Friday, February 1, 2019


தமிழரின் அடையாளச் சிதைவும், புலமை வீழ்ச்சியும் (6)


'துப்பு' கெட்டப் போக்கிலிருந்து, 'சீருடன்' மீளும் தமிழ்நாடு?



சுமார் 10 வருடங்களுக்கு முன், எதேச்சையாக ஒரு நாளிதழின் வார இதழைப் புரட்டிக் கொண்டிருந்தபோது, கீழ்வரும் பழமொழி என் கண்களில் பட்டது.

'உப்புல இருக்கு துப்பு, நீருல இருக்கு சீரு'

தண்ணீரின் சிறப்பினை விளக்கும் பழமொழி என்று கருதி, அதை வெளியிட்டிருந்தார்கள். 'உப்புல தெரியுமாம் துப்பு, நீருல தெரியுமாம் சீரு' என்றும் இந்த பழமொழி இருப்பதை இணையவழியில் அறிந்தேன்.

அந்த பழமொழியைப் படித்தவுடன், 'சீரும் இசையும்' என்ற தலைப்பில் நான் வெளியிட்டிருந்த கட்டுரை எனது ஞாபகத்திற்கு வந்தது

கூடுதலாக கீழ்வரும் நாலடியார் வரிகளும் எனது ஞாபகத்திற்கு வந்தது.

  "பணிவு இல் சீர்
 மாத்திரை இன்றி நடக்குமேல், வாழும் ஊர்
 கோத்திரம் கூறப்படும். "
-       நாலடியார் 25:2

'துப்பு' என்ற சொல்லுக்கு தமிழில் 29 பொருளும், ஆங்கிலத்தில் 5 பொருளும் உள்ளன. (https://ta.wiktionary.org/wiki/) கூடுதலாக கீழ்வரும் இரண்டு திருக்குறள்கள் வெளிவந்திருப்பதும் பாராட்டுதலுக்கு உரியதாகும்.

துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி, துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை (குறள் 12)

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்புஆயார் நட்பு (குறள் 106)

சமைத்த உணவின் 'துப்பை', அந்த உணவை நாவின் மூலமாகச் சுவைத்து உணரும் உப்பின் மூலம் ஆராய்ந்தறியலாம். அதுவே 'உப்புல இருக்கு துப்புஆகும். பல நட்சத்திர விடுதிகளில், அந்த திறமையுள்ள 'சுவைஞர்களுக்கு' சம்பளம் மிக அதிகமாகும்.

'எழுத்து அசைத்து இசைக் கோடலின்' மூலம் உருவான இரு வகை (நேரசை, நிரையசை) அசைகளும், உரியவிதி வழிகளில் சேர்ந்து உருவாக்கும் சீரினுள்;

'பாலை நிலை, பண்ணு நிலை, வண்ணக்கூறுபாடு, தாளக்கூறுபாடு' அமைந்திருக்கும்;

என்பதை உரிய சான்றுகளுடன் எனது விளக்கத்தினை, மேலே குறிப்பிட்ட 'சீரும் இசையும்' என்ற கட்டுரையில் வெளியிட்டிருந்தேன்.

அடுத்து 'நீர்' என்ற சொல்லுக்கு, தமிழ் லெக்சிகன், 'தமிழிசைக் கலைக்களஞ்சியம்', நா.மம்மதுவின் 'தமிழிசைப் பேரகாராதி, உள்ளிட்டவற்றில் என்ன பொருள் உள்ளது? அதைக் கொண்டு, கீழ்வரும் பகுதிகளுக்கு விளக்கம் பெற முடியுமா? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராயலாம்.

'திவவு மெய்ந்நிறுத்துச் செவ்வழி பண்ணி,
குரல் புணர் நல்யாழ் முழவொடு ஒன்றி,
நுண்நீர் ஆகுளி இரட்ட’ - மதுரைக் காஞ்சி 603 – 606

'வாரியும், வடித்தும், உந்தியும், உறழ்ந்தும்,
 சீருடை நன்மொழி நீரொடு சிதறி' - பொருநர் ஆற்றுப்படை 23 – 24

'வார நிலத்தை கேடின்றி வளர்த்து ஆங்கு
 ஈர நிலத்தின் எழுத்து எழுத்தாக
 வழுவின்றி இசைக்கும் குழலோன்'
         -  சிலப்பதிகாரம்; அரங்கேற்று காதை 67 - 69

'கோடியர் நீர்மை'  - புறநானூறு 125:1

'யாப்பினுள் அட்டிய நீர்' - திருக்குறள் 1093

தமிழ் இசையியலில் நுணுக்கமான பங்கு வகிப்பது மேலே குறிப்பிட்ட 'நீர்' என்ற சொல்லாகும்
(http://tamilsdirection.blogspot.com/2018/ )

சமைத்த உணவின் துப்பைப் (உள்ளடக்கத் தன்மையை) போலவே;

சமைத்த (composed & performed) இசையின் 'துப்பாக' - இசையின் உள்ளடக்கத்தன்மையாக-  இசையில் 'நீர்' இருக்கிறது.

சமைத்த உணவின் 'துப்பை', அந்த உணவை நாவின் மூலமாகச் சுவைத்து உணரும் உப்பின் மூலம் ஆராய்ந்தறியலாம்.

அது போலவே, சமைத்த இசையின் துப்பாகிய 'நீரை' ('பாலை நிலை, பண்ணு நிலை, வண்ணக்கூறுபாடு, தாளக்கூறுபாடு' ஆகிய இசைக்கூறுகள் எந்த அளவுக்கு ரியாக சேர்ந்து 'இசை சமைத்தல்' நடந்துள்ளது?), செவியின் மூலமாக, இசைக்கூறுகளை உள்ளடக்கிய 'சீரை', ‍ நாவின் மூலமாக உணவின் உப்பைச் சுவைத்தது போல, செவியின் மூலமாக சீரைச் சுவைத்து ஆராய்ந்தறியலாம். மேலே குறிப்பிட்ட 'நீர்' தொடர்பான சான்றுகளை ஆராய்ந்து, தமிழ் இசையியல் இன்பமும் அனுபவிக்கலாம்; உரிய ஆர்வமும் உழைப்பும் இருந்தால்.

சுமார் 10 வருடங்களுக்கு முன், எதேச்சையாக ஒரு நாளிதழின் வார இதழில்;

தண்ணீரின் பெருமையை சிறப்பினை விளக்கும் பழமொழி என்று தவறாககருதி,

'உப்புல இருக்கு துப்பு, நீருல இருக்கு சீரு' என்று வெளியிட்டிருந்தார்கள், என்று மேலே குறிப்பிட்டுள்ளேன்.

அந்த தவறினை உரிய சான்றுகளுடன் சுட்டிக்காட்டி நான் எழுதிய மடல் வெளிவரவில்லை. அதே இதழ் எந்த அளவுக்கு 'துப்பு' கெட்ட திசையில் பயணிக்கிறது? என்பதை கீழ்வரும் அனுபவம் மூலமாக நான் அறிந்தேன்.

‘'தமிழிசைக் கலைக்களஞ்சியம்' ஊடகங்களில் இருட்டடிப்புக்கு உள்ளாகி, நா.மம்மது தொகுக்கத் தொடங்கியதானது, 'அதீத' ஊடக வெளிச்சத்துடன் வெளிவந்தது.  அந்த 'ஊடக இருட்டடிப்பு' தொடங்கிய சமயத்தில், 2005‍இல், நான் மம்மதை தொலைபேசியில் தொடர்பு  கொண்டு, அந்த தவறினைச் சுட்டிக்காட்டினேன். தான் 'தமிழிசைக் கலைக்களஞ்சியம்' பற்றி தெரிவித்தாகவும், அதை விட்டு விட்டு ஊடகங்களில் வெளிவருவதாகவும், விளக்கம் தந்தார். உடனே ஊடகத்திற்கு திருத்த அறிக்கை அனுப்புமாறு அவரிடம் அறிவுறுத்தினேன். ஆனால் மம்மதுவின் 'தமிழிசைப் பேரகராதி' 2010 இல் வெளிவரும் வரை, அதே தவறு தொடர்ந்தது. அதிலும் முன்பு 1992இல், 'தமிழிசைக் கலைக்களஞ்சியம்' வெளிவரத் தொடங்கிய போது, அதனைப் பாராட்டி எழுதிய தமிழ் இதழிலேயே, அதனை இருட்டடிப்பு செய்து, நா.மம்மது தான் முதன் முதலில் அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கட்டுரை வெளிவந்தது. அந்த தவறினைச் சுட்டிக்காட்டி அந்த இதழுக்கு நான் அனுப்பிய மடலும் 'அதே' இருட்டடிப்புக்கு உள்ளானது.’ 

அதன் பின், என் பார்வைக்கு வந்த கீழ்வரும் பேட்டியும், அதில் வெளிப்பட்ட தகவல்கள் எந்த அளவுக்கு தவறானவை? என்பது தெரியாமல் வெளியிட்ட அந்த இதழும், எந்த அளவுக்கு 'துப்பு' கெட்ட திசையில் தமிழ்நாடு பயணிக்கிறது? என்பதற்கான சான்றாகும்.

தமிழிசை ஆராய்ச்சி குறித்து இனி மம்மது பேசுவார். “25 ஆண்டுகாலம் கிராமியச் சூழலில் கட்டுண்டு கிடந்ததால் என்னைச் சுற்றி இசையும் இருந்தது. பூப்புச் சடங்கு, இறப்புச் சடங்கு, கோயில் கொடை அறுவடைப் பாட்டு, வில்லுப் பாட்டு, வண்டிக்காரன் பாட்டு என எங்காவது ஒரு மூளையில் இசை ஒலித் துக் கொண்டே இருக்கும். என்னைச் சுற்றி இருந்த நண்பர்களும் இசை ஆர்வலர்களாக இருந்ததால் அடிக்கடி இசை குறித்துப் பேசுவோம். எனது குருநாதர் சி.சு.மணி ஒருமுறை, ‘தமிழிசையைப் பற்றி மிகச் சிலர்தான் ஆய்வு செய்திருக்கிறார்கள். நீங்கள் கொஞ்சம் ஆழமாக ஆய்வு செய்யுங்களேன்என்றார்.

தமிழிசை பேரகராதி உருவாக அதுதான் எனக்கு உந்துதல்” (‘தமிழிசையின் பெருமை சொல்லும் பேரகராதி: இசை ஆர்வலர் மம்மதின் மகத்தான சாதனை’; https://tamil.thehindu.com/opinion/reporter-page )

ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்த அடிகள், அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சிலப்பதிகாரத்தின் இசை பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்று, உலகின் கவனத்தை சிலப்பதிகாரம் நோக்கி ஈர்க்கச் செய்த எஸ்.ராமநாதன், 'தமிழிசைக் கலைக் களஞ்சியம்'(4 தொகுதிகள்) தொகுத்த வீ.ப.கா.சுந்தரம்,  'பூர்வீக சங்கீத உண்மை'' நூல் எழுதிய எம். கே. எம். பொன்னுச்சாமி, பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை சுந்தரேசனார், கு.கோதண்டபாணி பிள்ளை, பேராசிரியர். .வெள்ளை வாரணனார், பேராசிரியர். தனபாண்டியன், பேராசிரியர். சாம்பமூர்த்தி, பி.டி.ஆர்.கமலை தியாகராஜன், முனைவர்.சேலம். ஜெயலட்சுமி, முனைவர்.எஸ்.சீதா;
 (https://ta.wikipedia.org/wiki/ - தமிழிசை ஆய்வுகள் )

'தமிழன் கண்ட இசை', 'திராவிடர் இசை' நூல்கள் எழுதி, இணை சொல்ல முடியாத இழப்புகளைத் தமிழிசைப் பற்றின் காரணமாகவே சந்தித்து வாழ்ந்து மறைந்த பொறியாளர் தண்டபாணி; (http://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none_22.html)

நிகழ்காலத்தில் என்.ராமநாதன், .அங்கையற்கண்ணி, மார்க்கெரேட், நான் உள்ளிட்டு இன்னும் பலர் தமிழ் இசை தொடர்பாக ஆய்வுநூல்கள் பல வெளியிட்டிருக்கும் நிலையில்;

அவற்றை எல்லாம் இருட்டடிப்புக்கு உள்ளாக்கி;

சி.சு.மணி ஒருமுறை, ‘தமிழிசையைப் பற்றி மிகச் சிலர்தான் ஆய்வு செய்திருக்கிறார்கள். நீங்கள் கொஞ்சம் ஆழமாக ஆய்வு செய்யுங்களேன்என்று சொன்னதும், அதனை மம்மது ஏற்றுக் கொண்டதும், அதனை ஒரு பிரபல இதழ் வெளியிட்டதும்,

மேலே குறிப்பிட்ட துப்பு கெட்ட திசையில் தமிழ்நாடு பயணித்து வந்திருப்பது சரியா? என்ற விவாதத்தினை துவங்க வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மேலே குறிப்பிட்ட ஆராய்ச்சியாளர்கள் எவரும், நானறிந்தது வரையில், மம்மதுவைப் போல;

"'தமிழிசை (தென்னிந்திய இசை - கர்நாடக இசை) மற்றும் இந்துஸ்தானி இசை (வட இந்திய இசை) இரண்டும் ஒரே இசை முறையின் இரு பிரிவுகள்."

என்பது போன்றஆய்வு முடிவினை உரிய சான்றுகள் இன்றி வெளிப்படுத்தியதில்லை
(https://tamilsdirection.blogspot.com/2019/01/blog-post_7.html ) வெளிவரும் படைப்புகளின் நிறைகுறைகளைத் திறனாய்வு செய்து வெளிப்படுத்தும் போக்கின்றி, விளம்பரமாக பாராட்டும் திசையில் இதழ்கள் எல்லாம் பயணிப்பதானது, துப்புக் கெட்ட போக்கின் அறிகுறியாகும்.

ஒரு ஊரில் செல்வாக்குடன் வலம் வரும் இசையில்;

'பணிவுஇல் சீர்' வெளிப்படுமானால்

'பாலை நிலை, பண்ணு நிலை, வண்ணக்கூறுபாடு, தாளக்கூறுபாடு' ஆகிய இசைக்கூறுகளின் கட்டுப்பாடானது, அந்த இசையில் சீர்குலைந்து வெளிப்படும்.

அது போன்ற 'சீர்' கெட்ட‌ இசை செல்வாக்கு செலுத்தும் சமூகத்தில், பொதுஒழுக்க நெறிகள் சீர் குலைந்து, குடும்பத்தில், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில், கொலை, தற்கொலை, திருட்டு, போதைப்பழக்கம் போன்ற நோய்கள் வளர்ந்து, நேர்மையான சுயசம்பாத்தியமின்றி, தன்மானமிழந்து வாலாட்டி பணம்  சேர்ப்பவர்கள் மிகுந்து, அந்த சமூகமானது சீரழிவில் சிக்கி விடும். அதையே கீழ் வரும் வரிகள் விளக்கியுள்ளன

"பணிவு இல் சீர்
மாத்திரை இன்றி நடக்குமேல், வாழும் ஊர்
 கோத்திரம் கூறப்படும். "
-       நாலடியார் 25:2

'எழுத்து அசைத்து இசைக் கோடலின்' மூலம் உருவான இரு வகை (நேரசை, நிரையசை) அசைகளைப் பற்றிய கவலையின்றி;

உரிய‌ விதி வழிகளில் சேர்ந்து உருவாக்கும் சீரைப் பற்றிய கவலையின்றி;

திரைஇசைப்பாடல்கள் வளர்ந்த போக்குடன், மேலே குறிப்பிட்ட 'துப்பு' கெட்ட திசையில் தமிழ்நாடு வளர்ந்த போக்கானது, எந்த அளவுக்கு தொடர்புடையது? என்பதை ஆர்வமுள்ளவர்கள் ஆராயலாம்

’’ எமதுள்ளம் சுடர் விடுக 34: தமிழர் இசையும் வாழ்வும்! என்ற தலைப்பில்  பிரபஞ்சன்  'தமிழ் இந்து' நாளிதழில் எழுதிய கட்டுரையைப் படித்த போது, கீழ்வரும் பகுதியானது எனது கவனத்தை ஈர்த்தது.

“இசையில் (சுருதி, ஸ்ருதி) சுதி என்று கூறும் சொல்லுக்குத் தூய தமிழ்ச் சொற்கள் 22 உண்டு. ஆனால் அத்தனைச் சொற்களையும் வீழ்த்தி ‘ஸ்ருதி’ என்பது வழக்குக்கு வந்துள்ளதே !’’

கடந்த மார்ச் 22ஆம் தேதி அவருக்கு கீழ்வரும் மின்மடலை அனுப்பினேன்.

“தங்களின் கட்டுரையில்;

“இசையில் (சுருதி, ஸ்ருதி) சுதி என்று கூறும் சொல்லுக்குத் தூய தமிழ்ச் சொற்கள் 22 உண்டு."

எனது கவனத்தை ஈர்த்தது. 

'அந்த 22 சொற்கள்' யாவை?" என்பதை அனுப்பினால், அவை மம்மதுவின் 'தமிழிசைப் பேரகராதி' நூலில் சரியாக 'புரிந்து' பதிவாகி உள்ளனவா? என்ற‌ எனது ஆய்வுக்கு உதவும்.”

இன்று வரை பதில் வரவில்லை. இனி வந்தாலும் வரவேற்பேன். (http://tamilsdirection.blogspot.com/2018/06/normal-0-false-false-false-en-us-x-none.html ) பதில் தராமலேயே பிரபஞ்சன் மறைந்து விட்டதால், அதனைத் தெளிவுபடுத்த வேண்டியது மம்மதுவின் கடமையாகும்.

எனது ஆய்வுகளுக்கு 'அறிவுபூர்வ இடிப்பாராக' உள்ளவர்களையே மதித்து, என்னை வளர்த்துக் கொண்டு வருவதும், எனது ஆய்வுகளின் வெற்றிக்கான இரகசியங்களில் அடங்கும். (http://tamilsdirection.blogspot.com/2018/11/2-50.html) முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் உள்ளிட்டு, எனது ஆய்வுத்திட்டங்களில் (R & D Projects) உள்ள குழுவினர் எல்லாம், அந்த போக்கில் தயவு தாட்சண்யமின்றி பயணிப்பதும், அந்த திட்டங்களின் வெற்றிகளின் இரகசியமாகும். 

'திருக்குறளில் தமிழ் இசையியல்' ஆய்வுப் பிரதியை, மம்மது உள்ளிட்டு சுமார் 20க்கும் அதிகமான புலமையாளர்களுக்கு 5 வருடங்களுக்கு முன் கொரியரில் அனுப்பினேன்; அதனை தயவு தாட்சண்யமின்றி 'அறிவுபூர்வ இடிப்பாராக' அவர்கள் விமர்சிக்க வேண்டும் என்ற ஆவலில். இதுவரை எவரிடமிருந்தும் எந்த தகவலும் இல்லை. இனியாவது விமர்சனம் வந்தாலும் வரவேற்பேன்.  

நிறைகுறைகளைத் திறனாய்வு செய்து வெளிப்படுத்தும் போக்கின்றி, இதழ்கள் எல்லாம் விளம்பரமாக பாராட்டும் திசையில் 'தொல்காப்பிய பூங்கா', 'தமிழிசைப் பேரகராதி' போன்ற இன்னும் பல படைப்புகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. நிகழ்கால‌ உலகில், விமர்சனத்தை இருட்டடிப்பு செய்தல், மனித உரிமை 'வீரர்கள்'(?) கண்களை மூடிக்கொள்ள, விமர்சிப்பவர்களை அச்சுறுத்தல் போன்றவற்றின் மூலமாக, இதழ்கள் எல்லாம் பாராட்ட, இது போன்ற படைப்புகள் வெளிவரும் 'ஒரே மொழியாக'  தமிழ் மொழி இருந்தால் வியப்பில்லை.

மிழ்நாடு அவ்வாறு 'துப்பு' கெட்ட திசையில் பயணித்தற்கு, சமூக முதுகெலும்பு முறிந்த, 'அறிவியல் தற்குறிக் கூட்டம்' செல்வாக்குடன் வலம் வந்ததே முக்கிய காரணமாகும்.

திருக்குறள் (448)-இன் படி, 'இடித்து' அரசை வழி நடத்த வேண்டிய உயர் பதவிகளில், 'வாலாட்டும்' நபர்களை 'தேர்ந்தெடுத்து'(?) ஆட்சியில் இருந்தவர்கள் பயணித்தாலேயே, சமூக முதுகெலும்பு முறிந்த, 'அறிவியல் தற்குறிக் கூட்டம்', அகத்தில் சுயலாபக்கணக்குகளுடன் வாழ்ந்து, புறத்தில் வளமாகி, தமிழைச் சீரழித்தது நடந்தது; தமிழை வைத்துப் பிழைத்த சுயலாப வலைப்பின்னல்களின் துணையுடன். அது இனி தொடராது; தமிழும், தமிழுணர்வும், முதலில்லாத பொதுவாழ்வு வியாபார மூலதனமாக பயன்பட்டதானது, இன்றைய மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்களின் டிஜிட்டல் உலகத்தில் கேலிப்பொருளாகி வருவதால்.

தமிழின் அடுத்த கட்ட புலமையானது, தமிழரின் வாழ்வு முன்னேற்றத்துடன் தொடர்புடைய திசையில் பயணித்தாக வேண்டும். முன்னேற்றம் என்பது புறத்தில் வசதி வாய்ப்புகளைப் பெருக்குவதாகவும், வாழ்வில் சந்திக்கும் அகம் சம்பந்தப்பட்ட சிக்கல்களை நல்ல முறையில் சந்தித்து ஆக்கபூர்வமாக வாழ துணை புரிவதாகவும் இருக்க வேண்டும். தமிழர்களின் வாழ்வில் அகம், புறம் ஆகிய இரண்டு புலங்களிலும் பலன் தரக்கூடிய வகையில், தமிழின் அடுத்த கட்ட புலமை வளர்ச்சியானது பயணித்தாக வேண்டும். தமிழரின் தர அடையாளத்தை (benchmark) உயர்த்தவும் அதுவே சரியான வழியாகும்

இசையில் 'சீர்' கெட்டு, துப்பு கெட்ட திசையில் பயணிக்கும் தமிழ்நாட்டில், தமிழ் மொழியின் இலக்கணமும் எந்த அளவுக்கு சீர் கெட்டுள்ளது? என்ற விவாதமும் அரங்கேற வேண்டிய நேரமும் வந்து விட்டது.

தொல்காப்பியம் தொடங்கி நன்னூல் வரை இலக்கண விதிகளில் நடந்துள்ள மாற்றங்களின் சமூக வரலாற்றுப் பின்னணி என்ன? அந்த விடையின் வெளிச்சத்தில், தமிழ்ச் சமூகத்தில் நடந்து வரும் மாற்றங்களை - குரலொலியிலும் vocal sounding, செவி உணர்விலும் aural perception, காட்சி உணர்விலும் visual perception, எழுத்து முறையிலும் writing methods ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் - கணக்கில் கொண்டு இலக்கண விதிகளிலும் மாற்றங்கள் செய்ய, உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா? அத்தகைய முயற்சிகளுக்கே வழியில்லாதவாறு, 'திராவிட' அரசியலில், அடிவருடி போக்கில், தமிழ் சிறைபட்டுள்ளதா

துப்புள்ள திசையில் எவ்வாறு பயணிப்பது? என்று தமிழ் ஆர்வலர்களுக்கு வெளிச்சம் காட்டும் திசையில் சமஸ்கிருத மொழி பயணித்து வருகிறது

சமஸ்கிருத எழுத்துக்களின் தனித்துவமான ஒலிப்புகளும், அவை சேரும் விதிகளையும் விளக்கியுள்ள பாணினியின் அஷ்டத்தாயியானது, 'நவீன மொழியியல்' (Modern Linguistics) உருவாக பங்களித்துள்ளதையும்;

தமிழ் எழுத்துக்களின் தனித்துவமான ஒலிப்புகளும், அவை சேரும் விதிகளையும் விளக்கியுள்ள தொல்காப்பியமானது, புதிதாக உருவாகி வரும் 'இசை மொழியியல்' (Musical Linguistics) உருவாக பங்களிக்கத் தொடங்கியுள்ளதையும்;

அஷ்டத்தாயி மற்றும் தொல்காப்பியம் நூல்களில் உள்ள மேலே குறிப்பிட்ட இருவகை 'லாஜிக்குகளும்' வருங்கால ஆய்வில் சங்கமித்து;

'உலக மொழி இலக்கணம்' (universal grammar) தொடர்பான நோவாம் சாம்ஸ்கியின் நிலைப்பாட்டினை நிரூபிப்பதற்கான வாய்ப்பும் வெளிப்பட்டு வருவதையும்;

ஏற்கனவே விளக்கியுள்ளேன்

எனவே 'துப்பு' கெட்டப் போக்கிலிருந்து, 'சீருடன்' தமிழ்நாடு மீளும் காலமும் நெருங்கி வருகிறது.

No comments:

Post a Comment