Saturday, April 28, 2018


தமிழ்நாட்டின் 'மைக்ரோ உலகத்திலிருந்து' (Micro-world) துண்டிக்கப்பட்டு வரும் 'மேக்ரோ உலகம்’(Macro-world (3);


நிர்மலாதேவி போன்ற‌ ‘இன்னும் பல ஆண் - பெண் சமூக நோய்க்கிருமிகளிடமிருந்து', தமிழ்நாடு  விடுதலை பெறுவது?


சுமார் 25 வருடங்களுக்கு முன் சாதாரண தமிழர்களின் குறைபாடுகள் பற்றிய 'மறுபக்கம்' தொடர்பான நூலை படிக்குமாறு எனது நண்பர் தந்தார். அந்நூலைப் படித்த பின், அதை எழுதிய பேராசிரியர் தான் பணியாற்றிய கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் எந்தெந்த அநீதிகளை எதிர்த்து போராடினார்? தமிழ்நாட்டின் பொதுப்பிரச்சினைகளில் எதற்காவது போராடியிருக்கிறரா? என்று விசாரித்த போது;

அது போன்ற 'வாழ்வியல் முட்டாளாக'(?) வாழாமல், அதிகாரத்தில் இருப்பவர்களை எல்லாம் 'புத்திசாலித்தனமாக' அனுசரித்து, அடுத்து அடுத்து உயர்பதவிகள் பெற்று, வளமாகி, 'முற்போக்கு' அமைப்புகளால் அவ்வப்போது பாராட்டும் பெற்று வாழ்ந்து 'வளர்ந்தவர்'(?) என்பது வெளிப்பட்டது.

சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் 'இதயம் பேசுகிறது' இதழ் வெளிவந்த காலத்தில், சுஜாதா உள்ளிட்டு அன்றைய பிரபல எழுத்தாளர்களின் 'மறுபக்கம்' பற்றிய தொடர் கட்டுரை வந்தது. அதில் இலங்கையில் 1983 இனப்படுகொலையை கண்டித்தும், ஈழ‌விடுதலையை ஆதரித்தும் தமிழ்நாடெங்கும் பிரச்சாரங்கள், போராட்டங்கள் நடந்த காலத்தில், அவற்றில் பங்கேற்காமல், நடிகர் ரஜினியைப் பாராட்டி புத்தகம் எழுதி விற்றுக்கொண்டிருந்த 'எழுத்தாளர்', பின்னர் விடுதலைப்புலிகள் மற்ற குழுக்களை எல்லாம் ஈவிரக்கமின்றி ஒழித்து, ஆயுதபலத்திலும், பணபலத்திலும் செல்வாக்கு அடைந்தவுடன், ரஜினிக்குப் பதிலாக, பிரபாகரனை பாராட்டி எழுதி 'வளர்ந்த'(?) கட்டுரையும் வெளிவந்தது. பின்னர் அந்த தொடர் நிறுத்தப்பட்டது. சிலகாலம் கழிந்து அந்த இதழ் வெளிவருவதும் முடங்கியது.

அதாவது மைக்ரோ உலகத்தில் வாழும் சாமான்ய தமிழர்களை எல்லாம், அபத்தமாக இழிவு செய்து எழுதுவதற்கு கிடைக்கும் வெளிச்சமானது, மேக்ரோ உலக பிரபல எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் தொடர்பான 'மறுபக்க' உண்மைகளுக்கு 'இருட்டாகி' விடும் நாடாகவே தமிழ்நாடு இருந்தது; நிர்மலாதேவி என்ற பேராசிரியை 'ஏமாந்த' மாணவிகளை பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய மோசடியானது அம்பலமாகும் வரையில்.

சுமார் 15 வருடங்களுக்கு முன், இன்று தமிழ்நாட்டில் மேக்ரோஉலகில், மனித உரிமைப் போராளியாக போற்றப்படும் ஒரு பேராசிரியர் பணியாற்றிய கல்லூரியிலிருந்து மாற்றல் பெற்று, நான் பணியாற்றி வந்த கல்லூரியில் சேர்ந்த ஒரு பேராசிரியரிடம் அந்த போராளி பேராசிரியரைப் பற்றி விசாரித்தேன். 

'அவர் கல்லூரியிலும் சரி, வெளியிலும் சரி, அந்த பகுதியில் வாழும் செல்வாக்கானவர்கள் சம்பந்தப்பட்ட அநீதிகளை எதிர்க்கும் 'முட்டாளாக'(?) வாழாமல்,

'யாரை எதிர்த்தால், அதிக பாதிப்பின்றி வெற்றியும் பாராட்டும் பெறலாம், என்று ' புத்திசாலித்தனமாக' கணக்கிட்டு 'போராடி' புகழ் பெற்றவர்' என்று சற்று வெறுப்புடன் கூறினார். 

தமிழ்நாட்டில் தமது மனதில் உள்ளதை ஒளிவு மறைவின்றி மைக்ரோஉலகத்தில் பேசிக்கொள்பவர்கள் எல்லாம், மேக்ரோஉலகத்தில் இருப்பவர்களிடம், அது போல பேசுவதை இயன்றவரை தவிர்த்தே வாழ்கிறார்கள்.

‘கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக பல முறை சிறை சென்றுள்ள எனது கல்லூரி ஆசிரியர் கழக அனுபவங்களில், ஒரு முறை மாநில பொறுப்பாளர் தேர்தலில் ஏகமனதாக எனக்கு மாநில அளவிலான பதவி தேடி வந்தபோது, ஊசலாட்டம் சிறிதுமின்றி அதை மறுத்து, மைக்ரோ உலகத்துடன் உள்ள தொடர்பில் பயணித்ததால், மேலே குறிப்பிட்டது போன்ற‌, கீழ்வரும் அனுபவங்களும் கிடைத்தன. 

கல்லூரி ஆசிரியர் கழகமானது 'அரசு துதிபாடும்' போக்கிலிருந்து மாறி, சிறை நிரப்பும் போர்க்குணமுள்ளதாக மாறிய போக்கில், எனது அளவுக்கு ப‌ங்களிக்காமல், கழகம் செல்வாக்கான பின் மாநில பொறுப்பாளர்களாக வளர்ந்தவர்கள் என்னை மிகவும் மதித்தார்கள். அவர்களை சந்திக்கும் 'முற்போக்கு, புரட்சி' எழுத்தாளர்களும், கவிஞர்களும், என்னை யாரென்று தெரியாமல், மைக்ரோ உலக சாமான்யராக 'மட்ட‌மாக' அணுகியதையும் 'பரிசோதனையாகவே' அனுபவித்துள்ளேன். தமிழ்நாட்டில் சாமான்யர்களை 'அறிவற்ற தாழ்ந்த சாதியாக'வும், தம்மை 'விபரமான உயர்ந்த சாதியாகவும்' கருதி, முற்போக்குகளில் பெரும்பாலோர் வாழ்கிறார்கள்; என்பதை அது போன்ற பல அனுபவங்கள் மூலம் உணர்ந்தேன். ஏமாந்தால், அவர்களின் சுயநலன்களுக்கு நம்மை பயன்படுத்திக்கொள்ளும் 'சமூக ஒட்டுண்ணிகளாக' அவர்களிடம் வெளிப்பட்ட அனுபவங்களில் ஒன்றையும், ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். அது மட்டுமல்ல, 'அந்த சாதியினரில்' ஊழல், ஒழுக்கக்கேடு, பணியில் பொறுப்பின்மை வெளிப்பட்டாலும், அந்த குற்றவாளிகளை 'பாதுகாக்கும் 'முற்போக்கு சாதியுணர்வு' நம்பமுடியாத அளவுக்கு அதிகம்; என்பதையும் அறிந்து கொண்டேன். மேக்ரோஉலக 'முற்போக்கு சாதியின்' சுயலாப‌ யோக்கியதையானது, மைக்ரோஉலகில், 'கட்சிகளில்' சிக்காமல் வாழ்பவர்களில் பெரும்பாலோருக்கு தெரிந்திப்பதும், எனக்கு வியப்பைத் தந்தது. 

திருக்குறளில் இசையியல்(Musicology) தொடர்புள்ள குறள்களுக்கான‌ விளக்கங்களில், உரையாசிரியர்களின் தவறுகளை வெளிப்படுத்திய எனது ஆய்வுக் கட்டுரையினை;

தமிழ்நாட்டில் இன்று மிகவும் மதிக்கப்படும், உண்மையிலேயே ஆழ்ந்த புலமையுள்ள தமிழறிஞரை சுமார் 20 வருடங்களுக்கு முன் சந்தித்த எனது நண்பர் கொடுத்த போது, அவர் அதை மேலோட்டமாக பார்த்து விட்டு, 'அவர் படிக்க தகுதியற்றது' என்று திருப்பி கொடுத்தார். பின் பல வருடங்கள் கழித்து, அமெரிக்காவில் தமிழ் அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் என்னைப் பற்றி அந்த தமிழறிஞரிடம் சொல்லியுள்ளதாக என்னிடம் தெரிவித்த, லண்டனில் வாழும் எனது நண்பரின் வற்புறுத்தலுக்காக, அதே ஆய்வுக்கட்டுரையை கொரியரில் அனுப்பினேன். அவர் அதைப்படித்து, என்னை மிகவும் பாராட்டி மடல் அனுப்பினார். வெறுத்துப் போனேன்; 'சாமான்ய சாதியில்' நான் இருந்த‌தால், அவர் போன்ற அறிஞர்களும் 'அறிவுக்குருடராக' என்னை அணுகியது வெளிப்பட்டதால்.   


‘சுமார் 100 ஆசிரியர்கள் பணியாற்றும் ஒரு அரசு கல்லூரியில், ஆசிரியர் கழகத்திற்கான அந்த கல்லூரியின் கிளை செயற்குழு உறுப்பினர்கள் 5 பேர் என்றால், 20 கல்லூரி ஆசிரியர்கள் வாக்களித்தாலே, கிளை செயற்குழு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற முடியும். 10க்கும் குறைவான வாக்குகள் வாங்கி தோற்ற ஒரு பேராசிரியர், அடுத்து சில மாதங்களில் நடந்த மாநில நிர்வாகிகளுக்கான தேர்தலில், அதிக வாக்குகள் பெற்று மாநில பொறுப்பாளர் ஆனார். 

அதிலும் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் முதன் முதலாக தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் சிறை சென்ற போராட்டத்தில் கலந்து கொள்ளாமல், அடுத்த சில வருடங்களில் ஆசிரியர் கழக போட்டிக் குழுக்களின் தலைவர்களாக, மாநில பொறுப்பாளர்களாகவும், பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்களாகவும் 'வலம்' வந்த 'வாழ்வியல் புத்திசாலி'(?) பேராசிரியர்களும் இருந்தார்கள். அத்தகைய போட்டிக்குழு தலைவர் ஒருவரின் ஆதரவிலேயே, மேலே குறிப்பிட்ட பேராசிரியர் மாநில பொறுப்பில் அதிக வாக்கு வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

மீடியா வெளிச்சத்தில் 'பார்ப்பன எதிர்ப்பு, தமிழ் உணர்வு, கம்யூனிசம்' முகாம்களில் வலம் வரும் மேக்ரோஉலக 'பிரபலங்களின்'  பிறந்த ஊரில், வாழ்ந்த/வாழும் ஊரில், பணியாற்றிய/பணியாற்றும் இடங்களில், அவர்களின் மைக்ரோஉலக யோக்கியதை பற்றி ஆராயாமல், அவர்களை மேய்ப்பர்களாக கருதி பயணிக்கும் 'மனித ஆடுகளும்' தமிழ்நாட்டில் இருக்கின்றன. இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் உள்ள 'மேய்ப்பர்களின்' உணர்ச்சிபூர்வ பேச்சுக்களும், அதை உற்சாகமாக ரசித்து மகிழும் ஆடுகளும், இணையத்தில் பதிவுகளாக, 'மேய்ப்பர் - ஆடு சமூக செயல்நுட்பம்' பற்றிய ஆய்வுகளுக்கான தடயங்களாக இடம் பெற்று வருகின்றன.

பல்கலைக்கழகத்தில் எந்த பிரச்சினைக்கும் போராடாமல் 'சொகுசாக' வாழ்ந்த 'முற்போக்கு' பேராசிரியர்களில் சிலர், குற்ற உணர்வின்றி, அரசு கல்லூரி ஆசிரியர்கள் பங்கேற்கும் போராட்டங்களில் வந்து 'வீர உரை' ஆற்றிச் சென்ற கூத்துக்களும் நடந்ததுண்டு: போராடிக்கொண்டிருக்கும் ஆசிரியர்கள் அவர்களைப்பற்றி கேலி பேசுவது தெரியாமல்.

தாங்கள் பணியாற்றிய கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் திராவிடக்கட்சிகளிலும், கம்யூனிஸ்ட் கட்சிகளிலும், சங்கங்களிலும் 'செல்வாக்கானவர்களின்' ஊழலையும், பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகளையும், பாடங்கள் ஒழுங்காக நடத்தாத பொறுப்பற்ற போக்குகளையும், கண்டும் காணாத, மேக்ரோ உலக 'சமூக நீதி' பேராசிரியர்கள் இன்று வலம் வருவதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_98.html )

கல்லூரி கிளை என்பது 'மைக்ரோ உலகம்' (Micro-world) போன்றது. மாநில ஆசிரியர் கழகம் என்பது 'மேக்ரோ உலகம்' (Macro-world)  போன்றது.

கிளையில் கல்லூரி ஆசிரியர் வேலை நிறுத்த/சிறை செல்லும் போராட்டங்களில் பங்கேற்க பயந்து ஒதுங்கியிருந்தவர்களில் 'புத்திசாலிகள்' எல்லாம், பின்னர் நடந்த மாநில தேர்தல்களில் வென்று, மாநில பொறுப்பாளராகும் கூத்துகள் அரங்கேறிய போக்கும், ஆசிரியர் கழக செயல்பாடுகளில் இருந்து , எனது குவிய கவனத்தை  மாற்றி, சமூகத்தை நோக்கி, 'பெரியார்' கொள்கையாளராக நான் பயணிக்க காரணமானது.’ (‘தமிழ்நாட்டின் 'மைக்ரோ உலகத்திலிருந்து' (Micro-world) துண்டிக்கப்பட்டு வரும் 'மேக்ரோ உலகம்(Macro-world) (1)’; http://tamilsdirection.blogspot.sg/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_25.html )

மேலே குறிப்பிட்டவாறு முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் முதல்முறையாக மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான கல்லூரி ஆசிரியர்கள் சிறை சென்ற போது, பயந்து ஒதுங்கி, பின் கல்லூரி ஆசிரியர் கழகம் வலுவான பின், நுழைந்து, 'வளர்ந்து' மாநிலப் பொறுப்புகளாகி, அந்த வளர்ச்சி மூலமாக பல்கலைக்கழக‌ 'சிண்டிகேட்' உறுப்பினர்களாகவும் பிரபலமாகி, மைக்ரோஉலகில் கேலிக்குள்ளானது தெரியாமல் பயணித்தவர்களில் சிலர்;

தொலைக்காட்சிகளில் அருப்புக்கோட்டை நிர்மலாதேவி விசாரணை தொடர்பாகவும், சமூக நீதி என்றும், பேசி வருகிறார்கள்.

அருப்புக்கோட்டை நிர்மலாதேவி விசாரணை தொடர்பாக,'பல்கலைக்கழக உயர் அதிகாரிகள், பேராசிரியர்கள் பலர் கலக்கத்தில் உள்ளனர்.'(http://tamil.thehindu.com/tamilnadu/article23653934.ece ) மேலே குறிப்பிட்ட மேக்ரோஉலக 'சமூக நீதி' பேராசிரியர்களுக்கும் கலக்கத்தை கொடுக்கும் கட்டுரைகளும் ஊடகங்களில் வெளிவரத் தொடங்கியுள்ளன.

நிர்மலாதேவி பிரச்சினைக்குப் பின், 'இருட்டில்' இருந்த, தமிழ்நாட்டுப்பல்கலைக்கழகங்களில் மாணவிகள் நீதிக்கு வழியின்றி அனுபவித்த பாலியல் கொடுமைகள் எல்லாம்;

ஊடகங்களில் வெளிச்சத்திற்கு வர தொடங்கியுள்ளன. (https://tamil.oneindia.com/news/tamilnadu/new-series-on-tn-varsities-corruption-part-3-318053.html )

'முட்டாள்த்தனமாக' பிடிபட்ட திருடனை கண்டித்து, திருட்டினை எதிர்ப்பதாக 'வெளிச்சம்' போடும் 'புத்திசாலித்தனமாக பிடிபடாத' திருடர்கள் எல்லாம் மேக்ரோஉலகத்தில் மீடியா வெளிச்சத்தில் வலம் வருவதும் முடிவுக்கு வர வேண்டும். சமூக முதுகெலும்பற்ற, ஆனால் 'போராளி' வேடத்தில் வெளிச்சம் போடும், சுயலாப முற்போக்குகளின் 'நட்புகளை' எல்லாம். 'அந்த புத்திசாலி திருடர்கள்' 'கேடயமாக' பயன்படுத்தி வந்த போக்கும் முடிவுக்கு வர வேண்டும்.

சிலவருடங்களுக்கு முன் 'என்கவுண்டரில்' சுட்டுக்கொல்லப்பட்ட 'ரவுடி' வீரமணி தொடர்பாக கீழ்வரும் பதிவினை வெளியிட்டுள்ளேன்.

சென்னை மாநிலக்கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில்,  'தலைமை விருந்தினராக' (Chief Guest) கலந்து கொள்ளும் அளவுக்கு, அந்த கல்லூரியின் மாணவர் தேர்தலில் முக்கிய பங்கு வகித்தவர் அந்த 'ரவுடி' வீரமணி ஆவார். அந்த செல்வாக்கில், அரசியலில் நுழைந்து அமைச்சராகும் அளவுக்கு, அவருக்கு 'கூறு' இல்லாததாலேயே, அவர் மரணமடைந்தார், என்பது எனது கருத்தாகும். அவ்வாறு அவர் அமைச்சராகியிருந்தால், அவர் காலில் விழுந்து, துணை வேந்தர் பதவி பெற, போட்டி போடும் பேராசிரியர்கள் வாழும் நாடாக தமிழ்நாடு உள்ளது. 'ரவுடி' வீரமணிக்கு 'இன்னும் அதிக கூறு' இருந்திருந்தால், தமிழ்நாட்டில் 'காசுக்காக' துதி பாடும், 'அறிவு விபச்சார' கவிஞர்களும், எழுத்தாளர்களும், பேச்சாளர்களும் புகழ் பாட, 'தமிழ்ப் புரவலராகவும்' வலம் வந்திருக்க முடியும்.’ (‘தமிழ்நாட்டின் 'மைக்ரோ உலகத்திலிருந்து' (Micro-world) துண்டிக்கப்பட்டு வரும் 'மேக்ரோ உலகம்’(Macro-world (2)’; http://tamilsdirection.blogspot.sg/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_28.html )

அவ்வாறு வாழ்ந்து 'ரவுடி' வீரமணி மறைந்திருந்தால், அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து, படத்திறப்பு நிகழ்ச்சியில் 'தமிழ்த்தேசிய', 'திராவிடர்/திராவிட', 'கம்யூனிஸ்ட்' தலைவர்கள் எல்லாம் கலந்து, 'ரவுடி' வீரமணியின் 'தொண்டுகளை'(?) பாராட்டி பேசியிருப்பார்கள்; 'ரவுடி' வீரமணியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சாபத்திற்குள்ளாகி. தமிழ்நாட்டின் 'முற்போக்குகள்' எல்லாம், மைக்ரோஉலகலிருந்து அந்நியமாகி, சமுக அடித்தளத்தை இழந்து வருவதாலும், 'புத்திசாலி ரவுடி வீரமணிகளின்' பிடியிலிருந்து தமிழ்நாடு விடுதலை பெரும் போக்கானது தொடங்கி விட்டதாலும், அவர்கள் 'சமூக சருகாகி' உதிரும் காலமும் அதிக தொலைவில் இல்லை. (‘Are the seculars & liberals in India, losing the hopes for social survival?’; http://veepandi.blogspot.sg/2017/07/are-seculars-liberals-in-india-losing.html )

நிர்மலாதேவி ஒரு சமூக நோயாக வளர உதவிய சமூக சூழலை புரிந்து கொண்டால் தான், அந்த நோய்க்கு எதிரான போராட்டத்தில் நாம் வெற்றிபெற முடியும்.

‘'பாவம், புண்ணியம்' அல்லது 'நல்லது, கெட்டது' போன்று பிரித்து பார்க்காமல், குடும்பம், நட்பு உள்ளிட்ட அனைத்து மனித உறவுகளையும், 'வியாபார' நோக்கில் அணுகி, கிடைக்கின்ற வாய்ப்புகளையெல்லாம், இழிவைப் பற்றிய கவலையின்றி, 'பொருள் ஈட்டும் நோக்கில்' செயல்படும் (processing) மூளை உள்ள,  மனிதர்களையெல்லாம், 'சிற்றினமாக', சங்க இலக்கியங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது. அண்மையில் வெளிவந்து, அபார வெற்றி பெற்றுள்ள, 'பாபநாசம்' திரைப்படம் உணர்த்தும், சிற்றினம் தொடர்பான, 'சிக்னல்' வருமாறு

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியை 'ஆபாசமாக' படம் எடுத்து, மிரட்டி, தனது காமத்துக்கு, தீனீயாக்க முயற்சிக்கிறான், போலீஸ் .ஜி.யின் மகன்.அத்திட்டத்தை அக்குடும்பம் எவ்வாறு முறியடித்தது? என்பதை, அற்புதமாக வெளிப்படுத்தியுள்ள திரைப்படம் அது. நடைமுறையில் அச்சிக்கலை சந்திக்கும் குடும்பங்களில், எத்தனைக் குடும்பங்களின் பெற்றோர்கள், தமது மகளை, 'வாழ்வியல் புத்திசாலித்தனத்துடன்' அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள தூண்டி, தமது செல்வத்தையும், செல்வாக்கையும் அதிகரித்துக் கொள்வார்கள்? அது போன்ற போக்கில் வாழும் 'வாழ்வியல் புத்திசாலிகள்'(?) தான், தமிழ்நாட்டு அரசியல் கொள்ளைக்காரர்களின் சமூக முதுகெலும்பா? தமிழ்நாட்டில் அந்த போக்கானது, 'அபரீதமாக' அதிகரித்து வருவதே, அதற்கு எதிர்நீச்சல் போட்ட 'பாபநாசம்' வெற்றி பெற காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.’ (http://tamilsdirection.blogspot.sg/2015/07/normal-0-false-false-false-en-us-x-none_9.html )

நிர்மலா தேவி என்ற சமூக நோய்க்கு எதிரான போராட்டமானது, மைக்ரோஉலகில் வேர் பிடித்து வீரியமாக வளர்ந்து வருவதன் வெளிப்பாடாகவே;

'இருட்டில்' இருந்த, தமிழ்நாட்டுப்பல்கலைக்கழகங்களில் மாணவிகள் நீதிக்கு வழியின்றி அனுபவித்த பாலியல் கொடுமைகள் எல்லாம், ஊடகங்களில் வெளிச்சத்திற்கு வர தொடங்கியுள்ளன.

நடுமட்டத்திலும், கீழ்மட்டத்திலும் வாழ்பவர்களுக்கு ஒப்பீட்டளவில் இழப்புகளை எளிதில் சந்திக்க முடியும் என்பதால்;

தமிழ்நாட்டில் 'உண்மையான தன்மானத்துடன்' வாழ்பவர்கள் எல்லாம் ஒப்பீட்டளவில் நடுமட்டத்திலும், கீழ்மட்டத்திலும் அதிகமாகவும், மேல் மட்டத்தில் குறைவாகவும் இருக்கிறார்கள்

ஜெயலலிதாவின் மறைவானது, மேல் மட்டத்தில் தன்மானக்கேடான முறையில் வாழ்பவர்களை எல்லாம் மீடியா வெளிச்சத்தில் கொண்டு வந்து, மைக்ரோ உலகத்தில் வாழ்பவர்களிடையே கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாக்கி விட்டதால்;

மேக்ரோ உலகமானது 'தன்மான மீட்பு' நோக்கி, மாற வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளது; மேக்ரோ உலகத்திற்கான மாற்றங்களின் 'முளைகள்' எல்லாம் மைக்ரோ உலகத்திலிருந்து தான் தொடங்கும்;
என்ற சமுகவியல் விதியை நிரூபிக்கும் வகையில்.’ (http://tamilsdirection.blogspot.sg/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_28.html )

தமிழ்நாட்டில் 'உண்மையான தன்மானத்துடன்' வாழ்பவர்கள் எல்லாம் ஒப்பீட்டளவில் மேல் மட்டத்தில் குறைவாக இருந்ததாலேயே;

பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும், 'செல்வாக்கான' குற்றவாளி பேராசிரியர்கள் எல்லாம் அம்பலமாகாமல், தண்டிக்கப்படாமல் வளர்ந்த போக்கில்;


ஆளுநரின் முயற்சியால் ஊழலின்றி துணைவேந்தர், பதிவாளர்கள் பதவிகள் நிரப்பப்பட்டு, ஊழல் துணைவேந்தர்கள் சிறையில் அடைக்கப்பட்ட சூழலில், நிர்மலாதேவி 'சிக்கியதும்' கவனிக்கத்தக்கதாகும்.


நிர்மலாதேவி தொடர்பான காவல்துறை விசாரணை என்பது அந்த குற்றத்தை மட்டுமே குவியமாக கொண்டு செயல்படுவதாகும். மாறாக சந்தானம் குழு விசாரணையில் அந்த குற்றத்திற்கான சூழல் தொடர்பானவையும் வெளிவர வாய்ப்பிருக்கிறது. தமிழக ஆளுநருக்கு எதிராக வெளிவந்துள்ள கீழ்வரும் கட்டுரையில், சந்தானம் குழு விசாரணையில் நம்பிக்கை தரும் கருத்தும் வெளிப்பட்டிருக்கிறது.

‘The silver lining is that Santhanam is a bureaucrat with an impeccable reputation for probity. His peers say that he can be expected to do an honest job, without getting influenced. Santhanam may just be the person needed to launch the Swachh University Abhiyan in Tamil Nadu.’ (https://www.firstpost.com/india/tamil-nadu-sex-for-degrees-case-governor-banwarilal-purohit-shouldve-submitted-himself-to-the-investigation-4436063.html )

தமிழ்நாட்டில் கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில், பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட ஒழுக்கக்கேடுகளில் ஈடுபட்ட பேராசிரியர்கள் எல்லாம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதானது;

காவல் துறையில், அரசு வக்கீல்கள் துறையில், நீதித்துறையில், சிறைத்துறையில் உள்ள கறுப்பு ஆடுகள் ஒழியும் வரை சாத்தியமில்லை. நமது குடும்பம், நட்பு உள்ளிட்ட சமூக வட்டத்தில், மேலே குறிப்பிட்ட 'கறுப்பு ஆடுகள்' இருந்தால், நிர்மலாதேவியை குறை சொல்ல நமக்கு யோக்கியதை உண்டா? அது போன்ற‌ 'கறுப்பு ஆடுகளை' மதித்து, அவர்களின் 'தீவழி செல்வம், செல்வாக்கில்' மயங்கி, நட்புடன் வாழ்பவர்களையும், 'நிர்மலா தேவிகளாக' கருதி, எனது சமூக வட்டத்திலிருந்து ஒதுக்கி வாழ்கிறேன்; அதனால் வந்த இழப்புகளை எல்லாம், தமிழ்நாட்டின் மீட்சிக்கான எனது பங்களிப்பு உரங்களாக  ஏற்றுக்கொண்டு.

அந்த கறுப்பு ஆடுகளின் 'பாதுகாப்பில்' தப்பித்து வந்துள்ள மேலே குறிப்பிட்ட குற்றப் பேராசிரியர்களின் வண்டவாளங்கள் எல்லாம் மைக்ரோஉலகில் மட்டுமே வலம் வந்த நிலை மாறி, மேக்ரோஉலக மீடியாக்களிலும் வலம் வரும் விளைவினை;

நிர்மலா தேவி என்ற சமூக நோய்க்கு எதிராக‌, மைக்ரோஉலகில் வேர் பிடித்து வீரியமாக வளர்ந்து வரும் போராட்டங்கள் ஏற்படுத்தி வருகின்றன.

சுயலாப நோக்கின்றி சமூக அக்கறையுடன் வாழ்ந்து வருபவர்கள் எல்லாம் நம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் அந்த போராட்டங்களை, மேலே குறிப்பிட்ட 'கறுப்பு ஆடுகள்' மூலமாக‌ மலடாக்கும் முயற்சிகளை வெற்றி கொண்டால் தான், நிர்மலாதேவி போல வாழ்ந்து வரும்இன்னும் பல ஆண் - பெண் சமூக நோய்க்கிருமிகளிடமிருந்து’, தமிழ்நாடானது விடுதலை பெறும். 'அந்த சமூக நோய்க்கிருமிகளின்' பிடியில், தமிழ்நாடு சிக்கியதற்கு 'பெரியார்' ஈ.வெ.ராவே காரணமா? என்ற கேள்வியை, அடுத்த பதிவில் பார்ப்போம்.