Wednesday, April 22, 2020


தாய்த்தமிழ்ப்பள்ளிகள் தமிழின் மீட்சிக்கா? வீழ்ச்சிக்கா?



மத்திய அரசு 'இந்தி மட்டுமே மத்திய அரசின் ஆட்சி மொழி' என்று அறிவித்தாலும், தமிழ்நாட்டில் எந்த அமைப்பும் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்த முடியுமா? நடத்தினால் பொதுமக்களின் கோபத்திற்கும் வெறுப்புக்கும் உள்ளாக நேரிடுமா? என்ற கேள்விகள் எழும் நிலையில் தமிழ்நாடு உள்ளது. அப்படி போராட்டம் நடத்தினாலும், " உங்கள் பிள்ளைகள் மட்டும் ஆங்கில வழியில் இந்தியும் படித்து உருப்பட வேண்டும். எங்க பிள்ளைகள் மட்டும் வீணாகப் போகணுமா?" என்ற கேள்விகளைச் சந்திக்க நேரிடதா? (‘தமிழின் மரணப் பயணத்தைத் தடுத்து நிறுத்தும்         சமூக ஆற்றலுக்கு தமிழ்நாட்டில் வழியுண்டா?’;

1990களின் பிற்பகுதியில் சென்னையில் விடுதலை இராசேந்திரன் வீட்டிற்கு அடிக்கடி செல்வேன். அப்போது ஒருமுறை, பேரா.சரசுவதி என்னிடம் தாய்த்தமிழ்ப்பள்ளிகள் தொடர்பான தொடக்க விழா அழைப்பிதழை காட்டினார். அதில் புரவலர்கள் பட்டியலில் சரசுவதி உள்ளிட்டு எனக்கு தெரிந்த பல பெயர்கள் இருந்தன. அந்த புரவலர்களின் குடும்பப் பிள்ளைகள் எல்லாம் அப்போது ஆங்கிலவழிப்பள்ளிகளில் படித்ததை நான் அறிவேன். நான் சரசுவதியிடம், " என்ன மேடம், தாய்த்தமிழ்ப்பள்ளி புரவலர்கள் வீட்டுப்பிள்ளைகள் எல்லாம் ஆங்கிலவழியில் படித்து உருப்படணும். குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகளுக்காக தமிழ்வழிப்பள்ளிகளா? " என்று கேட்டேன். எதையும் வெளிப்படையாக பேசுவது எனது வழக்கம். அவர் சிரித்துக்கொண்டு மழுப்பினார்.

முதல்வராக இருந்த ஜெயலலிதா அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்தார். உடனே  தினமணி நாளிதழில் சுமார் 15 தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழ் அறிஞர்கள் கூட்டாக அதைக் கண்டித்து, அறிக்கை வெளியிட்டார்கள். அவ்வாறு அந்த அறிக்கையில் கையெழுத்திட்டவர்களின் குடும்பப் பிள்ளைகள் எல்லாம் ஆங்கில வழிக்கல்வியில் படிக்கையில், ஏழைக் குழந்தைகளுக்கும் அந்த வாய்ப்பினை அரசு தருவதை, அவர்கள் எல்லாம் எதிர்ப்பதில் நேர்மையிருக்கிறதா? என்ற வகையில், நான் எழுதிய மடலும், அப்போது தினமணியில் வெளிவந்தது
(‘தமிழ்வழி மரணப் பயணம் பற்றி சோகமடைவதற்கும், கோபப்படுவதற்கும், நமக்குள்ளயோக்கியதை?’;

தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) மீட்சி நோக்கி, என்னால் இயன்ற முயற்சிகளை நான் மேற்கொண்டு வருகிறேன்

தமிழ்நாட்டில் உள்ள தாய்த்தமிழ்ப்பள்ளிகளின் பட்டியல் கிழ்வரும் இணையதளத்தில் உள்ளது.

எனக்கு கிடைத்த உள்ளீடுகளின் (inputs) அடிப்படையில், கீழ்வரும் கேள்விகளை முன்வைக்கிறேன்.

மேற்குறிப்பிட்ட தாய்த்தமிழ்ப்பள்ளிகளின் பொறுப்பாளர்கள், புரவலர்கள், மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் தத்தம் மனசாட்சிக்கு உட்பட்டு வெளிப்படுத்தும் விடைகள் எல்லாம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.

1. தாய்த்தமிழ்ப்பள்ளிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் புரவலர்களின் வீட்டுப்பிள்ளைகள் எல்லாம் தமிழ்வழியில் படித்தார்களா? படிக்கிறார்களா?

2.தாய்த்தமிழ்ப்பள்ளிகளில் அந்தந்த பகுதிகளில் உள்ள தமிழ் ஆர்வலர்களாக உள்ள பேராசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வசதி மிகுந்தவர்கள் வீட்டுப்பிள்ளைகள் படிக்கிறார்களா? அல்லது அரசுப்பள்ளிகளில் சேர வேண்டிய மாணவர்களை ஈர்த்து, அரசுப்பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகிறதா?

தாய்த்தமிழ்ப்பளிகளின் பொறுப்பாளர்களாக இருந்து கொண்டு, தமது பிள்ளைகளை எல்லாம் தமிழ்வழியில் படிக்க வைத்த, சேலம் மேட்டூர் தமிழ்க்குரிசில் போன்றவர்கள் எல்லாம் விதி விலக்கு, என்பது உண்மையானால்;

அவ்வாறு படிக்க வைக்காத பொறுப்பாளர்களின், புரவலர்களின் சமூக நேர்மையானது கேள்விக்குள்ளாகாதா? அத்தகையோரின் பொதுவாழ்வு வியாபாரஉள்மறைத்திட்டத்திற்கு தாய்த்தமிழ்ப்பள்ளிகள் எல்லாம் இரையாகி வருகின்றனவா? என்ற விவாதத்தினை இனியும் தாமதப்படுத்துவதானது தமிழ்வழிக்கல்வியின் மீட்சிக்கு நல்லதா? கெட்டதா?

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தாய்த்தமிழ்ப்பள்ளிகளில், தாய்த்தமிழ்ப்பள்ளிகளின் பொறுப்பாளர்கள், புரவலர்கள், மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் வீட்டுக்குழந்தைகள் எல்லாம் தமிழ்வழியில், அதிலும் அந்த ஊரில் வாழ்பவர்களின் வீட்டுப்பிள்ளைகள் எல்லாம் அங்குள்ள தாய்த்தமிழ்ப்பள்ளிகளில் படித்தவர்களாகவும், படிப்பவர்களாகவும் இருந்தால், அது போன்ற தாய்த்தமிழ்ப்பள்ளிகள் மூலமாகவே தமிழ்வழிக்கல்வியும் (எனவே) தமிழும் மீட்சி திசையில் பயணிக்கும்.

பிற தாய்த்தமிழ்ப்பள்ளிகளில் உள்ள பொறுப்பாளர்களும், புரவலர்களும் அந்த திசையில் பயணிக்க, நம்மால் இயன்ற சமூக அழுத்தம் தர வேண்டும்.

தாய்த்தமிழ்ப்பள்ளிகளின் பொறுப்பாளராக இருந்து கொண்டு, தமது பிள்ளைகளை ஆங்கிலவழியில் படிக்க வைத்து, அதிலும் சிலர் ஆங்கிலவழிப்பள்ளி நடத்தும் நபர்கள் எவரேனும் இருந்தால், அவர்களை எல்லாம் கண்டித்து திருத்த வேண்டும். திருந்தவில்லை என்றால் ஒதுக்க வேண்டும்.

தமிழ் அமைப்புகள் செயல்படும் ஊர்களில் எல்லாம் கீழ்வரும் முயற்சிகள் மேற்கொள்வதும் சாத்தியமே.

அந்த ஊரில் பொதுஅரங்கில் பேச்சிலும் எழுத்திலும் தம்மை தமிழ் ஆர்வலர்களாக வெளிப்படுத்தி வருபவர்களின் குழந்தைகள் எல்லாம் குறைந்த பட்சமாக ஆரம்பப்பள்ளி வரையிலாவது தமிழ்வழியில் படிக்க வைக்க வேண்டும். ஏற்கனவே ஆங்கிலவழியில் படிக்க வைத்தவர்கள் எல்லாம், அதை வெளிப்படுத்தி, பகிரங்கமாக பொதுமன்னிப்பு கோரி, அதற்கு தண்டனையாக தம்மால் இயன்ற அளவு, அந்த ஊரில் உள்ள தமிழ்வழிப்பள்ளிக்கு நன்கொடை வழங்க வேண்டும்.

அந்த ஊரில் உள்ள தமிழ் அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் சிறப்பு அழைப்பாளர்களையும் மேற்குறிப்பிட்ட 'தமிழ்வழிக்கல்வி மீட்சி செயல்முறைக்கு' உட்படுத்த வேண்டும்.

மேற்கண்டவாறு செயல்படும் துணிச்சலற்ற தமிழ் அமைப்புகளை எல்லாம், தமிழ்வழிக்கல்வியின் மீட்சியில் உண்மையான அக்கறை உள்ளவர்கள் எல்லாம் ஒதுக்கத் வேண்டும். அப்போது தான் இரட்டைவேடப்போக்கில் தமிழ் அமைப்புகளும் தமிழ் ஆர்வலர்களும் செயல்பட வெட்கப்படும் சமூக சூழல் உருவாகும்.

தமிழ்வழிக்கல்வி மீட்பு முயற்சிக்கு வெளிப்படும் ஆதரவுகளை எல்லாம் ஒருங்கிணைக்க வேண்டும்.

தமிழ்/திராவிட கட்சிகள் மற்றும் விடுதலைப்புலி ஆதரவாளர்களில் சிலர், இந்துத்வா ஆதரவு அமைப்புகளிடம் இருந்து வெளிப்படும் ஆதரவை ஏற்கத் தயங்கும் போக்கும் உள்ளது.

தத்தம் கட்சியில் நலனுக்கு உதவும் உள்மறைத்திட்டமாக தமிழ்வழிக்கல்வி ஆதரவை வெளிப்படுத்துவது இழிவான, தமிழ்வழிக்கல்வியின் மீட்சிக்கு எதிரான அணுகுமுறையாகும். அதுவே திராவிட அரசியலில் தமிழைச் சீரழித்த அணுகுமுறையாகும்

அகில இந்திய ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் வெளிப்பட்டு வரும் 'தாய்மொழிவழிக்கல்வி' ஆதரவினை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி, தமிழ்நாட்டு இந்துத்வா அமைப்புகளில் தமிழ்வழிக்கல்வி ஆதரவினை வளர்க்க வேண்டும்

மத்திய அரசின் புதியக்கல்விக் கொள்கையில் இருந்த 'ஆரம்பப் பள்ளிகள் வரை தாய்மொழிவழிக்கல்வியைக் கட்டாயமாக்கும்' பிரிவை ஆதரிக்காமல், ஒட்டு மொத்தமாக புதியக்கல்விக் கொள்கையை எதிர்த்ததால் யாருக்கு லாபம்? ஆங்கிலவழிக்கல்வி வியாபாரிகளுக்கே லாபம்.

தமிழ்நாட்டில் விளையாட்டுப் பள்ளி(Play School)  முதல் ஆங்கில வழியில் படித்து, இன்று +2 மற்றும் கல்லூரி மாணவர்களாயிருக்கும் பலருக்கு,  தமிழில் சரளமாக எழுதவும், படிக்கவும் தெரியாது, என்பது தமிழ் அழிவு சுனாமி அறிகுறியாகும்.

'2100 ஆம் வருடத்திற்குள் உலக மொழிகளில் 90% மறைந்து விடும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது' என்ற தகவலின் அடிப்படையில்," ‘மொழி பலகீனமாதல்’ (Language attrition http://en.wikipedia.org/wiki/Language_attrition) என்ற போக்கு தமிழைப் பொறுத்தமட்டில் அதிவேகமாக உள்ளது, இந்திய மொழிகளில் இந்த போக்கில் தமிழ் முதலிடத்தில் இருந்தால் வியப்பில்லை. அது உண்மையென்றால், 2100க்கு முன்னேயே இந்திய மொழிகளில் மரணமடைவதில் தமிழ் முதல் இடத்தைப் பிடித்தாலும் வியப்பில்லை

எனவே விருப்பு வெறுப்புகள் மற்றும் கொள்கை வேறுபாடுகளை எல்லாம் ஒதுக்கி வைத்து, தமிழ்வழிக்கல்வி மீட்சிக்கு வெளிப்படும் ஆதரவுகளை எல்லாம் ஒன்றிணைத்து, மேற்குறிப்பிட்ட முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

அதற்கு வாய்ப்பில்லை என்றால், 2100-இல் தமிழ்நாடு இருக்கும. தமிழ் மொழியும், தமிழ்ப் பாரம்பரியமும், பண்பாடும் இழந்த தமிழர்கள், தமிங்கிலீசர்களாகி விதி விலக்குகள் தவிர்த்து, பெரும்பாலும் தரகர்களாகவும், திருடர்களாகவும் வாழ, தமிழ்நாட்டில் குடியேறிய பிற மாநிலத்தவர், வெளிநாட்டினர் வசம் அறிவு உழைப்பும், உடல் உழைப்பும், அசையாச் சொத்துக்களில் பெருமளவும் இருக்கும்

No comments:

Post a Comment