2017 -டிசம்பர் மாதத்தில் ஒரு நாள், சிலைமான் சாலையில் இளைஞர் ஒருவர் என்னை இடைமறித்து “சார் - நீங்கள்தான் வை பாலசுப்ரமணியமா? எனக் கேட்டார். ஆம் உனக்கு தெரியாதா எனக் கேட்டேன். நான் வேறு யாரோ என எண்ணினேன், எனது மாமா திண்டுக்கல் முருகானந்தம் உங்களிடம் பேசவேண்டும் எனச் சொன்னார், நம்பர் கொடுங்கள் என்றார். எதற்காக எனது எண் அவர்க்கு வேண்டும் என்றேன். அவருடைய நண்பர் வீரபாண்டியன் என்பவர் உங்களிடம் பேசவேண்டுமாம், அதற்காக என்றார்.
மறுநாள் இரவு திண்டுக்கல் அன்பர் அழைத்தார். அய்யா, எனது நண்பர் பேராசிரியர் வீரபாண்டியன் தஞ்சையில் இருக்கிறார், கீழடி பற்றி உங்களிடம் பேச வேண்டும் என்றார். உங்கள் எண்ணை அவரிடம் கொடுக்கிறேன், அவர் உங்களிடம் பேசுவார் - பேசுங்கள் என்றார்.
இரு நாட்கள் கழித்து புதிய அழைப்பு. அந்த அழைப்புக்குரியவர்தான் பேராசிரியர் செ.அ . வீரபாண்டியன். தன்னை பற்றிச் சொன்னார். என்னையும் அறிந்துகொண்டார்.
கீழடி வெளிப்படுவதற்குக் காரணமாக இருந்தவன் நான், என்பதை அவரது நண்பர் ஒருவர் தெரிவிக்க, அதன்பின் என்னைப் பற்றிய நேர்காணலைக் கண்டதாகவும் ஆகவே, பணியொன்றைச் செய்துவிட்டு வெளிச்சம் போடாமல் இருக்கும் உங்களைப் பார்க்க வேண்டும் பேச வேண்டும் என்ற அவா. அதனாலேயே பாடுபட்டு தங்களைக் கண்டேன், தொடர்ந்து பேசுவோம் என்றார்.
மறுநாள் , அதற்கும் மறுநாள் என இரவு 8 மணிக்கு பேரா வீ. யின் அழைப்பு வந்தது .
எழுதத் தொடர்ந்தேன்.
அவர்க்கு சங்கடத்தை தவிர்க்க ஒரு கருத்தை முன்வைத்தேன். வரம் ஒரு முறை அவர் அழைப்பு - அதற்கு நான் எழுதியது பற்றிய விவரம் தருவது என ஏற்பாடு செய்துகொண்டோம். அந்த நாள் ஒவ்வொரு புதன் கிழமையாக அமைந்தது.
எழுத்துப் பணி மட்டுமல்லாது, தமிழ் சார்ந்த, வரலாறு சார்ந்த, சமூகம் சார்ந்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம் .
எங்கள் இருவரது கருத்தோட்டமும் மன ஓட்டமும் இசைந்தன .
புதன் அழைப்பு தொடர்ந்தது. 2020 சனவரி 26 இல் நூல் வெளியீடு. இருவரும் சந்திக்க இயலவில்லை. நான் தஞ்சை கல்லூரியில் பேச வந்தபோது, அவர் வெளி நாடு செல்ல அமைந்தது. சந்திப்பு நேரவில்லை .
நூல் வெளியிட வருவதாக இருந்ததும் அமையவில்லை.
“கீழடி அகழாய்வு ஒரு வரலாற்றுப் பார்வை” என்ற நூல் பேரா. சாலமன் பாப்பையா அவர்களால் வெளியிடப்
பட்டது.
பேரா. வீ. அவர்கள் அப்போது சிங்கப்பூரில், சந்திப்பு நேரவில்லை .
தஞ்சைக்கு வந்தார் பேரா. வீ. ஆனால் கொரோனாவும் உடன் வந்தது எங்கள் சந்திப்பு வாய்க்கவில்லை.
ஆனால், எனது நூல்களில் 50 படிகள் பெற்றுக்கொண்டு, 10 படிகளைத் தனக்கு வைத்து மீந்தவற்றை கல்லூரி மாணவர்க்குக் கொடுக்கச் செய்தார். இளவல் முனைவர். பாரி மைந்தன் வழி அந்தப்பணி நடந்து நிறைந்தது.
புதன் அழைப்புத் தொடர்ந்தது. 2021 எமக்கு இனிமையானதாக இல்லை.
தமிழ் இசை ஆய்வில் பேரா. வீ. மேற்கொண்ட பணிகளை உள்வாங்கும் அறிவும் ஆற்றலும் எமக்குக் குறைவு. இருப்பினும் ஓரளவு புரிந்து கொண்டேன் . எஞ்சியதை அறிய நேரில் பேசுவோம் என்றோம்.
அது நிகழவில்லை, காலம் இடைமறித்தது.
முகம் அறியா என்பால் கொண்ட அன்பால் கீழடி நூல் வாயிலாக உலகுக்கு அறிமுகம் செய்த கோண்மைக்கோ கோப்பெருஞ்சோழனந்த பேரா. வீ அவர்கள்!
மறைக்க இயலா மாமனிதர்!
22-2-2021 கீழடி. வை.
பாலசுப்பிரமணியம்
சிலைமான்