Thursday, May 21, 2020


உரிய சான்றுகள் இன்றி, உணர்ச்சிபூர்வமாக பெருமை பேசுவது (3);


மேற்கத்திய 'ஈக்வல் டெம்பெரமண்ட்' (Equal Temperament) முறை வட்டப்பாலையா


ஆபிரகாம் பண்டிதரின் ஆய்வு முடிவுகள் எல்லாம் தவறானவையே




கர்நாடக இசையான தமிழிசை | Tamil Music or Carnatic Music |ஆரியத்திருட்டு-19’; 

'சங்கத்தமிழன்  TV,  

வெளிப்படுத்திய தகவல்களில் முதல் ஆறு தகவல்கள் எவ்வாறு தவறானவை? என்பதை கடந்த பதிவில் பார்த்தோம்
(https://tamilsdirection.blogspot.com/2020/05/2-tamil-music-or-carnatic-music-19-tv.html)

அதில் கடைசியாக, கீழ்வரும் கோரிக்கையையும் முன்வைத்திருந்தேன்.

தமிழிசையில் இருந்து தான் இந்துஸ்தானி இசை பிறந்தது, என்பதை, இந்துஸ்தானி இசை மேதைகளை வரவழைத்து, 6 வருடங்களில் 7 இசை மாநாடுகளை நடத்தி ஆபிரகாம் பண்டிதர் நிரூபித்தார்; என்று அமுதா பாண்டியன், மம்மது உள்ளிட்டு மேற்குறிப்பிட்ட கருத்துக்கு, ஆபிரகாம் பண்டிதரின் நூல்களில் இருந்து எவராவது ஆதாரங்களை வெளிப்படுத்தினால், அதற்கு நன்றி தெரிவித்து, அவற்றை நான் ஆய்வுக்கு உட்படுத்த இயலும்.

அடுத்து, கீழ்வரும் தகவலை ஆராய்வோம்.


7. சுருதிகள் 24 (?) என்று ஆபிரகாம் பண்டிதர் நிரூபித்தார்.

சுருதிகள் பற்றிய ஆய்வில், ஆபிரகாம் பண்டிதர் மேற்கத்திய இசையில் உள்ள 'ஈக்வல் டெம்பெரமண்ட்' (Equal Temperament) முறையை, சிலப்பதிகாரத்தின் வட்டப்பாலை முறையாக அடையாளம் கண்டார். அம்முறையில் ஒரு தானத்தில் ஸ்தாயியில் (Octave) 12 அரைச்சுரங்கள் (semitones) ஒவ்வொன்றும் ‘21/12 ' அளவில் சம இடைவெளியில் இருக்கும்

அம்முறையில் ஒரு தானத்தில் ஸ்தாயியில் (Octave) 24 காற்ச்சுரங்கள் (quartertones) ஒவ்வொன்றும் ‘21/24 ' அளவில் சம இடைவெளியில் இருக்கும்.

கர்நாடக இசையில் 22 சுருதிகள் பற்றிய சான்றுகள் இருக்கின்றன. சிலப்பதிகாரத்தில் 22 மாத்திரைகள் பற்றிய சான்றுகள் இருக்கின்றன.

மேற்கத்திய இசையில் உள்ள 'ஈக்வல் டெம்பெரமண்ட்' (Equal Temperament) முறையில் உள்ள குறைபாடுகள் ஆபிரகாம் பண்டிதரின் பார்வைக்கு வந்ததாக தெரியவில்லை. குறிப்பாக, முதல் சுரம் மற்றும் அதன் தானம் ஸ்தாயி (octave) சுரம் ஆகிய இரண்டு சுரங்களைத் தவிர்த்து, மற்ற சுரங்களின் இடைவெளிகள் எல்லாம் குறைபாடு உடையனவாகும்.

மேற்கத்திய 'ஈக்வல் டெம்பெரமண்ட்' (Equal Temperament) முறையை வட்டப்பாலையாகக் கருதி ஆபிரகாம் பண்டிதரின் ஆய்வுகள் தவறான திசையில் முன்னேறி, அதன் தொடர்ச்சியாக ஆயப்பாலை, வட்டப்பாலை, சதுரப்பாலை, திரிகோணப்பாலை, ராகபுடமுறை உள்ளிட்ட அவரின் ஆராய்ச்சி முடிவுகள் எல்லாம் எவ்வாறு தவறானவை? என்பதை 1996 முதல் கட்டுரைகள், புத்தகங்கள், சொற்பொழிவுகள் மற்றும் இணையப் பதிவுகள் மூலமாக நான் விளக்கி வந்துள்ளேன்.

1996இல் 'தமிழிசையின் இயற்பியல்' (Physics of Tamil Music) பல்துறை (interdisciplinary) முனைவர் பட்ட ஆய்வில், ஆபிரகாம் பண்டிதர் கணக்கிட்ட முறையை விளக்கி, அதன்பின் 'ஈக்வல் டெம்பெரமண்ட்' (Equal Temperament) முறையில் உள்ள குறைபாடுகள் பற்றிய ஆய்வுகள் தொடர்பான சான்றுகளையும் வெளிப்படுத்தினேன்மேற்கத்திய 'ஈக்வல் டெம்பெரமண்ட்' (Equal Temperament) முறை வட்டப்பாலையாகக் கருதிய ஆபிரகாம் பண்டிதர், அது சிலப்பதிகாரம் சுட்டிக் காட்டிய ' - ' மற்றும் ' - ' முறைக்கு ஒத்து வராததை உணர்ந்தார். எனவே "கர்நாடக சங்கீத முறைக்கு 2/3, 3/4 என்ற முறை ஒத்து வர மாட்டாது என்று நினைக்கிறேன்." என்று தெரிவித்து, அவற்றை 'மோட்டா அளவு' என்று குறையும் கூறினார். (கருணாமிர்த சாகரம் பக்கம் 503 - 506)

அது மட்டுமல்ல, சிலப்பதிகாரத்தில் சுருதித் தீர்மானிப்பு குழல் (Pitch Pipe) தொடர்பான சான்றுகளை கருத்தில் கொள்ளாமல் 'யாழிலுள்ள மெட்டு வைப்பதற்குச் சுரங்களின் திட்டமான ஓசையைக் காட்டும் எந்த கருவியும் அவர்களுக்குக் கிடையாது' என்று ஆபிரகாம் பண்டிதர் (கருணாமிர்த சாகரம் பக்கம் 760 - 762) தவறாக முடிவு செய்ததையும் உரிய சான்றுகளுடன் வெளிப்படுத்தியுள்ளேன்.. ('தமிழ் இசையியல் புதிய கண்டுபிடிப்புகள்' (2009) பக்கம் 144 – 154)

சுருதிகள் 24 (?) என்று ஆபிரகாம் பண்டிதர் நிரூபித்ததானது எவ்வாறு தவறானது? என்பதை உரிய சான்றுகளுடன் நான் மேற்குறிப்பிட்ட நூலில் விளக்கியுள்ளேன். அது தெரியாமல், 'சங்கதமிழன்' கருத்து வெளிவந்துள்ளதானது, எனக்கு வியப்பைத் தரவில்லை. மம்மது, அமுதா பாண்டியன் போன்றவர்களே, அது தெரியாமல் அல்லது அதை இருட்டில் தள்ளியே பயணித்து வருகிறார்கள்.

'தமிழ் இசையியல் புதிய கண்டுபிடிப்புகள்' நூலைப் படித்த குட்டி ரேவதி தொலைபேசியில் என்னை அழைத்து மிகவும் பாராட்டினார்.  ஆர் ரகுமான் அறக்கட்டளை சார்பில், 'ஆபிரகாம் பண்டிதர் திட்டம்' பொறுப்பாளராக உள்ள குட்டி ரேவதி, ஆபிரகாம் பண்டிதர் தொடர்பான மேற்குறிப்பிட்ட எனது ஆய்வுமுடிவுகளை மறைத்து;

'ஆபிரகாம் பண்டிதரின்   ' - இணை' என்ற ஆய்வு முடிவினை, மறைந்த இசை அறிஞர் எஸ்.ராமநாதன் தமது சிலப்பதிகார ஆய்வில் மறுத்துள்ளதையும் மறைத்து,  ஆபிரகாம் பண்டிதரின் ஆய்வு முடிவுகளை, அடுத்து வந்த ஆய்வாளர்கள் எவருமே மறுக்கவில்லை, என்று தவறாக தெரிவித்துள்ளதானது, அறிவு நேர்மையாகுமா?' 

ஆபிரகாம் பண்டிதர் இன்று உயிரோடிருந்தால், மேற்குறிப்பிட்ட போக்குகளை எல்லாம் கண்டித்திருப்பார். ஏனெனில் அவர் தமது ஆய்வுமுடிவுகளை விளங்கிக் கொள்ளாமல் உணர்ச்சிபூர்வமாக பாராட்டுபவர்களிடமே முன்வைத்து, முட்டாள்த்தனமான பாராட்டு மழையில் பயணிக்கவில்லை. இந்திய அளவில் உள்ள இசைப்புலமையாளர்கள் முன்னிலையிலேயே தமது ஆய்வுகளை முன்வைத்தார். அவர்கள் தமது ஆய்வுகளுக்கு எதிராக முன்வைத்த விமர்சனங்களை எல்லாம் மிகவும் மதித்தார். அந்த விமர்சனங்களுக்கு உரிய பதில் தரும் முயற்சிகள் மூலமாகவே, அவரின் ஆய்வுகள் வளர்ந்தன. அவருக்கு 'இசையின் இயற்பியல்' (Physics of Music) தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அந்த காலத்தில் அவருக்கு கிட்டவில்லை. கிட்டியிருந்தால், நான் கண்டுபிடித்துள்ள பல ஆய்வுமுடிவுகளை அவரே கண்டுபிடித்திருப்பார்.

முட்டாள்த்தனமான பாராட்டு மழையில் சிக்காமல், அவரின் அணுகுமுறையில்,  புலமையாளர்களின் பார்வைக்கு எனது ஆய்வுமுடிவுகளைக் கொண்டு சென்றே, நான் முன்னேறி வருகிறேன். தமிழிசை இயக்கம் ஆபிரகாம் பண்டிதரை இருட்டில் தள்ளி, விபுலானந்த அடிகளை முன்னிறுத்திய தவறினை ஏற்கனவே நான் சுட்டிக்காட்டியுள்ளேன்

இன்று முட்டாள்த்தனமான வெறுப்பு அரசியலுடன் ஆபிரகாம் பண்டிதரை இணைத்து, எனது ஆய்வுகளை இருட்டில் தள்ளி பயணித்து வருவதானது, தமிழுக்கும் தமிழிசைக்கும் கேடாகி வருவதும், வெட்ட வெளிச்சமாகத் தொடங்கியுள்ளது

அடுத்து, கீழ்வரும் தகவலை ஆராய்வோம்.

8.    தமிழ்ப்பண் தான் ராகமாக மாற்றப்பட்டது, என்பது தொடர்பாக ஆபிரகாம் பண்டிதர் முன்வைத்த கேள்விகளுக்கு பிராமண இசைக்கலைஞர்களிடம் இருந்து பதில் வரவில்லை. 

மேற்குறிப்பிட்ட கருத்துக்கு, ஆபிரகாம் பண்டிதரின் நூல்களில் இருந்து எவராவது ஆதாரங்களை வெளிப்படுத்தினால், அதற்கு நன்றி தெரிவித்து, அவற்றை நான் ஆய்வுக்கு உட்படுத்த இயலும்.


(வளரும்)

No comments:

Post a Comment