Wednesday, April 29, 2020


பிரச்சினை பணமா? ஊழல் வலைப்பின்னலா?


ஜோதிகாவிற்கும் சூர்யாவிற்கும் தெரியாதா?



பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது, அழகாக இருக்கும். கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் ஏற்கெனவே பார்த்துள்ளேன். மிகவும் அழகாக உள்ளது. உதய்பூரில் உள்ள அரண்மனைகள் மாதிரி நன்கு பராமரித்து வருகிறார்கள்.

அடுத்த நாள் என்னுடைய படப்பிடிப்பு மருத்துவமனையில் இருந்தது. அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் கண்டதை என் வாயால் சொல்ல முடியாது. எல்லோருக்கும் ஒரு கோரிக்கை. ‘ராட்சசிபடத்தில் இதை இயக்குநர் கௌதம் ராஜ் சொல்லியிருக்கிறார்.

கோயிலுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் பூசி பராமரிக்கிறீர்கள். தயவு செய்து அதே தொகையை பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். இது மிகவும் முக்கியம். எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.

நான் கோவிலுக்குள் போகவில்லை. அந்த மருத்துவமனையைப் பார்த்த பிறகு போகவில்லை. மருத்துவமனைகளும், பள்ளிகளும் அந்த அளவுக்கு முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம்என்று ஜோதிகா கூறியுள்ளார்

இந்த சர்ச்சை தொடர்பாக சூர்யா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘'கோயில்களைப்போலவே பள்ளிகளையும்‌, மருத்துவமனைகளையும்உயர்வாகக் கருத வேண்டும்‌' என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை, 'சிலர்‌' குற்றமாகப் பார்க்கிறார்கள்‌. இதே கருத்தை விவேகானந்தர்போன்ற ஆன்மிகப்பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள்‌. 'மக்களுக்கு உதவினால்‌, அது கடவுளுக்குச்செலுத்தும்காணிக்கை' என்பது 'திருமூலர்‌' காலத்துச் சிந்தனை. நல்லோர்சிந்தனைகளைப்படிக்காத, காது கொடுத்துக் கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.’ 
(https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/551832-suriya-press-release-about-jyotika-speech-1.html)

இந்து கோவில்களில் பக்தர்கள் போடும் பணமானது 'வண்ணம் பூசி பராமரிக்க' மட்டுமே செலவிடப்படுவதில்லை

மாறாக அனாதை ஆசிரமம், காது கேளாதோர் பள்ளி, குழந்தைகள் காப்பகம், பள்ளிகள், கல்லூரிகள் என்று பல தரும காரியங்களுக்கு செலவிடப்படுகின்றன.
(https://tamilnadu-favtourism.blogspot.com/2016/02/palani-murugan-temple-institutions.html?m=1 & https://tamilnadu-favtourism.blogspot.com/2015/12/meenakshi-amman-temple-social-services.html?m=1)
சென்னையில் வருடம் தோறும் நடக்கும்இந்து ஆன்மீகம் மற்றும் சேவை கண்காட்சிக்கு’ (https://www.hssf.in/) சிவக்குமார் குடும்பத்தினரில் எவராவது சென்றிருந்தால், "கோயிலுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் பூசி பராமரிக்கிறீர்கள். தயவு செய்து அதே தொகையை பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள்." என்று கருத்து சொல்லி, தங்களின் அறியாமையை வெளிப்படுத்தியிருக்க மாட்டார்கள்.

"கோயிலுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் பூசி பராமரிக்கிறீர்கள். தயவு செய்து அதே தொகையை  பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள்." என்ற கோரிக்கை வைத்த இயக்குநர் கௌதம் ராஜும் ஜோதிகாவும், தஞ்சையில் உள்ள அரசு மருத்துவமனை சரியாக பராமரிக்கப்படாததற்கு பணமே பிரச்சினை என்று கருதி, அவ்வாறு கோரிக்கை வைத்துள்ளார்கள். அந்த மருத்துவமனைக்கு பராமரிப்புக்காக அரசு செலவிடும் பணம் எவ்வளவு? எந்த காரியத்திற்காகவும் அரசு எத்தனை கோடி பணம் ஒதுக்கினாலும், எந்தக்கட்சி ஆட்சியில் இருந்தாலும், அதில் கணிசமான பகுதியை தமக்குள் பங்கு போட்டுக் கொள்ளும் ஊழல் வலைப்பின்னலானது, 1967க்குப்பின் முளைவிட்டு, 1969இல் ஊக்கம் பெற்று, 1991 முதல் வீரியத்துடன் வளர்ந்து எந்த நிலையில் உள்ளது? என்பது பற்றி இயக்குநர் கௌதம் ராஜும் ஜோதிகாவும் தெரிந்து கொண்டால், பிரச்சினை பணமல்ல, ஊழல் வலைப்பின்னல் அமைப்பு என்பது தெளிவாகும்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட போதெல்லாம், முந்தைய ஆட்சியின் ஊழல் வலைப்பின்னல்கள் எல்லாம், புதிய ஆட்சியாளர்களுடன் எவ்வளவு எளிதாக ஒட்டி, ஆட்சியாளர்களும் ஊழல் வலைப்பின்னல்கள் மூலமாக எவ்வாறு 'அறுவடை' செய்தார்கள்? என்று ஜோதிகாவும் சூர்யாவும் ஆராய்ந்தால்;

அரசு மருத்துவமனைகளின் பராமரிப்பு குறைபாடுகள் எல்லாம், ஆட்சி மாற்றங்களுக்குப் பின்னும் ஏன் நீடித்தது? பணம் பிரச்சினையல்ல, அந்த ஊழல் வலைப்பின்னல்களே பிரச்சினை, என்பதானது, அவர்களுக்கு தெளிவாகும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துமனைகள், நீதிமன்றங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில்  பெரும்பாலானவற்றில் உள்ள கழிவறைகளில் உள்ளே மூக்கைப் பிடிக்காமல் நுழைய முடியாத அளவுக்கு நோய்த்தொற்று மையங்களாக உள்ளன;

என்பதை அது போன்ற இடங்களுக்கு சென்று வந்த நான் அறிவேன். அவற்றில்  பொதுமக்களுக்கானமிகவும் மோசமான கழிவறைகள் உள்ளவை கீழ்மட்ட நீதிமன்றங்களே ஆகும்.

கட்டிடங்களின், குறிப்பாக கழிவறைகளின், சரியான பராமரிப்புக்கு பணத்தை விட மேற்பார்வையே எவ்வளவு முக்கியம்? என்பதை நான் அறிவேன்.

நான் ஒரு கல்லூரியில் முதல்வராக பணியாற்றிய காலத்தில், வகுப்பறைகள், மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் பயன்படுத்தும் கழிவறைகள் ஒழுங்காக சுத்தம் செய்யப்படுகிறதா? என்று தினமும் கண்காணித்து வந்தேன்; அந்த இரண்டிலும் மோசமாக இருக்கும் நிறுவனங்களும், மோசமாகவே இருக்கும் என்ற எனது புரிதலில்.

ஒரு நாள் மதியம் 2 மணி அளவில் சுற்றி வந்த போது, மாணவர்கள் இல்லாத ஒரு வகுப்பறையில் குப்பைகள் இருப்பதைப் பார்த்தேன். உடனே எனது உதவியாளரிடம், பெருக்குபவர்(Sweeper) மதிய உணவு சாப்பிட்டு, கல்லூரிக்கு வந்தவுடன், என்னை பார்க்கச் சொன்னேன். அந்த பணியாள் வந்தவுடன், அவருடன் சென்று வகுப்பறையைப் பார்த்தால், சுத்தமாக இருந்தது. எனது உதவியாளர் முன்கூட்டியே அந்த பணியாளுக்கு தகவல் கொடுத்து விட்டதால், அந்த பெண் தான் ஏற்கனவே வகுப்பறையை சுத்தம் செய்து விட்டுத்தான் மதிய உணவு சாப்பிட சென்றதாக பொய் சொல்லி, தப்பித்தார். புதிதாக ஆரம்பிக்கப்பட்டு, சுமார் 40 ஆசிரியர்கள் பணியாற்றிய கல்லூரியிலேயே, பணியில் வெளிப்படையும்(Transparency), பொறுப்பேற்பும்(Accountability) நடைமுறைப்படுத்த, நான் மிகவும் சிரமப்பட்டேன்.

இன்று தமிழ்நாட்டில் பெரிய தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில், அரசியல் கட்சிகளிலும் கூட‌, கீழ் மட்டங்களில் எவ்வளவு தவறுகள் நிகழ்ந்தாலும், அவை தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு உடனே தெரிய வாய்ப்பில்லை. அத்தவறுகளின் தொகு விளைவாக(Resultant), மறைக்க முடியாத பாதிப்பானது, அவர் பார்வைக்கு வந்தாலும், எந்த விசாரணை மூலமும், உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பது கடினம். அந்த அளவுக்கு, சுயநல அடிப்படையில், 'மபியா'(Mafia;https://en.wikipedia.org/wiki/Mafia) சமூக செயல்நுட்பத்துடன் ஒப்பிடும் அளவுக்கு, வெளியில் தெரியாத, பாதுகாப்பு வளையங்கள், அந்த நிறுவனத்தின், கட்சியின், அடி மட்டத்திலிருந்து, மேல் மட்டம் வரை செயல்பாட்டில் உள்ளன. எனவே விசாரணையில் மாட்டி, தண்டனைக்குள்ளாகுபவர் பெரும்பாலும் உண்மை குற்றவாளியாக இருக்க மாட்டார். அந்த அளவுக்கு நிறுவன கட்டமைத்தல்(system building)  பலகீனமாக உள்ளது.

அரசு மருத்துவமனைகள் உள்ளிட்டு அரசு துறைகளில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களில் ஊழல் வலைப்பின்னலுடன் ஒத்துழைத்து பாதுகாப்புடன் வாழும் அதிகாரிகளும் உள்ளனர். ஊழல் ஒழிப்பு முயற்சிகள் காரணமாக அடிக்கடி பணியிட மாற்றத்திற்கு உள்ளாகும் அதிகாரிகளும் இருக்கிறார்கள்.

இந்து கோவில் உண்டியலில் போடப்படும் பணமும் மேற்குறிப்பிட்ட ஊழல்வலைப்பின்னலில் இருந்து தப்புகிறதா? திருச்செந்தூர் முருகம் கோவில் உண்டியல் பணம் திருடப்படுவதை எதிர்த்த இந்து அற நிலைய அதிகாரி கொல்லப்பட்டது, நடிகர் சிவக்குமாருக்கு தெரியாதா? அந்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா? முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் குற்றம் சுமத்திய தி.மு. தலைவரும், குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியும், எம்.ஜி.ர் மறைவிற்குப்பின் நேசமானதும், சிவக்குமாருக்கு தெரியாதா?

விவேகானந்தர், திருமூலர் போன்றவர்களுக்கு எல்லாம், 1967க்குப்பின் தமிழ்நாட்டில் அறிமுகமான ஊழல் வலைப்பின்னல் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களை சாட்சிகளாக்கி, ஜோதிகாவின் கருத்தை சூர்யா நியாயப்படுத்துவதும் சரியல்ல.

தஞ்சை அரசு மருத்துவமனையானது இந்துக்களுக்காக மட்டுமே உள்ள மருத்துவமனை அல்ல. எனவே இந்து கோவில் உண்டியலைக் குறிப்பிட்ட ஜோதிகா, சர்ச் மசூதிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளையும் சேர்த்து குறிப்பிட்டிருந்தால், எந்த எதிர்ப்பும் வந்திருக்காது.

இந்து கோவில்களைப் போல, சர்ச்சுகளுக்கும், மசூதிகளுக்கும் நன்கொடை வழங்கும் பக்தர்களும் அந்தந்த மதங்களில் இருக்கிறார்கள். ஆனால் இந்து அறநிலையத்துறை மூலமாக இந்துக்கள் தரும் நன்கொடைகள், அரசின் மூலமாக எல்லா மதத்தினரும் பலன் பெறுகிறார்கள். இந்துக்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு இல்லாத சலுகைகள் எல்லாம் முஸ்லீம் கிறித்துவர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன. இது போன்ற பாரபட்சங்களை சிவக்குமார் குடும்பத்தினர் ஏற்கனவே கண்டித்திருந்தாலும், ஜோதிகாவின் பேச்சுக்கு எதிர்ப்பு வந்திருக்காது.

சினிமாத்துறையானது எந்த அளவுக்கு மேற்குறிப்பிட்ட ஊழல்வலைப்பின்னலின் செல்வாக்கில் உள்ளது? அந்த ஊழல் வலைப்பின்னலை எதிர்த்தால், அந்த துறையில் சிவக்குமார் குடும்பத்தினர் உள்ளிட்ட எவரும் தாக்குப்பிடிக்க முடியுமா?

'அகரம்' அறக்கட்டளை மூலமாக, சிவக்குமார் குடும்பத்தினர் புரிந்து வரும் தொண்டுகள் பாராட்டத்தக்கதே. அவ்வாறு நான் மிகவும் மதிக்கும் சிவக்குமார், தமிழ்நாட்டில் மேலேக்குறிப்பிட்ட ஊழல் வலைப்பின்னலின் பிதாமகன்கள் ஆளுங்கட்சியின் ஆட்சியில் முக்கிய பொறுப்புகளில் இருந்த போது, அத்தகையோரைப் பாராட்டியதானது, எனக்கு வருத்தம் தந்தாலும், அதை நான் குறையாகக் கருதவில்லைஏனெனில், அவரின் தொழில் பாதுகாப்புக்கு, அது தவிர்க்க இயலாதது.  

'தஞ்சை மருத்துவமனை சரியாக பராமரிக்கப்படவில்லை, அது நன்கு பராமரிக்கப்படவேண்டும்' என்ற ஜோதிகாவின் நோக்கமும் பாராட்டத்தக்கதே ஆகும். ஆனால் அதனை பணப்பிரச்சினையாக கருதியது, தமிழ்நாட்டின் ஊழல் வலைப்பின்னலைப் பற்றிய அவரின் அறியாமையாகும்.  அதில் இந்து கோவில் உண்டியல் பணம் பற்றி குறிப்பிட்டதானது;

மேற்குறிப்பிட்ட மத ரீதியிலான பாகுபாட்டில் புண்பட்டிருந்த இந்துக்கள் பார்வையில், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சிய செயல் ஆனது

அது சர்ச்சையானதன் காரணமாக, உண்மைக்குற்றவாளிகளான ஊழல் வலைப்பின்னலானது எளிதில் தப்பிக்க இடம் அளித்தது. அது நிச்சயமாக தவிர்க்கப்பட வேண்டியதாகும்; கீழ்வரும் போக்கின் காரணமாக.

தமிழ்நாட்டில் கிறித்துவர்களிலும் முஸ்லீம்களிலும் நேர்மையாளர்கள் எல்லாம், தத்தம் மதங்களில் உள்ள சொத்துக்கள் எல்லாம் ஊழல் பெரும்பசிக்கு இரையாவதை எதிர்த்தும் போராடி வருகிறார்கள்; இந்துக்களில் நேர்மையான பக்தர்கள் எல்லாம், இந்து கோவில்களின் சொத்துக்கள் அது போல ஊழல் பெரும்பசிக்கு இரையாவதை எதிர்த்து போராடி வருவதைப் போலவே.

கோவில், சர்ச், மசூதி சொத்துகளாக இருந்தாலும், நேர்மையற்ற போக்குகளை எதிர்ப்பதில், நேர்மையாக வாழும் இந்துக்களும், முஸ்லீம்களும், கிறித்துவர்களும் ஓன்றுபட்டு போராடினால் தான், அந்தந்த மதங்களில் உள்ள நேர்மையற்ற ஊழல் பேர்வழிகள் எல்லாம் அடங்குவார்கள்

அவ்வாறு அடங்கும் போது தான், தஞ்சை அரசு மருத்துவமனை மட்டுமின்றி, அனைத்து அரசு மருத்துவமனைகளும், நீதி மன்றங்களும், பிற அரசு துறைகளும் சுத்தமான சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படும்.

மேற்குறிப்பிட்ட சர்ச்சையில், ஜோதிகாவை ஆதரித்த இந்துத்வா எதிர்ப்பாளர்களில் எவருக்குமே, பிரச்சினை பணமல்ல, ஊழல் வலைப்பின்னலே  என்பது தெரியாமல் ஆதரித்தார்களா? அல்லது அவர்களுக்கு நேசமான அரசியல் கொள்ளையர்களின் பாதுகாப்பு கவசமாக, ஜோதிகாவை ஆதரித்து 'யோக்கிய' வேடம் போட்டார்களா? என்ற ஆராய்ச்சியில் ஜோதிகாவும் சூர்யாவும் ஈடுபடுவது நல்லது; இது போன்ற சர்ச்சைகள் மூலமாக ஊழல் வலைப்பின்னல்கள் ஆதாயம் பெறுவதை தடுப்பதற்காகவாவது.