Tuesday, March 31, 2015


‘தந்தி’ தொலைக்காட்சி:  கி.வீரமணி பேட்டி 

சமூக பொறுப்புடன் விவாதிக்க வேண்டுமல்லவா?


நான் மிகவும் மதிக்கின்ற நண்பர் வலியுறுத்தியதின் பேரில், 29.03.2015 மாலை 'தந்தி' தொலைக்காட்சியில்,‘ கேள்விக்கென்ன பதில்?’ நிகழ்ச்சியில், தலைமை செய்தியாசிரியர் ரங்கராஜ் பாண்டே அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களைப் பேட்டி கண்ட நிகழ்ச்சியைப் பார்த்தேன்.

ஏற்கனவே உணர்வுமய போக்கில் பயணிக்கும் தமிழ்நாட்டில்,  விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்துள்ள வகையில், சமூக பொறுப்பில்லாமல், 'தந்தி' தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சி அமைந்து விட்டதா? என்ற கவலை காரணமாக, இந்த பதிவிற்கு நான் நேரம் செலவிட நேர்ந்தது.

இந்த பதிவிற்காக மீண்டும் அந்த நிகழ்ச்சியை இணையத்தில் பார்த்தேன். https://www.youtube.com/watch?v=bU0H077e4DA

“ பாம்பையும் பார்ப்பானையும் கண்டால்,பாம்பை விட்டு விடு, பார்ப்பானை அடி” என்றார் பெரியார்,” என்ற கேள்விக்கு, அது 'வடநாட்டில இருக்குற ஒரு புராவெர்ப்'(பழமொழி)”  என்று கி.வீரமணி பதில் சொல்கிறார்.

"விடுதலையிலும், உண்மையிலும் ஒரு நாள் கூட கோட் பண்ணினதில்ல?" என்ற கேள்விக்கு,

விடுதலையிலும், உண்மையிலும் காட்டிட்டா, நான் இந்த பொறுப்பை விட்டு விலகிடறேன்." என்று பதில் சொல்கிறார் கி.வீரமணி.

அதற்கு கீழ் வரும் ஆதாரங்களை அந்நிகழ்ச்சியில் காட்டி வாசித்தார்கள். 

'பார்ப்பனன் இந்நாட்டினின்று விரட்டப்பட வேண்டும்." பெரியார் விடுதலை 29.01.1954

கடவுளை ஒழிக்க வேண்டுமானால், பார்ப்பானை ஒழிக்க வேண்டும். பெரியார் விடுதலை 19.10.1958

பாம்பையும் பார்ப்பானையும் கண்டால்,பாம்பை விட்டு விடு, பார்ப்பானை அடி என்றார் பெரியார். நூல்:‍ இந்துத்வாவின் படையெடுப்பு 

கி.வீரமணி குறிப்பிட்ட 'விடுதலை', 'உண்மை' ஆதாரங்களை விடுத்து, நூலாசிரியர் யார் என்று தெரிவிக்காமல், 'இந்துத்வாவின் படையெடுப்பு' என்ற ஆதாரத்தை ஒளிபரப்பியது சரியா? அதற்கு தொடர்பில்லாமல், பிராமண எதிர்ப்பு பற்றிய ஆதாரங்களை ஒளிபரப்பியது சரியா? நிகழ்ச்சி தொடர்பாக, அவர்கள் குறிப்பிட்ட வே.ஆனைமுத்துவின் தொகுப்பில், பெரியார் பிராமணர்கள் அமைப்பில் உரையாற்றியதும் உள்ளதே. அதை மறைத்து, சம்பந்தமில்லாமல் பிராமண எதிர்ப்பு பற்றிய ஆதாரங்களை ஒளிபரப்பியது, இதழியல் நேர்மையாகுமா? அது மட்டுமல்ல, அந்த பழமொழி வடநாட்டு பழமொழியென்றால், எப்போது தமிழ்நாட்டிற்கு இறக்குமதியானது? என்ற கேள்விகள் எழுவதையும் மேற்குறிப்பிட்டது தடுத்ததாகாதா?

அடுத்து அந்த நிகழ்ச்சியில் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய பகுதி வருமாறு;

 “திராவிடர்க் கழகத் தொண்டர்கள் பல இடங்களில் பூணூல் அறுப்பு,  குடுமி அறுப்பு செய்தவர்கள்” - ரங்கராஜ் பாண்டே

கி.வீரமணி சரியாக தெளிவுபடுத்தியது போல், தமிழ்நாட்டில் இது வரை எங்கும் 'குடுமி அறுப்பு' சம்பவம் நடைபெற்றதில்லை. 'பூணூல் அறுப்பு' சம்பவங்களும், திராவிடர் கழகம் தோன்றுவதற்கு முன் தமிழ்நாட்டில் அதிகம் நடந்து வந்தன, தி.க உருவானபின் குறைந்திருப்பதாக பெரியார் பட்டுக்கோட்டை சொற்பொழிவில் குறிப்பிட்டதை, அந்த பேச்சு ஒலிநாடாவில் நான் கேட்டிருக்கிறேன். பிராமண எதிர்ப்பு பற்றிய வரலாற்று சான்றுகளின் அடிப்படையில் (கீழேக் குறிப்பிடப்படவுள்ள‌) , அதற்கான சமூகக் காரணங்கள் களையப்படாதது வரை, தி.க மறைந்தாலும், பிராமண எதிர்ப்பு மறையாது என்பதற்கு எனது அனுபவங்களில் ஒன்றைக் குறிப்பிடுகிறேன்.

எனது முனைவர் பட்ட ஆராய்ச்சியில் இசைத்துறைக்கு ஒரு நெறியாளரும்(guide) , இயற்பியல்(Physics)  துறைக்கு ஒரு நெறியாளரும் இருந்தனர். இயற்பியல் துறை நெறியாளர் எனது நண்பராகவும்,மிகவும் மதிக்கத்தக்க வகையில் முன்னுதாரணமாக வாழ்ந்து வருபவருமான ஒரு பிராமண பேராசிரியர் ஆவார். அவர் மிகவும் மதிக்கும், இன்னொரு பிராமணரல்லாத பேராசிரியர், - தி.கவிற்கு எந்த சம்பந்தமும் இல்லாதவர், பற்றி அவர் தெரிவித்த தகவல் என்னால் மறக்க முடியாததாக அமைந்தது.

அந்த‌ பிராமணரல்லாத பேராசிரியர் கல்லூரிகளில், பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில், ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொண்ட காலத்தில் 'பிராமணரல்லாதார்' என்ற அடிப்படையில் பிராமணப் பேராசிரியர்களிடம் நிறைய கொடுமைகள் அனுபவித்து, மனம் தளராமல் உழைத்து முனைவர் பட்டம் பெற்று, அந்த துறையில் நிபுண‌ரானார். தன்னிடம் முனைவர் பட்டம் பெற, பிராமண‌ரல்லாதாரை மட்டுமே ஆய்வு மாணவர்களாக எடுத்தார். தனது நண்பரான பிராமணப் பேராசிரியரிடமே நன்கு படிக்கும் பிராமணரல்லாத மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, தன்னிடம் அனுப்பி வைக்குமாறு கோரியிருக்கிறார். அதை என்னிடம் தெரிவித்த அந்த பிராமணப் பேராசிரியர், அதற்காக அவர் மீது குறை சொல்லவில்லை.

பிராமண‌ர்களிடம் பாரபட்சத்தை அனுபவித்த ஒரு பிராமணரல்லாத பேராசிரியர் வெளிப்படையாக, ஆக்கபுர்வமாக பிராமண‌ரல்லாதார் வளர்ச்சிக்கு உதவினார் , தனது பிராமண நண்பர்களே அதை குறை சொல்லாத வகையில்.

அதிகம் படிக்காத, அடிமட்டத்தில் வாழ்பவர்களே பூணூல் அறுப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். அந்த சம்பவங்களும், தி.க தோன்றுவதற்கு முன் அதிகம் இருந்து, தி.க வின் செயல்பாடுகள் வடிகாலாக இருந்ததால், அச்சம்பவங்கள் குறைந்தன.. ராஜாஜி முதல்வராக இருந்தபோது, கும்பகோணத்தில், பெரியார் தலைமையில் ஊர்வலம் நடந்தபோது, இராமர் உள்ளிட்ட கடவுளர் சிலைகளை அடித்த நிகழ்ச்சி நடந்தது.  அதைப் பற்றி முதல்வர் ராஜாஜி கண்டுகொள்ளவில்லை. 1970களில் சேலத்தில் அது போன்ற ஊர்வலம் நடைபெற்று, பெரும் கண்டனங்கள் வெளிப்பட்ட சூழலில், திருச்சி தேசியக் கல்லூரி பிராமண‌ மாணவர்கள் ஊர்வலமாக சென்று, பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்த பின்னும், பூணூல் அறுப்பு சம்பவங்கள் நடைபெறவில்லை, தி.மு.க ஆட்சிக்கு ஊறு நேரக்கூடாது என்பதற்காக. பெரியார் மறைந்து, வடநாட்டு 'ராம லீலாவிற்கு' எதிராக, மணியம்மை தலைமையில், சென்னை பெரியார் திடலில் 'இராவண லீலா' நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, காவல் துறை பாதுகாப்புடன் பெரியார் திடல் வாயிலுக்கு எதிரே, தனது ஆதரவாளர்களுடன், பிராமண எழுத்தாளர் 'தீபம்' பார்த்தசாரதி, கைகளில் பெரியார் படத்தை ஏந்தி, செருப்பால் அடித்த போராட்டம் நடத்தினார். அப்போதும் பூணூல் அறுப்பு சம்பவங்கள் நடைபெறவில்லை, தி.மு.க ஆட்சிக்கு ஊறு நேரக்கூடாது என்பதற்காக.

பின் எம்.ஜி.ஆர் ஆட்சியில் பிராமண சங்கம் செயல்பட்ட வேகத்தில், பூணூல் அறுப்பு சம்பவ‌ங்களும் 'திடீரென' அதிகரித்தன. அந்த காலக்கட்டத்தில் தஞ்சை சரபோசி கல்லூரியில், பெரியார் படத்தை பிராமண மாணவர்கள் உடைத்தனர். அதைக் கேள்விப்பட்ட பெரியார் தொண்டர்கள் கல்லூரிக்குள் நுழைந்து, ஒவ்வொரு வகுப்பாக சென்று, பூணூலை வைத்து அடையாளம் கண்டு, - சில பிராமண மாணவர்கள் செய்த தவறுக்காக- பல அப்பாவி பிராமண மாணவர்களை அடித்தனர்.

பின் தமிழ்நாட்டில் , பிராமண சங்க செயல்பாடுகள் குறைய, பூணூல் அறுப்பு சம்பவங்களும் குறைந்தன.

தமிழ்நாட்டில் சாதி, மத மோதல்கள் இன்றி சமூக நல்லிணக்கம் வளர்ந்தால்தான், தமிழும், தமிழர்களும்,  தமிழ்நாடும், வீழ்ச்சியிலிருந்து மீண்டு வளரமுடியும் என்பது என் கருத்து. அந்த சமூக நல்லிணக்கத்திற்கு மற்றவர்களை விட, பிராமணர்களே மிகுந்த சமூகப் பொறுப்புடன் பங்களிப்பு வழங்க வேண்டும் என்ற விவேகானந்தரின் அறிவுரை இன்று அவசியம் பின்பற்ற வேண்டியதாகும். மாறாக உணர்வுபூர்வ போக்கில் வசதியான பிராமணர்கள் ஊடகத்திலும், இணையத்திலும் வெளியிடும் 'வன்முறை'க் கருத்துக்களால், அடிமட்டத்தில் வாழும் அப்பாவி பிராமணர்களுக்கே ஆபத்து ஏற்படும் என்பது மேலே குறிப்பிட்ட‌ வரலாறு உணர்த்தும் பாடமாகும்.

அந்த நல்லிணக்க வளர்ச்சிக்கு மேற்குறிப்பிட்ட 'தந்தி' தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஊறு விளைவிக்குமோ? என்ற கவலையும் எனக்குண்டு. 

தமிழ்நாட்டில் செல்வம்,செல்வாக்குடன் உள்ள பிராமணர்களின் பூணூலை எவரும் இது வரை அறுத்ததில்லை. பிராமணர்கள் மட்டுமின்றி, செல்வம்  செல்வாக்குடன் உள்ள மற்றவர்களும், சாதி, மதக் கலவரங்களில் பாதிக்கப்படுவதில்லை.

பிராமணராயிருந்தாலும், பிராமணரல்லதாராயிருந்தாலும் அடிமட்டத்தில் உள்ளவர்களே பூணூல் அறுப்பு, மற்றும்  சாதி, மத கலவரங்களில் எதிரெதிர் பக்கங்களில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதை உண்மையில் உணர்ந்து, சமூகத்தில் வன்முறைக்கான வாய்ப்புகளை அதிகம் குறைத்தவர் பெரியார். பொது மக்களுக்கும், பொதுச் சொத்துக்கும் பாதிப்பு அற்ற போராட்டங்களையே அவர் மேற்கொண்டார். 'தந்தி' தொலைக்காட்சி நிகழ்ச்சி குறிப்பிட்ட ஆனைமுத்துவின் தொகுப்பில் பிராமணர் அமைப்பில் பெரியார் ஆற்றிய உரையும் வெளிவந்துள்ளது. பெரியாரின் பிராமண  எதிர்ப்பு பற்றிய சரியான புரிதலுக்கு அதைப் படிப்பது உதவும்.

வன்முறைக்கான வாய்ப்புகளைக் குறைக்க, அந்த அடிமட்ட மக்களுக்கு 'உணர்ச்சி வடிகாலாக' அவர் வெளிப்படுத்திய உரைகளை, முன்னும் பின்னுமின்றி மேற்கோளாகக் காட்டுவது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு மேற்குறிப்பிட்ட 'தந்தி' தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒரு மோசமான முன்னுதாரணமாகிவிடக் கூடாது என்பது என் கவலையாகும். காந்தி, அம்பேத்கார், அண்ணாதுரை உள்ளிட்டு ஏறத்தாழ பெரும்பாலான தலைவர்களை பெரியார் கண்டித்திருக்கிறார். அவர்களையே பாராட்டியுமிருக்கிறார். எதற்காகக் கண்டித்தார்? பின்  எதற்காக அவர்களைப் பாராட்டினார்? என்ற பின்புலத்தை (context)  நீக்கி, அந்த கண்டனங்களை மேற்கோளாகக் காட்டுவது சமூகப் பொறுப்பின்மை ஆகாதா?

அடுத்து கீழ்வரும் கேள்விக்கு, எளிதில் பதில் சொல்லக்கூடிய கி.வீரமணி, ஏன் 'அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதை,' அதற்குப் பதிலாகச் சொன்னார் என்று தெரியவில்லை. நிகழ்ச்சி எடிட்டிங்கில் நீக்கப்பட்டதா? அல்லது கட்சி, மற்ற சுமைகள் காரணமாகவும், அவரது வயதை ஒத்தவர்களுக்கு வரும் மறதி காரணமாகவும் நிகழ்ந்ததா? என்பதும் தெரியவில்லை.

வைக்கம் போராட்டத்தைக் குறிப்பிட்டு, “அதே நேரத்தில தமிழகத்தில ஆயிரக்கணக்கான கோவில்களில் வந்து, தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய முடியாமல் இருந்த போது, ஏன் தமிழ்நாட்டில் ஒரு கோயில்களில் கூட போராட்டம் நடத்தவில்லை?”-  ரங்கராஜ் பாண்டே

மேலேக் குறிப்பிட்ட கேள்வியில் வைக்கம் போராட்ட முடிவில் கோவில் நுழைவு உரிமைப் பெறப்படவில்லை என்பதும், கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடக்கும் உரிமை மட்டுமே பெறப்பட்டது என்பதும், அது நடந்த வருடம் 1924 என்பதும், அதே நேரத்தில தி.க என்ற கட்சியே கிடையாது என்பதும், , அப்போது பெரியார் காங்கிரசில் இருந்தார் என்பதும், திராவிடர் கழகம் உருவானது 1944 என்பதும் தெளிவுபடுத்தப்படாமல், கேட்கப்பட்ட கேள்வியாகும்.( வைக்கம் போராட்டம் பற்றிய குறிப்பு கீழே )

எனது முயற்சியில், 'குடி அரசு' இதழ்களை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாட்டில் எங்கெங்கு தீண்டாமையைக் கண்டித்து போராட்டங்கள் நடந்தன, அதில் பெரியாரும், பெரியார் தொண்டர்களும் எத்தகைய ஆதரவு வழங்கினார்கள் என்பதையும் தொகுத்து, 1980களில் புதுக்கோட்டை பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கி.வீரமணி வெளியிட்ட புத்தகம் உள்ளது. அது போன்று பல வெளிவந்துள்ளன. அவற்றை நிகழ்ச்சியில் சில நொடிக்ளாவது 'தந்தி' தொலைக்காட்சியில் காட்டாமல் விட்டது ஏன்?

உண்மையை அறியும் ஆர்வத்தில், 'தீண்டாமையை' எதிர்த்து பெரியாரும், பெரியார் தொண்டர்களும் என்ன செய்தார்கள்? என்று கேட்பது சரியே. அது போல, 'தமிழ்த் தேசியம்' பேசியவர்களை/ பேசுபவர்களை நோக்கி கேள்விகள் எழுப்பியதுண்டா? 'தேவேந்திர குலம்' என்று கூறும் பள்ளர் சாதியைச் சேர்ந்த தலைவர்கள், பறையரையும், சக்கிலியரையும், 'சமத்துவமாக' தமது சாதியினர் நடத்த முயற்சித்ததுண்டா?  பறையர், பள்ளர் சாதிகளைச் சேர்ந்த தலைவர்கள், சக்கிலியரை, 'சமத்துவமாக' தமது சாதியினர் நடத்த முயற்சித்ததுண்டா? போன்ற கேள்விகளை எழுப்பி, உரிய சான்றுகளுடன் உண்மைகள் வெளிவருவது ஆக்கபூர்வமான செயலாக அமையும். பொதுவாக, தமிழ்நாட்டில், பிறரைக் குறை சொல்லும் முன், பொதுவாழ்வு வியாபாரத்தில் ஈடுபடாத, சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரும் தமது மனசாட்சிக்குட்பட்டு, தம்மை சுயவிமர்சனம் செய்து கொள்வது நல்லது என்பது என் கருத்து. 

அதே போல், 'கடவுள் இல்லை' என்ற முழக்கத்தை முன்வைத்த போது, இந்து, முஸ்லீம், கிறித்துவ மதங்களின் முக்கிய பிரதிநிதிகள் திருச்சி பெரியார் மாளிகையில் பெரியாரைச் சந்தித்து, தங்கள் மனம் புண்படுவதாக வருத்தம் தெரிவித்தனர். அதற்கு அவர்களிடம், 'நீங்கள் ஒவ்வொருவரும் மற்றவரின் கடவுளை இல்லையென்பதால், உங்களின் மனம் புண்படாத போது, நான் கடவுள் இல்லை என்று சொல்வதால், உங்கள் மனம் புண்படுகிறது என்பது சரியா?' என்ற வகையில் விளக்கம் அளித்து, அவர்களை அனுப்பிய செய்தி வெளிவந்துள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக 'பிராமணர்' என்ற சொல்லின் கீழ் இன்று சில குறிப்பிட்ட சாதிகள் அடையாளப்படுத்தப்படுவது என்பது காலனி ஆட்சிக்கு முன், தமிழில் இருந்ததற்கு சான்றுகள் உண்டா? வருண அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வந்த அந்த சொல், இன்றுள்ள சாதிகளை உள்ளடக்கி, காலனி ஆட்சிக்கு முன் தமிழில் இருந்ததற்கு சான்றுகள் உண்டா? சங்க இலக்கியங்களில் பிராமணன் என்ற சொல் இல்லை. சங்க இலக்கியங்களில் வரும் 'பார்ப்பான்' 'பார்ப்பார்' 'பறையன்' ஆகிய சொற்கள் இன்றுள்ள சாதிகளைக் குறிக்குமா? 'பறையன்' என்ற சொல் சங்க இலக்கியங்களில் சாதியைக் குறித்த சொல் அல்ல என்றும், விவசாயம், மீன்பிடித்தல் உள்ளிட்டு பல தொழில்களில் ஈடுபட்டோரெல்லாம் , பறை வகை இசைக் கருவிகளை இசைத்ததால், பறையன் என்று அழைக்கப்பட்டனர் என்றும்,, இசையில் உயர்வு, தாழ்வு, தீண்டாமை போன்றவை காலனியத்தின் நன்கொடையா? என்ற கேள்வியை எழுப்பும் சான்றுகளையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். ( இசையில் ' தீண்டாமை காலனியத்தின் ‘நன்கொடை’யா?; http://tamilsdirection.blogspot.sg/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html )

சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட 'பார்ப்பான், பார்ப்பார்'ஆகிய சொற்கள் வேள்வி செய்தவர்கள் (அன்று இன்றுள்ளது போல் கோவில் வழிபாடு கிடையாது) என்பதற்கும் அவர்களை அரசர்கள் ஆதரித்ததற்கும், மனம் நோகச் செய்ததற்கும் சான்றுகள் உண்டு. பின் குறிப்பிட்டதற்கான‌  சான்று கீழே உள்ளது.

' ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம்

   பார்ப்பார் நோவன செய்யலர்; மற்று இது

நீர்த்தோ நினக்கு?' என வெறுப்பக் கூறி

புறநானூறு 43: 13 15

இது போன்ற செய்தி பூலாங்குறிச்சி கல்வெட்டிலும் இருப்பதாக ஒரு கல்வெட்டு ஆராய்ச்சியாளர் என்னிடம் தெரிவித்தார்.

அதே போல், காலனியத்திற்கு முன் தமிழ்நாட்டில் கல்வியறிவு அதிகம் பெற்றவர்களாக 'கம்மாளர்' என்ற இன்றைய 'விஸ்வகர்மா' சாதிகள் இருந்ததையும், கல்வியிலும் போர்ப் பயிற்சியிலும் சிறந்து விளங்கிய பிராமணர்கள் அமைச்சர்களாயிருந்து, சோழ வாரிசு பட்டத்துரிமையில் சூழ்ச்சிகள் செய்ததால், முடி சூட்டியபின் ராஜராஜ சோழன் மேற்கொண்ட முதல் படையெடுப்பின் மூலம், அந்த பிராமணர்கள் பயிற்சி பெற்ற 'பல்கலைக்கழகம்' போன்ற, கேரள எல்லையில் இருந்த யாகசாலையை அழித்ததையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். காலனி ஆட்சியில்தான் கல்வியிலும், அரசு வேலைகளிலும் பிராமணர்கள் 'செல்வாக்கான இடத்தை'ப் பிடித்தார்கள். தமிழில் 'பிராமணர்' என்ற சொல்லும், 'பிராமண எதிர்ப்பும்' அதன்பின் அறிமுகமாகியிருந்தால் வியப்பில்லை. 

இந்த பேட்டி தொடர்பாக இணையத்தில் வெளிவரும் கருத்துக்களில் உள்ள‌ உணர்வுபூர்வ ஆதிக்கம் இன்னும் கவலையளிக்கிறது. திரு.ரங்கராஜ் பாண்டே கேட்ட கேள்விகள் அனைத்தும் பொது அரங்கில் வெளிப்படுபவை இல்லையா? அவர்களின் நேர்க்காணல்களை ஆராய்ந்து, அவர் வீரமணியிடம் மட்டுமே நெருக்கடியான கேள்விகளை கேட்டார் என்று எவராவது நிறுவியுள்ளார்களா? அவர் பெயர் 'பாண்டே' என்பது பற்றி விசாரித்து, ஆர்.எஸ்.எஸ் சார்பாக கேள்விகள் கேட்டார் என்று குற்றம் சுமத்தலாமா? ஒரு மனிதர் உண்மையானவரா? நேர்மையானவரா? என்று ஆராயாமல், ஆர்.எஸ்.எஸ் என்றால் மோசமானவர் என்றும், பெரியார் கொள்கையாளர் என்றால் விரும்பத்தகுந்தவர் என்றும் அணுகுவது மிகவும் ஆபத்தானது என்பது என் அனுபவமாகும். (https://tamilsdirection.blogspot.com/2015/04/2.html) 

இன்று தமிழ்நாட்டில் யார் யார் எந்தெந்த தகுதி திறமைகளின் அடிப்படைகளில் எங்கெங்கு செல்வாக்கு செலுத்தி வருகிறார்கள்? அந்த 'செல்வாக்குகளுக்கும்', தமிழ்வழியின் மரணப்பயணத்திற்கும், தமிழ்நாட்டின் நிலத்தடி நீர் ஆதாரங்களாகிய ஏரிகள், குளங்கள், காடுகள் மட்டுமின்றி, இயற்கைக் கனிவளங்கள் சூறையாடப்படுவதற்கும் தொடர்பு உண்டா? அந்த சூறையாடலை எதிர்த்து, அந்த சூறையாடல்களின் பின்னணியில் இருந்த 'ஊழல் பேராசை' திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களை எதிர்த்து,  'தமிழ் உணர்வு, தமிழ்த் தேசியம், பகுத்தறிவு,பார்ப்பன எதிர்ப்பு' ஆதரவாளர்கள் இதுவரை கண்டித்திருக்கிறர்களா? இனியாவது கண்டிப்பார்களா? இல்லையென்றால், அந்த சூறையாடலுக்கு துணையாக, மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் குற்றச்சாட்டுக்கு உள்ளாக மாட்டார்களா? தமிழ்நாட்டில் தமிழர்கள் அறிவு உழைப்பிலும், உடல் உழைப்பிலும் பதர்களாகி வருகிறார்களா? அந்த துறைகளில் வட மாநிலத்தவர் உள்ளிட்ட பிற மாநிலத்தவர் தமிழ்நாட்டில் வளர்ந்து வருகிறார்களா? தமிழ், பாரம்பரியம், பண்பாடு தொடர்பற்ற, திரிந்த மேற்கத்திய பண்பாட்டுடன் 'தமிங்கிலிசப் பதர்களாக' தமிழர்கள் வளர்ந்து வருகிறார்களா? அவை பற்றி கவலைப்படாமல்,  தமது குடும்பப் பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகளை, சுற்றுப்புற சூழலைப் பாதுகாக்கும் முயற்சிகள் யாருடைய நலன்களுக்காக? தமிழ்நாட்டில் அறிவு உழைப்பிலும், உடல் உழைப்பிலும் வளர்ந்து வரும் பிற மாநிலத்தவர் பலன் பெறவா? போன்ற கேள்விகளைப் பின் தள்ளி, உணர்வுமயமான பிராமண - பிராமணரல்லாதார் பகைமை வளர, மேலேக்குறிப்பிட்ட 'தந்தி' தொலைக்காட்சி போன்ற நிகழ்ச்சிகள் வழி வகுக்காதா? என்பது போன்ற கேள்விகள், தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீது 'சுயலாப' நோக்கின்றி கவலைப்படுபவர்கள் பரிசீலித்து, உரிய மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

வைக்கம் போராட்டம் பற்றிய குறிப்பு:

வைக்கம் போராட்டத்தின் வரலாறு, 1865இல் தொடங்குகிறது. திருவாங்கூர் அரசு வைக்கத்தில் அனைத்து பொது சாலைகளிலும் நடக்கலாம் என்ற அரசாணையானது, நீதி மன்ற தீர்ப்பு மூலம் வைக்கம் கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளுக்குப் பொருந்தாது என்று அமுலாகிறது. அதை எதிர்த்து ஈழவ இளைஞர்கள் நடத்திய போராட்டம் 'ஜாலியன்வாலாபாக் ' பாணியில் ஒடுக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர். பின் 1905லும், 1920லும் அப்போராட்டங்கள் தொடர்ந்தன. 1923இல்  காகிநாடாவில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் வைக்கம் போராட்டத்தை ஆதரிக்க முடிவு செய்யப்பட்டது. காங்கிரஸ் ஆதரவுடன் நடந்த அந்த போராட்டத்தில், காந்தி மேற்கொண்ட அணுகுமுறை போராட்டத்தைப் பலகீனப்படுத்தியது. காவல் துறையின் அடக்குமுறையை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்டதை காந்தி கண்டித்தார். இந்து அல்லாதவர்கள், போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது, பொருளுதவியும் செய்யக்கூடாது என்று காந்தி தடுத்தார். அதனால் போராட்டத்தில் பங்கேற்றிருந்த அகாலிக் கட்சியினர் விலக, போராட்டத் தலைவர்களில் ஒருவராக கைதாகியிருந்த‌ ஜார்ஜ் ஜோசப்பும் போராட்டத்தை விட்டு விலகி, போராட்டம் பிசுபிசுக்கும் நிலை ஏற்பட்டது. அந்த சூழலில் ஏற்கனவே தமிழ்நாட்டில் இது போன்ற சீர்திருத்தங்களில் ஈடுபட்டு புகழ் பெற்றிருந்த பெரியாருக்கு அழைப்பு வந்தது. திருவாங்கூர் அரசர் ஈரோட்டில் பெரியார் இல்லதிற்கு விருந்தினராக வந்தவர். வைக்கம் எல்லையில் தமக்கு தந்த அரச மரியாதையைப் புறக்கணித்து, பெரியார் தமது மனைவி நாகம்மையுடன் போராட்ட‌த்தில் ஈடுபட, போராட்டம் சூடு பிடித்தது. பெரியார் சிறையிலிருந்தபோது, அரசர் மரணமடைய, அதைக் கெட்ட சகுனமாகக் கருதி, பெரியாரை வைக்கத்திலிருந்து விடுதலை செய்து, மீண்டும் சென்னையில் சிறை வைத்தனர். கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் மட்டும் நடக்கும், (கோவில் நுழைவு உரிமையற்ற) சமாதானத்தை காந்தி ஏற்று, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் 'வைக்கம் வீரர்' என்று பெரியாருக்கு பட்டம் கொடுத்தது.




குறிப்பு 2: "இது தொடர்பாக, திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட மறுப்புகளை, குறுந்தகடு மூலம் தந்தி டிவிக்கு அனுப்பப்பட்டு, தந்தி டிவி, தொடர்ந்து அந்த உண்மை விவரங்களை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டிய ஒரு கட்டாயத்தை உண்டு பண்ணியுள்ளது. நேற்றும் இன்றும் பல முறை, திராவிடர் கழகத்தின் சார்பில் தரப்பட்ட விளக்கத்தை தந்தி டிவி தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது." 


 03 ஏப்ரல் 2015;http://www.viduthalai.in/readers-choice/115-2011-05-28-07-41-10/99006-2015-04-03-10-40-39.html

Also visit: ‘தந்தி’ தொலைக்காட்சி:  கி.வீரமணி பேட்டி (2); காலத்தின் 'நகைச்சுவையை' ரசிக்க;’
https://tamilsdirection.blogspot.com/2015/04/2.html

Sunday, March 29, 2015



 'இயல்பு' என்ற முதுகெலும்பு முறிந்த தமிழர்கள்


நிலையான காந்தம் ஒன்று அருகில் இருப்பதன் காரணமாக, அல்லது தூண்டப்பட்ட காந்தம் ஒன்று அருகில் இருப்பதன் காரணமாக,  ஒரு இடத்தில் காந்தப் புலம் உருவாகும். தூண்டப்பட்ட காந்தம் காரணம் எனில், சம்பந்தப்பட்ட மின்னோட்டத்தை நிறுத்தினால், தூண்டப்பட்ட காந்தப் பண்பு மறைந்து, காந்தப்புலமும் மறைந்து விடும். நிலையான காந்தம் காரணமாக‌ உண்டாகும் காந்தப்புலத்திற்கு அந்த ஆபத்தில்லை. 
 
தமிழ்ப் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் துண்டித்து, திரிந்த மேற்கத்தியப் பண்பாட்டுடன், ஆங்கிலவழிக் கல்வியில் தமிழ்நாட்டில் பெரும்பாலான குழந்தைகள் படித்து வரும் சூழலில், 'தமிழ், தமிழுணர்வு' என்று பொது அரங்கில் வெளிப்படுபவை எல்லாம், தூண்டப்பட்ட காந்தம் மூலம் உருவான காந்தப்புலம் போன்றதே ஆகும். தூண்டபட்ட காந்தமாக செயல்படும் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் 'கிடைத்து வரும்' பணமும் ஆதரவும் வற்றும்போது, அவர்களால் தூண்டப்பட்ட காந்தப்புலம் போன்ற‌, தமிழ், தமிழ் உணர்வும், வற்றிவிடும்.

அதிலும் தமது குடும்பப் பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்துக் கொண்டு, 'தமிழ், தமிழ் உணர்வு' தூண்டி வரும் கட்சிகளும், தலைவர்களும், இயல்பான நிலையான தமிழ், தமிழ் உணர்வு காந்த‌த்தையும் பலகீனப்படுத்தி வருபவர்கள் ஆவர்.

'இயல்பு' என்ற சொல் சங்க இலக்கியங்களில் ஆழமான பொருளில் பயன்படுத்தப்பட்ட சொல் ஆகும்.  உதாரணத்திற்காக சில சான்றுகள்;

1.     மரபுடன் தொடர்புடைய இயல்பு பற்றி;
'மரபின் தன் இயல் வழா அது,' - புறநானூறு25:2

2.    ஒரு நாட்டின் நல்லாட்சிக்கான இலக்கணத்தின் தொடர்பில்;
 'இயல்பு உளி கோலோச்சு மன்னவன் நாட்ட' - திருக்குறள் 545

3.    ஒரு மனிதர் வாழ்வுடன் உள்ள தொடர்பில்;
'இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன்' - திருக்குறள் 47

ஒரு மனிதரின் வாழ்க்கையானது, எந்திர மனிதராக ‌-  'ரோபோ' (Robot)வாக-  இல்லாமல், பொருளுள்ள(meaningful) வாழ்வாக அமைய‌, தேவைப்படும் 'முதுகெலும்பு' போன்றது, 'இயல்பு' ஆகும்.

இயல்போடு ஒட்டி வாழும் மனிதர்கள் ஒரு சமூகத்தில் பெரும்பாலானவர்களாக‌ இருக்கும், ஒரு சமூகத்தில் வெளிப்படும் தாய்மொழிப் பற்று, பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்டவற்றின் வலிமையானது, ஒரு நிலையான காந்தம் காரணமாக உருவான காந்தப்புலம் போன்று நிலையாக இருக்கும்.

மாறாக, தமது இயல்பை மறந்து, சமூக ஒப்பிடு(Social Comparison)  நோயில் சிக்கி, ஒழுக்க மதிப்பீடுகளைத் துறந்து, தமக்கு வரும் செல்வம், செல்வாக்கை இறுகப் பற்றி, எந்திரர்களாக வாழும் மனிதர்கள் பெரும்பாலாக இருக்கும்,  ஒரு சமூகத்தில் வெளிப்படும் தாய்மொழிப் பற்று, பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்டவற்றின் வலிமையானது, ஒரு தூண்டப்பட்ட‌ காந்தம் காரணமாக உருவான காந்தப்புலம் போன்று, எப்போது வேண்டுமானலும் நிலை குலைந்து மறையும் ஆபத்தில் சிக்கி இருக்கும்.

'சீர்திருத்தம், புரட்சி' என்ற பேரில், தாய்மொழி தமிழ்ப்பற்றை 'தாய்ப்பால் பைத்தியம்' என்று கேலி செய்து, 'வீட்டு மொழியாக ஆங்கிலத்தைப் பயன்படுத்தி உருப்படலாம்' என்றும், தமிழ்ப் பாரம்பரியம், பண்பாடு போன்றவையெல்லாம் தமிழர்க்குக் கேடானவையென்றும் மேற்கொள்ளப்பட்ட 'திராவிட' பிரச்சார பின்னணியில், திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்னரே, ஆங்கில வழிக் கல்வி புற்றீசலாக வளர்ந்து தமிழ்நாட்டை அடிமைப் படுத்தியுள்ளதா?அந்த வளர்ச்சியின் ஊடே, திரிந்த மேற்கத்திய பண்பாட்டிலும், சமூக ஒப்பீடு நோயிலும் சிக்கியவர்களின் எண்ணிக்கையும் 'அதிவேகமாக' அதிகரித்துள்ளதா? ஒரு மனிதரின் இயல்புக்கும், அவரின் தாய்மொழிக்கும், அவர் வாழும் சமூகத்தின் பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றிற்கும் இடையிலான தொடர்பு பற்றிய புரிதலின்றி, அந்த தொடர்பில் இருந்த குறைபாடுகளை அடையாளம் கண்டு களைவதற்குப் பதிலாக, அத்தொடர்பையே நோயாகக் கருதி அகற்ற முனைந்து, பெரியார் ஈ.வெ.ரா மேற்கொண்ட 'சமூக சீர்திருத்தமானது,இயல்பு என்ற முதுகெலும்பு முறிந்த தமிழர்களின் வளர்ச்சிக்கும், அந்த பின்னணியில் திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களின் வளர்ச்சிக்கும் காரணமானதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

பொதுப் பிரச்சினைகளை வைத்து 'புதுப்பணக்காரர்' ஆகும் செயல்நுட்பம் தமிழ்நாட்டில் திராவிடக்கட்சி ஆட்சிகளில் அரங்கேறி, அதன் தொடர்ச்சியாக ' தமிழ், தமிழ் உணர்வு, பகுத்தறிவு, தலித், இந்துத்வா, இஸ்லாம், ஈழம், மனித உரிமை' உள்ளிட்டு அனைத்து பிரச்சினைகளிலும் 'அவரவர் தகுதி, திறமை' களுக்கு ஏற்ப,தமிழ்நாட்டில் 'வீரியமாக' வளர்ந்து வரும் புதுப்பணக்காரர்கள், பொது அரங்கில் 'எதிரெதிர்' நிலைப்பாடுகளில் இருந்தாலும், 'உள்மறையாக' 'பரிமாற்ற நட்புறவில்' வாழ்வியல் புத்திசாலிகளாக பயணிப்பது உண்மையா? அவர்கள் குடும்பப் பிள்ளைகள் எல்லாம் ஆங்கிலவழிக் கல்வியில், திரிந்த மேற்கத்திய பண்பாட்டில் வாழ்வதில் ஒற்றுமையாக உள்ளார்களா? அந்த போக்குகளுக்கும், தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் வீழ்ச்சிக்கும் தொடர்பு இருப்பது உண்மையா?

மரபுடன் தொடர்புடைய இயல்பு பற்றி புறநானூறு தெரிவித்தது;ஒரு நாட்டின் நல்லாட்சிக்கான இலக்கணத்தின் தொடர்பில் இயல்பு பற்றியும், ஒரு மனிதர் வாழ்வுடன் உள்ள தொடர்பில் இயல்பு பற்றியும் திருக்குறள் தெரிவித்தவை; ஆகிய இயல்பு என்ற முதுகெலும்பு முறிந்த தனி மனிதர்களின் 'செல்வாக்கில்' தமிழும், தமிழர்களும் வீழ்ச்சிப் பாதையில் பயணிக்கின்றனவா?

என்பது போன்ற ஆய்வுகளை விருப்பு, வெறுப்பின்றி, சமூகப் பொறுப்புடன் மேற்கொண்டால் தான், அந்த வீழ்ச்சியைத் தடுத்து, வளர்ச்சி நோக்கி திசை திருப்ப முடியும்.

ஒரு மனிதரின் இயல்பு என்பது அவர் வாழும் வாழ்க்கையில் வெளிப்படும். 

குறிப்பாக, மற்றவர் அவரின் இயல்பைப் பற்றி பற்றி தெரிந்து கொள்ள உதவும் 'எக்ஸ் ரே' (X Ray) கருவி போல,  அவர் மற்ற மனிதர்களுடன் உரையாடுவது பற்றிய 'காட்சி அறிவு'(observation)  உதவும். 

இரண்டு மனிதர்களுக்கிடையிலான உரையாடலின் தன்மையானது, அந்த இரண்டு மனிதர்களின் மனங்களில் உள்ள தேவைகளையும்(needs), ஈடுபாடுகளையும் (interests) , அவர்களுக்கிடையிலான உறவையும் பொறுத்ததாகும். ஒரு சமூகத்தில் உள்ள தனி மனிதர்களிடையே நடக்கும் உரையாடல்களின் பொதுவான‌ தன்மையானது, அந்த சமூகத்தின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சிப் போக்குகளைப் பிரதிபலிப்பதாக அமையும்.

சமூகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதரும் தமது இயல்பை உணர்ந்து, இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் (Passions)  வாழும் போது, அதற்கேற்ற தேவைகளும், ஈடுபாடுகளும் அவர்களின் மனங்களில் இடம் பெறுவதன் காரணமாக, அதற்கேற்ற வகையில் அத்தகைய மனிதர்களிடையே நடக்கும் உரையாடல்கள் அமையும்.

இன்னொருவருடன் உரையாடும்போது, அவர் செல்வம், செல்வாக்கில் உயர்ந்தவர் என்பதற்காக, அவரிடம் வாலாட்டாமல், அந்த உரையாடல்களில் வெளிப்படும் தவறுகளைச் சுட்டிக் காட்டி, இயல்பாக உரையாடுபவர்கள் எல்லாம், சமூகத்தில் 'இயல்பு' என்ற முதுகெலும்புடன் வாழ்பவர்கள் ஆவர். தாம் செல்வம், செல்வாக்கில் உயர்ந்தவர் என்பதால், மற்றவர் தம்மிடம் வாலாட்டி, தாம் சொல்பவற்றையெல்லாம் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்த்து வாழ்பவர்கள் எல்லாம், தமது இயல்பைத் தொலைத்து வாழும் மனநோயாளி எந்திரர்கள் ஆவர்.

தமிழ்நாட்டில் 'வாழ்வியல் புத்திசாலித்தனம்' என்று எண்ணி ஏமாற்றியும், அதே போக்கில் தமக்கு தெரியாமலேயே 'ஏமாந்தும்' வாழும் தமிழர்கள் 'அதிவேகமாக' அதிகரித்து வருகிறார்கள். 'ல‌ஞ்சம்' என்ற வலைப் பின்னலில் 'புத்திசாலி'த் தனமாக 'இணைந்து' தத்தம் வசதி, வாய்ப்புகளை 'அதிவேகமாக' வளர்த்து வரும் அந்த புத்திசாலிகளின் குடும்பங்களில் ஏற்படும் ( திருட்டு,கொலை, கொள்ளை, மோசடி, நோய்கள், மரணம் உள்ளிட்ட பல) இழப்புகளுக்கும்,  தமிழ்நாட்டில் 'லஞ்ச வலைப்பின்னலின்' வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பு பற்றிய புரிதல் இல்லாத முட்டாள்களாக அந்த 'புத்திசாலிகள்' வாழ்கிறார்கள்.

குற்ற உணர்வே இல்லாமல், அவர்கள்,  நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்முறை, கொலை, கொள்ளை, திருட்டு, லஞ்சம் ஆகியவற்றில் தமது பங்களிப்பு பற்றிய 'அறியாமையில்', அவை தொடர்பாகக்  கவலைப்பட்டும் கருத்து தெரிவிக்கிறார்கள்.

அத்தகையோருடன் உரையாடுவதே 'தலைவலி' என்பது எனது அனுபவமாகும். 'சமூக ஒப்பீடு' நோயில் சிக்கி, நம்மிடம் உரையாடுபவரிடம், நாம் இயல்பாக உரையாடுவது என்பது சிக்கலான தகவல் பரிமாற்ற நிகழ்வாக (problematic  communication) அமைந்து விடுகிறது. அவருக்கான பலன்கள் தரும் சமூக நிலையில் நாம் இருப்பதாக அவர் கருதி, நம்மிடம் வாலாட்டி உரையாடினாலும், இல்லையெனில் அவரது 'திராவிட மனநோயாளி சமூக உயர்வு' ஏக்கத்திற்கு தீனியாக, அவர் நம்மை விட எப்படி 'உயரமாக' வாழ்கிறார் என்பதை நமக்கு 'விலாவாரியாக' விளக்கி உரையாடினாலும், அவருடன் இயல்பாக உரையாட முனையும் ,- அந்த 'சமூக ஒப்பீடு' நோயில் சிக்காமல் வாழும், -   நமக்கு தலைவலி ஏற்படுவதில் வியப்பில்லை.

தமிழ்நாட்டில் மனிதர்களுக்கிடையில் நடந்த உரையாடல்களின் பொதுத்தன்மையானது, 1967க்கு முன் எப்படி இருந்தது,இன்று எப்படி இருக்கிறது என்பது வயதானவர்களுக்கு தெரியும். 

கிராமப்புற பின்னணியுள்ளவர்கள் 'மழை, விவசாயம்' பற்றியும், நகர்ப்புறத்தில் 'கல்வி' பற்றியும், புலமையாளர்கள் தாம் புதிதாகப் படித்த நூல்கள், தெரிந்து கொண்ட தகவல்கள் பற்றியும், 1967க்கு முன் உரையாடலின் பெரும்பகுதி இருக்கும். புதிதாக நிலம், வீடு, 'ஷேர்' (share), வருமானம், சினிமா, (தமிழ்நாட்டில் திராவிட ஆட்சிகளில்,  ஆங்கிலவழிக் கல்வியுடன், கிராமப்புறங்கள் உள்ளிட்டு எங்கினும் 'அதிவேகமாக' வளர்ந்த 'நோயான') கிரிக்கெட், பொழுது போக்கு பற்றியவை எல்லாம் உரையாடலில் , இன்று உள்ளதைப் போல, 'ஆதிக்கம்' செலுத்தியதில்லை. இன்று அவற்றில் நமக்கு ஆர்வம் இல்லையென்றால், தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்களுடன் நாம் உரையாடுவதற்கான பொருள்(content)  இருக்காது. 

இயல்பு என்ற முதுகெலும்பு, தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களிடையே பெரும்பாலும் முறிந்து வாழ, தமிழரல்லாத பிற மாநிலத்தவர்கள் தமது இயல்பாடு ஒட்டி, தமது தாய்மொழிப் பற்றுடன் வாழ்கிறார்களா?  அறிவுத் துறையிலும், உடலுழைப்புத் துறையிலும் தமிழ்நாட்டிலேயே தமிழர்களை விட, பி மாநிலத்தவர்கள் முன்னேறி வருகிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (refer post dt. December 3, 2014;’ 'காலனிய' மன நோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும் (2) தமிழ்நாடு அறிவுத் துறையிலும், உடலுழைப்புத் துறையிலும் பதர்க்காடாக வளர்ந்து வருகிறதா?’)

இயல்பு என்ற முதுகெலும்புடன் வாழ்பவர்களைத் தேடி சென்று, நட்பு கொண்டு, நமது சமூக வட்டத்தை நெறிப்படுத்தி வாழ்வதன் மூலமே, மனித வாழ்வின் அச்சாணியான அந்த முதுகெலும்பைத் தொலைத்து வாழ்பவர்களை, நமது சமூக வட்டமாகக் கொண்டு மூச்சுத் திணற‌லில் சிக்குவதைத் தவிர்க்க முடியும். (refer post dt. September 14, 2014;’ ‘தமிழ்நாட்டில் சமூக மூச்சுத் திணறலின் முடிவும், திறந்த காற்றோட்டமும்’ - ( The end of the social suffocation in Tamilnadu & Free Ventilation)’.  அத்தகைய சமூக மூச்சுத் திணறலிலிருந்து விடுபட்டவர்களே, தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு, உருப்படியான பங்களிப்பு வழங்க முடியும்.

Monday, March 23, 2015

தேவநேய பாவாணர், 'பெரியார்' ஈ.வெ.ரா போன்றவர்களை 'கேலிக்குள்ளாக்கும்' செயல்நுட்பம்?


தேவநேய பாவாணர், பெரியார் ஈ.வெ.ரா போன்றவர்கள் தத்தம் அறிவு, அனுபவம், கிடைத்த சான்றுகள், அடிப்படையில் தமது கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்கள். வசதி, வாய்ப்பு, சுகங்களுக்காக,  சுயநலமாக வாழ்ந்தவர்கள் அவர்கள் என்று, அவர்களின் நிலைப்பாடுகளுக்கு எதிரானவர்கள் கூட குற்றம் சொல்ல முடியாத வகையில்,  வாழ்ந்தவர்கள் அவர்கள்.

அவர்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பாக,  உலக அளவில் 'புதிதாக' என்னென்ன ஆய்வுமுடிவுகள் வெளிவந்துள்ளன என்பதை உன்னிப்பாகக் கவனித்து, அவர்களின் பற்றாளர்கள், அந்தந்த கருத்துக்களில் உரிய மாற்றங்கள் செய்வது என்பது, அவர்களின் சமூக நோக்கங்களை வளர்த்தெடுப்பதாக அமையும். அந்த அறிவுபூர்வ பாதையை விடுத்து, உணர்ச்சி பூர்வமாக,  அவர்களை வழிபடும் போக்கை ஊக்குவிப்பது என்பது, அவர்களை 'கேலிக்கும், கிண்டலுக்கும்' உள்ளாக்குவதாக அமையும்.

உதாரணமாக லெமூரியா கண்டம் என்பது அறிவியல் உலகில் அபத்தமான கற்பனை என்று முடிவானபின், தேவநேய பாவாணர் முன்வைத்த சான்றுகள் ஆனவை அவரின் காலத்திற்குப் பின், வெளிவந்துள்ள அறிவியல் ஆய்வுகளின்படி தவறான பின்;

“The Lemuria theory disappeared completely from conventional scientific consideration after the theories of plate tectonics and continental drift were accepted by the larger scientific community.”


அதை ஏற்றுக்கொண்டு, செயல்படுவதற்குப் பதிலாக, பாவாணரின் கருத்துக்களை வேதவாக்காகக் கருதி செயல்பட்டால் என்ன விளைவு ஏற்படும்? அறிவியல் பூர்வமான முடிவுகளை அறிந்தவர்கள் பார்வையில், தேவநேயப் பாவாணர் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகும் விளைவையே அது ஏற்படுத்தும்.

அதற்காக கேலி கிண்டல் செய்பவர்கள் மீது கோபப்படுவது என்பது, இன்னும் மோசமான விளைவையே ஏற்படுத்தும். (http://vijvanbakkam.blogspot.in/2012/08/blog-post.html )

அதாவது அறிவியல் ஆராய்ச்சி முடிவுகளைத் தெரிந்து கொள்ளாமல், பயணிக்கும் 'அறிவியல் தற்குறிக் கூட்டம்' தமிழ்நாட்டில் வளர்ந்து வருவதாக, உலக அளவில் அறிவியல் பூர்வமான முடிவுகளை அறிந்தவர்கள் கருதும் விளைவில் அது முடியும். ( ’உணர்வுபூர்வ இரைச்சல்களுக்கிடையே அறிவுபூர்வ ‘சிக்னல்கள்’; http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_18.html ) தேவநேய பாவாணர் மட்டுமின்றி, பேரா.ந.சஞ்சீவி உள்ளிட்டு தமிழ். தமிழ் இசை ஆராய்ச்சிகளில், தாம் பயன்படுத்தும் சான்றுகளின் வரை எல்லைகள்(limitations) பற்றிய புரிதல் இன்றியும், உலக அரங்கில் அது தொடர்பாக வெளிப்பட்டுள்ள ஆய்வு முடிவுகள் பற்றிய புரிதல் இன்றியும், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது பற்றி ஏற்கனவே பார்த்தோம். (refer post dt. June 5, 2013;’ தமிழாராய்ச்சியில் நடைபெறும் தவறுகளும், தமிழுக்கான விடுதலையும் (1)’ in font TM TTVALLUVAR; http://tamilsdirection.blogspot.sg/2013/06/normal-0-false-false-false-en-us-x-none_3429.html) சுமார் 5 வருடங்களுக்கு முன் இதனை வெளியிட்டபோது, தமிழ் உலகில் இதுவரை நடந்த ஆராய்ச்சிகள் தொடர்பாக அறிவுபூர்வ மறுபரீசிலனைத் துணிச்சலான திசையில் தொடங்கும், என்று நான் எதிர்பார்த்தேன். எப்பொருள் எவர் வாய் என்று ஆய்ந்து, சுயலாப நோக்கில், அப்பொருளைப் பாராட்டும், கண்டிக்கும், இருளில் தள்ளும் தமிழ்ப்புலமையாளர்களின் செல்வாக்கு ஒழியாமல், அது சாத்தியமில்லை, என்பதை உணர்ந்தேன். 

'சிவில்'(civil) பொறியியல் பேராசிரியரும், ஆங்கிலப் பேராசிரிய‌ர்களும் 'செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், தாம் வகித்த பொறுப்புகளின் வரை எல்லைகள் (limitations) தெரியாமல், நான் மேற்கொண்ட‌ 'திருக்குறளில் தமிழ் இசையியல்' ஆய்வுத்திட்ட நேர்க்காணலில், முட்டாள்த்தனமாகவும், அபத்தமாகவும் கேள்விகள் கேட்கும் 'துணிச்சல்' வந்ததற்கும், தமிழ்நாடு அவ்வாறு பயணித்ததே காரணமாகும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், உலகில் எந்த நாட்டிலும் உள்ள மொழி தொடர்பான ஆராய்ச்சிக்கும், இது போன்ற அவலம் நிகழ்ந்தது கிடையாது.(http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html) 'செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், இது போன்ற, சம்மந்தப்பட்ட துறையின் புலமையாளர் இன்றி நேர்க்காணல் நடத்திய அபத்தமான‌ முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வுத்திட்டங்களில், தமது சான்றுகளின் வரை எல்லைகள் தெரியாமல், 'உணர்ச்சிபூர்வ பார்ப்பன எதிர்ப்பு' ஆய்வுகள் உள்ளனவா? என்று எவரும் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டால், அதற்கு என்னால் இயன்ற பங்களிப்பும் வழங்க இயலும். 

இது போன்று, தமிழ், தமிழ் இசை போன்றவற்றை 'உயர்த்தி'க் காண்பிக்கும் 'உணர்ச்சிபூர்வ' ஆராய்ச்சிகள் காரணமாக, தமிழும், தமிழ் இசையும் உலக அரங்கில், 'கேலிக்குள்ளாகும்' ஆபத்தும் இருக்கிறது.

நான் திருச்சி பெரியார் மையத்தில் பங்களிப்பு வழங்கிய காலத்தில், வே.ஆனைமுத்து உள்ளிட்டு பெரியார் கொள்கையாளர்கள் வெளிப்படுத்திய கருத்துக்களில் தவறுகள் வெளிப்பட்டால், அதை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்து, அச்சிட்டு, விவாதத்திற்கு உட்படுத்தினோம். ( நான் விலகிய பின், திருச்சி பெரியார் மையம் மரணமடைந்து, அந்த மரணத்தில் 'பிணம் தின்னும் கழுகுகள்' போல், அதை வைத்து, திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களுக்கு 'வாலாகி' சுயநலக் கள்வர்கள் பலன் பெற்ற 'பாவத்திற்கு, ' திருச்சி பெரியார் மையத்திற்கும், அதில் பங்களிப்பு வழங்கிய எனக்கும் பங்குண்டு; திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்கள் உருவாக பெரியார் ஈ.வெ.ராவின் தொண்டுக்கு உள்ள பங்கைப் போல; பெரியார் ஈ.வெ.ராவை அவமதித்து நடந்த 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு, 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம் பங்களித்தது போல. (” 1944க்கு முன் எப்படி இருந்த தமிழ்நாடு,இன்று  எப்படி இருக்கிறது?இந்தி எதிர்ப்புப் போராட்டம்: 1938‍க்கும்  1965க்கும்   என்ன வேறுபாடு?”;




நான் இசை ஆராய்ச்சியில் எனது முழு கவனத்தைத் திருப்பியதால், திருச்சி பெரியார் மையம், மரணமடைந்த பின்,



'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
 கெடுப்பார் இலானும் கெடும்’;  திருக்குறள் 448

'இடிப்பார்' இன்றி, பெரியார் கொள்கையாளர்கள்,  'பெரியார் ஈ.வெ.ராவையும், தேவநேயப் பாவாணர் போல' கேலிக்குள்ளாக்கும் வகையில் தமது கருத்தை வெளியிட்டு வருகிறார்களா? இல்லையா? என்ற கேள்விகளை அடுத்து வரும் தகவல் வெளிப்படுத்தியுள்ளது.

“ஆரியர்கள் என்பவர்கள் யார், எங்கிருத்து வந்தவர்கள் என்பதனைப் பார்க்து விடலாம். பெரும்பாண்மை பார்ப்பனர்கள் என்பவர்கள் வௌ்ளை வெளேர் என்ற வெண் தோற்றத்தை உடையவர்கள். பார்ப்பனர்களின் உண்மையான வண்ணம் அது.”http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/297-2009-08-26-21-37-53

திரு. வன்பாக்கம் விஜயராகவன் (http://vijvanbakkam.blogspot.in/)     அவர்கள் பதிவு செய்த கருத்து மூலம்,


“கீற்று தளத்தில் வே.பாண்டியன் என்ற பெயரில் எழுதியது நீங்களா? உதாரணம்


ஆரியரும் அக்னியும்”


மேலேக்குறிப்பிட்ட கட்டுரை எனது பார்வைக்கு வந்தது.

லெமூரியா கண்டம் போல, ஆரியர் பற்றி அறிவியல் உலகில் என்ன ஆராய்ச்சி முடிவுகள் வெளிப்பட்டு வருகின்றன என்பது பற்றிய கவலையின்றி, மேலேக்குறிப்பிட்ட கட்டுரை எழுதப்பட்டுள்ளதா? என்ற கேள்வியை எழுப்பும் வகையில், அது தொடர்பாக வெளிவந்துள்ள அறிவியல் தகவல் கீழே உள்ளது.

“The theory of Indo-Aryan migration was proposed in mid-19th century by German linguist and Sanskrit scholar Max Muller………. "It is high time we re-write India's prehistory based on scientific evidence," said Dr Lalji Singh, former director of CCMB.”




அதே போல மனிதரின் தோலின் நிறம் பற்றி, அறிவியல் உலகில் என்ன ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன என்பது பற்றிய கவலையின்றியும் மேலேக் குறிப்பிட்ட கட்டுரை எழுதப்பட்டதா? என்ற கேள்வியை எழுப்பும் வகையில், அது தொடர்பாக வெளிவந்துள்ள அறிவியல் தகவல் கீழே உள்ளது.

“The understanding of the genetic mechanisms underlying human skin color variation is still incomplete, however genetic studies have discovered a number of genes that affect human skin color in specific populations, and have shown that this happens independently of other physical features such as eye and hair color “

“Migrations over the last 4000 years, and especially the last 400 years, have been the fastest in human history and have led to many people settling in places far away from their ancestral homelands. This means that skin colors today are not as confined to geographical location as they were previously.”

http://en.wikipedia.org/wiki/Human_skin_color 




அது மட்டுமல்ல, ஆரியர் திராவிடர் பற்றி பெரியார் ஈ.வெ.ரா சந்தித்த கேள்விகளும், அவர் வெளிப்படுத்திய பதிலும், மேலேக் குறிப்பிட்ட கட்டுரையாளர் பார்வைக்கு வந்ததா? என்ற கேள்வியை எழுப்பும் சான்று வருமாறு;

"இரத்தக் கலப்பு ஏற்பட்டு விட்டதே; ஏன் இன்னும் ஆரியர் திராவிடர் பிரச்சினை நாட்டில் நடமாட வேண்டும்? என்று நம்மை நையாண்டி செய்யும் தோழர்கள் பார்ப்பனர்களின் உயர்தன்மை கைவிடவும்,அவற்றுக்கு ஆதாரமான  சாஸ்திர புராணக் குப்பைகளைக் கொளுத்தி விடவும், அதற்குச் சின்னமான கடவுளைத் தகர்க்கவும் கேட்டுக் கொள்ளவும்;பிறகு வரட்டும் நம்மிடம்." 29.09.1948 சிதம்பரம் சொற்பொழிவு; விடுதலை 05.10.1948

காலனியத்திற்கு முன் தமிழ்நாட்டில் கல்வியில் முன்னேறியவர்கள் யார்? என்பது பற்றியும், 'சாஸ்திர புராணக் குப்பைகளைக் கொளுத்துவது' பற்றிய பெரியார் ஈ.வெ.ராவின் கருத்து எவ்வாறு தவறு? என்பது பற்றியும் ஏற்கனவே பார்த்தோம். ( ’பெரியார் ஈ.வெ.ரா வின்  'ஆன்மீக'ப் பெருந்தவறு; http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_28.html ’ )

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் யுகமானது,  சில நொடிகளில் 'உரிய முறையில்' தேடி, எளிதில் தகவல்களைப் பெறும் தகவல் யுகம் ஆகும். தொல் தமிழ் இலக்கியங்கள்(ancient Tamil texts), இசை அறிவியல், இசைத் தகவல் தொழில்நுட்பம்(Music Information technology)  உள்ளிட்ட பலதுறை ஆய்வில் உலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய வெகு சிலரில் நான் ஒருவராக இருந்தாலும், எனது பொறியியல் மாணவர்களிடமும், எனது ஆலோசனையில் செயல்படும் ஆய்வாளர்களிடமும்(Research Scholars) , புதிதாக தகவல் ஏதும் அவர்கள் பார்வைக்கு சந்தால், 'கூச்சமின்றி' என்னிடம் தெரிவித்து, நான் 'வளர' உதவுமாறு அறிவுறுத்தி வருகிறேன்.

தமிழ்/திராவிட இயக்க வர‌லற்றில்  உரிய பதிவின்றி, விலை மதிக்க முடியாத தியாகங்கள் இடம் பெற்றிருப்பதை நான் அறிவேன்.  'குற்ற உணர்வே' இல்லாமல், ( 'குற்ற உணர்வின்றி' மன நிறைவுடன் மரணத்தைத்  தழுவ முடியுமா?’; http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html) அந்த பின்னணியைப் பயன்படுத்தி, 'சுயநலக் கள்வர் கூட்டம்' உருவாகி, வளர்ந்து வருவதையும் நான் அறிவேன்.


தமிழக வாக்காளர்கள் அந்த 'கள்வர்' பாடத்தைக் கையாண்டு, தமிழக அரசியல் கட்சிகளைக் குழப்பி வருவதாகவும் கருதுகிறேன். 'திருமங்கலம் சூத்திர'த் துணிச்சலில், அடுத்து வந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் மிகுந்த நம்பிக்கையுடன் தேர்தலைச் சந்தித்த ஆளுங்கட்சியான தி.மு.கவையும், கருத்துக் கணிப்பையும் ஏமாற்றி, 'யார் பணம் கொடுத்தாலும், கொள்ளையடித்த பணத்தில் கிடைத்த பங்காகக் கருதி, வாங்கிக் கொண்டு, தாம் விரும்பியவருக்கு ஓட்டு போட்டு, அதையும் வெளியில் சொல்லி, விவாதப்படுத்தாமல், ஆளுங்கட்சிக்கு 'மரண அடி' கொடுத்த, 'கமுக்கமான' வாக்காளர்கள் 'அதிவேகமாக' அதிகரித்து வரும் நாடு தமிழ்நாடு. பணத்தை மட்டும் நம்பாமல்,'ஊருக்குள் ஓட்டு கேட்டு வரக் கூடாது' என்று தடை செய்யும் கிராம மக்களின் மீது கோபப்படாமல், அம்மக்களின் 'பிரச்சினைகளை'த் தீர்த்து,  'அதீத வெற்றி' ஈட்டும் திறமையை மீண்டும், மீண்டும் நிரூபித்து வரும் கட்சியாக அ.இ.அ.தி.மு.க உள்ளது. தமிழக அரசியலில் 1991 முதல் நடந்த ஆட்சி மாற்றங்கள் குடும்ப அரசியல் ஊழல் மீது மக்கள் கொண்ட வெறுப்பின் அடிப்படையில் நடந்து வந்துள்ளது. ஆளுங்கட்சிக்கு உள்ள, அந்த புரிதலும் அந்த வெற்றிக்கு காரணமாக இருக்கலாம்.  அடிப்படை வசதிகள் பாதிப்பு, நிதி நிறுவன மோசடி, டாஸ்மாக் எதிர்ப்பு  உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக, தினமும் தமிழ்நாட்டில் ஆங்காங்கே கட்சிகள் தொடர்பில்லாமல், தெருவில் இறங்கி, மக்கள், குறிப்பாக பெண்கள், போராடி வருவ‌தும்,அந்த போக்கின் ஊடேயே, ஆளுங்கட்சி மீண்டும் மீண்டும் அத்தகைய வெற்றிகள் பெற்று வருவதும் ஆய்வுக்கு உரியவையாகும். அத்தகைய போராட்டங்களில், தமது பிள்ளைகளான படிக்கும் மாணவர்களை ஈடுபடுத்தாமல், பெரியவர்களும் பெண்களும் தாமே போராடி வரும் போக்கு, 1944 க்கு முந்தைய போக்குடன் ஒப்பிடக் கூடியவையாகும். 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்களை ஈடுபடுத்தாமல் பெரியவர்களும், பெண்களும் முன்னின்று போராடினார்கள்.

அத்தகைய போக்கில், 1944இல் பிராமணர்களும் இருந்த, நீதிக்கட்சியில் 'ஊழல்' இன்றி, சொந்த பணத்தை செலவு செய்து, பொது வாழ்வில் இருந்த புலமையாளர்களை விட்டு விலகி, பெரியார் ஈ.வெ.ரா திராவிடர் கழகம் தொடங்கி பயணித்த காலத்தில், ஆங்கிலம் தெரிந்தவர்களாக அண்ணாதுரை, டார்பிடோ ஜனார்த்தனம், குத்தூசி குருசாமி போன்ற வெகு சிலர் இருக்க, தமக்கிருந்த தமிழறிவிலும், பொது அறிவிலும் பேச்சாளர்களும், எழுத்தாளர்களும் வளர்ந்தார்கள். அந்த போக்கில் உணர்ச்சிபூர்வ, பாலியல் விரச உள்ளடக்கம் செல்வாக்கில், அறிவுபூர்வ கூறுகள் பலகீனமானது. தலைவர்களின் அறிவுக்கு தீனி போட்டவர்களை விட, தமது சொத்தையும், சொந்த வாழ்வையும் கட்சிக்காக தியாகம் செய்த தொண்டர்களை விட, தனிமனித பலகீனங்களுக்கு தீனி போட்ட ‘பலவகைத் தரகர்கள்’ எல்லாம், 'அதிவேக' செல்வாக்கில் வளர்ந்தார்கள். ஆனால் 1967இல் முதல்வரான அண்ணாதுரை,நம்ப முடியாத அளவுக்கு, அந்த போக்கிலிருந்து விடுபட்டு, நேர்மையாக, அறிவுபூர்வமாக முதல்வராக செயல்பட முனைந்து, அது முடியாமல் மனம் நொந்து மறைந்ததை ஏற்கனவே பார்த்தோம். இன்று திராவிட/தேசிய உள்ளிட்டு எந்த பெரிய/சிறிய கட்சிகளாக இருந்தாலும், ஆதாயத்தொண்டர்கள் மற்றும் தரகர்கள் பலத்தையே பெரும் அளவு நம்ப, பொது வாழ்வு என்பதே வியாபாரமாகி விட்டதா? என்ற கேள்வி எழும் வகையில் தமிழ்நாடு பயணித்து, மேலேக் குறிப்பிட்ட திருப்பு முனைக் கட்டத்தில் தமிழ்நாடு இருக்கிறது.

'கால தேச வர்த்தமான' மாற்றத்திற்கு தம்மை 'சமூகப் பொறுப்புடன்' உட்படுத்தி, அறிவுபூர்வமாக பயணிக்காமல், உணர்ச்சிபூர்வமாக பயணிப்பவர்கள் எல்லாம் கால ஓட்டத்தில் உதிர்ந்து போவார்கள் என்று 'தோழர் ஈ.வெ.ரா'  குறிப்பிட்டிருக்கிறார். 'தோழர் ஈ.வெ.ரா' என்பது, அவரை அவமதிக்கும் சொல் என்று அவரை 'பெரியாராக'ச் சிறைப்படுத்தி வருபவர்கள் யார்? அந்த உணர்ச்சிபூர்வ போக்கில் 'அறிவியல் தற்குறிக் கூட்டமாக'ப் பயணிப்பவர்கள் யார்? என்ற கேள்விகளைத் தொடர்ந்து தவிர்ப்பது என்பது, அத்தகைய தலைவர்களை 'கேலிப் பொருள்' ஆக்காதா? என்பது சமூகப் பொறுப்புடன் அணுக வேண்டிய கேள்வியாகும்.

பிறர் மீது பழி சுமத்தி தப்பிக்காமல்,  தமிழ் வழியின் மரணப்பயணத்தைத் தடுத்து, சீரழிவிலிருந்து, தமிழையும், தமிழ்நாட்டையும் மீட்க,  நாம் ஒவ்வொருவரும் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான வாழ்வியல் சூத்திரம் வருமாறு;

“It is a known saying that people get the leaders they deserve. Rather than blaming others (including leaders) we need to help each other change and stick to it. We are social animals. We need self-control as well as system-control; we need to trust as well as be vigilant. We have to earn our leaders. To demand better leaders we have to be better people. Both go together. The 'we' here means the educated middle to upper-middle to upper class. To get good friends I have to be one (a good friend). To improve/change society I have to improve/change myself.” V.Tholkappian : http://tholthamiz.blogspot.in/   ( யார் தமிழர்? என்ற கேள்விக்கு எனக்குக் கிடைத்த சிறப்பான விடை; http://siragu.com/?p=3527 )

குறிப்பு: தமிழ் நாட்டில் தமிழ், தமிழ் உணர்வு, பகுத்தறிவு, தலித், இந்துத்வா, இஸ்லாம் உள்ளிட்ட இன்னும் பல‌வற்றை முன்வைத்து, ஒவ்வொன்றிலும், ஒன்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள்  செயல்படுவது கொள்கையின் வெற்றிக்காகவா? அல்லது அந்த கொள்கையை வைத்து, தத்தம் வசதி, வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ளவா?

அந்தந்த தலைவர்களின் பேச்சில், எழுத்தில் அதிக செல்வாக்குடன் வெளிப்படுவது அறிவுபூர்வமா? உணர்ச்சிபூர்வமா? தத்தம் கொள்கை, நிலைப்பாடுகளுக்கு எதிராக, உலக ஆராய்ச்சிகளில் வெளிப்படும் தகவல்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவர்களுக்கு இருக்கிறதா? 

அதைப் பரிசீலித்து, உரிய மாற்றங்களை வெளிப்படுத்தி, செயல்படாவிட்டால், தமது அமைப்புகள் கால ஓட்டத்தில் உதிரும் என்பதை அவர்கள் அறிவார்களா?