Sunday, March 17, 2019

'தமிழ், தமிழர் அடையாள மீட்சி'; பாரதியும், பாரதிதாசனும் (2)





'தமிழ் அடையாள அழிப்பிற்கு' பாரதிதாசனின் பங்களிப்பு ?


சுமார் 20 வருடங்களுக்கு முன், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் பேரா.வீ.அரசு கேட்டுக்கொண்டதன் பேரில், 'பாரதிதாசனும் தமிழ் இசையும்' என்ற தலைப்பில் ஆய்வுத்தொடர் சொற்பொழிவு (3 நாட்கள்) நிகழ்த்த ஒப்புக் கொண்டேன். பின் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன நூலகத்தில், பாரதிதாசனின் உரைநடைகள் நூலாக வந்திருக்கும்;

என்று எதிர்பார்த்து தேடினேன். பெரிதாக ஒன்றும் கிடைக்கவில்லை. பாரதிதாசன் வெளியிட்ட இதழ்களின் தொகுப்பினைத் தேடினேன். ரோசா முத்தையா செட்டியார் நூலகத்தில் சிலவும், சென்னை அண்ணா அறிவாலயம் நூலகத்தில் சிலவும் கிடைத்தன. எனது ஆய்வுக்கு அவை போதுமானதாக இல்லை. பின் விடுப்பு எடுத்து, புதுச்சேரி சென்று பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னனைச் சந்தித்தேன்.(குறிப்பு கீழே) அவர் துணையுடன் புதுச்சேரியில் இருந்த பாரதிதாசன் நினைவகத்திற்குச் சென்றேன். அங்கு பல தொகுதிகள் இருந்தன. சில நாட்கள் தங்கி, குறிப்புகள் எடுத்துக் கொண்டேன்.

பாரதியின் படைப்புகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு வெளிவந்தது போல, பாரதிதாசன் படைப்புகள், குறிப்பாக அவர் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு வெளிவரவில்லை. தமிழ்நாடானது, திராவிடக்கட்சிகளின் பிடியில் இருக்கும் வரை, பாரதியாரின் உரைநடைத் தொகுப்புகளைப் போல பாரதிதாசனின் உரைநடைத் தொகுப்புகள் வெளிவர வாய்ப்பிருக்குமா? என்ற கேள்வியும் என்னுள் எழுந்தது. அந்த அடிப்படையிலேயே கீழ்வரும் கருத்தினை எனது பதிவில் வெளியிட்டேன்.

‘'அண்ணதுரையா எனக்கு பொற்கிழி கொடுத்தார்?' என்ற தலைப்பில், 'குயில்' இதழில் பாரதிதாசன் வெளியிட்ட தொடர் கட்டுரைகளை இன்று வெளியிட‌, பாரதிதாசன் பிரியர்களில் எவருக்காவது  துணிச்சல் இருக்கிறதா? அதே போல ஜீவாவைக் கண்டித்து , 'குயில்' இதழில் பாரதிதாசன் வெளியிட்ட கட்டுரையை வெளியிட கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களில் எவருக்கும் துணிச்சல் இருக்கிறதா? அண்ணாவும், ஜீவாவும் அந்த காலக்கட்டத்தில், பாரதிதாசனைப் பற்றி வெளியிட்ட கருத்துக்களையும், அதில் சேர்த்து வெளியிடுவார்களா?

பாரதிதாசன் தொடர்பாக இன்றுவரை நீடித்து வரும் மேலே குறிப்பிட்ட இருட்டடிப்பானது, பாரதியார் படைப்புகளுக்கு நிகழவில்லை;

அறிவுநேர்மையில் பாரதிதாசன் பிரியர்களை விட, பாரதியின் பிரியர்கள் மேம்பட்டவர்களா? என்ற ஆய்வுக்கு வழி வகுத்து

பாரதிதாசன் பிரியர்கள் எல்லாம் பாரதியை விமர்சிப்பது போலவே, பாரதிதாசனையும் விமர்சிக்க முடியாத அளவுக்கு, 'அந்த' இருட்டடிப்பு நீடித்து வருகிறதா? ஈ.வெ.ராவைப் பிரபாகரன் ஆதரவாளர்கள் விமர்சிப்பது போலவே, பிரபாகரனையும் விமர்சிக்க முடியாத அளவுக்கு, 'பிரபாகரன் பிம்பத்திற்கு' எதிரான உண்மைகள் இருட்டடிப்பில் நீடிப்பதற்கும், 'அந்த' பாரதிதாசன் தொடர்பான இருட்டடிப்பிற்கும் வேறுபாடு உண்டா? நேரு, காந்தி தொடர்பாக இருந்த 'இருட்டடிப்புகள்' காரணமாகவே, 'அவை' எல்லாம் டிஜிட்டல் யுகத்தில், மாணவர்கள் படித்த இளைஞர்களின் தேடல் ஆர்வத்தைத் தூண்டி, கேலிப்பொருள் ஆகி வரும் சூழலில், அது போன்ற இருட்டடிப்புகள் தொடர்வது இனியும் சாத்தியமா?

பாரதிதாசன் தொடர்பான 'அந்த' 'இருட்டடிப்பு சமூக செயல்நுட்பமானது' திராவிடர்/திராவிட இயக்க வளர்ச்சிப் போக்கில், நேர்மையான அறிவுபூர்வ விமர்சனங்களை பலகீனமாக்கி, 'வழிபாட்டுப் போதையிலான உணர்ச்சிபூர்வ' போக்கினை ஊக்குவித்ததால் வந்த விளைவு;

என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.’ (‘மரணப்படுக்கையில் இருந்து, 'தமிழ், தமிழர் அடையாள மீட்சி'; பாரதியும், பாரதிதாசனும் (1); http://tamilsdirection.blogspot.com/2017/12/blog-post_20.html)

அது மட்டுமல்ல, .வெ.ரா அவர்களின் 'தமிழ் அடையாள அழிப்பிற்கு' பாரதிதாசன் எந்த அளவுக்குப் பங்களித்துள்ளார்? என்ற விவாதமும் அரங்கேற வேண்டிய நேரம் வந்து விட்டதை கீழ்வரும் பதிவு மூலமாக உணர்த்தியுள்ளேன்.

‘'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று, தமிழைப் பற்றி உயர்வாக கவிதைகளும், கட்டுரைகளும் எழுதிய பாரதிதாசன், 'தமிழைக் காட்டுமிராண்டி மொழி' என்று அறிவித்து, மேலே குறிப்பிட்ட 'தமிழ் அடையாள அழிப்பு' போக்கில் பயணித்த .வெ.ராவிற்கு, அவரின் நிலைப்பாடு தவறு என்று அறிவுபூர்வமாக விளக்கி, .வெ.ராவை நல்வழிப்படுத்த பாரதிதாசன் என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டார்? அதில் வெற்றிபெற முடியவில்லையென்றால், .வெ.ராவின் அந்த நிலைப்பாட்டினை பகிரங்கமாக கண்டித்து, 'தமிழ் அடையாள அழிப்பிற்கு' எதிராக என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டார்? அவ்வாறு தமிழை இழிவுபடுத்தியவருடன் பாரதி நட்பாக இருந்திருப்பாரா? தமிழ்ப் பற்றில் பாரதிக்கு இருந்த நேர்மையானது, பாரதிதாசனிடம் இருந்ததா? பாரதி போற்றிய 'இந்திய தேசியத்தை' எதிர்க்காமல், 'திராவிட நாடு' பிரிவினையை ஆதரித்துக் கொண்டே, பாரதியை பாராட்டியது போலவே;

தமிழை இழிவு செய்த .வெ.ரா அவர்களை எதிர்க்காமல், பாரதிதாசன் .வெ.ரா புகழ் பாடினாரா? இது போன்ற போக்குகள் பாரதியிடம் வெளிப்பட்டதுண்டா? காந்தியின் நிலைப்பாடு தவறு என்று தெரிந்ததும், பாரதி காந்தியை கண்டித்து, துணிச்சலாக கருத்து வெளியிட்டவர் இல்லையா?

என்பது போன்ற அறிவுபூர்வ விவாதங்கள் அரங்கேற வேண்டிய நேரம் வந்து விட்டதாக கருதுகிறேன்.

வைக்கம் போராட்டத்தில் எழுச்சி ஊட்ட, .வெ.ரா அவர்கள் பாரதியாரின் பாடல்களை பாடியதை, கோவை அய்யாமுத்து தனது எழுத்துக்களில் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அவ்வாறு எழுச்சியூட்ட பாரதிதாசன் பாடல்களை .வெ.ரா ஏன் பாடவில்லை? என்பதும் மேலே குறிப்பிட்ட விவாதத்தில் இடம் பெற வேண்டும்.’ (http://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none_10.html)

மேலே குறிப்பிட்டுள்ள தொடர் சொற்பொழிவுகளுக்காக நான் எடுத்த குறிப்புகளின் அடிப்படையில் சென்னைப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் 3 நாட்கள் சொற்பொழிவுகள் நிகழ்த்தினேன். தமிழிசையின் வளர்ச்சிக்கு அண்ணாமலை செட்டியாருக்கு முன்பேயே பாரதிதாசன் மேற்கொண்ட முயற்சிகள், கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் சில கிருதிகளை அதே சுர அமைப்பில் தமிழில் தாம் விரும்பிய பொருளுடன் பாரதிதாசன் பாடல்கள் எழுதி, சுரத்தாளக் குறிப்புகளுடன் தமது 'குயில்' இதழ்களில் வெளியிட்டிருக்கிறார். அவை தவிர பல பாடல்களும் அவ்வாறே வெளியிட்டிருக்கிறார். உள்ளிட்ட பல புதிய தகவல்களை நான் விளக்கினேன். அந்த சொற்பொழிவுகள் ஒலிப்பதிவு செய்யப்பட்டதா? என்பது தெரியவில்லை. தொகுத்து நூலாக வெளியிட நேரம் இல்லாததால், ஆர்வமுள்ளவர்களுக்கு பயன்படலாம், என்ற நோக்கில் கீழ்வரும் கட்டுரையினை எழுதி வெளியிட்டுள்ளேன்.

'பாரதிதாசனும் தமிழிசையும்'; 
http://musicresearchlibrary.net/omeka/items/show/2438
 
பாரதியார் உயிரோடு இருந்திருந்தால், பாரதிதாசன் தடம் புரண்டு, மேலே குறிப்பிட்ட இரண்டும் கெட்டான் திசையில் பயணித்திருக்க மாட்டார்;

என்பதும் எனது ஆய்வுமுடிவாகும்.

'தாய்மொழி அடையாள அழிப்பு' என்பதானது தமிழ்நாட்டின் நிகழ்கால சீரழிவுகளோடு எந்த அளவுக்கு தொடர்புடையது? என்பது தொடர்பாக;

உலக அளவில் வெளிப்பட்டு வரும் ஆய்வுகளை எல்லாம் இனியும் புறக்கணிக்க முடியாது.

மக்களின் மொழியும் அவர்களின் அடையாளமும் நெருக்கமான தொடர்புள்ளவையாகும். தமது மொழி பயனற்றது என்று கருதும் மக்கள், தமது அடையாளமும் பயனற்றது என்றே கருதுவார்கள். அதன் விளைவாக அச்சமூகத்தில் சமூக சீர்குலைவு (social disruption), மனத்தளர்ச்சி (depression), தற்கொலை (suicide) , போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல்(drug use)  போன்றவை அதிகரிக்கும்.' 
(http://news.bbc.co.uk/today/hi/today/newsid_8311000/8311069.stm  & ‘when one loses one’s mother tongue, either through language shift, language loss or language  death, whatever it may  be that occurs and causes speakers  to  stop  using  their  own  native  languages  thus  occasioning  the  loss  of  that  language,  makes  the  speaker  to  consequently  lose  their  self-worth  and  self-esteem  and  to  be  reduced  to  non-self-respecting  individuals.’; 
http://erepository.uonbi.ac.ke/bitstream/handle/11295/96017/Mutiga_Effects%20of%20mother%20tongue%20loss%20on%20individuals%20and%20communities.pdf?sequence=1&isAllowed=y )



தமிழ் அழிவு சுனாமி அறிகுறிகள் பற்றிய  கவலையின்றி, ‘நாமும்,  நமது குடும்பமும் பிழைத்தால் போதும் என்று வாழ்வதன் விளைவாக, இன்னும் 2 தலைமுறைகளில், நமது வாரிசுகள் எல்லாம், தமிழில் படிக்கவும், எழுதவும், பேசவும் தெரியாத, தமிழ் வேரழிந்த, உலக அகதிகளாக வாழ்வதைத் தவிர்க்க முடியுமா? 'தமிழ் எங்கள் இழிவுக்கு நேர்'? என்ற போக்கில், 'தாய்ப்பால் பைத்தியம்' நூலின் நிலைப்பாடு மூலம் .வெ.ரா மேற்கொண்ட சீர்திருத்தமானது, 'தமிழ்வேர்க்கொல்லி'யாகி விட்டதா? அதை நியாயப்படுத்துபவர்கள் எல்லாம் பாரதிதாசனையும் புகழ்வதானது, தமிழுக்கு பெருமையா? இழிவா? (http://tamilsdirection.blogspot.com/2016/06/blog-post.html)

அது போல காலனி ஆட்சிகளுக்குட்பட்ட நாடுகளில், விடுதலையான பின்னரும் 'காலனியமனநோய்' தொடர்வது பற்றிய ஆய்வுகளையும் புறக்கணிக்க முடியாது. அந்த மனநோய்க்குள் தனித்துவமாக சிக்கி, 'திராவிட மனநோய்' எவ்வாறு வளர்ந்தது? என்பது தொடர்பான ஆய்வுகளையும் இனி புறக்கணிக்க முடியாது

மேலே குறிப்பிட்ட ஆய்வுகளை எல்லாம் கணக்கில் கொள்ளாமல், 'கிணற்றுத் தவளைகளாக' இனியும் பயணிப்பதானது நீடிக்கக் கூடாது.

அவ்வாறு பாரதிதாசன் இரண்டும் கெட்டான் போக்கில் பயணித்ததாலேயே. .வெ.ரா அவர்களுக்கு தமது 'தமிழ் அடையாள அழிப்பு' சீர்திருத்தம்(?) என்பதானது, கீழ்வரும் விளைவில் முடிவதை முன்கூட்டியே கணிக்க முடியாமல் போனது.

.வெ.ரா மற்றும் அவர் வழியில் சுயலாப நோக்கின்றி பயணித்த எண்ணற்றோரின் உழைப்புகளும், இழப்புகளும், 'திராவிட ஆதாய அரசியல் பொதுவாழ்வு வியாபாரத்திற்கு' முதலில்லாத மூலதனங்களாக மாற நேரிட்டது.

அது எவ்வாறு நிகழ்ந்தது என்ற சமூக செயல்நுட்பத்தினை விளங்கிக் கொள்வதன் மூலமே, அதனால் விளைந்த பாதிப்புகளில் இருந்து தமிழையும், தமிழ்நாட்டையும் மீட்க முடியும்.

குறிப்பு:

பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன்  புதுச்சேரி புறநகர்ப்பகுதியில் ஒரு சாதாரண நடுத்தர மக்கள் வசிக்கும் வீட்டில் இருந்தார். பாரதிதாசன் நினைவகத்திற்கு  சாதாரண இரு சக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்தே பாரதிதாசன் நினைவகத்திற்கு எனக்கு உதவ வந்தார். மிகுந்த ர்வத்துடன் எனக்கு உதவினார். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது, .பொ.சிக்கு சென்னை இந்திரா நகரில் இலவசமாக மிகப்பெரிய வீடு கட்டித் தந்ததை நான் அறிவேன். பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம் இருக்கும் அளவுக்கு புகழப்பட்ட அவரது ஒரே மகனின் நடுத்தர வாழ்க்கையானது, தமிழ்நாட்டு பொதுவாழ்வு வியாபாரிகள் பலருக்கு, பாரதிதாசன்  முதலில்லாத மூலதனமானாரா? என்ற கேள்விக்கு இடமளித்தது.


(வளரும்)

1 comment:

  1. அருமையான பதிவு. பல உண்மைகளைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete