Saturday, May 9, 2020


ந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், உலகில் எந்த நாட்டிலும் வெளிப்படாத,


ஏமாளித்தனமான தாராளம் தமிழ்நாட்டில்?
 


கோவை செம்மொழி மாநாட்டில், ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த ஒரு வெள்ளைக்காரப்  பெண் 'தமிழ்ப் புலமையாளர்' மேடையேறி உரையாற்றத் தொடங்கினார். அந்த நாட்டில் உள்ள தமிழ்ப்புலமையாளர்கள் மத்தியில் அரைகுறைத் தமிழ்ப்புலமையுடன் வலம் வந்த அந்த நபரை, செம்மொழி மாநாட்டில் வெளிநாட்டு தமிழ் அறிஞராக அங்கீகரித்து உரையாற்ற வைத்ததைக் கண்டு, அப்போது அதே நாட்டில் இருந்து வந்திருந்த இன்னொரு நபர் கேலியாக சிரித்தார். நான் அவ்வாறு சிரித்தவரின் அருகில் அமர்ந்திருந்ததால், அது என் கவனத்தினை ஈர்த்தது.

தமிழர்களில் புத்திசாலிகளும், முட்டாள்களும், அரைகுறைகளும் இருப்பது போலவே, வெள்ளைக்காரர்களிலும் புத்திசாலிகளும், முட்டாள்களும், அரைகுறைகளுமிருப்பதும் ஒன்றும் அதிசயமல்ல.

ஒரு மனிதரை அறிஞராக அடையாளம் கண்டு மதிப்பது என்பது வேறு. அந்த நபர் புத்திசாலியா, முட்டாளா, அரைகுறையா, என்று தெரிந்து கொள்ளாமல், அவர் வெள்ளைக்காரர் என்பதால், புத்திசாலி என்று கருதி புகழ்வது முட்டாள்த்தனமாகாதா?

அதிலும் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பேசுபவர்கள் எல்லாம் புத்திசாலிகள் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் மது போதையில் தப்பும் தவறுமாக ஆங்கிலத்தில் உளறி, தாம் புத்திசாலியாக பேசி விட்டோம், என்று மகிழ்ந்தவர்களும் உண்டு.

பெர்க்லி தமிழ் இருக்கையில் உள்ள பேரா.ஜார்ஜ் ஹார்ட் , தமது ஆய்வின்(?) மூலமாக, "தீண்டாமை என்பது பழந்தமிழரால் உருவாக்கப் பட்டு கடைப் பிடிக்கப் பட்டதே ஆகும்; இதற்கு வைதிகர் பொறுப்பில்லை. இந்தத் தீண்டாமைப் பழக்கம் தோன்றக் காரணமாக இருந்தது ஆரியர்க்கு முந்தைய பழந்தமிழரின் மதநம்பிக்கைகள்." என்பது போன்ற அபத்தமான முடிவுகளை வெளியிட்டுள்ளார். அந்தமுடிவுகள் எல்லாம் எவ்வாறு தவறானவை? என்று 'புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் யார் ? [1]' என்ற தலைப்பில், எழுத்தாளர் மருதமுத்து மறுத்துள்ளார்.

புறநானூறு கூறும் இழிசினன் இழிமகனல்லன்’ - இலக்குவனார் திருவள்ளுவன்

ஜார்ஜ் ஹார்ட்டின் மேலே குறிப்பிட்ட ஆய்வு முடிவுகள் தவறானவை என்பதை வெளிப்படுத்திய எனது பதிவுகள்:

தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது; 'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா?’ ; 

இசையில் தீண்டாமை' காலனியத்தின்நன்கொடையா’?; 

தமிழ் இருக்கைகளில் மேலே குறிப்பிட்டது போன்ற அபத்தமான ஆய்வுகள் வெளிவருவதை கண்காணித்து திருத்தும் புலமையுள்ளவர்கள் பலர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு திருத்துவதை ஊக்குவிக்கும் சூழல் தமிழ்நாட்டில் இருக்கிறதா? அதிலும் வெள்ளைக்கார தமிழ்ப்புலமையாளரின் ஆராய்ச்சியில் எவ்வளவு அபத்தமான தவறுகள் வெளிவந்தாலும், அதை தமிழ்ப்புலமையாளர் எவரும் சுட்டிக்காட்டினாலும், அது எடுபடும் சூழல் தமிழ்நாட்டில் உள்ளதா?

'சமஸ்கிருதத்தின் துணையுடன் தான், மணிப்பிரவாளம் காலத்தில் தமிழ் இலக்கியங்கள் தோன்றி வளர்ந்தன', என்று உலகப்புகழ் பெற்ற வெள்ளைக்கார அறிஞர் செல்டன் பொல்லாக், சுமார் 10 வருடங்களுக்கு முன்பே, உலக அளவில் பிரபலமான தமது நூல் மூலமாக வெளியிட்டார்

அந்த அளவுக்கு அபத்தமான கருத்தை வெளியிடாத, தி.மு. தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்த நாகசாமியைக் கண்டித்தவர்கள் கூட, செல்டன் பொல்லாக்கின் அபத்தமான ஆய்வு முடிவினைக் கண்டித்ததாக தெரியவில்லை. என்னைப் போன்றவர்கள் செல்டன் பொல்லாக்கின் ஆய்வு முடிவினைக் கண்டித்ததை அவர்களில் எவரும் ஆதரித்ததாகவும் தெரியவில்லை

செல்டன் பொல்லாக் இந்துத்வா எதிர்ப்பாளர் என்பதும், இந்துத்வா எதிர்ப்பில் செல்வாக்கான தமிழ் ஆர்வலர்கள் சிக்கிப் பயணித்து வருவதும், அந்த தமிழ்ச் சீரழிவு போக்கிற்கு துணை போனதா? என்பதும் விவாதத்திற்கு உரியதாகும்.

தமிழ் இசைக்கல்வியின் வளர்ச்சிக்கும், தொல்காப்பியத்தில் கண்டுபிடித்த 'இசை மொழியியல்' (Musical Linguistics) உரிய முக்கியத்தும் பெறுவதற்கும், இந்துத்வா எதிர்ப்பில் சிக்கி, சமஸ்கிருத வெறுப்பில் பயணிக்கும் தமிழ் ஆர்வமானது, எவ்வாறு தமிழின் வளர்ச்சிக்குக் கேடாகி வருகிறது? என்ற விவாதமும் அரங்கேற வேண்டிய நேரமும் வந்து விட்டது

தமிழ்நாட்டுத் தமிழர்களை விட, வெளிநாட்டு தமிழர்களை அதிகம் மதிக்கும் தமிழர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.  அது போலவே, தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் பணியாற்றும் தமிழ்ப்பேராசிரியர்களை கிள்ளுக்கீரையாக மதித்த துணைவேந்தர், சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த பள்ளித் தமிழாசிரியர்களை வி..பி-க்களாக மதித்து நடத்திய நகைச்சுவைகளையும் நான் அறிவேன்.

மேற்குறிப்பிட்டவாறு வெள்ளைக்காரர் என்றால் புத்திசாலிகள் என்றும்;


ஆங்கிலத்தில் பேசினால் புத்திசாலித்தனம் என்றும்;

தமிழ்நாட்டுத்தமிழர்களை விட வெளிநாட்டுத்தமிழர்களை  உயர்வானவர்கள் என்றும்;

கருதும் சமூக மனநோயானது எப்போது முளைவிட்டு எப்படி வளர்ந்தது? கூடுதலாக குடும்ப அரசியலின் முக்கிய புள்ளிகள் தத்தம் கட்சிக்காரர்களை விட, மார்வாரி, சேட்டு போன்ற வடநாட்டு பணக்காரர்களை அதிகம் மதித்து பலன்கள் பெற்றதும் அதன் தொடர்ச்சியா? என்பதை ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து உண்மையை உணரலாம்.

மேற்குறிப்பிட்ட சமூக சூழலில், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், உலகில் எந்த நாட்டிலும் நடக்க வாய்ப்பில்லாத கூத்தானது, தமிழ்நாட்டில் அண்மையில் அரங்கேறியுள்ளது.

தமக்கு மிஞ்சி தான் தான தருமம் என்பது உலக நடைமுறை.

தமிழ்நாட்டில் தமிழுக்காக என்று தமிழ்ப்பல்கலைகழகம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் தமிழ்த்துறைகள் உள்ளன.

அங்கெல்லாம் எவ்வளவு ஆசிரியர் பணியிடங்கள் நிதிப்பற்றாக்குறை காரணமாக நிரப்பப்படாமல் இருக்கின்றன? தமிழ் ஆய்வுக்கான நூலகங்களும், ஆய்வுத்திட்டங்களும் எந்த அளவுக்கு நிதிப்பற்றாக்குறை காரணமாக தேக்க நிலையில் உள்ளன? என்று தமிழின் வளர்ச்சியில் உண்மையான ஆர்வமுள்ளவர்கள் எல்லாம் ஆராய்ந்து அறியலாம். அதிலும் அந்தந்த துறைகளின் இணைய தளங்களுக்கு சென்று பார்த்தால், அவை எல்லாம் எந்த அளவுக்கு தகவல் வறட்சியுடன் தரமற்று உள்ளன? என்பதையும் ஆராய்ந்து அறியலாம்

அவ்வாறு தமிழ்நாட்டில் தமிழ் தொடர்பானவைக்கு உள்ள நிதி நெருக்கடியையும், ஊழல் காரணமாகதரம் குறைந்துள்ள நெருக்கடியையும், ஆராய்ந்து அறிந்த பின்னர்;

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், உலகில் எந்த நாட்டிலும், அது போன்ற நிலையில் இருக்கும் பட்சத்தில், கீழ்வரும் ஏமாளித்தனமான தாராளம் வெளிப்பட்டிருக்குமா? என்றும் ஆராயலாம்.

ஹார்வார்ட் தமிழ் இருக்கையைத் தொடர்ந்து, கனடா நாட்டில் டொரோன்டொ பல்கலைக்கழகத்திலும், பிரிட்டனில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும், தென்னாப்பிரிக்காவில் ஜோன்னஸ்பர்க் பல்கலைக்கழகத்திலும், மலேசியாவில் மலாய்ப் பல்கலைக்கழகம், இலங்கையில் யாழ்ப்பல்கலைக்கழகம் எல்லாவற்றிலும் தமிழ் இருக்கைகள் அமைக்கவும், அவை தவிர, உலகிலும், இந்தியாவில் பிற மாநிலங்களிலும் தமிழ் இருக்கைகள் உருவாக்கப்படும் என்றும், தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி அறிவித்துள்ளார்

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு 10 கோடி நிதி தர மத்திய அரசு ஒப்புதல் தந்துள்ள செய்தியும் வெளிவந்துள்ளது

வெளிநாடுகளில் தமிழ் இருக்கைகள் நிறுவ முயற்சித்து, மேற்குறிப்பிட்ட அளவுக்கு வெற்றி ஈட்டியுள்ள வெளிநாட்டுத் தமிழ் ஆர்வலர்களுக்கு தமிழ்நாட்டில் மேற்குறிப்பிட்ட நிதிப்பற்றாக்குறையில் தமிழ் தொடர்பான அமைப்புகள் உழல்வது கண்ணில் படவில்லையா?

அந்த வெளிநாட்டுத்தமிழர்களின் முயற்சிகளுக்கு ஆதரவு நல்கி, தமிழக அரசு, மத்திய அரசு மட்டுமின்றி, தமிழ்நாட்டு பொதுமக்களிடம் பள்ளி மாணவர்களிடம் வெளிநாட்டு தமிழ் இருக்கைகளுக்காக நிதி வசூல் முயற்சிகளில் ஈடுபட்ட தமிழ்நாட்டு தமிழ் ஆர்வலர்களுக்கும்;

மேற்குறிப்பிட்ட நிதிப்பற்றாக்குறையில் தமிழ் தொடர்பான அமைப்புகள் உழல்வது கண்ணில் படவில்லையா?

இவை போன்ற கேள்விகளை எல்லாம், ஊடகங்களும் செல்வாக்கான பட்டிமன்ற பேச்சாளர்களும் இனியாவது கண்டு கொள்வார்களா?

போனது போகட்டும். இனியாவது தமிழ்நாட்டில் தமிழ் தொடர்பான நிதிப்பற்றாக்குறைக்கு முன்னுரிமை கொடுப்பார்களா? வெளிநாட்டுத் தமிழ் இருக்கைகள் எல்லாம் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் கேடான ஆய்வுகளில் ஈடுபடுவதைக் கண்காணித்து திருத்துவார்களா?

'ஊர் எக்கேடு கெட்டால் என்ன? நாமும் நமது குடும்பமும் புத்திசாலித்தனமாக பிழைப்போம்' என்பது போன்ற போக்கில்;

'தமிழ்நாட்டில் தமிழ் எக்கேடு கெட்டால் என்ன? நமது செல்வாக்கான பதவியையும், வெளிநாட்டுத் தொடர்புகளையும் புத்திசாலித்தனமாக பேணிப் பாதுகாத்து, 'தமிழ்க் காவலர்களாகவும்' ஊடக செல்வாக்குடன் வலம் வருவோம்'

என்பது போன்ற நபர்களை அடையாளம் கண்டவுடன், எனது சமூக வட்டத்தில் இருந்து அகற்றி வருகிறேன்; அதனால் விளையும் இழப்புகளை விரும்பி ஏற்று.

ஊடக வெளிச்சத்திற்கு வராமல், என்னைப் போன்று பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது.

இது போன்ற சமூக அழுத்தங்கள் எல்லாம் முதலில் மைக்ரோஉலகத்தில் ஊடக வெளிச்சத்திற்கு வராமல் வளர்வது முதல் கட்டமாகும். பின் படிப்படியாக தமிழ் அடையாளத்தில் ஈர்க்கப்பட்ட மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்களின் கவனத்தையும் ஈர்த்து வளர்வது இரண்டாவது கட்டமாகும்.   அதிலும் விழிக்காத ஊடகங்களுக்கும் பிரபலங்களுக்கும், அதிர்ச்சி வைத்தியமாக, சாதகமான சமுக சூழலில்மாற்றங்கள் வெளிப்படுவது தவிர்க்க இயலாததாகும். அது வெளிப்படும் காலமும் நெருங்கி விட்டது, என்பதும் எனது கணிப்பாகும்.


ஹார்வார்ட் தமிழ் இருக்கை தொடங்க 6 மில்லியன் அமெரிக்க டாலர்களை 2018 மே மாதத்தில் வழங்கிய தகவல் அதற்கான குழுவின் இணையதளத்தில் உள்ளதுகீழ்வரும் கேள்வி பதிலையும் அதில் கண்டேன்.

What is the recruitment process and timeline?


The total commitment to Harvard for setting up the Tamil Chair is six million U.S dollars. Upon receipt of the amount, Harvard will begin the search for the most qualified Tamil scholar to assume the professorship. Harvard will choose a proven scholar who has taught, researched and published in academic journals. 

ஆனால் யார் தேர்ந்தெடுக்கப்பட்டு என்ன பணிகள் துவங்கியுள்ளன? என்ற தகவல் அதில் இல்லை. (https://harvardtamilchair.org/) ‘who is the head of harvard tamil chair’ உள்ளிட்டு எனது இணைய தேடலில் அக்கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. கிடைத்தவர்கள் தெரிவித்தால் நன்றி. இன்னொரு பெர்க்லி தமிழ் இருக்கை ஆராய்ச்சியாக, தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் கேடான ஆய்வு முடிவுகள் வெளிப்படும் வாய்ப்புகள் உள்ளனவா? என்று ஆராய இயலும்.

வெளிப்படைத்தன்மையும் (Transparency) பொறுப்பேற்பும் (Accountability) இன்றி தமிழ் இருக்கைகள் தொடங்கப்படுவதானது, தமிழ்நாடு ஏமாளியாக இருக்கும் வரையில் தான் நீடிக்கும்.

எவ்வளவு புத்திசாலிதனத்துடன்சீன மொழி இருக்கை உருவாகியுள்ளது? எவ்வளவு முட்டாள்த்தனமாகவும், ஏமாளித்தனமாகவும்தமிழ் இருக்கை உருவாகப் போகிறது? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில்;

ஹார்வார்டில் செயல்படும் 'சீன இருக்கை'யின் 'புரிந்துணர்வு ஒப்பந்த' (Memorandum of Understanding) நகலையும், 'தமிழ் இருக்கை'க்கு உருவாக்கியுள்ள ஒப்பந்த நகலையும், 'தமிழ் இருக்கை நிதி சேர்ப்பு' இணையதளத்தில் வெளியிடுவதில் என்ன சிக்கல் இருக்கிறது?

தமிழ் இருக்கை'க்கு நிதி வழங்கியுள்ள தமிழக அரசும், தி.மு.கவும், முக்கிய நபர்களும், இனிமேலாவது விழித்து, ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் 'சீன மொழி இருக்கை'க்கு ஏற்படுத்தியுள்ள நிபந்தனைகளைப் போலவே,’ 'தமிழ் இருக்கை'க்கும் அதே நிபந்தனைகளுக்கு ஹர்வார்ட் பல்கலைக் கழகம் சம்மதிக்க வேண்டும்’, என்று வலியுறுத்துவார்களா? அவ்வாறு வலியுறுத்துமாறு தமிழ்நாட்டின் 'பிரபல' எழுத்தாளர்கள் எல்லாம் கோரிக்கை வைப்பார்களா?

இல்லையென்றால், அந்த நிதியை திருப்பி, கீழ்வரும்  மாற்று திட்டங்களை பரிசீலிப்பார்களா?

அவ்வாறு அவர்கள் மாற்றுத் திட்டங்களை பரிசீலித்தால், அதில் எனது பங்களிப்புக்கும் வாய்ப்பு ஏற்படலாம்.

தமிழ் இருக்கைகளுக்கு ஒதுக்கிய நிதியில் இருந்து, கீழ்வரும் இரு முயற்சிகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம்.

தமிழ்ப்பல்கலைகழகம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் தமிழ்த்துறைகள் ஆகியவற்றில் காலியாக உள்ளஆசிரியர் பணியிடங்களில் ஊழலுக்கு இடமின்றி தகுதியானவர்களை பணி நியமனம் செய்தல்;

ஏற்கனவே ஊழல்வழிகளில் நுழைந்ததகுதியற்றவர்களை அடையாளம் கண்டு தகுதி வளர்ச்சிக்கு வாய்ப்பு கொடுத்தல், இயலாதவர்களை அகற்றுதல் அல்லது அவர்களின் தகுதிகளுக்கான மாற்று பணியிடங்களில் அமர்த்துதல்;

மேற்குறிப்பிட்டவற்றை செயல்படுத்த உரிய ஆலோசனைகளை நான் வழங்கலாம்.

பேராசிரியர்களும், துணை வேந்தர்களும் காலில் விழுவதை ஊக்குவித்த, தலைவர்களின் ஆதிக்கத்தில்  தமிழ்நாடு சிக்கியிருந்தது வரையிலும்தமிழ் மொழியில் உள்ள 'புதிய கண்டுபிடிப்புகளின்' பலன்களை புரிந்து ஊக்குவித்து, சமூகத்திற்கு பயன்பட வைப்பதற்கான சூழல் நிலவவில்லை. இன்று தமிழ்நாடானது ஒரு திருப்புமுனைக் கட்டத்தில் இருப்பதாகக் கருதுகிறேன்.

தமிழ் இருக்கைகளுக்கு ஒதுக்கிய நிதியில் இருந்து மேற்குறிப்பிட்ட இரண்டு முயற்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து எஞ்சிய நிதியைக் கொண்டு;

இந்தியாவில் ..டி (IIT) போன்ற தரமிக்க உயர்க்கல்வி நிறுவனங்களில், அல்லது சிங்கப்பூரில் உள்ள NUS/NTU பல்கலைக்கழகங்களில் 'தமிழ் இருக்கை' ஏற்படுத்தி, என்னை அழைத்தால், அங்கு கீழ்வரும் திட்டங்களை உடனே துவங்க முடியும்.

1.    தொல்காப்பியம் அடிப்படையில் 'இசை மொழியியல்' (Musical Linguistics)  ஆய்வுத் திட்டம்

2. ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் மொழிபெயர்த்து  வெளிவந்துள்ள பழந்தமிழ் இலக்கியங்களுக்கு, ஒரு திருத்த பின்னணிப்பு (Appendix) திட்டம்:

3.    யாப்பிலக்கணம் கற்பித்தலில் 'இசை'யை 'ஒலி' என கருதி கற்பித்தலில் உள்ளகுறைபாடுகளை களையும் திட்டம்:

4.    சிலப்பதிகாரம் அடிப்படையில் உலக தாள இலக்கணம் உருவாக்கல் திட்டம்:


உலக தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் எல்லாம், சந்தைப்படுத்தக் கூடிய தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்காக, தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் நூல்களை நோக்கி, ஆய்வுப் படையெடுப்பு தொடங்குவதும், உலகில் உள்ள பல்கலைக்கழகங்களின் இசைத் துறைகளின் கவனத்தை ஈர்ப்பதும், இன்னும் எத்தனை வருடங்கள் தாமதமாவது

நிகழ்காலத்தில், உலகில் சமஸ்கிருதம் உள்ளிட்டு வேறு எந்த தொன்மை மொழி தொடர்பான கண்டுபிடிப்புகளுக்கும், இது போன்ற அவலம் நேர்ந்துள்ளதா

Note: Tamil scholarship, in the digital age, is becoming inter-disciplinary, with the scope for developing new marketable products. With the introduction of spell check, grammar check, and search options of Lexicon and the commentaries, Tamil literate scholars in science and technology, bypassing the duration to acquire the traditional Tamil scholarship, could subject the ancient Tamil texts to inter-disciplinary research.

'DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION'

https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264

No comments:

Post a Comment