Sunday, March 29, 2015



 'இயல்பு' என்ற முதுகெலும்பு முறிந்த தமிழர்கள்


நிலையான காந்தம் ஒன்று அருகில் இருப்பதன் காரணமாக, அல்லது தூண்டப்பட்ட காந்தம் ஒன்று அருகில் இருப்பதன் காரணமாக,  ஒரு இடத்தில் காந்தப் புலம் உருவாகும். தூண்டப்பட்ட காந்தம் காரணம் எனில், சம்பந்தப்பட்ட மின்னோட்டத்தை நிறுத்தினால், தூண்டப்பட்ட காந்தப் பண்பு மறைந்து, காந்தப்புலமும் மறைந்து விடும். நிலையான காந்தம் காரணமாக‌ உண்டாகும் காந்தப்புலத்திற்கு அந்த ஆபத்தில்லை. 
 
தமிழ்ப் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் துண்டித்து, திரிந்த மேற்கத்தியப் பண்பாட்டுடன், ஆங்கிலவழிக் கல்வியில் தமிழ்நாட்டில் பெரும்பாலான குழந்தைகள் படித்து வரும் சூழலில், 'தமிழ், தமிழுணர்வு' என்று பொது அரங்கில் வெளிப்படுபவை எல்லாம், தூண்டப்பட்ட காந்தம் மூலம் உருவான காந்தப்புலம் போன்றதே ஆகும். தூண்டபட்ட காந்தமாக செயல்படும் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் 'கிடைத்து வரும்' பணமும் ஆதரவும் வற்றும்போது, அவர்களால் தூண்டப்பட்ட காந்தப்புலம் போன்ற‌, தமிழ், தமிழ் உணர்வும், வற்றிவிடும்.

அதிலும் தமது குடும்பப் பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்துக் கொண்டு, 'தமிழ், தமிழ் உணர்வு' தூண்டி வரும் கட்சிகளும், தலைவர்களும், இயல்பான நிலையான தமிழ், தமிழ் உணர்வு காந்த‌த்தையும் பலகீனப்படுத்தி வருபவர்கள் ஆவர்.

'இயல்பு' என்ற சொல் சங்க இலக்கியங்களில் ஆழமான பொருளில் பயன்படுத்தப்பட்ட சொல் ஆகும்.  உதாரணத்திற்காக சில சான்றுகள்;

1.     மரபுடன் தொடர்புடைய இயல்பு பற்றி;
'மரபின் தன் இயல் வழா அது,' - புறநானூறு25:2

2.    ஒரு நாட்டின் நல்லாட்சிக்கான இலக்கணத்தின் தொடர்பில்;
 'இயல்பு உளி கோலோச்சு மன்னவன் நாட்ட' - திருக்குறள் 545

3.    ஒரு மனிதர் வாழ்வுடன் உள்ள தொடர்பில்;
'இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன்' - திருக்குறள் 47

ஒரு மனிதரின் வாழ்க்கையானது, எந்திர மனிதராக ‌-  'ரோபோ' (Robot)வாக-  இல்லாமல், பொருளுள்ள(meaningful) வாழ்வாக அமைய‌, தேவைப்படும் 'முதுகெலும்பு' போன்றது, 'இயல்பு' ஆகும்.

இயல்போடு ஒட்டி வாழும் மனிதர்கள் ஒரு சமூகத்தில் பெரும்பாலானவர்களாக‌ இருக்கும், ஒரு சமூகத்தில் வெளிப்படும் தாய்மொழிப் பற்று, பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்டவற்றின் வலிமையானது, ஒரு நிலையான காந்தம் காரணமாக உருவான காந்தப்புலம் போன்று நிலையாக இருக்கும்.

மாறாக, தமது இயல்பை மறந்து, சமூக ஒப்பிடு(Social Comparison)  நோயில் சிக்கி, ஒழுக்க மதிப்பீடுகளைத் துறந்து, தமக்கு வரும் செல்வம், செல்வாக்கை இறுகப் பற்றி, எந்திரர்களாக வாழும் மனிதர்கள் பெரும்பாலாக இருக்கும்,  ஒரு சமூகத்தில் வெளிப்படும் தாய்மொழிப் பற்று, பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்டவற்றின் வலிமையானது, ஒரு தூண்டப்பட்ட‌ காந்தம் காரணமாக உருவான காந்தப்புலம் போன்று, எப்போது வேண்டுமானலும் நிலை குலைந்து மறையும் ஆபத்தில் சிக்கி இருக்கும்.

'சீர்திருத்தம், புரட்சி' என்ற பேரில், தாய்மொழி தமிழ்ப்பற்றை 'தாய்ப்பால் பைத்தியம்' என்று கேலி செய்து, 'வீட்டு மொழியாக ஆங்கிலத்தைப் பயன்படுத்தி உருப்படலாம்' என்றும், தமிழ்ப் பாரம்பரியம், பண்பாடு போன்றவையெல்லாம் தமிழர்க்குக் கேடானவையென்றும் மேற்கொள்ளப்பட்ட 'திராவிட' பிரச்சார பின்னணியில், திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்னரே, ஆங்கில வழிக் கல்வி புற்றீசலாக வளர்ந்து தமிழ்நாட்டை அடிமைப் படுத்தியுள்ளதா?அந்த வளர்ச்சியின் ஊடே, திரிந்த மேற்கத்திய பண்பாட்டிலும், சமூக ஒப்பீடு நோயிலும் சிக்கியவர்களின் எண்ணிக்கையும் 'அதிவேகமாக' அதிகரித்துள்ளதா? ஒரு மனிதரின் இயல்புக்கும், அவரின் தாய்மொழிக்கும், அவர் வாழும் சமூகத்தின் பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றிற்கும் இடையிலான தொடர்பு பற்றிய புரிதலின்றி, அந்த தொடர்பில் இருந்த குறைபாடுகளை அடையாளம் கண்டு களைவதற்குப் பதிலாக, அத்தொடர்பையே நோயாகக் கருதி அகற்ற முனைந்து, பெரியார் ஈ.வெ.ரா மேற்கொண்ட 'சமூக சீர்திருத்தமானது,இயல்பு என்ற முதுகெலும்பு முறிந்த தமிழர்களின் வளர்ச்சிக்கும், அந்த பின்னணியில் திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களின் வளர்ச்சிக்கும் காரணமானதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

பொதுப் பிரச்சினைகளை வைத்து 'புதுப்பணக்காரர்' ஆகும் செயல்நுட்பம் தமிழ்நாட்டில் திராவிடக்கட்சி ஆட்சிகளில் அரங்கேறி, அதன் தொடர்ச்சியாக ' தமிழ், தமிழ் உணர்வு, பகுத்தறிவு, தலித், இந்துத்வா, இஸ்லாம், ஈழம், மனித உரிமை' உள்ளிட்டு அனைத்து பிரச்சினைகளிலும் 'அவரவர் தகுதி, திறமை' களுக்கு ஏற்ப,தமிழ்நாட்டில் 'வீரியமாக' வளர்ந்து வரும் புதுப்பணக்காரர்கள், பொது அரங்கில் 'எதிரெதிர்' நிலைப்பாடுகளில் இருந்தாலும், 'உள்மறையாக' 'பரிமாற்ற நட்புறவில்' வாழ்வியல் புத்திசாலிகளாக பயணிப்பது உண்மையா? அவர்கள் குடும்பப் பிள்ளைகள் எல்லாம் ஆங்கிலவழிக் கல்வியில், திரிந்த மேற்கத்திய பண்பாட்டில் வாழ்வதில் ஒற்றுமையாக உள்ளார்களா? அந்த போக்குகளுக்கும், தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் வீழ்ச்சிக்கும் தொடர்பு இருப்பது உண்மையா?

மரபுடன் தொடர்புடைய இயல்பு பற்றி புறநானூறு தெரிவித்தது;ஒரு நாட்டின் நல்லாட்சிக்கான இலக்கணத்தின் தொடர்பில் இயல்பு பற்றியும், ஒரு மனிதர் வாழ்வுடன் உள்ள தொடர்பில் இயல்பு பற்றியும் திருக்குறள் தெரிவித்தவை; ஆகிய இயல்பு என்ற முதுகெலும்பு முறிந்த தனி மனிதர்களின் 'செல்வாக்கில்' தமிழும், தமிழர்களும் வீழ்ச்சிப் பாதையில் பயணிக்கின்றனவா?

என்பது போன்ற ஆய்வுகளை விருப்பு, வெறுப்பின்றி, சமூகப் பொறுப்புடன் மேற்கொண்டால் தான், அந்த வீழ்ச்சியைத் தடுத்து, வளர்ச்சி நோக்கி திசை திருப்ப முடியும்.

ஒரு மனிதரின் இயல்பு என்பது அவர் வாழும் வாழ்க்கையில் வெளிப்படும். 

குறிப்பாக, மற்றவர் அவரின் இயல்பைப் பற்றி பற்றி தெரிந்து கொள்ள உதவும் 'எக்ஸ் ரே' (X Ray) கருவி போல,  அவர் மற்ற மனிதர்களுடன் உரையாடுவது பற்றிய 'காட்சி அறிவு'(observation)  உதவும். 

இரண்டு மனிதர்களுக்கிடையிலான உரையாடலின் தன்மையானது, அந்த இரண்டு மனிதர்களின் மனங்களில் உள்ள தேவைகளையும்(needs), ஈடுபாடுகளையும் (interests) , அவர்களுக்கிடையிலான உறவையும் பொறுத்ததாகும். ஒரு சமூகத்தில் உள்ள தனி மனிதர்களிடையே நடக்கும் உரையாடல்களின் பொதுவான‌ தன்மையானது, அந்த சமூகத்தின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சிப் போக்குகளைப் பிரதிபலிப்பதாக அமையும்.

சமூகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதரும் தமது இயல்பை உணர்ந்து, இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் (Passions)  வாழும் போது, அதற்கேற்ற தேவைகளும், ஈடுபாடுகளும் அவர்களின் மனங்களில் இடம் பெறுவதன் காரணமாக, அதற்கேற்ற வகையில் அத்தகைய மனிதர்களிடையே நடக்கும் உரையாடல்கள் அமையும்.

இன்னொருவருடன் உரையாடும்போது, அவர் செல்வம், செல்வாக்கில் உயர்ந்தவர் என்பதற்காக, அவரிடம் வாலாட்டாமல், அந்த உரையாடல்களில் வெளிப்படும் தவறுகளைச் சுட்டிக் காட்டி, இயல்பாக உரையாடுபவர்கள் எல்லாம், சமூகத்தில் 'இயல்பு' என்ற முதுகெலும்புடன் வாழ்பவர்கள் ஆவர். தாம் செல்வம், செல்வாக்கில் உயர்ந்தவர் என்பதால், மற்றவர் தம்மிடம் வாலாட்டி, தாம் சொல்பவற்றையெல்லாம் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்த்து வாழ்பவர்கள் எல்லாம், தமது இயல்பைத் தொலைத்து வாழும் மனநோயாளி எந்திரர்கள் ஆவர்.

தமிழ்நாட்டில் 'வாழ்வியல் புத்திசாலித்தனம்' என்று எண்ணி ஏமாற்றியும், அதே போக்கில் தமக்கு தெரியாமலேயே 'ஏமாந்தும்' வாழும் தமிழர்கள் 'அதிவேகமாக' அதிகரித்து வருகிறார்கள். 'ல‌ஞ்சம்' என்ற வலைப் பின்னலில் 'புத்திசாலி'த் தனமாக 'இணைந்து' தத்தம் வசதி, வாய்ப்புகளை 'அதிவேகமாக' வளர்த்து வரும் அந்த புத்திசாலிகளின் குடும்பங்களில் ஏற்படும் ( திருட்டு,கொலை, கொள்ளை, மோசடி, நோய்கள், மரணம் உள்ளிட்ட பல) இழப்புகளுக்கும்,  தமிழ்நாட்டில் 'லஞ்ச வலைப்பின்னலின்' வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பு பற்றிய புரிதல் இல்லாத முட்டாள்களாக அந்த 'புத்திசாலிகள்' வாழ்கிறார்கள்.

குற்ற உணர்வே இல்லாமல், அவர்கள்,  நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்முறை, கொலை, கொள்ளை, திருட்டு, லஞ்சம் ஆகியவற்றில் தமது பங்களிப்பு பற்றிய 'அறியாமையில்', அவை தொடர்பாகக்  கவலைப்பட்டும் கருத்து தெரிவிக்கிறார்கள்.

அத்தகையோருடன் உரையாடுவதே 'தலைவலி' என்பது எனது அனுபவமாகும். 'சமூக ஒப்பீடு' நோயில் சிக்கி, நம்மிடம் உரையாடுபவரிடம், நாம் இயல்பாக உரையாடுவது என்பது சிக்கலான தகவல் பரிமாற்ற நிகழ்வாக (problematic  communication) அமைந்து விடுகிறது. அவருக்கான பலன்கள் தரும் சமூக நிலையில் நாம் இருப்பதாக அவர் கருதி, நம்மிடம் வாலாட்டி உரையாடினாலும், இல்லையெனில் அவரது 'திராவிட மனநோயாளி சமூக உயர்வு' ஏக்கத்திற்கு தீனியாக, அவர் நம்மை விட எப்படி 'உயரமாக' வாழ்கிறார் என்பதை நமக்கு 'விலாவாரியாக' விளக்கி உரையாடினாலும், அவருடன் இயல்பாக உரையாட முனையும் ,- அந்த 'சமூக ஒப்பீடு' நோயில் சிக்காமல் வாழும், -   நமக்கு தலைவலி ஏற்படுவதில் வியப்பில்லை.

தமிழ்நாட்டில் மனிதர்களுக்கிடையில் நடந்த உரையாடல்களின் பொதுத்தன்மையானது, 1967க்கு முன் எப்படி இருந்தது,இன்று எப்படி இருக்கிறது என்பது வயதானவர்களுக்கு தெரியும். 

கிராமப்புற பின்னணியுள்ளவர்கள் 'மழை, விவசாயம்' பற்றியும், நகர்ப்புறத்தில் 'கல்வி' பற்றியும், புலமையாளர்கள் தாம் புதிதாகப் படித்த நூல்கள், தெரிந்து கொண்ட தகவல்கள் பற்றியும், 1967க்கு முன் உரையாடலின் பெரும்பகுதி இருக்கும். புதிதாக நிலம், வீடு, 'ஷேர்' (share), வருமானம், சினிமா, (தமிழ்நாட்டில் திராவிட ஆட்சிகளில்,  ஆங்கிலவழிக் கல்வியுடன், கிராமப்புறங்கள் உள்ளிட்டு எங்கினும் 'அதிவேகமாக' வளர்ந்த 'நோயான') கிரிக்கெட், பொழுது போக்கு பற்றியவை எல்லாம் உரையாடலில் , இன்று உள்ளதைப் போல, 'ஆதிக்கம்' செலுத்தியதில்லை. இன்று அவற்றில் நமக்கு ஆர்வம் இல்லையென்றால், தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்களுடன் நாம் உரையாடுவதற்கான பொருள்(content)  இருக்காது. 

இயல்பு என்ற முதுகெலும்பு, தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களிடையே பெரும்பாலும் முறிந்து வாழ, தமிழரல்லாத பிற மாநிலத்தவர்கள் தமது இயல்பாடு ஒட்டி, தமது தாய்மொழிப் பற்றுடன் வாழ்கிறார்களா?  அறிவுத் துறையிலும், உடலுழைப்புத் துறையிலும் தமிழ்நாட்டிலேயே தமிழர்களை விட, பி மாநிலத்தவர்கள் முன்னேறி வருகிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (refer post dt. December 3, 2014;’ 'காலனிய' மன நோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும் (2) தமிழ்நாடு அறிவுத் துறையிலும், உடலுழைப்புத் துறையிலும் பதர்க்காடாக வளர்ந்து வருகிறதா?’)

இயல்பு என்ற முதுகெலும்புடன் வாழ்பவர்களைத் தேடி சென்று, நட்பு கொண்டு, நமது சமூக வட்டத்தை நெறிப்படுத்தி வாழ்வதன் மூலமே, மனித வாழ்வின் அச்சாணியான அந்த முதுகெலும்பைத் தொலைத்து வாழ்பவர்களை, நமது சமூக வட்டமாகக் கொண்டு மூச்சுத் திணற‌லில் சிக்குவதைத் தவிர்க்க முடியும். (refer post dt. September 14, 2014;’ ‘தமிழ்நாட்டில் சமூக மூச்சுத் திணறலின் முடிவும், திறந்த காற்றோட்டமும்’ - ( The end of the social suffocation in Tamilnadu & Free Ventilation)’.  அத்தகைய சமூக மூச்சுத் திணறலிலிருந்து விடுபட்டவர்களே, தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு, உருப்படியான பங்களிப்பு வழங்க முடியும்.

No comments:

Post a Comment