Sunday, October 29, 2017

 'விகரம் வேதா' வெற்றி, 'மெர்சல்' சிக்கல்;


தமிழ்நாட்டில் 'ரசனை'யில் 'மீட்சிக்கான' அறிகுறி வெளிப்படுகிறதா?



தமிழ்நாட்டில் பெரும்பாலான தமிழர்களுக்கு;

'வாழ்க்கை' என்பது பிறப்பது, ‘அப்பா, அம்மா’ தெரியாமல், 'மம்மி, டாடி' பழக்கமாகி, பிறர் பொறாமைப்படும் அளவுக்கு அதிக பணம் வசூலிக்கும் ஆங்கிலவழி விளையாட்டுப்பள்ளியில் கல்வியைத் துவங்கி, 'எந்த வழியிலும்' பணம் சம்பாதிக்க அலைந்து, அந்த போக்கிலேயே பிறர் பொறாமைப்படும் அளவுக்கு சொத்து சேர்க்கும் ஓட்டப்பந்தயத்தில் ஓடி, மறைவது;

'ஆன்மீகம், பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு, தமிழ் உணர்வு, இந்துத்வா' போன்று இன்னும் பலவற்றின் ஆதரவாளர்களாக காட்டிக் கொண்டாலும், இடையில் யாரைப் பாராட்டினாலும், யாரை கண்டித்தாலும், அதிலும் சுயலாபக் கணக்கில் கவனமாக இருப்பது;

அதில் பெறும் வெற்றியின் அளவுக்கு ஏற்ப, தமது பிள்ளைகளை வெளிநாட்டில் 'செட்டில்' செய்து, தமிழில் எழுதவும் படிக்கவும் தெரியாத அடுத்த தலைமுறை மூலமாக, தமிழுடனும், தமிழ்நாட்டுடனும் உள்ள தொப்புள்குடி உறவை கெடுத்து அழித்துக் கொள்வது; ‘ஆணி வேரழிந்த உலக அகதிகளின்’ எண்ணிக்கையை அதிகரிக்க பங்காற்றி;

என்று வாழ்பவர்கள் பெரும்பான்மையாக உள்ள தமிழ்நாட்டில்;

உள்ளார்ந்த ஈடுபாடு (Passion), புலமை மட்டுமின்றி, இயல்பான 'ரசனை'யும் சமூக இழப்புக்கு உள்ளாவதை தவிர்க்க முடியுமா?  (‘தமிழ்நாட்டில் புலமை வீழ்ச்சியும், சமூக நோய்கள் வளர்ச்சியும்’; http://tamilsdirection.blogspot.sg/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_14.html )

கடந்த வருடத்தில் தாய்லாந்தில் உலகின் மிகப்பெரிய மேடை அரங்கங்களில் ஒன்றாகிய 'சியாம் நிராமிட்டில்' (siam niramit theatre bangkok ) தாய்லாந்தின் வரலாறு தொடர்பான இசை நாட்டிய நாடகத்தைப் பார்த்தேன்; சுமார் 100க்கும் அதிகமான ஆண்களும், பெண்களும், திருநங்கைகளுமான கலைஞர்கள், 500க்கும் அதிகமான ஒப்பனை வேடங்களில்.

அதே போல், பெரும்பாலும் திருநங்கைகள் புராண (தமிழ்நாட்டு பாணியில் 'கவர்ச்சிகர') ஆடை அலங்காரங்களுடன் பங்கேற்ற இசை நாட்டிய நாடக நிகழ்ச்சியையும், இன்னொரு சுற்றுலா புகழ் பெற்ற அரங்கில் பார்த்தேன்.

கடுமையான பயிற்சியுடனும், பக்தியுடன் கூடிய ஈடுபாட்டுடனும், நாடகப் பாத்திரத்திற்கு பொருத்தமான‌ அரைகுறை ஆடைகளுடன் நடனமாடுவதையும், நாடக பாத்திரத்துடன் ஒன்றி பாடுவதையும் ரசிப்பவர்கள் மனதில், வக்கிர உணர்விற்கு இடம் இருக்காது, என்பதை தாய்லாந்தில் நான் ரசித்த இரண்டு நாட்டிய நாடக நிகழ்ச்சிகளிலும் உணர்ந்தேன்.

குடி என்றால் என்ன? என்று தெரியாத கல்லூரி மாணவர்கள் இருந்த தமிழ்நாட்டில், 1969க்குப் பின், மது விலக்கு நீக்கப்பட்டு, இன்று  உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வரை, குடிப்பழக்கம் மட்டுமின்றி, பல வகை போதைப்பொருள்கள் பழக்கமும் பற்றி சீரழிந்து வருகிறார்கள். அதை போன்று, 'ரசனை'யிலும் ஒரு சமூகக் கேடான போக்கானது, 1969க்குப் பின் 'ரெக்கார்ட் டான்ஸ்' என்ற பெயரில் அறிமுகமானது.

தமிழ்நாட்டில் உரிய கடுமையான பயிற்சியின்றி, பக்தியுடன் கூடிய ஈடுபாடும் (Devotion) இன்றி, 'கவர்ச்சி' உடையுடன், 'ரெக்கார்ட் டான்ஸ்' என்ற பெயரில், ரசனையில் பாலுணர்வு தூண்டுதலை முன்னிலைப் படுத்தி, ரசனையில் திரிதல் போக்கானது, 1969க்குப் பின் அரங்குகளில் அறிமுகமானது.

கட்டணம் வசூலித்து, அரங்குகள் நிறைந்த மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் எல்லாம், மீண்டும், மீண்டும் கட்டணம் செலுத்தி பார்க்கும் 'ரசிக்கும்' அளவுக்கு,பாலுணர்வினை தூண்டும் திரைப்பட பாடல்களுக்கு, அரை நிர்வாணம் முதல், முக்கால்/முழு நிர்வாணமாக, இளம்பெண்கள் நடனமாடும் நிகழ்ச்சிகள், தமிழ்நாட்டு நகரங்களில் அறிமுகமானது.

அந்த போக்கில், திரைப்படங்களிலும் அது போன்ற நடனங்களும் அரங்கேறின. அதற்கு முன் திரைப்படங்களில் கடுமையான பயிற்சியும், பக்தியுடன் கூடிய ஈடுபாடும் உள்ளவர்கள் மட்டுமே எந்த வகை நடனமும் ஆடும் போக்கு இருந்தது.

அந்த போக்கில் தமிழ்நாட்டில் இசை, நாட்டிய ரசனையில் சீரழிவும், கடுமையான பயிற்சியும், பக்தியும் காற்றில் போக, அரைகுறை பயிற்சியுடன் கர்நாடக இசை, பரத நாட்டியங்கள், எல்லாம் விலை போன மீடியா வெளிச்சத்துடன் அரங்கேற்றும் நோயும், தமிழ்நாட்டில் அரங்கேறியது; சமூகத்தில் மேல் மட்ட குடும்பங்களில் பலர் அந்த போக்கில் பயணிக்க; அவர்களைப் போல 'அந்தஸ்தில்' உயர்ந்ததாக காட்டிக் கொள்ள, நடுத்தர குடும்பங்களும் அந்த நோயில் சிக்க;

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், இது போன்ற போக்கு இருப்பதாக தெரியவில்லைஇந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், உலகில் எந்த நாட்டிலும், தாய்மொழி இலக்கியங்களையும் புராணங்களையும், 'கவர்ச்சிகர பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்கள்' மூலம், 'பகுத்தறிவு' என்ற பேரில் இழிவுபடுத்தியதாக, ஏதேனும் சான்றுகள் இருக்கின்றனவா?

புலமை மங்கி, வக்கிர ரசனையானது 'ரெக்கார்ட் டான்ஸ்' மூலமாக 1970களில் வளர்ந்தது. அந்த புலமை வீழ்ச்சியில் புராணங்களும் சிக்கின. (‘மூட நம்பிக்கையா? பல பரிமாணப் புலமையின் வெளிப்பாடா?’; http://tamilsdirection.blogspot.sg/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html ) 1980களில் புதுக்கோட்டை 'வெஸ்ட்' (West Talkies) திரை அரங்கில், 'தேவ லீலைகள்' என்ற தலைப்பில், 'கட்டாயமாக வயது வந்தவர்களுக்கு மட்டும்' என்று புதுக்கோட்டை எங்கும் விளம்பரம் செய்து;

திருச்சி செல்வேந்திரன் 'நகைச்சுவை' பொங்க, புராண ஆபாசங்கள் பற்றி பேசிய பேச்சிற்கு, கட்டணம் செலுத்தி, அரங்கு நிரம்பி வழிந்த கூட்டத்தில் நானும் இருந்தேன், சிறப்பு அழைப்பாளராக. அரங்கில் இருந்தவர்களில் பெரும்பாலோர் கோவிலுக்கு சென்று வழிபடும் பழக்கமுடைய 'ஆத்தீகதமிழர்கள் என்பது, அன்றே என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வியப்பானது.

இன்று திராவிட அரசியல் கொள்ளை வலைப்பின்னலில் உள்ளவர்கள் ஏற்பாடு செய்யும் பட்டி மன்றங்களில் நகைச்சுவை ததும்ப பேசும் (கிரானைட், தாது மணல் கொள்ளை, முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம், etc, திராவிட அரசியல் கொள்ளை பற்றி பேசாத‌) பேச்சாளர்களும், அரங்கில் நிரம்பி வழிபவர்களும், மேலே குறிப்பிட்ட நகைச்சுவை 'ரசனை'யில் இருந்து, எந்த அளவுக்கு மாறுபட்டவர்கள்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

வசதியானவர்கள், படித்தவர்கள், உயர் பதவி வகிப்பவர்களில் பெரும்பாலோர், குறிப்பாக தமது 'சொகுசு மண்டிலத்திற்கு' (Comfort Zone) அடிமையானவர்கள் எல்லாம், சமூக முதுகெலும்பின்றி (Social Spineless) வளர்ந்த போக்கும், மேற்குறிப்பிட்ட 'ரசனை' வளர்ந்த போக்கும், திராவிட அரசியல் கொள்ளைக்கு எந்த அளவுக்கு உதவியதுதமதளவில் நேர்மையான வருமானத்தில் வாழ்ந்து கொண்டு, அத்தகையோரெல்லாம் திராவிட அரசியல் கொள்ளையர்களுடன் சாதி, மத, வட்டார அடிப்படைகளில், 'நேச உறவுடன்' வாழ்வதானது, தத்தம் 'சொகுசு மண்டிலம்' பாதுகாப்புக்காகவாஎன்பதும் ஆய்விற்குரியதாகும்.

திருச்சி செல்வந்திரனும், அக்கூட்டத்தை ஏற்பாடு செய்த, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்களும், நானறிந்தது வரையில், திராவிட பொது வாழ்வு வியாபாரத்தில், பணம் சேர்த்தவர்கள் அல்லர்; 'திருச்சி பெரியார் மையம்' மூலமாக, நான் அடையாளம் கண்டு, 'தீண்டாமைக்கு' உட்படுத்தியுள்ள, 'பெரியார் சமூக கிருமிகளைப்' போல, நட்பு உள்ளிட்ட தனிமனித உறவுகளை, வியாபார நோக்கில் அணுகியவர்கள் அல்லர். (http://tamilsdirection.blogspot.sg/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

செல்வேந்திரனின் 'பார்ப்பன எதிர்ப்பு' பேச்சில் இருந்த அளவுக்கு, அறிவுபூர்வ கூறுகள் இன்றி,

ஆனால் அவர் போலவே உணர்ச்சிபூர்வமாக‌, பா..கவின் எச்.ராஜா 'பெரியார் எதிர்ப்பு' பேசி இருக்கிறார். செல்வேந்திரனைப் போலவே, தனி மனித உறவில், பிரமிக்கும் அளவுக்கு எச்.ராஜா நேர்மையானவர் என்பதையும், கிராமத்தில், வசதியில் மிகவும் குறைந்த‌ ஒரு பா.. தோழரின் குடும்ப திருமணத்தில் கலந்து கொண்ட அவர், விருந்தில் சைவ உணவு இல்லாததை பெரிது படுத்தாமல், அந்த தோழரின் மனம் புண்படக்கூடாது என்பதற்காக, அசைவ குழம்பை மட்டும் இலையில் இருந்த சோற்றில் கலந்து சாப்பிட்டார் என்பதையும், பா.ஜ.க-வில் உள்ள எனது நண்பர் ஒருவர் தெரிவித்தார். எதிரெதிர் முகாம்களில் பயணிக்கும் செல்வேந்திரன், எச்.ராஜா போன்றவர்கள் எல்லாம், தமிழ்நாட்டில் ஏற்பட்ட திரிந்த ரசனைப் போக்கில் சிக்கி, பொதுவாழ்வில் பேச்சாளர்களாக பயணிக்கிறார்கள், என்பதும் எனது ஆய்வு முடிவாகும். ரசனை திரிதல் நோயிலிருந்து தமிழ்நாடு 'விடுதலை' பெற்ற பின், அவர்களைப் போன்றவர்கள் - பொதுவாழ்வு வியாபாரிகளாக இல்லாதவர்கள்எல்லாம் ஓரணியில், தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சி நோக்கி, பயணிப்பார்கள் என்பதும், எனது கணிப்பாகும்.

தமிழ்நாட்டில் 'ரசனை' என்பது எந்த அளவுக்கு சீரழிந்து கொண்டிருக்கிறது? என்ற விவாதம் அரங்கேற வேண்டிய கட்டாயமும் இன்று எழுந்துள்ளது.

எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலமுரளி கிருஷ்ணா, சிதம்பரம் ஜெயராமன், நாகூர் அனிஃபா போன்றவர்களின் பாடல்களில் வெளிப்படும் சுருதி சுத்தமும், இசை அழகியலும்;

வைஜயந்திமாலா, பத்மினி போன்ற இன்னும் பல நடிகைகள் திரைப்படங்களில் எந்த வகை நடனம் ஆடினாலும், அதில் வெளிப்பட்ட ஆடல் கலைக் கூறுகளும்,

அவர்களின் கடுமையான பயிற்சியின், பக்தியுடன் கூடிய ஈடுபாட்டின் தொகு விளைவாகும் (Resultant).

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும், இல்லாதவர்களும், கேட்கும் பக்தி பாடலானது;

எந்த மதக் கடவுளைப் பற்றிய பாடலாயிருந்தாலும், அந்த பாடல் வெளிவர உழைத்தவர்களின் (கவிஞர், பாடகர், இசை அமைப்பாளர்) கடுமையான பயிற்சியும், உள்ளார்ந்த ஈடுபாடும் ஒன்றிய போக்கானது வெளிப்பட்டால், அந்த பாடலை மெய்மறந்து ரசிப்பார்கள் என்பதை சிங்கப்பூரிலும்தாய்லாந்திலும் அனுபவித்தேன்.

இன்று தமிழ்நாட்டில் எந்த மத பக்தி பாடலாயிருந்தாலும்;

அரைகுறை பயிற்சியுடன், யாப்பிலக்கண அடிப்படை அறிவு கூட இல்லாமல், தொழில்நுடபம் மற்றும் வியாபார பலத்தில் வெளிவரும் பக்திப் பாடல்கள் உள்ளிட்ட பெரும்பாலான‌ பாடல்களை கேட்கும்போது, தமிழ்நாட்டின் பல பரிமாண சீரழிவானது, 'ரசனை'யிலும் வெளிப்படுவதை உணர முடிகிறது(http://tamilsdirection.blogspot.sg/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_40.html

காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்ப்பட்டி கோவிலுக்கும், அதனருகே உள்ள பைரவர் கோயிலுக்கும், கடந்த பல வருடங்களாக, எனது பல பரிமாண ஆய்வு நோக்கில் சென்று வருகிறேன்; ஒவ்வொரு முறையும், அந்த கோவில்களின் தூண்கள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பிரமிப்பூட்டும் சிற்ப அழகினை ரசித்தும் வருகிறேன்; அவற்றை உருவாக்கிய பெயர் தெரியாத, வரலாற்றில் இடம் பெறாத, சிற்பிகளின் உழைப்பையும், பக்தியையும் மனதார பாராட்டி, வணங்கி, இயன்றவரை அகவயப்படுத்தி.

கடந்த சுமார் 50 வருடங்களில் கட்டப்பட்டுள்ள கோவில்களில்  சிற்ப வேலைப்பாடுகளும், மர சிற்ப வேலைப்பாடுகளும், மற்ற கட்டிட அழகியல் கூறுகளும், எந்த அளவுக்கு உள்ளன? என்பதையும், வாய்ப்புகள் அமையும் போது, பார்த்து வருகிறேன்

ஆன்மீகம் அடிப்படையில் இருந்த பக்தியானது, 'அதிர்ஷ்டம்' அடிப்படையில் திரிதலுக்குள்ளாகி, பக்தர்களின் ரசனையும் திரிந்த போக்கில், புதிதாக கட்டப்படும் மற்றும் சீரமைக்கப்படும் (Renovation) கோவில்கள்  எல்லாம், எந்த அளவுக்கு சிற்ப வேலைப்பாடுகளும், பிற கோவில் கட்டிடக்கலைச் சிறப்புகளும் அளவில் குறைந்து வருகின்றன? என்ற விவாதமும் இன்று தேவைப்படுகிறது.

கால்நடை ஆய்வாளராக (Livestock Inspector) இருந்து, கால்நடை மருத்துவர்களே பிரமிக்கும் வகையில் கால்நடை ஆராய்ச்சியாளராகவும் (Research) சாதனைகள் படைத்து வரும், எனது நண்பர் ஒருவரின் உள்ளார்ந்த ஈடுபாடுகளில் (Passions) ஒன்றாக, அவர் நிபுணத்துவம் பெற்ற துறையாக சுவர்களுக்கு வண்ணப்பூச்சு அடித்தல் உள்ளது. காசுக்காக இல்லாமல், மனமகிழ்ச்சிக்காக அவரும், அவரின் நண்பரும் அவருக்கு தெரிந்தவர்கள் வீடு கட்டும்போது, வீட்டின் சுவர்களுக்கு வெள்ளையும், வண்ணமும் பக்தியுடன் கலந்த ஈடுபாட்டுடன் (Devotion), கடவுள் நம்பிக்கையற்ற அவர் பணியாற்றியதை, நேரில் பலமுறை கண்டு வியந்திருக்கிறேன்.

உலகப்புகழ் பெற்ற புலன் நரம்பியல் விஞ்ஞானி (Cognitive neurologist) ஒருவரின் மனதுக்கு மகிழ்ச்சி தரும் பொழுது போக்கு மரவேலை என்றும் நான் படித்திருக்கிறேன்.

வாழ்வதற்கு தேவையான பணம் என்ற அளவோடு, உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் (passion) இசை, நடனம், மர வேலை, சுவருக்கு வண்ணம் தீட்டுதல், ஆராய்ச்சி போன்ற இன்னும் பல துறைகளில், சமூக ஒப்பீடு நோயில் (Social Comparison Infection) சிக்காமல், உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் ஒன்றி உழைப்பதில் உள்ள இன்பமானது அனுபவித்தால் மட்டுமே புரியும். (http://tamilsdirection.blogspot.sg/2016/02/style-definitions-table.html ) அந்த ரசனை உள்ளவர்களுக்கு, தாம் ரசிப்பவற்றில் கடுமையான பயிற்சியும், பக்தியுடன் கலந்து ஈடுபாடும், வெளிப்படும் எதன் மீதும் வணங்கத் தோன்றும் அளவுக்கு மதிப்பு உண்டாகும்.

காலனிய மனநோயும், திராவிட மனநோயும், 'ரசனைகளில்' ஏற்படுத்திய பாதிப்புகள் பற்றிய, எனது ஆய்வின் தொடக்கமாக.(‘'காலனிய' மனநோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும்; http://tamilsdirection.blogspot.sg/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html ) சமூகக் கேடான 'ரசனை' போக்கில் யார்? யார்? பயணித்து வருகிறார்கள்? (http://tamilsdirection.blogspot.sg/2017/10/blog-post_15.html ) 1944-இல் 'திராவிடர் கழகம்' மூலம், 'இனம்', 'சாதி' திரிந்து, திராவிடர்/திராவிட/தமிழர் அடையாளக் குழப்பமானது வளர்ந்த‌  போக்கில், அந்த சமூகக் கேடான‌ 'குருட்டுப் பகுத்தறிவு ரசனை' வளர்ந்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும்செல்வத்திலோ, புலமையிலோ உயர தேவைப்படும், கடுமையான பயிற்சியுடனும், ஈடுபாட்டுடனும் திறமைகளை வளர்த்தது கொள்ள முடியாதவர்களுக்கு, சமூகக் கேடான குறுக்கு வழிகளில்.வெ.ராவையும்  .வெ.ரா வழியில் என் போன்ற பலரையும் 'ஏணிகளாக்கி', 'தனித்துவமாக உயர'(?) வழிவகுத்தது, 'திராவிட மன நோய்' சமூக சூழல் என்பதை, 'திருச்சி பெரியார் மையம் சமூக கிருமிகள்' மூலம் நான் கண்டுபிடிக்க முடிந்தது.

ஒரு மனிதரின் சமூகத்தின் 'ரசனை' என்பதனாது, அவர்களின் வாழ்வியல் அடிப்படையில், அவர்களின் மனங்களில் உள்ள தேவைகள் (Needs) மற்றும் ஈடுபாடுகளுடன் (Interests)  தொடர்புடையதாகும். (http://tamilsdirection.blogspot.sg/search?updated-max=2017-10-24T22:21:00-07:00&max-results=7 )

தமிழ்நாட்டில் 'குருட்டு பகுத்தறிவு ரசனை' போக்கில் பயணிப்பவர்களில் பெரும்பாலோர் 50 வயதுக்கும் அதிகமானவர்களே ஆவர். ஆனால் அதன் எதிர்விளைவாக, இன்று 'அதிர்ஷ்ட பக்தி' மோகத்தில் சிக்கி, மாணவர்களும், இளைஞர்களும் மிக மிக அதிக அளவில் கோவில் கூட்டங்களில் நிறைந்து காணப்படுகிறார்கள்; 1967க்கு முன் வாழ்ந்த மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் இருந்த 'ஆன்மீக பக்திக்கு' மாறாக.

தமிழ் ஆணிவேரை இழந்து வாழும் அவர்களின் மனங்களில் உள்ள தேவைகள் (Needs) மற்றும் ஈடுபாடுகளுடன் (Interests)  தொடர்புடையதாக மேற்கத்திய ரசனையானது தொத்து நோயாகி விட்டது.

அவ்வாறு மேற்கத்திய ரசனையில் சிக்கி பயணிப்பவர்களில் பதரான நபர்களும் உள்ளனர். மணிகளான நபர்களும் உள்ளனர். மேற்கத்திய உலகிலும் சாதனையாளர்கள் எல்லாம் கடுமையான பயிற்சியும், உள்ளார்ந்த ஈடுபாடும், தாய்மொழி வழி சூழலில் இயல்பாக அகவயப்படுத்தி, வெறும் பணத்துக்காகவோ, பிறரின் பாராட்டுக்காகவோ வாழாமல், தமது அக மகிழ்வுக்காக வாழ்வதை மணிகளாக உள்ள நபர்கள் உணர்கிறார்கள்.

அத்தகையோரெல்லாம் தாம் விரும்பும் துறைகளில் கடுமையான பயிற்சியையும், உள்ளார்ந்த ஈடுபாட்டையும் வளர்த்து, தாய்மொழிவழி சமூக ஆணிவேரை நோக்கி, பின்  திரும்பும் திசையில் (Reverse Direction) பயணிக்கிறார்கள்.

அண்மையில் நான் பார்த்து, பிரமித்த 'விக்ரம் வேதா' திரைப்பட இயக்குநர்கள் புஷ்கர் ‍ காயத்ரி  (https://en.wikipedia.org/wiki/Pushkar%E2%80%93Gayathri )  அந்த திசையில் பயணிக்கத் தொடங்கிய சாதனையாளர்களாக இருந்தால் வியப்பில்லை.

சூது கவ்வும், ஜிகிர் தண்டா, சதுரங்க வேட்டைகாக்கா முட்டை, கோலி சோடாஜோக்கர் போன்ற இன்னும் பல படங்கள் ஏற்படுத்தி வரும் 'மீட்சி நோக்கிய' ரசனை திசையின் வளர்ச்சிப் போக்கில் வெளிப்பட்டுள்ள படமாகவே 'விக்ரம் வேதா' வெளிவந்து, வணிக நீதியிலும் சாதனை படைத்துள்ளது.

மக்களை பாதிக்கும் பிரச்சினைகளை பொறுப்புடனும், கவனத்துடனும் கையாண்ட இந்த படங்களின் வரிசையில் இருந்து வேறுபட்டு, வெளிவந்த 'மெர்சல்' திரைப்பட சர்ச்சையில், அந்த படத்தில் 'ஜி.எஸ்.டி', 'இலவச மருத்துவம்' தொடர்பாக 'திரிந்த' தகவல்கள் வெளிப்பட்டதானது, பெரிய அளவில் விவாதத்திற்கு உள்ளானதும்;

'மெர்சல்'போன்ற பெரிய பட்ஜெட் பட இயக்குநர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கையே ஆகும் (http://tamilsdirection.blogspot.sg/2017/10/blog-post_20.html  )

தமிழ்நாட்டில் ரசனையில் ஏற்பட்ட சீரழிவானது, தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த தடயங்களை எல்லாம் பேணி பாதுகாத்து, புத்திசாலித்தனமாக வருமானம் ஈட்ட வழி தெரியாத திசையிலும்;

எவர் காலில் விழுந்து, எவ்வளவு கேவலமான தரகராகி, எந்த கேடு கெட்ட வழியிலாவது பணம் ஈட்டும் தேவைகளும் (Needs), ஈடுபாடுகளும் (Interests) சமூக மனவியல் (social Psychological) நோயாகி,பயணிக்கும் திசையிலும்;

தமிழர்களில் பெரும்பாலோர் சீரழிந்து வருகிறார்கள்.

'சிங்கப்பூரை விட, தாய்லாந்தை விட, மலேசியாவை விட, இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட, தமிழ்நாட்டில்  அதிக அளவில் சுற்றுலா  வருமானம் ஈட்ட முடியும். தமிழ்நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை கணிசமாக குறைக்க முடியும்.' என்பதையும், அதற்கு தமிழ்நாட்டின் பொதுவாழ்வு வியாபாரிகள் தடைகளாக இருப்பதையும், அந்நாடுகளுக்கு சென்று வந்த பின், நான் பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2016/10/blog-post_21.html )

உலகிலேயே வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இசையியல் (Musicology) முக்கியத்துவம் வாய்ந்த குடுமியாமலை கல்வெட்டு இருப்பதையும், இந்தியாவில் அதிக அளவில் இசைக்கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் இருப்பதையும், இந்தியாவிலேயே மத்திய தொல்பொருள் ஆய்வு துறையால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள அதிகமான பாரம்பரிய தடயங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருப்பதையும் கணக்கில் கொண்டு; (http://asi.nic.in/asi_monu_alphalist_tamilnadu.asp )

சென்னை டிசம்பர் இசை விழாவிற்கு உலகெங்கும் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் கணிசமானோர், சனவரியில் திருவையாறு தியாகராயர் ஆராதனைக்கு வருகை தரும் பின்னணியில், இடையில் உள்ள சில நாட்களில் புதுக்கோட்டையில் 'உலக இசை பாரம்பரிய விழா' (World Musical Heritage Festival) ஏற்பாடு செய்து, அவர்களை ஈர்ப்பதன் மூலம்;

உலக பாரம்பரிய சுற்றுலா மையங்களில் ஒன்றாக புதுக்கோடையை மாற்ற;

நான் முதல்வராக பணியாற்றிய கல்லூரி நிர்வாகத்தின் ஒப்புதலோடு, நான் எடுத்த முயற்சிகள் பற்றியும்,

அதற்கு தமிழ்நாட்டில் மேலே குறிப்பிட்டு தடைகளை நான் அனுபவித்து பெற்ற பாடங்கள் பற்றியும், பின்னர் நேரம் வாய்க்கும் போது, பதிவு செய்ய எண்ணியுள்ளேன். தமிழ்நாட்டில் 'ரசனை'யில் 'மீட்சிக்கான' அறிகுறி வெளிப்பட்டு வருவதன் மூலமாக‌, அந்த தடைகளும் விரைவில் நீங்கும் வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.


இரட்டை வேடப் போக்கின்றி, தமிழ் ஆணி வேரோடு ஒன்றி, சமூக ஒப்பீடு நோயில் (Social Comparison infection)  சிக்காமல், உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் (Passions) வாழும் தமிழர்கள் எந்த கொள்கையின் ஆதரவாளராக இருந்தாலும், அவர்கள் அனைவருமே தெரிந்தோ, தெரியாமலோ, தமிழ்நாட்டின் மீட்பர்களாகவே வாழ்கிறார்கள். அத்தகையோரை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதும், இன்றைய முக்கிய பணியுமாகும்.