தமிழ்நாட்டில் புலமை வீழ்ச்சியும், சமூக நோய்கள் வளர்ச்சியும்(3)
தமிழ் லெக்சிகனில் உள்ள குறைபாடுகளும், புதிய ஆய்வுகளுக்கான வாய்ப்புகளும்
‘தமிழ் இசையியல்’
(Tamil Musicology) அறிவின்றி யாப்பிலக்கணம் பயிலும் தவறுகள் நீங்கும் காலமும், 'இசை மொழியியல்'
(Musical Linguistics) மூலம் வியாபார வாய்ப்புள்ள ஆய்வுகளுக்காக, உலகில் உள்ள பல்கலைக்கழகங்கள் எல்லாம், தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் நூல்கள் நோக்கி, ஆய்வுப்படையெடுப்பு தொடங்கும் காலமும், நெருங்கி வருகின்றன.’ (http://tamilsdirection.blogspot.com/2018/09/normal-0-false-false-false-en-us-x-none_14.html
)
தமிழ் லெக்சிகனில் உள்ள குறைபாடுகளை எல்லாம், 1996
முதல் நான் வெளியிட்டு வந்துள்ளேன். வயதான தமிழ்ப்புலமையாளர்களில் யார்? யார்? அதனை ஆய்வுக்கு உட்படுத்தி, என்னென்ன தீர்வு முயற்சிகளை மேற்கொண்டார்கள்? எனபது அவரவர் மனசாட்சிகளுக்கே வெளிச்சம்.
ஆனால் இன்று கல்லூரி மாணவர்கள் மற்றும் நன்கு படித்த இளைஞர்கள் மத்தியில்;
'தமிழ், தமிழர்' அடையாளங்கள் பெற்று வரும் புத்துயிரானது, எனக்கு நம்பிக்கை தந்துள்ளது. அந்த வகையில், அவர்களில் ஆய்வு மனப்பான்மை உள்ளவர்களைக் கருத்தில் கொண்டே, இந்த பதிவை எழுதினேன். குறிப்பாக பொறியியல் மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும், படித்த இளைஞர்களும், தமிழை அறிவுபூர்வ திசையில் மீட்கும் முயற்சிக்கு, இந்த பதிவானது வலுவூட்டும், என்பதும் எனது நம்பிக்கையாகும்
தமிழ் இசையியல் தொடர்பான 'எழால்' என்ற சொல்லுக்கு, சென்னைப்பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ் லெக்சிகனில் சரியான பொருள் தரப்படவில்லை. சுமார் 15 வருடங்களுக்கு முன்னேயே அதைக் கண்டுபிடித்து, சரியான பொருளுக்கான சான்றுகளை எல்லாம் பழந்தமிழ் இலக்கியங்களில் தேடி தொகுத்து வைத்திருந்தேன்.
வீ.பா.கா.சுந்தரம் தொகுத்து, பாரதிதாசன் பல்கலைகழகம் வெளியிட்ட 'தமிழிசைக் கலைக்களஞ்சியம்' (4தொகுதிகள்) வெளிப்படுத்தியுள்ள 'எழால்' என்ற சொல்லுக்கான பொருளும் சரியல்ல. பின் 'அதீத' ஊடக வெளிச்சத்துடன் வெளிவந்த நா.மம்மதுவின் 'தமிழிசைப் பேரகாராதி'. 'எழால்' என்ற சொல்லுக்கு வெளிப்படுத்தியுள்ள பொருளும் சரியல்ல. (குறிப்பு-1 கீழே)
உதாரணமாக, 'எழால்' என்ற சொல்லுக்கு, வீ.பா.கா.சுந்தரம் வெளிப்படுத்தியுள்ள தவறான பொருளுக்கு, கீழ்வரும் சான்றினை முன் வைத்துள்ளார்.
"எழால் வகைகள் எட்டு. வீணை, யாழ் போன்ற இசை நரம்பில் எழுப்பப்ப்டும் ஓசை, எழால் எனப்படும். அவை எட்டு வகையின என்பார் இளங்கோ.
பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல்,
கண்ணிய செலவு, விளையாட்டுக் கையூழ்
நண்ணிய குறும்போக்கு என்று நாட்டிய
எண்வகையால் இசைஎழீஇப்
பண்வகையால் பரிவு தீர்ந்து
-
சிலப்பதிகாரம் 7: 5 9”
பக்கம் 289; தமிழிசைக் கலைக் களஞ்சியம் தொகுதி- 1 முனைவர் வீ.ப.கா.சுந்தரம்
'எழீஇ' என்ற சொல்லினை 'எழால்' என்று கருதியதற்கு எந்த சான்றும் தரப்படவில்லை. அச்சொல்லை 'எழால்' என்று வீ.பா.கா சுந்தரம் கருதியதற்கான நியாயமும் குறிப்பிடப்படவில்லை.
'எழீஇ' என்ற சொல்லுக்கான பொருள் லெக்சிகனில் இல்லை.
ஆனால் மர்ரே எஸ்.ராஜம் தொகுத்த 'பாட்டும் தொகையும்' கீழ்வரும் பொருளைத் தந்துள்ளது. (குறிப்பு-2 கீழே)
எழீஇ: எழுந்திருந்து, எழுப்பி
எழீஇய: வாத்தியம் வாசித்த
எழீஇயவை: எழுப்பியவை, வாத்தியம் வாசிப்பவை
யாழ் போன்ற நரம்பிசைக் கருவிகளில் இசை எழுப்பும் எட்டு வகைகள் தான், மேலே குறிப்பிட்ட சிலப்பதிகாரம் சான்றில் உள்ளது. அதனை 'எழால்' என்று பொருள் கொண்டது தவறாகும்.
'எழீஇ' போன்று, என்னென்ன சொற்கள் 'தமிழ் லெக்சிகனில்' இடம் பெறவில்லை? என்பதை ஆர்வமுள்ளவர்கள் ஆராயலாம்.
தற்போது நான் மேற்கொண்டு வரும் 'இசைத்தகவல் தொழில் நுட்பம்'
(Music Information Technology) தொடர்பான ஆய்வுத் திட்டங்களுக்கு இடையில் கிடைத்த கால இடைவெளியில், 'எழால்' தொடர்பான விளக்கத்தினை எழுதி முடித்துள்ளேன். http://musicresearchlibrary.net/omeka/
இணைய தளத்தில் விரைவில் வெளிவரும். அந்த முயற்சியில் ஈடுபட்டபோது, சென்னைப்பல்கலைக்கழகம் வெளியிட்ட 'தமிழ் லெக்சிகன்' தொடர்பாக, ஏற்கனவே நான் அடையாளம் கண்டிருந்த குறைபாடுகளும் எனது பார்வைக்கு வந்தன.
பழந்தமிழ் இலக்கியங்களில் இசை தொடர்பான பகுதிகளில், இடம் பெற்றுள்ள 'அத்தம்' என்ற சொல்லுக்கு தமிழ் லெக்சிகனில் உள்ள பொருளையும், எனது ஆய்வு முடிவினையும், ஆர்வமுள்ளவர்கள் ஒப்பிட்டு, எது சரி? என்று முடிவு செய்யலாம்.
அது போல, 'பாணி' என்ற சொல்லுக்கு தமிழ் லெக்சிகனில் உள்ள பொருளையும், எனது ஆய்வு முடிவினையும், ஆர்வமுள்ளவர்கள் ஒப்பிட்டு, எது சரி? என்று முடிவு செய்யலாம்.
'கிளை' என்ற சொல்லானது, இசை தொடர்பாக பழந்தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் இடம் பெற்ற சொல்லாகும். குறிப்பாக ஒரு பாடலில் இடம் பெறும் சுரங்களுக்கு இடையிலான உறவு பற்றிய சொல்லாகும்.
ஆனால் தமிழ் லெக்சிகனில், இசை தொடர்பாக, 'கிளை' என்ற சொல்லுக்கு பொருள் இல்லை.
எனவே தமிழ் இசையியல் முக்கியத்துவம் உள்ள எந்தெந்த சொற்கள், தமிழ் லெக்சிகனில் இடம் பெறவில்லை? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராயலாம். ('DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION'; Free Excerpt:
https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264 )
https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264 )
அது மட்டுமல்ல, யாப்பிலக்கணத்தின் 'இசை மொழியியல்' பரிமாணத்தை விளங்கிக் கொள்ள வேண்டுமானால், தமிழ் இசையியல் அறிவு அவசியமாகும்;
என்பதற்கு 'கிளை' என்ற சொல்லானது, நல்ல உதாரணமாகும்.
தொல்காப்பியத்தில் 'கிளை' என்ற சொல்லானது, கீழ்வரும் சான்றில் இடம் பெற்றுள்ளது.
"மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற்று எல்லாம்
வல்லொற்று இறுதி கிளை ஒற்று ஆகும்."
- தொல்காப்பியம்: எழுத்ததிகாரம் 9. குற்றியலுகரப் புணர் இயல்
மேலே குறிப்பிட்ட சான்றில், வல்லொற்று இறுதி ஏன் கிளை ஒற்று ஆகும்? என்ற கேள்விக்கான திறவுகோல், 'கிளை' என்ற சொல்லில் உள்ளது. ஆர்வமுள்ளவர்கள், வைரமுத்து நுழைவிற்கு முன் (http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_40.html),
சுருதி சுத்தமாக ஒலித்த எழுத்துக்கள் அடங்கிய பாடல்களை ஆராய்ந்தால், அப்பாடல்களில் மேலே குறிப்பிட்ட சான்றின்படி;
'வல்லொற்று இறுதி கிளை ஒற்று' ஆக இடம் பெற்ற இடங்களை அடையாளம் கண்டு ஆராய்ந்து, அதன் இசையியல் பரிமாணத்தை விளங்கி இன்புறலாம்.
அது போலவே, ஆர்வமுள்ளவர்கள் கீழ்வரும் 'கிளை மொழி' மற்றும் 'கிளை எழுத்து' தொடர்பான ஆய்வினையும் மேற்கொண்டு இன்புறலாம்.
" 'ஒற்று நிலை திரியாது அக்கொடு வரூஉம்
அக் கிளைமொழியும் உள' என மொழிப
"
- தொல்: குற்றியலுகரப் புணர் இயல்:13
- தொல்: செய்யுள் இயல்: 90
யாப்பிலக்கணம் தொடர்பான விதிகளில், மேற்குறிப்பிட்டது போன்ற ஏன்? என்ற கேள்விகளை எழுப்பாமல், அவ்விதிகளை எல்லாம் 'வேத வாக்கு' போல கருதி, மனப்பாடம் செய்து, 'எந்திரர்' போல வலம் வந்த தமிழ்ப்புலமையானது, டிஜிட்டல் யுகத்தில் மரணத்தைத் தழுவும் காலமும் நெருங்கி விட்டது. தமிழ்ப்புலமையானது, 'எந்திரர்'(Human Robot) திசையில் இனி பயணிக்க முடியாது. (http://tamilsdirection.blogspot.com/2018/12/2-humanrobot-artificialintellegence.html )
மேலே குறிப்பிட்ட சொற்களைப் போன்று, தமிழ் இசையியல் (Tamil Musicology) தொடர்பான எந்தெந்த சொற்களுக்கு, தமிழ் லெக்சிகனில் வெளிவந்துள்ள பொருள் சரியல்ல? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராயலாம்.
தமிழ் லெக்சிகனையும், உரைகளையும் நம்பி மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில் உள்ள சிக்கல் தொடர்பான உதாரணத்தினை அடுத்து பார்ப்போம்.
'சீர்' என்ற சொல்லுக்கு 'அளவு,
Measure, quantity' என்ற பொருள் கொள்வதற்கு, தமிழ் லெக்சிகனில் கீழ்வரும் சான்று உள்ளது.
'விரிசீர்த் தெரிகோல்' - புற நானூறு 6, 8
அந்த சான்றில் 'சீர்' என்ற சொல்லானது, எதைக் குறிக்கும்? என்ற ஆய்வுக்கு, அது இடம் பெற்றுள்ள பகுதியை ஆராய வேண்டும்.
'விரி சீர்த்
தெரிகோல் ஞமன்ன் போல, ஒரு திறம்
பற்றல் இலியரோ!
' புறநானூறு
6:8 - 10
தமிழ் லெக்சிகனில் உள்ள மேற்குறிப்பிட்ட சான்றின் அடிப்படையில், 'சீர்' என்ற சொல்லுக்கு 'அளவு,
Measure, quantity' என்ற பொருள் கொண்டதும், 'ஞமன்' என்ற சொல்லுக்கு, 'துலைக்கோலின் சமன்வாய்,
Pointer of a balance' என்ற பொருள் கொண்டதும், எவ்வாறு தவறு? என்பதை அடுத்து ஆராய்வோம்.
சங்க காலத்தில் இன்றுள்ள ''துலைக்கோலின் சமன்வாய்,
Pointer of a balance' கொண்ட தராசு இருந்ததற்கான சான்றுகள் இருக்கிறதா? 'தராசு' என்ற சொல் தொடர்பான சான்றானது திருமந்திரத்தில்(2918)
இருப்பதை தமிழ் லெக்சிகன் வெளிப்படுத்தியுள்ளது. அது சங்ககாலச் சான்றாகாது.
ஒரு தட்டும் நீண்ட கம்பும் கொண்ட அமைப்பில், பொருள்களை நிறுக்க, அண்மை காலம் வரை, நாகரீகம் தீண்டாத கிராமங்களில், பயன்படுத்தப்பட்டு வந்தது. அதில் 'துலைக்கோலின் சமன்வாய்,
Pointer of a balance' கிடையாது.
அடுத்து 'விரிசீர்' எதைக் குறிக்கிறது என்று ஆராய்வோம்.
'எழுத்து அசைத்து இசைக் கோடலின்' மூலமாக உருவான நேரசை மற்றும் நிரையசை சேர்ந்து பலவகைச் சீர்களை உருவாக்கும். ஒரு பாடலில்;
அவ்வாறு உருவான சீரானது, 'பாலை நிலை, பண்ணு நிலை, வண்ணக்கூறுபாடு, தாளக்கூறுபாடு' ஆகியவற்றை தன்னுள் கொண்டிருக்கும் என்பதைச் சிலப்பதிகாரம் ( அரங்கேற்று காதை 26 உரை) விளக்கியுள்ளது.
சீருக்குள் உள்ள தாளக்கூறுபாட்டுடன் தொடர்புள்ள வகையில், அந்த சீர் இடம் பெற்றுள்ள பாடலில் வரும் சீர்கள் எல்லாம், ஒன்று முதல் ஏழு வகைச் சீர்களாக விரிந்து, ஏழு வகை தூக்குகளை உருவாக்கி, அந்த பாடலுக்கான தாள இலக்கணமாகிய 'பாணி'யில் இடம் பெறும். கூடுதல் விளக்கத்திற்கு: http://musicresearchlibrary.net/omeka/items/show/2440
எனவே 'விரிசீர்த் தெரிகோல்' (புற நானூறு 6, 8)
வரும் 'சீர்' என்ற சொல்லுக்கு, 'அளவு,
Measure, quantity' என்ற பொருள் கொள்வதற்கு இடமில்லை.
அடுத்து,
'விரி சீர்த்
தெரிகோல் ஞமன்ன் போல, ஒரு திறம்
பற்றல் இலியரோ!' (புறநானூறு 6:8 -
10)
என்பதில் வரும், 'தெரிகோல்' மற்றும் 'ஞமன்' ஆகிய சொற்களின் பொருள் பற்றி ஆராய்வோம்.
பாடலில் இடம் பெறும் 'விரி சீர்' என்பதானது மனிதரின் கண்ணுக்கு தெரியாது. அது காதுக்கு மட்டுமே' தெரியும். அவ்வாறு காதால் ('ஓர்வுற்று) கேட்டு, உணரும் (ஒரு பக்கம் சாயாமல், பாரபட்சமின்றி செயல்படும்) கோல் பற்றிய சான்று வருமாறு:
'ஓர்வுற்று ஒரு திறம் ஒல்காத நேர்கோல்' (கலித்தொகை 42:
15)
அவ்வாறு ஒரு பக்கம் சாயாமல், பாரபட்சமின்றி சீரை நிறுக்குங் கோல் பற்றிய இன்னொரு சான்று வருமாறு:
'சீர் நிறைக்கோல் போல் தான் நடுவாகி' பெருங்கதை 4:44
எனவே 'விரி சீர்த்தெரிகோல்' என்பது, திருக்குறளில் வரும் 'சமன் செய்து சீர் தூக்குங் கோல்' ஆகும். கூடுதல் விளக்கத்திற்கு: http://musicresearchlibrary.net/omeka/items/show/2510
அடுத்து 'நீர்' என்ற சொல்லுக்கு,
தமிழ் லெக்சிகன், 'தமிழிசைக் கலைக்களஞ்சியம்', நா.மம்மதுவின் 'தமிழிசைப் பேரகாராதி,
உள்ளிட்டவற்றில் என்ன பொருள் உள்ளது? அதைக் கொண்டு, கீழ்வரும் பகுதிகளுக்கு விளக்கம்
பெற முடியுமா? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராயலாம்.
'திவவு மெய்ந்நிறுத்துச் செவ்வழி
பண்ணி,
குரல் புணர் நல்யாழ் முழவொடு ஒன்றி,
நுண்நீர் ஆகுளி இரட்ட’ - மதுரைக்
காஞ்சி 603 – 606
'வாரியும், வடித்தும், உந்தியும்,
உறழ்ந்தும்,
சீருடை நன்மொழி நீரொடு சிதறி' - பொருநர் ஆற்றுப்படை
23 – 24
'வார நிலத்தை கேடின்றி வளர்த்து
ஆங்கு
ஈர நிலத்தின் எழுத்து எழுத்தாக
வழுவின்றி இசைக்கும் குழலோன்'
-
சிலப்பதிகாரம்;
அரங்கேற்று காதை 67 - 69
'கோடியர் நீர்மை' - புறநானூறு 125:1
'யாப்பினுள் அட்டிய நீர்' - திருக்குறள்
1093
யாப்பிலக்கணத்தில் இடம் பெற்ற அசை மற்றும் சீரின் இசையியல் (Musicology) பரிமாணங்கள் மேலே வெளிப்பட்டுள்ளன. யாப்பிலக்கணம் தொடர்பான அசை, சீர், கிளை, 'நீர்' போன்று இன்னும் எந்தெந்த சொற்களுக்கு, இசையியல் பரிமாணங்கள் பற்றிய புரிதல் இன்றி, தமிழ் லெக்சிகனில் வெளிவந்துள்ள பொருள் சரியல்ல? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராயலாம்.
அசை, சீர், தூக்கு, கிளை, 'நீர்' உள்ளிட்டவற்றின் இசையியல் பரிமாணங்களின் பின்னணியில், தொல்காப்பியத்தில் ஏழு உயிர் நெடில் எழுத்துக்களும், ஏழு இசைச்சுரங்களுடன் பொருந்தி ஒலிக்க, மெய்யெழுத்துக்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வரையறையில் ஒலிக்கும் முறையின் (Musical Phonetics) அடிப்படையிலேயே, உலக மொழிகளுக்கான ‘இசை மொழியியல்’ (Musical Linguistics) இலக்கணமாக, தொல்காப்பியத்தின் யாப்பிலக்கணம் அமைந்துள்ளது; 'Natural Language Processing (NLP)' துறையில் புதிய வியாபார, வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில். (http://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_21.html )
அடுத்து 'ஞமன்' என்ற சொல் பற்றி ஆராய்வோம்.
'ஞமன்' என்ற சொல்லுக்கு, 'துலைக்கோலின் சமன்வாய்,
Pointer of a balance' என்ற பொருளானது எவ்வாறு சரியல்ல? என்று மேலே பார்த்தோம். 'ஞமன்' என்ற சொல் இடம் பெற்ற கீழ்வரும் சான்றுகளும் அந்த நோக்கில் முக்கியத்துவம் கொண்டவையாகும்.
'ஞெமன்ன்
தெரிகோல் அன்ன செயிர் தீர் செம்மொழி,
உலைந்த ஒக்கல், பாடுநர் செலினே.'
அகநானூறு 349:
3-5
'ஞெமன் கோல் அன்ன செம்மைத்து ஆகி,'
மதுரைக் காஞ்சி 491வாழ்ந்த மனிதரின் பாவ புண்ணியங்களை பாரபட்சமின்றி நிறுத்து, புண்ணியம் மிகுந்தவர்களை மோட்சத்திற்கும், பாவம் மிகுந்தவர்களை நரகத்திற்கும் 'ஞமன்' அனுப்பும் சிற்பத்தினை;
கம்போடியா நாட்டில் உள்ள 'ஆங்கோர் வாட்' கோவிலில் கண்டு வியந்தேன்.
புராணங்கள் என்பவை பல பரிமாணங்கள் கொண்டவை ஆகும். அதனை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
எனவே 'ஞமன்' என்ற சொல்லினை, மேலே குறிப்பிட்ட சிற்பமாக மட்டுமே புரிந்து கொள்வதும், அல்லது அவரவர் அறிவு, அனுபவங்களின் அடிப்படைகளில் கூடுதல் பரிமாணங்களை விளங்கிக் கொள்வதும், அவரவரின் விருப்பமாகும்.
நமது இயற்கையின் இயல்பினைப் புரிந்து நாம் வாழ்ந்து வருவதை சீர் தூக்கி நிறுத்து, அதன் முடிவான நல்ல, மற்றும் கெட்ட பலன்களை நாம் அனுபவிப்பது;
தொடர்பான நாமும், ஞமனும், பலன்களும் ஒன்றியே பயணிப்பது;
என்ற எனது புரிதலானது, கீழ்வரும் சான்றுகள் வெளிப்படுத்தும் உண்மைகளோடு ஒப்பிடத்தக்கதாகும்.
'அகநேர்மையுடன்' கூடிய புரிதலில் நல்ல திசையில் பயணித்து நல்ல முடிவை எட்டுவதும், 'அந்த' புத்திசாலித்தனம் இல்லாமல், 'அக சீரழிவுடன்' பிறரின் பாராட்டு, புகழகுக்கு ஏங்கி, பிறர் பொறாமைப்பட வாழும் நோக்கில், தீய திசையில் பயணித்து தீய முடிவை எட்டுவதும், அவரவர் 'இயற்கை' ஆகும். இது தொடர்பாக, 'நாத்தீகர்' என்று தவறாக சிலரால் கருதப்பட்ட ஸ்பினோசா
(https://en.wikipedia.org/wiki/Baruch_Spinoza) தமது 'எதிக்ஸ்' (ETHICS) நூலில், கீழ்வரும் கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
(https://en.wikipedia.org/wiki/Baruch_Spinoza) தமது 'எதிக்ஸ்' (ETHICS) நூலில், கீழ்வரும் கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
'கடலில் எதிரெதிர் காற்றுகளால் தூக்கி அடிக்கப்படும் அலைகளாக மனிதர்களைக் கருதினால், சுதந்திர மனிதர் அவ்வாறு அலைக்கழக்கப்படுவதில் பாதிக்கப்படாத வகையில் முயற்சித்து , கடலில் அலையாகிய தனது இடத்தினைப் புரிந்து பயணிப்பார்' (If
people are like the waves on the sea, tossed about by contrary winds, then the
free person is one who stives not to be affected by being tossed about, who
strives to understand his position as a wave on the sea.- Proposition 68 ‘Ethics’)
'தமது இயற்கையின் இயல்பினைப் பற்றிய புரிதலின்றி, கெட்ட மனிதர் மோசமான அனுபவ பலன்களை அனுபவிப்பார்; நல்ல மனிதருடன் ஒப்பீடுகையில்.'
(Lacking understanding of his
own nature, he (the evil person) will
inevitably have more bad experiences than good ones’ Page 132, Spinoza’s Ethics)
மேற்குறிப்பிட்ட கருத்தானது, கீழ்வரும் சான்றினை எனக்கு நினைவூட்டியது.
"'மின்னொடு வானம் தண் துளி தலைஇ, ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர் உயிர்
முறை வழிப்படூஉம்' என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
" புறநானூறு 192:
6 – 13
'ஆற்று நீர் வழிப்படூஉம் புணை போல்' பயணிக்கும் சுதந்திர மனிதர், ஆற்றின் ஓட்டத்தில் அலைக்கழக்கப்படுவதில் பாதிக்கப்படாத வகையில் முயற்சித்து, 'ஆர் உயிர் முறை வழிப்படூஉம்' என்பதில் 'தெளிந்த திறவோர்' ஆக, மேலிடத்திற்கு வாலாட்டாமலும், தமக்கு கீழுள்ளவர்கள் வாலாட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காமலும், செயல்
சாத்தியம் அறிந்த 'சுதந்திரர்களாகப்' பயணிப்பார்கள்.
அடுத்து,
'பரற்பெய் பள்ளிப்பாய் இன்றி வதியும்
உயவல் பெண்டிர்' புறநானூறு 246;
9 -10
என்ற சான்றில் வரும் 'பரல்' என்பதானது, 'பருக்கைக்கல்' என்று தமிழ் லெக்சிகனில வெளிவந்துள்ளது. அந்த பொருள் எவ்வாறு தவறானது? என்பதையும், இசை தொடர்பாக என் கண்ணில் பட்ட 'உயவல் யானை' மூலமாக, நான் எவ்வாறு சரியான பொருளைக் கண்டுபிடித்தேன்? என்பதையும் நான் வெளியிட்டுள்ளேன். ( http://musicresearchlibrary.net/omeka/items/show/2444
)
'பரல்' போன்று இசை தொடர்பற்ற எந்தெந்த சொற்களுக்கு, தமிழ் லெக்சிகனில் வெளிவந்துள்ள பொருள் சரியல்ல? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராயலாம்.
'இழை' தொடர்பாக, நான் முன்வைத்த சான்றுகளை சரியாக புரிந்து கொள்ளாமல், சென்னைப்பல்கழகத் தமிழ் லெக்சிகனை அடிப்படையாகக் கொண்டு, ஆய்வுக்குழாயடி சண்டைக்கு நான் உள்ளான அனுபவத்தினையும் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன்.
இளம் தமிழ்ப்புலமையாளர்கள் எல்லாம் இது போல, ஆய்வுக்குழாயடி சண்டையில் தமது ஆற்றலையும், நேரத்தையும் விரயமாக்காமல், உண்மையைக் கண்டறியும் நோக்கிலேயே அறிவுபூர்வ திசையில் விவாதங்களை முன்னெடுப்பார்கள்;
என்பதும் எனது நிகழ்கால அனுபவமாகும். அது மட்டுமல்ல, தங்களின் தமிழ்ப்புலமையின் வரைஎல்லைகள் (limitations) பற்றிய புரிதலுடன்,
பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்து, சந்தைப்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிக்கும் நோக்கில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புலமையாளர்களுடன் 'ஈகோ'(Ego)
சிக்கலின்றி கூட்டாக பல்துறை ஆய்வுகளிலும்
(interdisciplinary researches) அவர்கள் ஈடுபடும் காலமும் நெருங்கி விட்டது; என்பதும் எனது கணிப்பாகும்.
'எழால்', 'அத்தம்', 'பாணி' , 'கிளை', 'இழை' , ' விரி சீர்த் தெரிகோல் ஞமன்', ‘நீர்’, 'பரல்' போன்று இன்னும் எந்தெந்த சொற்களுக்கு, தமிழ் லெக்சிகனில் சரியான பொருள் தரப்படவில்லை? என்பதையும் ஆர்வமுள்ளவர்கள் ஆராயலாம்.
தமிழ் லெக்சிகனில் வெளிவந்துள்ள, குறிப்பாக சங்க இலக்கியங்கள் தொடர்பான சான்றுகளில், பாடல் எண்ணும், வரிகளின் எண்ணும் தவறாக இருப்பதும், எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு, உரிய திருத்தங்களையும் வெளியிடலாம்.
'தமிழ் உரைகளில் உள்ள குறைபாடுகளும், புதிய ஆய்வுகளுக்கான வெளிச்சங்களும்';
https://tamilsdirection.blogspot.com/2019/01/4.html
'தமிழ் உரைகளில் உள்ள குறைபாடுகளும், புதிய ஆய்வுகளுக்கான வெளிச்சங்களும்';
சென்னைப்பல்கலைகழகத்தில் தமிழ் பேரகராதியைத் திருத்தியும் புதுமைப்படுத்தியும் வெளிவந்துள்ள பதிப்பினை, நான் இன்னும் ஆய்வுக்கு உட்படுத்தவில்லை. ஆர்வமுள்ளவர்கள், மேலே குறிப்பிட்ட குறைபாடுகளில் எவை, எவை அந்த பதிப்பில் திருத்தப்பட்டுள்ளன? திருத்தப்படாமல் தொடர்கின்றன? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராயலாம்.
அது போன்ற ஆய்வுகளுக்கு உதவும் கணினி மென்பொருள்களும் வெளிவரத் தொடங்கியுள்ள காலம் இதுவாகும்.
ஒருவர் எழுதும் தமிழில் உள்ள இலக்கணப்பிழைகளைச் சுட்டிக் காட்டி திருத்தும் மென்பொருளும்(software),
தொல்காப்பியம் தொடங்கி, தமிழில் உள்ள இலக்கியங்களில் விரும்பும் பகுதிகளையும், அவற்றிற்கான உரைகளையும், ஆய்வு விளக்கங்களையும் சில நொடிகளில் தேடித்தரும் மென்பொருளும்
(software), தமிழில் பரவலாகப் பயன்படுத்தப்படும் காலம் அதிக தொலைவில் இல்லை. அதன் காரணமாக அத்தகைய 'புலமை'யானது இனி அவசியமற்றதாகிவிடும். உலக அளவில் தமிழ் உள்ளிட்டு கணினிமயத்திற்குள்ளான மொழிகளின் அடுத்த கட்ட புலமையானது, அந்தந்த மொழிகளின் தனித்தன்மைகளுக்கு ஏற்ற வகையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது தொடர்பான 'சிக்னல்'களும்
(signals) வெளிப்படத் தொடங்கியுள்ளன. (‘தமிழின் அடுத்த கட்ட(Next
Phase) புலமை? (1)
& (2) & (3)’; http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_8.html
& http://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-in-x-none.html
& http://tamilsdirection.blogspot.com/2017/06/next-phase-3.html
)
குறிப்பு:
1. 'தமிழிசைக் கலைக்களஞ்சியம்' ஊடகங்களில் இருட்டடிப்புக்கு உள்ளாகி, நா.மம்மது தொகுக்கத் தொடங்கியதானது, 'அதீத' ஊடக வெளிச்சத்துடன் வெளிவந்தது. அந்த 'ஊடக இருட்டடிப்பு' தொடங்கிய சமயத்தில், 2005இல், நான் மம்மதை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்த தவறினைச் சுட்டிக்காட்டினேன். தான் 'தமிழிசைக் கலைக்களஞ்சியம்' பற்றி தெரிவித்தாகவும், அதை விட்டு விட்டு ஊடகங்களில் வெளிவருவதாகவும், விளக்கம் தந்தார். உடனே ஊடகத்திற்கு திருத்த அறிக்கை அனுப்புமாறு அவரிடம் அறிவுறுத்தினேன். ஆனால் மம்மதுவின் 'தமிழைசைப் பேரகாராதி' 2010 இல் வெளிவரும் வரை, அதே தவறு தொடர்ந்தது. அதிலும் முன்பு 1992இல், 'தமிழிசைக் கலைக்களஞ்சியம்' வெளிவரத் தொடங்கிய போது, அதனைப் பாராட்டி எழுதிய தமிழ் இதழிலேயே, அதனை இருட்டடிப்பு செய்து, நா.மம்மது தான் முதன் முதலில் அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கட்டுரை வெளிவந்தது. அந்த தவறினைச் சுட்டிக்காட்டி அந்த இதழுக்கு நான் அனுப்பிய மடலும் 'அதே' இருட்டடிப்புக்கு உள்ளானது.
2. 'மர்ரே ராஜம் தொகுத்து, 'நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்' 1981இல் வெளியிட்ட 'சங்க இலக்கியங்கள்' இரண்டாம் பதிப்பானது, ஒரு நண்பனைப் போல், நான் நேசிக்கும் அளவுக்கு, எனக்கு உதவி வந்தது/வருகிறது. வையாபுரிப்பிள்ளை, பெ. நா. அப்புசாமி, மு. சண்முகம் பிள்ளை, வி.மு. சுப்பிரமணிய ஐயர், பி.ஸ்ரீ. ஆச்சார்யா, கி.வா.ஜ., தெ.பொ. மீனாட்சிசுந்தரம், ரா.பி. சேதுப்பிள்ளை முதலான மகத்தான தமிழறிஞர்களை உள்ளடக்கிய ஆசிரியர் குழு மர்ரே ராஜம் நிறுவனத்துக்கு வாய்த்தது. அதுபோன்றதொரு குழு இனியொருபோதும் வாய்க்காது’ ( (http://tamilsdirection.blogspot.com/2016/10/blog-post_16.html; மர்ரே ராஜம் வெளியீடுகளை வாங்க: 044 24352745; orders@santisadhana.org ; http://www.santisadhana.org/books.htm
1. 'தமிழிசைக் கலைக்களஞ்சியம்' ஊடகங்களில் இருட்டடிப்புக்கு உள்ளாகி, நா.மம்மது தொகுக்கத் தொடங்கியதானது, 'அதீத' ஊடக வெளிச்சத்துடன் வெளிவந்தது. அந்த 'ஊடக இருட்டடிப்பு' தொடங்கிய சமயத்தில், 2005இல், நான் மம்மதை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்த தவறினைச் சுட்டிக்காட்டினேன். தான் 'தமிழிசைக் கலைக்களஞ்சியம்' பற்றி தெரிவித்தாகவும், அதை விட்டு விட்டு ஊடகங்களில் வெளிவருவதாகவும், விளக்கம் தந்தார். உடனே ஊடகத்திற்கு திருத்த அறிக்கை அனுப்புமாறு அவரிடம் அறிவுறுத்தினேன். ஆனால் மம்மதுவின் 'தமிழைசைப் பேரகாராதி' 2010 இல் வெளிவரும் வரை, அதே தவறு தொடர்ந்தது. அதிலும் முன்பு 1992இல், 'தமிழிசைக் கலைக்களஞ்சியம்' வெளிவரத் தொடங்கிய போது, அதனைப் பாராட்டி எழுதிய தமிழ் இதழிலேயே, அதனை இருட்டடிப்பு செய்து, நா.மம்மது தான் முதன் முதலில் அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கட்டுரை வெளிவந்தது. அந்த தவறினைச் சுட்டிக்காட்டி அந்த இதழுக்கு நான் அனுப்பிய மடலும் 'அதே' இருட்டடிப்புக்கு உள்ளானது.
தமிழ்நாட்டில் இத்தகைய அறிவுபூர்வ இருட்டடிப்பு சூழலில், 'உணர்ச்சி பூர்வ 'இரைச்சலில்’
சிக்கிய 'தமிழ் இசை' ஆய்வுகள்' நீடிப்பதானது தமிழுக்கு வளர்ச்சியா, அல்லது வீழ்ச்சியா?; http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_13.html
2. 'மர்ரே ராஜம் தொகுத்து, 'நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்' 1981இல் வெளியிட்ட 'சங்க இலக்கியங்கள்' இரண்டாம் பதிப்பானது, ஒரு நண்பனைப் போல், நான் நேசிக்கும் அளவுக்கு, எனக்கு உதவி வந்தது/வருகிறது. வையாபுரிப்பிள்ளை, பெ. நா. அப்புசாமி, மு. சண்முகம் பிள்ளை, வி.மு. சுப்பிரமணிய ஐயர், பி.ஸ்ரீ. ஆச்சார்யா, கி.வா.ஜ., தெ.பொ. மீனாட்சிசுந்தரம், ரா.பி. சேதுப்பிள்ளை முதலான மகத்தான தமிழறிஞர்களை உள்ளடக்கிய ஆசிரியர் குழு மர்ரே ராஜம் நிறுவனத்துக்கு வாய்த்தது. அதுபோன்றதொரு குழு இனியொருபோதும் வாய்க்காது’ ( (http://tamilsdirection.blogspot.com/2016/10/blog-post_16.html; மர்ரே ராஜம் வெளியீடுகளை வாங்க: 044 24352745; orders@santisadhana.org ; http://www.santisadhana.org/books.htm
பாட்டும் தொகையும் நூல் தற்பொழுது எங்கு கிடைக்கும் அல்லதுpdf கிடைக்குமா
ReplyDelete