Wednesday, March 10, 2021

பேராசிரியர் திரு செ.அ . வீரபாண்டியன் அவர்களுக்கும் ஆசிரியர் - கீழடி . வை. பாலசுப்பிரமணியத்திற்கும் ஏற்பட்ட உறவு ஊழ் செய்த செயலே.

 

2017 -டிசம்பர்  மாதத்தில் ஒரு நாள்,  சிலைமான் சாலையில்  இளைஞர்  ஒருவர்  என்னை இடைமறித்து “சார் - நீங்கள்தான் வை பாலசுப்ரமணியமா? எனக் கேட்டார். ஆம் உனக்கு  தெரியாதா எனக்  கேட்டேன். நான்  வேறு யாரோ  என எண்ணினேன், எனது  மாமா  திண்டுக்கல்  முருகானந்தம் உங்களிடம்  பேசவேண்டும்  எனச் சொன்னார், நம்பர் கொடுங்கள் என்றார். எதற்காக  எனது எண் அவர்க்கு வேண்டும்  என்றேன். அவருடைய நண்பர்  வீரபாண்டியன் என்பவர் உங்களிடம் பேசவேண்டுமாம், அதற்காக என்றார்.

 மறுநாள் இரவு திண்டுக்கல் அன்பர் அழைத்தார். அய்யா, எனது நண்பர் பேராசிரியர்  வீரபாண்டியன் தஞ்சையில் இருக்கிறார், கீழடி பற்றி உங்களிடம் பேச வேண்டும் என்றார். உங்கள் எண்ணை அவரிடம் கொடுக்கிறேன், அவர் உங்களிடம்  பேசுவார்  - பேசுங்கள்  என்றார்.

இரு நாட்கள் கழித்து புதிய அழைப்பு. அந்த  அழைப்புக்குரியவர்தான் பேராசிரியர்  செ.அ . வீரபாண்டியன். தன்னை  பற்றிச்  சொன்னார். என்னையும் அறிந்துகொண்டார். 

கீழடி  வெளிப்படுவதற்குக்  காரணமாக  இருந்தவன் நான், என்பதை அவரது நண்பர்  ஒருவர்  தெரிவிக்க, அதன்பின்  என்னைப் பற்றிய நேர்காணலைக் கண்டதாகவும் ஆகவே, பணியொன்றைச் செய்துவிட்டு  வெளிச்சம் போடாமல் இருக்கும் உங்களைப் பார்க்க வேண்டும் பேச வேண்டும் என்ற அவா. அதனாலேயே பாடுபட்டு தங்களைக் கண்டேன், தொடர்ந்து பேசுவோம் என்றார்.

 மறுநாள் அழைப்பு வந்தது. பேரா. வீ. பேசினார். உங்களது  பணி  மறைக்கப்படுகிறது . அதை முறையாகப் பதிவு செய்யவேண்டும் எழுதுங்கள் என்றார். நான்  எழுத்துச் சோம்பேறி - பேசுவேன் - எழுத  வேண்டுமானால் ஏறாவது தூண்டிக்கொண்டே  இருக்க வேண்டும் என்றேன்.   அந்தப் பணியை  நானே  செய்கிறேன். நாள்  தோறும் நான்  இரவு  8 மணிக்கு  உங்களுக்கு தொலைத் தொல்லை கொடுப்பேன் என்றார். அய்யா  எழுதத் துவங்கி ஓராண்டு ஆகிவிட்டது. 4 பக்கங்கள் எழுதி  உள்ளேன் என்றேன். இனி உங்களை  எழுதச் செய்வது என் வேலை  என்று  உறுதிபடச் சொன்னார்.

மறுநாள் , அதற்கும் மறுநாள் என இரவு 8 மணிக்கு பேரா வீ. யின்  அழைப்பு வந்தது . 

எழுதத் தொடர்ந்தேன். 

அவர்க்கு சங்கடத்தை தவிர்க்க ஒரு கருத்தை முன்வைத்தேன். வரம் ஒரு முறை அவர் அழைப்பு - அதற்கு நான் எழுதியது பற்றிய விவரம் தருவது என  ஏற்பாடு செய்துகொண்டோம். அந்த நாள் ஒவ்வொரு புதன் கிழமையாக அமைந்தது.

 எழுத்துப் பணி மட்டுமல்லாது, தமிழ் சார்ந்த, வரலாறு சார்ந்த, சமூகம்  சார்ந்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம் .

எங்கள் இருவரது கருத்தோட்டமும் மன ஓட்டமும் இசைந்தன .

புதன் அழைப்பு தொடர்ந்தது. 2020 சனவரி 26 இல் நூல் வெளியீடு. இருவரும் சந்திக்க இயலவில்லை. நான் தஞ்சை கல்லூரியில் பேச வந்தபோது, அவர்  வெளி நாடு செல்ல அமைந்தது. சந்திப்பு நேரவில்லை . 

நூல்  வெளியிட வருவதாக இருந்ததும் அமையவில்லை.

“கீழடி அகழாய்வு ஒரு வரலாற்றுப் பார்வை”  என்ற நூல் பேரா. சாலமன் பாப்பையா அவர்களால் வெளியிடப் பட்டது.

பேரா. வீ. அவர்கள்  அப்போது சிங்கப்பூரில், சந்திப்பு நேரவில்லை .

தஞ்சைக்கு வந்தார் பேரா. வீ. ஆனால் கொரோனாவும் உடன் வந்தது எங்கள் சந்திப்பு வாய்க்கவில்லை.

ஆனால், எனது நூல்களில் 50 படிகள் பெற்றுக்கொண்டு, 10 படிகளைத் தனக்கு வைத்து மீந்தவற்றை கல்லூரி மாணவர்க்குக் கொடுக்கச் செய்தார். இளவல் முனைவர். பாரி மைந்தன் வழி அந்தப்பணி நடந்து நிறைந்தது.

புதன் அழைப்புத் தொடர்ந்தது. 2021 எமக்கு இனிமையானதாக இல்லை.

தமிழ்  இசை ஆய்வில் பேரா. வீ. மேற்கொண்ட பணிகளை உள்வாங்கும் அறிவும் ஆற்றலும் எமக்குக் குறைவு. இருப்பினும் ஓரளவு புரிந்து கொண்டேன் . எஞ்சியதை அறிய நேரில் பேசுவோம் என்றோம்.

அது நிகழவில்லை, காலம் இடைமறித்தது.

முகம் அறியா என்பால் கொண்ட அன்பால் கீழடி நூல் வாயிலாக உலகுக்கு அறிமுகம் செய்த கோண்மைக்கோ கோப்பெருஞ்சோழனந்த பேரா. வீ  அவர்கள்!

மறைக்க இயலா மாமனிதர்!

 

22-2-2021                                        கீழடி. வை. பாலசுப்பிரமணியம்

                                                                         சிலைமான்  

Monday, February 15, 2021

வீரபாண்டியன் எனும் வீழா சரித்திரம்

அப்பா சென்றதெங்கே? மகளின் குரலாய் மனதின் குமுறல் - தேன்மொழியாள்


நாங்கள் பெற்றிட்ட பேரு, எங்கள் அப்பா, “டாக்டர் வீ” என எல்லோரும் அன்பாய் அழைத்திட்ட பேராசிரியர் 
செ.. வீரபாண்டியன் அவர்கள். அவர்களின் வேதனைக்குரிய திடீர் மறைவை வெறும் ஒரு வரியில் வருத்தம் தெரிவித்து நிறுத்தி நகரமுடியாத மனநிலையில்,  அவர்  நினைவாய் உள்ளேயே உழன்று தவிக்கின்ற சில சிந்தனைத்துளிகளை,  இதுவரை அவரது எழுத்துக்களை விரும்பி அவரோடு பயணித்து வந்த அன்பார்ந்த நண்பர்கள்  மற்றும் சிந்தனையாளர்களுக்காக இங்கே பகிர்வதில் ஆறுதலும் நிறைவுமுறுகிறோம்.


பேராசிரியர் வீரபாண்டியன் அவர்களின் வாழ்க்கை உயர்ந்த நோக்கங்களையும் மேலான கொள்கைகளையும் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்த ஒரு அர்த்தமுள்ள சித்திரம். ஏன், சரித்திரம் என்றே கூடச்சொல்லலாம், அது சாலப்பொருந்தும். அந்த சரித்திரம் இன்னும் சாதனைகளோடு மேன்மையாய் அழகுபெற்று பெரிதாய் பிரகாசித்துத்தான் நியாயப்படி முற்றுப்பெற்றிருக்க வேண்டும். ஏன் இப்படி திடீரென முற்றுப்பெற்றது என்பதற்கு இதுவரை விடை தெரியவோ புரியவோயில்லை.

 

அந்தபடைப்பினைத்தான்கேட்கவேண்டும் ஏன் இந்த அறிவுமிகுபடைப்பாளியைஅவசரமாய்  முடித்துவிட்டாய்? என்று, சமுதாய சிந்தனையே தன் பிறப்பின் நோக்கமாக வாழ்ந்த அந்த நல்லவரை ஏன் நிரந்தரமாய் நிறுத்திவிட்டாய்? என்று, “வல்லமை தாராயோ இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே…” என்றும்என் கடன் பணி செய்து கிடப்பதே...” என்றும்.. மட்டுமே எண்ணி எண்ணி அதையே வலுவாய் நம்பி துறவி போல் வாழ்ந்திருந்த, தான் ஏற்றுக்கொண்ட நோக்கங்களுக்காக தவமாயிருந்த, அந்த உறுதி மிக்க லட்சியவாதியை ஏன் இவ்வளவு  எளிதாய் அறிவிப்பே இன்றி அணைத்துவிட்டாய்? என்று. எத்துனை சோதனைகள் வந்தபோதும் தான் கொண்டநெறி வழுவாது நிமிர்ந்து நின்ற அந்த அறவோனை ஏன் சத்தமின்றி சாய்த்து விட்டாய்? என்று. தொடராய் வந்த பின்னடைவுகளை எல்லாம் தான் ஏற்றிருக்கும் லட்சியத்திற்கு முன் துச்சமெனத் தள்ளிவிட்டு,  என் அறிவும், ஆற்றலும் இவ்வுலகுகாக்கும் நற்செயலுக்கே; இதுவே என் பிறப்பின் இலக்குஎன்று இதயத்தில் வடித்து சவால்களையெல்லாம் வெற்றிப்படிகளாக்கி, தன் நோக்கம் பிறழாது தொடர்ந்து நிமிர்ந்து நின்று சாதித்துக்கொண்டிருந்த, இன்னும் எவ்வளவோ சாதிக்கவிருந்த  எங்களின் ஆழமிகு அறிவாளியை ஏன் அரவமின்றி அடக்கி விட்டாய்? என்று. உள்ளும் புறமும்சமுதாய பொறுப்பு எல்லோருக்கும் பொதுஎன உணர்த்தி, எங்கெல்லாம் நீதிக்கு சறுக்கல்கள் உண்டோ அங்கெல்லாம் சிங்கமாய் பொங்கும் தொலைபார்வைச் சிந்தனையாளரை  ஏன் முற்றிலுமாய் தொலைத்து விட்டாய்? என்று, இப்படியாக இன்னும் அடங்க மறுக்கும் எங்களின் தீராத ஆதங்கத்தை கூறிக்கொண்டே செல்லலாம்.

 

ஒவ்வொரு பிறப்பும் ஒரு தனித்துவம் கொண்டதாகத்தான்  இவ்வுலகில் மலர்கிறது, மனிதன் மட்டுமே அவனின் அந்த தனித்துவத்தை அதன் சிறப்பை அடையாளம் கண்டுகொள்ளும் பெரும் பாக்கியம் கொண்டவன்.  அடையாளம் கண்டபின்னும் மிகச்சிலரே அந்த தனித்துவத்தை மெருகேற்றி மேன்மைகூட்டிட  தனக்கும் பிறருக்கும் பலனாக்கும் அரிய ஆற்றல் பெறுவர். அவர்களே மனிதருள் பெரியோர் எனலாம். அந்த மிகச்சசில பெரியோருள் ஒருவரே பேராசிரியர் வீரபாண்டியன். அவரோடு பழகியவர்களுக்குத் தெரியும் உறுதியுடன் இறுதி வரை அவர் கடைபிடித்த வாழ்வியல் விழுமியங்கள் யாவை என்று. அவற்றுள் அவர் மிகவும் மதித்து போற்றியது தனதுசிந்தனையில், சொல்லில், செயலில், நேர்மை (Integrity!  “Man of Integrity” in Thoughts, Words and Deeds)” என்பது தான். இந்த நேர்மை தான் அவர் தன்னுள் கொண்டிருந்த பெரும் பலம்! இதனால் பல இழப்புகளும் சவால்களும் வரினும் என்றுமே அந்த மேலான குணத்தை அவர் எதற்காகவும் விட்டுக்கொடுத்ததே இல்லை. ஏதேனும் சில இடங்களில் இந்த நேர்மையையும் கொண்ட கொள்கைகளையும் அவர் சிறிதளவாயினும் விட்டுக்கொடுத்திருந்திருந்தால் கூட, குறுக்கு வழியில் சுய லாபங்களுடன் அவர் பயணித்திருக்கக்கூடிய தூரம் மிகப்பெரியதாக  அமைந்திருந்திருக்கக்கூடும. அந்த வழிகளை ஒருபோதும் அவர் தன் வாழ்நாளில் விரும்பியதுமில்லை அனுமதித்ததுமில்லை.

 

சமூகநீதி கருதி தான் எடுத்துக்கொண்ட கொள்கையிலிருந்து எந்த சூழலிலும் வளைந்து சென்றதுமில்லை. மதம், இனம், கட்சி, நாடு, மொழி என்றெல்லாம் பிரித்துப் பார்க்காத ஒரு சமூக நீதியாளர். இந்த இடத்தில் ஒரு சிந்தனயை பகிர்வது  மிகவும் பொருந்தும் எனக்கருதுவதால் கூறுகிறோம். பேராசிரியர் வீரபாண்டியன் அவர்களின் திடீர் மறைவறிந்து முற்றிலும் இரு வேறுபட்ட கொள்கைகள் கொண்ட தலைவர்களும் கூட சமமாய் தங்களின் வருத்தத்தை பதிவிட்டிருந்தனர்.  அதன் மூலம் நல்லவை எங்கிருந்தாலும் தயக்கமின்றி அதனைத்தேடி அறியும் அவரது பாகுபாடற்ற சமூக உணர்வும், அதற்காக அவர் காட்டிய  தடைகளற்ற  பொறுப்பும், நேர்மையான விவேகமும் வெளிப்படுவதைக் காணலாம்.

 

தமிழிசைக்கும் (Tamil Music), இசை அறிவியலுக்கும் (Science of Music), சங்ககால தமிழிலக்கியங்களில் (Ancient Tamil Literature) இசை சார்ந்த ஆராய்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும் அவர் ஆற்றிய தொண்டும்,  விட்டுச்சென்ற அறிவார்ந்த படைப்புகளும் பங்களிப்புகளும் அடுத்த தலைமுறையினருக்கு  பெரும் விழிப்புணர்வையும் விவேகத்தையும் தரும்  கலங்கரை விளக்குகளாய் என்றும் உயர்ந்து சுடர்விடும் என்பதில் துளியும் அய்யமில்லை. தனது ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட துறைகளில் அவரது படைப்புகள் புத்தகங்களாகவும் பல கட்டுரைகளாகவும் வெளிவந்திருக்கிறது (கீழே தரப்பட்டுள்ளது). அத்துடன், சமூக அக்கரையுடனும் பொறுப்புடனும் வெளிவந்த அவரது சிந்தனைகள்  தனி நூலாகவும் பிரசுரமாகியிருக்கிறது.  எண்ணங்களாய் பரிணமித்து எங்களோடு பகிர்ந்தவை மேலும் பல, இன்னும் வெளியிடக்காத்திருந்த நூல்கள் பலப்பல, அவற்றிற்கெல்லாம் தனது சீரிய சிந்தனையாலும் ஆராய்ச்சியினாலும் உருக்கொடுத்த அந்த  அறிவுப்பெட்டகம்  இன்று அரவமின்றி அடங்கிவிட்டது எனினும், அவர் விட்டுச்சென்ற முத்துக்கள் அத்தனையும் நிச்சயம் விழித்திருந்து இவ்வுலகுக்கு விளக்காகும்.

 

தன்னுள்ளே அவர் அடையாளம் கண்ட தனித்தன்மைகளையெல்லாம் மேலும் மேலும் பட்டை தீட்டி வளர்த்துக் கொண்டு, தான் கண்ட பெரும் சமூக-இசையறிவியல் கனவுகள், திட்டங்கள், திறமைகள், சிறப்புப்பண்புகள், தேர்ச்சிகள் அனைத்தும்  ஒன்று திரட்டி மேற்கொண்டிருந்த  ஆராய்ச்சிப் பயணத்தில் இப்படியோரு பேரிடி வந்ததே ஏன்? கிடைத்தற்கரிய இந்த அறிவாளரின் லட்சியப்பாதையை அரை தூரத்தில் நிறுத்திதற்போதுதிடீரென இங்கே நின்று விடும்என எவரும் நினைத்துக்பார்க்காத நேரத்தில், கூடாத இவ்வேளையில் இந்த சோகநிகழ்வு நிகழ்ந்தது ஏன்? இந்த முறையற்ற அபகரிப்பு நடந்தது ஏன்? எப்படி ஏற்பது? அவர் கொண்ட மிகப்பெரும்கனவுகள், சிந்தனைகள், திட்டங்கள், தனித்திறமைகள் எல்லாமும் நின்றது ஏன்? அத்துணையும் அவரோடேயே சென்று விட்டனவே என்றெல்லாம் நம் சிற்றறிவு, தொடர்ந்து பிதற்றிக்கொண்டேயிருக்கிறது,  இது அநீதி” என்று கூவிக் கூவி முறையிட்டுக்கொண்டேயிருக்கிறது, நீதி கேட்டு மன்றாடுகிறது, இந்த மீட்க முடியாத பேரிழப்பை தாங்கிக்கொள்ள இயலாமல் மனம் தடுமாறிக் கலங்குகிறதுஇனி எங்கு சென்றுஅப்பாஎன்றழைப்பது, உரிமையாய் அறிவு தேடி ஆலோசிப்பது, மனம் ஆறுவது, அந்த அன்பில் திளைப்பது, என்றெல்லாம் ஏங்குகிறது, குழம்பி பிதற்றுகிறது..…அவரது அன்பையும் அறிவையும் புரிந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் இந்த இழப்பு எவ்வளவு பிரமாண்டமானதுஈடு செய்யமுடியாததுஎன்று


ஆனால் அவர் அருகிலிருந்திருந்தால், இதனை அறிந்திருந்திருந்தால், “பாராபட்சமில்லாத அந்த இயற்கையின் எதார்த்தமான முடிவு இப்படித்தான் இருக்கும் அம்மா, கவலைப்பட்டுக்கொண்டிருக்காதே, அதில் பலனில்லை, அந்த பேராற்றலின் பகுத்தறிந்த செயல் விளைவு தத்துவத்தின் படிஇயற்கையின் இயல்நீதிச்சமன்பாடுகள் என்றும் பொய்ப்பதில்லை, நம் சிற்றறிவுக்கு வேண்டுமானால் புரியாமல் போகலாம், குறை கூறாதே, முறையிடாதே,  கோழையாகி கலங்கிடாதே, நடப்பதைப்பார், உன் கையிலிருப்பதைச் செம்மையாக்கு,  என் மகளே, இது காறும் நான் முழுதாய் நம்பி வாழ்ந்திட்ட தாவோ”  (Tao) எனும் அந்தமேலாண்மை”  (the Providence, the Universal Mind, the  Infinite Intelligence, the Compassionate Power, )” என்றும் நிறைவானது நீதிதவறாதது….நான் அப்படியே விட்டுச்சென்றவையெல்லாம் இதற்கும் மேலான நிலைக்கு எடுத்துச்செல்ல இன்னும் பெரும் அறிவாளிகளை அடுத்த தலைமுறை உருவாக்கித்தரும். வல்லவர்கள் வருவார்கள். அது வரை என் கருத்தறிந்த என் நண்பர்களும், என் பிள்ளைகளும் என் பிள்ளைகளாய் நான் பார்த்து வளர்த்திட்ட நீங்களெல்லோரும் கருத்தாய் கடமையாய் கடத்திச்செல்லுங்கள், தொடருங்கள், என் செல்வங்களே,!”…என்று தான் குறிப்பிட்டிருப்பார்….அதில் எள்ளளவும் அய்யமில்லை……


அப்பா இனி நம்மோடு இல்லை  என்பதை நெஞ்சம் முழுமையாய் ஏற்க மறுக்கிறது.. ஒரு முறையேனும் கனவிலாவது வந்து போங்களேன், என ஏக்கமாய் கணக்கிறது. எனினும், அந்த வலி ஒருபுறமிருக்க, அவர் விட்டுச்சென்ற மிச்சப்பணிகள்  எல்லாவற்றையும் திட்டமிட்டு அவர் சொன்ன வழி தொடர்வோம். இத்துனை நாளும் அவர் சிந்தனைகளைக் காதில் கேட்டு அவரோடு வாழ்ந்திருந்த இயற்கையின் ஊடகங்களாம் இந்த மண்ணும் காற்றும் விண்ணும் நம்மோடு கலந்திருந்து நம்மை அவர்வழி நடத்தட்டும்….. என அந்த  இயற்கை மேலாண்மையை, பேரறிவை உள்மார வேண்டிஇனி செயல்புரிவோம் எனும் ஆறுதலில் அரை மனதாய் அமைதிகொள்கிறோம்.


பணிவன்புடனும் ஆழ்ந்த நன்றிகளோடும்  

அவரது அன்பு பிள்ளைகளுடன், மகள் தேன்மொழியாள்.

 

அப்பா சிந்தனையில் உதித்த நூல் மலர்கள்:

1. “Ancient Music Treasures – Exploration for New Music (2006)’,

2. தமிழ் இசையியல் புதிய கண்டுபிடிப்புகள்’ (New discoveries in Tamil Musicology-2009),

3. Decoding Ancient Tamil Texts–The Pitfalls in the study & Translation (2019),

4. Ancient Music Treasures-Exploring for New Music Composing (2019)

5. 'காலனியமனநோயாளிகளும், 'திராவிடமனநோயாளிகளும், (2019)