தமிழ், தமிழ் இசை ஆய்வுகளின் தரத்தை எவ்வாறு உயர்த்துவது?
தனித்துவமான அடையாளச் சிக்கலில் இருந்து தமிழ்நாட்டை எவ்வாறு மீட்பது?
புதிய அனுபவங்களை நோக்கிய வளர்ச்சி மனநிலையில்
(growth mindset) எவ்வாறு பயணிப்பது? என்பது தொடர்பான பதிவில் கீழ்வருவதையும் குறிப்பிட்டிருந்தேன்.
‘நம்மிடம் உள்ள குறைகளை வெளிப்படுத்தி வெற்றிகொள்வதற்குப் பதிலாக, ஏன் மறைக்க வேண்டும்? (Why hide deficiencies instead of overcoming
them?)”
ஆராய்ச்சி இதழ்களின் தரம் பற்றி எனக்கு தெரியாமல் இருந்திருந்த ஒரு குறை பற்றியும், அதனை நான் எவ்வாறு வெற்றி கொண்டேன்? என்பதையும் இங்கு பார்ப்போம்.
உலக அளவில் ஆராய்ச்சிக்கான இதழ்களுக்கான தரவரிசையில், 'Science
Citation Index (SCI; https://en.wikipedia.org/wiki/Science_Citation_Index)'
என்ற தரவகையில் உள்ள இதழ்களில் வெளிவரும் கட்டுரைகளுக்கே மதிப்பு அதிகமாகும்..
'SCI' இதழ்களில் ஆய்வுக்கட்டுரை வந்தவுடன், நிபுணர்களின் பரிசீலனைக்கு தகுதியானதா? என்ற முதல் கட்ட வடிப்பானைத் தாண்டி, அதில் தேர்ந்த கட்டுரைகளை உலகில் அந்த துறையில் தேர்ந்த நிபுணர்களுக்கு அனுப்பி அவர்களின் கருத்தை பெறுவது (ஒரு வருடத்திற்கும் மேலாகலாம்) என்ற இரண்டாம் கட்ட வடிப்பான் செயல்படும். நிபுணர்களின் பரிசீலினையில் வெளியிட தகுதியற்றது என்று கருதினால் நிராகரிப்பது; தகுதி உள்ளது என்று கருதினாலும், அக்கட்டுரையில் உள்ள குறைகளை சரி செய்தால் மட்டுமே வெளியிடலாம், என்று பரிந்துரைப்பது, கட்டுரையாளருக்கு குறைகளை சரி செய்யும் வரை மீண்டும் மீண்டும் அனுப்புவது; என்ற வகையில் பல கட்டங்களில் கண் கொத்திப் பாம்பு போன்ற கண்காணிப்பில் தேறிய கட்டுரைகள் மட்டுமே 'SCI'
இதழ்களில் வெளிவரும்.
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்களின் கட்டுரையானது, 'SCI' இதழ்களில் வெளிவந்தால், வெளியாகும் ஒவ்வொரு கட்டுரைக்கும் லட்சம் ரூபாய் அளவுக்கு ஊக்கப்பரிசு வழங்கி கெளரவிப்பார்கள். 'SCI' இதழ்களில் கட்டுரைகள் வெளியிட்டு முனைவர் பட்டம் பெற்றவர்கள் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். சாதி, மத வேறுபாடின்றி, அத்தகையோருக்கே முதலில் பணி நியமனம் அங்கு வழங்கப்படும்.
நான் சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக சேருவதற்கு முன்னே, 1996இல் முனைவர் பட்டம் பெற்றிருந்தேன். பல ஆய்வு இதழ்களிலும், ஆய்வு நூல்களிலும் எனது கட்டுரைகளை வெளியிட்டிருந்தேன்.
'Ancient Music Treasures – Exploration for New Music' என்ற தலைப்பிலான எனது நூல் ஆங்கிலத்திலும் வெளிவந்திருக்கிறது. எனினும் மேற்குறிப்பிட்ட தகவலானது, சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் எனது ஆய்வுகளைத் தொடங்கியபோது தான், எனக்கே தெரியவந்தது.
ஆக சாஸ்த்ரா பல்கலைகழகத்திலும், அடுத்து திருச்சி NIT-யிலும் சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு 'SCI' இதழ்கள் பற்றி தெரிந்திருந்த தகவலானது, எனக்கு அதுவரை தெரிந்திருக்கவில்லை. அது குறித்து நான் வெட்கப்படவில்லை. ஏன் '
SCI' இதழ்களில் ஆய்வுக்கட்டுரை வெளிவருவது முதல் தரமாகக் கருதப்படுகிறது? என்று ஆராய்ந்தேன். அந்த முயற்சியில் எனது ஆய்வுக்கட்டுரைகள் 'SCI'
இதழ்களில் வெளிவரும் அளவுக்கு எனது ஆய்வின் தரம் உயர்ந்தது.
அரைகுறை சான்றுகளுடன் வெளிப்படும் 'பெருமைகள்'(?) மூலமாக, உலக அளவில் தமிழும் தமிழ் இசையும் கேலிப்பொருளாகும் அபாயம் பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
உலக அளவில் புகழ் பெற்ற, இந்துத்வா எதிர்ப்பாளர்களால் போற்றப்படுகிற, செல்டன் பொல்லாக், தமிழில் ஆராய்ச்சி முடிவுகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளதை, ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன்.
இந்தியாவில் பிற மாநிலங்களில் உள்ள இசைப் புலமையாளர்களுடனும், வெளிநாடுகளில் உள்ள இசைப் புலமையாளர்களுடனும், கடந்த சுமார் 20 வருடங்களாக நான் உரையாடிய சந்தர்ப்பங்களில் எல்லாம், தமிழ் இசை என்றாலே, அபத்தமான அரைகுறைச் சான்றுகள் அடிப்படையில் உணர்ச்சிபூர்வமாக மிகைப்படுத்துபவர்கள் என்ற கண்ணோட்டமே வெளிப்பட்டது.
ஒரு சமூகத்தில் உள்ள புலமையின் வளர்ச்சியும், வீழ்ச்சியும், அச்சமூகத்தில் உள்ள கல்விச் சூழலைப் பொறுத்ததாகும். ஆரம்பப்பள்ளி முதல், கல்லூரி - பல்கலைக் கழகங்கள் வரை கல்வி கற்பிப்பவர்களின் பணி நியமனங்களில், 'தகுதி, திறமைக்கு' முன்னுரிமை கொடுத்தால், புலமை வளர்ச்சிக்கு அது துணை புரியும். அதற்கு மாறாக, 'லஞ்சம்' செல்வாக்கு' முன்னுரிமை பெற்றால், புலமை வீழ்ச்சியுறுவதில் வியப்புண்டோ?
சட்டிகளை (உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்ப்பல்கலைக்கழகம், பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்த்துறைகள்) காப்பாற்றாமல், அகப்பையில் என்ன வரும்? என்ற கேள்வியையும் நான் எழுப்பியுள்ளேன்.
தனிமனிதராக இருந்தாலும், சமூகமாக இருந்தாலும், குறைகளை அவ்வப்போது சுட்டிக்காட்டி திருத்தும் செயல்நுட்பத்திற்கு உள்ளாகவில்லை என்றால், தரத்தில் வீழ்ச்சி என்பது தவிர்க்க இயலாததாகும்.
என்னிடம் உள்ள குறைகளை எனது சமூக வட்டத்தில் உள்ளவர்கள் எந்த தயக்கமும் இன்றி சுட்டிக்காட்ட வேண்டும்; எனது ஆய்வுகளில் உள்ள குறைகளை, எனது ஆய்வு வட்டத்தில் உள்ளவர்கள் எந்த தயக்கமும் இன்றி சுட்டிக்காட்ட வேண்டும்; என்ற திசையிலேயே இன்றும் பயணித்து வருகிறேன். அரங்கில் (வகுப்பறையாக இருந்தாலும்) இருப்பவர்களை விட, நாம் அதி புத்திசாலி என்ற தோரணையில் நான் என்றுமே பேசியதில்லை.
‘நம்மிடம் உள்ள குறைகளை வெளிப்படுத்தி வெற்றிகொள்வதற்குப் பதிலாக, ஏன் மறைக்க வேண்டும்?
(Why hide deficiencies instead of overcoming them?)” என்ற திசையில் பயணித்ததாலேயே, முன்பு மார்க்சிய - லெனினிய - பெரியாரியல் புலமையாளனாகப் பயணித்தேன்; இன்று இசைத்தகவல் தொழில்நுட்பப் புலமையாளராக
(Music Information Technologist) பயணித்து வருகிறேன்.
இன்று 'பெரியார்' முகாம்களில் உள்ள குறைகளை நான் சுட்டிக்காட்டினாலும், அதை ஏற்றுக்கொண்டு, தமது ஆய்வின் தரத்தை உயர்த்திக் கொள்வதற்குப் பதிலாக, எந்த திசையில், பயணிக்கிறார்கள்? என்பதற்கு ஓர் உதாரணம்.
"பேராசிரியர் வீரபாண்டியனை நான் நன்கு அறிவேன்,
அவர் எழப்பியிருக்கும் கேள்விகளுக்கு அவரே மிக எளிதில் பதில சொல்ல முடிந்தவராகவே ஒரு காலத்திலிருந்தார். அவரிடமிருந்து இந்த எதிர்வினை எனக்கு வியப்பளிக்கிறது. எனவே அவரை மறந்து விட்டு கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன்."
என்று எழுதிய மடலில் கீழ்வரும் கருத்து இடம் பெற்றிருந்தது.
“"இந்தக் கடவுளின் கருவறை ஆதிமனிதனின் அறியாமையும், பயமும் தான. கடவுளின் தொடர்ந்த இருத்தலுக்கு ஆயிரம் காரணத்தைக் கற்பிக்கலாம். ஆனால் தோற்றுவாய் இது தான் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை."
என்ற மேலே குறிப்பிட்ட 'பெரியார்' ஆதரவாளரின் கருத்துக்கு, நான் கீழ்வரும் கேள்வியை எழுப்பினேன்.
“இது எந்த ஆதாரத்தின் அடிப்படையில் முன்வைக்கப்படுகிறது? அந்த ஆதாரம் 'ஆதி மனிதன்' பற்றிய தகவல்களை எந்த ஆய்வுகளின் அடிப்படையில் பெற்றது? அந்த ஆய்வுகள் எந்த அளவுக்கு அறிவியல் அணுகுமுறைகள் அடிப்படைகளில் மேற்கொள்ளப்பட்டன?”
அதற்கு கீழ்வருவது, எனக்கு பதிலாக வந்தது.
“பேராசிரியர் கவனத்துக்கு நீங்கள் மேற்கோள் காட்டியுள்ள வரிகள் என்னுடையவை. பெரியாருடைய பேச்சுக்கள் எழத்துக்கள் மேலும் நான் படித்த பல்வேறு புத்தகங்கள் வரியிலாக நான் உணர்ந்தவை. இதனை தாங்களின் முட்டாளின் கருத்து என்று சொல்லி ஒதுக்கி விடலாம். ஆனால் ஆதாரம் கேட்க முடியாது. இராகுல சாங்கிருத்தியாயன் மார்க்சு இப்படி யாருமே முறையாக ஆய்வு செய்தவர்கள் இல்லையென்று தாங்கள் கருதும்போது கற்காலம் பற்றிய புரிதலுக்கு யாரால் ஆதாரம் தர முடியும்.”
சாங்கிருத்தியாயன், மார்க்சு போன்றவர்களின் ஆய்வுகள் எல்லாம் முடிந்த முடிவுகளாகக் கருதிப் பயணிப்பதானது வழிபாட்டுப் போக்காகும். பின் வந்தவர்களால் எந்த அளவுக்கு மறுஆய்வுக்கு உள்ளாகி, என்னென்ன உண்மைகள் வெளிப்பட்டு வருகின்றன?
உலகில் புதிதாக வெளிப்படும் ஆராய்ச்சிகளைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், அறிவுலகில் கோமாளியாக வெளிப்படும் வாய்ப்புள்ள திசையில், பெரியார் முகாம்களில் பயணிக்கிறார்களா?
என்ற கேள்வியை எழுப்பியுள்ள மேற்குறிப்பிட்டது போன்ற பல அனுபவங்களை, எனது பதிவுகளில் வெளிப்படுத்தியிருக்கிறேன்.
இது போன்ற அனுபவங்களுக்கிடையில், உலகில் புதிதாக வெளிப்படும் ஆராய்ச்சிகளின் அடிப்படைகளில், தமது நிலைப்பாடுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தி வரும் 'பெரியார்' ஆதரவாளர்களையும் நான் அறிவேன்.
'தமிழ், தமிழ் உணர்வு' கட்சித்தலைவர்கள், மருத்துவர், பொறியாளர், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பதவிகளில் இருந்த 'தமிழ், தமிழ் உணர்வு' ஆதரவாளர்கள் உள்ளிட்ட எவரின் பிள்ளைகளும்;
1965 முதல் இன்றுவரை தீக்குளிக்கவில்லை; படித்த காலத்தில் போராட்டங்களில் ஈடுபட்டு வாழ்க்கையைத் தொலைத்ததில்லை.
அவ்வாறு தமது பிள்ளைகளை எல்லாம் காவு கொடுத்த ஏமாளிப் பெற்றோர்களின் எண்ணிக்கையும் வேகமாக குறைந்து விட்டது.
தீக்குளித்தல் போன்ற உணர்ச்சிபூர்வ முட்டாள்த்தனங்களில் ஈடுபடாமல், தமது சமூக நேர்மையின் காரணமாக, அதிக இழப்புகளை சந்தித்தவர்களும் ஒப்பீட்டளவில், 'பெரியார்' ஆதரவாளர்களாக இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் அரசியல் ஆர்வமுள்ளவர்களில், ஒப்பீட்டளவில், செயல்பூர்வமாக அதிக சமூக நேர்மையுடன் வாழ்பவர்கள் 'பெரியார்' ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். இது எனது அறிவு மற்றும் அனுபவம் அடிப்படையிலான புரிதல் ஆகும்.
எனவே 'பெரியார்' முகாம்களில், உலகில் புதிதாக வெளிப்படும் ஆராய்ச்சிகளைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், அறிவுலகில் கோமாளியாகும் போக்கில் பயணிப்பவர்களிடமிருந்து;
உலகில் புதிதாக வெளிப்படும் ஆராய்ச்சிகளின் அடிப்படைகளில், தமது நிலைப்பாடுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தி வரும் 'பெரியார்' ஆதரவாளர்கள் பிரியும், சமூக தள விளைவு
(Social Polarization) பிரிதல் என்பதானது, தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு பங்களிக்கும்;
என்பதும் எனது ஆய்வு முடிவாகும். கூடுதலாக, 'பெரியார்' சிறையில் இருந்து ஈ.வெ.ரா விடுதலை ஆகி, அதன் தொடர்விளைவாக, 'பெரியார்' முகமூடி பொதுவாழ்வு வியாபாரிகளின் ஆட்டங்களும் அடங்கும்.
அரைகுறை அறிவுடன் தம்மை அதிபுத்திசாலியாகக் கருதிகொண்டு, அபத்தமான வாதங்களை முன்வைத்தவர்களின் எழுத்துக்களும் பேச்சுக்களும் இணையத்தில் தடயங்களாக வலம் வருகின்றன. தமிழ்நாட்டில் சமூகப்புழுதிகள் அடங்கி, புலமை மீட்சி அரங்கேறிய பின்னர், முன்னெடுக்கப்படும் ஆய்வுகளுக்கு அந்த தடயங்கள் உதவும்.
அரைகுறை அறிவுடன் தம்மை அதிபுத்திசாலியாகக் கருதிகொண்டு, அபத்தமான வாதங்களை முன்வைத்தவர்களின் எழுத்துக்களும் பேச்சுக்களும் இணையத்தில் தடயங்களாக வலம் வருகின்றன. தமிழ்நாட்டில் சமூகப்புழுதிகள் அடங்கி, புலமை மீட்சி அரங்கேறிய பின்னர், முன்னெடுக்கப்படும் ஆய்வுகளுக்கு அந்த தடயங்கள் உதவும்.
ஈ.வெ.ரா அவர்களின் தமிழ் மற்றும் ‘ஆரிய – திராவிட’ நிலைப்பாடுகள் தொடர்பாக, உலகில் புதிதாக வெளிப்படும் ஆராய்ச்சிகளின் அடிப்படைகளில், 'தமிழ்த்தேசியம்' மற்றும் இந்துத்வா ஆதரவு முகாம்களில் இருந்து வெளிப்படும் கேள்விகளுக்கு, 'பெரியார்' ஆதரவு முகாம்களில் இருந்து அறிவுபூர்வமான மறுப்புகள் வெளிவந்துள்ளனவா? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து உண்மையை உணரலாம்.
மேற்குறிப்பிட்ட சமூகதளவிளைவு பிரிதல் மூலமாக, மேற்குறிப்பிட்ட விவாதங்கள் எல்லாம், தமிழின் தமிழ்நாட்டின் மீட்சிக்கு உதவும் ஆக்கபூர்வ திசையில் பயணிக்க வாய்ப்புண்டு.
எதிர்நிலைப்பாடுகளில் உள்ளவர்களை எல்லாம், எதிரிகளாக அணுகுவது 'செனோபோபியா'
(https://en.wikipedia.org/wiki/Xenophobia) மனநோய்க்கு இட்டுச் சென்று விடும்.
தமிழின் உண்மையான வளர்ச்சியை விரும்புபவர்கள் எல்லாம்;
'இந்துத்வா ஆதரவு' மற்றும் 'இந்துத்வா எதிர்ப்பு முகாம்களில்' பயணித்தாலும்;
அவர்களில் அகச்சீரழிவின்றி, சுயலாப கணக்கின்றி, பயணிப்பவர்கள் எல்லாம் குறைந்த பட்சம் தாய்மொழிவழிக்கல்வி கோரிக்கையிலாவது ஒன்று சேர்ந்து செயல்படவேண்டும்;
என்ற நோக்கில் நான் முயன்று வருகிறேன்:
அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவித்தும், உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியலை எதிர்த்தும்.
தமிழ், தமிழ் இசை தொடர்பான ஆய்வுகளின் தரத்தை உயர்த்துவது மட்டுமே மேற்சொன்ன முயற்சிகளின் இலக்கு அல்ல. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத, உலகில் வேறு எங்கும் காண முடியாத, தனித்துவமான அடையாளச் சிக்கலில் பயணித்துவரும் தமிழ்நாட்டை, அந்த சிக்கலில் இருந்து எவ்வாறு மீட்பது? என்பதை கூட்டு முயற்சியின் மூலமாகவே தீர்க்க முடியும்.
தமிழ்நாட்டில் உள்ள அடையாளச்சிக்கலை சரியாக அடையாளம் கண்டு தீர்ப்பதன் மூலமாகவே;
சமூக விபச்சாரிகளையும், அவர்களுக்கு உதவி வரும் சமூக மைனர்களையும் சமரசமின்றி எதிர்க்கும் போக்கு தமிழ்நாட்டில் வலிமை பெறும்.
அந்த திசையில் சமரசமின்றி பயணிக்கும் கட்சியாக, இன்றுள்ள கட்சிகளில் விழித்துக்கொள்ளும் கட்சியோ, அல்லது புதிய கட்சியோ பொது அரங்கில் வெளிப்படும்.
தமிழ்நாட்டில் ‘நம்மிடம் உள்ள குறைகளை வெளிப்படுத்தி வெற்றிகொள்வதற்குப் பதிலாக, ஏன் மறைக்க வேண்டும்? (Why hide deficiencies instead of overcoming
them?)”;
என்ற திசையில் பயணிப்பவர்களின் கூட்டு முயற்சியில், அது நிச்சயமாக சாத்தியமாகும்.
குறுகிய அரசியல் லாபத்திற்காக, தேசியக்கட்சிகள் எல்லாம், சரியான தேசக்கட்டுமானத் (Nation
Building) திசையில் மென்சக்தியை (Soft
Power) வளர்க்காமல், வன்சக்தியின் (Hard
Power) வலிமையையே நம்பி ஆட்சி செய்வதானது, இந்தியாவை சோவியத் நாடு பாணியில் எதிர்காலத்தில் சிதறும் திசையிலேயே பயணிக்கச் செய்யும்.
இந்தியாவில் சரியான தேசக்கட்டுமானத்திற்கான 'திறவுகோல்' உருவாவதற்கான சாத்தியத்திற்கான சிக்னல்கள்' தமிழ்நாட்டில் வெளிப்பட்டு வருகின்றன.
'தமிழர்' என்ற அடையாள நோக்கிலும், 'இந்தியர்' என்ற அடையாள நோக்கிலும், சரியான தேசக்கட்டுமான சமூக செயல்நுட்பத்தை கண்டுபிடித்து, இந்தியாவில் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர்களின் பார்வைக்கு கொண்டு சென்று;
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியாவில் உள்ள மக்கள் படும் தவிர்க்கக்கூடிய துயரங்களில் இருந்து விடுதலை பெறுவதுடன்;
வெளிநாட்டு, உள்நாட்டு சூழ்ச்சி வலைகளில் இருந்து இந்தியாவை மீட்டு வளரச் செய்வதற்கு, அம்முயற்சிகள் உதவும்.
No comments:
Post a Comment