Sunday, December 14, 2014


திராவிட மனநோயாளித்தனத்தின் பலிகடா:(Social Functional Checks) சமூக‌ செயல்நெறி மதகுகள் (4) 


‘சமூக ஆற்றல் உறிஞ்சிகளிடமிருந்து (Social Energy Suckers) விடுதலை?



கல்வியிலோ, அல்லது தொழில் வியாபாரத் துறைகளிலோ அதற்குரிய தகுதி, திறமைகளை வளர்த்துக் கொண்டு, அதன் மூலம் செல்வம், செல்வாக்கு சம்பாதித்தவர்களில் சமுக ஆர்வம் உள்ளவர்கள், நீதிக்கட்சி, காங்கிரஸ் உள்ளிட்டு எந்த கட்சியில் இருந்தாலும், பொது வாழ்வில், தமது சொந்த பணம்,அறிவு உழைப்பு, உடல் உழைப்பு போன்றவற்றை செலவழித்த, வரலாற்றில், 1944 வரை தமிழ்நாடு பயணித்தது. அந்த நிலை மாறி, வன்முறை, பலவகையான இழிவான தரகு,நம்பிக்கைத் துரோகம் போன்றவற்றில் 'திறமைசாலிகள்' செல்வாக்கில்,'சமுக ஆற்றல் உறிஞ்சி செயல்நுட்ப' ஆதிக்கத்தில் சிக்கி, தமிழ்நாடு இன்று பயணித்து வருகிறதா? அந்த நிலை மாற வழியுண்டா? என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மோட்டர் சைக்கிள், கார், விமானம் உள்ளிட்ட எந்த வாகனமும், தமது செயல்பாட்டிற்கு (function) ஒரு மூலத்திலிருந்து (source) ஆற்றலைப் பெற்று, அந்த ஆற்றலில் ஒரு பகுதியை மட்டுமே தமது செயல்பாட்டுக்குப் பயன்படுத்திவிட்டு, எஞ்சிய ஆற்றலை 'கழிவாக' ஒரு ஏற்பிக்கு(Sink)  வழங்கும் செயல்நுட்பத்திலேயே(Mechanism) செயல்படும். உலகில் வாகனத்தின் திறனை மேம்படுத்த நடந்து வரும் ஆய்வுத் திட்டங்கள்(R & D) எல்லாம், அந்த 'கழிவு ஆற்றலை'க் குறைத்து, மிஞ்சும் கூடுதல் ஆற்றலையும் செயல்பாட்டிற்குப் பயன்படுத்தும் நோக்கத்திற்காகவும், அந்த கழிவுகள் சுற்றுச்சூழலைப் பாதிக்காமலிருக்கவுமே நடைபெற்று வருகின்றன.

மனித வாழ்வுக்குப் பயன்படும் வாகனம் போன்றே, வளர்ந்த நாடுகளில் சமூக வாழ்வுக்கு அவசியமான அரசு எந்திரத்தில் 'ஊழல், பொறுப்பின்மை விரயம்' போன்ற 'கழிவு' ஆற்றலைக் குறைக்க, அந்த அரசு எந்திர செயல்பாட்டில், 'வெளிப்படையான'(Transparent),'தவறு செய்தவர்களைக் கண்டுபிடித்து'த் தண்டிக்கக் கூடிய(accountability) முயற்சிகளில் வளர்ந்து வருகிறார்கள்.

அத்தகையப் பண்புடைய அரசு எந்திரத்துடன் தான், தமிழ்நாடு 1967 வரைப் பயணித்தது."தமிழ்நாட்டில் 1967க்கு முன், எந்தக் கட்சியிலும் இருந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் மீதோ, அமைச்சர்கள் மீதோ ஊழல் குற்றச்சாட்டுகள் கூட எழுந்ததில்லை. அரசு அதிகாரிகளில் ஒரு சிலர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானதும், சட்டத்தின் மூலம் அவர்கள் தண்டிக்கப்பட்டதும் நடந்திருக்கின்றன." என்பதை ஏற்கனவே பார்த்தோம். (‘திராவிட மனநோயாளித்தனத்தின் பலிகடா:  சமூக‌ செயல்நெறி மதகுகள் (Social Functional Checks’; https://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_18.html
)

1944க்கு முன், நீதிக்கட்சி, காங்கிரஸ் உள்ளிட்டு தமிழ்நாட்டில் பொதுவாழ்வில் ஈடுபட்டவர்கள் எல்லாம், அபூர்வமான விதி விலக்குகள் தவிர்த்து, தமது சொந்த பணத்தையும், உடல் உழைப்பையும், அறிவு உழைப்பையும் தாம் ஆதரித்த கட்சிகள் மூலமாக செலவிட்டனர். அந்த போக்கில், தமது சொத்துகளை இழந்து, வறுமையில் உழன்றவர்களும் உண்டு. உதாரணமாக காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி தனது கடைசி காலத்தில், வறுமையில் சென்னையில் வாடகை வீட்டில் வாழ்ந்தார். அவரை அந்த வீட்டில் சந்தித்து அதிர்ச்சி அடைந்த கே.பி.சுந்தராம்பாள் அவர்கள், சென்னையில் இருந்த தனது வீட்டை, அவர் பெயருக்கு மாற்றி, பதிவு செய்து கொடுத்தார்.

1944இல் திராவிடர் கழகம் உருவானபின் தான், கட்சிப் பணத்தை சுயநலனுக்குப் பயன்படுத்தும் போக்கு வெளிப்பட்டதை, அது தொடர்பாக, மனம் நொந்து பெரியார் எழுதி, வெளிவந்துள்ள தகவல்கள் உணர்த்துகின்றன. அவ்வாறு பெரியாரால் குற்றம் சாட்டப்பட்ட பலர், 1949இல் உருவான தி.மு.கவிற்கு இடம் பெயர்ந்தார்கள். இவ்வாறு கட்சிப் பணத்தையும், ஆட்சியில் மக்கள் பணத்தையும் சுயநலத்திற்கு எடுத்துக் கொள்பவர்களை, 'சமுக ஆற்றல் உறிஞ்சிகள்' (Social Energy Suckers) என்று அழைக்கலாம். மனித உடலில் ஒட்டி, ரத்தத்தை உறிஞ்சும் 'அட்டை' போன்ற ரத்த உறிஞ்சிகளை(Blood Sucker) நாம் அறிவோம். அது போல் 'செல்வம், செல்வாக்குள்ள' கட்சிகளில், அரசு பொறுப்புகளில், அமைப்புகளில், குடும்பங்களில் 'ஒட்டி', அங்குள்ள 'ஆற்றலை' உறிஞ்சி வாழும், 'திறமைசாலிகளான 'சமுக ஆற்றல் உறிஞ்சிகள்' அவர்கள் ஆவர்.

1967இல் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் மூலம், அப்போது முதல்வரான அண்ணாவிற்கு, தமது கட்சியில் வளர்ந்துள்ள 'சமுக ஆற்றல் உறிஞ்சிகள்' (Social Energy Suckers)பற்றிய புரிதல் ஏற்பட்டது. “ஒரு அரசியல்கட்சி நடத்தவேண்டிய தடாலடி ஆளுமை தனக்கில்லை என்பதையும், அரசாளுமையில் மாட்டிக்கொண்டு மாரடிக்கும் வேலை தனக்குப் பொருந்தாத ஒன்று என்றும், ஊழல்பேர்வழிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசாங்கம் நடத்துவது இயலாத வேலை என்றும், உணர்ந்த அண்ணாவை, பொதுவுடமைக்கட்சித்தலைவர் பி.ராமமூர்த்தியிடம், புற்றுநோயால் தாக்கப்பட்டு இருந்தபோது,  தான் தன் கட்சிக்காரர்கலைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாற்றத்துடன் உயிர்வாழ்வதை விரும்பவில்லை, எவ்வளவு விரைவில் மரணம் நேரும் என்று எதிர்நோக்கியிருப்பதாகவும் சொல்லவைத்தது.”( இணையக் குழுமத்தில் கிடைத்த தகவல்)இதில் வினோதம் என்னவென்றால், பொதுவாழ்வில் சலித்து, அனைத்தையும் துறந்து, முனிவராகி விட பெரியார் யோசித்த போது, அதை வேண்டாம் என்று தடுத்து, பெரியாரை உற்சாகப்படுத்தியவர் அண்ணா, முதல்வராயிருந்த காலத்தில்.

1944இல் 'திராவிடர் கழகம்' உருவாகி,அறிவுபூர்வமான போக்குகள் தடம் புரண்டு, உணர்ச்சிபூர்வ போக்குகள் தலைதூக்கி, 'சமூக ஆற்றல் உறிஞ்சி' செயல்நுட்பம் வளர்ந்த போக்கிலேயே, அண்ணா பலியானதையே மேற்குறிப்பிட்டது உணர்த்துகிறது. மாணவர்களைத் தூண்டாமல், கிராமங்கள் வரை, பிரச்சாரம் செய்து,தொண்டர்களைத் திரட்டி,வரலாறு படைத்த 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பெரியாரை ஓரங்கட்டி, அவமானப்படுத்தும் விளைவை 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் ஏற்படுத்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
(https://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html ) 'சமூக ஆற்றல் உறிஞ்சி' செயல் நுட்பம் வளர்ந்த போக்கிலேயே,அண்ணாவைப் போல் பெரியாரும் பலியானதையே இது உணர்த்துகிறது.பெரியார், அண்ணா மட்டுமின்றி, நீடாமங்கலம் அ.ஆறுமுகம் உள்ளிட்டு எண்ணற்ற வசதியானவர்களின் சொத்துக்களை அழித்து,வசதியானவர், ஏழை என்ற பாகுபாடின்றி எண்ணற்ற குடும்பங்களைச் சிதைத்து, தமிழ்நாட்டின் கனிவளங்களையும் சூறையாடி, தமிழ்நாட்டில் கணிசமான மக்களையும் 'திராவிட மன நோயாளித்தனத்தில்' சிக்க வைத்து, 'கோரப் பசியுடன்' அலையும் 'சமூக ஆற்றல் உறிஞ்சி'களின் 'தமிழ் உணர்வு, இன உணர்வு, பகுத்தறிவு ' பேச்சுக்களின், எழுத்துக்களின், 'மயக்கத்திலிருந்து' விடுபடவில்லையென்றால், தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆங்கிலோ இந்தியர்களைப் போல, 'தமிழ், பாரம்பரியம், பண்பாடு' போன்ற வேர்களற்ற, 'தமிங்கிலீசர்கள்' தான், வரும் காலத்தில், தமிழ்நாட்டில் வாழ்வார்கள்.

1944இல் முளைவிட்டு வளர்ந்த உணர்ச்சிபூர்வ போக்கில் உருவான திராவிட மனநோயாளித்தனமானது, 1967க்குப்பின் வீரியமாக வளர்ந்த சமூக ஆற்றல் உறிஞ்சிகளுடன், 1980 களில் ழவிடுதலைக் குழுக்கள் 'ஆதரவு பலம்' என்று நினைத்து கொண்ட 'கூடா நட்பே', முள்ளிவாய்க்கள் அழிவு'க்கு இட்டுச் சென்றதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அறிவுபூர்வ விமர்சனங்களை இன்று வரை பின்னுக்குத் தள்ளி, அமிர்தலிங்கம் போன்ற மிதவாதத் தலைவர்களையும், சிரி சபாரத்தினம், பத்மநாபா உள்ளிட்ட மற்ற ஈழ விடுதலைக் குழுக்களின் தலைவர்களையும், நூற்றுக்கணக்கான ஆயுதப் பயிற்சி பெற்ற அக்குழுக்களின் போராளிகளையும் 'ஈவிரக்கமில்லாமல்' கொன்றது; இடையில் தமது 'ஈழ ஆட்சியில்' குறை சொன்ன பேராசிரியர்களையும் கொன்று, 'எதற்காக விடுதலை?' என்ற கேள்வி எழ காரணமானது;  அதன்பின், போராளிப் பஞ்சம் ஏற்பட்டு, (1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், தலைவர்கள் சமூகப் பொறுப்பின்றி ஒதுங்கி, 'ஊரான் வீட்டு' மாணவர்களை ,பெரியார் வழிக்கு எதிரான 'காந்தி வழியில்', போராட்டத்தில் ஈடுபடுத்தியது போல்,) சிறுமிகளையும், பெண்களையும போரில் ஈடுபடுத்தி,சிவிலியன்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி, போரில் 'ஏற்பு மையங்களை'(Receiving Points)  நோக்கி தப்பிக்க முயன்ற சிவிலியன்கள் மீது 'தற்கொலை'த் தாக்குதல் நடத்தித் தடுத்தது;   அந்த உணர்ச்சிபூர்வ போக்கிலேயே, சரணடையக் கிடைத்த வாய்ப்புகளைத் தவறவிட்டு, கடைசியில் போரில் தாமும் மடியும் விளைவை ஏற்படுத்தியது; ஆகியவற்றில், தமிழ்நாட்டு 'சமூக ஆற்றல் உறிஞ்சிகளின்'  'கூடா நட்பின்' பங்களிப்பு எவ்வளவு? என்பதும் ஆய்விற்குரியது.

நடந்த தவறுகளுக்கு, அந்த உணர்ச்சிபூர்வ போக்கு வளர பங்களிப்பு வழங்கி, பலிகடாக்களாகவும் ஆன,  பெரியார், அண்ணா, பிரபாகரன் என்று தனி மனிதர்கள் மீது குற்றம் சுமத்துவது எளிது. திராவிட இயக்கத்திலும், ஈழ விடுதலை ஆதரவாக செயல்பட்ட (நான் உள்ளிட்டு) அனைவருமே இதற்குக் காரணமாகும். ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கும் அமைப்பில் உள்ள செயல்வினைப் போக்கானது (processing), அறிவுபூர்வப் பாதையிலிருந்து தடம் புரண்டு, உணர்ச்சிபூர்வமாகப் பயணிக்கும் போது, அந்த போக்கிற்கு ஆதரவளித்த அமைப்புகளில், இழைகளாகவும் (social fiber) , பிணைப்புகளாகவும்(social bonds),  செயல்பட்ட மனிதர்கள் ஒவ்வொருவரின் 'பங்களிப்பு' இல்லாமல் 

https://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html   ), அந்த அமைப்பானது, பாதகமான திசையில் பயணித்து,  மக்களை படுகுழியில் தள்ள முடியாது. எனவே மனித உறவுகளில் 'சுயலாப' நோக்கற்றவர்கள் ஒவ்வொருவரும், மற்றவர் மீது குற்றம் சுமத்துவதற்கு முன், நடந்த தவறுகளுக்கு நமது பங்களிப்பு என்ன? என்ற சுயவிமர்சனத்தில் ஈடுபடுவது தான், 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்பு முயற்சிக்கான முதல் படியாகும்.

"தனது தராதரம், பாரம்பரியம், பண்பாடு ஆகிய அடிப்படைகளிலான, இயல்பின் அடிப்படையில், உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்பவர்கள், தமிழ்நாட்டில் அருகிவிடவில்லை. எந்த வழியிலும், போட்டி போட்டு, செல்வம், செல்வாக்கு சம்பாதிக்கும் நோயில் சிக்காமல் வாழுந்து வரும்,  அத்தகையோரின் அரவணைப்பில் , 'தராதரம், தகுதி, திறமை, பாரம்பரியம், பண்பாடு' போன்றவையெல்லாம் உயிருடன் இருக்கின்றன." என்பதை முந்தையப் பதிவுகளில் பர்த்தோம்.

அத்தகையோரெல்லாம், தமக்குள்ள 'கொள்கை, அபிமானம்' அடிப்படையில் தங்களின் சமூக ஆற்றலானது, மேலேக் குறிப்பிட்டுள்ளவாறு,தமிழ்நாட்டைச் சீரழிவுப் பாதையில் பயணிக்கவே செலவாகிறதா? அல்லது ஆக்கபூர்வமான வளர்ச்சிக்குச் செல்வாகிறதா? என்று கண்காணித்து, சமூகத்திற்கான தமது ஆற்றல் பங்களிப்பை நெறிப்படுத்த வேண்டிய காலக்கட்டம் வந்துவிட்டது.அந்த முயற்சியில் அவர்கள் பெறும் வெற்றிக்கு ஏற்பவே, தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சியும், வரும் காலத்தில் வெளிப்படும்.” என்பதையும் முந்தையப் பதிவில் பார்த்தோம்.
தனது தராதரம், பாரம்பரியம், பண்பாடு ஆகிய அடிப்படைகளிலான, இயல்பின் அடிப்படையில், உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்பவர்கள், எவ்வாறு சமூகத்திற்கான, தமது ஆற்றல் பங்களிப்பை நெறிப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டுபிடிக்க‌, 'சமுக ஆற்றல் உறிஞ்சி செயல்நுட்பம்' பற்றிய புரிதல் எவ்வளவு முக்கியமானது, என்பதை இங்கு பார்த்தோம்..
.
இன்றைய‌ சூழலில், 'தமிழ் உணர்வு, பகுத்தறிவு, இன விடுதலை, பார்ப்பன எதிர்ப்பு, தமிழ் ஈழம்' உள்ளிட்ட எல்லாவற்றையும் தமது 'சமூக ஆற்றல் உறிஞ்சி'(Social Energy Sucking) 'செயல்நுடபத்தில்(Mechanism), பயன்படுத்தி, 'வெளிப்படையான' (Transparent), 'தவறு செய்தவர்களைக் கண்டுபிடித்து'த் தண்டிக்கக் கூடிய (accountability) வாய்ப்புகளை மலடாக்கி, வாழ்வியல் வெற்றியாளர்களாக‌ வலம் வரும் 'நிபுணர்களிடமிருந்து' 'விடுதலை' பெறுவது என்பது, அவசரமும், அவசியமுமான, 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்பு முயற்சியாகி விட்டது. மத்திய அரசில், ஆட்சியில், 'வெளிப்படையான' (Transparent), 'தவறு செய்தவர்களைக் கண்டுபிடித்து'த் தண்டிக்கக் கூடிய(accountability) வாய்ப்புகள் பெற்று வரும் வலிமையானது, தமிழ்நாட்டிற்கும் விடிவைத் தரும் என்ற நம்பிக்கைக்கும் இடம் இருக்கிறது. இந்துத்வாவிற்குள்ளும், வெளியிலும் உள்ள மோடி எதிர்ப்பாளர்களின் கூட்டுசதியால், அந்த நம்பிக்கை சிதைந்து, தமிழ்நாட்டில் 'பீகார்பாணி லல்லுக்கள்' தலைதூக்கவும் வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் வலுவிழந்துள்ள சமூக செயல்நெறி மதகுகளை (Social Functional Checks), தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றின் மீட்சி மூலம், மீண்டும் வலுவாக்கினால், தப்பிக்கவும் வழி இருக்கிறது. எனவே திராவிட மனநோயாளிக் கள்வர்களின் ஆட்டம் அடங்கும் காலம், அதிக தொலைவில் இல்லை. 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கான காலமும் அதிக தொலைவில் இல்லை.

.

No comments:

Post a Comment