Saturday, March 7, 2015


              'பசு வதைத் தடை சட்டம்' யாருக்கு  லாபம்?



லட்சக்கணக்கான கோடி ஊழல்களிலும், பொருளாதார சீர்கேடுகளிலும் சிக்கித் தவித்த இந்தியாவை, ஊழலற்ற, பாரபட்சமற்ற ஆட்சியின் மூலம் காப்பாற்றுவார் என்று நம்பி, 'எதிர்பாராத' பெரும்பான்மை பலத்துடன் மோடியை மக்கள் பிரதமராக்கியுள்ளர்கள்.அந்த திசையில் அவரின் ஆட்சி பயணிப்பதன் காரணமாக, மோடியைப் பாராளுமன்ற தேர்தலுக்கு முன் 'இந்து மத வெறியராக'ச் சித்தரித்தவர்களில் பலர், 'மோடியின் ஆட்சிக்கு இந்து மத வெறியர்களால்' ஆபத்து என்று எழுதும் அளவுக்கு, மோடியைப் பற்றிய தமது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார்கள். 

இதற்கிடையில் மகராட்டிர மாநிலத்தில் அமுலுக்கு வந்துள்ள  'பசு வதைத் தடை சட்டமா’’னது, இந்தியா முழவதுமுள்ள முஸ்லீம்கள் மட்டுமின்றி, தலித்துகளில் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள், நகரங்களில் பிராமணர்கள் உள்ளிட்டு அனைத்து சாதிகளிலும் ( மேற்கத்திய நாகரீகப் போக்கில்) 'விரும்பி' மாட்டுக்கறி உணவு சாப்பிடுபவர்கள் உள்ளிட்ட இந்தியாவில் கணிசமான மக்களின் கோபத்தையும், வெறுப்பையும் வெவ்வேறு அளவுகளில் உண்டாக்கினால், வியப்பில்லை. ஊழல்,வாரிசு அரசியல் போன்றவற்றால் மக்களிடம் செல்வாக்கிழந்த‌, 'இந்துத்வா எதிர்ப்பு' கட்சிகள் புத்துயிர் பெற, அவை  உதவினாலும் வியப்பில்லை. 

அசைவக் குடும்பங்களில் பிறந்து, வளரும்போது, தமது குடும்பத்தில் 'மிகுந்த அன்போடு' வளர்த்த கோழிகள் உணவுக்காக வெட்டப்படுவதைப் பார்த்தும், ஆடுகள் கோவிலில், அல்லது உணவுக்காக வெட்டப்படுவதைப் பார்த்தும், அதிர்ச்சியடைந்து, 'முட்டை' கூட சாப்பிடாத, , 'தீவிர சைவ' உணவுண்பவர்களாக மாறியவர்களை நான் அறிவேன்.மனிதர்கள் வளர்க்கும் மிருகங்களில் முதுமையடையும் வரை  தொடர்ந்து பால் கொடுத்து வரும் பசு மாடுகளும், எருமை மாடுகளும் மனிதர்கள் மிகவும் நன்றி செலுத்த வேண்டிய மிருகங்களாகும். 

சங்க இலக்கியங்களில் 'பசு' என்ற சொல் மிருகங்களைக் குறிக்கும் பொதுவான சொல் ஆகும். ( ஐங்குறுநூறு 271:3; நற்றிணை 275:5, Page 520,Pre-Pallava Tamil Index, University of Madras, 1990) . எனவே இன்றுள்ள பொருளில், தமிழில்,  பசு மாடும், எருமை மாடும் எந்த காலக் கட்டத்தில், என்ன சமுகக் காரணங்கள் அடிப்படையில் அழைக்கப்பட்டன? என்பது ஆய்விற்குரியதாகும். 

மகராட்டிர மாநிலத்தில், முந்தைய பா.. சிவசேனா கூட்டணி ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு, 19 வருடங்களாக குடியரசு தலைவர் ஒப்புதலுக்காகக் காத்திருந்த சட்டம், அண்மையில் ஒப்புதல் பெற்று அமுலுக்கு வந்துள்ளது. பசு மாடுகள், காளை மாடுகள் உணவுக்காக வெட்டப்படுவதைத் தடுக்கும் அச்சட்டத்தில் எருமை மாடுகள் இடம் பெறவில்லை. 
http://indianexpress.com/article/india/india-others/beef-banned-in-maharashtra-5-yrs-jail-rs10000-fine-for-possession-or-sale/
பால் தரும் பசுவையும், எருமையையும், விவசாயத்திற்குப் பயன்படும் காளைகளையும் எவரும் கொல்லமாட்டார்கள். தனது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக கியூபா அரசு அண்மையில் பசுவைக் கொல்பவர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து சட்டம் இயற்றியுள்ளது.
http://articles.economictimes.indiatimes.com/2003-09-13/news/27533499_1_cow-slaughter-cuba-cattle
இந்தியாவில் வடகிழக்கு  மாநிலங்களில் மட்டுமே தடையின்றி உணவுக்காக பசு, உள்ளிட்டு அனைத்து மிருகங்களும் கொல்லப்படுகின்றன.ஆந்திரா, தெலுங்கானா, பீகார்,கோவா, ஒடிஸ்ஸா,ஆகிய மாநிலங்களில் பசுக்களை மட்டும் தடை செய்து,உரிய சான்றிதழுடன் மற்ற மிருகங்களை உணவுக்காகக் கொல்ல சட்டம் அனுமதிக்கிறது.தமிழ்நாடு, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் உரிய சான்றிதழுடன்  மிருகங்களை உணவுக்காகக் கொல்ல சட்டம் அனுமதிக்கிறது.கேரளாவில் சட்டபூர்வ தடையின்றி, சில கட்டுப்பாடுகள் உள்ளன. http://www.thehindu.com/news/national/cattle-slaughter-in-varying-degrees/article6956046.ece

மகராட்டிர அரசின் பசுவதைத் தடை சட்டம் மூலம் உயிர் வாழும் வயதான பசுக்களையும், காளை மாடுகளையும் 'அனாதைகளாக' சாகாமல் பராமரிப்பதற்கு, 'பட்ஜெட்டில்' நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறதா? அவற்றைப் பராமரிக்க என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன? என்பது பற்றி மீடியாவில் தகவல்கள் எனது பார்வையில் படவில்லை. Also read:
http://swarajyamag.com/culture/this-matter-of-beef/  
வயதான பசுக்களையும், காளை மாடுகளையும், பசி, பிணி மூலம் 'அனாதைகளாக' சாவதை, சட்டபூர்வமாக்கியுள்ள 'பசுவதை தடை சட்டமானது', நடைமுறையில், ஈவிரக்கமற்ற 'பசுவதை சட்டம்' ஆகாதா?

சமூகத்தில் உள்ள மனிதர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, 'அரசியல்' செயல்நுட்பம் மூலம் அரசால் உருவாக்கப்பட்டு அமுலாவதே அரசின் சட்டபூர்வ செயல்பாடு(rule of law) ஆகும்.

பசுவதைத் தடை சட்டம்,காளைகளை அடக்கும் விழாக்களுக்கான தடை , கோவில்களில் பறவைகளையும் மிருகங்களையும் பலியிட தடை (பின்னர் நீக்கப்பட்டது} போன்றவை சமூகத்தில் ஏற்படுத்திய விவாதங்களை, சமூகத்தில் திருட்டு, கொலை, கொள்ளை போன்றவை தொடர்பாக உருவாகும் புதிய சட்டங்கள் ஏற்படுத்துவதில்லை. தடா, பொடா போன்ற சட்டங்கள் தொடர்பான விவாதங்கள் கூட, வெளிநாட்டு நிதி உதவியில் செயல்படும் என்.ஜி.ஓ மனித அமைப்புகளின் முயற்சிகள் இன்றி, பொது அரங்கில் விவாதத்தில் இடம் பெற்றிருக்குமா? என்பதும் ஆய்விற்குரியதே ஆகும்.

சமூகத்தில் அரசியல் புலத்திற்கான வரை எல்லைகளுக்கு அப்பால், அந்த சமூகத்தின் பாரம்பரியம்,பண்பாடு அடிப்படைகளில் உருவாகி செயல்படுவதே, அந்த சமூகத்தின் செயல்நெறி மதகுகள்(social functional checks) ஆகும். (refer; ’திராவிட மனநோயாளித்தனத்தின் பலிகடா:(Social Functional Checks) சமூக செயல்நெறி மதகுகள் (2) பலிகடாவின் 'பலன்கள்' : பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேறுபாடின்றி
http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_10.html ) 

சட்டபூர்வ செயல்பாடும், சமூக செயல்நெறி மதகுகளின் செயல்பாடும் ஒன்றுக்கொன்று இணக்கமாக செயல்படும்போது, அந்த சமூகத்தில் குற்றங்கள் சிறுமமாக, இணக்கமான சூழலில் அச்சமூகம் வளர்ச்சி திசையில் பயணிக்கும். 

சட்ட அடிப்படையிலான நீதிபரிபாலன அமைப்பாகிய அரசு என்பதன் தோற்றம், வளர்ச்சி, கால ஓட்டத்தில் பெறும் மாற்றம் அனைத்தும் சமுகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பண்புடன் இருக்கும் வரை தான்,சட்டத்தை அமுல்படுத்தும் வலிமை அரசுக்கு இருக்கும்.

பாரம்பரியம்,பண்பாடு அடிப்படைகளிலான சமூக செயல்நெறி மதகுகள், கால ஓட்டத்தில் பெறும் மாற்றம் அனைத்தும் சமுகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பண்புடன் இருக்கும் வரை தான்,அவற்றின் செயல்பாட்டிற்கு வலிமை இருக்கும்.

ஒரு சமூகத்தின் பாரம்பரியம், பண்பாடு தொடர்புடைய பிரச்சினைகளில் சட்டத்தின் மூலம் தலையிடுவது சிக்கல் நிறைந்ததாகும். மேற்கத்திய வரலாற்றில் பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக சமூக அரங்கில் மேற்கத்திய பாரம்பரியமும்,பண்பாடும் பெரும் சீர்குலைவிற்கும், மாற்றங்களுக்கும் உள்ளானது. எனவே சட்டத்தின் வரம்பு எல்லைகள் அங்கு பரந்த அளவுக்கு விரிந்தது. அதன் வளர்ச்சிப் போக்கில், தனி மனித உரிமைகளுக்கான வரை எல்லைகளும் குடும்பம் உள்ளிட்டவற்றைப் பலகீனப்படுத்தி விரிந்தது. மேற்கத்திய மனித உரிமைகள் வழியில், இந்தியாவில் பயணிக்கும் முயற்சிகளே, 'மாடு பிடிக்கும் விழாவிற்கும்','கோவிலில் பறவைகள்/மிருகங்கள் பலியிடுவதற்கும் எதிர்ப்புகளையும் தடைகளையும் உருவாக்கி வருகின்றன.

சமூகத்தில் வாழும் மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கு, அந்த அமைப்பில் 'கூடுதலாக' செல்வாக்கு இருக்கும்போது, அந்த அளவுக்கு செல்வாக்கற்றவர்கள், அமைப்புக்கு அப்பால், தமக்கான 'நீதிக்கு' முயற்சிப்பது என்பது, அந்த அமைப்பின் சமசீரற்ற பண்பின் வெளிப்பாடு ஆகும்.” இந்திய விடுதலைக்குப் பின் அந்த சமசீரற்ற பண்பு எவ்வாறு வளர்ந்தது என்பது பற்றி அடுத்து பார்ப்போம்.

காலனி ஆட்சியிலும், அதன்பின் 'காலனியமயமாக்கப்ப‌ட்ட' (colonization of the Indian mind) மனதுடன், தெரிந்தும் ( வெளிநாட்டு நிதி உதவியில்/ஆதரவில் வாழும் என்.ஜி.ஓக்கள், அறிவு ஜீவிகள்), தெரியாமலும் வாழ்பவர்கள் பங்களிப்பிலும்,  பாரம்பரியம்,பண்பாடு அடிப்படைகளிலான சமூக செயல்நெறி மதகுகள் தொடர்ந்து பலகீனப்படுத்தப்பட்டு வருகின்றன. அதே போக்கில், சமுகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பண்பு 'பாதிக்கப்பட்டு' வளர்ந்த காலனிய அரசின் சட்டங்களும், அரசு செயல்பாடும், 'அந்த பாதிப்பு' முழுமையாக நீங்காமல், ஆட்சியாளர்களின் 'வசதிகளுக்கான' மாற்றங்களுடன் தொடர்ந்து 'அந்த களங்கத்துடனேயே இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்திய மக்களிடையே சமசீரற்ற பண்பினை 'ஆபத்தாக' வளர்த்து வரும் , மேலேக் குறிப்பிட்ட இரண்டு போக்குகளும் இந்திய விடுதலைக்குப் பின் வளர்ந்த வேகத்தில், சாதி,மத, பிராந்திய பிரிவினைப் போக்குகள் 'ஏற்ற இறக்கங்களுடன் கூடிய' மக்கள் செல்வாக்குடன் வளர்ந்து வருகின்றன.

சட்டத்தின் செயல்பாட்டிற்கு சம்பந்தமில்லாமால் உள்மறை இரகசியத்தடை, லஞ்சம், பயங்கரவாதம் உள்ளிட்ட  'சமூக நோய்கள்' அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு, ஒன்றையொன்று வளர்க்கும் திறனுள்ளவைகள் ஆகும். அவற்றின் தோற்றமும்,வளர்ச்சியும், சமூக அமைப்பின் சமசீரற்ற பண்பின் வளர்ச்சியுடன் தொடர்புள்ளவை ஆகும்.

அந்த சமசீரற்ற பண்பின் வளர்ச்சிக்கு 'மனித உரிமை,முற்போக்கு' என்ற பெயரில் பங்களிப்பு வழங்கி வரும், வெளிநாட்டு நிதி உதவியில் செயல்படும் கிறித்துவ என்.ஜி.ஓக்களைக் கண்காணிப்பது எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு 'இந்துத்வா' என்ற போர்வையில் 'அதே இலக்கில்,வெளிநாட்டு நிதி உதவியில்  செயல்படும் அமைப்புகளையும் கண்காணிப்பது முக்கியமாகும். 'விதேசி' ஆதரவின்றி, 'சுதேசி' பலத்தில் செயல்படுபவர்கள் எல்லாம் நாட்டின் நலனுக்காக, சாதி,மத,கொள்கை வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, ஒன்றுபட்டு செயல்பட்டால் தான், அது சாத்தியமாகும்.

காளைகளை அடக்கும் விழா தடை, பசுவதை தடை உள்ளிட்ட தடைகள் எந்த அளவுக்கு அமுலாகிறதோ, அந்த அளவுக்கு அந்தந்த அரசு  துறைகளில் உள்ள 'கறுப்பு ஆடுகளின்’' லஞ்ச வருமானங்கள் பெருகுவதோடு, அரசைப் பலகீனப்படுத்தும் உள்மறை இரகசியத் தடை ஆற்றல்களுக்கான மக்கள் செல்வாக்கும் அதிகரிக்கும். 

அதாவது 'பசுவதைத் தடை சட்டம்,காளைகளை அடக்கும் விழா தடை போன்ற மக்களின் பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்ட துறைகளில் அமுலாகும் சட்டங்களானது, அரசில் எந்த அளவுக்கு 'லஞ்சம்' தலை விரித்தாடுகிறதோ, அந்த அளவுக்கு மக்களிடையே உள்ள சமசீரற்ற பண்பினையும், சமூக நோய்களையும் வளர்க்கும். அந்த வளர்ச்சிப் போக்கானது, மோடி அரசின் கதையை சாண் ஏறி, முழம் சறுக்கினதாக மாற்றினாலும் வியப்பில்லை. அவ்வாறு நிகழ்ந்தால், இந்தியா 'மோசமான' பிரிவினைக்குள்ளாகி, 'லஞ்சமும், குடும்ப வாரிசு அரசியலும்' பின்னிப் பிணைந்த 'ராஜா'க்களுக்கு சாதகமாக, ஆப்பிரிக்க நாடுகளுடன் எண்ணிக்கையிலும் சீரழிவிலும் போட்டி போடும் நிலை வரும்; என்பது போன்ற; 'மேற்கத்திய' உலகில் வெளிவந்துள்ள புத்தகங்களின் 'ஆருடம்' உண்மையாகி விடும்.
http://tamilsdirection.blogspot.in/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_24.html

அரசு தம் வசமுள்ள வன்மை அதிகாரத்தை(Hard power)  சட்டத்தின் செயல்பாட்டிற்கும், மென்மை அதிகாரத்தை (Soft Power) அரசின் கல்வி, பண்பாடு போன்ற துறைகள் மூலம் சமூக செயல்நெறி மதகுகளை வலிமைப்படுத்தவும் பயன்படுத்துவது நல்ல ஆட்சியின் வெளிப்பாடு ஆகும்.

காலனி ஆட்சியில்,மென்மை அதிகாரம் உளவுத்துறைகள் கூட்டு முயற்சியில், காலனி ஆட்சிக்குச் சாதகமாக மக்களைப் பிளவு படுத்தும் 'கட்சிகளும்', தலைவர்களும், ஊக்குவிக்கப்பட்டார்கள்.

“இந்திய விடுதலைக்குப் பின், மனித உரிமை மீறல்களில், மேற்குறிப்பிட்ட‌  சமசீரற்ற பண்பு வலிமை பெற்று வருகிறதா? அந்த அளவுக்கு, மனித உரிமைகள் பாதுகாப்பில் அரசு வலிமை இழந்து வருகிறதா? 'உள்மறை இரகசியத்தடை' -‘Subterranean censorship’- சமூக வலிமையுடன் 'வளரும்' அரசியல் கட்சிகள், தேர்தல் வாக்கு சேகரிப்பில் அந்த பலத்தைப் பயன்படுத்தி, வெற்றி பெற்று, ஆட்சியில் பங்கேற்கும்போது, சட்டத்தின் வரைஎல்லைகளை, 'அந்த சமூக வலிமை' பலகீனப்படுத்தியதன் வெளிப்பாடுகளானவை, கிரானைட், தாது மணல் உள்ளிட்ட இயற்கை கனிவளங்களின் கொள்ளை, 'மாதொரு பகன்', 'விஸ்வரூபம்' திரைப்படம் 'தடை'ப் பிரச்சினைகள் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டவையா?” என்பதை ஏற்கனவே பார்த்தோம். (‘பெருமாள் முருகன்,புலியூர் முருகேசன்,கவிஞர் தாமரை;உள்மறை இரகசியத் தடைகளும் (‘Subterranean censorship’), குடும்பச் சீர்குலைவுகளும்’;
http://tamilsdirection.blogspot.in/2015/03/12.html )


திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த போது, மோடி போன்ற ஒருவர் தமிழ்நாட்டின் முதல்வராகியிருந்தால், மேலேக் குறிப்பிட்ட சீரழிவு திசையில் தமிழ்நாடு பயணித்திருக்காது.  தமிழ்நாட்டில், காமராசர் தோல்விக்குக் காரணமான சக்திகளை, இந்திய அளவில் முறியடித்து இந்திய வரலாற்றில் தனி இடம் பிடித்துள்ளவர் மோடி என்பது என் கருத்து.
http://tamilsdirection.blogspot.in/search?updated-min=2014-01-01T00:00:00-08:00&updated-max=2015-01-01T00:00:00-08:00&max-results=50 ஆனால் தமது அரசு வசம் உள்ள மென் அதிகாரம் ஆற்ற வேண்டிய பணிகளை, வன் அதிகாரம் மூலம் மத்திய அரசும், பா.ஜ.க ஆளும் மாநில அரசுகளும் செயல்படுத்தத் துவங்கியுள்ளன. எனவே மேற்குறிப்பிட்ட  மோடியின் வெற்றி தற்காலிகமாகி, தமிழ்நாடு பயணித்து வரும் சீரழிவு திசையில்,  'தமிழ் வேரற்ற' தமிங்கிலிசர்களாக தமிழர்கள் வளர்ந்து வருவது போல், வரும் காலத்தில் இந்தியாவில் எல்லா பகுதிகளிலும் 'வேரற்ற' இந்தியர்கள் வளரும் விளைவிலேயே அது முடியும். எனவே நாட்டின் மீதும், மக்களின் மீதும் உண்மையான அக்கறையுடன் 'சுயநல பொது வாழ்வு' நோக்கற்றவர்கள் அனைவரும் விழிப்புடன், 'வேடன் வலையில் சிக்கிய பறவைகள்' போல், ஒன்றுபட்டு செயல்பட்டால் தான்  - ஒன்றுக்கொன்று தொடர்புடைய வெளிநாட்டு, உள்நாட்டு சதி வலையிலிருந்து -  தப்பிக்க முடியும்.

குறிப்பு: படிக்கவும் https://www.facebook.com/yaadhumaagi/videos/vb.728633197205063/1372096319525411/?type=2&theater  & https://swarajyamag.com/politics/cow-politics-if-bjp-wants-to-lose-2019-this-is-the-right-way-to-go-about-it

No comments:

Post a Comment