Sunday, July 5, 2020


மோடியின் ஆட்சியில் இந்தியாவின் 


சமூக காங்கிரீனாக மாறி வரும் தமிழ்நாடு (1)



2019 பாராளுமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.கவுடன் கூட்டணி இருந்தும், பா.ஜ.கவும், பா.ம.கவும் 2014 தேர்தலில் பெற்ற வெற்றியை ஏன் இழக்க நேரிட்டது?

2014 பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி ஒரு இடம் கூட வெல்ல முடியாத போது, தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆகிய 2 கட்சிகளின் கூட்டணியின்றி, பா.ஜ.க கூட்டணி 2 இடங்களிலும், அதில் பா.ஜ.க ஒரு இடத்திலும் வெல்ல காரணம் என்ன? தமிழ்நாட்டில் 3 ஆவது பெரிய கட்சியாகக் கருதப்பட்ட விஜயகாந்த் கட்சி 14 இடங்களில் பெற்ற வாக்குகளை விட,  7 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க அதிக வாக்குகள் பெறக் காரணம் என்ன? இந்தியாவில் வீசிய மோடி அலையானது, தமிழ்நாட்டில் வீசாமல் இது நடந்திருக்குமா?

தமிழ்நாட்டில் 2014 தேர்தலில் வீசிய‌ மோடி அலையை விட வலுவானது, தி.மு.க குடும்ப ஆட்சி எதிர்ப்பு அலை. அதன் காரணமாக, அ.இ.அ.தி.மு.க 37 இடங்களில் வென்றது. அந்த புரிதலின்றி, தமிழக பா.ஜ.க பயணித்தது; பயணிக்கிறது என்பது என் கணிப்பு.

தமிழ்நாட்டில் பெரியார் கட்சிகளும் மற்ற இந்துத்வா எதிர்ப்பு கட்சிகளும், எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் இந்திய தேசியத்திற்கு ஆதரவானவர்களாகவே கருதி ஒதுக்கி வந்துள்ளனர். எனவே 2014 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் கீழ்வரும் சமூக சிக்னலை வெளிப்படுத்தியுள்ளன.

தமிழ்நாட்டில் 1967 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த அடிப்படையில், தமிழ்நாடானது 'தேசிய'  அடையாளத்தில் பயணித்ததாகக் கருதி, மீண்டும் திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழ்நாட்டை மீட்கவேண்டும்;

என்று பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக்கட்சிகள் எல்லாம் முயலும் வரை;

தமிழ்நாட்டில் தேசியக்கட்சிகள் வேர் பிடிக்க முடியாது.

குறிப்பாக தமிழ்நாட்டில் இந்துத்வா வேர் பிடித்தாலும், தமிழக பா.ஜ.க  வேர் பிடிக்க முடியாது;

என்பது தொடர்பான எனது ஆய்வினை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன். 

எனவே இந்திய விடுதலைக்குப்பின், முதல்முறையாக தமிழ்நாட்டில் பிரிவினை சக்திகளை ஓரங்கட்டி, இந்தியர் என்ற அடையாளத்திற்கு இணக்கமான திசையில், தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.கவும் பாஜகவும் வெற்றி பெற்றன. தி.மு.க எதிர்ப்பு வாக்குகள் பிரிந்த நிலையிலும், தி.மு.க ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாததும் கவனிக்கத்தக்கதாகும்.

2014 தேர்தலுக்கு முன், தமிழ்நாட்டில் திருச்சியில் ஒரு அதிசய சமூக சிக்னல் வெளிப்பட்டது. குவார்ட்டர், பிரியாணியின்றி, கட்டணம் செலுத்தி இளைஞர்கள் பெரிய அளவில் கலந்து கொண்ட பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றினர். அதன் பின்னர், அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் பேட்டியும் ஊடகங்களில் வெளிவந்தது.

அதற்குப் பின்னர் இன்றுவரை அது போன்ற கூட்டமானது, இன்று வரை பா.ஜ.க உள்ளிட்டு எந்த கட்சியின் சார்பாகவும் நடைபெறவில்லை.

நமது விருப்பு வெறுப்புகளுக்கு பலியாகி பயணித்தால், தமிழ்நாட்டு மக்களின் நாடித்துடிப்பினை விளங்கிக்கொள்ள முடியாது. பொதுநலனுக்கு தாம் வழங்கிய பங்களிப்பின் பலன்களை அறுவடை செய்து கொண்டு, ஊடக வெளிச்சத்தில் 'பிரபல' வரிசையில் இடம் பெற உதவும் சமூக வலைப்பின்னலை பேணி பாதுகாக்க தமது ஆற்றலையும் நேரத்தையும் செலவழித்து வருபவர்களாலும், அதனை விளங்கிக் கொள்ள முடியாது. தாம் வாழுமிடத்தில், பணியாற்றும் இடத்தில், பொது அரங்கில் நீதி வேண்டி நடக்கும் போராட்டங்களோடு இயன்ற வரை 'ஒட்டி' (திருக்குறள் 140) பயணித்து வருபவர்களுக்கே, தமிழ்நாட்டு மக்களின் நாடித்துடிப்பினை விளங்கிக்கொள்ள முடியும்.

கடந்த சட்டசபை பொதுத்தேர்தலுக்கு முன், 1 மே 2016இல் கீழ்வரும் கணிப்பினை வெளியிட்டேன்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன், 'சொத்துக் குவிப்பு வழக்கின்'  தீர்ப்பு  வெளிவர வாய்ப்பில்லை; உச்சநீதி மன்றம் மே 14 முதல், சூன் 29 வரை விடுமுறையில் இருப்பதால். வாக்காளர்கள்/வாக்குச்சாவடி வரையில், 'தத்தம் திறமைகளை', 'செயல்பூர்வமாக நிருபிப்பவர்களுக்கு' வளர்ச்சியும், இயலாதவர்களுக்கு வீழ்ச்சியும்,  என்ற 'பொறுப்பு கணக்கில்' (Accountability), அ.இ.அ.தி.மு.க மட்டுமே 'தன்னிகரில்லா' சாதனை படைத்து வரும் கட்சியாக இருக்கிறது; எவரையும் ஏற்றவும்/இறக்கவும் முடியும் என்ற வலிமையுள்ள தலைமையில். எனவே  மீண்டும் அவர் முதல்வராகும் வகையிலேயே, சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இருக்கும்;  கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெற்ற, சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற எண்ணிக்கையை விட, வாக்குகள் சேகரிப்பில், 'பொறுப்பு கணக்கில்' (Accountability), எந்த அளவுக்கு பலகீனமாகிறது? என்பதைப் பொறுத்து, குறைவாகவே பெற்றாலும்.  அது வெளிப்படையான ஒன்றாகும். ஆனால் அ.இ.அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளிலும் உள்ள  ஊழல்/சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு 'அதிர்ச்சி வைத்தியமாக', 'உள்மறையாக' (Latent), அந்த தேர்தல் முடிவுகள், காலப்போக்கில் நிரூபித்தால், வியப்பில்லை; ஒரே குவியம் இல்லாததன் காரணமாக, 'அலையாக'  உருவெடுக்காத மக்களின் கோபமும், வெறுப்பும் நீடிக்கும் சூழலில்

2014 பாராளுமன்ற தேர்தலுக்கு முன், கீழ்வரும் கணிப்பினை வெளியிட்டேன்.

'கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளையும் எதிர்த்து, பா.ஜ.க தலைமையிலான கூட்டணி 2 இடங்களை தமிழ்நாட்டில் வென்றது; தி.மு.க ஒரு இடத்திலும் கூட வெற்றி பெற முடியவில்லை. அந்த அளவு வெற்றிக்கு காரணமான மோடி இந்த பாராளுமன்ற தேர்தலில் எந்த அளவுக்கு தமிழக மக்களின் வெறுப்புக்கு உள்ளாகியுள்ளார்? என்பதானது வரும் தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் மூலம் வெளிவரும். அடுத்து மோடி தான் பிரதமர் ஆவார் என்பதும் எனது கணிப்பாகும்

எனவே தமிழ்நாட்டு மக்கள் கொடுக்கும் தீர்ப்பிலிருந்து பாடம் கற்று, நெருக்கடி கால இந்திரா காந்தி துணிச்சல் பாணியில், நெருக்கடி காலத்தில் தமிழ்நாட்டில் ஊழலைக் கட்டுப்படுத்திய அளவுக்காவது மோடி கட்டுப்படுத்துவார், என்றும் நம்புகிறேன்.

தமிழ்நாட்டில் ஊழலை மோடி ஒழிக்கவில்லை, என்பது உள்ளிட்ட இன்னும் சில காரணங்களால் மோடிக்கு எதிர்ப்பான வாக்குகள் எல்லாம், காங்கிரஸ் தி.மு.க கூட்டணிக்குப் போக வாய்ப்பில்லை. வாக்குக்கு ஆர்.கே.நகர் பாணியில் விற்பதும், நோட்டாவுமே அந்த வாக்குகளை அள்ளுவார்கள், என்பதும் எனது கணிப்பாகும்.

கடந்த பொதுத்தேர்தலில் மோடி மீண்டும் பிரதமர் ஆவார்; அ.இ.அ.தி.மு.க ஆட்சி தொடரும்;

என்று மேலுள்ள பதிவில் வெளிப்படுத்திய‌ எனது கணிப்புகள் சரியானாலும்:

தி.மு.க அணி பெற்ற வெற்றிகள் ஆனவை, எனது கணிப்பில் இருந்த குறைபாட்டினை வெளிப்படுத்தியுள்ளன.

நமது கணிப்புகள் பெரும்பாலும் தவறானால், சமூக முரண்பாடுகள் பற்றிய, (கட்சிகள், கொள்கைகள், மனிதர்கள் தொடர்பான‌) நமது புரிதலில் உள்ள தவறுகளை வெளிப்படுத்திய 'சிக்னல்'களாக, அவற்றைக் கருதி, நமது புரிதலில் உரிய திருத்தங்களை (கசப்பாக இருந்தாலும்) மேற்கொண்டு, பயணித்தால் தான், ஆக்கபூர்வமாக, வெற்றி நோக்கி, நாம் பயணிக்க முடியும். தமது கணிப்புகள் தவறானதற்கு, மக்களை குறை சொல்லும் கட்சிகளும்/தலைவர்களும், (தொடர்ந்து தோல்விகளை தழுவும் திரைப்பட இயக்குநர்களும் கூட) 'சுய மரண' திசையில் பயணிப்பவர்கள் ஆவர்; 'பாதுகாப்பின்மை' (insecurity) மனநோயில் சிக்கி, கணிப்புகளின் (படைப்புகளின்) வெற்றிக்கான‌ 'ஊற்றுக் கண்களாகிய' சாதாரண மக்களிடமிருந்தும், இயற்கையினிடமிருந்தும் அந்நியமாகி, உணர்ச்சிபூர்வமாக தமது நிலைப்பாடுகளை 'பாதுகாப்பு கவசமாக' கருதி, ஆனால் உண்மையில்  மனச்சிறைக் கைதியாக வாழ்ந்து கொண்டு.

மேற்குறிப்பிட்ட மார்ச் 20, 2019 பதிவில் எனது கணிப்பிற்கான 6 காரணிகளை விளக்கியிருந்தேன். எனது கணிப்பிற்கான காரணிகளில், 6-ஆவது காரணியாக‌ இடம் பெற்ற மாணவர்களும், படித்த இளைஞர்களுமே நோட்டாவிற்கே பெரும்பாலும் வாக்களிப்பார்கள், என்று நான் எதிர்பார்த்தேன்.

அவர்களில் பெரும்பகுதியினர் மோடி எதிர்ப்பில் பயணித்த தி.மு.கவிற்கு பெரிய அளவிலும், கமல்ஹாசன் கட்சிக்கும், சீமான் கட்சிக்கும் சிறிய அளவிலும் வாக்களித்துள்ளனர். ஆர்.கே.நகர் பாணியில் தினகரன் ஏமாந்து, தினகரன் இடத்தை ஸ்டாலின் பிடிக்க, தி.மு.க வரலாற்றில் அண்ணா, கருணாநிதி பெற்ற வெற்றிகளை எல்லாம் பின் தள்ளி, கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா பெற்ற வெற்றியுடன் ஒப்பிடும் அளவுக்கு, தி.மு.க அணி வெற்றி பெற்றுள்ளது.

மாணவர்களும், படித்த இளைஞர்களுமே நோட்டாவிற்கு வாக்களிப்பதில் இருந்து திசை திரும்பி, கட்சிகளுக்கு வாக்களிக்கத் தொடங்கி இருப்பது நல்ல சிக்னலாகும்.

தமிழ்நாட்டில் அந்த புதிய போக்கும், ஆர்.கே.நகர் பாணியில் வாக்குகளை வாங்கியப்  போக்கும் சங்கமாகி வீசிய, தேர்தல் அரசியல் சூறைக்காற்றில் தி.மு.க அணியானது, எவரும் கணிக்காத பிரமிக்க வைக்கும் வெற்றியை ஈட்டியது. 

மேற்குறிப்பிட்டவாறு 'படித்த இளைஞர்களுமே நோட்டாவிற்கு வாக்களிப்பதில் இருந்து திசை திரும்பி, கட்சிகளுக்கு வாக்களிக்கத் தொடங்கி இருப்பது நல்ல சிக்னலாகும்.' என்று நான் கருதியதானது, ஆபத்தான சிக்னலோ? என்று ஐயுறும் அளவுக்கு, பிரதமர் மோடி பயணிக்கத் தொடங்கியுள்ளதையும் கீழ்வரும் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளேன்.

‘'பலகீனமான புராசிகியூசன்' (Weak Prosecution) மூலமாக திராவிட ஊழல் குற்றவாளிகள் விடுதலையாகும் வகையிலும், ஆமை வேகத்தில் வழக்குகள் நகரும் வகையிலும் பிரதமர் மோடி ஆட்சி செய்தால், தமிழ்நாட்டு மக்களின் கோபக்குவியத்தில் அவர் சிக்குவதைத் தவிர்க்க முடியாது;

என்ற நிலை வந்திருக்குமா?

சட்டதின் பிடியில் சிக்காத திருடர்களுக்கும், திருடிகளுக்கும், மோடி ஆட்சி எமனாக இருக்கும் என்ற நம்பிக்கை சிதைந்து வருகிறது. 
(https://tamilsdirection.blogspot.com/2020/03/blog-post.html)

மோடி பிரதமரான பின், தேர்தல்களில் வாக்குக்கான பணத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்தது. திராவிட அரசியல் கொள்ளைக்குடும்பங்களின் பிடியில் இருந்து தமிழ்நாடு விடுதலை பெறும் வாய்ப்பும் கானல் நீராகி வருகிறது.

நோஞ்சான் கட்சிகளை தமிழ்நாடு அனுமதிக்கும் வரை, யார் பிரதமராக இருந்தாலும், மத்தியில் உள்ள ஆட்சியின் நலன்களுக்காக தமிழ்நாட்டைக் காவு கொடுக்கும் துணிச்சல் வெளிப்படுவதைத் தவிர்க்க முடியாது.

ஆனால் வடிகால்கள் இன்றி தமிழ்நாட்டில், மக்கள் கோபம் அதிகரித்துக் கொண்டே வருமானால், மத்தியில் ஆள்பவர்கள் நோஞ்சான் கட்சிகள் மூலமே தமிழ்நாட்டை கையாண்டு வருவது நீடிக்குமானால், இந்தியாவின் 'சமூக காங்கிரின்' பகுதியாக தமிழ்நாடு மாறுகின்ற அபாயத்தில் இருந்து தப்பிக்க முடியாது.

ஏற்கனவே இந்தியாவுடன் ஒட்டாத 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளச்சிக்கலுடன் அரசியல் நீக்கம் (depoliticize) வளர்ந்துள்ள தமிழ்நாட்டிற்கும் மத்திய அரசுக்கும் இடையே நோஞ்சான் கட்சிகள் மூலமாக இடைவெளி நீண்டகாலம் நீடிக்குமானால், அந்த அபாயமானது மீளமுடியாத (irreversible) நிலையை எட்டிவிடும்.’ 

நீரழிவு நோயாளிகளின் கால் விரலானது காங்கிரின் நோயில் சிக்கி விடுமானால், விரல் நுனியில் இருந்து செல்கள் இறப்பது தொடங்கி விடும். தாமதம் காரணமாக, இடுப்பை நோக்கி எந்த அளவுக்கு பரவியுள்ளது? என்பதை கண்டறிந்து, அறுவைச்சிகிச்சை மூலமாக அந்த பகுதியை அகற்றாவிடில், உடல் முழுவதும் பரவி மரணத்தை விளைவிக்கும். 

'இந்தியர்' என்ற அடையாளத்தோடு உளவியல் ரீதியில் ஒட்டாத தமிழர்கள் எல்லாம் இந்தியாவிற்கு சேதம் விளைவிக்கும் 'சமூக காங்கிரீன் நோயில்' சிக்க வாய்ப்புள்ளவர்கள் ஆவார்கள். கீழ்வரும் சான்றானது அதனை உணர்த்தியுள்ளது.

‘citizenship inevitably has a substantive psychological dimension because it involves a sense of being part of a larger entity.’ 

பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கை போன்றே வளர்ந்த 'திராவிட நாடு பிரிவினை கோரிக்கையில் பயணித்தது தமிழ்நாடு. இந்திய விடுதலைக்குப்பின் நடந்த 1952 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பலம் பெற முடியாத அளவுக்கு அக்கோரிக்கைக்கு ஆதரவு வெளிப்பட்டது. 1967 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில், தமிழ்நாடானது 'தேசிய' அடையாளத்தில் பயணிக்காததையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். 

1960களில் பிரிவினை கோரிக்கையை தி.மு.க கைவிட்டபோது, 'பிரிவினைக்கான காரணங்கள் தொடர்கின்றன' என்று அண்ணா அறிவித்தார். இன்று வரையில் அதே நிலைப்பாட்டுடன் தான், தி.மு.க பயணித்து வருகிறது. தி.மு.க ஆட்சியில் இருந்த அமைச்சர்களில் சிலர், 'தி.மு.க ஆட்சியைக் கலைத்தால், தனித்தமிழ்நாடு கோருவோம்' என்று மத்திய அரசை எச்சரித்த போது, அந்த அமைச்சர்கள் மீது தேசத்துரோக சட்டம் பாயாத அளவுக்கு, இந்தியாவில் சட்டத்தின் ஆட்சியானது (Rule of Law) செல்லாக்காசாகியது.

தமிழ்நாட்டை பிரிவினை நோயில் இருந்து மீட்கும் வாய்ப்பானது, இந்திராகாந்தியின் நெருக்கடி கால ஆட்சியில் உருவானது.

தி.கவில் உள்ளவர்களின் அழுத்தத்தில், தி.மு.க தலைவர் பரிசீலித்த 'தனித்தமிழ்நாடு' கோரிக்கைக்கு, தமிழ்நாடு மக்களிடையே எந்த அளவுக்கு ஆதரவு இருந்தது? அல்லது ஊழலின் கேடயமாக 'தனித்தமிழ்நாடு' கோரிக்கையும், தமிழ்நாட்டு மக்களின் வெறுப்பிற்கு உள்ளானதா? என்ற கேள்விகளை, நெருக்கடி காலத்தில், தி.மு.க ஆட்சியை கலைத்த பின், வெளிப்பட்ட 'சிக்னல்கள்' எழுப்புகின்றன.

நெருக்கடி காலத்தில், தி.மு.க ஆட்சியைக் கலைத்து, தி.க/தி.மு.க தலைவர்களில் பெரும்பாலோரை சிறையில் அடைத்து, அரசு துறைகளில் ஊழலை குறைத்து, பின் நடந்த பாராளுமன்ற தேர்தலில், இந்திரா காங்கிரஸ் மத்தியில் ஆட்சியை இழந்து, ஆனால் தமிழ்நாட்டில் பிரமிக்க வைக்கும் வெற்றியை ஈட்டியது; 'பிரிவினை' சூட்டில், 'மாநில சுயாட்சி' என்ற பெயரில், அரங்கேறிய ஊழல் ஆட்சிக்கு, தமிழ்நாட்டு மக்கள் வழங்கிய தண்டனையாக.’ (‘நல்லவேளை, பிரியும் ஆபத்திலிருந்து தமிழ்நாடு தப்பித்தது’; 

ஆனால் சர்க்காரியா கமிசன் வழக்கை வாபஸ் செய்து, தி.மு.கவிற்கும், அதன் மூலமாக பிரிவினை கோரிக்கைக்கும், புத்துயிர் வழங்கினார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி.

அவ்வாறு பயணித்த தமிழ்நாட்டில், 2014 பாராளுமன்ற தேர்தலின் மூலமாக தமிழ்நாட்டில் மோடிக்கும், அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிற்கும் ஆதரவாக வெளிப்பட்ட முடிவுகள் மூலமாக, தமிழ்நாட்டை பிரிவினை நோயில் இருந்து மீட்கும் வாய்ப்பானது எவ்வாறு உருவானது? என்பதை மேலே விளக்கியுள்ளேன். அந்த வாய்ப்பினைக் கெடுத்து, தவறான திசையில் மோடி ஆட்சி பயணித்து வருவதையும் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்துள்ளேன்.

தமிழ்நாட்டில் மோடி அலை சந்திக்கும்திராவிடச் சிக்கல்கள்’ (December 30, 2014; 

மோடி ஒருவராக நாட்டின் போக்கை மாற்ற முடியுமா? (1)’ 

இந்தியாவில் தமிழ்நாட்டில் தனித்துவமான போக்கில், தேசக்கட்டுமான சீர்குலைவும், தமிழக அரசின்   நிறுவன கட்டமைத்தல்(System Building) சீர்குலைவும் பின்னிப்பிணைந்து வளர்ந்த போக்கின்  உச்சக்கட்டமே, முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணமானது வெளிப்படுத்திய சிக்னலாகும்.

அந்த சிக்னலை உணராமல், தமிழக பா.ஜ.வையும் அந்த 'மர்ம' மரணத்தின் மெளன சாட்சிகள் வரிசையில் இடம் பெறச் செய்து, இந்திராகாந்திக்கு இருந்த துணிச்சலின்றி, அந்த 'சிக்னலின்' போக்கிலேயே பிரதமர் மோடி பயணித்தார். 'அந்த' பலகீனமே மோடியின்  ஆட்சியில் 'கறுப்பு ஆடுகளை' வலிவுறச் செய்து, மெகா ஊழல் குற்றவாளிகள் விடுதலையாகி, மோடியின் ஊழல் ஒழிப்பானது, வடிவேலு பாணி காமெடியானது. அதன் தொடர்ச்சியாகவே, இன்று சி.பி.அய்யின் நம்பகத்தன்மையே கேள்விக்குறியாகி வருகிறது; உச்சநீதிமன்றமே சாட்சியாக; என்பதும், எனது ஆய்வு முடிவாகும். (October 25, 2018; 

மேற்குறிப்பிட்ட ஆய்வு முடிவுகளின் தொடர்ச்சியாகவே, கீழ்வரும் அபாய எச்சரிக்கையைப் பதிவு செய்தேன்
.
சர்க்காரியா கமிசன் வழக்கை இந்திராகாந்தி வாபஸ் வாங்கிய பாணியில் இருந்து வேறுபட்டு;

'பலகீனமான புராசிகியூசன்' (Weak Prosecution) மூலமாக திராவிட ஊழல் குற்றவாளிகள் விடுதலையாகும் வகையிலும், ஆமை வேகத்தில் வழக்குகள் நகரும் வகையிலும் பிரதமர் மோடி ஆட்சி செய்தால், தமிழ்நாட்டு மக்களின் கோபக்குவியத்தில் அவர் சிக்குவதைத் தவிர்க்க முடியாது.

பாரதத்தில் தமிழ்நாடு இருப்பது உண்மையானால், பாரத மாதா மோடியை மன்னிக்க மாட்டார்.’ 

வியட்னாமில் அமெரிக்கா வெற்றி பெற்றிருந்து, கருணாநிதி குடும்ப ஆட்சியில்  தனித்தமிழ்நாடு உருவாகியிருந்தாலும், மத்தியில் வலிமையான இந்திராகாந்தி ஆட்சி இருந்ததன் காரணமாக, அந்த தனித்தமிழ்நாடு முயற்சி குறைப்பிரசவமாகி, மீண்டும் இந்தியாவுடன் இணைந்து, அமெரிக்காவானது உலக அரங்கில் பெரும் தலைக்குனிவைச் சந்தித்திருக்கும். 
(September 25, 2017; ‘தனித்தமிழ்நாடு கோரிக்கையும், பொதுவாழ்வு வியாபாரமும்’; 

ஆனால் மோடி ஆட்சியில், தமிழ்நாடு மிகவும் ஆபத்தான திசையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.‌

மோடிக்குப் பின் மத்தியில் தேவகவுடா பிரதமராக இருந்ததைப் போல, ஒரு பலகீனமான அரசு ஆட்சியில் இருந்தால், தமிழ்நாட்டில் ஜெயலலிதா போல வலிமையான மக்கள் ஆதரவுடன் ஆட்சி செய்யும் முதல்வராக ஒரு நபர் இருந்தால், அந்த நபர் நெருக்கடி கால முதல்வர் கருணாநிதியின் பாணியில் முயன்றால், சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்ற ஏதாவது ஒரு நாட்டின் பின்பலத்தில் தனித்தமிழ்நாடு அறிவிப்பது சாத்தியமாகி விடும்.

பிரதமர் மோடியின் ஆட்சி காலத்திலேயே, சரியான தேசக்கட்டுமான (Nation Building) திசையில், தமிழ்நாட்டில் ஊழல் வலைப்பின்னலைத் தகர்த்து, மைக்ரோஉலகத்தில் வாழும் சாமான்யர்களின் நம்பிக்கையை ஈட்டி, அவர்கள் எல்லாம் விரும்பி இந்தியாவுடன் 'ஒட்டி' பயணிக்கச் செய்தால் மட்டுமே, அந்த ஆபத்தில் இருந்து, தமிழ்நாட்டையும், இந்தியாவையும் காப்பாற்ற முடியும்.

மாணவப்பருவத்தில் இருந்து இன்று வரை, 'தமிழ்நாட்டு மக்களின் நாடித்துடிப்புடன் 'ஒட்டிப் பயணித்து வருபவன்' என்ற அடிப்படையிலும், எனது காலத்திற்குப் பின் தமிழ்நாடானது ஆப்பிரிக்க நாடுகளைப் போல, ஊழல் சர்வாதிகாரத்தில் சிக்கி சீரழியும் வாய்ப்பினைத் தவிர்க்கும் நோக்கிலும், இந்த அபாய எச்சரிக்கையை வெளியிட நேர்ந்தது.

No comments:

Post a Comment