Saturday, April 7, 2018


தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களை  ஊழல்/தரக்குறைவு நோய்களில் இருந்து மீட்கும் ஆளுநர்;


மாணவர்களின் வேலைவாய்ப்புகளை கெடுக்கும் கட்சித் தலைவர்கள்?



'தமிழ்நாட்டில் துணை வேந்தர் பதவிகள் எல்லாம் ஏலத்தில் விற்கப்பட்ட போக்கிலிருந்து மாறி;

ஆளுநர் தமது சட்டத்திற்குட்பட்ட அதிகாரத்தில் உன்னிப்பாக கவனித்து, துணைவேந்தர், பதிவாளர் பதவிகள் எல்லாம், நீண்ட காலத்திற்குப் பின் ஊழலுக்கு இடமின்றி, தகுதி, திறமையின் அடிப்படையில் நிரப்பப்படுவதாக நான் அறிகிறேன்.' என்பதையும்;

‘இந்தியாவில் புதிதாக ஒரு பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு சிறப்பான முன்னுதாரணமாக, முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் தொடங்கப்பட்ட தமிழ்ப்பல்கலைக்கழகம் இருக்கிறது; மிக மோசமான முன்னுதாரணமாக முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் தொடங்கப்பட்ட 'தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகம்' இருக்கிறது.’ என்பதையும்;

முனைவர் பட்டம் பெறாத, பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் இல்லாத,

வீணையிலும் சிட்டிபாபு, பாலச்சந்தர் போன்றவர்களுடன் ஒப்பிடமுடியாத, சிறுவயதில் வீணை வாசித்து புகழ் பெற்றவரான காயத்ரியை;

புதிதாக தொடங்கப்பட்ட‌ 'தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகத்தின்'  துணைவேந்தராக்கியதானது;

என்னால் இன்றுவரை சீரணிக்க முடியாத பெரும் தவறாகும்; காயத்ரி பிராமணராக இருந்தாலும், பிராமணரல்லாதோராக இருந்தாலும்.’ என்பதையும்;

ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்

'காயத்ரியை துணை வேந்தராக‌ நியமித்த போது, அதனால் விளையும் பாதகங்களைச் சுட்டிக்காட்டும் அறிவுள்ளவர்களை எல்லாம் மீடியா இருளில் தள்ளி, மீடியா வெளிச்சத்தில் வாழும் தலைவர்களும், எழுத்தாளர்களும், பேச்சாளர்களும், கவிஞர்களும் 'நமக்கேன் வம்பு?' என்று முதல்வர் ஜெயலலிதாவின் தவறான முடிவிற்கு 'மெளன ஒப்புதல்' வழங்கி விட்டு, இன்று காயத்ரியை விட, புஷ்பவனம் குப்புசாமியை விட, யு.ஜி.சி விதித்துள்ள தகுதிகளுள்ள நபரை தேர்ந்தெடுத்துள்ள போது, அறிவுபூர்வ பார்வையின்றி, 'சாதி, பிராமணர் - பிராமணரல்லாதோர்' என்பது போன்ற முட்டாள்த்தனமான சர்ச்சைகளை கிளப்புபவர்கள் இருக்கும் வரை, தமிழ்நாடு உருப்பட முடியுமா?'  (http://tamilsdirection.blogspot.sg/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_20.html) 

இதுவரை தமிழ்நாட்டில் துணைவேந்தர் பதவிகள் பணத்திற்கு விற்கப்பட்டு, ஆளுங்கட்சியும் ஆளுநரும் பங்கு போட்டபோது போராடாதவர்கள்

அந்த பதவியில் அமர்ந்தவர்கள் கொடுத்த பணத்திற்கு பன்மடங்கு லாபம் பெற்று பேராசிரியர் பதவிகள் விற்பனை உள்ளிட்ட ஊழல்களில் ஈடுபட்டபோது, அதை எதிர்த்து போராடதவர்கள்; ('புரோக்கராக மாறிய பேராசிரியை.. மதுரை பல்கலையில் ஒளிந்திருக்கும் கருப்பு ஆடு... அதிர்ச்சியில் பெற்றோர்' : https://tamil.oneindia.com/news/tamilnadu/who-is-the-black-sheep-hides-madurai-kamarajar-university-317317.html )

முதல் முறையாக அந்த சீர்கேட்டிலிருந்து தமிழ்நாட்டின் உயர்க்கல்வியை மீட்கும், இன்றைய‌ ஆளுநர் முயற்சியை எதிர்த்து போராடுகிறார்களா?  துணைவேந்தர் பதவிகளை ஏலம் விட்டு சம்பாதித்த ஆண்ட/ஆளுங்கட்சிகளின் அரசியல் கொள்ளையர்களை எதிர்த்து இதுவரை பேசினார்களா? இனியாவது பேசுவார்களா?

அந்த அளவுக்கு சீர்கெட்ட தமிழ்நாட்டில், ..டி, என்..டி பேராசிரியர்களில் தமிழ்நாட்டில் துணைவேந்தர் பதவியை ஏற்பவர்கள் கிடைப்பது அரிது. 'சீர் கெட்ட பல்கலைக்கழகங்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதே அவமானம்', என்று கருதி, அங்கு நான் ஆய்வுத்திட்டங்கள் (R & D Projects) மேற்கொள்வதையும், ஆய்வுரைகள் நிகழ்த்துவதையும் தவிர்த்து வருகிறேன்;

இந்தியாவில் உயர் கல்வியில், 'இசைத்தகவல் தொழில்நுட்பம்' (Music Information  Technology) என்ற புதிய பாடத்தை அறிமுகப்படுத்தி, அது தொடர்பான ஆய்வுத்திட்டங்களும் (R & D Projects) மேற்கொண்டு வரும் சூழலில். (http://drvee.in/ ) மனிதருக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து, அதற்கும் மேலான நிலையில் உள்ளவர்கள் எல்லாம், சமூக மீட்சிக்காக இழப்புகளை விரும்பி ஏற்று பயணிப்பதா? 'அம்பலமாகாத கள்வராக' சமூக சீரழிவிற்கு 'வாலாகி', செல்வத்தைப் பெருக்கும் சமூக கிருமியாக பயணிப்பதா? என்பதில், முதல் கேள்வியை விரும்பி பயணிப்பதே, சாகும் வரை குற்ற உணர்ச்சியின்றி,  இன்ப வாழ்க்கை வாழ்வதன் இரகசியம்; என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து நான் வாழ்கிறேன்.

காவிரி பிரச்சினை காரணமாக, தமிழர்களை எல்லாம் எதிரிகளாக சித்தரிக்கும் கர்நாடக அரசியல்வாதிகளைப் போலவே, கன்னடர்களை எல்லாம் எதிரிகளாக சித்தரிக்கும் தமிழக அரசியல்வாதிகளும் சமூகக் கேடான 'செனோபோபியா' (https://en.wikipedia.org/wiki/Xenophobia  ) மனநோயாளிகள் ஆவர். 

இந்தியாவில் தாய்மொழிவழி அடையாளங்களான 'தமிழர்', 'கன்னடர்' போன்றவை எல்லாம் சரியான தேசக்கட்டுமான சமூக செயல்நுட்பத்தில் 'இந்தியர்' என்ற அடையாளத்துடன் இணக்கமான முறையில் வளர்த்தெடுக்கப்படாததையே, காவிரிச் சிக்கல் உள்ளிட்ட மாநிலங்களுக்கிடையில் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல், உச்சநீதி மன்றத்தையே கேலிக்கூத்தாக்கி வரும் சிக்கல்களும், பிரிவினை முயற்சிகளும் உணர்த்துகின்றன. நேரு குடும்ப வாரிசு நோயில், இந்திய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாகமாநிலக்கட்சிகள் வளர்ந்ததற்கும் அதுவே காரணமாகும்.’('இந்தியாவில், தமிழ்நாட்டில், 'தேசக் கட்டுமானச் சிக்கல்'  (Nation Building Crisis)'; http://tamilsdirection.blogspot.sg/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_28.html ) தான் வாழும் சமூகத்தில், தாம் அளிக்க வேண்டிய ஆக்கபூர்வ பங்களிப்பை, சுயலாப நோக்கின்றி, பாராட்டுக்கும் புகழுக்கும் ஏங்காமல், மனநிறைவுடன் செயல்படுத்துபவை எல்லாம் தேச கட்டுமானத்திற்கு உதவுபவையாகும்; ‘இயல்புகள், தகுதி, திறமைகளுக்குப் பதிலாக, லஞ்சம், செல்வாக்கு, பலவகையான தரகுப் பணிகளில் திறமை, எந்த தவறுகளையும் 'அஞ்சாமல்' ( 'அச்சம் என்பது மடமையடா' என்ற போக்கில்) செய்யும் திறமை போன்றவற்றில் 'திறமைசாலிகளே', குடும்பம், கட்சி, நிறுவனம் உள்ளிட்டு சமுகத்தில் உள்ள அனைத்து அமைப்புகளிலும் முக்கிய இடங்களை ஆக்கிரமித்த பின், அந்த சமுகம் அழிவுபூர்வ திசையில் பயணிப்பதில் வியப்புண்டோ?‘ (http://tamilsdirection.blogspot.sg/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html )

தங்கள் குடும்பப் பிள்ளைகளை எல்லாம் படித்தாலும், படிக்காவிட்டாலும் 'செட்டில்' செய்து, ஊரான் வீட்டுப்பிள்ளைகளை போராட்டங்களில் ஈடுபடுத்தும் போக்கில் உள்ளவர்களை ஒதுக்காமல், தமிழ்நாடு முன்னேற முடியுமா? மாணவர்களை ஈடுபடுத்தாமல், பெரியவர்கள் முன்னெடுத்த 1938 இந்தி எதிர்ப்பு போராட்டமானது, பொதுமக்களுக்கும் பொதுச்சொத்துக்களுக்கும் சேதமின்றி, கட்டாய இந்தியை ஒழித்து வெற்றி பெற்றதா? (http://tamilsdirection.blogspot.sg/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html ) பெரியவர்கள் ஒதுங்கி, மாணவர்கள் முன்னெடுத்த 1965 இந்தி எதிர்ப்பு போராட்டமானது, பொதுமக்களுக்கும் பொதுச்சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்து, குப்பன், சுப்பன் வீட்டுப்பிள்ளைகள் பலரை காவு கொடுத்து, 1967இல் தி.மு.க-வை ஆட்சியில் அமர்த்தி, அரசுப் பள்ளிகளில் விருப்பமுள்ளவர்கள் இந்தி படிக்க இருந்த வாய்ப்பை ஒழித்து, பின் ஆங்கிலவழிப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டும் இந்தி படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி, 'காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணைகள் கட்டிக்கொள்ள ஆட்சேபணையில்லை' என்று முதல்வர் தமிழக சட்டசபையில் அறிவித்த போது, எதிர்க்காதவர்கள் (http://www.dinamalar.com/news_detail.asp?id=1998902 வாசகர் மடல்: Vimalathithan - Abu Halifa,குவைத்), தமிழ்நாட்டின் ஆறுகள், ஏரிகள், கிரானைட், தாதுமணல் ஊழலுக்கு இரையான போதும், தனியார் சொத்துக்களை அச்சுறுத்தி, கொலை செய்து, அபகரித்த போதும், எதிர்க்காதவர்கள் எல்லாம், இன்று தமிழ்நாட்டில் 'காவிரி மேலாண்மை வாரியம்' அமைக்கும் போராட்டத்தில் முன்னணியில் இருப்பதானது, தீர்வை நோக்கி தமிழ்நாட்டை முன்னேற்றுமா? அல்லது இன்னொரு முள்ளிவாய்க்காலாக தமிழ்நாட்டை பின்னேற்றுமா?(http://tamilsdirection.blogspot.sg/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

வெளிப்படைத்தன்மையும் (Transparency), பொறுப்பேற்பும் (Accountability)  இல்லாத மனிதரும், குடும்பமும், கட்சியும், அரசும், எந்த அமைப்பும், சமூகத்திற்கு கேடாக பயணிப்பதில் இருந்து தப்ப முடியாது. இது டிஜிட்டல் யுகம். சீமானாயிருந்தாலும், ராகவா லாரன்ஸாக இருந்தாலும், நானாக இருந்தாலும், சுயலாப உள்நோக்கங்களை மறைத்து, நீண்ட காலம் பொது அரங்கில் பயணிக்க முடியாது: மற்றவர்களை நோக்கி விரலை நீட்டும் போது, நம்மை நோக்கியும், நமது விரல்கள் இருந்தாக வேண்டும்.’ (chttp://tamilsdirection.blogspot.sg/2017/01/ )

தி.மு.க செல்வாக்குடன் மத்தியில் ஆட்சியில் இருந்த போது, ஆளுநர் உரிமை உள்ளிட்டு மாநில உரிமைகளை மீட்க அழுத்தம் கொடுத்திருந்து, அது ஏமாற்றியபோது,  அப்போதே அம்பலப்படுத்தியவர்கள் இருந்திருந்தால், அவர்கள் எல்லாம், எப்போது, எப்படி மாநில உரிமைக்கு குரல் கொடுத்து, காரியம் சாதிப்பது என்பது தெரிந்தவர்கள் ஆவர். 

சமூக ஆற்றலை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி வலுவாகும் போக்கிலும், காரியம் சாதிக்கும் நோக்கில், மாநில உரிமைக்கு குரல் கொடுத்து பயணிப்பது சாத்தியமே. மாறாக வந்த வலிமையில் மத்தியில் செல்வாக்கு செலுத்தி, கொள்ளை அடித்ததை எதிர்க்காமல், அவர்களை பாராட்டி, அடிவருடிக் கொண்டே, மாநில உரிமைக்கு குரல் கொடுப்பது சடங்கே ஆகும்.

உயர்க்கல்வியில் தரத்தை உயர்த்தும், தக்க வைக்கும் நோக்கில், உயர்ந்த தகுதி உள்ளவர்களை எந்த நாட்டில் இருந்தாலும், தேடி வரவழைக்கும் போக்கானது இந்தியாவில் ..டி-களில், சிங்கப்பூரில், உலகில் தரம் உயர்ந்த பல்கலைக்கழகங்களில், அத்தகையோரை தேடி வரவழைக்கும் காலம் இது. (‘India wants to hire more foreign academics to boost the position of its higher education institutions in international university rankings’ ; http://www.universityworldnews.com/article.php?story=20170908075806409 )

இப்போது தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களை ஊழலிலிருந்து விடுவித்து, தரம் உயர்த்த ஆளுநர் எடுக்கும் முயற்சிகளை எதிர்ப்பவர்களின் கடந்த கால யோக்கியத்தையை அடுத்து பார்ப்போம்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் வென்று ஜெயலலிதா முதல்வரான போது, உயர்கல்வி அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்த (பி.எச்.பாண்டியனின் மனைவி) பேரா.சிந்தியா பாண்டியன் உயர்கல்வியில் இருந்த கீழ்வரும் சீர்கேட்டினை களைய முயன்று, வெளிவந்த எதிர்ப்பின் காரணமாக, அந்த பதவியையே இழக்க நேரிட்டது.

கல்லூரிகளில் ஆங்கிலவழி மாணவர்களும் (தமிழ்வழி மாணவர்களைப் போலவே) பல்கலைக் கழக தேர்வுகளை ஆங்கிலமும் தமிழும் கலந்து 'தமிங்கிலிசில்' எழுதி வருகிறார்கள்.ஆங்கில வழி மாணவர்கள் ஆங்கிலத்திலும், தமிழ்வழி மாணவர்கள் தமிழிலும் பல்கலைக் கழக தேர்வுகள் எழுத வேண்டும் என தமிழக அரசு ஆணையிட்டது. உடனே வை.கோ உள்ளிட்ட அனைத்து தமிழ்த் தலைவர்களும் 'தமிழுக்கு அநீதி'(?) என்று கொதித்தெழுந்தார்கள். உடனே அரசு அந்த ஆணையைத் திரும்பப் பெற்றது. இந்தியாவில் இது போல, வேறு எந்த மாநிலத்திலும், பல்கலைக்கழகத் தேர்வு விடைத்தாள்களில் ஆங்கிலத்தையும், அந்த மாநில மொழியையும், கலந்து எழுதுவதை, அரசும், பல்கலைக்கழகங்களும் அனுமதிக்கும் அளவுக்கு, உயர்க் கல்வியின் தரம் தாழ்ந்துள்ளதா? என்பது ஆய்விற்குரியதாகும்

தமிழ்நாட்டில் ஆங்கில வழியில் கல்வி பயிலும் மாணவர்களில், ஆங்கிலத்தில் சரியாக எழுத, படிக்க தெரியாமல், ஆங்கிலோ-இந்தியர்களைப் (Anglo-Indians) போல, சரளமாக ஆங்கிலத்தில் பேசுபவர்களை நான் சந்தித்துள்ளேன். ஆங்கிலத்தில் எழுத, படிக்க தெரியாமல், சரளமாக ஆங்கிலம் பேசும்  ஆங்கிலோ-இந்தியர்களை, திருச்சியில் நான் சந்தித்துள்ளேன். எனவே ஆங்கிலவழிக் கல்வி மூலம், 'ஆங்கில அரை-தற்குறிகள்' –semi-illeterates- (கிராமங்களில் தமிழில் எழுத, படிக்க தெரியாமல், தமிழில் பேசும் 'தமிழ் தற்குறிகளைப் போல) தமிழ்நாட்டில் உருவாகி வருகிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.’  ( ‘தமிழ்நாட்டில் ஆங்கில வழிக் கல்வியின் புற்றீசல் வளர்ச்சி: தமிழறிவை விட, ஆங்கில அறிவை அதிகம் சீரழித்ததா? கூடுதலாக சமூக அக்கறையையும் ஒழித்ததா?’ ; http://tamilsdirection.blogspot.sg/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_20.html )

ஆளுநரை எதிர்க்கும் கட்சித்தலைவர்களில் எவராவது மேலே குறிப்பிட்ட சீரழிவிலிருந்து தமிழ்நாட்டை மீட்க முயன்றார்களா? இனியாவது முயல்வார்களா? குறைந்த பட்சம் தங்கள் குடும்பப் பிள்ளைகளையும், தங்கள் கட்சிக்காரர்களின் குடும்பப் பிள்ளைகளையும் ஆங்கிலவழி விளையாட்டுப் பள்ளிகளில் சேர்க்காமல், ஆரம்பக்கல்வி வரையிலாவது தமிழ்வழிப் பள்ளிகளில் படிக்க வைப்பார்களா? 

‘ஒரு சமூகத்தில் உள்ள புலமையின் வளர்ச்சியும், வீழ்ச்சியும், அச்சமூகத்தில் உள்ள கல்விச் சூழலைப் பொறுத்ததாகும். ஆரம்பப்பள்ளி முதல், கல்லூரி -  பல்கலைக் கழகங்கள் வரை கல்வி கற்பிப்பவர்களின் பணி நியமனங்களில்,  'தகுதி, திறமைக்கு' முன்னுரிமை கொடுத்தால், புலமை வளர்ச்சிக்கு அது துணை புரியும். அதற்கு மாறாக, 'லஞ்சம்' செல்வாக்கு' முன்னுரிமை பெற்றால் , புலமை வீழ்ச்சியுறுவதில் வியப்புண்டோ?'’ (http://tamilsdirection.blogspot.sg/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_14.html ) 

கல்வி கற்பிப்பவர்களின், அவர்களை மேற்பார்வை செய்பவர்களின், பணி நியமனங்களில் 'லஞ்சம்' செல்வாக்கு' முன்னுரிமை பெற்ற பின், குடித்து வகுப்புக்கு வரும் ஆசிரியர்கள், மாணவிகளை பாலியல் தொல்லைகளுக்குட்படுத்தும் ஆசிரியர்கள், ஆய்வு மாணவிகளுக்கும் அது போன்ற தொல்லைகள் தரும் பேராசிரியர்கள், எண்ணிக்கையில் வளரும் நாடாக உள்ள தமிழ்நாட்டில்;

குடித்து விட்டு வரும் மாணவிகளும், ஆசிரியை 'காதலிக்கும்' (?) மாணவர்களும், மாணவர்களை 'காதலிக்கும்' (?) ஆசிரியைகளும், பள்ளிகளில் கொலை, தற்கொலை, திருட்டு, அதிகரித்து வருவதிலும் வியப்புண்டோ? ஆளுநரை எதிர்த்து போராடும் கட்சிகள் எல்லாம், பணி நியமனங்களில் 'லஞ்சம்' செல்வாக்கு' முன்னுரிமை பெறுவதை எதிர்த்து போராடினார்களா? இனியாவது போராடுவார்களா? அந்த ஊழல் வலைப்பின்னல்களின் பிதாக்களை, 'தமிழ்த்தேசிய புரவலர்களாக' துதிப்பவர்களின் கூட்டாளிகளால், அது போன்ற போராட்டங்களை நேர்மையாக முன்னெடுக்க முடியுமா? 'பெரியார் சமூக கிருமிகள்' உள்ளிட்ட‌, 'அந்த கூட்டாளிகளின்' பணம், செல்வாக்கில் மயங்கி, அவர்களை மதித்து உறவாடுபவர்கள் எல்லாம், மேலே குறிப்பிட்ட சீரழிவுகளுக்கு காரணமான, சமூக குற்றவாளிகள் ஆக மாட்டார்களா?

மேலே குறிப்பிட்ட சமூக குற்றவாளிகளை முளையிலேயே அடையாளம் கண்டு ஒரங்கட்டாத சமூகத்தில், மீட்சிக்கான கால தாமதங்களும், உயிர் இழப்புகளும், பொதுச்சொத்து சேதங்களும், தவிர்க்க முடியாமல், அந்த சமூகம் கொடுக்கும் விலைகளாகிவிடும். உற்றம், சுற்றம், நட்பு என்று யாராக இருந்தாலும், அது போன்ற சமூக குற்றவாளிகளை, எனது சமூக வட்டத்திலிருந்து அகற்றி, அதனால் வரும் இழப்புகளையும் ஏற்று, என்னைப் போன்று பயணிப்பவர்கள், தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதால், 'அந்த விலைகள்' குறைந்து, தமிழும், தமிழ்நாடும் மீளும் வாய்ப்புகளும் கூடி வருகின்றன.


தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் பதவிக்கு வருபவர் ஆர்.எஸ்.எஸ்ஸா? முஸ்லீமா? பிற மாநிலத்தவரா? பிற நாட்டினரா? என்பதை விட;

என்..டி(NIT), ..டி(IIT), சிங்கப்பூர் என்.யு.எஸ்(NUS), என்.டி.யு(NTU), அமெரிக்காவில் எம்..டி(MIT)  போன்ற இன்னும் பல தரம் மிக்க பல்கலைக்கழகத்திலிருந்து வந்தவர்களா? என்று தேடி, பணியில் அமர்த்தி;

ஊழல் வலைப்பின்னலில் இருந்து விடுவித்து, தரத்தை உயர்த்தினால் தான், தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் படித்த மாணவர்களின் பட்டங்கள் எல்லாம் வேலைவாய்ப்புகளை கூட்டும் மதிப்பை பெறும். 

தமிழ்நாடானது புலமை வீழ்ச்சியிலிருந்து மீளும் வாய்ப்பும் கிட்டும்.(‘Appointment Of A Vice-Chancellor: Professor Surappa, An ‘Outsider’, Can Bring Back Anna University’s Glorious Days’ ; https://swarajyamag.com/ideas/appointment-of-a-vice-chancellor-outsider-professor-surappa-can-stem-the-rot-and-bring-back-anna-universitys-glorious-days )


குறிப்பு
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஊழல்/தரக்குறைவு ஆகிய நோய்களில் சிக்கியதாலேயே, கீழ்வருவது உள்ளிட்ட தமிழின் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் எல்லாம் முடங்கியுள்ளன.

'யாப்பிலக்கணம் கற்பித்தலில் 'இசை'யை 'ஒலி' என கருதி கற்பித்தலில் உள்ளகுறைபாடுகளை களையும் திட்டம்: 

தொல்காப்பியத்தில் வரும் 'இசை' (Music) என்ற சொல்லை, தவறாக 'ஒலி' (Sound) என நினைத்து, இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் விளங்காமல் உரையாசிரியர்கள் கொடுத்த விளக்கத்தின் அடிப்படையில் கற்பிக்கப்படும் தவறுகள் எல்லாம்; 

எனது 'தமிழிசையின் இயற்பியல் ' (Physics of Tamil Music) ஆய்வின் மூலம் வெளிவந்து; 

பேராசிரியர்கள் ஜெயதேவன், வி.டி. அரசு, பொற்கோ, .இராசேந்திரன் உள்ளிட்ட இன்னும் பல, 'திராவிட'  கட்சிகளின் ஆட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்த, தமிழறிஞர்களின் பார்வைக்கு வந்தும், அவர்கள் எல்லாம் என்னை தனிப்பட்ட முறையில் பாராட்டிய பின்னரும்; 

தி. மற்றும் தி.மு.கவின் 'அறிவுபூர்வமற்ற, தமிழ் இலக்கியங்கள் தொடர்பான, 'அந்த'  'இரட்டைக் குழல் துப்பாக்கி' சமூக செயல்நுட்பமானது' இன்னும் நீடிப்பதன் காரணமாக (http://tamilsdirection.blogspot.sg/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_31.html  ) ; 

தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களிலும், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட இன்னும் பல நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களிலும், கடந்தசுமார் 20 வருடங்களாக தமிழில் இளங்கலை/முதுகலை மாணவர்கள் எல்லாம், யாப்பிலக்கணத்தை தவறாக பயின்று வரும் போக்கானது முடிவுக்கு வர வேண்டாமா?' (http://tamilsdirection.blogspot.sg/search?updated-max=2018-02-17T20:55:00-08:00&max-results=7&start=17&by-date=false ) அதைப் பற்றியெல்லாம், ஆளுநரை எதிர்த்துப் போராடுபவர்களில் எவராவது, இதுவரை கவலைப்பட்டார்களா? இனியாவது கவலைப்படுவார்களா?

2 comments:

  1. //'தகுதி, திறமைக்கு' முன்னுரிமை கொடுத்தால், புலமை வளர்ச்சிக்கு அது துணை புரியும். அதற்கு மாறாக, 'லஞ்சம்' செல்வாக்கு' முன்னுரிமை பெற்றால் , புலமை வீழ்ச்சியுறுவதில் வியப்புண்டோ?'’//
    இது இடஒதுக்கீடுக்கு எதிரான வாதம் என கூறப்பட்டு, திசை திருப்பப்படுகிறது.
    இலஞ்சம்,செல்வாக்கு இல்லாமல்; பாகுபாடு இல்லாமல்; தகுதி திறமை பாதிக்கப்படாமல்; ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே பலன் பெறாமல்;
    வாய்ப்பு ஏற்படுத்தினால் நல்லதுதானே, இது சாத்தியமா?


    //'பெரியார் சமூக கிருமிகள்' உள்ளிட்ட, 'அந்த கூட்டாளிகளின்' பணம், செல்வாக்கில் மயங்கி, அவர்களை மதித்து உறவாடுபவர்கள் எல்லாம், மேலே குறிப்பிட்ட சீரழிவுகளுக்கு காரணமான, சமூக குற்றவாளிகள் ஆக மாட்டார்களா?//
    சுயநலத்தை மறைத்து கொள்கையாளர் வேடமிட்டு வருபவர்களை, அவர்களின் சுயநலத்தை பிரித்து அடையாளம் காட்டுவது அவசியமல்லவா?
    //ஊழல் வலைப்பின்னலில் இருந்து விடுவித்து, தரத்தை உயர்த்தினால் தான், தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் படித்த மாணவர்களின் பட்டங்கள்எல்லாம் வேலைவாய்ப்புகளை கூட்டும் மதிப்பை பெறும். //

    மாணவர்களின் எதிர்காலம்,கல்வித்தரம் இவற்றை முதன்மைப்படுத்தி
    மட்டுமே உங்கள் பதிவு புரிந்துகொள்ளப்படுவது சரியானது.
    மற்ற கோணங்கள் எல்லாம் தவறான அரசியல் நோக்கில் உள்ளவையே.
    உங்களைப் போன்றவர்கள் ஒரு குழுவாக மாறி சமூகத்திற்கு இது போன்ற
    பணிகளைத் தொடர வேண்டும்.


    ReplyDelete
    Replies
    1. தமிழ்மொழி, இலக்கியங்கள் தொடர்பான ஈ.வெ.ராவின் தவறான புரிதலைப் போன்றதே, 'தகுதி, திறமை' களை, இடஒதுக்கீட்டிற்கு எதிரானது போல;

      முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரம் ஆகும். அந்த பிரச்சாரம் எந்த அளவுக்கு சமூக நீதியில் திரிதலை ஏற்படுத்தி;

      ஊழல், ஒழுக்கக்கேடு, கல்வித்துறை சீர்குலைவு போன்ற விளைவுகளை ஏர்படுத்தியது, என்பது தொடர்பாக;

      முனைவர் பட்ட ஆய்வு எவரும் மேற்கொண்டால், உதவ முடியும். அது தொடர்பாக, நேரம் வாய்க்கும் போது, பதிவு எழுத முயல்கிறேன்.

      சுயநலத்தை மறைத்து கொள்கையாளர் வேடமிட்டு வருபவர்களை, அவர்களின் சுயநலத்தை பிரித்து அடையாளம் காணும் வழிமுறைகளை, எனது அறிவு, அனுபவ அடிப்படைகளில் வெளியிட்டு வருகிறேன். அது போல சுயலாப நோக்கின்றி, உண்மையான சமூகப்பற்றுள்ளவர்களும் வெளிப்படுத்தினால், அவர்களின் சுயநலத்தை பிரித்து அடையாளம் காட்டுவது எளிதாகும்.

      குறிப்பாக இன்று ஊழல் கொள்ளையர்கள் தமது கொள்ளையைத்ய் தொடர, கொள்ளையடித்த பணத்தில் ஒரு பகுதியை, விலைக்கு வாங்கப்பட்ட 'பிரபலங்கள்' மூலம், பொதுப்பிரச்சினைகளில் அவர்களை நுழைய வைத்து, அறிவுபூர்வ பார்வையை, உணர்ச்சிபூர்வ இரைச்சலில் மூழ்க வைக்கும் சுயநலத்தை பிரித்து அடையாளம் காட்டுவதில் கிடைக்கும் வெற்றியைப் பொறுத்தே;

      அந்த பொதுப்பிரச்சினைகள் எல்லாம் பொதுமக்களுக்கும், பொதுச்சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கும் போராட்டங்கள் இன்றி, 1938 இந்தி எதிர்ப்பு போராட்ட அணுகுமுறையில் தீர்வுகளை நோக்கி, முன்னேறும்.

      அந்த வெற்றியைப் பொறுத்தே, என்னைப் போன்றவர்கள் குழுவாக மாறுவதோ, அல்லது வெளிச்சம் பாய்ச்சி, இன்றைய படித்த இளைஞர்கள் குழுவாக மாறி, எனது தலைமுறை மூலம் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் விளைந்த கேடுகளில் இருந்து மீள்வதும் சாத்தியமாகும்.

      Delete