Thursday, January 17, 2019


தமிழ்நாட்டில் புலமை வீழ்ச்சியும், சமூக நோய்கள் வளர்ச்சியும் (5)


ஸ்பெயின் சமஸ்கிருதப் புலமையாளர் ஆஸ்கர் தந்த வெளிச்சமும், தொல்காப்பியம் பெறும் உலக அங்கீகாரமும்


ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சமஸ்கிருத புலமையாளர் ஆஸ்கர் புஜோல் ரியம்பவ் பேசிய கீழ்வரும் காணொளியானது;

தமிழ்நாட்டில் வளர்ந்துள்ள 'சமஸ்ருத வெறுப்பு நோயானது', எந்த அளவுக்கு தமிழின் வளர்ச்சிக்கு கேடாகி வருகிறது?

என்பதை எனக்கு உணர்த்தியது.

(Spanish scholar Oscar Pujol Riembau)

கி.பி 11 ஆம் நூற்றாண்டில், முஸ்லீம் புலமையாளர் சமஸ்கிருத நூல்களை அரபு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டதையும், அம்மொழிபெயர்ப்பானது லத்தினில் மொழிபெயர்க்கப்பட்டதன் மூலமாக, மேற்கத்திய நாடுகளில் சமஸ்கிருத மொழியின் புகழ் பரவ காரணமானதையும்;

மேலேயுள்ள காணொளி மூலமாக அறிந்து வியந்தேன்

தமிழ்நாட்டில் உணர்ச்சிபூர்வ முஸ்லீம் வெறுப்பில் பயணிப்பவர்களுக்கு, இன்னும் வியப்பாக இருக்கலாம். இந்துத்வா ஆதரவாளர்கள் மட்டுமின்றி, 'திராவிட' கட்சிகளிலும், மார்க்சிய லெனினிய மற்றும் 'முற்போக்கு' ஆதரவாளர்கள் மத்தியிலும் உணர்ச்சிபூர்வ முஸ்லீம் வெறுப்பு இருப்பதை, நான் அனுபவபூர்வமாக அறிந்து அதிர்ச்சியடைந்திருக்கிறேன்.

அதைவிட இன்னும் மோசமாக, தமிழ்நாட்டில் தன்னை 'முற்போக்கு அறிவுஜீவியாகக்' காண்பிக்க தேவைப்படும் வெளிப்பாடுகளில் ஒன்றாக 'சமஸ்கிருத எதிர்ப்பு' இருக்கிறது. ஆனால் 'அந்த' சமஸ்கிருத எதிர்ப்பாளர்களில் பெரும்பான்மையோர், குறிப்பாக வசதி உள்ளவர்கள் எல்லாம், தமது குடும்பப்பிளைகளின் அடிப்படைக்கல்வியை 'ஆங்கில வழியில்' துவக்கி, தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) மரணத்திற்கு பங்களித்து வருகிறார்கள்; தமிழில் சரளமாக எழுதவும், படிக்கவும் தெரியாத பிள்ளைகளை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்து வருகிறார்கள். அத்தகையோரின் தமிழ் விரோதப் போக்கானது, அம்பலமாகாமல் தடுக்கும் 'கேடயமாக சமஸ்கிருத எதிர்ப்பு' பயன்பட்டு வருகிறது.

‘‘தமிழ்நாட்டில் இந்து அறநிலையத் துறை கோவில்களில் பக்தர்கள் விரும்பினால், தமிழில் வழிபட ஏற்பாடுகள் செய்கிறார்கள். ஏன் அதை பெரும்பாலான தமிழர்கள் பயன்படுத்திக் கொள்வதில்லை? அவை தவிர, சைவ மடங்களும், தமிழர்களாக உள்ள தனியார் வசத்திலும் பல கோவில்கள் உள்ளன?.அங்கெல்லாம் தமிழில் வழிபடுவதைத் தடுப்பது யார்? பெரும்பாலான தமிழர்களின் மூளைகளில் 'பக்தி' தொடர்பாக, என்னென்ன கருத்துகள் ஆதிக்கம் செலுத்துகின்றன?  'தமிழில் வழிபட்டால், வேண்டியதெல்லாம் கிடைக்கும்' என்று, ஒரு புரளியை வெற்றிகரமாக கிளப்பி விட்டால், தமிழர்களெல்லாம் தமிழில் வழிபட மாட்டார்களா? அப்படி தமிழில் வழிபட்டாலும், அதற்கு தமிழ் மீது உள்ள பற்று காரணமாகுமா? அல்லது 'அதிர்ஷ்டத்தின்' மீது உள்ள பற்று காரணமாகுமா?’ (http://tamilsdirection.blogspot.com/2017/10/blog-post_15.html )

சமஸ்கிருத எதிர்ப்பாளர்கள் எல்லாம் அய்யப்பன் கோவிலில் 'மாத விடாய் பருவ' பெண்களை அனுமதிக்கும் உச்ச மன்ற தீர்ப்பை ஆதரிக்கிறார்கள்; தமிழ்நாடெங்கும் உள்ள மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோவில் அர்ச்சகர் பணிகளில் ஆண்களுக்கு அனுமதியில்லை; என்பதை எதிர்க்காமல். இது போன்ற கோரிக்கைகள் எல்லாம் மேற்கத்திய மனித உரிமை அணுகுமுறையில் எழுவதானது, நம் நாட்டிற்கு ஏன் பாதகமானது? என்ற எனது விளக்கத்திற்கு இதுவரை மறுப்பு வரவில்லை. (http://tamilsdirection.blogspot.com/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html) இனி வந்தாலும் வரவேற்பேன்.

தமிழ்நாட்டில் மேலே குறிப்பிட்ட‌ 'மனித உரிமை, சமஸ்கிருத எதிர்ப்பு' போன்றவை எல்லாம், தமிழர்களை வேரற்றவர்களாக்கும் காலனியப் 'பிரிவினை சூழ்ச்சியின்' தொடர்ச்சியே ஆகும்.

உலகின் தொன்மை மொழிகளில் நாத்தீகம் பற்றி அதிகம் உள்ள சம்ஸ்கிருத மொழியை (Amartya Sen:  'Identity and Violence; The Illusion of Destiny' Page 35), 'பிராமணர்கள், வேதங்கள்' மொழியாக மட்டுமே அடையாளப்படுத்தி, வெறுக்கும் போக்கானது, தமிழ்நாட்டில் எப்போது தொடங்கியது? என்பது ஆய்விற்குரியதாகும். சமஸ்கிருதத்தில் வேதங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல நூல்கள் வெளிவந்துள்ளன.

நாம் நமது தாய்மொழியோடு ஒட்டி, ஒழுங்காக வாழ்ந்தால், எந்த மொழியும் தமிழ் மொழியை அழிக்க முடியாது. 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' (புறநானூறு 192). எந்த மொழி மீதும் வெறுப்பின்றி, உலகில் உள்ள ஒவ்வொரு மொழியிலும் உள்ள அறிவுப்புதையல்களை அடையாளம் கண்டு, நாமும் நமது தாய்மொழியும் பலன்கள் பெறும் அளவுக்கு, நமது அறிவை வளர்த்தவாறே வாழ்வது தான் புத்திசாலித்தனமாகும். அவ்வாறு வாழ மனமின்றி, 'சமஸ்கிருத எதிர்ப்பு' என்ற பெயரில், பொதுவாழ்வு வியாபாரிகளாக வாழ்பவர்கள் எல்லாம் தமிழுக்குக் கேடானவர்களே ஆவார்கள்.

11 ஆம் நூற்றாண்டு, பின் 19 ஆம் நூற்றாண்டு, அதைத் தொடர்ந்து இந்த நூற்றாண்டிலும், சமஸ்கிருத மொழியை, உலகின் அறிவுச்செல்வமாக அடையாளம் கண்டு, இன்றுள்ள வாழ்வியல் மற்றும் தொழில்நுட்பத் தேவைகளுக்கான விடைகளைத் தரும் செல்வமாகக் கருதி பாதுகாக்கும் முயற்சிகள் வியக்கத்தக்கும் வகையில் வளர்ந்து வருகின்றன(துவக்கத்தில் குறிப்பிட்ட காணொளியில்)

பழம்பெருமையின் காரணத்தை விட, இன்றுள்ள வாழ்வியல் மற்றும் தொழில்நுட்பத் தேவைகளுக்கான விடைகளைத் தரும் செல்வமாக சமஸ்கிருத மொழி, குறிப்பாக அதன் இலக்கண நூலான 'அஷ்டதாயி', நிரூபணமாகி வருவதன் காரணமாகவே, உலக அளவில் சமஸ்கிருத மொழியின் புகழானது வளர்ந்து வருகிறது;

என்று மேலே குறிப்பிட்ட காணோளியில் வெளிப்பட்டுள்ள தகவல் உண்மையா? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராயலாம்.

அந்த வெளிச்சத்தில், 'லெமூரியா', 'தமிழ் மன்னன் கட்டிய கோவில் ஆங்கோர் வாட்' என்பது போன்ற தவறான அறிவுபூர்வ அடிப்படையற்ற 'வறட்டு' பெருமைகளை, மீடியா வெளிச்சத்தில் முன்னிறுத்தி வருவதால்;

செல்டன் பொல்லாக் போன்று உலகில் இன்று செல்வாக்குடன் வலம் வரும் புலமையாளர்கள் எல்லாம், தமிழ்ப்புலமையை எள்ளி நகையாடி, சமஸ்கிருத மொழியின் துணையுடன் தான், மணிப்பிரவாள காலத்தில், தமிழில் இலக்கியங்களேதோன்றின;

என்று எழுதி வருகின்றனர்.

இவ்வாறு தமிழ்ப்புலமையானது கேலிக்குள்ளகி வரும் போக்கின் காரணமாகவே, எனது ஆய்வுகள் மூலமாக தமிழ் பெற வேண்டிய வளர்ச்சியும், புகழும் தாமதமாகி வருகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் செயல்படும் இருக்கைகளின் செயல்பாடுகளில், சமஸ்கிருதத்திற்குக் கேடான முயற்சிகளைக் கண்காணித்து, துணிச்சலுடன் சமஸ்கிருத புலமையாளர்கள் எதிர்த்து வருகிறார்கள்.  அது போல, வெளிநாடுகளில் உள்ள தமிழ் இருக்கைகளையும் கண்காணிக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும், நான் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (https://tamilsdirection.blogspot.com/2019/01/blog-post.html )

‘‘உலகில் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் 'மொழியியல'(Linguistics) சமஸ்கிருத இலக்கண நூலான 'அஷ்டதாயி'(Aṣṭādhyāyī of Pāṇini) அடிப்படையில் உருவானது தெரியாமல் (‘By teaching phonetics and grammar to the West, Sanskrit gave rise to modern linguistics’; http://www.indiapost.com/flipbook/epaper31-08-2018/31_AUG_2018/index.html#book/25  );

சமஸ்கிருதத்தினை 'செத்த மொழி' என்று அறிவித்து, தமிழைச் 'சாகும் மொழியாக 'வரலாற்றின் சுயநினைவற்ற கருவியாக' பங்களித்தும்(?);

வருபவர்களின் கண்களைத் திறக்கும் வகையிலும்;

சமஸ்கிருதத்தின் துணையுடன் உலக 'மொழியியல்' (Linguistics) துறையில், தொல்காப்பியத்தில் எனது கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் 'இசை மொழியியல்' (Musical Linguistics) என்ற புதிய துறை உருவாகும் நோக்கில், அதற்கான ஆய்வுத்திட்டத்தினையும் தொடங்கியுள்ளேன்.’ (http://tamilsdirection.blogspot.com/2018/09/2-musical-linguistics-nlp-earlybirds.html )

உலகில் உள்ள புலமையாளர்களை எல்லாம் எந்த அளவுக்கு சமஸ்கிருதம் ஈர்த்துள்ளது? என்பதைக் கீழ்வரும் கட்டுரை விளக்கியுள்ளது.

உலக மொழியியலில் 'ஒலிப்பியல்'(Phonetics) என்பதானது சமஸ்கிருதத்தில் உள்ள பாணினியின் 'அஷ்டதாயி' இலக்கண நூலை அடிப்படையாகக் கொண்டது என்பதைத் துவக்கத்தில் குறிப்பிட்ட காணொளி மூலம் அறியலாம்.

உலக மொழியியலில் 'இசை ஒலிப்பியல்' (Musical Phonetics) என்பதற்கானஅடிப்படையாக  தொல்காப்பியம் இருப்பதை எனது ஆய்வுகள் மூலமாகக் கண்டுபிடித்து வெளிப்படுத்தியுள்ளேன்.

'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' தொடர்பான எனது ஆய்வானது ‘Musical Phonetics in tholkAppiam’ என்ற தலைப்பில் சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன ஆய்வு இதழில் (2014) வெளிவந்துள்ளது. (Published in the issue -2014- of the Journal of the International Institute of Tamil Studies, Chennai ; http://www.ulakaththamizh.org/JOTSArticle.aspx?id=677 )

மேலே குறிப்பிட்டுள்ள ஆய்வுக்கட்டுரையின் அடிப்படையில், ‘Non-semantic and music related rules for poems, in ancient Tamil grammar tholkAppiamஎன்ற தலைப்பில் நான் அனுப்பிய கட்டுரை தொடர்பாக;

மொழியியல் துறையில் உலக அளவில் புகழ்பெற்ற நோவாம் சாம்ஸ்கியும், இந்தியாவில் NLP (Natural Language Processing)  துறையில் புகழ் பெற்ற விஞ்ஞானி ராஜிவ் சங்காலும் எனக்கு அனுப்பிய கருத்துக்கள் கீழே:

Prof.Noam Chomsky, the leading icon in the modern linguistics (Noam Chomsky; https://en.wikipedia.org/wiki/Noam_Chomsky), after reading the salient features of my discovery ‘The Musical Phonetics in Tholkappiam’; published in the journal from the International Institute of Tamil Studies’, Chennai in 2013.; http://www.ulakaththamizh.org/JOTSArticle.aspx?id=677 , commented;

Very intriguing.  I hope all of this can become part of an emerging discipline of ‘musical  linguistics’ “ - Prof.Noam Chomsky

Very interesting. And happy to know that you are working on it.''
  - Dr. Rajeev Sangal, FNAE
 Professor (Area: Computer Sc & Engg), Language Technologies Research Center, IIIT Hyderabad

மேலே குறிப்பிட்ட உலக அளவில் புகழ் பெற்ற புலமையாளர்களின் அங்கீகாரத்துடன் உலக மொழியியலில் (Linguistics) சமஸ்கிருதத்தில் உள்ள உள்ள பாணினியின் 'அஷ்டதாயி' தனித்துவமான சிறப்பிடம் பெற்றுள்ளது.

எனவே உலக அளவில் 'இசை மொழியியலில்' (Musical Linguistics) தமிழில் உள்ள தொல்காப்பியமானது, எனது ஆய்வுகள் மூலமாக, அந்த புலமையாளர்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே புலமை வீழ்ச்சியில் தமிழ்நாடு சிக்கியுள்ளதையும், இளம் புலமையார்கள் மூலமாக, தமிழ்நாடு மீள வாய்ப்பிருப்பதையும், ஏற்கனவே விளக்கியுள்ளேன்

சமஸ்கிருதத்தின் துணையுடன் தொல்காப்பியம் தொடர்பான 'இசை மொழியியல்' ஆய்வு உலகின் கவனத்தை ஈர்த்து வரும் போக்கில்;

தமிழில் இளம் புலமையாளர்கள் எல்லாம் அதில் பங்கேற்று பலன் பெறுவது வளரும் போக்கில்;

'சமஸ்கிருத எதிர்ப்பு' நோயில் சிக்கியவர்கள் எல்லாம்  உலக புலமையாளர்களின் பார்வையில் 'கேலிக்கிடமாகும்' வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.

எனவே இதுவரை அந்த 'உணர்ச்சிபூர்வ சமஸ்கிருத எதிர்ப்பு' நோயில் இருந்து விடுபடாதவர்கள், இனியாவது விழித்துக் கொள்வது அவர்களுக்கும் நல்லது; தமிழின் வளர்ச்சிக்கான தடைகள் அதன் மூலமாக நீங்குவதும் மிக நல்லது

இன்றுள்ள வாழ்வியல் மற்றும் தொழில்நுட்பத் தேவைகளுக்கான விடைகளைத் தரும் செல்வமாக சமஸ்கிருதத்தினைக் கருதி பாதுகாக்கும் முயற்சிகள் உலகில் வளர்ந்து வருகின்றன. (துவக்கத்தில் குறிப்பிட்ட காணொளியில்)

அது போலவே, இன்றுள்ள வாழ்வியல் மற்றும் தொழில்நுட்பத் தேவைகளுக்கான விடைகளைத் தரும் செல்வமாக தமிழ் இருப்பதானது, ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டு வருவதானது

இளம் தமிழர்களின் பார்வைக்கு வந்து, சமஸ்கிருதத்தைப் போலவே, உலகில் அறிவுபூர்வ திசையில் தமிழைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கான காலமும் கனிந்து வருகிறது.  

No comments:

Post a Comment