Wednesday, April 29, 2015



'சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்பு’ க் கருத்தரங்கம் : 

விபுலானந்தர் படத்திறப்பு சரியா?


சென்னையில் கடந்த 25.04.2015 &  26.04.2015 தேதிகளில், 'சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்புக் கருத்தரங்கம்' நடந்துள்ளது. அதில் படத்திறப்புகளில் விபுலானந்த அடிகள் படம் இடம் பெற்றது என் கவனத்தை ஈர்த்தது. தமிழிசை தொடர்பான நிகழ்ச்சிகளில் அவர் படம் இடம் பெறுவதை என்னால் விளங்கிக் கொள்ள முடியும். ஏனெனில் இசை தொடர்பான இயற்பியல் விதிகள் அடிப்படையில், நரம்பு கருவிகளில் எழும் இசைச்சுர ஒலி அதிர்வு எண்ணை முதலில் கணக்கிட்டு காண்பித்தவர் அவர்; சிற்சில குறைபாடுகள் அக்கணக்கீட்டில் இருந்தாலும்.

ஆனால் தனது தமிழ் இசை ஆய்வுககுக்கு, பழந்தமிழ் ஆதாரங்களைப் புறக்கணித்து, வடமொழி நூல்கள் அடிப்படையில் தனது ஆய்வுகளை மேற்கொண்டவர் விபுலானந்த அடிகள் ஆவார். அதனை உரிய சான்றுகளுடன் எனது 'தமிழ் இசையின் இயற்பியல்' (Physics of Tamil Music)  என்ற தலைப்பிலான‌ முனைவர் பட்ட ஆய்வில் (1996) வெளிப்படுத்தியுள்ளேன். பின்னர் 'தமிழ் இசையியல் புதிய கண்டுபிடிப்புகள்' (2009; சேகர் பதிப்பகம், சென்னை) என்ற நூலிலும், அது வெளிவந்துள்ளது. 

‘ச, ரி, க, ம, ப , த, நி’ எனும் 7 இசைச்சுர எழுத்துக்கள், சமஸ்கிருதத்தில் 'ஷட்ஜம், ரிஷபம்,காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம்' என்ற சுரப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

‘ச, ரி, க, ம, ப , த, நி’ எனும் 7 இசைச்சுர எழுத்துக்கள், தமிழில் சுரப்பெயர்கள் 'குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்' என்று அழைக்கப்பட்டதற்கு, பழந்தமிழ் இலக்கியங்களில் பல சான்றுகள் உள்ளன. அதனை, தமிழ் இசை ஆய்வுகளில்  முன்னோடியான ஆபிரகாம் பண்டிதர்,  1917 இல் வெளிவந்த, தனது 'கருணாமிர்த சாகரம்' என்ற நூலில் தெளிவுபடுத்தியுள்ளார். அதில் பிரமிக்க வைக்கும் வகையில்,  'ச, ரி, க, ம, ப, த, நி' தமிழ் இசைக்கே உரியவை என்று நிறுவி, மேலேக்குறிப்பிட்ட சமஸ்கிருத சுரப்பெயர்கள், சமஸ்கிருத இலக்கணப்படி, 7 சுர எழுத்துக்களை குறிக்காது என்பதற்கு, திருவையாறு சமஸ்கிருத பிராமண புலமையாளரிடமே அதற்கான சான்றினை பெற்று, அந்நூலில் வெளியிட்டுள்ளார். (பக்கம் 527, கருணாமிர்த சாகரம், ஆபிரகாம் பண்டிதர், 1917)

இதில் வியப்பென்னவென்றால், தனது தமிழ் இசை ஆய்வுகளை 'சமஸ்கிருத வல்லாண்மை எதிர்ப்பு' என்ற திசையில் அவர் மேற்கொள்ளவில்லை. உரிய சான்றுகளின் அடிப்படையில், ‘உண்மையை நிலைநாட்டல்’ என்ற திசையில் அவர் தமது ஆய்வுகளை மேற்கொண்டார். தமது ஆய்வுகளுக்கு ஆதரவளித்த பிராமணர்களையும், நன்றியுடன், தமது நூலில், அவர் நினைவுகூர்ந்துள்ளார். அந்த 'பாவத்திற்காக' மேலேக்குறிப்பிட்ட நிகழ்ச்சியில் அவர் படம் இடம் பெறவில்லையா? இல்லையா? என்பது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் மனசாட்சிகளுக்கே வெளிச்சம்.

கூடுதல் வியப்பு என்னவென்றால், 'சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்புக் கருத்தரங்க' படத்திறப்புகளில் விபுலானந்த அடிகள் படம் இடம் பெற்றது தான்.

தமிழ் இசைச்சுர பெயர்கள் தொடர்பாக, விபுலானந்த அடிகள் பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள சான்றுகளைப் புறக்கணித்து, 'நாரத சிட்சை', 'சங்கீத ரத்னாகரம்' போன்ற சமஸ்கிருத நூல்களின் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, 'ச' என்ற இசைச்சுரம், தமிழ் இசையில் 'இளி' என்று அழைக்கப்பட்டது என்ற தவறான முடிவை, தனது 'யாழ்நூல்' மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் (வாதத்திற்காக‌) தமிழ் இசையை 'சமஸ்கிருத வல்லாண்மைக்கு' அடிமைப்படுத்தியவர் விபுலானந்த அடிகள் என்று சொன்னால், அது தவறாகுமா? மேலே குறிப்பிட்ட 'சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்புக் கருத்தரங்கம்' நிகழ்ச்சிகளில் தமிழ்/தமிழ் இசை புலமையாளர்கள் பலர் பங்கேற்றுள்ளதாக தெரிகிறது. (http://thiru2050.blogspot.in/2015/04/blog-post_82.html) அக்கருத்தரங்கில் விபுலானந்தர் படத்திறப்பு என்பது 'சுருதிபேதம்' என்பதை,  அவர்களில் எவரும் அறிந்தார்களா? அதனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தெரிவித்தார்களா? அல்லது 'நமக்கேன் வம்பு?' என்று வாய்மூடிக் கொண்டார்களா? என்பதெல்லாம் அவரவர் மனசாட்சிகளுக்கே வெளிச்சம்.

உணர்ச்சிபூர்வமாக,‌  தவறான திசையில், தமிழ் இசை ஆர்வம் பயணிப்பதால், வரும் கேடுகள் பற்றி, நான் விளக்கியுள்ளதையும், தமிழ்நாட்டில் தமிழிசை புலமையாளர்கள், ஆர்வலர்கள் எவரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. ஒருவேளை, வெறுப்பு அரசியலுக்கு அது துணை செய்யாது, என்பதும் கூட காரணமாக இருக்கலாம்.

விபுலானந்த அடிகள் தனது 'யாழ் நூல்' (1947 )  என்ற புத்தகத்தில், சுமார் 30 வருடங்களுக்கு முன் வெளிவந்திருந்த‌, ஆபிரகாம் பண்டிதரின் 'கருணாமிர்த சாகரம்' ( 1917) என்ற நூலைப் பற்றி  ஏன் குறிப்பிடவில்லை? ஆபிரகாம் பண்டிதரின் ஆய்வுகளைக் கணக்கில் கொண்டிருந்தால், விபுலானந்தர் தமது ஆய்வுகளில் வெளிப்படுத்தியுள்ள குறைகளை தவிர்த்திருக்கலாம் என்பதையும் எனது முனைவர் பட்ட ஆய்வில் குறிப்பிட்டுள்ளேன். (பக்கம் 168, 'தமிழ் இசையியல் புதிய கண்டுபிடிப்புகள்' ‍ 2009)

'பிராமண எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு' போன்ற வெறுப்பு அரசியலில் சிக்காமல், ஆபிரகாம் பண்டிதர் உரிய சான்றுகளின் அடிப்படைகளில் உண்மையை நிலைநாட்டுதல் என்ற திசையில், பிராமணர்களிலும், பிராமணரல்லாதாரிலும் இருந்த புலமையாளர்களை தமது ஆய்வு வட்டமாகக் கொண்டு, தமது ஆய்வுகளை மேற்கொண்டார். அதனால் அறிவுபூர்வமான விமர்சனங்களின் ஊடே, அவரின் புலமையும், ஆய்வும் வளர்ந்தன.

அதற்கு மாறாக, வெறுப்பு அரசியலில், புகழ், பாராட்டு போன்றவைகளுக்கு ஏங்கி, உணர்ச்சிபூர்வமான பேச்சுகள் மற்றும் எழுத்துகள் மூலம் பயணிப்பவர்களின் புலமைக்கும், ஆய்வுக்கும் அதுவே கேடாக அமையும்.  

தமிழ்நாட்டில் உரிய புலமையின்றி, 'அறிவுஜீவி'யாக வெளிச்சம் போடும் நோயானது, பிராமணர்களிடமும், பிராமணரல்லாதாரிடமும் வெளிப்பட்டு வருவதை நான் அறிவேன். உணர்ச்சிபூர்வமாக வெறுப்பு அரசியலில் பயணிக்கும் தமிழ் இசை ஆர்வலர்களையும், தமிழ் இசையை இரண்டாம் தரமாக கருதி, கர்நாடக இசை உயர்வு போதையில் பயணிக்கும் பிராமணர்களையும், எனது சமூக வட்டதில் இருந்து அகற்றியே, நான் வாழ்கிறேன்'; 

'அறிவு ஜீவி' பொதுவாழ்வு விபச்சாரிகளையும் ஒதுக்கி வாழ்வது போலவே.  திராவிட மனநோயாளித்தன செயல்நுட்பத்தில் சிக்கி, பலிகடா ஆனதன் 'பலன்களை',  பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேறுபாடின்றி, அனைத்து சாதி, மதத்தினரும் 'அனுபவித்து வருகின்றனர்." என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.( ‘திராவிட மனநோயாளித்தனத்தின் பலிகடா:(Social Functional Checks) சமூக செயல்நெறி மதகுகள் (2); பலிகடாவின் 'பலன்கள்' : பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேறுபாடின்றி’; http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_10.html ) தமிழ்நாட்டில் அறிவுப்புலத்திலும் அந்த -'அறிவுஜீவி'யாக வெளிச்சம் போடும் நோயாகிய‌-  பாதிப்பு உள்ளது.

வெறுப்பு அரசியலில் சிக்காமல், உரிய சான்றுகளின் அடிப்படைகளில் உண்மையை நிலைநாட்டுதல், ஆய்வு முடிவுகளின் மீது உடைமையுணர்வு பற்று(possessiveness)  இல்லாமல், அறிவுபூர்வமான விமர்சனத்தில் வெளிப்படும் தவறுகளை, பகிரங்கமாக நன்றியுடன் ஒத்துக்கொண்டு, உரிய திருத்தங்களுடன் நான் பயணிக்கிறேன். நம்மை மிகவும் மதிப்பவர்கள் என்பதற்காக, அவர்களிடம் வெளிப்படும் தவறுகளை 'வாழ்வியல் புத்திசாலித்தனத்துடன்' கண்டுகொள்ளாமல் இருக்கும் தவறுகளை, நான் செய்வதில்லை, என்பதை,  என்னிடம் பழகியவர்களும், பழகுப‌வர்களும் அறிவார்கள்.

ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்த அடிகள் ஆய்வுகளில் இருந்த குறைபாடுகளை உரிய சான்றுகளுடன் வெளிப்படுத்தி,  “1996இல் 'தமிழிசையின் இயற்பியல்' (Physics of Tamil Music)  பல்துறை (interdisciplinary) முனைவர் பட்டம் பெற்றதும், எனது ஆய்வுமுடிவுகள் 'அதிர்ச்சி அலைகளை' ஏற்படுத்தி , ஒரு பெரிய விவாதத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்தும் என எதிர்பார்த்தேன். ஆனால் கடந்த 20 வருடங்களாக அப்படிப்பட்ட விவாதமின்றி 'அமைதியாகத்’ தான் தமிழ்நாடு பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்த 'அமைதியுடன்' தொடர்புடைய 'செயல்நுட்பத்திலேயே', ஆங்கில வழிப் பள்ளிகளின் புற்றீசல் வளர்ச்சியில் தமிழ்வழிக்கல்வியின்  (எனவே தமிழின்) மரணப்பயணம் தொடங்கியதா? கிரானைட், தாது மணல், ஏரி,குளம், காடுகள் உள்ளிட்ட கனிவளங்கள் சூறையாடப்பட்டதா? அந்த 'அமைதியில்' பங்கு பெற்ற தமிழ், தமிழ் உணர்வு புலமையாளர்களில், யார், யார் 'நமக்கேன் வம்பு?' என்று ஒதுங்கி வாழ்ந்தவர்கள்? அந்த 'கொள்ளைகளில்' 'வாய்க்கரிசி' பெற்று 'வாழ்வியல் புத்திசாலி நடை பிணங்களாக' வாழ்ந்தவர்கள் யார்? அந்த 20 வருடங்களில், தனிநபர்களை 'மிரட்டி, கொலை செய்து' சொத்துக்கள் வாங்கியதையும், அந்த கொள்ளைகளையும்,  அரசியல் செல்வாக்குள்ள கொலையாளிகள், அரசு சாட்சிகளை மிரட்டி, பிறழ்சாட்சிகளாக்கி, விடுதலைகள் பெற்றதையும் 'கண்டுகொள்ளாமல்', தமது செல்வம், செல்வாக்கில் வளர்ந்த 'மனித உரிமை' தலைவர்கள் யார், யார்? என்பது போன்ற 'ஆராய்ச்சிகள்' இனி 'சூடு' பிடிக்கும் என்றும், அந்த போக்கில், தமிழ்வழிக்கல்வியின் மரணப்பயணம் தடுத்து நிறுத்தப்பட்டு, தமிழ்நாடு வீழ்ச்சியிலிருந்து மீளும் என்றும் நம்புகிறேன். அறிவுபூர்வ விவாதங்களுக்கு இடமின்றி, உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியலில்,  தமிழ்நாடு பயணித்ததும், இதற்கு காரணமா? என்பதும் ஆய்விற்குரியது.  தமிழ்நாட்டின் அறிவுப்புலமானது(intellectual field) , 'கட்சி அரசியல்' மூலம், சமூக வண்ணக்குறைபாட்டில்(social colour blindness)  சிக்கி, சீரழிந்து வருவதன் விளைவும், இதற்கு காரணமா? என்பதும் ஆய்விற்குரியது. ('கறுப்பு வெள்ளை (அல்லது சிகப்பு) பாதிப்புகளிலிருந்து விடுபடுவோம்';http://tamilsdirection.blogspot.in/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html ). எனது ஆய்வு முடிவுகளில் பல, 'உணர்ச்சிபூர்வ',  'திராவிட', 'இந்துத்வா' ஆதரவாளர்களுக்கு பிடிக்காமல் இருக்க வாய்ப்புண்டு.

ஆங்கில வழிக் கல்வி மூலம் 'ஆங்கில வல்லாண்மையில்', தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) மரணப்பயணம் தீவிரமடைந்துள்ளது. அந்த போக்கில், தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு (வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு வேறு வழியில்லை) ,  தமது குடும்பப்பிள்ளைகளை ஆங்கிலவழியில் படிக்க வைத்துக்கொண்டு, அதற்கு வருத்தம் கூட தெரிவிக்காமல், 'சமற்கிருத வல்லாண்மையை' எதிர்ப்பது சரியா?

தமிழ்நாட்டில் இந்து அறநிலையத் துறை கோவில்களில் பக்தர்கள் விரும்பினால், தமிழில் வழிபட ஏற்பாடுகள் செய்கிறார்கள். ஏன் அதை பெரும்பாலான தமிழர்கள் பயன்படுத்திக் கொள்வதில்லை? அவை தவிர, சைவ மடங்களும், தமிழர்களாக உள்ள தனியார் வசத்திலும் பல கோவில்கள் உள்ளன?.அங்கெல்லாம் தமிழில் வழிபடுவதைத் தடுப்பது யார்? பெரும்பாலான தமிழர்களின் மூளைகளில் 'பக்தி' தொடர்பாக, என்னென்ன கருத்துகள் ஆதிக்கம் செலுத்துகின்றன?  'தமிழில் வழிபட்டால், வேண்டியதெல்லாம் கிடைக்கும்' என்று, ஒரு புரளியை வெற்றிகரமாக கிளப்பி விட்டால், தமிழர்களெல்லாம் தமிழில் வழிபட மாட்டார்களா? அப்படி தமிழில் வழிபட்டாலும், அதற்கு தமிழ் மீது உள்ள பற்று காரணமாகுமா? அல்லது 'அதிர்ஷ்டத்தின்' மீது உள்ள பற்று காரணமாகுமா?


ஆங்கிலத்தின் வல்லாண்மையையும், 'அதிர்ஷ்டத்தின்' வல்லாண்மையையும் தமது வாழ்வில் 'செயல்பூர்வமாக' எதிர்ப்பதே சரி; பேச்சுகளும், எழுத்துகளும் தமிழ்நாட்டில் தகவல் பரிமாற்ற வலிமையை இழந்துவரும் சூழலில். கீழ்வரும் வகையில், தமிழ் இசை வளர்ச்சிக்கு என்னால் இயன்ற பங்களிப்பை 'செயல்பூர்வமாக' பேசி வருகிறேன்.


விருப்பு, வெறுப்புகளைத் தாண்டி, புலமையை மதிக்கும் பிராமணர்கள், தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்ளிட்டு வட மாநில, வெளிநாட்டினர் பலர் எனது ஆய்வுகளை ஊக்குவித்தும், ஆதரவளித்தும் வந்துள்ளதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.மேற்கத்திய பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் உலகப்புகழ் பெற்ற அறிஞர்கள் எனது ஆய்வுகளைப் பாராட்டி ஊக்குவித்து எழுதியுள்ள‌ மடல்களில் சிலவற்றை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். ( 'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்'; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_16.html

ஆனால் தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களில் உள்ள பேராசிரியர்களுக்கு மின்மடல் அனுப்பினாலும், கொரியர் மூலம் அனுப்பினாலும் கிடைத்தது என்று கூட தெரிவிப்பதில்லை. ஒரு பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர் மட்டும்  தனக்கு இசை தெரியாது என்று ஆய்வுக் கட்டுரையைத் திருப்பி அனுப்பினார். அந்த கட்டுரையில் யாப்பிலக்கணத்தின் இசைப் பரிமாணம் பற்றிய தகவல்கள் இருந்தன. தற்போது கற்பிக்கப்படும் யாப்பிலக்கணத்தில், தொல்காப்பியத்தில் வரும் ‘இசை’ என்ற சொல்லை,  'ஒலி' எனத் தவறாகப் புரிந்து கற்பிக்கப்படுவது தொடர வேண்டும் என்பது தமிழின், தமிழ்நாட்டின் விதி என்பது எப்போது முடிவுக்கு வரும்?’ (’ உணர்ச்சிபூர்வ‌ 'இரைச்சலில்’ சிக்கிய 'தமிழ் இசை' ஆய்வுகள்’;http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_13.html )

தற்போது ' tholkAppiam & Computational Musical Linguistics ' என்ற நூல் எழுதி வருகிறேன். அது தொடர்பான கணினி ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், பொறியியல் மாணவர்கள் 'இசை மொழியியல்' அடிப்படையில், ‘Natural Language Processing’ (NLP) related projects செய்வதற்கும், ஏற்ற வகையில், அந்நூலை co-author  ஆக எழுதி, முடிக்க, புகழ்பெற்ற பொறியியல் கல்லூரியில் மூத்த (senior professor)  பிராமண பேராசிரியர் தாமாகவே முன்வந்துள்ளார். எனவே ந்த வருடத்திற்குள் அப்பணி முடிந்து, அந்நூல் வெளிவர வாய்ப்புண்டு. ஒருவேளை, அதன்பின் தமிழ்நாட்டில் தமிழ்/தமிழ் இசை புலமையாளர்கள் முழித்துக் கொண்டு, யாப்பிலக்கண பாடங்களில் 'இசை'யை 'ஒலியாக' புரிந்து, கற்பித்தலில் உள்ள குறைபாடுகளை நீக்குவதற்கும் வாய்ப்பிருக்கிறது. தமிழிசையியல் அறிவின்றி யாப்பிலக்கணம் படிக்க முடியாது என்பதும், தமிழக பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் நடைமுறைக்கு வரவும் வாய்ப்புண்டு.

Saturday, April 25, 2015


உணர்ச்சிபூர்வ ஒற்றுமையில்;

திராவிடக் கட்சிகளும், இந்துத்வா கட்சிகளும்


ஒரு மனிதரின் பேச்சுகளும் எழுத்துகளும் அவரின் 'இயல்பை'  வெளிப்படுத்தும் 'எக்ஸ் ரே' (X Ray) கருவிகள் போன்றவையாகும். அந்த பேச்சுக்களும் எழுத்துக்களும் ஒருவரை பாராட்டுபவையாக இருந்தாலும் சரி; எதிர்ப்பவைகளாக இருந்தாலும் சரி. 

ஒருவரின் கொள்கைகளையும், நிலைப்பாடுகளையும் அறிவுபூர்வமாக எதிர்ப்பது என்பது வேறு;  உணர்ச்சிபூர்வமாக கோபத்தையும் வெறுப்பையும் உமிழ்ந்து எதிர்ப்பது என்பது வேறு; இரண்டும் கலந்து, இரண்டும் கெட்டானாக எதிர்ப்பது என்பது வேறு; பெரியார் ஈ.வெ.ராவின் கொள்கைகளையும், நிலைப்பாடுகளையும் எதிர்ப்பதில்,  பா.ஜ.கவின் எச்.ராஜாவும், மற்றும் அவரைப் போன்று, பெரியார் ஈ.வெ.ராவை இழிவுபடுத்தி பேசுபவர்களும், எழுதுபவர்களும், எந்த வகை? என்ற ஆராய்ச்சியை, மனசாட்சியும், அறிவுநேர்மையும் உள்ள இந்துத்வா ஆதரவாளர்களுக்கு விட்டு விடலாம்.

நானும் பெரியார் ஈ.வெ.ராவின் கொள்கைகளிலும் நிலைப்பாடுகளிலும், இந்துத்வா கட்சிகளிலும்,  எனது பார்வையில் எதிர்க்கப்பட வேண்டியவைகளை எதிர்த்து, இந்த பிளாக்கில்(Blog) பல பதிவுகள் எழுதியுள்ளேன். அது எந்த வகை என்பதை முடிவு செய்ய வேண்டியது படிப்பவர்கள் தான்.

பெரியார் ஈ.வெ.ரா, கோட்சே, வாஞ்சிநாதன், சத்தியமூர்த்தி உள்ளிட்டு  பொதுவாழ்வில் இடம் பெற்ற மனிதர்களைப் பற்றி எதிர்த்து எழுதும்போதும், அறிவுபூர்வமாகவும் எழுதலாம்; உணர்ச்சிபூர்வமாகவும் எழுதலாம். ஆனால் நாம் எதிர்க்கின்ற நபர் பொதுவாழ்வில் சுயநலமின்றி, பல தியாகங்கள் புரிந்து வாழ்ந்திருந்தால், அதை மதிக்கின்ற அறிவை இழந்து, உணர்ச்சிபூர்வமாக அவரை இழிவுபடுத்துவது தவறு.

நாட்டிற்காக புரிந்த தியாகங்களை, தமது சுயநல அரசியலுக்காக மதிக்காத போக்கு, தமிழ்நாட்டு தேசியவாதிகளிடம் இருந்தது என்பதற்கும் சான்றுகள் உள்ளன.

உதாரணமாக,
தமிழ்நாட்டில் தனது சொத்துகளையும், வருமானத்தையும் இழந்து,  சிறைத்தண்டனைகளை அனுபவித்து, நாட்டிற்காக தியாகங்கள் செய்ததில், வ.உ.சிக்கு இணையானவர்கள் எவரும் தமிழ்நாட்டில் இல்லை என்பது எனது கருத்து. அவர் சிறையிலிருந்து வெளிவந்தபோது அவரை வர‌வேற்க வந்திருந்தவர்கள் யார், யார்? அவரை வரவேற்க வராதவர்கள் யார்,யார்? வறுமையில் உழன்ற வ.உ.சிக்கு உதவ தென்னாப்பிரிக்காவில், காந்தியிடம் கொடுத்த நிதியை, வ.உ.சியிடம் உடனே காந்தி கொடுக்காதது எவ்வளவு பெரிய தவறு? என்பது, வறுமையையும், பசியையும் அனுபவித்தவர்களுக்குத்தான் அதிகம் தெரியும். மிகுந்த தாமதத்திற்குப் பிறகு, வ.உ.சி எப்படி காந்திக்கு அதை நினைவூட்டி, அந்த நிதியைப் பெற்றார்? என்பது பற்றிய, வருத்தம் தரும், சான்றுகள் வெளிவந்துள்ளன. அத்தகைய காந்தியின் ஆதரவாளர்களாக இருந்த, தமிழ்நாட்டு தேசியவாதிகளில் யார், யார் அந்த காலக்கட்டத்தில், வ.உ.சியை சிறைக்கு சென்று வரவேற்காதது மட்டுமல்ல; சாகும் வரை அவர் வறுமையில் உழன்றது பற்றிய கவலையற்ற கல்நெஞ்சுடையவராய் இருந்தார்கள்? அந்த காலக்கட்டத்தில் வ.உ.சி,  பெரியார் ஈ.வெ.ராவைப் பாராட்டி மடல் எழுதியதற்கு காரணம் என்ன? என்பது போன்ற, இன்னும் இது போன்ற‌,  கேள்விகளே, இந்திய விடுதலைக்குப்பின் நடந்த  1952 முதல் பொது  தேர்தலில், காங்கிரஸ் 'பெரும்பான்மை' பலமின்றி தோற்றது ஏன்? என்ற கேள்விக்கு பதிலைத் தரும்.

1857 முதல் இந்திய விடுதலை போர் வெற்றி பெற்றிருந்தால், இந்தியா அந்தந்த மன்னர்களின் ஆட்சியில் இருந்து, 'ஐரோப்பிய ஒன்றியம்' போன்ற வகையில் ஒன்று சேர்ந்திருப்பார்களா? அது தோல்வியான பின், 'இந்தியர்' என்ற அடையாளம் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் எவ்வாறு, வெவ்வேறு அளவுகளில் 'வேர் பிடித்தது? அந்த பின்னணியில்,  1947 விடுதலைக்கு முன், ராஜாஜியும், அவர் செல்வாக்கில் இருந்த பிராமணர்களும், பெரியார் ஈ.வெ.ராவின் 'திராவிட நாடு' பிரிவினை கோரிக்கையை ஆதரித்ததோடு நிற்காமல், அக்கோரிக்கை நிறைவேறுவதற்காக‌, என்ன பங்களிப்பு வழங்கினார்கள்? என்பது போன்ற கேள்விகளுக்கும் பதிலைத் தரும்.

தமிழ்நாட்டு தேசியவாதிகளிடம் வெளிப்பட்ட இந்த, - தாம் எதிர்க்கின்ற நபரின் தியாகங்களை மதிக்காத‌ போக்கு- , 1944க்குப் பிறகுதான், திராவிட கட்சிகளிடமும் வெளிப்பட்டது. தாம் எதிர்க்கின்ற நபர் புரிந்த தியாகங்களை மறந்து, உணர்ச்சிகர பேச்சில், எழுத்தில் அவரை, குறிப்பாக பெரியார் ஈ.வெ.ராவை, இழிவுபடுத்துவதில் தேசியவாதிகளை 1967க்கு முந்தைய தி.மு.கவினர் விஞ்சினர்; இப்போது தி.மு.கவினரை, இந்துத்வா கட்சியினரில் சிலர் விஞ்சி வருகின்றனர்.

பொதுவாக தாம் வாழும் இடத்தில், பணியாற்றும் இடத்தில், பொது நீதிக்காக எந்த இழப்பையும் சந்தித்திராமல், செல்வாக்குள்ளவர்கள் தொடர்புடைய தமது சுயநல‌ சமூக வலைப்பின்னலை வலுப்படுத்துவதில், குறியாக வாழ்பவர்கள் தான், தாம் எதிர்க்கின்ற நபர் பொதுவாழ்வில் சுயநலமின்றி, பல தியாகங்கள் புரிந்து வாழ்ந்திருந்தால், அதை மதிக்கின்ற அறிவை இழந்து, உணர்ச்சிபூர்வமாக அவரை எதிர்ப்பார்கள். அவ்வாறு தாம் எதிர்த்த நபரிடமோ, அவரின் ஆதரவாளர்களிடமோ, தமக்கு ஆதாயம் இருந்தால், வெட்கப்படாமல், அவர்களின் உதவியையும் நாடுவார்கள்.

ஒருவரை எதிர்த்து எழுதும் போது, அவரைப்பற்றி பாராட்ட வேண்டியவைகளையும் மறக்காமல் குறிப்பிட்டு, ஆனாலும் ஏன் அவரை எதிர்க்க வேண்டும் என்று எழுதுவது தமிழ்நாட்டில் பொது அரங்கில் இருந்ததா? என்ற கேள்விக்கு, 1944க்கு முன் குடி அரசு இதழில் வெளிவந்த கட்டுரைகள் சான்றுகளாக உள்ளன.

இன்று தனது சுயநலத்திற்காக ஒரு நபரை பாராட்டி எழுதுவதும், எதிர்த்து எழுதுவதும் உள்ளதா? நாம் பாராட்டும் நபரின் குறைகளை மறைத்து எழுதுகிறோமா? நாம் எதிர்க்கும் நபரைப் பற்றிய, பாராட்டப்பட‌ வேண்டியவைகளை மறைத்து, எழுதுகிறோமா? என்பதெல்லாம், அந்தந்த எழுத்தாளரின்/பேச்சாளரின் மனசாட்சிக்கே வெளிச்சம்.
'சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்றழித்துச்
சார்தாரா சார்தரு நோய்' - திருக்குறள் 359

திராவிடக் கட்சிகளிலும், இந்துத்வா கட்சிகளிலும் உணர்ச்சிகரமாக ஒரு சார்பாக பேசுபவர்களும், எழுதுபவர்களும், தமிழ்நாடு 'சார்தரு நோய்' காரணமாக, சீரழிய காரணமாவார்களா?அப்படிப்பட்டவர்களில், யார் யார், சமூகத்தில் ஒற்றுமையை சீர் குலைக்கும், எந்தெந்த, உள்நாட்டு/வெளிநாட்டு சுயநல சக்திகளின் முகவர்கள்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அப்படி சுயநலநோக்கில், பேசுபவர்களையும், எழுதுபவர்களையும், 'இவர் நம்மாளு' என்று தெரிந்தும்,  அவர்களைக் கண்டிப்பதற்கும், திருந்தவில்லையெனில் வெறுத்து ஒதுக்குவதற்கும்,  அதனால் ஏற்படும் இழப்புகளை, விரும்பி ஏற்று வாழ்வதற்கும்,  துணிச்சல் வேண்டும். மாறாக அவர்களை ஆதரிப்பவர்கள் திராவிட கட்சிகளிலும், இந்துத்வா உள்ளிட்ட தேசியக்கட்சிகளிலும் இருக்கும் வரை, தமிழ்வழிக் கல்வியில் (எனவே தமிழின்) மரணப்பயணத்தையும், தமிழ்நாட்டில் தமிழர்கள் அறிவு உழைப்பிலும், உடல் உழைப்பிலும்,  'பதராகி' (பலவகை தரகர்களாக வளர்ந்து) வரும் போக்கையும், தமிழ்நாட்டில் வாழும் பிற மாநிலத்தவரின் அறிவு உழைப்பும், உடல் உழைப்பும் வளர்ந்து, அவர்களை நம்பியே தமிழ்நாடு 'வளர்ந்து' வரும் போக்கையும் தடுத்து நிறுத்த முடியாது.  
( http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none.html )

தமிழ்நாட்டில் சராசரியாக வாழும் மக்களிடையே, ( கடந்த 20 வருடங்களில் 'வீரியத்துடன் தொத்துநோயாக' வளரும்) 'குறுக்கு வழியில் சீக்கிரம் உயரும்' நோக்கமில்லாதவர்கள், கணிசமானோர் இருக்கிறார்கள் என்பதும், அவர்கள் மேலே குறிப்பிட்ட‌ 'துணிச்சலுடன்' வாழ்பவர்களையே மிகவும் மதிக்கிறார்கள் என்பதும், தமிழின் மீட்சிக்கும், தமிழ்நாட்டின் மீட்சிக்கும் நம்பிக்கையூட்டுவதாக உள்ளன, என்பதும் என் அனுபவமாகும்.

Thursday, April 23, 2015


பிராமணர்களிலும், பிராமணரல்லாதார்களிலும், மோசமான துன்பமகிழ் ரவுடிகள் இனம்(worse sadist goons) யார்,யார் ? 


‘பெரியாரை பின்பற்றுபவர்களின் விபரீதமான நீதி உணர்வு ‘ - ‘Periyar’s Followers Have A Perverse Sense Of Justice’ -  என்ற தலைப்பில் பத்ரி சேஷாத்திரி ( பிரபல புத்தக வெளியீட்டாளர்) எழுதியுள்ள ஆங்கில கட்டுரையானது,(எனக்கு தெரிந்த) படித்த, நேர்மையான பண்புள்ள பிராமணர்களும் பாராட்டும் அளவுக்கு வரவேற்பும், முக்கியத்துவமும் பெற்றுள்ளது.  
 (கட்டுரையைப் படிக்க‌ : http://swarajyamag.com/politics/hate-crime-cutting-the-sacred-thread-of-brahmin-priests/)

“ 2006இல் சீரங்கத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, பல பெரியார் குழுக்களைச் சார்ந்த ரவுடிகள் (goons) தமிழ்நாட்டிலிருந்த இந்து கோவில்களை சேதப்படுத்தினர். மேலும் பிராமணர்களை குறி வைத்து தாக்கினர். குறைந்த பட்சம் 4 பிராமணர்களின் பூணூல்கள் அறுக்கப்பட்டன.பக்தி சொற்பொழிவுகளைக் கேட்க பிராமணர்கள் கூடும் சென்னை அயோத்தியா மண்டபத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட்டது.”

“In 2006, when a statue of Periyar (EV Ramasamy Naicker) was damaged in Srirangam by unknown people, goons belonging to various Periyar outfits unleashed a spate of attacks on Hindu temples across the state. But they also followed it up with specifically targeting Brahmins in the state. Sacred thread worn by at least four Brahmins were cut. A petrol bomb was thrown at Ayodhya Mandapam in Chennai, a place where Brahmins congregate to listen to devotional speeches.”

மேற்குறிப்பிட்டதை முன்னுரையாக எழுதி, தொடர்ந்து அண்மையில் சென்னை பெரியார் திடலில் தி.க தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்தியபோது, பெரியார் தொண்டர்களுக்கும், இந்து அமைப்புகளுக்கும் இடையே நடந்த மோதல் பற்றி கீழ்வருமாறு எழுதியுள்ளார்.

“தமிழ்நாட்டில் சிறிய கட்சியான சிவசேனா தி.க அலுவலகம் முன் எதிர்ப்பு போராட்டம் நடத்தினார்கள். அதன் விளைவாக இரண்டு பக்கங்களிலும் ஒருவரையொருவர் தாக்கினர்.போலீஸ் குறுக்கிட்டு, தடியடி நடத்த வேண்டியதாயிற்று.இந்த பின்னணியில்தான்,  பிராமண புரோகிதர்கள் மீது நடந்த தாக்குதலை நாம் அணுக வேண்டும்.”

“Shiv Sena which has a minor presence in the state staged a protest near DK’s office and this resulted in both sides physically attacking each other. Police intervened and had to resort to lathi charge. It is in this backdrop that we have to look at the attack on the Brahmin priests.“

மேற்குறிப்பிட்ட சம்பவம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. அதில் சிவசேனா கட்சியினர் ஆட்டோவில் வந்ததும், அந்த ஆட்டோவில் இருந்த நாட்டு வெடிகுண்டுகளை அவர்கள் பயன்படுத்தும் முன் போலீஸ் அவர்களை கைது செய்து, நாட்டு வெடிகுண்டுகளுடன் ஆட்டோவை பறிமுதல் செய்ததும் ஒளிபரப்பானது.

சிவ சேனா கட்சியினரின் நாட்டு வெடிகுண்டையும், ஆட்டோவையும் பற்றிய தகவல்களை மறைத்து, மேலே குறிப்பிட்டவாறு எழுதியது ' விபரீத எழுத்துணர்வா?' Perverse Sense Of Writing ’அல்லது 'அறியாமையா?' என்ற கேள்வியை எழுத்தாளருக்கும், அக்கட்டுரையைப் பாராட்டி வரவேற்றவர்களுக்கும் விட்டு விடலாம். அதைவிட முக்கியமாக, அவ்வாறு குறைத்துக் காட்டிய சம்பவத்தின் 'பின்னணியில் தான், பிராமண புரோகிதர்கள் மீது நடந்த தாக்குதலை நாம் அணுக வேண்டும். ' என்ற அவரின் ஆராய்ச்சியானது, நேர்மையான திசையில் பயணித்ததா? என்பதுதான் மிக முக்கியமான கேள்வியாகும்.

அந்த ஆராய்ச்சியில், சமூக வலைத்தளங்களில் வெளிப்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

பெரியார் படத்தை சில பெண்கள் செருப்பால் அடித்த புகைப்படமும், பெரியார் படத்தின்மீது சில ஆண்கள் சிறுநீர் கழித்த புகைப்படமும் அவரின் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படுகிறது.அவ்வாறு செய்தவர்கள் எல்லாம் “பிராமணர்கள் அல்லர், பிற சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று புகைப்படங்களைப் பார்த்தாலே தெரிகிறது”  என்று அந்த எழுத்தாளர் தனது 'ஆராய்ச்சி திறமையை ' வெளிப்படுத்தியுள்ளார். 

“In response to the mangala sutra removal and beef eating event, photographs were circulated in social media of some women beating Periyar’s photo with footwear and some men urinating on Periyar’s photo. One can very clearly see that the people performing these acts not Brahmins but those belonging to other castes.”

அந்த புகைப்படத்தில் ஆண்கள் சட்டையின்றி பூணூலின்றி காட்சியளித்தார்களா? அந்த பெண்கள் பிராமணப் பெண்கள் இல்லை என்று எப்படி அவர் கண்டுபிடித்தார்? என்ற கேள்விகளை எழுத்தாளருக்கும், அக்கட்டுரையைப் பாராட்டி வரவேற்றவர்களுக்கும் விட்டு விடலாம்.

அப்படி செய்தவர்கள் பிராமணரல்லாத பிற‌ சாதியினர் தான், என்ற எழுத்தாளரின் ஆராய்ச்சி முடிவை சரி என்று வைத்துக் கொண்டாலும், அவர்கள் சொந்த புத்தியில் அதைச் செய்தார்களா? அல்லது பிராமணர்கள் எவரும் தூண்டி செய்தார்களா? என்ற கேள்வியை, தமிழ்நாட்டின் வரலாறு தெரிந்தவர்கள் கேட்பார்கள்.

'suppressio veri et suggestio falsi'-வாதத்தில் 'உண்மையை மறைத்தல்;பொய்யை முன் வைத்தல்' என்ற தவறுக்கு, இக்கட்டுரை பொருந்துமா? என்ற கேள்வி எழுவது தவறா? இக்கட்டுரை வெளிவந்த 'ஸ்வராஜ்யா'(SWARAJYA)  இதழில், ஏற்கனவே ‘The 2 ‘S’ Words Ambedkar Did Not Want in the Constitution’ என்ற தலைப்பில், அரவிந்தன் நிலகண்டன் எழுதியுள்ள கட்டுரையிலும், இது போன்ற தவறு நிகழ்ந்துள்ளது.( http://swarajyamag.com/commentary/the-2-s-words-ambedkar-did-not-want-in-the-constitution/)

பெரியார் வாழ்ந்த காலத்தில், அவரே முட்டையடி, கல்லடி, செருப்படி உள்ளிட்டு, தமிழ்நாட்டில் எந்த தலைவரும் சந்தித்திராத எதிர்ப்புகளை சந்தித்து, மற்ற தலைவர்கள் எவரையும் விட 1944 வரை, அதிக செல்வாக்குடன் வளர்ந்தவர் ஆவார். அதன்பின் செல்வாக்கில் அவர் அண்ணாதுரையிடம் எப்படி தோற்றார்? என்பதை எனது பதிவுகளில் விளக்கியுள்ளேன். அதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய தகவல் பின்வருமாறு.

அந்த முட்டையடி, கல்லடி, செருப்படி 'வீரர்களில்' ( எழுத்தாளர் பாணியில் ரவுடிகள் (goons) அல்லர்; ஏனெனில் இந்து மதத்தை காப்பாற்ற அதை செய்தவர்கள்) பலர், பெரியாரின் வகுப்புரிமை மூலம் கல்வி கற்கும் வாய்ப்புகள் உள்ளிட்ட பலன்களை அனுபவித்து, பின் தமது செயலுக்கு பெரியாரிடம் மன்னிப்பு கேட்டு, யார் யார் அந்த செயலில் ஈடுபட தம்மைத் தூண்டினார்கள் என்று 'கக்கி'யிருக்கிறார்கள்.ரவுடிகளை அத்தீச்செயல்களில் ஈடுபடத் தூண்டியவர்கள், ரவுடிகளை விட மோசமான துன்பமகிழ் ரவுடிகள் (worse sadist goons)  இல்லையா? அவர்கள்  குடும்பம், நட்பு உள்ளிட்ட நமது சமூக வட்டத்தில் இருந்தால், அவர்களைக் கண்டித்து திருத்த வேண்டாமா? இயலாதெனில் வெறுத்து ஒதுக்க வேண்டாமா? இல்லையென்றால், நாமும் அந்த மோசமான துன்பமகிழ் ரவுடிகள் இனம் தானே.
‘நிலத்தியல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு’ -  திருக்குறள் 452


எனவே பெரியார் படத்தை செருப்பால் அடித்த பெண்களும், பெரியார் படத்தின் மேல் சிறுநீர் கழித்த ஆண்களும்(எழுத்தாளரின் ஆராய்ச்சி முடிவின்படி பிராமணரல்லாத ஆண்களும், பெண்களும் )  சொந்த புத்தியில் அதைச் செய்தார்களா? அல்லது வேறு  எவரும் தூண்டி செய்தார்களா? என்ற கேள்வி எழுவது தவறா? கூடுதலாக இன்றைய தமிழ்நாட்டு சூழலில், அவர்கள் 'கூலிக்கு' செய்தார்களா? என்ற கேள்வியும் எழ வேண்டும். ஏனென்றால், இன்று காசு கொடுத்தால், பிராமணர்களின் பூணுலை அறுக்கவும் ஆள் கிடைப்பார்கள்; கூடுதலாக காசு கொடுத்தால், பூணுலை அறுக்கச் சொன்னவர்களையும் தாக்குவார்கள். அப்படிப்பட்ட மோசமான சூழல் தமிழ்நாட்டில் நிலவுகிறது.தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட கூலி அடியாட்கள் வளர்ச்சிக்கும், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டிய காவல்துறை, அரசு வக்கீல், நீதித்துறை, சிறைத்துறை ஆகியவற்றில், கறுப்பு ஆடுகளின் (black sheep)  வளர்ச்சிக்கும் தொடர்பு இருக்கிறதா? திராவிடக் கட்சி ஆட்சிகளில் முளைவிட்ட இந்த போக்கு, கடந்த 25 வருடங்களில் 'வீரியமான வலைப்பின்னலாக' வளர்ந்து, தமிழ்நாட்டில் 'அதிவேகமாக' அதிகரித்து வரும் திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற குற்றங்கள், மாணவர்கள் வரை விரிவானதற்கு (expand)  காரணமா? 'தமிழ் உணர்வு, பார்ப்பன எதிர்ப்பு' ஆதரவாளர்களில் யார் யார் மேற்குறிப்பிட்ட வலைப்பின்னலில் இடம் பெற்று 'பலன்' பெற்றவர்கள்? யார், யார் அதை எதிர்த்தவர்கள்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

'நவீன சமூகத்தில் வெறுப்பினால் விளையும் குற்றங்களுக்கு இடமில்லை' -“ Hate crimes have no place in a modern society.” என்ற எழுத்தாளரின் கருத்தை நான் வரவேற்கிறேன். அந்த நோக்கிலேயே, பெரியார் ஆதரவாளர்களிடமும், இந்துத்வா ஆதரவாளர்களிடமும் வெளிப்படும் உணர்ச்சிபூர்வ வெறுப்பு பேச்சுகளை நான் எனது பதிவுகளில் கண்டித்து வருகிறேன். ஆனால் மேலே குறிப்பிட்ட கட்டுரையில், பூணூல் அறுப்பு சம்பவங்களுக்கு என்ன காரணம் என்ற ஆராய்ச்சியில் இறங்கிய எழுத்தாளர்,  கீழ்வரும் உணர்ச்சிபூர்வ வெறுப்பு பேச்சை,  தமது ஆராய்ச்சியில்  எடுத்துக் கொள்ளாததற்கு என்ன காரணம்? என்ற கேள்வியை எழுத்தாளருக்கும், அக்கட்டுரையைப் பாராட்டி வரவேற்றவர்களின் மனசாட்சிக்கும், அறிவுநேர்மைக்கும் விட்டு விடலாம்.

' " முதலில் ஈ.வே.ரா ஒரு தேச துரோகி என்பதை நாம் மனதில் பதியவைத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் 1944-ல் ஈ.வே.ரா தலைமையில் சேலத்தில் நடைபெற்ற திராவிடக்கட்சியின் துவக்க மாநாட்டில் C.N.அண்ணாதுரை ஒரு தீர்மானம் கொண்டுவருகிறார். தீர்மானம் என்ன சொல்கிறது என்றால் “வெள்ளையன் இந்த நாட்டை விட்டு வெளியேறக்கூடாது. அப்படி வெளியேறினாலும் லண்டனில் இருந்து கொண்டு சென்னை ராஜதானியையாவது ஆளவேண்டும்”. இப்படி ஒரு மானங்கெட்ட தீர்மானத்தை போட்ட தேச துரோகிகள் தானேடா ஈ.வே.ரா, அண்ணாதுரை, வீரமணி, கருணாநிதி & கம்பெனி. 1947 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் கிடைத்ததை கருப்பு தினம் என்று ஈ.வே.ரா அறிவித்து எல்லா வீட்டிலும் கறுப்பு கொடி ஏற்ற சொன்னாரா இல்லையா??. எனவே வெள்ளைக்காரன் நாட்டைவிட்டு வெளியெறிய போதே இந்த இரண்டு பேரையும் சேர்த்து அடித்து துரத்தியிருக்க வேண்டும்." சென்னை 'வள்ளுவர்கோட்டத்தில் 18 ஏப்ரல் 2015 அன்று நடைபெற்ற கறுப்பு சட்டை எரிப்பு போராட்டத்தில் ஈ.வெ.ரா வையும், வீரமணியையும், கம்யூனிசத்தையும் சேர்த்து எரித்து தள்ளிய திரு H.ராஜா அவர்களின் காரசாரமான பேச்சு' என்று முகப்புத்தகத்தில் வெளிவந்துள்ளது.பெரியாரைப் பற்றியும், அண்ணாவைப் பற்றியும், இவ்வளவு இழிவான கருத்துள்ள எச்.ராஜா, கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, மதுரையில் அழகிரியின் வீட்டிற்குச் சென்று, தனக்கு ஆதரவு தருமாறு கெஞ்சியது சரியா? என்ற கேள்வியை, மனச்சாட்சியும், அறிவுநேர்மையும் உள்ள எச்.ராஜா ஆதரவாளர்களுக்கு விட்டு விடலாம்.'(’பா.ஜ.க  எச்.ராஜா பேசியது சரி என்றால்;   என்னை போன்றவர்கள்  தமிழ்நாட்டில் இருக்க அருகதையில்லை’; https://tamilsdirection.blogspot.com/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_18.html )  

பிராமணர்கள் அப்பாவிகள்; பிராமணரல்லாதாரே வன்முறையில் ஈடுபடும் ரவுடிகள் (goons) என்ற கருத்தை, இக்கட்டுரை வெளிப்படுத்துகிறதா? கீழ்வரும் வரலாற்றுத் தகவல்களை எழுத்தாளருக்கும், அவரின் கட்டுரையைப் பாராட்டுபவர்களின் பார்வைக்கும் முன்வைக்கிறேன்.

“பிராமண எதிர்ப்பு பற்றிய வரலாற்று சான்றுகளின் அடிப்படையில் (கீழே குறிப்பிடப்படவுள்ள‌) ,  அதற்கான சமூகக் காரணங்கள் களையப்படாதது வரை, தி.க மறைந்தாலும், பிராமண எதிர்ப்பு மறையாது என்பதற்கு எனது அனுபவங்களில் ஒன்றைக் குறிப்பிடுகிறேன்.
எனது முனைவர் பட்ட ஆராய்ச்சியில் இசைத்துறைக்கு ஒரு நெறியாளரும்(guide) , இயற்பியல் (Physics)  துறைக்கு ஒரு நெறியாளரும் இருந்தனர். இயற்பியல் துறை நெறியாளர் எனது நண்பராகவும், மிகவும் மதிக்கத்தக்க வகையில் முன்னுதாரணமாக வாழ்ந்து வருபவருமான ஒரு பிராமண பேராசிரியர் ஆவார். அவர் மிகவும் மதிக்கும், இன்னொரு பிராமணரல்லாத பேராசிரியர், - தி.கவிற்கு எந்த சம்பந்தமும் இல்லாதவர், பற்றி அவர் தெரிவித்த தகவல் என்னால் மறக்க முடியாததாக அமைந்தது.
அந்த‌ பிராமணரல்லாத பேராசிரியர் கல்லூரிகளில், பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில், ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொண்ட காலத்தில் 'பிராமணரல்லாதார்' என்ற அடிப்படையில் பிராமணப் பேராசிரியர்களிடம் நிறைய கொடுமைகள் அனுபவித்து, மனம் தளராமல் உழைத்து முனைவர் பட்டம் பெற்று, அந்த துறையில் நிபுண‌ரானார். தன்னிடம் முனைவர் பட்டம் பெற, பிராமண‌ரல்லாதாரை மட்டுமே ஆய்வு மாணவர்களாக எடுத்தார். தனது நண்பரான பிராமணப் பேராசிரியரிடமே நன்கு படிக்கும் பிராமணரல்லாத மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, தன்னிடம் அனுப்பி வைக்குமாறு கோரியிருக்கிறார். அதை என்னிடம் தெரிவித்த அந்த பிராமணப் பேராசிரியர், அதற்காக அவர் மீது குறை சொல்லவில்லை.

பிராமண‌ர்களிடம் பாரபட்சத்தை அனுபவித்த ஒரு பிராமணரல்லாத பேராசிரியர் வெளிப்படையாக, ஆக்கபுர்வமாக பிராமண‌ரல்லாதார் வளர்ச்சிக்கு உதவினார் , தனது பிராமண நண்பர்களே அதை குறை சொல்லாத வகையில்.
அதிகம் படிக்காத, அடிமட்டத்தில் வாழ்பவர்களே பூணூல் அறுப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். அந்த சம்பவங்களும், தி.க தோன்றுவதற்கு முன் அதிகம் இருந்து, தி.க வின் செயல்பாடுகள் வடிகாலாக இருந்ததால், அச்சம்பவங்கள் குறைந்தன.. ராஜாஜி முதல்வராக இருந்தபோது, கும்பகோணத்தில், பெரியார் தலைமையில் ஊர்வலம் நடந்தபோது, இராமர் உள்ளிட்ட கடவுளர் சிலைகளை அடித்த நிகழ்ச்சி நடந்தது.  அதைப் பற்றி முதல்வர் ராஜாஜி கண்டுகொள்ளவில்லை. 1970களில் சேலத்தில் அது போன்ற ஊர்வலம் நடைபெற்று, பெரும் கண்டனங்கள் வெளிப்பட்ட சூழலில், திருச்சி தேசியக் கல்லூரி பிராமண‌ மாணவர்கள் ஊர்வலமாக சென்று, பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்த பின்னும், பூணூல் அறுப்பு சம்பவங்கள் நடைபெறவில்லை, தி.மு.க ஆட்சிக்கு ஊறு நேரக்கூடாது என்பதற்காக. (அந்த சமயம் திருச்சியில் நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது,  எனது பக்கத்து வீட்டு கல்லூரி மாணவர், தி.க ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அவர், பெரியாரைப் பார்க்கப் போவதாக சொன்னவுடன், தி.கபற்றி ஏதும் தெரியாத நான், அவருடன் திருச்சி பெரியார் மாளிகையில், பெரியாரைப் பார்க்க அவருடன் சென்றேன். ஹாலில் ஒரு மரக்கட்டிலில் அமர்ந்திருந்த அவர், எங்கள் இருவரையும் அவரின் இரு பக்கங்களிலும் அமரச் செய்தார். அந்த மாணவ நண்பர் தேசியக் கல்லூரி பிராமண மாணவர்கள், பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்ததை கோபத்துடன் விவரித்து, தி.க சார்பு மாணவர்கள் எதிர்ப்போராட்டம் நடத்தப் போவதை சொன்னார். பெரியார் அவரை சாந்தப்படுத்தி, 'கலைஞர் ஆட்சிக்கு ஊறு நேரக்கூடாது' என்று அறிவுறுத்திய பின், நாங்கள் அவரிடம் விடை பெற்று சென்றோம்.)

பெரியார் மறைந்து, வடநாட்டு 'ராம லீலாவிற்கு' எதிராக, மணியம்மை தலைமையில், சென்னை பெரியார் திடலில் 'இராவண லீலா' நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, காவல் துறை பாதுகாப்புடன் பெரியார் திடல் வாயிலுக்கு எதிரே, தனது ஆதரவாளர்களுடன், பிராமண எழுத்தாளர் 'தீபம்' பார்த்தசாரதி, கைகளில் பெரியார் படத்தை ஏந்தி, செருப்பால் அடித்த போராட்டம் நடத்தினார். அப்போதும் பூணூல் அறுப்பு சம்பவங்கள் நடைபெறவில்லை, தி.மு.க ஆட்சிக்கு ஊறு நேரக்கூடாது என்பதற்காக.

பின் எம்.ஜி.ஆர் ஆட்சியில் பிராமண சங்கம் செயல்பட்ட வேகத்தில், பூணூல் அறுப்பு சம்பவ‌ங்களும் 'திடீரென' அதிகரித்தன. அந்த காலக்கட்டத்தில் தஞ்சை சரபோசி கல்லூரியில், பெரியார் படத்தை பிராமண மாணவர்கள் உடைத்தனர். அதைக் கேள்விப்பட்ட பெரியார் தொண்டர்கள் கல்லூரிக்குள் நுழைந்து, ஒவ்வொரு வகுப்பாக சென்று, பூணூலை வைத்து அடையாளம் கண்டு, - சில பிராமண மாணவர்கள் செய்த தவறுக்காக- பல அப்பாவி பிராமண மாணவர்களை அடித்தனர்.

பின் தமிழ்நாட்டில் , பிராமண சங்க செயல்பாடுகள் குறைய, பூணூல் அறுப்பு சம்பவங்களும் குறைந்தன. 'பெரியார்' ஈ.வெ.ராவின் மறைவிற்குப்பின், பிராமணர்களிலும், பிராமணரல்லாதார்களிலும், மோசமான துன்பமகிழ் ரவுடிகளின் மூக்கணாங்கயிறுகள் எல்லாம் திராவிட அரசியல் கொள்ளைக்குடும்பங்கள் வசம் சிக்கி, கேலிக்கிடமான பொம்மலாட்டம் ஆகி விட்டது.; ஊழல் பாதுகாப்பு கவசங்களாக 'பார்ப்பன எதிர்ப்பு' தடம் புரண்டு விட்டது. (http://tamilsdirection.blogspot.com/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html )


தமிழ்நாட்டில் சாதி, மத மோதல்கள் இன்றி சமூக நல்லிணக்கம் வளர்ந்தால்தான், தமிழும், தமிழர்களும்,  தமிழ்நாடும், வீழ்ச்சியிலிருந்து மீண்டு வளரமுடியும் என்பது என் கருத்து. அந்த சமூக நல்லிணக்கத்திற்கு மற்றவர்களை விட, பிராமணர்களே மிகுந்த சமூகப் பொறுப்புடன் பங்களிப்பு வழங்க வேண்டும் என்ற விவேகானந்தரின் அறிவுரை இன்று அவசியம் பின்பற்ற வேண்டியதாகும். மாறாக உணர்வுபூர்வ போக்கில் வசதியான பிராமணர்கள் ஊடகத்திலும், இணையத்திலும் வெளியிடும் 'வன்முறை'க் கருத்துக்களால், அடிமட்டத்தில் வாழும் அப்பாவி பிராமணர்களுக்கே ஆபத்து ஏற்படும் என்பது மேலே குறிப்பிட்ட‌ வரலாறு உணர்த்தும் பாடமாகும்.” (‘தந்தி’ தொலைக்காட்சி:  கி.வீரமணி பேட்டி; சமூக பொறுப்புடன் விவாதிக்க வேண்டுமல்லவா?’; https://tamilsdirection.blogspot.com/2015/03/normal-0-false-false-false-en-us-x-none_31.html )



தமிழ்நாட்டில் "சமூக செயல்நெறி மதகுகள் ஆனவை, திராவிட மனநோயாளித்தன செயல்நுட்பத்தில் சிக்கி, பலிகடா ஆனதன் (தற்கொலை, வன்முறை உள்ளிட்டு ) 'பலன்களை',  பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேறுபாடின்றி, அனைத்து சாதி, மதத்தினரும் 'அனுபவித்து வருகின்றனர்." என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.(‘திராவிட மனநோயாளித்தனத்தின் பலிகடா:(Social Functional Checks) சமூக செயல்நெறி மதகுகள் (2); பலிகடாவின் 'பலன்கள்' : பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேறுபாடின்றி’; https://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_10.html)

பெரியார் இயக்கம் சிதறுண்டு வருவதாக,- “the movement is disintegrating from within”-  கட்டுரையாளர் குறிப்பிடுவது சரியாக இருக்கலாம். பொதுவாக எந்த கட்சி பிளவுபட்டாலும், அவ்வாறு பிளவுபட்டு உருவாகும் கட்சிகளில் எவையெவை உதிரும், எவையெவை புத்துயிர் பெறும் என்று உறுதியாக சொல்ல முடியாது. தி.மு.க விலிருந்து  அ.இ.அ.தி.மு.க பிரிந்த போது, தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் உயிருடன் இருக்கும் வரை அவரே முதல்வர் என்று எவரும் கணிக்கவில்லை. மிகுந்த எதிர்பார்ப்புடன் தி.மு.கவிலிருந்து பிரிந்த  ம.தி.மு.கவானது, மீண்டும் தி.மு.கவுடனும், அ.இ.அ.தி.மு.கவுடனும், பா.ஜ.க.வுடனும் என்று மாறி, மாறி தேர்தல் கூட்டணி வைத்து, தே.மு.தி. கவுக்கும் கீழே வரும் என்றும், எவரும் கணிக்க வில்லை.

ஆனால் பிராமண எதிர்ப்பு என்பது பெரியாருக்கு முன்னும் இருந்து, பூணூல் அறுப்பு சம்பவங்களும் நடந்து, பெரியார் காலத்தில் குறைந்து, மணியம்மை காலத்திற்குப் பிறகு அதிகரித்துள்ளது. 

சென்னை ஐ.ஐ.டி உள்ளிட்டு உயர்கல்வி நிறுவனங்களில், மற்றும்  உயர் வேலைவாய்ப்பு தனியார் நிறுவனங்களில்,  உள்ள‌  பிராமணர்களில் சிலர் 'பாரபட்ச' போக்கை கடைபிடிக்கும் வரை, பிராமண எதிர்ப்பு உயிருடன் இருக்கும். மற்றவர்கள் சாதிப்பற்றுடன் பாரபட்சம் கடைபிடித்தல்  என்பது, அங்கு பணியாற்றும் மற்ற சாதியினரின் வெறுப்போடு நின்றுவிடும். ஆனால் பிராமணர்கள் கடைபிடிக்கும் பாரபட்சம் , ஏற்கனவே உயிருடன் இருக்கும் பிராமண எதிர்ப்புக்கு வலுவூட்டும்.

எச்.ராஜாவின் உணர்ச்சி பூர்வ பேச்சுக்கள் எல்லா மட்டங்களிலும், 'அறிவுபூர்வ' போர்வையில் பாரபட்ச குறைபாடுகளுடன் வெளிவந்துள்ள மேற்சொன்ன கட்டுரை அதிகம் படித்த பிராமணரல்லாதார் மட்டங்களிலும், பிராமண எதிர்ப்புக்கு வலு சேர்ப்பவையாகும். தமிழக பா.ஜ.க நம்பமுடியாத வீழ்ச்சிப் பாதையில் பயணிக்க,  எச்.ராஜாவின் சென்னை வள்ளுவர் கோட்டப் பேச்சை, தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளிளெல்லாம் ஒலிக்கச் செய்தால் போதும். 

பிராமண எதிர்ப்பு உயிருடன் இருப்பதற்கு காரணமான 'பாரபட்ச' போக்குகள் மறையாதவரை, பிளவுபட்டு உருவான பெரியார் கட்சிகளில் ஏதேனும் ஒன்று, சமூக புத்திசாலித்தனத்துடன் (social intelligence)  கச்சத்தீவு, காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பிரச்சினைகளைப் பயன்படுத்தி, பிரிவினையை ஊக்குவித்து வரும் அந்நிய சக்திகளின் ஆதரவைப் பெற்று, அதிவேக வளர்ச்சியில் தமிழ்நாட்டை இந்தியாவின் இன்னொரு காஷ்மீராக்கும் அபாயம் இருக்கிறது.(“ புறக்கணிப்பின் அடிப்படையில் துவக்கத்தில் நேர்மையான உரிமைப் போராட்டமாக துவங்கும் 'தனி நாடு' முயற்சிகள், ஆயுதப் போராட்ட வடிவமாக வளரும்போது, உலக ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சி வலையில் சிக்கும் ஆபத்தும் இருக்கிறது.” ('தமிழரின் அடையாளச் சிக்கலும், தாழ்வு மனப்பான்மையும் (3);'தனி நாடு' உண்மையில் தனி நாடா?’; https://tamilsdirection.blogspot.com/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_26.html ) அது பிராமணர்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கே நல்லதல்ல. இந்துத்வா கட்சிகளில் வெளிப்படும் உணர்ச்சிபூர்வ பெரியார் எதிர்ப்பு பேச்சுகளும், எழுத்துகளும், தமிழ்நாட்டை அந்த பாதக திசையில் பயணிக்கச்  செய்யும். 

ஒரு கல்லூரியில் நிர்வாகமானது மாணவர்கள் நலனில் உணர்நுட்பத்துடனும்(sensitive) ,நேர்மையுடனும், செயல்படாததன் எதிரொலியாக, அந்த கல்லூரி கழிவறைகளில் உள்ளவை சேதப்படுத்தப்பட்டிருக்கும். அது 'விபரீதமான நீதி உணர்வு ‘ - A Perverse Sense Of Justice - வெளிப்பாடாக இருந்தாலும். அதை சிக்னலாக(signal)  கருதி, தம்மை திருத்திக் கொள்ளும் நிர்வாகமே தரவரிசையில் அக்கல்லூரி உயர வழி வகுக்கும்; (http://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-us-x-none_87.htmlபூணூல் அறுப்பு உள்ளிட்டு சமூகத்தில் வெளிப்படும் வன்முறைகளை சிக்னலாகக் கருதி, பாரபட்சமற்ற வகையில் உணர்ச்சிகர பேச்சுகளையும் எழுத்துகளையும் பலகீனமாக்கி, தவறு செய்தவர்களையும், அவர்களைத் தூண்டியவர்களையும், பாரபட்சமற்ற முறையில் தண்டித்தால் தான், தமிழ்நாடு தப்பிக்கும். இல்லையென்றால், தமிழ்நாடு தரங்கெட்ட பாதையில் பயணிக்கும்.

தமிழ்நாட்டில் அமைதியையும், வளர்ச்சியையும் விரும்புபவர்களும், மனச்சாட்சியும், அறிவுநேர்மையும், உள்ளவர்களும்,  எல்லா கட்சிகளிலும் இருக்கிறார்கள். அந்த வகையில் வாழ்பவர்களெல்லாம்,  உணர்ச்சி பூர்வ‌மாக‌ பேசுபவர்களையும், எழுதுபவர்களையும்,  'இவர் நம்மாளு' என்று  அவர்களுக்கு துணை போகாமல், அவர்களை ஒதுக்கினால்தான், தமிழ்நாடு தப்பிக்கும். தப்பிக்கவும் வாய்ப்பிருக்கிறது என்று இன்னும்  நம்புகிறேன்.