Tuesday, February 13, 2018

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் 'தமிழ் இருக்கை' (Tamil Chair) (4);


எவ்வளவு புத்திசாலிதனத்துடன் சீன மொழி இருக்கை’ உருவாகியுள்ளது?


எவ்வளவு முட்டாள்த்தனமாகவும், ஏமாளித்தனமாகவும் தமிழ் இருக்கை’ உருவாகப் போகிறது?


‘உலகில் ஜப்பான், கொரியா, சீனா போன்ற நாடுகள் எல்லாம் தத்தம் மொழிகளுக்காக அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் 'இருக்கை' (Chair) ஏற்படுத்துவதற்கு முன்பாக, என்னென்ன முன்னேற்பாடுகளில் ஈடுபட்டார்கள்? அதன் அடிப்படையில் உருவாகும் 'இருக்கை'யானது, உண்மையாகவே தமது மொழியின் நலனுக்கு பயன்படுவதை எப்படி உறுதி செய்தார்கள்? ஹார்வார்ட் தமிழ் இருக்கையானது, அது போன்ற முயற்சிகள் இன்றி, தமிழுக்கான நலனை உறுதிப்படுத்தாமல் மேற்கொள்ளப்படுகிறதா? அந்த தமிழ் இருக்கையானது, உண்மையில் தமிழுக்கு நலன் பயப்பதாகுமா? கேடாக வாய்ப்பிருக்கிறதா?’ (http://tamilsdirection.blogspot.in/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_15.html     )

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு மொழிக்கான இருக்கை ஏற்படுத்தும்போது;

எவ்வளவு புத்திசாலிதனத்துடன் அந்த மொழியின் நலன்களுக்காகவும் வளர்ச்சிக்காகவும் ஏற்படுத்தமுடியும்; என்பதற்குசீன மொழி இருக்கை’ உருவாகியுள்ளதா?

எவ்வளவு முட்டாள்த்தனமாகவும், ஏமாளித்தனமாகவும் ஏற்படுத்த முடியும் என்பதற்குதமிழ் இருக்கை’ உருவாகப் போகிறதா?

என்ற ஐயங்கள் தொடர்பான விளக்கத்திற்கு, கீழ்வரும் காணொளி- முனைவர்.சிவா அய்யாதுரை, ஈமெயிலை கண்டுபிடித்த தமிழரின் பேட்டி:
 
உலக பல்கலைக்கழகங்களிலேயே பங்கு வர்த்தகம், சொத்து தொடர்புள்ள ' எட்ஜ் நிதி' (Hedge Fund)  வருமானத்தில் ( https://www.investopedia.com/terms/h/hedgefund.asp ) கூடுதல் கவனம் செலுத்தி வரும் ஹார்வார்ட் பல்கலைக்கழகமானது;

அதன் மூலம் கடும் நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. ( https://www.bloomberg.com/news/articles/2017-06-06/harvard-man-mindich-loses-out-in-endowment-hedge-fund-overhaul )

உலக பல்கலைக்கழகங்களிலேயே சந்தைப்படுத்துதலுக்கு (Brand Marketing) நம்ப முடியாத அளவுக்கு அதிக பணம் செலவு செய்வது ஹர்வார்ட் பல்கலைக்கழகமானால்;

அங்கு 'தமிழ் இருக்கை'க்கான நிதித்திரட்டலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மேலே குறிப்பிட்ட 'சாதனையாளர்களான' தமிழர்கள் வெளிப்படுத்தியுள்ள அபாய எச்சரிக்கைகளை இருட்டடிப்புக்கு உள்ளாக்கும் ஊடகங்கள் எல்லாம், மேலே குறிப்பிட்ட சந்தைப்படுத்தலில் விலை போன ஊடகங்களா? அந்த அபாய எச்சரிக்கைகள் காரணமாக, 'ஹார்வார்ட் தமிழ் இருக்கை'க்கு நிதி உதவி செய்தவர்களில், தமது பணத்தை திருப்பித்தருமாறு கோரும் போக்கும் தொடங்கி விட்டதா? 'ஹார்வார்ட் தமிழ் இருக்கை' நிதி திரட்ட தொடங்கிய Co-Founder  டாக்டர்.ஜானகிராமன், மேற்குறிப்பிட்ட அபாய எச்சரிக்கைக்குப் பின், தமது நிதியையும் நிறுத்தி, நிதி திரட்டுவதையும் நிறுத்தி விட்டார். (https://www.pgurus.com/harvard-tamil-chair-is-biggest-scam-e-mail-founder-ayyadurai/ )


மேலே குறிப்பிட்ட தகவலை மறுத்து வந்துள்ள விளக்கத்தில், 'சீன மொழி இருக்கை'க்கு ஏற்படுத்தியுள்ள நிபந்தனைகளைப் போலவே, 'தமிழ் இருக்கை'க்கும் அதே நிபந்தனைகள் இருக்குமா? என்ற விபரம் இல்லை. (https://www.thenewsminute.com/article/harvard-tamil-chair-scam-indian-american-scientist-s-post-sparks-controversy-74657 )



ஹார்வார்டில் செயல்படும் 'சீன இருக்கை'யின் 'புரிந்துணர்வு ஒப்பந்த' (Memorandum of Understanding) நகலையும், 'தமிழ் இருக்கை'க்கு உருவாக்கியுள்ள ஒப்பந்த நகலையும், 'தமிழ் இருக்கை நிதி சேர்ப்பு' இணையதளத்தில் வெளியிடுவதில் என்ன சிக்கல் இருக்கிறது?

'தமிழ் இருக்கை'க்கு நிதி வழங்கியுள்ள தமிழக அரசும், தி.மு.கவும், முக்கிய நபர்களும், இனிமேலாவது விழித்து, ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் 'சீன மொழி இருக்கை'க்கு ஏற்படுத்தியுள்ள நிபந்தனைகளைப் போலவே,’ 'தமிழ் இருக்கை'க்கும் அதே நிபந்தனைகளுக்கு ஹர்வார்ட் பல்கலைக் கழகம் சம்மதிக்க வேண்டும்’, என்று வலியுறுத்துவார்களா? அவ்வாறு வலியுறுத்துமாறு தமிழ்நாட்டின் 'பிரபல' எழுத்தாளர்கள் எல்லாம் கோரிக்கை வைப்பார்களா?

இல்லையென்றால், அந்த நிதியை திருப்பி, இந்தியாவில் உள்ள ..டி ஒன்றில் 'தமிழ் இருக்கை' ஏற்படுத்துதல் போன்ற மாற்று திட்டங்களை பரிசீலிப்பார்களா?

அவ்வாறு அவர்கள் மாற்றுத் திட்டங்களை பரிசீலித்தால், அதில் எனது பங்களிப்புக்கும் வாய்ப்பு ஏற்படலாம்.

எனது 'தமிழிசையின் இயற்பியல்' (Physics of Tamil Music) முனைவர் பட்டம் முடியும் தருணத்தில் சந்தித்த, அன்றைய தமிழ்ப்பல்கலைக்கழக இசைத்துறை தலைவரின் கணவர் ( அமெரிக்காவில் பணியாற்றுபவர்) எனது ஆய்வின் முக்கியத்துவம் அறிந்து, 'இந்தியாவை விட, அமெரிக்காவில் எனது ஆய்வுகளுக்கு அதிக வரவேற்பும், ஊக்குவித்தலும்' இருக்கும் என்று தெரிவித்தார்.

சிங்கப்பூர்,மலேசியா, தாய்லாந்த்(பாங்காக்), ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு போனாலும் போவேனே தவிர, ஹார்வார்ட் உள்ளிட்டு மேற்கத்திய பல்கலைக்கழகங்களுக்கு போவதில்லை;
என்பதே எனது முடிவாகும். அங்கு பணியாற்றுவதன் மூலம் 'இயற்கையின் சாபத்திற்கு' உள்ளாக நேரிடும் என்ற எனது அறிவு, அனுபவம், உள்ளுணர்வு விடுத்துள்ள எச்சரிக்கையின் காரணமாகவும்; கீழ்வரும் 'வாழ்வியல் சூத்திரமானது' , எனது தொடர் ஆய்வுக்கு உள்ளாகி, அந்த போக்கில் 'திறவோர்' ஆக வாழ்ந்து வருவதாலும்.


"'மின்னொடு வானம் தண் துளி தலைஇ, ஆனாது

 கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று

 நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர் உயிர்

 முறை வழிப்படூஉம்' என்பது திறவோர்

 காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்

 பெரியோரை வியத்தலும் இலமே;

 சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. " புறநானூறு 192: 6 – 13


'மாட்சி' என்பது புகழைக் குறிக்கும். 'சந்தைப்படுத்தல்' (Marketing) நோயில் சிக்கியுள்ள இன்றைய உலகில், 'புகழ்' வெளிச்சத்தில் உள்ளவர்களிடம் கூடுதல் எச்சரிக்கையுடன் வாழ்வதன் மூலம், முட்டாளாகவும், ஏமாளியாகவும் வாழ்வதைத் தவிர்க்க முடியும். திருக்குறள் (1134) 'புணை' என்ற சொல்லை 'நல்லாண்மை' என்பதுடன் தொடர்பு படுத்தியுள்ளது. 

'வாழ்க்கை' நீரோட்டத்தில் 'நல்லாண்மை'யுடன், 'புகழுக்கு ஏங்காமல்', 'சமூக ஒப்பீடு நோயில்' (Social Comparison Infection) சிக்காமல், 'திறவோர்' ஆக, 'உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன்' (Passions) பயணிக்கும்போது, நமக்கும், சமூகத்திற்கும், இயற்கைக்கும் இடையிலான உறவுகளின் 'செயல்முறை நுணுக்கம்' (Processing) ஆக்கபூர்வமாக மாறி, நம்ப முடியாத புதிய கண்டுபிடிப்புகளுக்கு (அந்தந்த கண்டுபிடிப்புகளுக்கான 'இயற்கையின் கதவுகள் திறந்து')  இட்டுச் செல்லும் என்பதும் எனது அனுபவமாகும்.

உலகில் எனது அளவுக்கு பழந்தமிழ் இலக்கியங்களில் பல்துறை ஆய்வு (Inter-disciplinary Research)  மேற்கொண்ட நபர் வேறு எவரும் இல்லை, என்பதையும் ( http://drvee.in/ ) ;

தமிழ் மொழியில் உள்ள 'புதிய கண்டுபிடிப்புகளின்' பலன்களை 'புரிந்து ஊக்குவித்து, சமூகத்திற்கு பயன்பட‌வைக்கும் அறிவும் ஆர்வமும்’  இல்லாத, பேராசிரியர்களும், துணை வேந்தர்களும் காலில் விழுவதை ஊக்குவித்த, தலைவர்களின் ஆதிக்கத்தில்  தமிழ்நாடு சிக்கியிருக்கும் வரை, அந்த கண்டுபிடிப்புகள் எல்லாம் 'இருட்டிலேயே உறங்க வேண்டும்' என்பதும், 'இயற்கையின் விதியே' என்பதையும்;  

தமிழ்நாட்டில் இருந்ததாலேயே, அதன் பலன்கள் கனிந்து, தமிழின் வளர்ச்சிக்கு உதவுவது பல வருடங்கள் தாமதமாகி விட்டது, என்பதையும் நானறிவேன்.(http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_13.html ) 


தமிழ் இலக்கியங்களையெல்லாம் தமிழருக்கு கேடென்று ஒதுக்கிய, உலகில் வேறேங்கும் வெளிப்படாத 'குருட்டு பகுத்தறிவானது', மேலே குறிப்பிட்ட தலைவர்களின் 'ஊழல் பாதுகாப்பு கவசமாகவும்' செயல்பட்டதானது முடிவுக்கு வந்து, புலமை வீழ்ச்சியிலிருந்து தமிழ்நாடு மீளும் கட்டம் தொடங்கி, இப்போது தமிழ்நாடானது ஒரு திருப்புமுனைக் கட்டத்தில் இருப்பதாக கருதுகிறேன்.

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் 'சீன மொழி இருக்கை'யைப் போல, 'தமிழ் இருக்கை' அமைய வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து, அதற்காக திரட்டிய நிதியை, இந்தியாவில் ஐ.ஐ.டி (IIT) போன்ற தரமிக்க உயர்க்கல்வி நிறுவனங்களில், அல்லது சிங்கப்பூரில் உள்ள NUS/NTU பல்கலைக்கழகங்களில் 'தமிழ் இருக்கை' ஏற்படுத்தி, என்னை அழைத்தால், அங்கு கீழ்வரும் திட்டங்களை உடனே துவங்க முடியும்.

1. தொல்காப்பியம் அடிப்படையில் 'இசை மொழியியல்' (Musical Linguistics)  ஆய்வுத் திட்டம்

தொல்காப்பியத்தில் நான் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் அடிப்படையில் உலகில் உள்ள பல்கலைக்கழகங்களில் எல்லாம் 'இசை மொழியியல்' என்ற புதிய துறை உருவாவதும், அதன் மூலம் உலக அளவில் தொல்காப்பியம் நோக்கி, ஒரு ஆய்வு படையெடுப்பு தொடங்குவதும் இன்னும் எத்தனை வருடங்கள் தாமதமாக வேண்டும்? (http://tamilsdirection.blogspot.in/2016/08/linguistics-musical-linguistics.html )

2. ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளிவந்துள்ள பழந்தமிழ் இலக்கியங்களுக்கு, ஒரு திருத்த பின்னணிப்பு (Appendix) திட்டம்: 

 பழந்தமிழ் இலக்கியங்களில் 'இசையியல்' (Musicology) தொடர்பான சொற்களில் பலவற்றிற்கு, உரைகளும், அகராதிகளும் சரியான பொருள் தரவில்லை; ('DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION'; https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264)

என்பது பற்றிய எனது ஆய்வுகள் சரி என்றால்;

ஜார்ஜ் ஹார்ட் உள்ளிட்டோர் மொழிபெயர்த்து, ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் வெளிவந்துள்ள பழந்தமிழ் இலக்கியங்களுக்கு, ஒரு திருத்த பின்னணிப்பு (Appendix)  சேர்க்கப்படவில்லையென்றால்;
அந்த மொழிபெயர்ப்புகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் எல்லாம், பிழையான திசையில் பயணிக்க நேரிடாதா?


3.  யாப்பிலக்கணம் கற்பித்தலில் 'இசை'யை 'ஒலி' என கருதி கற்பித்தலில் உள்ள‌ குறைபாடுகளை களையும் திட்டம்:

தொல்காப்பியத்தில் வரும் 'இசை' (Music) என்ற சொல்லை, தவறாக 'ஒலி' (Sound) என நினைத்து, இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் விளங்காமல் உரையாசிரியர்கள் கொடுத்த விளக்கத்தின் அடிப்படையில் கற்பிக்கப்படும் தவறுகள் எல்லாம்;
எனது ' தமிழிசையின் இயற்பியல் ' (Physics of Tamil Music)  ஆய்வின் மூலம் வெளிவந்து;

பேராசிரியர்கள் ஜெயதேவன், வி.டி. அரசு, பொற்கோ, .இராசேந்திரன் உள்ளிட்ட இன்னும் பல, 'திராவிட'  கட்சிகளின் ஆட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்த, தமிழறிஞர்களின் பார்வைக்கு வந்தும், அவர்கள் எல்லாம் என்னை தனிப்பட்ட முறையில் பாராட்டிய பின்னரும்;

தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களிலும், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட இன்னும் பல நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களிலும், கடந்தசுமார் 20 வருடங்களாக தமிழில் இளங்கலை/முதுகலை மாணவர்கள் எல்லாம், யாப்பிலக்கணத்தை தவறாக பயின்று வரும் போக்கானது முடிவுக்கு வர வேண்டாமா?



4.  சிலப்பதிகாரம் அடிப்படையில் உலக தாள இலக்கணம் உருவாக்கல் திட்டம்:

உலகில் எந்த மொழியிலும் இசைக்கப்படும் பாடலுக்கு ஏற்றவாறு, உலகில் உள்ள எல்லா தாள இசைக்கருவிகளை எவ்வாறு பொருத்தமாக இசைப்பது? என்பதற்கான தாள இலக்கணத்தை பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்து கண்டுபிடித்ததானது; (Percussion Grammar for all world percussion instruments; discovered from the ancient Tamil texts; published in the International Conference on Arts & Humanities, HawaII, USA, Jan, 2006)



உலக தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் எல்லாம், சந்தைப்படுத்தக் கூடிய தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்காக, தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் நூல்களை நோக்கி, ஆய்வுப் படையெடுப்பு தொடங்குவதும், உலகில் உள்ள பல்கலைக்கழகங்களின் இசைத் துறைகளின் கவனத்தை ஈர்ப்பதும், இன்னும் எத்தனை வருடங்கள் தாமதமாவது?

எனது தேவைகளுக்கு போதுமான வசதி வாய்ப்புகளுடன் எனது உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் (Passions)  வாழ்வதாலும், இழப்பு எனக்கில்லை. 'புகழ்' நோயில் என்னை மீறியும் சிக்கும் ஆபத்தும் இல்லை

தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் அந்த இழப்பானது இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கிறது? என்பதை எனக்குள் விழிப்புடன் உள்ள ( ஆடம்ஸ் ஸ்மித் Adams Smith  'The Theory of Moral Sentiments' என்ற நூலில் குறிப்பிடும்) மூன்றாம் மனிதர் மூலம், அதையும் ஆய்வு நோக்கில், கண்காணித்து வருகிறேன்;

நிகழ்காலத்தில், உலகில் சமஸ்கிருதம் உள்ளிட்டு வேறு எந்த தொன்மை மொழி தொடர்பான கண்டுபிடிப்புகளுக்கும், இது போன்ற அவலம் நேர்ந்துள்ளதா? 

குறிப்பு: 'இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், உலகில் எந்த நாட்டிலும் வெளிப்படாத, ஏமாளித்தனமான தாராளம் தமிழ்நாட்டில்?';  https://tamilsdirection.blogspot.com/2020/05/blog-post_8.html 

No comments:

Post a Comment