Friday, July 31, 2020

அமிதாப் பச்சனின் அரிய விளக்கம்:


சொற்களின் பொருள், 'தர்ம்', 'தர்மம்', 'பிராண்ட்' ? 


தமிழ் மொழியின் 'பிராண்ட்' (Brand)  மதிப்பு ?




சொற்களின் பொருள் பற்றிய முக்கியத்துவத்தை இந்தி நடிகர் அமிதாப் பச்சன் கீழ்வரும் காணொளியில் விளக்கியுள்ளார்.


கூடுதலாக, இந்திய மொழிகளில் உள்ள சில சொற்களை மொழிபெயர்ப்பதால் ஏற்படும் தவறுகள் பற்றியும் விளக்கியுள்ளார். சமஸ்கிருதத்தில் உள்ள 'தர்ம்' மற்றும் 'தர்மம்' என்ற இரண்டு சொற்களின் பொருளில் உள்ள வேறுபாட்டையும் விளக்கியுள்ளார். தனி மனிதரின் 'தர்ம்', ஒரு வியாபார நிறுவனத்தின் 'தர்ம், ஒரு நாட்டின் 'தர்ம்' பற்றியும் விளக்கியுள்ளார். 'தர்ம்' என்பதானது எவ்வாறு 'பிராண்ட்' (Brand) என்பதுடன் தொடர்பு கொண்டுள்ளது? என்பதையும் விளக்கியுள்ளார்.

தோராயமாக, 'தர்ம்' என்பதை தமிழில் 'அறம்' என்றும், அதன் அடிப்படையில் உருவான நெறிமுறையான 'தர்மம்' என்பதை 'அறநெறி' என்ற வகையிலும், நான் புரிந்து கொள்கிறேன். அடுத்த முறை ஒரு சமஸ்கிருதப் புலமையாளரைச் சந்திக்கும் போது, எனது புரிதலை இன்னும் சரியாக வளர்த்துக் கொள்வேன்.

மேற்கண்டவாறு அமிதாப் பச்சன் விளக்கியுள்ளபடி,  பிற மொழிகளில் தனித்துவமான பொருளில் உள்ள சொற்களை எல்லாம் தமிழ் மொழியில் இறக்குமதி செய்யும் போது, மொழிமாற்றம் (Translation) செய்யாமல், எழுத்தோசைச்சிதைவுடன் இறக்குமதி செய்யும் விதியையே தொல்காப்பியத்தில் உள்ள 'ஒரீஇ' தொடர்பான சூத்திரம் விளக்கியுள்ளது.

தமிழ் எழுத்துக்களின் ஓசை வடிவத்தில் இருந்து வேறுபட்ட ஓசை வடிவம் கொண்ட எழுத்துக்கள் சமஸ்கிருதம் உள்ளிட்ட வடமொழிகளிலும், பிற மொழிகளிலும் உள்ளன.

அவ்வாறு ஓசை வடிவமானது தமிழ் எழுத்துக்களில் இருந்து வேறுபட்ட எழுத்துக்களும், வேறுபடாத எழுத்துக்களும் கொண்ட ஒரு வட சொல்லினைத் தமிழில் இறக்குமதி செய்யும் போது, அந்த வேறுபட்ட சொல்லின் ஓசை வடிவம் சிதையும் வகையில் தமிழ் எழுத்தை உருவாக்கும் செயல் முறையே ஒரீஇ ஆகும்.( orIi referred to the acoustic-phonetic- distortion of the letters of the non-Tamil words,) அந்த செயல்முறை மூலமாக உருவாக்கிய எழுத்தோடு, ஓசை வடிவம் வேறுபடாத தமிழ் எழுத்துக்கள் புணர்ந்தே தமிழில் வடசொல் இறக்குமதியை தொல்காப்பியம் அனுமதித்துள்ளது. 'ஸூத்ரா' என்ற சமஸ்கிருதச் சொல்லினை 'சூத்திரம்' என்று இறக்குமதி செய்த சான்றானது தொல்காப்பியத்திலேயே உள்ளது. 
(‘'ஒரீஇ' தந்த வெளிச்சம் (1); தனித்தமிழ் அறிவின் 'கறுப்பு - வெள்ளை நோய்'; 

பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள சொற்களின் பொருளை விளங்கிக் கொள்வதற்கும், சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களை ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் மொழிபெயர்க்கவும் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ் லெக்சிகன் தொகுதிகள் பெரிதும் உதவி வருகின்றன.
  
தமிழ் லெக்சிகனில் உள்ள குறைபாடுகளை எல்லாம், 1996 முதல் நான் வெளியிட்டு வந்துள்ளேன். வயதான தமிழ்ப்புலமையாளர்களில் யார்? யார்? அதனை ஆய்வுக்கு உட்படுத்தி, என்னென்ன தீர்வு முயற்சிகளை மேற்கொண்டார்கள்? எனபது அவரவர் மனசாட்சிகளுக்கே வெளிச்சம். 

தமிழ்ப்பேராசிரியாக உள்ள எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'மாதொரு பாகன்' நாவல் பெரும் சர்ச்சைக்குள்ளானது. 
('எழுத்தாணி' எழுப்பிய இக்கட்டான கேள்விகள்’; 

ஆனால் பெருமாள் முருகன் உள்ளிட்ட தமிழ்ப்பேராசிரியார்களான எழுத்தாளர்கள் தமிழ் லெக்சிகனில் உள்ள குறைபாடுகள் பற்றி கவலை கொண்டு ஒரு சர்ச்சையைக் கிளப்பி இருந்தால்,

கடந்த சுமார் 20 வருடங்களில் பழந்தமிழ் இலக்கியங்களில் முனைவர் ஆராய்ச்சி மேற்கொண்ட மாணவர்களுக்கும்

திருக்குறள், புறநானூறு உள்ளிட்டு பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை நம்பி ஆராய்ச்சிகள் செய்து நூல்கள் வெளியிட்டவர்களுக்கும், எவ்வளவு பிரயோசனமாக இருந்திருக்கும்?

மேற்குறிப்பிட்ட காணொளியில் அமிதாப் பச்சன் 'தர்ம்' என்பதானது எவ்வாறு 'பிராண்ட்' என்பதுடன் தொடர்பு கொண்டுள்ளது? என்பதையும் விளக்கியுள்ளார்.

செல்டன் பொல்லாக் உள்ளிட்ட உலக அளவில் செல்வாக்குடன் வலம் வரும் புலமையாளர்களின் பார்வையில், தமிழ் மொழியின் 'பிராண்ட்' எந்த அளவுக்கு மட்டமாக உள்ளது? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். 
(‘'நோஞ்சான் நோயில்' சிக்கிய தமிழ்ப்புலமை?’; 

அவ்வாறு தமிழ் மொழியின் 'பிராண்ட்' மதிப்பானது மட்டமாக இருப்பதற்கு, ஊடக வெளிச்சத்துடன் வலம் வரும் பெருமாள் முருகன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் பின்பற்றும் அறமான 'தர்ம்' என்பதன் யோக்கியதையானது, தமிழ் மொழியின் 'பிராண்ட்' மதிப்பானது மட்டமாக எந்த அளவுக்கு பங்களித்தது? என்று விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் கருதுகிறேன்.

'மாதொரு பாகன்' பிரச்சினையில் பெருமாள் முருகனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்கள் எல்லாம், கீழ்வரும் பிரச்சினையில் மெளனம் சாதித்ததானது, எந்த 'தர்ம்' அடிப்படையில்? என்பதையும் விவாதிக்க வேண்டும்.

'தொல்காப்பிய பூங்காவில் களைகள்' நூல் (http://thamilkalanjiyam.blogspot.com/2018/08/blog-post_60.html) வெளியிட்ட தமிழ் அறிஞர் அ.நக்கீரன் சாகும் வரை தன் நண்பர்கள் பாதுகாப்பில் வாழ்ந்தார். 
(https://tamilsdirection.blogspot.com/2017/03/blog-post.html)

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் தொடர்பான திட்டத்தில், சமஸ்கிருதத்திற்கு ஏற்படப்போகும் ஆபத்துகளை சுட்டிக்காட்டி உலகம் முழுவதும் உள்ள சம‌ஸ்கிருத ஆதரவு புலமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதையும் கணக்கில் கொண்டால்;

அதே போல, ஹார்வார்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கை மூலமாக தமிழுக்கு ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதா? என்ற கவலையை; 'மாதொரு பாகன்' பிரச்சினையில் பெருமாள் முருகனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்களும்,தமிழ் அமைப்புகளும், தமிழ்ப் பாரம்பரியம் தொடர்பான அமைப்புகளும் வெளிப்படுத்தியதாகத் தெரியவில்லை. 
(‘சமஸ்கிருத ஆதரவு புலமையாளர்களிடமிருந்து கற்க வேண்டிய பாடம்?’; 

தனிமனிதராக இருந்தாலும், சமூகமாக இருந்தாலும், குறைகளை அவ்வப்போது சுட்டிக்காட்டி திருத்தும் செயல்நுட்பத்திற்கு உள்ளாகவில்லை என்றால், தரத்தில் வீழ்ச்சி என்பது தவிர்க்க இயலாததாகும்.

என்னிடம் உள்ள குறைகளை எனது சமூக வட்டத்தில் உள்ளவர்கள் எந்த தயக்கமும் இன்றி சுட்டிக்காட்ட வேண்டும்; எனது ஆய்வுகளில் உள்ள குறைகளை, எனது ஆய்வு வட்டத்தில் உள்ளவர்கள் எந்த தயக்கமும் இன்றி சுட்டிக்காட்ட வேண்டும்; என்ற திசையிலேயே இன்றும் பயணித்து வருகிறேன். அரங்கில் (வகுப்பறையாக இருந்தாலும்) இருப்பவர்களை விட, நாம் அதி புத்திசாலி என்ற தோரணையில் நான் என்றுமே பேசியதில்லை.

தமிழ்நாட்டில் நம்மிடம் உள்ள குறைகளை வெளிப்படுத்தி வெற்றிகொள்வதற்குப் பதிலாக, ஏன் மறைக்க வேண்டும்?  (Why hide deficiencies instead of overcoming them?)”;

என்ற திசையில் பயணிப்பவர்களின் கூட்டு முயற்சியில், தமிழ் மொழியின் 'பிராண்ட்' மதிப்பை உயர்த்துவதானது நிச்சயமாக சாத்தியமாகும். 

தமது ஆட்சியின் மீது புலமையாளர்கள் குறை சொன்னால், அதனை எவ்வாறு ஆக்கபூர்வ திசையில் அணுகுவது? என்பதற்கு இலக்கணமான முதல்வராக எம்.ஜி.ஆர் ஆட்சி செய்தார். 
(‘எம்.ஜி.ஆர்  "ச, ரி, , , , , நி, தமிழா?" என்று கேட்டதை, இருளில் இருந்து மீட்போம்’; 
https://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none_25.html)

எம்.ஜி.ஆரின் 'தர்ம்' அடிப்படையில், தமிழ் மொழியின் 'பிராண்ட்' மதிப்பை உயர்த்தும் வகையில், மேற்குறிப்பிட்ட விவாதத்தினை பெருமாள் முருகன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களும், தமிழின் மீது உண்மையான அக்கறையுள்ள தமிழ் அமைப்புகளும் முன்னெடுத்தால், அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.


குறிப்பு:

வெளிப்படைத்தன்மையும் (Transparency) பொறுப்பேற்பும் (Accountability) இன்றி தமிழ் இருக்கைகள் தொடங்கப்படுவதானது, தமிழ்நாடு ஏமாளியாக இருக்கும் வரையில் தான் நீடிக்கும்.

Thursday, July 30, 2020


தமிழ்நாட்டில் பிணமாக வாழ்பவர்களை எவ்வாறு அடையாளம் காண்பது?


பிண வாடையற்ற சமூகவெளியில் வாழ்வதால் கிடைக்கும் பலன்கள்?




சாகும் போது எவரும் எதையும் தம்முடன் எடுத்துச் செல்ல முடியாது. இது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

பின் ஏன் தன்மானம் இழந்து ஊழல் வழிகளிலும், ஊழல் பேர்வழிகளுக்கு வாலாட்டியும் சொத்து சேர்க்கும் போட்டா போட்டி ஓட்டப்பந்தயத்தில் தமிழ்நாட்டில் எண்ணற்றோர் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். 

1.ஆடம்பரமாக ஏர்கண்டிசனுடன் பெரிய‌ வீடு, ஏர்கண்டிசன் கார், விமானப் பயணங்கள் என்று சொகுசான வாழ்க்கையை வாழ வேண்டும்.

2. தமது சாதி சனங்கள் நமது செல்வத்தை செல்வாக்கைக் கண்டு மயங்க வேண்டும். நாம் நமக்கு மேலுள்ளவர்களுக்கு வாலாட்டுவது போல, நமக்கும் பலர் வாலாட்ட வேண்டும்.

தமிழ்நாட்டில், நானறிந்தது வரையில், வேறு எங்கும் இல்லாத அளவுக்கு, புலமையாளர்களில் பெரும்பாலோர் தத்தம் புலமையை வளர்ப்பதை விட, செல்வாக்கான நபர்களுக்கு வாலாட்டி வளரும் திறமைகளையும், அதற்கான ஊடக வலிமையுள்ள சமூக வலைப்பின்னலுடன் ஒட்டிப் பயணிக்கும் திறமைகளையும், வள‌ர்ப்பதிலேயே குவியமாக வாழ்கிறார்கள்.

மேற்குறிப்பிட்ட முதல் நோக்கத்தில் வெற்றியாளர்களாக வலம் வருபவர்களின் வாழ்க்கை என்பதானது, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணிக்கும் வாய்ப்புகள் அதிகமுள்ள வாழ்க்கையாகி விட்டது.

தமது இளமை காலம் வரை வசதியின்மை காரணமாக, இயற்கையான காற்றோட்டத்துடனும் வியர்வை அவ்வப்போது வெளியேறும் வகையிலும் வாழ்ந்தவர்களில், குறுக்கு வழிகளில் அதிவேக பணக்காரராகி ஏ.சி வாழ்க்கையில் வாழத்தொடங்கியவர்களில் 60 வயதைக் கடந்தவர்கள் எல்லாம், சிறுநீரக பாதிப்பு(Kidney damage), சர்க்க‌ரை நோய் (diabetes) இருதய பாதிப்பு (Heart damage), மூளை பாதிப்பு (Brain Damage) உடலின் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்ட நோயாளிகளாகவே வெளிப்பட்டுள்ளனர். அத்தகையோரின் நோய் எதிர்ப்பின்மை காரணமான, கொரோனா நோயில் சிக்கி விட்டால் தப்பிப்பது கடினமாகும். 

மேற்குறிப்பிட்ட இரண்டாம் நோக்கத்திற்கான வாய்ப்புகளை எல்லாம் கொரோனா சீரழித்து விட்டது.

தமது முதுகுக்குப் பின்னால் தமது 'குறுக்கு வழி யோக்கியதையை' சிசுகிசுப்பது தெரிந்தும், தெரியாதது போல;

தமது உற்றம், சுற்றம் உள்ளிட்ட சமூக வட்டங்களில் வெளிப்படும் 'போலி' மரியாதைகளில், கள்ளுண்ட வண்டு போல மிதந்து வாழ்ந்த‌வர்கள் எல்லாம்,

ஆடம்பரமாக தமது குடும்ப நிகழ்ச்சிகளை நடத்த முடியாமலும், காவல் துறை கண்களை மூடிக்கொள்ள நடத்தினாலும் சமூக வலைதளங்களில் அசிங்கப்படும் வகையிலும்,  கூடுதல் மன அழுத்தம் மூலமாக நோய் எதிர்ப்புத்திறனைக் குறைக்கும் வலிமையில் இரண்டாம் நோக்கமும் ஆபத்தாகி விட்டது. தமது பணபலத்தையும் செல்வாக்கையும் வெளிச்சம் போட முடியாத அளவுக்கு, பல மாதங்களாக எந்த சமூக நிகழ்ச்சிக்கும் இடம் இல்லாமல் போய்விட்டது.

கூகுள் நிறுவனம் தமது பணியாட்களை எல்லாம் 2021 சூன் வரையிலும் தத்தம் வீடுகளில் இருந்தே பணியாற்றுமாறு ஆணையிட்டுள்ளது. எனவே 2021 சூன் வரையில் இதே நிலை தொடருமா? இன்னும் நீடிக்குமா? அதுவரை நாம் உயிரோடு இருக்க கொரோனா அனுமதிக்குமா?

என்று மேற்குறிப்பிட்ட இரண்டு நோக்கங்க‌ளுக்காக  தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்து வருபவர்கள் எல்லாம் குழம்பிக் கிடக்கிறார்கள்.

அத்தகையோருக்கு எல்லாம் கூடுதலாக இன்னொரு தண்டனையானது நெருங்கும் வாய்ப்பும் அதிகரித்து வருகிறது.

சுமார் 8 வருடங்களுக்கு முன்பு, ஆங்கிலத்தில் 'நீங்கள் பிணங்களுடன் வாழ்ந்து வருகிறீர்களா?' (‘Are you living with the 'dead bodies'? ;

என்ற தலைப்பில் எனது பதிவு வெளிவந்தது. கடந்த பல மாதங்களாக, உலகில் பல நாடுகளில் இருந்தும் அந்தப் பதிவினை படிப்பவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் கிராமங்களில் கூட, 'நம்மில் யார் யார் கொரொனோவிற்குப் பின் இருக்கப்போகிறோம்?' என்ற உரையாடல்கள் அதிகரித்து வரும் அளவுக்கு, உலக மக்களிடையே மரண பயத்தையும் கொரோனா தூண்டி வருகிறது. எனவே சாகும் வரை எவ்வாறு நன்கு ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வது? என்ற தேடலும் உலகில் அதிகரித்து வருகிறது. 

மேற்குறிப்பிட்ட பதிவினை உலக அளவில் படிப்பவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருவதற்கு, அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

நீண்ட வருடங்களுக்கு முன்பு நான் கேள்விப்பட்டிருந்த கீழ்வரும் தகவலானது, அந்தப் பதிவின் தொடக்கத்தில் இடம் பெற்றது.

புதுக்கோட்டை அருகே ஒரு மடத்தின் தலைவர் தம்மையே ஆண்டவனாக அறிவித்து வாழ்ந்தார். அவர் இறந்தவுடன் அம்மடத்தில் இருந்தவர்கள் 'அவர் சாகவில்லை.உறங்கிக் கொண்டிருக்கிறார்.' என்று நம்பி சில நாட்கள் காத்திருந்தார்கள். பிண வாடை அதிகரித்து, பின்னர் தான் அடக்கம் செய்தார்கள்.

எனக்கு தெரிந்த ஒருவருக்கு மூக்கில் நடந்த தவறான அறுவைச்சிகிச்சை காரணமாக, அவர் மூக்கின் மூலமாக நாற்றத்தை உணரும் தன்மையை இழந்து விட்டார். அவ்வாறு நாற்றம் உணரும் திறனை இழந்தவர்கள் பிண வாடையுடன் வாழ்வதில் சிரமம் இருக்காது.

தமக்கு ஒரு நீதி, பிறருக்கு ஒரு நீதி என்று வாழ்வது, லாப நட்ட கணக்குகளின் அடிப்படையில் எவரையும் மதிப்பது அல்லது உதவுவது என்ற போக்கில் வாழ்பவர்கள் எல்லாம் மனிதத்தை இழந்து பிணமாக வாழ்பவர்கள் ஆவார்கள். எனவே மேற்குறிப்பிட்ட இரண்டு நோக்கங்களுக்காக வாழ்பவர்கள் எல்லாம் அவ்வாறு பிணமாக வாழ்பவர்கள் ஆவார்கள்.

எரிக்கப்படாத பிணம் அழுகும் வேகத்தில் நோய்க்கிருமிகளை ஈர்த்துப் பெருக்கவே உதவும். அது போலவே சமூகத்தில் 'பிணமாக' வாழும் மனிதர்களும், சமூக நோய்க்கிருமிகளாக வாழும் மனிதர்களைப் பெருக்கவே உதவுவார்கள். சமூக மூச்சுத்திணறல் (Social suffocation) மிகுந்த சமூக வெளியில் (Social space) வெளிப்படும் பேச்சுக்களும், எழுத்துக்களும், பெரும்பாலும் ஆதாயத்திற்கு வாலாட்டும்/கண்டிக்கும் மேற்குறிப்பிட்ட பிணங்களாக வாழ்பவர்களிடமிருந்து வெளிப்படும்.

வெளியில் 'எலியும் பூனையுமாகக்' காட்சி தரும் இந்துத்வாவாதிகளும் இந்துத்வா எதிர்ப்பாளர்களும் சங்கமமான இடங்கள் கருணாநிதி அல்லது சசிகலா நடராஜன் குடும்பங்கள் ஆகும். அந்த சங்கமம் பற்றிய புரிதலின்றி, எதிரெதிர் முகாம்களில் உள்ள பிணங்களை எல்லாம் மனிதராக மதிப்பதானது, சமூகத்திற்குக் கேடான அறியாமை ஆகும்.

பிணங்களின் வாடை மிகுந்த சமூக மூச்சுத் திணறல் மிகுந்த சமூக வெளியில் வாழ்பவர்கள் எல்லாம், பொது ஒழுக்க நெறியை 'நுகரும்' திறன் இழந்து வாழ்ந்தால் மட்டுமே, சமூக மூச்சுத் திணறல் இன்றி வாழ முடியும்.

நமக்கு பொது ஒழுக்க நெறியை 'நுகரும்' திறன் இருந்து, சமூக மூச்சுத் திணறல் மிகுந்த சமூக வெளியை விட்டு துணிச்சலுடன் விலகி, அதனால் விளையும் இழப்புகளையும் விரும்பி ஏற்று பயணிப்பதால் கிடைக்கும் பலன்கள் அதிகமாகும்.

சுயலாபக் கள்வர்களான‌ பிணங்கள் மிகுந்த சமூக மூச்சுத் திணறல் மிகுந்த சமூக வெளியில்,

நமது நேரம், ஆற்றல், பணம் போன்றவற்றை கட்டுப்படுத்த முடியாமல், அந்த கடிவாளங்களில் சிக்கிய பிணைக்கைதி போல பயணிப்பதிலிருந்து விடுபட்டு;

பிணங்களின் சமூக வெளியில் இருந்து விடுபட்டு, நமக்கு நாமே எவ்வாறு எஜமானராகப் பயணிப்பது?

என்ற கேள்விக்கு விடையாக நாம் வாழத் தொடங்கினால், நமது வாழ்க்கையானது நமக்கு தெரியாமலேயே, ஒரு ஆக்கபூர்வ சமூக பொறியியல் வினை ஊக்கியாக (Social Engineering Catalyst) அமையும்.

நமது (சமூக வட்டத்தில் நாம் ஏமாந்து அனுமதித்தவர்களின்) 'பாராட்டு, புகழ் ஏக்கம்' மற்றும் 'சமூக ஒப்பீடு நோய்' (Social Comparison sickness) வழிகளில் செலவாகிக் கொண்டிருந்த நமது நேரம், ஆற்றல், பணம் போன்றவைகள் எல்லாம் மீதமாகி, நல்ல சமூக சுவாசத்திற்கான (social breathing) சமூகவெளியில், நமது உள்ளார்ந்த ஈடுபாடுகளோடு (passions) ஒட்டி, நாமும் வளர்ந்து, திருக்குறள்(469) வழியில், விளம்பரமின்றி தகுதியானவர்களுக்கு உதவி, மனநிறைவோடு வாழ்வது எளிதாகும்.

அவ்வாறு வாழ்ந்து வரும் போக்கில் தான், உலக அளவில் பிரமிப்பூட்டும் கண்டுபிடிப்புகள் என்னிடமிருந்து வெளிப்பட்டு வருகின்றன‌. கீழ்வரும் புரிதலில், என் மூலமாக வெளிப்படும் கண்டுபிடிப்புகளுக்கு, நான் ஓர் ஊடகமே, என்ற தெளிவுடனேயே, நான் பயணிக்கிறேன்.


வாழ்கின்ற மனிதர்கள் எல்லாம், மூளைக்கான சிக்னல்கள் தொடர்புடைய 'ட்ரான்ஸ்டியூசர்'(Transducer)
(https://en.wikipedia.org/wiki/Transducer) ஆகவும், அண்டத்தில் வரும் சிக்னல் ஏற்பியாகவும்(Receiver), சிக்னல் பரப்பியாகவும்(Transmitter), ஒரே நேரத்தில் செயல்பட்டு, அந்த செயல்பாட்டின் விளைவுகளுக்கு ஏற்ற வகையில் வாழ்ந்து வருகிறார்கள்.

எனவே எனது கண்டுபிடிப்புகள் மூலமாக‌ வெளிப்படும் 'புகழ், சொகுசு வாழ்வு' வாய்ப்புகளில் தடுமாறி, 'தடம் புரண்டு', பொது ஒழுக்க நெறியை 'நுகரும்' திறன் இழந்து, சமூக மூச்சுத்திணறல் (Social Suffocation) மிகுந்த சமூக வெளியில் (Social Space) சிக்கிவிடக்கூடாது, என்பதிலும் மிகுந்த கவனத்துடன் வாழ்கிறேன்.

அகத்தில் உரிய மாற்றங்கள் இன்றி, மேலே குறிப்பிட்டதானது சாத்தியமாகாது. சாத்தியமானபின் நமது சொல்லும், செயலும் மிகுந்த வலிமை பெறும் போக்கில் பயணிக்கத் தொடங்கும். 'பதரான' மனிதர்கள் தாமாகவே நம்மை விட்டு விலகுவதும், மணியான மனிதர்களை நோக்கி நாமும், நம்மை நோக்கி அவர்களும் ஈர்க்கப்படுவதும், 'இயற்கையின் விதியோ?' என்று அதிசயிக்கும் வகையில் அரங்கேறும்.

அவ்வாறு அரங்கேறியதன் விளைவாக, நமது கருத்து பரிமாற்றங்களும் பதரான மனிதர்களை விட்டு விலகி, மணியான மனிதர்களை நோக்கி, இயற்கையின் விதியோ? என்று அதிசயிக்கும் அளவுக்கு முன்னேறும். 

கொரொனாவின் மூலமாக, பிணங்களாக வாழ்பவர்களின் சமூக வெளியில் இருந்து, பிண வாடையற்ற சமூகவெளி பிரியும் 'சமூக தளவிளவு' (Social Polarization) என்பதானது, அதிசயமான முறையில் அரங்கேறி வருகிறது. 

Tuesday, July 28, 2020

நேர்மையான இந்துத்வா ஆதரவாளர்களின் பார்வைக்கு;


இந்துத்வா முகாம்களிலும் 'கறுப்பர் கூட்டம்'?


'கறுப்பர் கூட்ட சமூக நோயை' பாரபட்சமின்றி எவ்வாறு எதிர்ப்பது?





பாஜக, இந்து முன்னணி உறுப்பினர்க‌ள் கைது!

பட்டுக்கோட்டையில் பாஜக உறுப்பினராக இருப்பவர்  தியாகராஜன் கார்த்திகேயன்.

11.05.1953 விடுதலை நாளிதழில் கீழ்க்கண்ட செய்தி இருப்பதாகத் தன் முகநூலில் பதிவு செய்திருந்தார்.





பெரியாரை அவமதிக்கும் இச்செய்தி குறித்துப் பட்டுக்கோட்டைக் கழகத் தோழர்கள் காவல்துறையில் புகார் செய்தனர். 11.05.1953 இல் வெளிவந்த விடுதலை இதழின் நகலையும் காவல்துறையிடம் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து அவதூறு செய்தி பரப்பிய பாஜக தியாகராஜன் கார்த்திகேயன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த இந்து முன்னணி உறுப்பினர் சிவாஜி என்பவரும் இரு தினங்களுக்கு முன் பெரியார் குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதற்காகக் கைது செய்யப்பட்டார்!






முகநூலில் சீரங்கம் கோவில் முன் உள்ள 'பெரியார்' சிலை புகைப்படத்தை வெளியிட்டு கீழ்வரும் வாசகம் பதிவாகியுள்ளது.

'பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள் 
தாங்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்லும் போது தயவுசெய்து  வாசலில் இருக்கும் பிச்சைக்காரனுக்கு உங்களால் முடிந்த  சில்லறையை போட்டு விட்டு செல்லுங்கள்.'

மேற்குறிப்பிட்டவாறு 'பெரியாரை' இழிவு செய்த போது, அதே பாணியில் காஞ்சி சங்கராச்சாரியரை 'பெரியார்' ஆதரவாளர்கள் இழிவு செய்ததை நான் அறிவேன்.

'கறுப்பர் கூட்டம்' பிராமண எதிர்ப்பு அமைப்புகளுக்கு ஆள் சேர்த்துக் கொடுக்கும் முகவர்களான‌ (Recruiting agents) பிராமணர்கள் வரிசையில் மேற்குறிப்பிட்டது போன்றவையும் முக்கிய இடம் பெறும். (https://tamilsdirection.blogspot.com/2020/07/recruiting-agents.html)

பல வருடங்களுக்கு முன், ஈரோடு அருகே, 'பெரியார்' கட்சிகள் மீது வீண் பழி சுமத்தும் நோக்கில்திருட்டுத்தனமாக‌ இந்து கடவுள்களின் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்த இந்துத்வா ஆதரவாளர்களை கையும் களவுமாகப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர் 'பெரியார்' கட்சிகளின் ஆதரவாளர்கள். இச்செய்தி ஊடகங்களிலும் வெளிவந்திருக்கிறது.

மேற்குறிப்பிட்ட பாணியில், எதிரெதிர் முகாம்களில் இந்த அளவுக்கு மோசமாக பகைமையை உணர்ச்சிபூர்வமாக தூண்டுவது என்பதானது, நானறிந்தது வரையில்  1991க்கு பின்பு அரங்கேறியவை ஆகும்.

தமிழ்நாட்டில் பிராமணரல்லாதார் 'உட்குழுவாகவும்', பிராமணர்கள் 'வெளிக்குழுவாகவும்' நீடித்து வந்த போக்கினை, எவ்வாறு தமது குடும்ப அறிவியல் ஊழலுக்கு உதவும் 'சமூக கீரி - பாம்பு சண்டை'யாக, 1969இல் முதல்வரான கருணாநிதி வளர்த்தார். (https://tamilsdirection.blogspot.com/2019/10/blog-post.html

1991 முதல் சசிகலா நடராஜன் குடும்பமானது, அறிவியல் ஊழலின் அடுத்தக்கட்டமாக, அந்த சண்டையை இன்னும் மோசமாக்கினார்க‌ள்; ஒரே நேரத்தில் சென்னை பெரியார் திடலுடனும், காஞ்சி சங்கரமடத்துடனும் நல்லுறவை வளர்த்துக் கொண்டு.

ஆனால் அந்த உணர்ச்சிபூர்வ போக்குகள் என்பவை எவ்வாறு 1944இல் விதைக்கப்பட்டு, 1949 முதல் வேகமாக வளர்ந்தது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

நான் 'பெரியார்' கொள்கையாளராகப் பயணித்த காலத்தில், 1925 முதல் 1944 வரை வெளிவந்த குடிஅரசு இதழ்களில் மூழ்கி வியந்திருக்கிறேன். அந்த பாணியில்  தமது இதழிலும், மேடையிலும்எதிர்முகாமில் உள்ளவர்களின் கருத்துக்களுக்கு இடமளித்து நிகழ்காலத்தில் பயணித்து வருவது துக்ளக் என்பதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் பயணித்த துக்ளக்கில், விடுதலைப்புலிகளை ஆதரித்து பழ.கருப்பையா எழுதிய கட்டுரை வெளிவந்தது. துக்ளக் விழா மேடையில் கம்யூனிஸ்ட் தலைவர் ராஜா துக்ளக்கை விமர்சித்த போது, அரங்கில் இருந்து எதிர்ப்புக்கூச்சல் வெளிப்பட்டது. அதனை சோ கண்டித்து அடக்கி, அமைதியை உண்டாக்கி, ராஜா தொடர்ந்து துக்ளக்கை விமர்சிக்க அனுமதித்தார். ஈ.வெ.ரா மேடையில் இருக்க ஜெயகாந்தன் ஈ.வெ.ராவை விமர்சித்த போது, அதே சோ பாணியில்  செயல்பட்டு ஜெயகாந்தனை பேச அனுமதித்ததை, ஜெயகாந்தனும் பதிவு செய்துள்ளார்.

அது போல, இன்று பெரியார் கட்சிகளின் மேடைகளில், ஈ.வெ.ராவின் கொள்கைகளையும், அந்தந்த கட்சிகளின் தலைவர்களின் செயல்பாடுகளையும் விமர்சிக்க அனுமதிக்கும் துணிச்சல் இருக்கிறதா? இல்லையா? என்பது, அந்தந்த கட்சிகளின் தலைவர்களின் மனசாட்சிகளுக்கே வெளிச்சம்.

திராவிடர் கழகத்தில் ஈ.வெ.ராவிற்கும் அண்ணா குழுவினருக்கும் இடையில் நடந்த மோதல்கள் பற்றி 1944 முதல் 1949 வரை வெளிவந்த ஈ.வெ.ராவின் இதழ்களில் படிக்கலாம். தி.மு.கவிற்கு எதிரான விமர்சனங்களை 1949 முதல் 1967 வரை வெளிவந்த விடுதலை இதழ்களில் படிக்கலாம். ஈ.வெ.ராவையும் காமராஜரையும் இழிவு செய்து கருணாநிதி வெளியிட்டவைகளை எல்லாம் 1967 வரை வெளிவந்த முரசொலியில் படிக்கலாம்.

'அண்ணதுரையா எனக்கு பொற்கிழி கொடுத்தார்?' என்ற தலைப்பில், 'குயில்' இதழில் பாரதிதாசன் வெளியிட்ட தொடர் கட்டுரைகளை இன்று வெளியிட‌, பாரதிதாசன் பிரியர்களில் எவருக்காவது  துணிச்சல் இருக்கிறதா? அதே போல ஜீவாவைக் கண்டித்து , 'குயில்' இதழில் பாரதிதாசன் வெளியிட்ட கட்டுரையை வெளியிட கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களில் எவருக்கும் துணிச்சல் இருக்கிறதா? அண்ணாவும், ஜீவாவும் அந்த காலக்கட்டத்தில், பாரதிதாசனைப் பற்றி வெளியிட்ட கருத்துக்களையும், அதில் சேர்த்து வெளியிடுவார்களா

1944 -இல் திராவிடர் கழகம் உருவானதற்கு முன், பெரியாரின் சமூக வாழ்வில், அவர் சந்தித்த கருத்து வேறுபாடுகள் பற்றிய விவாதங்கள் அறிவுபூர்வ தளத்தில் நடைபெற்றதையும், திராவிடர் கழகம் உருவான பின் அவருக்கும் அண்ணாதுரைக்கும் இடையில் உருவான கருத்து வேறுபாடுகள் பற்றிய விவாதங்கள் உணர்ச்சிபூர்வ தளத்தில் நடைபெற்றதையும் 'தமிழ்நாட்டு திராவிடஅரசியலில் சிக்கிய 'ஐந்திறம்' ' என்ற முந்தையப் பதிவில் பார்த்தோம். அதில் "'ஈ.வெ.ரா' என்ற பெயர் மறைந்து, 'பெரியார்' என்ற பட்டமே பெயரானதும்அந்த 'உணர்வுபூர்வ' போக்கின் விளைவா? இவ்வாறு பெயர் மறைந்து, 'பட்டமே' பெயரானது உலகில் வேறு எந்த தலைவருக்கும் நிகழ்ந்திருக்கிறதா?" என்ற கேள்விகளையும் பார்த்தோம்.

அதன் தொடர்ச்சியாகவே, பிற்காலத்தில் பாரதிதாசனுக்கும் அண்ணாதுரைக்கும், பாரதிதாசனுக்கும் ஜீவானந்தத்திற்கும் இடையே மிகவும் மோசமானஉணர்ச்சிபூர்வ விவாதங்கள் நடைபெற்றதற்கு, 'குயில்' இதழ்கள் சாட்சியாக உள்ளன. ஆக சமூகத்தில் 'உச்சத்தில்' இருக்கும் நல்லவைகளும், கெட்டவைகளும் அந்த சமூக வரலாற்றில் விதை கொண்டு, உரமூட்டப்பட்டுவளராமல், 'திடீரென' வந்து விடாது. 

எனவே இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் வெளிப்பட்டுள்ள 'கறுப்பர் கூட்டம்' போக்குகளின் வரலாற்றுப் பின்னணியை விவாதிக்காமல், அந்த சமூக நோயில் இருந்து தமிழ்நாடு விடுதலை பெற முடியாது.

தனது தராதரம், பாரம்பரியம், பண்பாடு ஆகிய அடிப்படைகளிலான, இயல்பின் அடிப்படையில், உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்பவர்கள், தமிழ்நாட்டில் அருகிவிடவில்லை. எந்த வழியிலும், போட்டி போட்டு, செல்வம், செல்வாக்கு சம்பாதிக்கும் நோயில் சிக்காமல் வாழுந்து வரும்அத்தகையோரின் அரவணைப்பில் , 'தராதரம், தகுதி, திறமை, பாரம்பரியம், பண்பாடு' போன்றவையெல்லாம் உயிருடன் இருக்கின்றன. அத்தகையோர் "சாதி, மத, கொள்கை வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, வாய்ப்புள்ள பிரச்சினைகளில் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே, தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது.

அவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுவதற்குக் காரணமாக‌ ,சமூக செயல்நெறி மதகுகள் ஆனவை, திராவிட மனநோயாளித்தன செயல்நுட்பத்தில் சிக்கி, பலிகடா ஆனதன் 'பலன்களை' பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேறுபாடின்றி, அனைத்து சாதி, மதத்தினரும் 'அனுபவித்து வருகின்றனர்.

எனவே சாதி, மத, கொள்கை வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, 'கறுப்பர் கூட்ட சமூக நோயை பாரபட்சமின்றி எதிர்ப்பது, தமிழ்த்தாய்மொழிவழிக்கல்வி மீட்சி என்பது போன்ற வாய்ப்புள்ள பிரச்சினைகளில் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே, தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது.


குறிப்பு :

'பிராமண எதிர்ப்பு செனோபோபியாவும், ஈ.வெ.ரா எதிர்ப்பு செனோபோபியாவும்'; 
https://tamilsdirection.blogspot.com/2018/11/5.html

Monday, July 27, 2020


'கறுப்பர் கூட்டம்' பிராமண எதிர்ப்பு அமைப்புகளுக்கு


ஆள் சேர்த்துக் கொடுக்கும் முகவர்களான‌ (Recruiting agents) பிராமணர்கள்?


சசிகலாவின் இன்னொரு 'பி.டீமாக' தமிழக பா.ஜ.க?



கந்த சஷ்டி கவசம்சர்ச்சையில் 'கறுப்பர் கூட்டம்' சார்பாக கைதானவர்களில் மூளைச்சலவைக்கு உள்ளாகிய அப்பாவிகளும் இருக்கக்கூடும், என்பதை மாரிதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு மூளைச்சலவைக்கு உள்ளான இளைஞர்கள் தமிழ்நாடெங்கும் இருப்பார்கள் அல்லவா?

ஸ்டாலின் கட்சி அல்லது சசிகலா கட்சி ஆகிய இரண்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மூளைச்சலவைக்குள்ளாக்கிய 'பெரியார்' கொள்கையாளர்கள் ஆட்சிக்கு வந்த கட்சியுடன் ஒட்டிப் பயணிக்கும் வாய்ப்புகளும் இருக்கின்றன.

எனவே 'கறுப்பர் கூட்டம்' பிரச்சினையை 'தி.மு.க எதிர்ப்பு' என்ற திசையில் குவியப்படுத்துவதில் உள்ள படுகுழி பற்றிய எச்சரிக்கையும் அவசியமாகும்.

ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க, சசிகலா தலைமையிலான அ.இ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அந்த ஆட்சியானது 'தாய்க்கழகம்'  தி.கவுக்கு நேசமான ஆட்சியாக இருக்கும். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின், சசிகலாவை ஆதரித்து தி.க தலைவர் கி.வீரமணி கீழ்வரும் கருத்தினை வெளிப்படுத்தியது மாரிதாஸுக்கு தெரியாதா?

"சசிகலா இதுவரை கேடயமாய்ப் பயன்பட்டவர். இனி வாளும்-கேடயமாய் நின்று அதிமுகவுக்குப் பயன்படுவார் என்பது நம் இனமானக் கண்ணோட்டமாகும். போகப்போக இது மற்றவர்களுக்குப் புரியும். வாய்ப்பே தராமல் எவரையும் மதிப்பிடலாமா? நமக்கு தனிப்பட்ட எந்த அபிமானமும் இல்லை. இந்தக் காலகட்டத்தில் தாய்க்கழகம் ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றியுள்ளது'' என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்."

ஸ்டாலின் கட்சி அல்லது சசிகலா கட்சி ஆகிய இரண்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், பொதுவாழ்வில் கொள்ளையடித்த பணத்தைப் பாதுகாக்க, மத்திய அரசுடன் நேசமான கட்சியாகவே இருக்கும்.

பிராமண எதிர்ப்பிற்கு தூபம் போட்டுக் கொண்டே, பிராமண‌ர்களையும் அனுசரித்து, இரு சாராரையும் முட்டாள்களாக்கிய 'சமூக கீரி பாம்பு சண்டையை' தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தி, அதன் மூலமாக வெற்றிகரமாக அரசியல் நடத்தியவர் தி.மு.க தலைவர் கருணாநிதி ஆவார். 

கருணாநிதி குடும்பத்துக்கும், சசிகலா நடராஜன் குடும்பத்துக்கும் நெருக்கமான 'பெரியார்' ஆதரவாளர்களுக்கும், இருவரில் எவர் ஆட்சியில் அமர்ந்தாலும் அவர்களுக்கு நல்லதே ஆகும்.

இன்று தி.மு.க ஆளுங்கட்சி இல்லை. அப்படிப்பட்ட சூழலில் தி.மு.கவை  மட்டுமே குவியப்படுத்தி எதிர்ப்பது, யாருக்கு லாபமாகும்?  (குறிப்பு கீழே: சசிகலாவின் இன்னொரு 'பி.டீமாக' தமிழக பா.ஜ.க ?)

2014இல் பிரதமரான மோடியின் ஆட்சியில், தமிழ்நாட்டில் ஊழல் ஒழிப்பானது வடிவேல் பாணி காமெடியாகி விட்டது. எனவே பா.ஜ.கவிலும், மத்திய அரசிலும் 'திராவிட ஊழல் பாதுகாப்பு கவசங்கள்' இருக்கக்கூடும். அது உண்மையானால், 'கறுப்பர் கூட்டத்தின்' பின்னணியில் செயல்பட்ட செல்வாக்கான நபர்கள் சிக்குவார்களா? தப்பிப்பார்களா? என்ற குழப்பத்திற்கும் இடம் இருக்கிறது.

தமிழ்நாட்டின் ஊழல் வலைப்பின்னல் நீடிக்கும் வரையில், எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், மேற்குறிப்பிட்ட மூளைச்சலவைகுள்ளான இளைஞர்களை பலிகடாக்கள் ஆக்கி, வெவ்வேறு பெயர்களில் புதிது புதிதாக 'கறுப்பர் கூட்டம்' போன்ற அமைப்புகளின் கண்ணாமூச்சி ஆட்டங்கள் தொடரும்..

கந்த சஷ்டி கவசம்  சர்ச்சையில் 'கறுப்பர் கூட்டம்' குற்றவாளிகள் கைதாகியிருப்பதானது, தாற்காலிக வெற்றியே, நிரந்தர வெற்றி அல்ல என்றும், மாரிதாஸ் சரியாகவே கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்து கடவுள்களை இழிவு படுத்தும் போக்கிலிருந்தும், பிரிவினைவாதப் போக்கிலிருந்தும் தமிழ்நாட்டை மீட்டு, நிரந்தர வெற்றி பெற இரண்டு வழிகளே உள்ளன.

1. கொள்கைப் போராட்டம் (Theoritical) 

2. செய்முறைப் போராட்டம் (practical)


      1. கொள்கைப் போராட்டம் :

உணர்ச்சிபூர்வ பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் ஏமாந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களை எல்லாம் மூளைச்சலவைக்குள்ளாக்கிய 'பெரியார்' கொள்கையாளர்கள் எல்லாம் அறிவு வலிமையற்ற நோஞ்சான்களா ? என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது. 

ஏமாந்த இளைஞர்களை எல்லாம், மூளைச்சலவைக்குள்ளாக்கி வரும் 'பெரியார்' கொள்கையாளர்கள் எல்லாம் அறிவு வலிமையற்ற நோஞ்சான்களே; என்பது தொடர்பான அறிவுபூர்வ விவாதத்தினை முன்னெடுக்க வேண்டும்.

இந்துத்வா ஆதரவு முகாம்களில் எச்.ராஜா, மாரிதாஸ் உள்ளிட்ட இன்னும் சிலர் ஈ.வெ.ரா மற்றும் அண்ணா தொடர்பாக முன்வைக்கும் இரண்டும் கெட்டான் போக்கிலான விமர்சனங்கள் எல்லாம், மேற்குறிப்பிட்ட முயற்சிகளுக்கு தடைகளாக நீடித்து வருகின்றன. 
(https://tamilsdirection.blogspot.com/2020/07/blog-post_22.html)

'நேர்மையான இந்துத்வா ஆதரவாளர்களின் பார்வைக்கு;
இந்துத்வா முகாம்களிலும் 'கறுப்பர் கூட்டம்'?
'கறுப்பர் கூட்ட சமூக நோயை' பாரபட்சமின்றி எவ்வாறு எதிர்ப்பது?; 
https://tamilsdirection.blogspot.com/2020/07/blog-post_27.html

2. செய்முறைப் போராட்டம்

எச்.ராஜாவும் இந்துத்வா முகாமில் அவரை ஆதரிப்பவர்களும், தமிழ்நாட்டில் 'பிராமண எதிர்ப்பை' குறைக்கும் நோக்கிலாவது, சென்னை ஐ.ஐ.டியில் விஞ்ஞானி வசந்தா கந்தசாமிக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து குரல் கொடுத்திருந்தால், நீண்ட கால போராட்டத்திற்குப் பின், உயர்நீதிமன்றம் மூலமே அவருக்கு நீதி கிடைக்க வேண்டிய அளவுக்கு (Madras HC slams IIT-M’s gross irregularities in selection of professors; https://www.deccanchronicle.com/nation/in-other-news/230816/madras-hc-slams-iit-ms-gross-irregularities-in-selection-of-professors.html ) தாமதமாகியிருக்காது. இன்று 'கறுப்பர் கூட்டம்' போன்ற அமைப்புகளை ஆதரிக்கும் 'பெரியார்' கட்சிகள் அவரின் போராட்டத்திற்கு ஆதரவளித்து 'நல்ல பேர்' வாங்கியிருக்க முடியாது. சமுக நீதிக்கு எதிராக பாரபட்ச போக்கு இருக்கும் வரை, பிராமண எதிர்ப்பு சூழல் தொடரும். பிராமண எதிர்ப்பும் சரி, பூணூல் அறுப்பு சம்பவங்களும் சரி, 1944இல் திராவிடர் கழகம் தொடங்குவதற்கு முன்பே இருந்திருக்கின்றன. திராவிடர் கழகம் தொடங்கிய பின் பூணூல் அறுப்பு சம்பவங்கள் எண்ணிக்கையில் குறைந்து விட்டதாக, ' ஈ.வெ.ராவின் 'பட்டுக்கோட்டை சொற்பொழிவு' ஒலிப்பதிவில் நான் கேட்டிருக்கிறேன்.

ஈ.வெ.ரா அவர்கள் வலியுறுத்திய 'காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு' அவரின் கொள்கையை அறிவுபூர்வமாக உட்படுத்தி வளர்த்தெடுக்காமல், உணர்ச்சிபூர்வமாக பயணித்து 'சருகாகி' வரும் ' பெரியார்' கட்சிகளுக்கு எச்.ராஜா போன்றவர்கள் ஆக்ஸிஜன்வழங்கி 'உயிருடன் நீடிக்க உதவி வருவதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்
(‘ஈ.வெ.ரா அவசர சிகிச்சைப் பிரிவில்; காப்பாற்றப் போவது எச்.ராஜாவா? திராவிடர் தளமா?’; 

பேரா. வசந்தா கந்தசாமி பிரச்சினை ஊடகத்தின் மூலமாக பிரபலமான ஒன்றாகும்.

ஊடகத்தில் வெளிவராமல், தமிழ்நாட்டில் ஆங்காங்கே சில பிராமணர்கள் மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் தமக்கு தெரிந்த வழிகளில் போராடி வருகிறார்கள்.

உதாரணமாக,  பிராமணரல்லாத பேராசிரியர் ஒருவர்  கல்லூரிகளில், பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில், ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொண்ட காலத்தில் 'பிராமணரல்லாதார்' என்ற அடிப்படையில் பிராமணப் பேராசிரியர்களிடம் நிறைய கொடுமைகள் அனுபவித்து, மனம் தளராமல் உழைத்து முனைவர் பட்டம் பெற்று, அந்த துறையில் நிபுண‌ரானார். தன்னிடம் முனைவர் பட்டம் பெற, பிராமண‌ரல்லாதாரை மட்டுமே ஆய்வு மாணவர்களாக எடுத்தார். தனது நண்பரான பிராமணப் பேராசிரியரிடமே நன்கு படிக்கும் பிராமணரல்லாத மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, தன்னிடம் அனுப்பி வைக்குமாறு கோரியிருக்கிறார். அதை என்னிடம் தெரிவித்த அந்த பிராமணப் பேராசிரியர், அதற்காக அவர் மீது குறை சொல்லவில்லை.

பிராமண‌ர்களிடம் பாரபட்சத்தை அனுபவித்த ஒரு பிராமணரல்லாத பேராசிரியர் வெளிப்படையாக, ஆக்கபுர்வமாக பிராமண‌ரல்லாதார் வளர்ச்சிக்கு உதவினார் , தனது பிராமண நண்பர்களே அதை குறை சொல்லாத வகையில். 

சாதி அடிப்படையிலான பாரபட்சத்தை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு போராடி வருவதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். 

தமிழ்நாட்டில் சுயலாப நோக்கற்ற இந்துத்வா ஆதரவாளர்கள் விழிப்புடன் தாம் இருக்கும் பகுதிகளில் பாரபட்சத்துடன் செயல்படும் பிராமணர்களைக் கண்காணித்து திருத்தும் நடவடிக்கைகள் வெளிப்பட வேண்டும்.

ஏனெனில் தமிழ்நாடெங்கும் 'கறுப்பர் கூட்டம்' போன்ற பிராமண எதிர்ப்பு அமைப்புகளுக்கு ஆள் சேர்த்துக் கொடுக்கும் முகவர்கள் (Recruiting agents) போல, அது போன்ற பிராமணர்கள் பங்களித்து வருகிறார்கள்.

அதைவிட இன்னும் பாதகமாக, தமிழர்களில் பெரும்பாலோர் பிராமணர்களை 'வெளிக் குழுவாக' (out-group is a social group with which an individual does not identify; https://en.wikipedia.org/wiki/In-group_and_out-group#Out-group_derogation) கருதவும், தேசியத்தை தமிழ்நாட்டில் வேர் பிடிக்க விடாமலும், அது போன்ற பிராமணர்கள் பங்களித்து வருகிறார்கள்.

இன்றும் அது போன்ற பிராமணர்களால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள 'பெரியார்' கட்சிகளின் பொறுப்பாளர்கள் மூலமாகவே, நிவாரணம் தேடும் போக்கு தொடரும். அது தொடரும் வரை, மாரிதாஸ் குறிப்பிட்ட‌  நிரந்தர வெற்றி கிடைக்காது.

அது மட்டுமல்ல, தமக்கும் தமக்கு தெரிந்த பிராமணர்களுக்கும் இடையில் உள்ள சொந்த பிரச்சினைகளை 'பார்ப்பன ஆதிக்க வெளிப்பாடு' என்று பொய் சொல்லி, 'பெரியார்' கட்சிகளை முட்டாள்களாக்கி, அவர்களின் ஆதரவைப் பெற்ற சம்பவங்களும் உண்டு. அதனையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

இன்று உணர்ச்சிபூர்வமாக இந்துத்வா எதிர்ப்பில் பேசி, எழுதி வரும் அறிவுஜீவிகளில் எவரும் அனுபவித்திராத எதிர்ப்புகளை, ஜி.சுப்பிரமணிய ஐயர், மதுரை வைத்தியநாத ஐயர் உள்ளிட்டு இன்னும் பல பிராமணர்கள் தமது சொந்த பந்தங்களிடமிருந்து அனுபவித்தனர். அவர்களின் முயற்சிகளை பெரும்பான்மையான பிராமணர்கள் ஆதரித்திருந்தால், 'திராவிடர் கழகம்' தோன்றியிருக்காது. தி.க வளர்ச்சியின் போக்கில், ஆத்தீகத் தமிழர்களை உள்ளடக்கிய தமிழ் அமைப்புகளும் 'பிராமண எதிர்ப்பு' திசையில் பயணித்திருக்க மாட்டார்கள்.

காங்கிரசில் இருந்த போது, ஈ.வெ.ரா பல முறை முன்னெடுத்த 'வகுப்புரிமை' தீர்மானத்தை, ராஜாஜி, சத்தியமூர்த்தி உள்ளிட்ட பிரபலமான பிராமண தலைவர்களில் யாராவது ஒருவர் ஆதரித்திருந்தாலும்,

இன்றைய ஆர்.எஸ்.எஸ் தேசிய நிலைப்பாட்டில், அந்த காலக்கட்டத்தில் பயணித்த ஈ.வெ.ரா, 1925இல் காங்கிரசை விட்டு வெளியேறியிருக்க மாட்டார். அதன் தொடர்விளைவாக, இன்று தமிழ்நாடு 'கறுப்பர் கூட்டம்' சிக்கலைச் சந்தித்திருக்காது.

மேற்குறிப்பிட்ட‌ 1. கொள்கைப்போராட்டம் (Theoritical)  2. செய்முறைப் போராட்டம் (practiசல்) ஆகிய இரண்டு வழிகளிலும் முன்னேற வேண்டும். அப்போது தான் எதிரெதிர் முகாம்களில் உணர்ச்சிபூர்வ பரிமாற்ற பகையைத் தூண்டி பிழைத்து வரும் பொதுவாழ்வு வியாபாரிகளை வீழ்த்தி, நிரந்தர வெற்றியை ஈட்ட முடியும்.

பொது இடங்களில் இந்து கடவுள்களை கேலி செய்வதைக் கண்காணித்து ஆங்காங்கே முளையிலேயே கிள்ளும் அளவுக்கும் நிரந்தர வெற்றியை ஈட்ட முடியும்.

.தாம் வாழும் இடத்தில், பணியாற்றும் இடத்தில் உள்ள குறைகளைக் களையும் ஆக்கபூர்வ முயற்சிகளில் பாரபட்சமின்றி பங்களிப்பதன் மூலமாக நமது  வலிமையைக் கூட்டி, மேற்குறிப்பிட்ட எதிர்ப்பினை நாம் வெளிப்படுத்துவதும் அதிக பலனைத் தரும்.

1970களின் பிற்பகுதியில் தஞ்சை சரபோசி கல்லூரியில், 'பெரியார்' கொள்கையாளராக நான் பாரபட்சமின்றி முன்னெடுத்த போராட்டங்களை, எனது சக பிராமணப் பேராசிரியர்களும் ஆதரித்து வெற்றி பெற்ற அனுபவ‌ங்கள் மூலமாகவே, அதனை நான் உணர்ந்தேன்.

  
குறிப்பு:

'கறுப்பர் கூட்டம்' பிரச்சினை தேர்தல் அரசியல் பிரச்சினை அல்ல. தி.க, தி.மு.க, அ.இ.அ.தி.மு.க போன்ற திராவிடக்கட்சிகளின் பிடியில் தமிழ்நாட்டை சிக்க வைத்த 'குருட்டுப் பகுத்தறிவாளர்கள்' தொடர்புடைய பிரச்சினை. அறிவுபூர்வ எதிர்ப்பின் மூலமாக, அந்த மூலத்தினை (source) சமூக சருகாக்கி, சமூகக்குப்பைத்தொட்டியில் ஒதுக்கப்படும் வரையிலும்,

ஸ்டாலின் கட்சி அல்லது சசிகலா கட்சி ஆகிய இரண்டு கட்சிகளில் எந்தக்கட்சி ஆட்சியில் இருந்தாலும் தொடரும்.

'கறுப்பர் கூட்டம்' பிரச்சினையை 'தி.மு.க எதிர்ப்பு' என்ற திசையில் குவியப்படுத்தி,  அதனடிப்படையில் வரும் தேர்தலில் தி.மு.கவை வீழ்த்த வேண்டும்.' என்று தமிழக பா.ஜ.க ஆதரவாளர்கள் செயல்பட்டால் என்ன ஆகும்?

சசிகலாவின் இன்னொரு 'பி.டீமாக' தமிழக பா.ஜ.க இருக்கிறதா? என்ற கேள்விக்கு இடம் தரும்.

சசிகலா நடராஜன் குடும்பத்தின் 'ஏ டீம்'  (A-Team) ஆக தினகரன் கட்சியைக் கருதினால், ‘ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் தலைமையில் உள்ள ஆளும் கட்சியானது 'பி டீமா? (B team: The second-best team a club has) என்ற கேள்வி எழும் வகையில் ஆளும் கட்சி அமைச்சர்கள் சிலர் சசிகலாவிற்கு ஆதரவாக அவ்வப்போது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

சசிகலாவின் பினாமி ஆட்சியாக கூவத்தூரில் ஈ.பி.எஸ் முதல்வரானார். பின் ஓ.பி.எஸ் 'புரட்சி' நடந்தது. பின் அணிகள் இணைய ஓ.பி.எஸ் துணை முதல்வரானார். சசிகலா, மத்தியில் மோடி அரசு, தி.மு.க என்ற மும்முனையின் பின்னணியில் உள்ள அழுத்தங்களை இன்றுவரை வெற்றிகரமாக சமாளித்து வருகிறது ஈ.பி.எஸ் ஆட்சி.

எந்திரவியலில் இயக்கத்தன்மையில் (dynamic) உள்ள மூன்று திசைகளில் செயல்படும் விசைகளின் (Forces) தொகுவிளைவாக (Resultant) 'தற்காலிக சமநிலை' (Temporary Equilibrium) உருவாக வாய்ப்புண்டு. தமிழ்நாட்டு சமூக எந்திரவியலில், அத்தகைய சமநிலையில் ஈ.பி.எஸ் அரசானது நீடித்து வருகிறது.

சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த பின் தான், அது சசிகலாவின் 'பி டீமா?  இல்லையா? தெளிவாகும்.

கூடுதலாக, சசிகலாவின் இன்னொரு 'பி.டீமாக' தமிழக பா.ஜ.க இருக்கிறதா? என்ற கேள்விக்கும் இடம் தரும் வகையில்,

தி.மு.க எதிர்ப்பினைக் குவியப்படுத்தி, 'கறுப்பர் கூட்டம்' பிரச்சினை முன்னேறுவது சமூக அபத்தமாகும்.