Saturday, November 23, 2013



தமிழரின் அடையாளச் சிக்கலும், தாழ்வு மனப்பான்மையும் (1)


ஒரு மனிதரின் வாழ்க்கை நல்ல வழியில் பயணிப்பதும், கெட்ட வழியில் பயணிப்பதும் அவரின் வாழ்வியல் அடையாளத்தைப் பொறுத்தது. 

ஒரு மனிதர் எந்த நாட்டில், எந்த மொழி பேசும் எந்த  பகுதியில், எந்த மத/சாதி போன்ற குழுப் பிரிவில், பிறப்பதன் காரணமாக வரும் அடையாளக் கூறுகளுடன் அவரின் வாழ்க்கைப் பயணம் தொடங்குகிறது.

ஒருவரின் தாய்மொழி,நாடு, சாதி, மதம், இலக்கியம், இசை, ஓவியம் போன்ற நாட்டமுள்ள துறைகள்,போன்ற அவர் சம்பந்தப்பட்ட ஒவ்வொன்றும் அவரின் அடையாளக் கூறுகள் ஆகும். பிறந்து வளரத் தொடங்கியது முதல் சாகும் வரை, பிறப்பின் காரணமாக வந்த அடையாளக் கூறுகளுடன், அவரின் வளர்ச்சியில் பெரும் அறிவு, அனுபவ அடிப்படையில் பல கூறுகள் சேரலாம், சில கூறுகள் வலுவிழக்கலாம்.

படித்தவருக்கு அவரின் ஆர்வத்தைப் பொறுத்து அறிவை வளர்த்துக் கொள்ளவும், அதற்கேற்றார்ப்போல் தமது அடையாளக் கூறுகளை தமது நல்வாழ்விற்கு உதவ வளர்த்தெடுக்கவும் முடியும். அதிலும் தமிழ் மொழி மட்டுமே தெரிந்து கிணற்றுத்தவளை போல் வாழ்பவர்களை விட, ஆங்கிலமும் இன்னும் பிறமொழிகளும் தெரிந்தவர்களுக்கு தமது அடையாளக் கூறுகளை நன்கு வளர்த்தெடுக்க வாய்ப்புகள் அதிகம்.

புற செல்வாக்கிற்கு (External influence) அடையாளக்கூறுகள் உள்ளாவதற்கும் வாய்ப்புண்டு.

உதாரணமாக வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆளத் தொடங்கியதும், இந்தியாவின் பாரம்பரியத்தை இந்தியர்களே கீழாக நினைக்கும் வகையில் பல காரியங்களைச் செய்தார்கள்.( அவர்களை விட உயர்ந்த தொழில் நுட்பமும், கல்விமுறையும் இந்தியாவில் இருந்ததை எப்படி சிதைத்தார்கள் என்பதை அரிய சான்றுகளுடன் வெளிப்படுத்திய புத்தகம் DHARAMPAL • COLLECTED WRITINGS Volume I  Claude Alvares முன்னுரையுடன்)

வெள்ளையர்கள் தம்மைவிட நாகரிகத்தில் கீழானவர்களாக இந்தியர்களை நடத்தி, இந்தியர்களிடம் ஒரு தாழ்வு மனப்பான்மையை (Inferiority Complex) வெற்றிகரமாக விதைத்தார்கள். இந்தியரின் அடையாளக் கூறுகளில் இது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

இத்தாழ்வு மனப்பான்மையின் பாதிப்பின் அளவைப் பொறுத்து,பாதிப்புக்குள்ளான நபரின் உள்ளத்தில்,  அதன் தொடர்விளைவாக ஒரு 'உயர்வு' மனப்பான்மை (superiority complex) வெளிப்படும். தமது குடும்பப் பாரம்பரியம், சாதி, மதம், மொழி போன்ற அவரின் அடையாளக் கூறுகள் மற்றவர்களுடையதைவிட உயர்ந்தது என்ற உணர்வு பூர்வமான நிலைப்பாட்டிற்கு அந்த நபர் அடிமையாவார் என்பதைக் கீழ்வரும் ஆய்வு உணர்த்துகிறது.

"We should not be astonished if in the cases where we see an inferiority [feeling] complex we find a superiority complex more or less hidden. On the other hand, if we inquire into a superiority complex and study its continuity, we can always find a more or less hidden inferiority [feeling] complex."- Ansbacher, Heinz L., and Ansbacher, Rowena R., ed. The Individual Psychology of Alfred Adler - A Systematic Presentation in Selections from his Writings. New York: Basic Books Inc., 1956 (page 259).

மறந்த பிரதமர் நேரு உள்ளிட்டு, இந்தியாவில் மன்னர்கள் உள்ளிட்டு பல முக்கிய நபர்கள் வெள்ளைக்கார பெண்களை நண்பர்களாக, மனைவியாக கொண்டதற்கு மேலே குறிப்பிட்டது காரணமாக இருக்கலாம். தமிழ்நாட்டில் பல முற்போக்கு இயக்கங்களில் ஆழ்ந்த அறிவில்லாமல், மேலோட்டமாக தெரிந்தவைகளை சாதாரண மக்களிடம் வெளிப்படுத்தி,  தம்மை உயர்ந்தவராக காட்டிக் கொள்பவர்கள் பலர் இருப்பதற்கும் இதுவே காரணமாக இருக்கலாம்.

மேலே குறிப்பிட்ட பின்னணியில் தான் தமிழருக்குள்ள அடையாளச் சிக்கலை விளங்கிக் கொள்ள முடியும்.

வெள்ளைக்காரன் வருவதற்கு முன் தமிழ்நாடு முழுவதும் ஒரே மன்னரின் ஆட்சியில் இருந்தது கிடையாது. சங்க இலக்கியங்களில் 'தமிழ்' என்ற சொல் இருக்கிறது. 'தமிழன்' என்ற சொல் கிடையாது. பல தமிழறிஞர்கள் பழந்தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து உருவாக்கிய தமிழ் லெக்சிகனில் 'தமிழர்' என்ற சொல்லுக்கு 'விளிம்பில்லாத தீர்த்த பாத்திரம்' என்ற பொருள் தான் உள்ளது. ஆன்மீகத் தமிழுக்கு முக்கியத்துவம் தந்த பக்தி இலக்கியமான தேவாரத்தில் 'தமிழன்' என்ற சொல் இடம் பெற்றுள்ளது.மொழி அடிப்படையிலான அச்சொல் நாட்டின் அடிப்படையில் குறிப்பிடப்படவில்லை.

தாம் குடியிருந்த பகுதியின் அரசர் சார்பான ( சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் போன்ற பல) அரசியல்  அடையாளங்கள் அடிப்படையில் அரசியல் அடையாளம் இருந்தது. தமிழ்நாட்டில் இந்திய விடுதலைக்குப் பின்னும் புதுக்கோட்டை, இராமநாதபுரம் போன்ற சமஸ்தானங்களில் கணிசமான மக்களிடம் தமிழர்/இந்தியர் போன்ற அரசியல் அடையாளங்களை விட, 'இராஜ விசுவாசம்' என்ற அடையாளமே வலுவாக இருந்தது. சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பின்னும், அதை எதிர்த்து பொராட்டங்களும் சில காலம் நடந்து ஓய்ந்த.

ஒரு மனிதருக்குள்ள அடையாளக் கூறுகள் இயக்கத்தன்மையில் செயல்படுவதாகும். அவர் பிறந்தது முதல் சாகும் வரை அவரைச் சுற்றி குடும்பத்திற்குள்ளும், சமூக வரலாற்றிலும் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் அந்த இயக்கத் தன்மை மீது செல்வாக்கு செலுத்தும். 'தமிழர்' என்ற அடையாளம் நவீன வரலாற்றில் (Modern history) , அதன் தோற்றத்திலேயே சிக்கலுடன் தொடங்கியதை அடுத்து பார்ப்போம்.

----------------------------------------------

No comments:

Post a Comment