உரிய சான்றுகள் இன்றி, உணர்ச்சிபூர்வமாக பெருமை பேசுவது (4);
'சங்கத்தமிழன்' ; தமிழையும், தமிழ்
இசையையும் கேலிப்பொருளாக்கவா?
கர்நாடக இசையான தமிழிசை |
Tamil Music or Carnatic Music |ஆரியத்திருட்டு-19’;
('சங்கத்தமிழன் TV,
வெளிப்படுத்திய தகவல்களில் முதல் ஆறு தகவல்கள் எவ்வாறு தவறானவை? என்பதை இந்த தொடரின் 2ஆவது பதிவில் பார்த்தோம்.
அதைத் தொடர்ந்து, 7
& 8 தகவல்கள் எவ்வாறு தவறானவை? என்பதை இந்த தொடரின் 3ஆவது பதிவில் பார்த்தோம்.
அதில், 'மேற்கத்திய 'ஈக்வல் டெம்பெரமண்ட்'
(Equal Temperament) முறை வட்டப்பாலையா? ஆபிரகாம் பண்டிதரின் ஆய்வு முடிவுகள் எல்லாம் தவறானவையே' என்பதை விளக்கியிருந்தேன்.
அடுத்து, கீழ்வரும் தகவலை ஆராய்வோம்.
9.
நாட்டுப்புற இசையின் செம்மைப்படுத்தப்பட்ட வடிவம் தான் தமிழிசை. அதைக் காப்பியடித்து தான் கர்நாடக சங்கீதம், என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
மேற்கத்திய இசை வரலாற்றில் செவ்விசை
(Classical Music) தோன்றி உருவான
காலக்கட்டம் கி.பி 1550 முதல் 1900 வரை உள்ள காலக் கட்டமாகும்.
பிரஞ்சுப் புரட்சி,
தொழில் புரட்சி,
அறிவியல் வளர்ச்சி
ஆகிய காரணங்களால் கலை, இலக்கியத் துறைகள்
அரசர்கள் - பிரபுக்கள் பிடியிலிருந்து
விடுதலை பெற்று,
புதிய திசையில் புதிய சிந்தனையில் மேற்கத்திய
உலகில் செவ்வியல்
காலம் (Classical Period) தோன்றி வளர்ந்தது.
இத்தகைய வரலாற்றுப்
பின்னணியுடன் உருவான
செவ்விசை, நாட்டுப்புற
இசை போன்ற பிரிவுகளை
இந்திய சமூகத்திற்குள்
புகுத்தி அணுகுவது
எப்படி சரியாகும்?
செவ்விசை, நாட்டுப்புற
இசை போன்ற பிரிவுகள்
அதன்பின் இந்தியாவில்
காலனிய செல்வாக்கில்
உருவாகியிருக்க வாய்ப்புண்டு.
எனவே இசையில் உயர்வு,
தாழ்வு, தீண்டாமை
போன்றவைகளும், செவ்விசை,
நாட்டுப்புற இசை போன்ற பிரிவுகளும் இந்தியாவில்
காலனியத்தின் ‘நன்கொடை’களாக இருக்கவும் வாய்ப்புண்டு.
(பக்கம் 14 – 15, 'காலனிய' மனநோயாளிகளும்,
'திராவிட' மன நோயாளிகளும்’; தி பிரிண்டிங் ஹவுஸ், திருச்சி; ph: +91-0431-2420121;
http://tamilsdirection.blogspot.com/2019/12/normal-0-false-false-false-en-us-x-none.html)
http://tamilsdirection.blogspot.com/2019/12/normal-0-false-false-false-en-us-x-none.html)
அடுத்து, கீழ்வரும் தகவலை ஆராய்வோம்.
10.
இன்றைக்கு கர்நாடக இசையில் பயன்படுத்தும் அனைத்து வாத்தியங்களும் தமிழர்களுடையது தான்.
கர்நாடக இசைக் கச்சேரிகளில் இன்று இசைக்கப்படும் வயலின் இசைக்கருவியானது, இசை மும்மூர்த்திகளில் ஒருவராகிய முத்துச்சாமி தீட்சதரின் சகோதரரான பாலுசாமி தீட்சதர் மேற்கத்திய இசையின் வயலினை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கி அறிமுகப்படுத்திய ஒன்றாகும்.
தஞ்சை நால்வர்களில் ஒருவராகிய வடிவேலு மேற்கத்திய இசையின் வயலினை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கி அறிமுகப்படுத்தினார் என்பதற்கான சான்றும் உள்ளது.
ஆக, இன்றைக்கு கர்நாடக இசையில், தமிழிசையில், பயன்படுத்தும் மிருதங்கம் மட்டுமே தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் இசைக்கருவியாகும். தமிழ்நாட்டில் கர்நாடக இசை மற்றும் தமிழிசைத் தவிர்த்து நடைபெறும் பிற இசை நிகழ்ச்சிகளிலும் கேரளாவிலும் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் பல இசைக்கருவிகள் இசைக்கப்படுகின்றன.
அடுத்து, கீழ்வரும் தகவலை ஆராய்வோம்.
11.
சிலப்பதிகாரத்தை அடியொற்றி எழுதியது தான் சங்கீத ரத்னாகரம்.
மேற்குறிப்பிட்ட ஆய்வு முடிவினை வெளிப்படுத்திய கட்டுரைகள் அல்லது புத்தகங்கள் இன்றி இக்கருத்து வெளிப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அக்கருத்துக்கான ஆதாரங்கள் இருந்தால், அதை தெரிவிப்பவருக்கு நன்றி தெரிவித்து, அதனை ஆராய இயலும்.
'சங்கீத ரத்னாகரம்' சமஸ்கிருத நூலை ரெங்கராமானுஜ ஐயங்கார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அதன் முன்னுரையில் 'சங்கீத ரத்னாகரம்' சாரங்கதேவர் பயன்படுத்திய சமஸ்கிருதம் மற்றும் தமிழ்நூல்களை பட்டியலிட்டுள்ளார். அதில் சிலப்பதிகாரம் இடம் பெற்றுள்ளது. இந்துஸ்தானி இசை மற்றும் கர்நாடக இசை தொடர்புள்ள அந்த நூலின் உள்ளடக்கத்தைக் கணக்கில் கொண்டால்;
'சிலப்பதிகாரத்தை அடியொற்றி எழுதியது தான் சங்கீத ரத்னாகரம்' என்ற கருத்து எவ்வளவு தவறானது? என்பது தெளிவாகும்.
அடுத்து, கீழ்வரும் தகவலை ஆராய்வோம்.
12.
ஏழு சுரங்களில் தமிழ் 'ச'வுக்கு பதிலாக வடமொழி 'ஸ' உச்சரிப்பைப் புகுத்தி அதற்காக பல கட்டுக்கதைகளை எழுதினார் சங்கீத ரத்னாகரம் நூலாசிரியர் சாரங்கதேவர்.
மேற்குறிப்பிட்ட ஆய்வு முடிவினை வெளிப்படுத்திய கட்டுரைகள் அல்லது புத்தகங்கள் இன்றி இக்கருத்து வெளிப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அக்கருத்துக்கான ஆதாரங்கள் இருந்தால், அதை தெரிவிப்பவருக்கு நன்றி தெரிவித்து, அதனை ஆராய இயலும்.
தமிழ் இசையியல் தொடர்பான கற்றலில், தமிழும் சமஸ்கிருதமும் பரிமாற்ற பங்கு
(Complimentary role) வகித்துள்ளன. அதற்கான காரணம் வருமாறு.
சமஸ்கிருதத்தில் எழுத்தின் ஒலிகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன
(phonetically defined). அது சமஸ்கிருத மொழியின் தனித்துவ சிறப்பாகும். தமிழில் உயிரெழுத்துக்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டு, மெய்யெழுத்துக்களின் எழுத்தொலிகள், அந்த எழுத்து இடம் பெறும் சொல்லைப் பொறுத்து அமையும் (phonetically
with one or more options). உதாரணமாக 'க' என்ற சொல்லானது, 'சக்கரம்' என்ற சொல்லில் ஒலிப்பதற்கும், ‘சங்கம்' என்ற சொல்லில் ஒலிப்பதற்கும் வேறுபாடு உண்டு.
தமிழ் இசையியலில், 'ச, ரி, க, ம, ப, த, நி' ஆகிய ஏழும் மேலே குறிப்பிட்டவாறு, அந்தந்த எழுத்து இடம் பெறும் சொல்லைப் பொறுத்து ஒலிப்பவை ஆகும். எனவே தமிழ் இசையில் மாணவர்களின் பயிற்சியில் சுருதி சுத்தமாக ஒலிக்க, ஏழு சமஸ்கிருத எழுத்துக்களைப் பயன்படுத்தும் முறை இன்றும் நடைமுறையில் உள்ளது.
குடுமியான் மலை இசைக்கல்வெட்டில் ஏழு இசைச்சுரங்களும் சமஸ்கிருத எழுத்துக்களில் உள்ளதை ஆராயும் போது, மேலே குறிப்பிட்டதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
சமஸ்கிருதத்தில்
shadja (षड्ज) என்பது சுரப்பெயராகும். ஆனால் 'ச' என்ற சுரமானது,’ सा’ என்ற சமஸ்கிருத எழுத்தில் குறிக்கப்படுகிறது; சமஸ்கிருத சுரப்பெயரில் உள்ள முதல் எழுத்திலிருந்து வேறுபட்டு.
சமஸ்கிருத சுரப்பெயர்களிலிருந்து, சமஸ்கிருத இலக்கணப்படி, ஏழு சுர எழுத்துக்களைப் பெறமுடியாது, என்பதற்கு திருவையாறு சமஸ்கிருத பிராமண புலமையாளரிடமே அதற்கான சான்றினை பெற்று, ஆபிரகாம் பண்டிதர், வெளியிட்டுள்ளார். (பக்கம் 527, கருணாமிர்த சாகரம், ஆபிரகாம் பண்டிதர்,
1917)
இதில் வியப்பென்னவென்றால், தனது தமிழ் இசை ஆய்வுகளை 'சமஸ்கிருத வல்லாண்மை எதிர்ப்பு' என்ற திசையில் அவர் மேற்கொள்ளவில்லை. உரிய சான்றுகளின் அடிப்படையில், ‘உண்மையை நிலைநாட்டல்’ என்ற திசையில் அவர் தமது ஆய்வுகளை மேற்கொண்டார். தமது ஆய்வுகளுக்கு ஆதரவளித்த பிராமணர்களையும், நன்றியுடன், தமது நூலில், அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
(‘குடுமியான்மலை இசைக்கல்வெட்டில் உள்ள சமஸ்கிருத இசைச்சுர எழுத்துக்களும், வாசகங்களும் தமிழ் இசையியல்(Tamil
Musicology) தொடர்புள்ளவையா?’;
அடுத்து, கீழ்வரும் தகவலை ஆராய்வோம்.
13.
' அகராதிகளும் சொற்களஞ்சியங்களும் இசைத்தமிழுக்கு இல்லை' என்பதற்காக மம்மது 'தமிழிசைப் பேரகராதி' என்ற நூலை வெளியிட்டார்.
'தமிழிசைக் கலைக்களஞ்சியம்' ஊடகங்களில் இருட்டடிப்புக்கு உள்ளாகி, நா.மம்மது தொகுக்கத் தொடங்கியதானது, 'அதீத' ஊடக வெளிச்சத்துடன் வெளிவந்தது. அந்த 'ஊடக இருட்டடிப்பு' தொடங்கிய சமயத்தில், 2005இல், நான் மம்மதை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்த தவறினைச் சுட்டிக்காட்டினேன். தான் 'தமிழிசைக் கலைக்களஞ்சியம்' பற்றி தெரிவித்தாகவும், அதை விட்டு விட்டு ஊடகங்களில் வெளிவருவதாகவும், விளக்கம் தந்தார். உடனே ஊடகத்திற்கு திருத்த அறிக்கை அனுப்புமாறு அவரிடம் அறிவுறுத்தினேன். ஆனால் மம்மதுவின் 'தமிழிசைப் பேரகராதி' 2010
இல் வெளிவரும் வரை, அதே தவறு தொடர்ந்தது. அதிலும் முன்பு 1992இல், 'தமிழிசைக் கலைக்களஞ்சியம்' வெளிவரத் தொடங்கிய போது, அதனைப் பாராட்டி எழுதிய தமிழ் இதழிலேயே, அதனை இருட்டடிப்பு செய்து, நா.மம்மது தான் முதன் முதலில் அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கட்டுரை வெளிவந்தது. அந்த தவறினைச் சுட்டிக்காட்டி அந்த இதழுக்கு நான் அனுப்பிய மடலும் 'அதே' இருட்டடிப்புக்கு உள்ளானது.’
அடுத்து, கீழ்வரும் தகவலை ஆராய்வோம்.
14.
தமிழிசையைத் திருடிய தெலுங்கு பிராமணர்கள் முதல் முதலாக 'கர்நாடக சங்கீதம்' என்ற சொற்களைப் பயன்படுத்தினார்கள்.
15.
தியாகராஜர், முத்துச்சாமி தீட்சதர், சியாமா சாஸ்திரி மூவரும் தான், தமிழிசையைத் திருடி 'கர்நாடக இசை' என்று பேர் வைத்தார்கள்.
மேற்குறிப்பிட்ட கருத்து எவ்வளவு அபத்தமானது, என்பதைக் கீழ்வரும் பதிவில் விளக்கியுள்ளேன்.
'சங்கத்தமிழன்' வெளிப்படுத்திய தவறான தகவல்கள்’;
அடுத்து, கீழ்வரும் தகவலை ஆராய்வோம்.
16.பிராமணர்களாக இல்லாதவருக்கு கர்நாடக இசை மறுக்கப்படுகிறது. டி. எம் கிருஷ்ணா என்ற பிராமணர் இதை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தி வருகிறார்.
தமிழ்நாடு முழுவதும் எத்தனை அரசு இசைப்பள்ளிகள் செயல்படுகின்றன? அவை தவிர, தமிழ்நாடு முழுவதும் எத்தனை பிராமண மற்றும் பிராமணரல்லாத இசை ஆசிரியர்கள் தனியாக இசைக்கற்றுத் தருகிறார்கள்? பிராமண இசை ஆசிரியர்களிடம் எத்தனை பிராமணரல்லாத மாணவர்கள் இசைப் படிக்கிறார்கள்? என்பதெல்லாம் தெரியாமல், மேற்குறிப்பிட்ட தவறான கருத்து வெளிப்பட்டுள்ளது. எனது மகள் ஒரு பிராமண ஆசிரியையிடம் கர்நாடக இசைப் படித்தாள். எனது நண்பரின் மகள் ஒரு பிராமண ஆசிரியையிடம் கர்நாடக இசை வீணைப் படித்து, இன்று ஒரு பல்கலைக்கழக இசைத்துறையில் தலைவராக உள்ளார்.
மேற்குறிப்பிட்டுள்ள கருத்தில் வெளிப்பட்டுள்ளவாறு, 'டி. எம் கிருஷ்ணா என்ற பிராமணர் இதை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தி வந்தால்', அது அபத்தமாகாதா? அவரைப் போன்றவர்கள் அரசு இசைப்பள்ளிகளுக்கு தங்களின் நேரத்தை செலவிடுவதே நல்ல இசைத் தொண்டாக அமையும்.
அடுத்து, கீழ்வரும் தகவலை ஆராய்வோம்.
17.எல்லா இசை அமைப்பாளர்களும் பாடகர்களும் பிராமணர்களாகத்தான் இருந்தார்கள். இதை உடைச்சு எங்களுக்கும் இசை வரும் என்று இளையராஜா நிரூபித்தார். பிராமணர்கள் ஒதுக்கிய நாட்டுப்புற இசையைத் தான் பல படங்க:ளுக்கு இசை அமைத்தார் இளையராஜா.
தமிழ்த்திரையுலகில் கோலோச்சிய தியாகராஜ பாகவதரும், எம்.எஸ்.சுப்புலட்சிமி உள்ளிட்டு பல பிரபல பாடகர்கள் பிராமணரல்லாதோரே ஆவார்கள். இளையராஜாவுக்கு முன்பு திரையிசையில் இன்றும் ரசிக்கும் 'ஹிட்' பாடல்களுக்கு பிராமணரல்லாத பல இசையமைப்பாளர்கள் இசை அமைத்துள்ளார்கள். விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையரில், ராமமூர்த்தி பிராமணரல்லாதவர் ஆவார். 'நாடோடி மன்னன்', 'திருடாதே' உள்ளிட்ட எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு இசை அமைத்தவர் எஸ்.எம். சுப்பையா நாயுடு ஆவார். இளையராஜாவிற்கு முன், தமிழ்ப்படங்களில் எத்தனை நாட்டுப்புற இசை 'ஹிட்' பாடல்கள் வெளிவந்திருக்கின்றன? என்று தெரியாமல் வெளிப்பட்டுள்ளது, மேற்குறிப்பிட்ட அபத்தமான கருத்து.
தமிழ்நாட்டின் திரை இசை வரலாறு தெரியாமல், மேற்குறிப்பிட்ட தவறான கருத்து வெளிப்பட்டுள்ளது.
அடுத்து, கீழ்வரும் தகவலை ஆராய்வோம்.
18.
நமது இசையைத் திருடி நம்மைக் கற்றுக்கொள்ள விடாமல் தடுக்கிறார்கள் பிராமணர்கள்
அது எவ்வளவு அபத்தமான கருத்து என்பதை மேலே விளக்கியுள்ளேன்.
இன்று சாதி அடிப்படையில் புறக்கணிப்பதைப் பகிரங்கமாக எந்த கட்சியும் ஆதரிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது எவ்வாறு தீண்டாமையை எதிர்த்து, கலப்புத்திருமணங்களை ஆதரித்து வந்துள்ள வரலாற்றை, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது 'பார்ப்பன சூழ்ச்சி அல்ல' என்பதையும், 'காலனி சூழ்ச்சியே' என்பதையும் உரிய சான்றுகளுடன், நான் விளக்கியுள்ளேன்.
தமிழ்நாட்டில் தமிழ்வழிக்கல்வியின் மீட்சிக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு எவ்வளவு முக்கியமானது? என்பதையும் நான் விளக்கியுள்ளேன்.
'தமிழ்நாட்டுப் பிராமணர்கள் தமிழைக் காப்பாற்றுவார்கள்' என்று நான் கருதுவதற்கான காரணங்களையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
பணம், புகழ் ஈட்டும் உள்மறைத் திட்டமின்றி, உண்மையான சமூக அக்கறையுடன் பயணிப்பவர்களை தமது நிலைப்பாட்டிற்கு எதிரானவர் என்பதற்காகவோ, அல்லது அவர் சார்ந்த சாதி, மதம், மொழி, நாடு போன்ற இன்னும் பல காரணங்களுக்காகவோ, வெறுப்பது என்பதானது மிகவும் கண்டிக்கத்தக்க அநாகரீகமாகும்.
எல்லா சாதிகளிலும் நல்லவர்களும் இருப்பார்கள்; கெட்டவர்களும் இருப்பார்கள். சாதி அடிப்படையில் எந்த துறையிலும் பாரபட்ச பாகுபாடு போக்கினை யார் வெளிப்படுத்தினாலும், அத்தகைய நபர்களை அடையாள கண்டு கண்டிப்பதற்கான சமூக ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும். அகத்தில் சாதிவெறியுடனும், புறத்தில் சாதி சமத்துவ நபராகவும் இரட்டைவேடப் போக்கில் பயணிப்பவர்கள் எந்த சாதியில் இருந்தாலும், அவர்களின் யோக்கியதையை, அந்த அணுகுமுறை மூலமே அம்பலப்படுத்த முடியும். மாறாக, குறிப்பிட்ட சாதியையே எதிர்க்கும் வெறுப்பு அரசியலை ஊக்குவிப்பதானது, மேற்குறிப்பிட்ட குற்றவாளிகள் எல்லாம் தப்பிக்கவே உதவும்; அந்த வழியில் தான், அரசியல் கொள்ளையர்களும் தப்பித்து வருகிறார்கள்.
வெறுப்பு அரசியலில் சிக்கி, ‘சமூக கறுப்பு – வெள்ளை’ நோயுடன் பயணிப்பவர்கள் எல்லாம், தமது விடுதலையை ஏமாற்றுப் பேர்வழிகளிடம் காவு கொடுத்துப் பயணிக்கும் 'மனித எந்திரர்கள்' ஆவார்கள்.
அவ்வாறு 'மனித எந்திரர்களாக' பயணிப்பவர்களே உரிய சான்றுகள் இன்றி உணர்ச்சிபூர்வமாக கருத்துக்களை வெளியிட்டு, தமிழையும், தமிழ் இசையையும் கேலிப்பொருளாக்கி வருகிறார்கள். அதில் இருந்து விடுபட்டு, அறிவுபூர்வமாகப் பயணிப்பதன் மூலமே, தமிழின் தமிழிசையின் மீட்சிக்கு பங்களிக்க முடியும்.
No comments:
Post a Comment