 'மனித உறவுகளில் சுயலாபநட்ட கணக்குகள்' போன்றவை, தமிழர்களில், இயல்பில் பலகீனமானவர்களிடையே, 'அகவயப்படுத்தலுக்கு' (internalize) உள்ளாகி, கொலை, தற்கொலை, வன்முறை, திருட்டு, ஊழல் எனும் பொது திருட்டு,  போன்றவையெல்லாம், தமிழ்நாட்டில் 'அதிவேகமாக' அதிகரித்து வருகின்றனவா?


1948 தூத்துக்குடி மாநாட்டில், பெரியார் அண்ணாதுரைக்கு எதிராக பேசிய பேச்சுக்கள் வெளிவந்துள்ளன. அதன்பின் அண்ணதுரையை 'சாரட்'டில் உட்காரவைத்து,  ஊர்வலத்தில் பெரியார் நடந்து சென்றதும், அண்ணாதுரையும் 'சாரட்'டில் உட்கார்ந்து ஊர்வலம் நடைபெற்றதும், எதை உணர்த்துகின்றன? பெரியாருக்கும் அண்ணாதுரைக்கும் இடையே ஏற்பட்ட அந்த 'சமரசம்' அறிவுபூர்வமானதா? உணர்ச்சிபூர்வமானதா? அல்லது லாப நட்ட கணக்கிலானதா? பெரியார் தன்னலம் இன்றி, இயக்க லாபத்தையே, தனது லாபமாக கருதியிருந்தாலும், இத்தகைய போக்கு சரியானதா? இன்று தமிழ்நாட்டில் கட்சிகளும், தனிமனிதர்களும் தமக்கான ‘லாப நட்ட’ கணக்கிலேயே 'அனைத்து' உறவுகளையும் அடிமைப்படுத்தி வாழும் போக்கிற்கு அது விதையானதா? அந்த 'சமரசம்' முறிந்து, 'தி.மு.க' உருவானது அறிவுபூர்வ போக்கிலானதா? உணர்ச்சிபூர்வ போக்கிலானதா? அல்லது லாப நட்ட கணக்கிலானதா?
(https://tamilsdirection.blogspot.com/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html  ) 

 'அறிவு பூர்வமாக' நடந்திருக்க வேண்டிய 'ஐந்திரம்' விவாதம், 'உணர்ச்சி பூர்வ' சர்ச்சையாக திராவிடக் கட்சி ஆட்சியில் வடிவெடுப்பதற்கான விதை அப்போதே உருவானதா? அறிவு பூர்வமான போக்குகளை ஓரங்கட்டி, உணர்ச்சிபூர்வ போக்குகள் ஆதிக்கம் செய்ய இடமளித்ததே, தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் வீழ்ச்சிக்கு வழி வகுத்ததா? பாரபட்சமற்ற முறையில் திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும் இக்கேள்விகளைப் பரீசிலிப்பதன் மூலமே, தமிழ்நாட்டில் நடந்துள்ள ( இலங்கைப் பிரச்சினை உள்ளிட்டு)  தவறுகளையும், தீர்வுகளையும் அடையாளம் கண்டு திருத்தி, முன்னேற‌ வழி கிடைக்கும்.

எவ்வளவு விரைவில் தமிழ்நாடு உணர்ச்சிபூர்வ போதைகளிலிருந்து விலகி, அறிவுபூர்வ திசையில் பயணிக்கிறதோ, அந்த அளவுக்கு 'ஐந்திறம்' போன்ற 'சர்ச்சை'களில் சிக்காமல், தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படாமல் இருக்கும்.

1 comment:

  1. அந் நூலின் ஒரு பிரதிகூடவா எஞ்சவில்லை?
    அந் நூலின் PDF பிரதி ஏதாவது கிடைக்குமா?

    ReplyDelete