‘தந்தி’ தொலைக்காட்சி: கி.வீரமணி பேட்டி
சமூக பொறுப்புடன் விவாதிக்க வேண்டுமல்லவா?
நான் மிகவும் மதிக்கின்ற
நண்பர் வலியுறுத்தியதின் பேரில், 29.03.2015 மாலை 'தந்தி' தொலைக்காட்சியில்,‘ கேள்விக்கென்ன
பதில்?’ நிகழ்ச்சியில், தலைமை செய்தியாசிரியர் ரங்கராஜ் பாண்டே அவர்கள், திராவிடர்
கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களைப் பேட்டி கண்ட நிகழ்ச்சியைப் பார்த்தேன்.
ஏற்கனவே உணர்வுமய போக்கில்
பயணிக்கும் தமிழ்நாட்டில், விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்துள்ள வகையில்,
சமூக பொறுப்பில்லாமல், 'தந்தி' தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சி
அமைந்து விட்டதா? என்ற கவலை காரணமாக, இந்த பதிவிற்கு நான் நேரம் செலவிட நேர்ந்தது.
இந்த பதிவிற்காக மீண்டும்
அந்த நிகழ்ச்சியை இணையத்தில் பார்த்தேன். https://www.youtube.com/watch?v=bU0H077e4DA
“ பாம்பையும் பார்ப்பானையும்
கண்டால்,பாம்பை விட்டு விடு, பார்ப்பானை அடி” என்றார் பெரியார்,” என்ற கேள்விக்கு,
அது 'வடநாட்டில இருக்குற ஒரு புராவெர்ப்'(பழமொழி)” என்று கி.வீரமணி பதில் சொல்கிறார்.
"விடுதலையிலும்,
உண்மையிலும் ஒரு நாள் கூட கோட் பண்ணினதில்ல?" என்ற கேள்விக்கு,
விடுதலையிலும், உண்மையிலும்
காட்டிட்டா, நான் இந்த பொறுப்பை விட்டு விலகிடறேன்." என்று பதில் சொல்கிறார் கி.வீரமணி.
அதற்கு கீழ் வரும் ஆதாரங்களை
அந்நிகழ்ச்சியில் காட்டி வாசித்தார்கள்.
'பார்ப்பனன் இந்நாட்டினின்று
விரட்டப்பட வேண்டும்." பெரியார் விடுதலை 29.01.1954
கடவுளை ஒழிக்க வேண்டுமானால், பார்ப்பானை ஒழிக்க வேண்டும். பெரியார்
விடுதலை 19.10.1958
பாம்பையும் பார்ப்பானையும் கண்டால்,பாம்பை விட்டு விடு, பார்ப்பானை
அடி என்றார் பெரியார். நூல்: இந்துத்வாவின் படையெடுப்பு
கி.வீரமணி குறிப்பிட்ட 'விடுதலை', 'உண்மை' ஆதாரங்களை விடுத்து, நூலாசிரியர்
யார் என்று தெரிவிக்காமல், 'இந்துத்வாவின் படையெடுப்பு' என்ற ஆதாரத்தை ஒளிபரப்பியது
சரியா? அதற்கு தொடர்பில்லாமல், பிராமண எதிர்ப்பு பற்றிய ஆதாரங்களை ஒளிபரப்பியது சரியா?
நிகழ்ச்சி தொடர்பாக, அவர்கள் குறிப்பிட்ட வே.ஆனைமுத்துவின் தொகுப்பில், பெரியார் பிராமணர்கள்
அமைப்பில் உரையாற்றியதும் உள்ளதே. அதை மறைத்து, சம்பந்தமில்லாமல் பிராமண எதிர்ப்பு
பற்றிய ஆதாரங்களை ஒளிபரப்பியது, இதழியல் நேர்மையாகுமா? அது மட்டுமல்ல, அந்த பழமொழி
வடநாட்டு பழமொழியென்றால், எப்போது தமிழ்நாட்டிற்கு இறக்குமதியானது? என்ற கேள்விகள்
எழுவதையும் மேற்குறிப்பிட்டது தடுத்ததாகாதா?
அடுத்து அந்த நிகழ்ச்சியில் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய பகுதி வருமாறு;
“திராவிடர்க் கழகத் தொண்டர்கள் பல இடங்களில் பூணூல் அறுப்பு,
குடுமி அறுப்பு செய்தவர்கள்” - ரங்கராஜ் பாண்டே
கி.வீரமணி சரியாக தெளிவுபடுத்தியது போல், தமிழ்நாட்டில் இது வரை எங்கும்
'குடுமி அறுப்பு' சம்பவம் நடைபெற்றதில்லை. 'பூணூல் அறுப்பு' சம்பவங்களும், திராவிடர்
கழகம் தோன்றுவதற்கு முன் தமிழ்நாட்டில் அதிகம் நடந்து வந்தன, தி.க உருவானபின் குறைந்திருப்பதாக
பெரியார் பட்டுக்கோட்டை சொற்பொழிவில் குறிப்பிட்டதை, அந்த பேச்சு ஒலிநாடாவில் நான்
கேட்டிருக்கிறேன். பிராமண எதிர்ப்பு பற்றிய வரலாற்று சான்றுகளின் அடிப்படையில் (கீழேக்
குறிப்பிடப்படவுள்ள) , அதற்கான சமூகக் காரணங்கள் களையப்படாதது வரை, தி.க மறைந்தாலும்,
பிராமண எதிர்ப்பு மறையாது என்பதற்கு எனது அனுபவங்களில் ஒன்றைக் குறிப்பிடுகிறேன்.
எனது முனைவர் பட்ட ஆராய்ச்சியில் இசைத்துறைக்கு ஒரு நெறியாளரும்(guide)
, இயற்பியல்(Physics) துறைக்கு ஒரு நெறியாளரும் இருந்தனர். இயற்பியல் துறை நெறியாளர்
எனது நண்பராகவும்,மிகவும் மதிக்கத்தக்க வகையில் முன்னுதாரணமாக வாழ்ந்து வருபவருமான
ஒரு பிராமண பேராசிரியர் ஆவார். அவர் மிகவும் மதிக்கும், இன்னொரு பிராமணரல்லாத பேராசிரியர்,
- தி.கவிற்கு எந்த சம்பந்தமும் இல்லாதவர், பற்றி அவர் தெரிவித்த தகவல் என்னால் மறக்க
முடியாததாக அமைந்தது.
அந்த பிராமணரல்லாத பேராசிரியர் கல்லூரிகளில், பல்கலைக்கழகத்தில் படித்த
காலத்தில், ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொண்ட காலத்தில் 'பிராமணரல்லாதார்' என்ற அடிப்படையில்
பிராமணப் பேராசிரியர்களிடம் நிறைய கொடுமைகள் அனுபவித்து, மனம் தளராமல் உழைத்து முனைவர்
பட்டம் பெற்று, அந்த துறையில் நிபுணரானார். தன்னிடம் முனைவர் பட்டம் பெற, பிராமணரல்லாதாரை
மட்டுமே ஆய்வு மாணவர்களாக எடுத்தார். தனது நண்பரான பிராமணப் பேராசிரியரிடமே நன்கு படிக்கும்
பிராமணரல்லாத மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, தன்னிடம் அனுப்பி வைக்குமாறு கோரியிருக்கிறார்.
அதை என்னிடம் தெரிவித்த அந்த பிராமணப் பேராசிரியர், அதற்காக அவர் மீது குறை சொல்லவில்லை.
பிராமணர்களிடம் பாரபட்சத்தை அனுபவித்த ஒரு பிராமணரல்லாத பேராசிரியர்
வெளிப்படையாக, ஆக்கபுர்வமாக பிராமணரல்லாதார் வளர்ச்சிக்கு உதவினார் , தனது பிராமண
நண்பர்களே அதை குறை சொல்லாத வகையில்.
அதிகம் படிக்காத, அடிமட்டத்தில் வாழ்பவர்களே பூணூல் அறுப்பு சம்பவங்களில்
ஈடுபட்டு வந்துள்ளார்கள். அந்த சம்பவங்களும், தி.க தோன்றுவதற்கு முன் அதிகம் இருந்து,
தி.க வின் செயல்பாடுகள் வடிகாலாக இருந்ததால், அச்சம்பவங்கள் குறைந்தன.. ராஜாஜி முதல்வராக
இருந்தபோது, கும்பகோணத்தில், பெரியார் தலைமையில் ஊர்வலம் நடந்தபோது, இராமர் உள்ளிட்ட
கடவுளர் சிலைகளை அடித்த நிகழ்ச்சி நடந்தது. அதைப் பற்றி முதல்வர் ராஜாஜி கண்டுகொள்ளவில்லை.
1970களில் சேலத்தில் அது போன்ற ஊர்வலம் நடைபெற்று, பெரும் கண்டனங்கள் வெளிப்பட்ட சூழலில்,
திருச்சி தேசியக் கல்லூரி பிராமண மாணவர்கள் ஊர்வலமாக சென்று, பெரியார் சிலைக்கு செருப்பு
மாலை அணிவித்த பின்னும், பூணூல் அறுப்பு சம்பவங்கள் நடைபெறவில்லை, தி.மு.க ஆட்சிக்கு
ஊறு நேரக்கூடாது என்பதற்காக. பெரியார் மறைந்து, வடநாட்டு 'ராம லீலாவிற்கு' எதிராக,
மணியம்மை தலைமையில், சென்னை பெரியார் திடலில் 'இராவண லீலா' நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த
போது, காவல் துறை பாதுகாப்புடன் பெரியார் திடல் வாயிலுக்கு எதிரே, தனது ஆதரவாளர்களுடன்,
பிராமண எழுத்தாளர் 'தீபம்' பார்த்தசாரதி, கைகளில் பெரியார் படத்தை ஏந்தி, செருப்பால்
அடித்த போராட்டம் நடத்தினார். அப்போதும் பூணூல் அறுப்பு சம்பவங்கள் நடைபெறவில்லை, தி.மு.க
ஆட்சிக்கு ஊறு நேரக்கூடாது என்பதற்காக.
பின் எம்.ஜி.ஆர் ஆட்சியில் பிராமண சங்கம் செயல்பட்ட வேகத்தில், பூணூல்
அறுப்பு சம்பவங்களும் 'திடீரென' அதிகரித்தன. அந்த காலக்கட்டத்தில் தஞ்சை சரபோசி கல்லூரியில்,
பெரியார் படத்தை பிராமண மாணவர்கள் உடைத்தனர். அதைக் கேள்விப்பட்ட பெரியார் தொண்டர்கள்
கல்லூரிக்குள் நுழைந்து, ஒவ்வொரு வகுப்பாக சென்று, பூணூலை வைத்து அடையாளம் கண்டு,
- சில பிராமண மாணவர்கள் செய்த தவறுக்காக- பல அப்பாவி பிராமண மாணவர்களை அடித்தனர்.
பின் தமிழ்நாட்டில் , பிராமண சங்க செயல்பாடுகள் குறைய, பூணூல் அறுப்பு
சம்பவங்களும் குறைந்தன.
தமிழ்நாட்டில் சாதி, மத மோதல்கள் இன்றி சமூக நல்லிணக்கம் வளர்ந்தால்தான்,
தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும், வீழ்ச்சியிலிருந்து மீண்டு வளரமுடியும் என்பது
என் கருத்து. அந்த சமூக நல்லிணக்கத்திற்கு மற்றவர்களை விட, பிராமணர்களே மிகுந்த சமூகப்
பொறுப்புடன் பங்களிப்பு வழங்க வேண்டும் என்ற விவேகானந்தரின் அறிவுரை இன்று அவசியம்
பின்பற்ற வேண்டியதாகும். மாறாக உணர்வுபூர்வ போக்கில் வசதியான பிராமணர்கள் ஊடகத்திலும்,
இணையத்திலும் வெளியிடும் 'வன்முறை'க் கருத்துக்களால், அடிமட்டத்தில் வாழும் அப்பாவி
பிராமணர்களுக்கே ஆபத்து ஏற்படும் என்பது மேலே குறிப்பிட்ட வரலாறு உணர்த்தும் பாடமாகும்.
அந்த நல்லிணக்க வளர்ச்சிக்கு மேற்குறிப்பிட்ட 'தந்தி' தொலைக்காட்சி
நிகழ்ச்சிகள் ஊறு விளைவிக்குமோ? என்ற கவலையும் எனக்குண்டு.
தமிழ்நாட்டில் செல்வம்,செல்வாக்குடன் உள்ள பிராமணர்களின் பூணூலை எவரும்
இது வரை அறுத்ததில்லை. பிராமணர்கள் மட்டுமின்றி, செல்வம் செல்வாக்குடன் உள்ள
மற்றவர்களும், சாதி, மதக் கலவரங்களில் பாதிக்கப்படுவதில்லை.
பிராமணராயிருந்தாலும், பிராமணரல்லதாராயிருந்தாலும் அடிமட்டத்தில் உள்ளவர்களே
பூணூல் அறுப்பு, மற்றும் சாதி, மத கலவரங்களில் எதிரெதிர் பக்கங்களில் அதிகம்
பாதிக்கப்படுகிறார்கள். அதை உண்மையில் உணர்ந்து, சமூகத்தில் வன்முறைக்கான வாய்ப்புகளை
அதிகம் குறைத்தவர் பெரியார். பொது மக்களுக்கும், பொதுச் சொத்துக்கும் பாதிப்பு அற்ற
போராட்டங்களையே அவர் மேற்கொண்டார். 'தந்தி' தொலைக்காட்சி நிகழ்ச்சி குறிப்பிட்ட ஆனைமுத்துவின்
தொகுப்பில் பிராமணர் அமைப்பில் பெரியார் ஆற்றிய உரையும் வெளிவந்துள்ளது. பெரியாரின்
பிராமண எதிர்ப்பு பற்றிய சரியான புரிதலுக்கு அதைப் படிப்பது உதவும்.
வன்முறைக்கான வாய்ப்புகளைக் குறைக்க, அந்த அடிமட்ட மக்களுக்கு 'உணர்ச்சி
வடிகாலாக' அவர் வெளிப்படுத்திய உரைகளை, முன்னும் பின்னுமின்றி மேற்கோளாகக் காட்டுவது
எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு மேற்குறிப்பிட்ட 'தந்தி' தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒரு மோசமான
முன்னுதாரணமாகிவிடக் கூடாது என்பது என் கவலையாகும். காந்தி, அம்பேத்கார், அண்ணாதுரை
உள்ளிட்டு ஏறத்தாழ பெரும்பாலான தலைவர்களை பெரியார் கண்டித்திருக்கிறார். அவர்களையே
பாராட்டியுமிருக்கிறார். எதற்காகக் கண்டித்தார்? பின் எதற்காக அவர்களைப் பாராட்டினார்?
என்ற பின்புலத்தை (context) நீக்கி, அந்த கண்டனங்களை மேற்கோளாகக் காட்டுவது சமூகப்
பொறுப்பின்மை ஆகாதா?
அடுத்து கீழ்வரும் கேள்விக்கு, எளிதில் பதில் சொல்லக்கூடிய கி.வீரமணி,
ஏன் 'அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதை,' அதற்குப் பதிலாகச் சொன்னார் என்று தெரியவில்லை.
நிகழ்ச்சி எடிட்டிங்கில் நீக்கப்பட்டதா? அல்லது கட்சி, மற்ற சுமைகள் காரணமாகவும், அவரது
வயதை ஒத்தவர்களுக்கு வரும் மறதி காரணமாகவும் நிகழ்ந்ததா? என்பதும் தெரியவில்லை.
வைக்கம் போராட்டத்தைக் குறிப்பிட்டு, “அதே நேரத்தில தமிழகத்தில
ஆயிரக்கணக்கான கோவில்களில் வந்து, தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய முடியாமல் இருந்த போது,
ஏன் தமிழ்நாட்டில் ஒரு கோயில்களில் கூட போராட்டம் நடத்தவில்லை?”- ரங்கராஜ் பாண்டே
மேலேக் குறிப்பிட்ட கேள்வியில் வைக்கம் போராட்ட முடிவில் கோவில் நுழைவு
உரிமைப் பெறப்படவில்லை என்பதும், கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடக்கும் உரிமை
மட்டுமே பெறப்பட்டது என்பதும், அது நடந்த வருடம் 1924 என்பதும், அதே நேரத்தில தி.க
என்ற கட்சியே கிடையாது என்பதும், , அப்போது பெரியார் காங்கிரசில் இருந்தார் என்பதும்,
திராவிடர் கழகம் உருவானது 1944 என்பதும் தெளிவுபடுத்தப்படாமல், கேட்கப்பட்ட கேள்வியாகும்.(
வைக்கம் போராட்டம் பற்றிய குறிப்பு கீழே )
எனது முயற்சியில், 'குடி அரசு' இதழ்களை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாட்டில்
எங்கெங்கு தீண்டாமையைக் கண்டித்து போராட்டங்கள் நடந்தன, அதில் பெரியாரும், பெரியார்
தொண்டர்களும் எத்தகைய ஆதரவு வழங்கினார்கள் என்பதையும் தொகுத்து, 1980களில் புதுக்கோட்டை
பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கி.வீரமணி வெளியிட்ட புத்தகம் உள்ளது. அது போன்று பல
வெளிவந்துள்ளன. அவற்றை நிகழ்ச்சியில் சில நொடிக்ளாவது 'தந்தி' தொலைக்காட்சியில் காட்டாமல்
விட்டது ஏன்?
உண்மையை
அறியும் ஆர்வத்தில், 'தீண்டாமையை' எதிர்த்து பெரியாரும், பெரியார் தொண்டர்களும் என்ன
செய்தார்கள்? என்று கேட்பது சரியே. அது போல, 'தமிழ்த் தேசியம்' பேசியவர்களை/ பேசுபவர்களை
நோக்கி கேள்விகள் எழுப்பியதுண்டா? 'தேவேந்திர குலம்' என்று கூறும் பள்ளர் சாதியைச்
சேர்ந்த தலைவர்கள், பறையரையும், சக்கிலியரையும், 'சமத்துவமாக' தமது சாதியினர் நடத்த
முயற்சித்ததுண்டா? பறையர், பள்ளர் சாதிகளைச் சேர்ந்த தலைவர்கள், சக்கிலியரை,
'சமத்துவமாக' தமது சாதியினர் நடத்த முயற்சித்ததுண்டா? போன்ற கேள்விகளை எழுப்பி, உரிய
சான்றுகளுடன் உண்மைகள் வெளிவருவது ஆக்கபூர்வமான செயலாக அமையும். பொதுவாக, தமிழ்நாட்டில்,
பிறரைக் குறை சொல்லும் முன், பொதுவாழ்வு வியாபாரத்தில் ஈடுபடாத, சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரும்
தமது மனசாட்சிக்குட்பட்டு, தம்மை சுயவிமர்சனம் செய்து கொள்வது நல்லது என்பது என் கருத்து.
அதே போல், 'கடவுள் இல்லை' என்ற முழக்கத்தை முன்வைத்த போது, இந்து, முஸ்லீம்,
கிறித்துவ மதங்களின் முக்கிய பிரதிநிதிகள் திருச்சி பெரியார் மாளிகையில் பெரியாரைச்
சந்தித்து, தங்கள் மனம் புண்படுவதாக வருத்தம் தெரிவித்தனர். அதற்கு அவர்களிடம், 'நீங்கள்
ஒவ்வொருவரும் மற்றவரின் கடவுளை இல்லையென்பதால், உங்களின் மனம் புண்படாத போது, நான்
கடவுள் இல்லை என்று சொல்வதால், உங்கள் மனம் புண்படுகிறது என்பது சரியா?' என்ற வகையில்
விளக்கம் அளித்து, அவர்களை அனுப்பிய செய்தி வெளிவந்துள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக 'பிராமணர்' என்ற சொல்லின் கீழ் இன்று சில குறிப்பிட்ட
சாதிகள் அடையாளப்படுத்தப்படுவது என்பது காலனி ஆட்சிக்கு முன், தமிழில் இருந்ததற்கு
சான்றுகள் உண்டா? வருண அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வந்த அந்த சொல், இன்றுள்ள சாதிகளை
உள்ளடக்கி, காலனி ஆட்சிக்கு முன் தமிழில் இருந்ததற்கு சான்றுகள் உண்டா? சங்க இலக்கியங்களில்
பிராமணன் என்ற சொல் இல்லை. சங்க இலக்கியங்களில் வரும் 'பார்ப்பான்' 'பார்ப்பார்' 'பறையன்'
ஆகிய சொற்கள் இன்றுள்ள சாதிகளைக் குறிக்குமா? 'பறையன்' என்ற சொல் சங்க இலக்கியங்களில்
சாதியைக் குறித்த சொல் அல்ல என்றும், விவசாயம், மீன்பிடித்தல் உள்ளிட்டு பல தொழில்களில்
ஈடுபட்டோரெல்லாம் , பறை வகை இசைக் கருவிகளை இசைத்ததால், பறையன் என்று அழைக்கப்பட்டனர்
என்றும்,, இசையில் உயர்வு, தாழ்வு, தீண்டாமை போன்றவை காலனியத்தின் நன்கொடையா? என்ற
கேள்வியை எழுப்பும் சான்றுகளையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். ( இசையில் ' தீண்டாமை காலனியத்தின் ‘நன்கொடை’யா?; http://tamilsdirection.blogspot.sg/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html )
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட 'பார்ப்பான், பார்ப்பார்'ஆகிய
சொற்கள் வேள்வி செய்தவர்கள் (அன்று இன்றுள்ளது போல் கோவில் வழிபாடு கிடையாது)
என்பதற்கும் அவர்களை அரசர்கள் ஆதரித்ததற்கும், மனம் நோகச் செய்ததற்கும் சான்றுகள் உண்டு.
பின் குறிப்பிட்டதற்கான சான்று கீழே உள்ளது.
' ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர்; மற்று
இது
நீர்த்தோ நினக்கு?' என வெறுப்பக் கூறி
புறநானூறு 43: 13 15
இது போன்ற செய்தி பூலாங்குறிச்சி கல்வெட்டிலும் இருப்பதாக ஒரு கல்வெட்டு
ஆராய்ச்சியாளர் என்னிடம் தெரிவித்தார்.
அதே போல், காலனியத்திற்கு முன் தமிழ்நாட்டில் கல்வியறிவு அதிகம் பெற்றவர்களாக
'கம்மாளர்' என்ற இன்றைய 'விஸ்வகர்மா' சாதிகள் இருந்ததையும், கல்வியிலும் போர்ப் பயிற்சியிலும்
சிறந்து விளங்கிய பிராமணர்கள் அமைச்சர்களாயிருந்து, சோழ வாரிசு பட்டத்துரிமையில் சூழ்ச்சிகள்
செய்ததால், முடி சூட்டியபின் ராஜராஜ சோழன் மேற்கொண்ட முதல் படையெடுப்பின் மூலம், அந்த
பிராமணர்கள் பயிற்சி பெற்ற 'பல்கலைக்கழகம்' போன்ற, கேரள எல்லையில் இருந்த யாகசாலையை
அழித்ததையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். காலனி ஆட்சியில்தான் கல்வியிலும், அரசு வேலைகளிலும்
பிராமணர்கள் 'செல்வாக்கான இடத்தை'ப் பிடித்தார்கள். தமிழில் 'பிராமணர்' என்ற சொல்லும்,
'பிராமண எதிர்ப்பும்' அதன்பின் அறிமுகமாகியிருந்தால் வியப்பில்லை.
இந்த பேட்டி தொடர்பாக
இணையத்தில் வெளிவரும் கருத்துக்களில் உள்ள உணர்வுபூர்வ ஆதிக்கம் இன்னும் கவலையளிக்கிறது.
திரு.ரங்கராஜ் பாண்டே கேட்ட கேள்விகள் அனைத்தும் பொது அரங்கில் வெளிப்படுபவை இல்லையா? அவர்களின்
நேர்க்காணல்களை ஆராய்ந்து, அவர் வீரமணியிடம் மட்டுமே நெருக்கடியான கேள்விகளை கேட்டார்
என்று எவராவது நிறுவியுள்ளார்களா? அவர் பெயர் 'பாண்டே' என்பது பற்றி விசாரித்து, ஆர்.எஸ்.எஸ்
சார்பாக கேள்விகள் கேட்டார் என்று குற்றம் சுமத்தலாமா? ஒரு மனிதர் உண்மையானவரா? நேர்மையானவரா?
என்று ஆராயாமல், ஆர்.எஸ்.எஸ் என்றால் மோசமானவர் என்றும், பெரியார் கொள்கையாளர் என்றால்
விரும்பத்தகுந்தவர் என்றும் அணுகுவது மிகவும் ஆபத்தானது என்பது என் அனுபவமாகும். (https://tamilsdirection.blogspot.com/2015/04/2.html)
இன்று தமிழ்நாட்டில் யார் யார் எந்தெந்த தகுதி திறமைகளின் அடிப்படைகளில்
எங்கெங்கு செல்வாக்கு செலுத்தி வருகிறார்கள்? அந்த 'செல்வாக்குகளுக்கும்', தமிழ்வழியின்
மரணப்பயணத்திற்கும், தமிழ்நாட்டின் நிலத்தடி நீர் ஆதாரங்களாகிய ஏரிகள், குளங்கள், காடுகள்
மட்டுமின்றி, இயற்கைக் கனிவளங்கள் சூறையாடப்படுவதற்கும் தொடர்பு உண்டா? அந்த சூறையாடலை
எதிர்த்து,
அந்த சூறையாடல்களின் பின்னணியில் இருந்த 'ஊழல் பேராசை'
திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களை எதிர்த்து, 'தமிழ் உணர்வு, தமிழ்த்
தேசியம், பகுத்தறிவு,பார்ப்பன எதிர்ப்பு' ஆதரவாளர்கள்
இதுவரை கண்டித்திருக்கிறர்களா? இனியாவது கண்டிப்பார்களா? இல்லையென்றால், அந்த சூறையாடலுக்கு
துணையாக, மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் குற்றச்சாட்டுக்கு உள்ளாக மாட்டார்களா?
தமிழ்நாட்டில் தமிழர்கள் அறிவு உழைப்பிலும், உடல் உழைப்பிலும் பதர்களாகி வருகிறார்களா?
அந்த துறைகளில் வட மாநிலத்தவர் உள்ளிட்ட பிற மாநிலத்தவர் தமிழ்நாட்டில் வளர்ந்து வருகிறார்களா?
தமிழ், பாரம்பரியம், பண்பாடு தொடர்பற்ற, திரிந்த மேற்கத்திய பண்பாட்டுடன் 'தமிங்கிலிசப்
பதர்களாக' தமிழர்கள் வளர்ந்து வருகிறார்களா? அவை பற்றி கவலைப்படாமல், தமது குடும்பப்
பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகளை, சுற்றுப்புற
சூழலைப் பாதுகாக்கும் முயற்சிகள் யாருடைய நலன்களுக்காக? தமிழ்நாட்டில் அறிவு உழைப்பிலும்,
உடல் உழைப்பிலும் வளர்ந்து வரும் பிற மாநிலத்தவர் பலன் பெறவா? போன்ற கேள்விகளைப் பின்
தள்ளி, உணர்வுமயமான பிராமண - பிராமணரல்லாதார் பகைமை வளர, மேலேக்குறிப்பிட்ட 'தந்தி'
தொலைக்காட்சி போன்ற நிகழ்ச்சிகள் வழி வகுக்காதா? என்பது போன்ற கேள்விகள், தமிழின்,
தமிழர்களின், தமிழ்நாட்டின் மீது 'சுயலாப' நோக்கின்றி கவலைப்படுபவர்கள் பரிசீலித்து,
உரிய மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
வைக்கம் போராட்டம் பற்றிய குறிப்பு:
வைக்கம் போராட்டத்தின் வரலாறு, 1865இல் தொடங்குகிறது. திருவாங்கூர்
அரசு வைக்கத்தில் அனைத்து பொது சாலைகளிலும் நடக்கலாம் என்ற அரசாணையானது, நீதி மன்ற
தீர்ப்பு மூலம் வைக்கம் கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளுக்குப் பொருந்தாது என்று அமுலாகிறது.
அதை எதிர்த்து ஈழவ இளைஞர்கள் நடத்திய போராட்டம் 'ஜாலியன்வாலாபாக் ' பாணியில் ஒடுக்கப்பட்டு
பலர் கொல்லப்பட்டனர். பின் 1905லும், 1920லும் அப்போராட்டங்கள் தொடர்ந்தன. 1923இல்
காகிநாடாவில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் வைக்கம் போராட்டத்தை ஆதரிக்க முடிவு
செய்யப்பட்டது. காங்கிரஸ் ஆதரவுடன் நடந்த அந்த போராட்டத்தில், காந்தி மேற்கொண்ட அணுகுமுறை
போராட்டத்தைப் பலகீனப்படுத்தியது. காவல் துறையின் அடக்குமுறையை எதிர்த்து உண்ணாவிரதம்
மேற்கொண்டதை காந்தி கண்டித்தார். இந்து அல்லாதவர்கள், போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது,
பொருளுதவியும் செய்யக்கூடாது என்று காந்தி தடுத்தார். அதனால் போராட்டத்தில் பங்கேற்றிருந்த
அகாலிக் கட்சியினர் விலக, போராட்டத் தலைவர்களில் ஒருவராக கைதாகியிருந்த ஜார்ஜ் ஜோசப்பும்
போராட்டத்தை விட்டு விலகி, போராட்டம் பிசுபிசுக்கும் நிலை ஏற்பட்டது. அந்த சூழலில்
ஏற்கனவே தமிழ்நாட்டில் இது போன்ற சீர்திருத்தங்களில் ஈடுபட்டு புகழ் பெற்றிருந்த பெரியாருக்கு
அழைப்பு வந்தது. திருவாங்கூர் அரசர் ஈரோட்டில் பெரியார் இல்லதிற்கு விருந்தினராக வந்தவர்.
வைக்கம் எல்லையில் தமக்கு தந்த அரச மரியாதையைப் புறக்கணித்து, பெரியார் தமது மனைவி
நாகம்மையுடன் போராட்டத்தில் ஈடுபட, போராட்டம் சூடு பிடித்தது. பெரியார் சிறையிலிருந்தபோது,
அரசர் மரணமடைய, அதைக் கெட்ட சகுனமாகக் கருதி, பெரியாரை வைக்கத்திலிருந்து விடுதலை செய்து,
மீண்டும் சென்னையில் சிறை வைத்தனர். கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் மட்டும் நடக்கும்,
(கோவில் நுழைவு உரிமையற்ற) சமாதானத்தை காந்தி ஏற்று, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு
வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் 'வைக்கம் வீரர்' என்று பெரியாருக்கு பட்டம் கொடுத்தது.
குறிப்பு 2: "இது தொடர்பாக, திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட
மறுப்புகளை, குறுந்தகடு மூலம் தந்தி டிவிக்கு அனுப்பப்பட்டு, தந்தி டிவி, தொடர்ந்து
அந்த உண்மை விவரங்களை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டிய ஒரு கட்டாயத்தை உண்டு பண்ணியுள்ளது.
நேற்றும் இன்றும் பல முறை, திராவிடர் கழகத்தின் சார்பில் தரப்பட்ட விளக்கத்தை தந்தி
டிவி தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது."
03 ஏப்ரல்
2015;http://www.viduthalai.in/readers-choice/115-2011-05-28-07-41-10/99006-2015-04-03-10-40-39.html
Also visit: ‘தந்தி’ தொலைக்காட்சி: கி.வீரமணி பேட்டி (2); காலத்தின் 'நகைச்சுவையை' ரசிக்க;’
https://tamilsdirection.blogspot.com/2015/04/2.html
Also visit: ‘தந்தி’ தொலைக்காட்சி: கி.வீரமணி பேட்டி (2); காலத்தின் 'நகைச்சுவையை' ரசிக்க;’
https://tamilsdirection.blogspot.com/2015/04/2.html