Monday, August 24, 2020

தாமாகவே தோற்ற 'ஜுஜுட்சு'வாக பிரபாகரனும் விடுதலைப்புலி ஆதரவாளர்களும் (2)


ராஜபட்சே பாணி குடும்பத்திடம் தமிழ்நாடு சிக்கும் ஆபத்து இருக்கிறதா?



இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலுக்குப் பின், ராஜபட்சே குடும்பத்தின் முழுக்கட்டுப்பாட்டில் ஆளுங்கட்சியும் ஆட்சியும் வந்து விட்டது. அதிபர்: கோத்தபய ராஜபட்சே (மூன்றாமவர்); பிரதமர்: மகிந்தா ராஜபட்சே (இரண்டாமவர்); அமைச்சர்: சமால் ராஜபட்சே (மூத்தவர்); அமைச்சர்: நமல்  ராஜபட்சே (மகிந்தா ராஜபட்சேயின் மகன்)

இலங்கை தேர்தலுக்கு முன், கீழ்வரும் அறிவுரையை வெளியிட்டேன்.

'தேர்தல் ஒரு நல்ல வாய்ப்பாகும். இலங்கையில் உள்ள தமிழர்கள் எல்லாம் வரும் தேர்தலில் ராஜபட்சேயை ஆதரிப்பதே அவர்களுக்கு நல்லது என்றும், அவ்வாறு ஆதரிப்பதாக முடிவு எடுத்தால், அவர்கள் உரிய பலன்கள் பெற தாம் துணை புரியலாம் என்றும் சுப்பிரமணிய சுவாமி டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

சீமானுக்கு நெருக்கமான சசிகலா தமிழ்நாட்டின் முதல்வராக சுப்பிரமணிய சுவாமியின் உதவியை நாடியதற்காக, சசிகலாவை சீமான் கண்டிக்கவில்லை. அது போல, முள்ளி வாய்க்கால் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் லெனின் வழியில் ராஜபட்சேயுடன் சமரசமாக சுப்பிரமணிய சுவாமியின் உதவியை நாடுவதை, சீமான் உள்ளிட்ட தமிழ்நாட்டு விடுதலைப்புலி ஆதரவாளர்கள் எதிர்ப்பதில் நியாயம் இருக்க வாய்ப்பில்லை.

'கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை' என்று பயணிப்பதானது, தோல்வியில் உரிய பாடம் கற்க மறுத்துப் பயணிக்கும் முட்டாள்த்தனமாகும்.' (https://tamilsdirection.blogspot.com/2020/07/blog-post_11.html)

பிரபாகரன் மற்றும் அவரின் விடுதலைப்புலி ஆதரவாளர்களின் மூலமாக, எதிரியே தனது வலிமையை 'தானம்' செய்து, தானாகவே தோற்கும், 'வித்தியாசமான அரசியல் ஜுஜுட்சு' இலங்கையில் எவ்வாறு அரங்கேறியுள்ளது

ராஜபட்சே குடும்பத்தின் முழுக்கட்டுப்பாட்டில் இலங்கை சிக்கியது போலவே, தமிழ்நாடும் ஒரு குடும்பத்தின் முழுக்கட்டுப்பாட்டில் சிக்கும் ஆபத்தும் இருக்கிறதா? அவ்வாறு சிக்கிய பின், இலங்கையில் உள்ள தமிழர்களைப் போலவே, தமிழ்நாட்டுத் தமிழர்களும் சுப்பிரமணிய சுவாமியின் மூலமாகவே உதவிகள் பெறுவதும் தவிர்க்க இயலாததாகி விடும். அதற்கு அவர் மீது பழியைப் போட்டு தப்பிக்க முடியாது.

கூட்டுக்குடும்பத்தின் வலிமையானது அக்குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் வலிமையைப் பொறுத்ததாகும்.  உறுப்பினர் எவரும் நோஞ்சானாக இருக்கும் பட்சத்தில், அவர் விரும்பினாலும் மற்ற வலிமையான உறுப்பினர்களுக்கு உள்ள மரியாதை கிடைக்காது. அதே நேரத்தில், கூட்டுக்குடும்பத்தில் அதீத வலிமையுள்ள உறுப்பினருக்கு சிறப்பு மரியாதையே கிடைக்கும். இந்தியாவில் கர்நாடக மாநிலம் எவ்வாறு இந்தியாவில் வலிமையுள்ள மாநிலமாக இருக்கிறது? தமிழ்நாடானது எவ்வாறு இந்தியாவில் நோஞ்சான் மாநிலமாக இருக்கிறது

நோஞ்சான் கட்சிகளை தமிழ்நாடு அனுமதிக்கும் வரை, யார் பிரதமராக இருந்தாலும், மத்தியில் உள்ள ஆட்சியின் நலன்களுக்காக தமிழ்நாட்டைக் காவு கொடுக்கும் துணிச்சல் வெளிப்படுவதைத் தவிர்க்க முடியாது. 

எனவே தமிழ்நாட்டின் ராஜபட்சேயாக சசிகலா குடும்பத்தின் ஆட்சியில் தமிழ்நாடு சிக்கும், என்ற கணக்கில் சுப்பிரமணியசுவாமி முயன்று வருகிறார்.

'பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, விரைவில் விடுதலையாவார் என, சொல்லப்படுகிறது. இவர் தொடர்பான விபரங்களை, கர்நாடக அரசின் முக்கிய அதிகாரி ஒருவர், வாரம் ஒரு முறை, மத்திய அரசுக்கு தெரிவித்து வருகிறாராம்.சசிகலா, விடுதலையானதும் சென்னையில் தான் வசிக்கப் போகிறார். அதுவும் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனிலுள்ள வேதா நிலையத்திற்கு எதிரே உள்ள வீட்டில் தான் இருப்பார் என, கர்நாடக அதிகாரிகள், டில்லிக்கு தெரிவித்துள்ளனர்.' - தமிழக அரசியலை மாற்றுவாரா சசிகலா? ; 

கருணாநிதி இல்லாத நிலையில், ஸ்டாலின் - உதயநிதி தலைமையிலான தி.மு.கவின் கருணாநிதி குடும்ப அரசியலானது சோளக்கொல்லை பொம்மையாக வெளிப்படுவதும், நடராஜன் இல்லாத நிலையில், சசிகலா குடும்ப அரசியலும் அதே பாணியில் பயணிக்கப் போவதும் விரைவில் வெட்ட வெளிச்சமாகி விடும்.

எனவே, முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சங்கமித்த இந்துத்வா எதிர்ப்பு மற்றும் ஆதரவு கட்சிகள் எல்லாம் எந்த அளவுக்கு முட்டுக் கொடுத்தாலும், தமிழ்நாடானது ராஜபட்சே பாணி குடும்ப அரசியலில் சிக்குவதற்கு வாய்ப்பே இல்லை.

ஜெயலலிதாவின் உயிருக்கே ஆபத்தானவர்கள் என்று ஊடக வெளிச்சத்துடன் ஜெயலலிதாவால் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பொறுப்பில் ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்கள் கூட பார்க்க முடியாத வகையில், அப்பொல்லோவில் மர்மமான முறையில் பல மாதங்கள் சிகிச்சையில் மர்மமாக இறந்தார் ஜெயலலிதா. அதே குற்றவாளிகள் ஜெயலலிதாவின் ரத்த சொந்தமின்றி ராஜாஜி ஹாலில் நேரடி ஒளிபரப்பில் ஜெயலலிதாவின் உடலைச்சுற்றி இருந்தார்கள். பின் தமிழ்நாட்டில் வழக்கில் உள்ள சடங்கு சம்பிரதாயங்களை மீறி, இறுதிச்சடங்கினை அனைத்து இந்திய பிரபலங்களின் முன்னிலையில் நிகழ்த்தினார்கள்.

மன்மோகன் சிங் மட்டுமின்றி, தேவகவுடா போன்ற பலகீனமான ஆட்சிகளில் கூட, மேற்குறிப்பிட்ட அவமானம் தமிழ்நாட்டிற்கு நேர்ந்திருக்காது.

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சங்கமான இந்துத்வா எதிர்ப்பு மற்றும் ஆதரவு கட்சிகள் எல்லாம் சசிகலா குடும்ப அரசியலுக்கு ஒத்துழைத்த போக்கானது, மன்மோகன் சிங் மற்றும் தேவகவுடா ஆட்சிகளில் வெளிப்பட்டிருக்காது. அந்த ஒத்துழைப்பு இன்றி, ஜெயலலிதாவின் பல மாதங்களிலான‌ மர்மமான மருத்துவ சிகிச்சையும் மர்மமான மரணமும் நிகழ்ந்திருக்காது.

இந்திராகாந்தி பிரதமராக இருந்திருந்தால், மர்மமான முறையில் அப்பொல்லோவில் ஜெயலலிதாவைச் சேர்த்தவுடன், கீழ்வருவதைத் தான் செய்திருப்பார்.

ஜெயலலிதா குணமானவுடன் மீண்டும் முதல்வராவார் என்று இந்திராகாந்தி அறிவித்து, சட்டசபையை 'suspend' செய்து, ஆளுநர் ஆட்சியை அமுலாக்கி, ஜெயலலிதாவின் சிகிச்சையை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பார். தடை செய்பவர்களை சிறையில் தள்ளி 'தகுந்த பாடம்' புகட்டி இருப்பார். ஜெயலலிதாவின் மறைவிற்குப்பின், தமிழ்நாடானது அத்தகைய துணிச்சலை வெளிப்படுத்திய பிரதமரின் மூலமாக தேசிய நீரோட்டத்தில் சேர்ந்திருக்கும். 

அவ்வாறு தமிழ்நாடானது  சேர்ந்திருந்தால், அது தன்மானத்துடன் சரியான தேசக்கட்டுமானத் திசையில் சேர்ந்ததாக இருந்திருக்கும்.

தமிழக பா.ஜ.க நோஞ்சான் கட்சியாகப் பயணித்தாலேயே, பிரதமர் மோடி அவ்வாறு பயணிக்கவில்லை, என்பது எனது யூகமாகும்.

நோஞ்சான் மாநிலமாக தமிழ்நாடு நீடிக்கும் வரையிலும், தமிழ்நாட்டு தேசியக் கட்சிகளும் நோஞ்சான் கட்சிகளாக நீடிக்கும் வரையிலும்வேறு வழியின்றி குடும்பக்கட்சிகள் மூலமாக தமிழ்நாட்டைக் கையாளும் அணுகுமுறையையே மத்தியில் ஆளுங்கட்சி மேற்கொள்ளும்.

கர்நாடக பா.ஜ.கவைப் போலின்றி, தமிழக பா.ஜ.க அவ்வாறு 'நோஞ்சான் கட்சியாக' பயணிப்பதால் மட்டுமே, மத்திய அரசானது மேற்குறிப்பிட்ட போக்கில் பயணிப்பதாக நான் கருதவில்லை.

'The Godfather (1969)' நாவல் எழுதிய மாரியோ புசோவின் இன்னொரு நாவலின் தலைப்பு 'Fools Die (1978)’  முட்டாள்கள் இறக்கிறார்கள்'.

தமிழ்நாட்டின் மேற்குறிப்பிட்ட போக்குகளை மையமாகக் கொண்டு 'நோஞ்சான்கள் குடும்ப அரசியலுக்கு அடிமையாகிறார்கள்' என்ற நாவல் எழுத வாய்ப்பிருக்கிறது.

அவ்வாறு நாவல் வெளிவந்தாலும், அந்த திசையில் தமிழ்நாடு பயணிக்காது. தமிழ்நாடானது நோஞ்சான் கட்சிகளிடமிருந்து விடுதலை பெறும் புரட்சியானது அரங்கேறி வருகிறது.

ஊடகங்களை முட்டாள்களாக்கி, அந்த புரட்சியை வெளியில் தெரியாமல் அரங்கேற்றி வரும் 'எங்க வீட்டுப்பிள்ளை' எம்.ஜி.ஆர்களைப் பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

இமாலய வெற்றி பெற்ற எம்.ஜி.ஆரின்  'எங்க வீட்டுப் பிள்ளை' திரைப்படத்துடன் ஒப்பிடும் நிலையில் தமிழ்நாடு இன்று பயணிக்கிறது. அந்தத் திரைப்பட துவக்க காட்சிகளில் வில்லன் நம்பியாருக்கு பயந்த கோழையாக இருந்த எம்.ஜி.ஆர் கிளைமாக்ஸ் காட்சிகளில் வீரத்துடன் வெளிப்பட்டு நம்பியாருக்கு உரிய பாடம் புகட்டுவார். அது போல கூவத்தூரில் சசிகலாவுக்குப் பயந்த கோழைகளாக இருந்தவர்களில் யார், யார், சசிகலா மீண்டும் வரும்போது, வீரமானவர்களாக வெளிப்படப் போகிறார்கள்? என்று நாம் ஆவலுடன் காத்திருப்போம்; வீரமான எம்.ஜி.ஆர்களைப் பாராட்டுவதற்காக.

'எங்க வீட்டுப் பிள்ளை'யில் கோழையான எம்.ஜி.ஆருக்கு வீரமூட்டியது கிராமப்புறச் சூழலே ஆகும். இன்றும் கிராமப்புற எம்.ஜி.ஆர்கள் மூலமாகவே, நகர்ப்புற கோழை எம்.ஜி.ஆர்களும் வீரர்களாக மாறும் சமூகத் தூண்டல் (Social Induction) அதிசயமும், தமிழ்நாட்டில் நிகழ்ந்து வருகிறது. முதல்வர் ஈ.பி.எஸ் தம்மால் இயன்ற அளவுக்கு தமது கிராமப்புற வேர்களுக்கு புத்துயிர் ஊட்டி வருகிறார். சுயலாப நோக்கின்றி, தன்மானத்துடன் வாழ்வதற்காக இழப்புகளை விரும்பி ஏற்று பயணிக்கும் புலமையாளர்களின் பங்களிப்பானது, அந்த அதிசயத்திற்கு சமூக வினையூக்கியாக (Social Catalyst) அமையும். 
(‘'எங்க வீட்டுப் பிள்ளை' எம்.ஜி.ஆர்களின் வசமாகும் அ.இ.அ.தி.மு.க?’; 

பள்ளி, கல்லூரி நாட்களில் தி.மு.க ஆதரவு எம்.ஜி.ஆர் ரசிகராகப் பயணித்தவன் நான்; 1965 முதல் 1968 வரை நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டவன்; 1968 இந்தி எதிர்ப்புப்போராட்டத்தினை, தி.மு.க ஆதரவு மாணவர்களும் காவல்துறையும் சேர்ந்து எவ்வாறு ஒடுக்கினார்கள்? என்பதை அனுபவித்தவன் நான்.

1969 முதல் அண்ணா பிறந்த நாட்களை பின்னுக்கு தள்ளிய முதல்வர் கருணாநிதி, தமது பிறந்த நாளுக்கு முன்னுரிமை கொடுத்தது, அண்ணாமலைப்பல்கலைக்கழக நிர்வாகத்தை மிரட்டி டாக்டர் பட்டம் பெற்ற போது, போலீஸ் தடியடியில் இறந்த மாணவர் உதயகுமாரின் தந்தையை மிரட்டி, நீதி மன்றத்தில் 'இறந்தது தன் மகனல்ல' என்று சொல்ல வைத்தது, திருச்சி கிளைவ் மாணவர் விடுதியில் காவல்துறை அநியாயமாக நுழைந்து தடியடி நடத்தி பல மாணவர்களின் கை கால்களை உடைத்தது போன்ற இன்னும் பல காரணங்களால் கருணாநிதியை வெறுத்து, ஆனாலும் எம்.ஜி.ஆர் ரசிகனாகப் பயணித்தவன் நான்.

எம்.ஜி.ஆர் தனியாக அ.தி.மு.க தொடங்கியபோது நான் கல்லூரி ஆசிரியர். கருணாநிதி வெறுப்பு நோயில் பயணித்த போதும், அவரை அரசியல் தலைவராக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அவர் மரணிக்கும் வரையிலும்.

எம்.ஜி.ஆர் ரசிகனாகப் பயணித்த என்னாலேயே, எவ்வாறு ராஜாஜியும், ஈ.வெ.ராவும், அண்ணாவும் தோற்ற இடத்தில், வெற்றி பெற வாய்ப்புள்ள திசையை எம்.ஜி.ஆர் அடையாளம் காட்டினார்? என்பதை விளங்கிக்கொள்ள முடியாத;

மார்க்சிய  லெனினிய பெரியாரியல் புலமையாளனாகவே நான் வாழ்ந்து வந்தேன்.

ராஜிவ் கொலைக்குப் பின், தமிழ்நாடானது பொதுவாழ்வு வியாபாரிகளின் ஆதிக்கத்தில் சிக்குண்டு பயணித்ததும், 'திருச்சி பெரியார் மையம்' மூலம் வெளியிட்ட அபாய எச்சரிக்கை வெளியீடுகளை புறக்கணித்து, 'அரசியல் தற்கொலைப் போக்கில்' ஈழ விடுதலை பயணித்ததும்;

எனக்குள் ஏற்படுத்திய வெறுப்பின் காரணமாக, அதுவரை பொழுதுபோக்காக ஈடுபட்டிருந்த நான், இசை ஆய்வில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினேன்.

இசை இயற்பியல் (Physics of Music) ஆய்விற்கு பழந்தமிழ் இலக்கியங்களை உட்படுத்தினேன். தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations) பற்றிய தெளிவின்றி, ஈ.வெ.ரா அவர்கள் தாய்மொழி, தமிழ் இலக்கியங்கள், புராணங்கள் பற்றிய தவறான புரிதலில், 'தமிழ் அடையாள அழிப்பு' நோக்கி பயணித்தது எனக்கு தெளிவானது.

அரைகுறை படிப்பறிவிருந்த பெரும்பாலான‌ எம்.ஜி.ஆர் ரசிகர்களிடமிருந்து வித்தியாசமாக முதுநிலை (M.Sc-Physics) பட்டம் பெற்ற எம்.ஜி.ஆர் ரசிகரான தி.மு.க ஆதரவாளராக‌ நான் இருந்தேன். அந்த வகையில் எனக்குக் கிடைத்த உள்ளீடுகள் (inputs) எல்லாம், எந்த நூலகத்திலும் கிடைக்க வாய்ப்பில்லாதவை ஆகும்.

'‘M.G.Ramachandran in film and politics- The Image Trap’ by M.S.S pandian (1992) என்ற புத்தகத்தையே ஆதாரமாகக் கொண்டு, ஈ.வெ.ரா மற்றும் அண்ணா புரிந்த தவறுகளை எல்லாம் பொதுவாழ்வு வியாபாரத்திற்கான மூலதனமாக்கி,  M.S.S பாண்டியன் போன்ற அறிவு ஜீவிகளை எல்லாம் 'மயக்கி', தி.மு.க குடும்ப அரசியல் நலன்களுக்காக, மு.கருணாநிதி எவ்வாறு தமிழ்நாட்டைக் காவு கொடுத்தார்? என்பதை விளக்கி;

ஒரு புத்தகம்' எழுத முடியும். ஆர்வமுள்ள இளம் ஆராய்ச்சியாளர்கள் என்னைத் தொடர்பு கொண்டால், நான் அதற்கு உதவ முடியும்.

1967க்குப்பின் அரங்கேறிய ஆதாய அரசியலில், கட்சிகள் நோஞ்சான்களாகப் பயணித்தாலும், தமிழ்நாட்டு மக்கள் நோஞ்சான்களாகப் பயணிக்கவில்லை.

வாக்குக்கு சில நூறு ரூபாய்கள் சில ஆயிரமாக திருமங்கலம் இடைத்தேர்தலில் உயர்ந்தது. அத்தேர்தலில் பிரமாண்ட வெற்றி பெற்ற தி.மு.கவானது, அடுத்து வந்த சட்டசபைத் தேர்தலில் ஏன் பிரமாண்டமான தோல்வியைத் தழுவியது? சட்டத்தால் கைப்பற்ற முடியாத ஊழல் பணத்தை தம்மால் இயன்றவரைக் கைப்பற்றி, வாய்ப்பு கிடைக்கும் போது, தேர்தலில் தண்டனையும் தருவது தமிழ்நாடு. அது தெரியாமல், பணத்தால் தமிழ்நாட்டைக் கைப்பற்ற யார் முனைந்தாலும், அது அரசியல் தற்கொலையாகவே முடியும்.

சட்டத்தின் ஆட்சியில் (Rule of Law) ஊழல் சொத்துக்கள் பறிமுதலாகி, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட பின், தேர்தல்களில் வாக்குகளுக்கு பணம் விநியோகிக்கப்படாது. அதனை மக்கள் மனப்பூர்வமாக வரவேற்பார்கள்.

தமிழ்நாட்டில் குடும்ப ஊழல் அரசியலை எதிர்க்காமல், ஊழல் பிதாக்களுடன் நேசமாகி பயணித்த தலைவர்களும், பத்திரிக்கை அதிபர்களும், அறிவுஜீவிகளும் நோஞ்சான்களாக இருந்து கொண்டு, வாக்குக்கு பணம் வாங்கும் மக்களை குறை சொல்வது சமூக நேர்மையாகுமா?

பள்ளியில் கல்லூரியில் படித்த காலத்திலும், பணியாற்றிய பணியாற்றும் இடங்களிலும் எந்த போராட்டத்திலும் பங்கேற்காமல், புத்தகங்களையும் புள்ளி விபரங்களையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு திராவிடர், திராவிடக்கட்சிகளை 'மார்க்சிய'(?) அணுகுமுறையில் ஆராய்ச்சி செய்து வெளிவந்துள்ள அபத்தங்களை எல்லாம்;

திறந்த மனதுடனும், அறிவுநேர்மையுடனும், கடும் உழைப்புடனும் இளம் ஆராய்ச்சியாளர்கள் முயன்று மேற்குறிப்பிட்ட நூல் வெளிவருமானால்;

அ.இ.அ.தி.மு.கவில் எண்ணிக்கையில் வளர்ந்து  வரும் எம்.ஜி.ஆர்-களை ஆதரிக்கும் துணிச்சல் உள்ள புலமையாளர்கள் எல்லாம் கேலிக்குள்ளாகும் அபாயத்திற்கு இடம் இருக்காது.

அது மட்டுமல்ல, அந்த 'ஆதரவானது' எவ்வாறு அ.இ.அ.தி.மு.கவில் 'எங்க வீட்டுப் பிள்ளை' எம்.ஜி.ஆரின் கூறுகளை யார், யார், எந்தெந்த அளவில் வெளிப்படுத்தி வருகிறார்கள்? அந்தந்த அளவில் அவர்களை எவ்வாறு ஆதரிப்பது? அதன் மூலம் உருவாகும் சமூக ஆற்றல்களைக் கொண்டு, சாதி மத பாரபட்சமின்றி, ஊழலுக்கு இடமின்றி வளர்ச்சி நோக்கிய திசையில் தமிழ்நாடு பயணிப்பதற்காக, நமது பங்களிப்பினை எவ்வாறு அதிகரிப்பது?

என்பது போன்ற கேள்விகளுக்கும் விடைகள் கிடைக்கும். 

தமிழ்நாட்டில் 'ஊழல்' புலியைக் கொல்லப் புறப்பட்டு, அதன் வாலைப் பிடித்த 'நாயரான‌'  பிரதமர் மோடி பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன். 

மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் இருந்து நிலுவையில் உள்ள வழக்குகளையும் மோடி ஆட்சியில் மேற்கொண்ட சோதனைகள் மூலமான வழக்குகளையும் பாரபட்சமின்றி விரைந்து முடித்து, குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரையில், ராஜபட்சே பாணி குடும்ப அரசியல் அச்சுறுத்தல் தமிழ்நாட்டில் தொடரும்.

தமிழ்நாட்டிற்கு ராஜபட்சே பாணி குடும்ப அரசியல் புதிதல்ல.

கருணாநிதி முதல்வர், மகன் ஸ்டாலின் துணை முதல்வர், மூத்த மகன் அழகிரி மற்றும் மருமகன் மாறன், மாறனின் மகன் தயாநிதி மாறன் மத்திய அமைச்சர்கள்; துணைவியின் மகள் கனிமொழி எம்.பி

கருணாநிதியின் குடும்ப அரசியலை எதிர்த்து எம்.ஜி.ஆர் கட்சி துவங்கி ஆட்சியைப் பிடித்தார். அவரின் மரணத்திற்குப் பின், ஜெயலலிதாவை முன் நிறுத்தி சசிகலாவின் குடும்ப அரசியல் அரங்கேறியது. விழித்துக்கொண்ட முதல்வர் ஜெயலலிதா அவர்களை எல்லாம் கட்சியை விட்டு வெளியேற்றினார். மன்னிப்பு கோரிய சசிகலாவை மட்டும் அவர் மீண்டும் அனுமதித்ததே அவரின் மர்மமான மரணத்திற்கு வழி வகுத்தது. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின், கோழை எம்.ஜி.ஆர்களின் துணையுடன் கட்சியைக் கைப்பற்றி முதல்வராக முனைந்த சசிகலா சிறை சென்றதன் காரணமாக கட்சியும் தப்பித்தது. ராஜபட்சே பாணி குடும்ப ஆட்சியில் சிக்காமல் தமிழ்நாடும் தப்பித்தது.

சசிகலா தரப்பிலும், ஸ்டாலின் தரப்பிலும், தவறான அரசியல் தற்கொலைப் போக்கில் பயணிப்பதால், ஸ்டாலின் - சசிகலா நன்கொடையாக, தமிழக ஆட்சி எவ்வாறு நிலைக்கப் போகிறது? என்பதை 2017 செப்டம்பரில் கீழ்வரும் பதிவில் விளக்கியுள்ளேன்.

தமிழ்நாட்டில் காக்காய் கூட்டங்களின் செல்வாக்கில் ஏமாறாமல் அணுகியதில், எனது பார்வையில் கீழ்வருவது வெளிப்பட்டது. கருணாநிதியை வெறுப்பவர்கள் ஸ்டாலினை அதைவிட குறைவாக வெறுக்கிறார்கள். கருணாநிதி குடும்ப அரசியல் மீது உள்ள வெறுப்பை விட, சசிகலா குடும்ப அரசியல் மீது அதிக வெறுப்பு கலந்த கோபம் உள்ளது.

மேற்குறிப்பிட்டது சரி எனில், சசிகலா சார்பான நிலைப்பாட்டில் ஸ்டாலின் எதிர்ப்பினைக் குவியப்படுத்துவது, தமிழக பா.ஜ.கவிற்கு எந்த அளவுக்கு பின்னடைவானது? என்பதை வரும் சட்டமன்ற தேர்தல்கள் வெளிப்படுத்தும்.

கட்சியில் எந்த எதிர்பார்ப்பும் இன்றி பயணித்த எம்.ஜி.ஆர்களின் சமூகத் தூண்டல் (Social Induction) மூலமாக, கட்சியிலும் ஆட்சியிலும் வீரமான எங்க வீட்டுப்பிள்ளை எம்.ஜி.ஆர்கள் அதிகரித்து விட்டார்கள். அதாவது ஜெயலலிதாவின் மர்ம மரணமானது மேக்ரோஉலகில் கோழைகளை அம்பலப்படுத்தியுள்ள நிலையில் (https://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post_12.html),

மைக்ரோஉலகில் தன்மானத்துடன் வாழும் எம்.ஜி.ஆர்களின் வீரத்தாலும், பொதுமக்களில் சட்டத்தின் ஆட்சியை (Rule of Law) விரும்புபவர்களின் ஆதரவாலும், கீழ் இருந்து மேல் நோக்கி சமூகத்தூண்டல் மூலமாக அ.இ.அ.தி.மு.க கட்சியிலும் ஆட்சியிலும் வீரமான எங்க வீட்டுப்பிள்ளை எம்.ஜி.ஆர்கள் வளர்ந்து வருகிறார்கள். 

இனி மத்திய அரசு விரும்பினாலும் தமிழ்நாடு குடும்ப அரசியலில் சிக்காது. தமிழ்நாட்டின் கள நிலவரம் புரிந்த பின்னால், அது போன்ற தவறான முயற்சியில் மத்திய அரசும் தொடராது.

நாம் எல்லாம் கோழை எம்.ஜி.ஆராக இல்லாமல், வீரமான எம்.ஜி.ஆர்களாக எண்ணிக்கையிலும் வலிமையிலும் வளர்வோம். நோஞ்சான் கட்சிகளை ஓரங்கட்டுவோம். அப்போது தான், தமிழ்நாடானது 'நோஞ்சான் மாநிலம்' என்ற சிறையில் இருந்து விடுதலை பெறும்.

No comments:

Post a Comment