Saturday, March 30, 2019

கோபம்: 'பெரியாரின்' தோல்வியும், அண்ணாவின் வெற்றியும் (3)



வாழ்க்கையின் உயிரோட்டமான தன்மான தற்சார்பினை தமிழர்கள் எவ்வாறு இழந்தார்கள்?



ஒரு மனிதரின் சமூக பங்களிப்பில் ஏற்படும் விளைவுகள் ஆனவை, எந்தெந்தகாரணிகளைப் பொறுத்ததாகும் ? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். (‘கோபம்: 'பெரியாரின்' தோல்வியும், அண்ணாவின் வெற்றியும் (2):  ஒரு பின்னூட்டமும்(Feedback)  விளக்கமும்’; http://tamilsdirection.blogspot.com/2015/12/normal-0-false-false-false-en-us-x-none_11.html )

மேற்குறிப்பிட்ட காரணிகளின் செல்வாக்கின் தொகுவிளைவாக(Resultant),  சமூக இயக்கவியலில் (Social Dynamics), மக்கள் செல்வாக்குள்ள ஒரு தலைவரின் பயணத்தில், ஏற்படுத்தும் 'திசை மாற்றமானது', தவறாக அமைந்து விட்டால், அழிவுபூர்வ விசைகளின் செல்வாக்கில், கால ஓட்டத்தில், சமூகத்திற்கு பாதகமான எதிர்த்திசையில் திருப்பும் சமூக சுழற்சிக்கு(social torsion) உள்ளாகி, அந்த தலைவருக்கும், அந்த சமூகத்திற்கும் கேடாக முடியுமா? என்ற உலக முக்கியத்துவம் வாய்ந்த ஆய்விற்கு, உதவும் தகவல்களையும், மேலே குறிப்பிட்ட பதிவில் விளக்கியுள்ளேன்.

எந்த ஒரு மனிதரும் உடல் ரீதியிலும், உள ரீதியிலும் பிறரைச் சாராமல், தற்சார்புடன் வாழும் போது, (Physically and mentally independent) கிடைக்கும் உள்ளீடுகளும்(inputs), மூளையின் செயல்திறனும்(Brain Processing Skill);

பிறர் சார்பில் (Physically and mentally dependent) வாழும்போது, எந்த அளவுக்கு தற்சார்பு பாதிக்கப்பட்டுள்ளதோ, அந்த அளவுக்கு பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது.

1925 முதல் 1944 வரை வெளிவந்த 'குடிஅரசு' இதழ்களைப் படித்தால், .வெ.ரா அவர்கள் உடல் ரீதியிலும், உள ரீதியிலும் பிறரைச் சாராமல், தற்சார்புடன் வாழ்ந்த போது எவ்வாறு பயணித்தார்? என்பது தெளிவாகும்.

அண்ணாவின் தூண்டுதலில் 'திராவிடர் கழகம்' தொடங்கி

1944 முதல் 'அந்த' தற்சார்பினை இழக்கும் போக்கில் பயணித்து, 1948 தூத்துக்குடி மாநாட்டில் 'சுதாரித்தும்' விழிக்காமல் அண்ணாவிடம் தோற்றதை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன்

1947-இல்திராவிடர் கழகத்தின் தலைவரான   பெரியார் .வெ.ரா இந்திய விடுதலையை துக்க தினமாக அறிவித்ததில் நேர்மையிருக்கிறதா? அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து கொண்டு, திராவிடநாடு பிரிவினை கோரிக்கையை கைவிடாமல், அண்ணாதுரை பெரியார் .வெ.ராவை மறுத்து, இன்பநாளாக வரவேற்றதில் நேர்மையிருக்கிறதா? (‘நல்லவேளை, திராவிடநாடு பிரியவில்லை’; http://tamilsdirection.blogspot.com/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html )

1948 தூத்துக்குடி மாநாட்டில், பெரியார் அண்ணாதுரைக்கு எதிராக பேசிய பேச்சுக்கள் வெளிவந்துள்ளன. அதன்பின் அண்ணதுரையை 'சாரட்'டில் உட்காரவைத்து,  ஊர்வலத்தில் பெரியார் நடந்து சென்றதும், அண்ணாதுரையும் 'சாரட்'டில் உட்கார்ந்து ஊர்வலம் நடைபெற்றதும், எதை உணர்த்துகின்றன? பெரியாருக்கும் அண்ணாதுரைக்கும் இடையே ஏற்பட்ட அந்த 'சமரசம்' அறிவுபூர்வமானதா? உணர்ச்சிபூர்வமானதா? அல்லது லாப நட்ட கணக்கிலானதா? பெரியார் தன்னலம் இன்றி, இயக்க லாபத்தையே, தனது லாபமாக கருதியிருந்தாலும், இத்தகைய போக்கு சரியானதா? இன்று தமிழ்நாட்டில் கட்சிகளும், தனிமனிதர்களும் தமக்கானலாப நட்டகணக்கிலேயே 'அனைத்து' உறவுகளையும் அடிமைப்படுத்தி வாழும் போக்கிற்கு அது விதையானதா? அந்த 'சமரசம்' முறிந்து, 'தி.மு.' உருவானது அறிவுபூர்வ போக்கிலானதா? உணர்ச்சிபூர்வ போக்கிலானதா? அல்லது லாப நட்ட கணக்கிலானதா?

1949இல் தி.மு. தோன்றியது முதல் 1967 வரையிலும், இளைஞர்களும், மாணவர்களும் தம்மை விட்டு விலகி, அண்ணாவால் ஏன் ஈர்க்கப்பட்டு பயணிக்கிறார்கள்? என்பதற்கான விடைகளைச் சரியாக கண்டுபிடிக்க வழியில்லாமல், 'தமிழைக் காட்டுமிராண்டி மொழி' என அறிவித்து, 'தாய்ப்பால் பைத்தியம்' நூலின் நிலைப்பாட்டில் பயணித்ததற்கும், அவர் தமது தற்சார்பு இழந்த போக்கிற்கும்,'பெரியார்' என்ற சிறையில் சிக்கியதற்கும் உள்ள தொடர்பினை ஆராய வேண்டியதானது;

தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கா அவசியமும், அவசரமும் ஆகும். அது மட்டுமல்ல, சாமான்ய நிலையிலிருந்து, 'தமிழ், பகுத்தறிவு, ஆன்மீகம், பொதுவுடமை, புரட்சி' என்று இன்னும் பல பொதுநிலைக்கு இடம் பெயர்பவர்கள் மனதில், 'தமக்கு முக்கியத்துவம்' என்பதற்கு அந்தந்த கொள்கைகளை கீழாக்கி பயணிப்பவர்களின் எண்ணிக்கையும், அந்த தொடர்பு சமூக செயல்நுட்பத்தில் வளர்ந்ததா? என்பதும் 'அந்த' ஆராய்ச்சியில் இடம் பெற்றாக வேண்டும். தமிழ்நாட்டில் இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் உள்மறை சுயலாப வேலைத் திட்டத்துடன் செயல்படுபவர்களை எல்லாம், அடையாளம் கண்டு ஓரங்கட்ட 'அந்த' ஆராய்ச்சியானது துணை புரியும்.  தமிழ்நாட்டின் சமூக வரலாற்றில் இப்படிப்பட்ட 'வாழ்வியல் நிபுணர்கள்' தோன்றி வளர்ந்ததற்கும், திராவிட இயக்க வளர்ச்சி-வீழ்ச்சிப் போக்கிற்கும் இடையிலான தொடர்புகளும் ஆய்விற்குரியதாகும். (http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none.html )

'அவ்வாறு செயல்பட்டவர்களின்' ஒத்துழைப்புடன் தான், தமிழ்நாட்டின் ஏரிகள், ஆறுகள், கிரானைட், தாது மணல், காடுகள் எல்லாம் ஊழல் பெரும்பசிக்கு தீனியாகி, தனியார் சொத்துக்களை அச்சுறுத்தியும் கொலை செய்தும் அபகரித்து, ஊழல் ஆக்சிஜனில் ஆங்கிலவழிக்கல்வி வியாபாரமானது தமிழ்வழிக்கல்வியைச் சீரழித்து, அதன் உச்சக்கட்டமாகவே மாதக்கணக்கில் உலகையே முட்டாளாக்கி, 'மர்மமான' முறையில் மருத்துவ சிகிச்சையும் மரணமும் முதல்வராக இருந்த ஜெயலலிதாவிற்கு நேரிட்டது. (‘1948 தூத்துகுடி மாநாட்டில் .வெ.ரா விடுத்த அபாய எச்சரிக்கையின் இறுதி விளைவே; 2016 ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமா? ஜெயலலிதாவின் மரணத்திற்கு கிடைக்கும் நீதியே, தமிழ்நாட்டின் விடிவா?’; http://tamilsdirection.blogspot.com/2017/01/1948.html )

‘'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று, தமிழைப் பற்றி உயர்வாக கவிதைகளும், கட்டுரைகளும் எழுதிய பாரதிதாசன், 'தமிழைக் காட்டுமிராண்டி மொழி' என்று அறிவித்து, மேலே குறிப்பிட்ட 'தமிழ் அடையாள அழிப்பு' போக்கில் பயணித்த .வெ.ராவிற்கு, அவரின் நிலைப்பாடு தவறு என்று அறிவுபூர்வமாக விளக்கி, .வெ.ராவை நல்வழிப்படுத்த பாரதிதாசன் என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டார்? அதில் வெற்றிபெற முடியவில்லையென்றால், .வெ.ராவின் அந்த நிலைப்பாட்டினை பகிரங்கமாக கண்டித்து, 'தமிழ் அடையாள அழிப்பிற்கு' எதிராக என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டார்? அவ்வாறு தமிழை இழிவுபடுத்தியவருடன் பாரதி நட்பாக இருந்திருப்பாரா? தமிழ்ப் பற்றில் பாரதிக்கு இருந்த நேர்மையானது, பாரதிதாசனிடம் இருந்ததா? பாரதி போற்றிய 'இந்திய தேசியத்தை' எதிர்க்காமல், 'திராவிட நாடு' பிரிவினையை ஆதரித்துக் கொண்டே, பாரதியை பாராட்டியது போலவே;

தமிழை இழிவு செய்த .வெ.ரா அவர்களை எதிர்க்காமல், பாரதிதாசன் .வெ.ரா புகழ் பாடினாரா? இது போன்ற போக்குகள் பாரதியிடம் வெளிப்பட்டதுண்டா? காந்தியின் நிலைப்பாடு தவறு என்று தெரிந்ததும், பாரதி காந்தியை கண்டித்து, துணிச்சலாக கருத்து வெளியிட்டவர் இல்லையா

அதே பாரதிதாசன் வழியில், பாரதிதாசன் புகழ்பாடி பயணித்ததாலேயே, தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆர்வலர்கள், நாகசாமியின் தமிழ் தொடர்பான ஆய்வுகளைக் கண்டித்தவர்கள் எல்லாம், கீழ்வரும் அவலத்தை பகிரங்கமாகக் கண்டிக்கவில்லையா?

தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள் பணிவுடன் நின்றுகொண்டு, கம்பீரமாக நாற்காலியில் அமர்ந்திருக்கும் தி.மு. தலைவர் கருணாநிதியை வாழ்த்தும் சுவரொட்டிகளை சென்னையில் பார்த்து நான் அதிர்ந்திருக்கிறேன். பின் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், மேடையில் அவ்வாறே அவ்வேடமணிந்தவர்கள் கருணாநிதியை வாழ்த்திய செய்தியை, நான் ஊடகங்களில் படித்திருக்கிறேன், இவ்வாறு இந்தியாவில் வேறு எந்த மொழி மாநிலத்திலும், உலகில் எந்த நாட்டிலும் எதிர்ப்பின்றி நடக்க வாய்ப்பில்லை. (http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

அந்த போக்கின் தொடர்ச்சியாகவே, 'சமஸ்கிருதத்தின் துணையுடன் தான் தமிழில் இலக்கியங்கள் வெளிவந்தன' என்று வெளிவந்தாலும், உலக எழுத்தாளர்களின் எழுத்துக்களிலும், கணிதத்திலும் இடம் பெற்ற‌ 'பறையா'வாக இருந்தாலும், வெள்ளைக்காரர்கள் என்றால் கண்டுகொள்ளமாட்டோம். அவர்கள் பிராமணர்களாக இருந்தால் மட்டுமே எதிர்த்து போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் செய்வோம்;

என்ற நிலையில் தமிழ்நாடு பயணிக்கிறதா

அந்த போக்கில் பயணித்தவர்களையும், பயணிப்பவர்களையும், சுயலாப நோக்கற்ற சமூகப் பற்றுடன் வாழ்பவர்கள் எவரும் மதிப்பார்களா? 'தமிழை' முன்னிறுத்தி அவ்வாறு இழிவான போக்கில் பயணித்தவர்களில், பயணிப்பவர்களில் பெரும்பாலோர் தமது குடும்பப் பிள்ளைகளை விளையாட்டுப் பள்ளி முதலே ஆங்கில வழியில் படிக்க வைத்ததானது, தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) மரணப்பயணத்தை வேகப்படுத்தியுள்ளது. அத்தகையோர் முன்னிறுத்தும் 'தமிழ் உணர்வும்' மாணவர்களின், படித்த இளைஞர்களின் கேலிப் பொருளாகி வருகிறது. (http://tamilsdirection.blogspot.com/2015/06/ )

வயதின் காரணமாகவே தற்சார்பினை இழந்து .வெ.ரா பயணித்து 'பெரியார்' சிறையில் சிக்கினார்.

ஆனால் இள வயதிலேயே நேர்மையான சுயசம்பாத்தியத்திற்கு வழியோ, திறமையோ இல்லாதவர்களில் குறுக்கு புத்தியுடையவர்கள் எல்லாம், வாழ்க்கையின் உயிரோட்டமான தன்மான தற்சார்பினை இழந்து, தலைவர்களின் பெயர்களைக் கூட உச்சரிக்காமல் வாலாட்டி, காலில் விழுந்து, பின் அதே காலை வாறி, தரகு/வன்முறை திறமைகளின் மூலமாக சமூக ஒட்டுண்ணிளாகவளர்ந்ததற்கும், அவ்வாறு 'பெரியார்' சிறையில் சிக்கியதும், எவ்வாறு ஒரு முக்கிய காரணமானது?

அடி மட்டத்தில் உள்ள சாமான்யர்களின் சமூக ஆற்றல்  (Social Energy) தொடங்கி,  அடுத்தடுத்த மட்டங்ளில் உயர்ந்து தலைவர்களாக வளர்ந்தவர்களின் சமூக ஆற்றல் எவ்வாறு தொகுவிசைகளின் (Resultant) மூலமாக வலிமையாகிறது? அந்த நிலையை அடைந்த தலைவர்களின் தவறான திசை திரும்பலானது, எவ்வாறு நாட்டிற்குக் கேடாகும்? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்

வாழ்க்கையின் உயிரோட்டமான தன்மான தற்சார்பினை இழந்த போக்கின் வளர்ச்சியானது, தமிழ்நாட்டில் 'தன்மானம்' என்ற கோவணம் இழந்து வாழ்பவர்கள் அதிகரித்து, மேக்ரோ உலகில் 'அதிவேகப் பணக்காரராக' வலம் வருபவர்களை எல்லாம் ஏளனமாக, பொதுமக்கள் தமக்குள் கேலி, கிண்டல் செய்து வரும் போக்கிற்கு வழி வகுத்துள்ளது. (https://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none.html)

பொதுவாழ்வில் நுழைந்த பின், பெரும்பணக்கார வசதி வாய்ப்புகளை அனுபவித்ததில் இருந்து இறங்கி, சாமான்யராக பேருந்திலும், அன்றைய மூன்றாம் வகுப்பு இரயில் பெட்டிகளிலும் .வெ.ரா பயணித்தார், தற்சார்புடன் வாழ்ந்தது வரையில். சாமான்யராக வாழ்க்கையைத் தொடங்கிய மேற்குறிப்பிட்ட‌ 'பெரியார் முகமூடி' 'அதிவேகப் பணக்காரர்கள்' எல்லாம், இன்று .சி கார். விமானம், .சி-வீடு என்று வாழ்வது மட்டுமின்றி, தப்பித்தவறி சாமானியர்களைப் போல பயணிக்க நேர்வதை இழிவாகக் கருதி தவிர்த்து வாழ்கிறார்கள். (http://tamilsdirection.blogspot.com/2016/10/blog-post.html)

.வெ.ரா அவர்கள் எந்த அளவுக்கு எளிமையாக, வழிபாட்டுப் போக்கினை ஊக்குவிக்காமல் (உடலும் மனதும் பிறர் சார்பின்றி வாழ்ந்தது வரையில்; Physically & mentally independent) வெளிப்படையாக, கோபமூட்டும் கேள்விகளுக்கு உணர்ச்சி வசப்படாமல், பொறுமையாக வாழ்ந்தார் ( உதாரணமாக; கடவுள் இராமர் படத்தை செருப்பால் அடித்த உங்கள் பெயரில் 'ராமசாமி' என்று இருப்பது சரியா?" என்று கேட்ட போது, " அது என் பெற்றோர் வைத்த பெயர். அது உனக்கு பிடிக்கவில்லையென்றால், என்னை 'மயிறு' என்று உனக்கு பிடித்த பெயரில் கூப்பிடு. எனக்கு ஆட்சேபணையில்லை" என்று பதில் சொன்னார்) பயணித்தார் என்பதும்;

தமது கொள்கைக்கு எதிரான புத்தகங்களை, திரைப்படங்களை தடை செய்யுமாறு கோராமல், அவற்றை எல்லாம் அறிவுபூர்வமாக மறுத்து தமது பிரச்சாரத்திற்கான வாய்ப்புகளாக கருதி பயணித்தவர் என்பதும்;

மாணவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துவதும், 'பந்த்', 'உண்ணவிரதம்' போன்றவைகள் எல்லாம் பொதுமக்களுக்கும், பொதுச்சொத்துக்களுக்கும் ஊறு விளைவிக்கும், காந்தி அறிமுகப்படுத்திய 'காலித்தன, சண்டித்தன' போராட்டங்கள் என்றும் கண்டித்து, 'அரசியல் சட்ட எரிப்பு' உள்ளிட்டு கடும் தண்டனை பெறும் வாய்ப்புள்ள போராட்டங்களை பொதுமக்களுக்கும், பொதுச்சொத்துக்களுக்கும் பொது அமைதிக்கும் கேடின்றி நடத்தி, கைதான போது 'எரித்தது சட்டமல்ல, வெறும் காகிதமே' என்று சொல்லி தப்பிக்காமல், எதிர்வழக்காடாமல், ஜாமினில் வெளிவராமல், அதற்கான சிறைத்தண்டனையை அவரும், அவரின் தொண்டர்களும் அனுபவித்த காரணத்தால், அவரின் கொள்கை எதிரிகளும் அவரை மதித்தார்கள்; என்பதும்;

தமிழையும், இந்து மதத்தையும் .வெ.ரா அவர்கள் இழிவாகக் கருதி கண்டித்ததை, தமிழ்நாட்டில் தமிழ் ஆர்வலர்களும், இந்து மத பக்தர்களும் பொறுத்துக் கொண்டதற்கான காரணங்கள் ஆகும். அந்த தலைமுறையினர் எல்லாம் இன்று சுமார் 60 வயதைத் தாண்டியவர்கள் ஆவார்கள்.

அப்படிப்பட்ட .வெ.ரா அவர்களை 'பெரியார்' சிறையில் அடைத்து, 'பெரியார்' கட்சிகள் பயணித்து வருவதானது;

மேலே குறிப்பிட்ட .வெ.ராவின் பாதையிலிருந்து, தாங்கள் எந்த அளவுக்கு தடம் புரண்டு பயணிக்கிறார்கள்? என்பதை ஆர்வமுள்ளவர்கள் அறியும் தடைகளாகவா? என்பதும் விவாதத்திற்கு உரியதாகும். அது மட்டுமல்ல, 'பெரியார்' சிறையிலிருந்து .வெ.ரா அவர்கள் விடுதலை பெறுவதை பொறுத்தே, 'பார்ப்பன எதிர்ப்பு' பொதுவாழ்வு வியாபாரத்தில் 'ருசி கண்ட பூனைகளின்' ஆட்டங்கள் அடங்கி (http://tamilsdirection.blogspot.sg/2018/03/2.html  ) ;

தமிழும், தமிழ்நாடும் மீளும்; என்பதும் எனது ஆய்வு முடிவாகும். 

.வெ.ராவின் மேலே குறிப்பிட்ட முறையில் வாழாமல், காந்தி பாணி சண்டித்தனப் போராட்டங்களில் கலந்து கொண்டு, இன்று தமிழையும், இந்து மதத்தையும் .வெ.ரா பாணியில் இழிவு செய்வதைப் பொறுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கையானது, அந்த மூத்த தலைமுறையிலேயே குறைந்து வருகிறது. ஆங்கில வழியில் விளையாட்டுப் பள்ளி முதல் பயின்ற பெரும்பாலான இளைய தலைமுறையின் கேலிக்கும், கிண்டலுக்கும் தமிழும், தமிழ் உணர்வும் உள்ளாகி வருகிறது. தமிழை 'பெரியார்' கட்சிகள் இழிவு செய்வதானது, அந்த கேலி கிண்டலுக்கு வலுவூட்டி வரும் போக்கில், இந்து மத பக்தர்கள் இந்து கடவுள்கலை இழிவு செய்வதைப் பொறுத்துக் கொள்ளாமல் எதிர்ப்பதும் அதிகரித்து வருகிறது. கோவில்களில் வழிபடும் மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்களின் எண்ணிக்கையானது, 1967க்கு முன் இருந்ததை விட, இப்போது மிக மிக வேகமாக அதிகரித்து வருகிறது. அதன் தொகு விளைவாக,  தமிழ் வேரழிந்த நாடாக தமிழ்நாடு மாறி வருவதன் அபாய எச்சரிக்கையாகவே, அதை நான் கருதுகிறேன். 

அவ்வாறு தமிழ்நாடு மாறினால், அதற்கு முக்கிய காரணமான இரண்டு குற்றவாளிகளாக ஈ.வெ.ராவும் ராஜாஜியுமே வெளிப்படுவார்கள். (http://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_5.html )

பொதுவாழ்வு வியாபாரிகளின் பிடியிலிருந்து தமிழும் தமிழ் உணர்வும் மீள வேண்டும். அதற்கு தடையாக, .வெ.ராவின் 'தாய்ப்பால் பைத்தியம்' நூலின் அடிப்படையில் இனியும் 'பெரியார்' கட்சிகள் பயணிப்பதை அனுமதிக்கக் கூடாது. 

நேர்மையான சுயசம்பாத்தியத்திற்கு வழியோ, திறமையோ இல்லாதவர்களில் குறுக்கு புத்தியுடையவர்கள் எல்லாம், வாழ்க்கையின் உயிரோட்டமான தன்மான தற்சார்பினை இழந்து,'செல்வாக்கான முன்மாதிரிகளாக' வலம் வரும் போக்கிலிருந்து விடுதலை பெறுவதே, தமிழின் தமிழ்நாட்டின் மீட்சிக்கான முதல் படியாகும். தன்மான தற்சார்புடன் வாழ்வதால் வரும் இழப்புகளை விரும்பி ஏற்று, தமிழ்வழிக்கல்வி ஆதரவு போக்கில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை வளரும் போது, அது சாத்தியமாகும்.
(http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html )