Friday, June 12, 2015


தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize)  (3)

                    'திராவிடர்'  'இன‌' அடையாளம்


                 'அழிவுபூர்வ' சமூக தளவிளைவினை 

(Destructive Social Polarization)  அடித்தளமாகக் கொண்டதா?

   


1857 முதலாம் இந்திய‌ விடுதலைப் போர் வெற்றி பெற்று, வெள்ளைக்காரர்கள் வெளியேறியிருந்தால், தமிழ்நாடு பல மன்னர்களின் ஆட்சியில் இருந்திருக்கும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த சூழலில், 'தமிழர்' என்ற அரசியல் அடையாளத்திற்கு தேவை இருந்திருக்குமா? என்பது ஆய்விற்குரியது.

ஒரு மக்கள் சமூகத்தின் அடையாளங்கள் ஆனவை,  சமூக வரலாற்றில், அச்சமூகம் சந்திக்கும், சமூக தேவைகளின் அடிப்படைகளிலேயே உருவாகும். 'தமிழர்' என்ற அடையாளம் தமிழ்நாட்டில் எப்போது, எந்த தேவைகளின் அடிப்படையில் தோன்றியது? என்பது ஆய்விற்குரியதாகும்.

சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள 'லெக்சிகனில்' 'தமிழர்' என்ற சொல்லுக்கு, 'விளிம்பில்லாத  தீர்த்த பாத்திரம்' என்ற பொருள் உள்ளது. சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட, பழந்தமிழ் இலக்கியங்களில் 'தமிழர், தமிழன்' போன்ற சொற்கள் இருப்பதாக தெரியவில்லை. தேவாரத்தில் ( 744,5) தான் 'ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்' என்று உள்ளது. 'ஆரியன் கண்டாய் திராவிடன் கண்டாய்' என்று அதில் இல்லை.
எனவே மொழி அடிப்படையிலான‌ 'தமிழன்' என்ற சொல்லை, புவியியல் (geographic)  அடிப்படையிலான 'திராவிட' அடிப்படையில், 'திராவிடன்' என்று சொல்வது, தேவாரத்தில் இல்லை.

ஆரிய எதிர்ப்பு நோக்கில், இனம் தொடர்பான சொல்லாக‌ , 'திராவிடர்' என்ற சொல்,காலனி ஆட்சிக்கு முன், தமிழ்நாட்டில் இருந்ததற்கு சான்றுகள் இல்லை.உலகில் வெளிப்பட்டுவரும் ஆய்வுமுடிவுகளின் அடிப்படையில், 'இனம்' என்ற பொருளில், 'திராவிடர்' என்ற சொல்லை பயன்படுத்துவது என்பது, அறிவுபூர்வமாக சரியா? “A consensus consequently developed among anthropologists and geneticists that race as the previous generation had known it – as largely discrete, geographically distinct, gene pools – did not exist.”- https://en.wikipedia.org/wiki/Race_%28human_classification%29 அறிவுக்கு தொடர்பில்லாமல், உணர்ச்சிபூர்வமாக, அச்சொல்லை இன்றும் பயன்படுத்துவது தவறில்லையா?

அதே போல, காலனிய ஆட்சிக்கு முன், 'சமஸ்கிருதத்திலிருந்து தமிழ் பிறந்தது', மொழி உயர்வு, தாழ்வு, சாதி உயர்வு, தாழ்வு, தீண்டாமை போன்றவை தொடர்பான சான்றுகள் இருப்பதாக தெரியவில்லை.

'சமூக ஒப்பீடின்' (social comparison) அடிப்படையில் அனைத்து வகையிலான உயர்வு, தாழ்வும், காலனியத்தின் நன்கொடையா? என்பது ஆய்விற்குரியது. இசையில் அவை ‘காலனியத்தின் நன்கொடை’, என்பது தொடர்பான, எனது ஆய்வினை ஏற்கனவே பார்த்தோம். ( Refer in this Blog Dt. November 13, 2013-   இசையில் ' தீண்டாமை காலனியத்தின் ‘நன்கொடை’யா?
http://tamilsdirection.blogspot.in/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html)

1944க்கு முன், நீதிக்கட்சியிலும்,காங்கிரசிலும், அவையன்றி தனிப்பட்ட முறையிலும், பிராமணரல்லாத உயர்சாதியினரைப் போலவே, பிராமணர்களும் சமூகத்தில் பின் தங்கியவர்களை உயர்த்த மேற்கொண்ட முயற்சிகள் பற்றிய ஆய்வுகள் பிரமிக்க வைக்கின்றன. அன்று 'அக்கிரகார பகிஸ்கரிப்பை' மீறி , ஜி.சுப்பிரமணிய அய்யர், மதுரை வைத்தியநாத அய்யர் போன்ற பிரபலங்கள் மட்டுமின்றி, சாதாரண பிராமணர்களும்,'வைதீக தடைகளை'மீறி(அவை தவறாக புரிந்து கொண்டு, செயல்படுத்தபட்டவை என்பது தொடர்பான ஆய்வுகளும் வெளிவந்துள்ளன), இன்றுள்ள தமிழ்/திராவிட கட்சிகளின் தலைவர்களை விட, அதிக தியாகம் புரிந்து வாழ்ந்தார்கள்.

1944க்கு முன். அத்தகைய ஆக்கபூர்வமான சமூக தளவிளைவு செயல்முறையில் (positive social polarization) , சமூக பொறுப்புடன் கூடிய அறிவுபூர்வமான கூறுகளின் கட்டுப்பாட்டில், செயல்பாடுகளுக்கு அவசியமான உணர்வுபூர்வ கூறுகள் கட்டுப்பட்டிருந்தன. சுயசம்பாத்தியம் தகுதி, திறமைகள் உள்ளவர்களே, பொது வாழ்வில் செல்வாக்குடன் வலம் வந்தார்கள்.போராட்டங்களின் பெரும் பாதிப்புகளை, தமது சொந்த பணத்தை பொது காரியங்களுக்கு செலவு செய்த தலைவர்கள் சந்தித்தார்கள்; சாதாரண மக்களுக்கு பாதிப்பின்றி.

1944இல் 'திராவிடர்' என்ற அடையாளத்தில், 'திராவிடர் கழகம்' தொடங்கி, ஒட்டு மொத்த பிராமணர்களையும் எதிரிகளாக பாவித்து, அந்த ஆக்கபூர்வ சமூக தள விளைவினை சீர்குலைத்து, அழிவுபூர்வ உணர்ச்சிகளை ஊக்குவித்து, அழிவுபூர்வ சமூக தளவிளவினைத் (destructive social polarization)  தூண்டினார்கள்.    

சுயசம்பாத்தியத்திற்கான தகுதி, திறமைகள் இல்லாத  மனிதர்கள், 'உணர்ச்சிபூர்வ' பேச்சுக்கள், எழுத்துக்கள் மூலம் அறிவுபூர்வ கூறுகளையும், ஒழுக்க நெறிகளையும் சீர்குலைத்து, பொதுவாழ்வில் 'அதிவேகமாக' வளர்ந்தார்கள். அத்தகைய தலைவர்கள், ‘போராட்டங்கள்’ என்ற பெயரில் வன்முறையைத் தூண்டி, தொண்டர்களை 'பலி ஆடுகளாக' போராட வைத்து, வாழ்க்கையைத் தொலைக்கச் செய்து, தமது செல்வம்,செல்வாக்கை 'அதிவேகமாக' வளர்க்கும் போக்கும்,பொதுமக்களுக்கும் பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கும் போக்கும், தமிழ்நாட்டில் அறிமுகமானது. இன்று தொண்டர்கள் விழித்துக் கொண்டு,அவர்களில் சுயசம்பாத்திய தகுதி, திறமைகள் இல்லாதவர்கள் 'கூலி ஆடுகளாகி', பின்னர் 'குட்டித் தலைவர்களாக' வளர்ந்து வருகிறார்கள்.'பலி ஆடுகளுக்கு' பஞ்சம் துவங்கியுள்ளது.

சங்க காலம் முதல் அரசர்கள், பின் காலனி, அதன்பின் காங்கிரஸ் ஆட்சிகள் வரை, தமிழ்நாட்டின் நிலத்தடி நீர் ஆதாரங்களாகிய ஏரிகள், குளங்கள், விவசாய நிலங்கள் ஆகியவற்றிற்கு ‘சட்டபூர்வ பாதுகாப்பு’ அமுலில் இருந்தது. பின் 'திராவிட' ஆட்சிகளில், அந்த சட்டபூர்வ பாதுகாப்பானது,   ஊழல் அரசியல் கொள்ளைக்காக, (சுயசம்பாத்திய தகுதி,திறமைகள் இல்லாதவர்களால்) நீக்கப்பட்டு,ஊழலின் கோரப்பசிக்கு இரையானது என்பது,  அழிவுபூர்வ 'திராவிட' சமூகத்தளவிளைவின் பலனா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அந்த ஆபத்து போக்கை முதலில் கண்டுபிடித்து, 1948 திராவிடர் கழக தூத்துக்குடி மாநாட்டில் பெரியார் ஈ.வெ.ரா உரையாற்றினார்; அண்ணாதுரை அம்மாநாட்டை புறக்கணித்த சூழலில். அப்போது திராவிடர் கழகம் பிளவுபட்டிருந்தால், தமிழ்நாடு இன்று சந்தித்துவரும் இழிவுகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். மாறாக,அண்ணாதுரையின் 'பாலியல் விரசம் கலந்த கவர்ச்சிகர' பேச்சில்,எழுத்தில் அதிக இளைஞர்கள் ஈர்க்கப்பட்டதை, 'சாதகமாக்க' நினைத்து, அடுத்து நடந்த மாநாட்டில், அண்ணதுரையை சாரட்டில் உட்கார வைத்து, பெரியார் ஈ.வெ.ரா ஊர்வலத்தில் நடந்தார். அந்த 'பாதகமான' சமரசத்தின் விளைவுகளைத் தான்,  இன்று தமிழ்நாடு அனுபவித்துக் கொண்டிருக்கிறது; மேலேக் குறிப்பிட்ட 'அழிவுபூர்வ' சமூக தளவிளைவினை அடித்தளமாக கொண்ட,  'திராவிடர்' என்ற அடையாளத்தின் பலன்களாக. (refer post dt. November 13, 2014;.” 1944க்கு முன் எப்படி இருந்த தமிழ்நாடு,இன்று  எப்படி இருக்கிறது?இந்தி எதிர்ப்புப் போராட்டம்: 1938‍க்கும்  1965க்கும்   என்ன வேறுபாடு?” 
http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html)

“நீதிக் கட்சி திராவிடர் கழகமாக மாறிய பின் தான் ' திராவிடர்' என்ற அடையாளத்திலான தனிநாடு கோரிக்கை எழுந்தது. பின் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் ஆலோசனை பேரில், பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் 'தமிழ் நாடு தமிழருக்கே' என்று சொன்னார். ஆனாலும் பிராமண எதிர்ப்பை முன்னிலைப் படுத்திய 'திராவிடர்' என்ற அடையாளமே வலுப் பெற்றது. ' திராவிடர் ' என்ற இன ரீதியிலான சொல்லை விடுத்து, நிலப்பரப்பு ரீதியிலான ' திராவிட 'என்ற சொல்லை ஏற்று, திராவிட முன்னேற்ற கழகம் உருவாகி வளர்ந்த வேகத்தில்,' திராவிடர் ' என்ற சொல்லும் வலுவிழந்தது.

 'தமிழர்' என்ற அடையாளம் இன்று வரை குழப்பமாகவே சிதைந்துள்ளது. தமிழ்நாட்டில் வடமொழி தெரியாத, தமிழையேத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணர்களை 'தமிழர்' ‍ஆக ஏற்க மறுக்கின்ற போக்கும் உள்ளது. கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட பெரியாரையும், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட வை.கோ போன்றோரையும் 'தமிழர்' ‍ஆக ஏற்க மறுக்கின்ற போக்கும் உள்ளது. இக்குழப்பம் தீராமலேயே  இரு போக்கினருமே தனித் தமிழ்நாடு என்ற உணர்ச்சிபூர்வமான‌ போக்கில், அடையாளச் சிதைவை வளர்த்து வருகிறார்கள்.

கடந்த காலத்தின் அடிமைகளாக வாழாமல், நிகழ்காலத்தில் வளர்ச்சி நோக்கிய முயற்சிகளுக்கு, 'திராவிடர்' என்ற அடையாளம் பயன்படுமா? 'தமிழர்' என்ற அடையாளத்தை, குழப்பங்களுக்கு இடமில்லாமல், எவ்வாறு வரையறுப்பது? என்பது போன்ற கேள்விகளுக்கு,  லண்டனில் வாழும் எனது நண்பர் வே.தொல்காப்பியன் எழுதியுள்ள,  'யார் தமிழர்' என்ற கட்டுரை மிகவும் பயனுள்ள விடைகளை தரவல்லதாகும். (‘யார் தமிழர்?’; http://siragu.com/?p=3527)

'இந்தியர்' என்ற அடையாளமும் மத்தியில் பொறுப்பில் உள்ள அமைச்சர்களின் தத்தம் வட்டார, சாதி, மதப் பற்றுகள் காரணமாக சிதைக்கப்பட்டு வருகிறது. மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்களில்,  அகில இந்திய அரசியல் கட்சிகளின் குறுகிய நோக்கிலான சுயநல அரசியல் நிலைப்பாடுகள்,  இந்த சிதைவின் வேகத்தை அதிகப்படுத்தியுள்ளன.” என்பதை ஏற்கனவே பார்த்தோம். (refer post dt. November 24, 2013; ‘தமிழரின் அடையாளச் சிக்கலும், தாழ்வு மனப்பான்மையும் (2)’
http://tamilsdirection.blogspot.in/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_24.html)

'தமிழ் இலக்கியங்கள்', 'பாரம்பரியம்','பண்பாடு' தமிழர்க்கு கேடானவை என்ற அடிப்படையில், பெரியார் இயக்கங்கள் 'திராவிடர்' என்ற அடையாளத்தை முன்னிறுத்தி,  மேற்கொண்ட 'சாதி எதிர்ப்பு' ஆனது, 'தமிழர்' என்ற அடையாளத்தை பலகீனப்படுத்தும் அளவுக்கும், சாதிப்பற்று வலிமை பெறும் அளவுக்கும்,  எதிர்வினையாக (reaction)  அமைந்ததா? என்பதும் ஆய்விற்குரியதேயாகும். அந்த போக்கில் 'திராவிடர்' என்பதும், தமிழரின் அடையாளச் சிதைவை அதிகப்படுத்தி, அரசியல் நீக்கம் மற்றும் அதன் தொடர்விளைவான ஊழல் அரசியலுக்கும், சுயநலக் கள்வர்கள் அதிகரிப்பிற்கும் வழி வகுத்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

மேற்குறிப்பிட்ட பின்னணியில், தமிழர்களின் அடையாளச் சிதைவு என்பது, தமிழ் இலக்கணத்திற்கும், தமிழர்களுக்கும் இடையிலான இடைவெளியை எந்த அளவுக்கு அதிகரிக்க செய்தது? என்பதும் ஆய்விற்குரியதாகும். ‘இலக்கணத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு சமூக அர்த்தத்தைப் பிரதிபலிக்கிறது என்பதைவிட உருவாக்குகிறது. எனவே சமூக மாற்றத்தில் அது ஒரு விசையாக இருக்கிறது. (“  variation does not simply reflect,but constructs, social meaning, hence is a force in social change’ - 'Language variation, contact and change in grammar and sociolinguistics' by Tor A. Afrali & Brit Maihlum, Norwegian University of Science & Technology) எனவே தமிழ் மொழியின் இலக்கண விதிகள், தமிழர்களின் தகவல் பரிமாற்றத்தில் பலகீனமாகி வருவது என்பது தமிழர் சமூக வீழ்ச்சியின் விசையாக இருக்கிறது. ‘என்பதை ஏற்கனவே பார்த்தோம்.  (refer post dt. September 27, 2014; ‘தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (3)   சமூகத்தின் சீரழிவும், இலக்கணத்தின் வீழ்ச்சியும்’ 
http://tamilsdirection.blogspot.in/2014_09_01_archive.html)

தமிழரின் அடையாளச்சிதைவின் தொடர்விளைவாகிய அரசியல் நீக்கத்துடன், தமிழ் வேர்க்கொல்லி நோயில் சிக்கி ( 'தமிழ்நாட்டில் 'தமிழ் வேர்' மரணப்படுக்கையில்: தமிழக முதல்வர் ஜெயலலிதா காப்பாற்ற வேண்டும்’; http://tamilsdirection.blogspot.sg/2015/05/blog-post.html ), தமிழர்கள் தமிங்கிலீசர்களாக மாறி வரும் போக்கில், தமிழ் இலக்கணமானது, தமிழர்களிடமிருந்து 'அதிவேகத்தில்' அந்நியமாகி, மரணமடையும் நிலையில் உள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.



(வளரும்)


5 comments:

  1. ஐயா

    ”சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள 'லெக்சிகனில்' 'தமிழர்' என்ற சொல்லுக்கு, 'விளிம்பில்லாத தீர்த்த பாத்திரம்' என்ற பொருள் மட்டுமே உள்ளது. ” என்பது சரியில்லை. லெக்சிகான் பக்கம் 1757 படி,



    தமிழர் tamiḻar : (page 1757)

    tamiḻa-p-palla- va-taraiyar, n. < id. +. The Pallavas of the Tamil country; தமிழ்நாட்டுப் பல்லவவரசர். (நன். 164, மயிலை.)


    தமிழர் tamiḻar
    , n. < E. Tumbler, drinking cup; விளிம்பில்லாத தீர்த்தபாத்திரம். Loc.


    தமிழன் tamiḻaṉ

    , n. < id. 1. One whose mother-tongue is Tamil; தமிழைத் தாய்மொழி யாக உடையவன். 2. A Tamilian, as dist. fr. āriyaṉ; ஆரியனல்லாத தென்னாட்டான். ���ரியன் கண்டாய் தமிழன்கண்டாய் (தேவா. 744, 5). 3. Caste man, as dist. fr. paṟaiyaṉ; பறைய னொழிந்த தமிழ்ச்சாதியான்.


    விஜயராகவன்


    ReplyDelete
    Replies
    1. ஐயா,

      'தமிழர்' என்ற சொல்லுக்கு, தாங்கள் குறிப்பிட்டுள்ளபடியும் 'விளிம்பில்லாத தீர்த்தபாத்திரம்.' என்ற பொருள் மட்டுமே உள்ளது.

      ஆனால் 'தமிழன்' என்ற சொல்லுக்கு தாங்கள் குறிப்பிட்டுள்ளதில் உள்ள "Caste man, as dist. fr. paṟaiyaṉ; பறைய னொழிந்த தமிழ்ச்சாதியான். " என்ற பகுதி, என்னிடம் உள்ள பதிப்பில் (1982) வெள்ளை பூச்சால் மறைக்கப்படிருக்கிறது. தங்களின் கருத்தை படித்த பின், அந்த பகுதியைக் கீறி, ஒளிபாய்ச்சி படித்தேன். தாங்கள் குறிப்பிட்டபடியே இருந்தது. ஆனால் , லெக்சிகன் முறைப்படி, அதற்கான தகவல் மூலம் இல்லை. ஏன் என்பதும் ஆய்விற்குரியது.

      அரிய, ஆய்வுக்குரிய தகவலை சுட்டிக்காட்டியுள்ளீர்கள், மிக்க நன்றி.

      நன்றியுடன்,
      செ. அ. வீரபாண்டியன்

      Delete
  2. ஐயா

    லெக்சிகான் பழைய இலக்கியம் மட்டுமல்ல, தற்கால புரிதல்களும், ஓரளவு வட்டார வழக்ககுகளும் , தற்கால (அதாவது 80 வருஷ முந்திய) இலக்கிய , பேச்சு வழக்குகளையும் பதிவு செய்கிறது. லெக்சிகாம் கமிட்டி இவைகளை காகித துண்டுகளில் பதிவு செய்து, அதன் ஆதாரத்தில் அகராதியை வெளியிட்டுள்ளது. உதாரணமாக , தமிழன் கடைசி அர்த்தத்தின் பக்கதில் 'மெட்ராஸ்' என பார்க்கலாம், அதாவது மெட்ராஸ் அருகில் உள்ள வழக்கத்தின் பதிவு.

    விஜயராகவன்

    ReplyDelete
    Replies
    1. ஐயா,

      என்னிடம் உள்ளது 1982 பதிப்பு . அதில் "தமிழன் கடைசி அர்த்தத்தின் பக்கதில் 'மெட்ராஸ்' என பார்க்கலாம், அதாவது மெட்ராஸ் அருகில் உள்ள வழக்கத்தின் பதிவு." என்பது இல்லை. அனேகமாக சில வருடங்களுக்கு முன் , திருத்தி ( Revised) வெளிவந்த‌ பதிப்பில் அது இருக்கலாம்.

      அன்புடன்,
      செ.அ.வீரபாண்டியன்

      Delete
    2. ஐயா,

      தாங்கள் குறிப்பிட்டுள்ளபடி வட்டார, வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 'தமிழர்', 'தமிழன்' என்ற சொற்கள்,எந்தெந்த காலக்கட்டங்களில் என்னென்ன அர்த்தத்தில் வழக்கில் வந்தன? என்ற ஆய்வு அவசியமாகும். இன்று தமிழ்/திராவிட கட்சிகள் எந்தெந்த அர்த்தத்தில், என்னென்ன சான்றுகளின் அடிப்படையில், தமது கொள்கை விளக்கங்களில், அச்சொற்களை பயன்படுத்துகின்றனர்? என்ற ஆய்வும் அவசியமாகும். அவை தொடர்பாக, தங்களின் பங்களிப்பையும் வரவேற்கிறேன். திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும், சமூக அக்கறையுடனும், சுயலாப நோக்கின்றி உழைப்பவர்கள் அருகி வரும் காலம் இது.

      அன்புடன்,
      செ.அ.வீரபாண்டியன்

      Delete