Sunday, November 24, 2013



தமிழரின் அடையாளச் சிக்கலும், தாழ்வு மனப்பான்மையும் (2)


நீதிக் கட்சி திராவிடர் கழகமாக மாறிய பின் தான் ' திராவிடர்' என்ற அடையாளத்திலான தனிநாடு கோரிக்கை எழுந்தது. பின் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் ஆலோசனை பேரில் பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் 'தமிழ் நாடு தமிழருக்கே' என்று சொன்னார். ஆனாலும் பிராமண எதிர்ப்பை முன்னிலைப் படுத்திய 'திராவிடர்' என்ற அடையாளமே வலுப் பெற்றது. ' திராவிடர் ' என்ற இன ரீதியிலான சொல்லை விடுத்து, நிலப்பரப்பு ரீதியிலான ' திராவிட 'என்ற சொல்லை ஏற்று, திராவிட முன்னேற்ற கழகம் உருவாகி வளர்ந்த வேகத்தில்,' திராவிடர் ' என்ற சொல்லும் வலுவிழந்தது.

 'தமிழர்' என்ற அடையாளம் இன்று வரை குழப்பமாகவே சிதைந்துள்ளது. தமிழ்நாட்டில் வடமொழி தெரியாத,தமிழையேத் தாய்மொழியாகக் கொண்ட பிராமணர்களை 'தமிழர்' ‍ஆக ஏற்க மறுக்கின்ற போக்கும் உள்ளது. கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட பெரியாரையும், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட வை.கோ போன்றோரையும் 'தமிழர்' ‍ஆக ஏற்க மறுக்கின்ற போக்கும் உள்ளது. இக்குழப்பம் தீராமலேயே  இரு போக்கினருமே தனித் தமிழ்நாடு என்ற உணர்வுபூர்வமான போக்கை வளர்த்து வருகிறார்கள்.

  'இந்தியர்' என்ற அடையாளமும் மத்தியில் பொறுப்பில் உள்ள அமைச்சர்களின் தத்தம் வட்டார, சாதி, மதப் பற்றுகள் காரணமாக சிதைக்கப்பட்டு வருகிறது. மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்களில்,  அகில இந்திய அரசியல் கட்சிகளின் குறுகிய நோக்கிலான சுயநல அரசியல் நிலைப்பாடுகள் இந்த சிதைவின் வேகத்தை அதிகப்படுத்தியுள்ளன.

புறக்கணிப்பு என்ற ஆபத்தான விதை

தெற்கு ஆசியாவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தனிநாடு கோரி பல்வேறு வழிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டங்களை சரி அல்லது தவறு என்று பார்ப்பது, இரண்டிற்கும் இடையே மறைந்துள்ள பல முக்கிய உண்மைகளைப் பார்க்கத் தவறுவதற்கு வழி வகுக்கும்.

'தாம் புறக்கணிக்கப்படுகிறோம்' என்ற உணர்வு தான் குடும்பத்திலும் சரி,நாட்டிலும் சரி பிரிவினை உணர்வுக்கு விதையாகி , சம்பந்தப்பட்ட நபரின் அடையாளக் கூறுகளில் பிரிவினை சம்பந்தப்பட்ட கூறுகளை வலிமையாக்குகிறது. புறக்கணிப்பு என்பது உண்மையானால் அதைக் களைகின்ற முயற்சி தாமதமின்றி ஒழுங்காக நடைபெற்றால், அவ்விதை முளையிலேயே அழிந்து விடும்.

கூட்டுக் குடும்பத்திலும் நாட்டிலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் சுய‌நலத்திற்குப் பலியாகாமல் பொறுப்புடன் நடந்து கொண்டால், அது தான் நடக்கும்.

மாறாக புறக்கணிப்பு என்பது உண்மையாக இருந்து அது மேலும் தீவிரமானால், அவ்விதை வளர்வதற்கு அதுவே உரமாகிவிடும். குடும்பத்திலும் நாட்டிலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் தான் அவ்வளர்ச்சிக்கு காரணமாவார்கள்.

குடுமபத்தில் உள்ள பிரிவினையை வளர்த்து விடுவது தமக்கு ஆதாயம் எனக்கருதி வெளிநபர் அதை ஆதரிப்பதும், நாட்டில் உருவாகியுள்ள பிரிவினை முயற்சியை வளர்த்து விடுவது தமக்கு ஆதாயம் எனக்கருதி அன்னிய சக்திகள் அதை ஆதரிப்பதும், ஆபத்தான திசையில் பிரிவனை முயற்சியைப் பயணிக்கச் செய்யும். அதன் விளைவுகள் குடும்பத்தை விட நாட்டில் ஏற்படுத்தும் நாசங்கள் மிகவும் மோசமானவையாகும் தமது அடையாளக் கூறுகளைத் தொடர்ந்து அறிவுபூர்வமான ஆய்வுக்கு உட்படுத்தாமல் உணர்வுபூர்வ போதையில் பயணிப்பவர்களில் நேர்மையானவர்கள் விட்டில் பூச்சிகளாக வீணாக தம்மை அழித்துக் கொள்வார்கள்.குறுக்கு புத்தியுள்ள சுயநலவாதிகள் தமது செல்வ்த்தையும் செல்வாக்கையும் பெருக்கிக் கொள்வார்கள்.

பிரச்சினைக்குரிய பகுதியில் அமைதி வழிப் போராட்டங்கள் பலகீனமாகி வன்முறை தலைதூக்கும் போது, ஒன்றுக்கும் மேற்பட்ட ஆயுதக்குழுக்களிடம் பிரச்சினையே சிறைபட்டு விடுகிறது. பிரச்சினைக்குள்ளன மக்களும் இக்குழுக்களின் செல்வாக்கு போட்டியில் கூறுபோடப் படுகின்றனர். விமர்சனங்கள் துரோகங்களாக சிறைபிடிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. உண்மை,நேர்மை, ஒழுக்கம்,திறந்த மனதுடன் விமர்சனம்,எளிமையான வாழ்வு என்ற கூறுகள் மறைந்து,தவறு என்று தெரிந்தும் சுய லாபத்திற்காக தலைமை துதிபாடி, தவறுகளுக்கு துணை போய்த் தமது நிலையை வளர்த்துக் கொள்ளும் போக்கு, அவ்வளர்ச்சிக்கு ஏற்றார்ப் போல் தமக்கும் தமது குடும்பத்துக்கும் சுக வாழ்வு போன்ற கூறுகள் அத்தகைய இயக்கங்களில் அகவயப் படுத்தப்படுகின்றன.

இத்தகைய போக்கிற்கு உடன்பட மறுக்கும் நபர்களின் அடையாளக் கூறுகளை அவர்கள் வெளிப்படுத்துவது ஆபத்தாகும் சூழல் கூட உருவாகிவிடும். அப்படிப்பட்ட வாய்ப்புகள் உள்ள அடையாளச் சிக்கலைக் கீழ்வரும் சான்று உணர்த்துகிறது.

 “ Our freedom to assert our personal identities can sometimes be extraordinarily limited in the eyes of others, no matter how we see ourselves” ( Page 6, Identity and Violence – The Illusion of Destiny by Amartya Sen - 2006)

அன்னிய சக்திகளின் ஆதரவுடன் தனிநபர் முக்கியத்துவம், சுயநலன் போன்றவைகள் பிரிவினை முயற்சியை முன்னெடுப்பவர்கள் மத்தியில் தோன்றுமானால், அவர்கள் பல குழுக்களாக பிரிந்து தமக்குள் சண்டையிட்டு ஒருவரையொருவர் அழிக்கும் மேலும் மோசமான பிரிவினை நோயை வளர்த்து விடுவார்கள்.அந்நோய் பிரிவினை முயற்சியை அன்னிய சக்திகளிடம் அடகு வைக்கவே துணை புரியும். விமர்சனத்திற்கும் துரோகத்திற்கும் இடைவெளி மறைந்து, தமது குறைகளைச் சுட்டிக்காட்டுபவர்களைக் கூட துரோகிகள் எனப் பட்டம் கட்டி அழிக்கும் அபாய திசையில் பிரிவனை முயற்சி பயணிக்கும்.

இந்திய துணை கண்டத்தில் நடைபெற்று வரும் பிரிவினை முயற்சிகள் அத்தகைய ஆபத்தில் சிக்கியுள்ளனவா, இல்லையா என்பதும், சிக்கியிருந்தால் அதன் பின்புலத்தில் பிரிவினையை பொம்மலாட்டமாக இயக்கும் சக்திகள் யாவை என்பதும் சம்பந்தப்பட்ட மக்களிடையே திறந்த மனதுடன் எந்த கட்டுப்பாடுமின்றி விவாதிப்பது தவறானப் பிரிவனைப் பயணத்தைத் தடுக்கத் துணைபுரியும். தத்தம் பக்கமுள்ள தவறுகளை நேர்மையாக ஒப்புக் கொள்வதை ஊக்குவிப்பது அதற்கு வலிவூட்டும். தனிநபர், குழு வழிபாட்டுப் போதைகள் இத்தகைய முயற்சிகளைக் கெடுக்கும்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் 'தனித் தமிழ்நாடு' என்பது தி.மு.க தலைவர் சி என். அண்ணதுரை ' தனிநாடு கோரிக்கையை கை விடுகிறேன். ஆனாலும் தனிநாடு கோரிக்கைக்கான பிரச்சினைகள் தொடர்கின்றன" என்று அறிவித்தது முதல், தமிழ்/திராவிட இயக்க அபிமானிகளிடம் அக்கோரிக்கை நீறு பூத்த நெருப்பாகவே தொடர்ந்தது. தி.மு.க ஆட்சிக் கலைப்புக்கு உட்படுத்தப்பட்ட நேரங்களில் அப்போது பதவியிலிருந்தே அமைச்சர்கள் சிலரே ' ஆட்சியைக் கலைத்தால், தனித் தமிழ்நாடு கோரிக்கையை கையிலெடுப்போம்" என்று மிரட்டினார்கள். ஆனால் ஆட்சியைக் கலைத்ததும், அவர்கள் அக்கோரிக்கை பற்றி பேசவில்லை.இப்போக்கு அக்கோரிக்கையையே பொதுமக்கள் பார்வையில் எள்ளி நகையாடும் கோரிக்கையாக்கி விட்டது. இந்த சூழலில் அக்கோரிக்கையை பகிரங்கமாக முன்வைத்தும், அவ்வாறு முன்வைககத் துணிவில்லாமல தமக்குள் மட்டும் முணகும் வகையிலும் செயல்பட்ட குழுக்கள் வேர் பிடிக்காமல் போனது. 

இந்த பின்னணியில் அடுத்தடுத்து வந்த இளைய தலைமுறையினரில் சில குறைந்த சதவீத கிராமப்புற முதல் தலைமுறையாகப் படித்தவர்களும், திராவிட/தமிழ் பற்றாளர்கள் குடும்ப இளைஞர்களில் சிலரும் 'இந்தியர்' என்ற அடையாளத்தை, நிராகரிக்கும் அளவுக்கு 'தமிழர்' என்ற அடையாளத்தை வலிமையாக அகவயப்படுத்தி வாழ்ந்தார்கள். ஆனாலும் அக்கோரிக்கையை முன்வைத்து மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று யாரும் போராடுவதாகத் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் கிராமப்புற அளவில் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட உயர்ப் படிப்பு மாணவர்கள் எண்ணிக்கையும், வெளிநாட்டில் வேலை பார்த்து விடுமுறைக்கு ஊருக்கு வருபவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் வேகத்தில் 'இந்தியர்' என்ற அடையாளம் தமிழ்நாட்டில் வலிமை பெற்று வருவதும், 'இந்தியர்' என்ற அடையாளத்தை மறுத்த 'தமிழர்' என்ற அடையாளம் வலுவிழந்து வருவதும் உண்மையா? இல்லையா? என்பது பற்றியும் விளங்கிக் கொண்டாக வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக ' தனிநாட்டின் அதிகார ஆளுமை' (‘sovereignty’ )என்பது உலகமயமாக்கலுக்குப் பின் பெற்றுவரும் வேகமான மாற்றங்களைக் கருத்தில் கொள்ளாமல் இந்த அடையாளச் சிக்கலை விளங்கிக் கொள்வதும், தனி நாடு கோரிக்கைக்குப் போராடுவதும் முட்டாள்த் தனமாகவே முடியும். 

அதனை அடுத்து பார்ப்போம்.

No comments:

Post a Comment