Sunday, February 4, 2018


'இந்துத்வா எதிர்ப்பு'  தமிழ்நாட்டில்  'சமூக சோளக்கொல்லை பொம்மை'?


                                 தப்பிக்குமா தமிழத்துவா?



'சரக்கு இருந்தால் அவிழ்த்து விடு; இல்லே, சலாம் போட்டு ஓடி விடு'


மேற்கத்திய சுயநலன்களுக்காக ஹார்வார்ட் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் சமஸ்கிருத ஆராய்ச்சித் திட்டங்களையும், மேற்கத்திய புலமையாளர்களின் மேற்போக்கான புகழ்ச்சியில் மயங்காமல், சமஸ்கிருத நலன்களுக்கு எதிரான‌ அவர்களின் வாதங்களையும், அறிவுபூர்வமாக எதிர்க்க ராஜிவ் மல்கோத்ரா உள்ளிட்டு பலர் இன்று களத்தில் உள்ளனர்.

அது போல, தமிழின் புலமையையும், ஆராய்ச்சியையும் மேற்கத்திய சுயநலன்களுக்கு அடகு வைக்கும் போக்கினை எதிர்த்து நான் ஒருவன் மட்டுமே களத்தில் இருக்கிறேன்; வேறு எவராவது இருந்தால் தெரிவிக்கவும். ' ஈகோ' (Ego) சிக்கலின்றி அத்தகையோருடன் கூட்டு சேர்ந்து பயணிக்கவும் நான் விரும்புகிறேன். (http://tamilsdirection.blogspot.in/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_15.html )



அது மட்டுமல்ல, 'இசை மொழியியல்' (Musical Linguistics) என்ற புதிய துறையை உலகிற்கு அறிமுகப்படுத்தவல்ல மற்றும் புதிய தொழில் வியாபார வேலை வாய்ப்புகளை உருவாக்க வல்ல பல்துறை (inter-disciplinary) ஆய்வு முடிவுகளும், அடுத்த கட்ட புலமை நோக்கி தமிழை வளர்க்க வேண்டிய முயற்சிகளும், தமிழைத் தவிர‌ சமஸ்கிருதம் உள்ளிட்டு வேறு எந்த மொழியிலும் வெளிப்பட்டிருந்தாலும், சுமார் 20 வருடங்களுக்கும் மேலான கால தாமதத்திற்கு உள்ளாகியிருக்காது.  (http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_8.html ; & http://tamilsdirection.blogspot.in/2016/11/normal-0-false-false-false-en-in-x-none.html  )

தமிழ்நாட்டில் 'இந்துத்வா எதிர்ப்பு அறிவு ஜீவிகள் எல்லாம் தமக்குள்ள வெவ்வேறு வகையிலான பலகீனம் காரணமாக, மேலே குறிப்பிட்ட 'அடகு வைக்கும் போக்கினை' ஆதரித்து செயல்படுகிறார்களோ? என்ற ஐயமும் எனக்குண்டு.

உதாரணமாக செல்டன் பொல்லாக் ஆராய்ச்சி என்ற பேரில் தமிழை இழிவுபடுத்தியதை, அவரின் நூலைப் படித்த, ஒரு காலத்தில் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்த, பேரா.அ.மார்க்ஸ்  இதுவரை கண்டித்தாரா? இல்லையென்றால் இனிமேலாவது கண்டிப்பாரா? அதுவும் இல்லையென்றால், இந்துத்வா எதிர்ப்பாளரான செல்டன் பொல்லாக் தமிழை இழிவுபடுத்தினாலும் பரவாயில்லை, என்று கருதுகிறரா? தமிழில் 'திராவிடர்' என்ற சொல்லை, ' இனம்' (Race) என்ற பொருளில் பயன்படுத்த வேண்டாம்;

என்று தம்மிடம் நெருக்கமாக உள்ள ' பெரியார்' கட்சிகளின் தலைவர்களுக்கு அறிவுறுத்துவாரா?

இந்துத்வா எதிர்ப்பு அறிவுஜீவிகள் ஆதரித்து வந்துள்ள‌ தி.மு.க ஆனாலும் சரி, சுப்பிரமணிய சுவாமியின் ஆதரவில் பயணிக்கும் சசிகலா‍- தினகரன் அணியானாலும் சரி, சசிகலாவை தரிசித்து ஆதரித்த கம்யூனிஸ்டுகள் ஆனாலும் சரி;

சுப்பிரமணிய சுவாமியின் 'பொர்க்கி தமிழர்' வெளிப்பாட்டை கண்டிக்கும் துணிச்சல் எவருக்காவது இருந்ததா? 'மடியில் கனமில்லாதவர்கள்' மட்டுமே சுப்பிரமணிய சுவாமியை பகிரங்கமாக கண்டிக்க முடியும்; 

'பொர்க்கி' தமிழர் தொடர்பாக சுப்பிரமணிய சுவாமி முன்வைத்த கீழ்வரும் வரையறையின் அடிப்படையில், அறிவுபூர்வமாக அவருடன் விவாதிக்க முடியும். 

எனவே அத்தகைய துணிச்சலற்றவர்களை ஆதரித்து பயணிக்கும்,  தமிழ்நாட்டின் இந்துத்வா எதிர்ப்பு அறிவுஜீவிகள் எல்லாம், 'அலங்கார சமூக சோளக்கொல்லை பொம்மைகளா? என்ற கேள்வியை எழுப்புவது தவறாகுமா?

‘‘'பெரியார்' ஈ.வெ.ராவிற்குப் பின், நானறிந்த வரையில், தமிழில் 'அநாகரீகம்' என்ற அடையாளத்தில் உள்ள சொற்களை பயன்படுத்திய, 'ஊழல்' குற்றச்சாட்டிற்கு உள்ளாகாத தலைவர் சுப்பிரமணியசுவாமி ஆவார். இருவருமே தாம் பயன்படுத்திய அந்த சொற்களுக்கு, அறிவுபூர்வமான விளக்கமும் தந்துள்ளனர். உதாரணமாக, தான் பயன்படுத்திய ''பொர்க்கி' (porki) என்ற சொல்லானது, 'ஆபாசமாக, வன்முறை தொனியில், அச்சுறுத்தும் வகையில், பேசி விட்டு, எதிர்ப்பைக் கண்டு, ஓடி ஒளிபவர்' (One of the ways to recognise a porki is if his or her language is vulgar hard porn, threatens violence but runs away on retaliation )  என்று சுப்பிரமணியசுவாமி தமது 'டுவிட்டரில்' தெரிவித்துள்ளார். சுப்பிரமணியசுவாமியை 'வீரமாக' எதிர்த்து பேசி விட்டு, பின் சுப்பிரமணியசுவாமியின் எதிர்ப்பைக் கண்டு, ஓடி ஒளிந்த 'திராவிட'  கட்சி தலைவர்கள் யார்? யார்? என்ற ஆராய்ச்சியை, சுப்பிரமணியசுவாமியின் ''பொர்க்கி' (porki) தொடர்பாக, அவரைக் கண்டித்து வருபவர்கள் ஆராயத் தொடங்கினால், ''பொர்க்கி' (porki) விவாதமும், ஆக்கபூர்வ திசையில் பயணிக்கக் கூடும்.  'பெரியார்' ஈ.வெ.ரா வையும், சுப்பிரமணிய சுவாமியையும், அவர்களின் எதிர்ப்பாளர்கள் எல்லாம் இணையத்தில்,  'உண‌ர்ச்சிபூர்வமாக'  இழிவுபடுத்தும் போக்கில் ஒன்றுபட்டுள்ளார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.’ (http://tamilsdirection.blogspot.in/2017/02/porki.html )

'பொர்க்கி தமிழர்' ஆதிக்கத்தில் உள்ள தமிழ்நாடு திருந்தும் வரை காத்திராமல்;

தமிழ்நாடு எக்கேடு கெட்டாலும் சரி, இந்தியாவின் நலன்களை பாதுகாக்க, 'இந்துத்வா எதிர்ப்பையும்' அடிவருடியாக கொண்ட, ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ள கட்சியின் மூலமாக‌, தமிழ்நாட்டின் அரசானது தமது எடுபிடியாக இருக்குமாறு பார்த்துக் கொள்வதே சரி;

என்ற திசையில், ராஜாஜியைப் போலவே, சுப்பிரமணிய சுவாமி பயணிக்கிறார் என்பது எனது கருத்தாகும். ஆனால் தி.மு.கவிடம் ராஜாஜி தோற்றது போல, சுப்பிரமணிய சுவாமி தோற்க மாட்டார் என்பதும்;

'பொர்க்கி' நோயிலிருந்து தமிழ்நாடு விடுதலை பெற தடையாக இருக்க மாட்டார் என்பதும்;

எனது கணிப்பாகும்.

இந்த காலத்தில் எந்த மனிதரையும் 'இந்துத்வா ஆதரவு' அல்லது 'இந்துத்வா எதிர்ப்பு' என்ற ‘சமூக கறுப்பு வெள்ளை குருட்டு நோயில்’ (Social Colour Blindness)  அணுகுவதானது அறிவுபூர்வமாகாது. (http://tamilsdirection.blogspot.in/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html ) 
துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, அமெரிக்காவில் வாழும் ராஜிவ் மல்கோத்ரா போன்றவர்களின் அறிவுபூர்வ வாதங்களை ஆதரிப்பதால், என்னை 'இந்துத்வா ஆதரவாளராக' பார்ப்பதா?

அல்லது உணர்ச்சிபூர்வ‌ 'செருப்பு நோயில்' சிக்கி பயணிக்கும் எச்.ராஜாவின் நிலைப்பாட்டை எதிர்ப்பதால், என்னை 'இந்துத்வா எதிர்ப்பாளர்' என்று அணுகுவதா? ((http://tamilsdirection.blogspot.in/2018/01/2-same-side-goal.html )

இன்று எனது நிலைப்பாட்டினை ஒரு அடையாளம் மூலமாக வெளிப்படுத்த வேண்டுமானால்;

நான் ஒரு 'தமிழத்துவா' ஆதரவாளர் என்றும், 'தமிழத்துவா' வளர்ச்சிக்கு துணை புரியும் 'இந்துத்வா ஆதரவாளர்' என்றும் தெரிவிக்கலாம்.



தமிழத்துவாவின் வளர்ச்சியில், தாய்மொழி வழிக்கல்வி மீட்சிக்கு நான் முதன்மை முக்கியத்துவம் கொடுத்து பயணிக்கிறேன்; தமது குடும்பப் பிள்ளைகளை குறைந்த பட்சம் அடிப்படைக் கல்வி வரையிலாவது தமிழ்வழிக்கல்வியில் படிக்க வைக்காமல், ஆங்கில வழிக் கல்வியில், படிக்க வைத்தவர்களில், 'தமிழ்ப்பற்றாளர்களாக' பொது அரங்கில் வலம் வருவபவர்களை அடையாளம் கண்ட பின்னர், எனது சமூக வட்டத்திலிருந்து அவர்களை ஒதுக்கி வாழ்ந்து வருகிறேன்; அவர்கள் தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் மதித்து பாராட்டினாலும்.

அகத்தில் சீரழிந்து, தமது சொந்த வாழ்வில் மேற்கொண்ட 'இழிவான சமரசங்களை' மறைத்து, 'சுயலாப கணக்குடன்' தமது சமூக வட்டத்தில் இருப்பவர்களின் தவறுகளை கண்டு கொள்ளாமலும், நான் முன் வைக்கும் அறிவுபூர்வ வாதங்களை எதிர் கொள்ளும் அறிவின்றி, துணிச்சலின்றி, புறக்கணித்து, 'இந்துத்வா எதிர்ப்பு அறிவுஜீவிகளாகவும்' வலம் வருபவர்களை எல்லாம்;

தமிழ்நாட்டில் 'இந்துத்வா எதிர்ப்பு' 'சமூக சோளக்கொல்லை பொம்மை'களாக நான் அடையாளம் காண்கிறேன்;

அவர்களால் தமிழத்துவாவின் வளர்ச்சிக்கான‌ முயற்சிகள் பாதிக்கப்படுவதால்.

தமிழின் உண்மையான வளர்ச்சியை விரும்புபவர்கள் எல்லாம்;

'இந்துத்வா ஆதரவு' மற்றும் 'இந்துத்வா எதிர்ப்பு முகாம்களில்' பயணித்தாலும்;

அவர்களில் அகச்சீரழிவின்றி, சுயலாப கணக்கின்றி, பயணிப்பவர்கள் எல்லாம் குறைந்த பட்சம் தாய்மொழிவழிக்கல்வி கோரிக்கையிலாவது ஒன்று சேர்ந்து செயல்படவேண்டும்;

என்ற நோக்கில் நான் முயன்று வருகிறேன்: அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவித்தும், உணர்ச்சிபூர்வ 'செருப்பு அரசியலை'எதிர்த்தும். 

நான் 'பெரியார்' இயக்கத்தில் பயணித்த காலத்தில், திரு.கி.வீரமணி என்னை மிகவும் மதித்து பல பொறுப்புகள் வழங்கிய காலத்திலும் கூட, 'அதைப் பயன்படுத்தி' எனக்கான செல்வாக்கு வலைப்பின்னலைக் கட்டி, 'செல்வாக்கான பெரியார் அலங்கார பொம்மையாக' வளர்ந்து விடக் கூடாது;
என்பதில் மிகவும் கவனமாக இருந்தவன்.

உதாரணமாக நான் சென்னை பெரியார் திடலில் நாட்குறிப்பு பணிக்காக தங்கியிருந்த போது, தி.மு. தலைவர் கருணாநிதி இன்னும் சில நேரத்தில் அங்கு வரப் போகிறார் என்று அறிந்தவுடன்;

"ஆசிரியர் தப்பித்தவறி நம்மை அழைத்து, அவரிடம் அறிமுகப்படுத்தி விடுவாரோ?' என்று கருதி, அந்த 'சங்கடத்தில்' இருந்து விடுபட, நான் பெரியார் திடல் வளாகத்தை விட்டு வெளியேறி, அவர் பெரியார் திடலை விட்டு போன பின் தான், உள்ளே நுழைந்தேன்.

.வெ.ராவின் 1948 தூத்துக்குடி மாநாட்டு உரையில் சாராம்சத்தை அகவயப்படுத்தி, அண்ணாவையே இழிவான நபராக கருதி பயணித்த 'பெரியார் கொள்கையாளர்களில்' ஒருவராக நான் இருந்தேன். அப்படி பயணித்தவர்களில் பலர்,  தி.மு. ஆட்சியில் 'தமக்கான பலன்களுக்காக' முதல்வர் கருணாநிதிக்கு நெருக்கமாகி, 'முரசொலி'யில் 'துதிபாடி', 'அறிவாலயத்தில்' செல்வாக்குடன் வலம் வந்ததையும் நான் அறிவேன்.

'உலகத்தோடு ஒட்ட ஒழுகி' வாழ்ந்த 'அந்த வாழ்வியல் புத்திசாலிகளை'(?), நான் குறை சொல்லவில்லை; இன்றும் அவர்கள் எல்லாம் 'இந்துத்வா எதிர்ப்பு அலங்கார பொம்மைகளாக' பவனி வந்தாலும்.

திருக்குறளில் 'ஒழுக்கம் உடைமை' அதிகாரத்திலும், பிற இடங்களிலும், 'ஒழுக்கம்' தொடர்பாக வெளிப்படுத்தியுள்ள கருத்துக்களை எல்லாம், கீழ்வருமாறு நான் விளங்கிக் கொண்டுள்ளேன்.

'ஒழுக்கமும்', 'இழுக்கமும்' கலந்துள்ள உலகில், 'இழுக்கத்தை' கண்டு அஞ்சியோ, வெறுத்தோ, உலகத்தோடு 'ஒட்டாமல்' ஒதுங்கி வாழாமல்

'ஒழுக்கத்தோடு'  'ஒட்டி' வாழ்வதே, உலகின் 'நல்ல குடி மகனின்' கடமையாகும்

திருக்குறள் (140) பொருளை மேற்கண்டவாறு விளங்கி, நான் 'பெரியார்' இயக்கத்தில் இருந்த காலத்திலும் வாழ்ந்து வந்ததால்;

'பெரியார் துதி படும் அலங்கார பொம்மையாக' இல்லாமல்;

அறிவுபூர்வமாக .வெ.ரா- வை எதிர்த்து வெளிவந்த புத்தகங்களையும், 'அறிவு ஜீவிகளையும்' தேடி, தேடி;

அவர்களிடம் வெளிப்பட்ட .வெ.ராவிற்கு எதிரான கருத்துகளுக்கு, எனது மனசாட்சிக்கும், அறிவுக்கும் 'சரி' என புரியவைக்கும் விளக்கங்களையும் தேடி தேடி;

பயணித்ததால் தான், இன்றும் நான் 'பெரியார் கொள்கையாளராக' இல்லையென்றாலும், 'மார்க்சிய லெனினிய பெரியாரியல் புலமையாளனாக'வும் இருந்து வருகிறேன்; சமூக நலன் நோக்கில், நான் முன் வைக்கும் கருத்துக்களுக்கு அறிவுபூர்வமான மறுப்புகளையும் 'அதே ஆவலுடன்' எதிர் நோக்கி.

'அரசியல் நீக்கத்தில் (depoliticize) ஆதாய அரசியலில் பயணித்த கட்சிகளின் ஆதரவில் சிக்கிய 'இந்துத்வா எதிர்ப்பு' என்பதானது, இன்று தமிழ்நாட்டில் 'சமூக சோளக்கொல்லை பொம்மையாகி விட்டதா? என்று அறிவுபூர்வமாக விவாதிக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக ருதுகிறேன்.' என்பதையும்;

‘'ஆண்டாள்' தொடர்பான சர்ச்சையில், வைரமுத்துவுக்கு ஆதரவாக கூட்டாக அறிக்கை வெளியிட்ட, கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, மோடியை எதிர்த்து கூட்டாக அறிக்கை வெளியிட்ட, எழுத்தாளர்களும், மேலே குறிப்பிட்டுள்ள கேள்விகளுக்கும், ஹார்வாட் தமிழ் இருக்கை தொடர்பாக நான் வெளியிட்டுள்ள அபாய எச்சரிக்கை கேள்விகளுக்கும் (http://tamilsdirection.blogspot.in/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_15.html ), அவரவர் மனசாட்சிக்கு உட்பட்டு, விடைகள் கண்டு, கூச்சமின்றி 'பெரியார்' .வெ.ராவை போல, தவறுகளை பகிரங்கமாக வெளிப்படுத்தி, திருந்தி பயணிப்பார்களா? அல்லது அறிவுபூர்வ விவாத வலிமையின்றி, மேலே குறிப்பிட்ட 'சமூக சோளக்கொல்லை பொம்மையின்' 'மிரட்டும் அலங்காரங்களாக' தொடர்வார்களா?’ என்பதையும்;

புலி வேடம் போட்ட நரியின் சாயமானது மழையில் கரைந்தது போல;

தமிழ்நாட்டில் அமாவாசைகளின் புரட்சி மூலமும் (http://tamilsdirection.blogspot.in/2018/02/normal-0-false-false-false-en-us-x-none.html ) ;
மாறிவரும் அந்த சூழல் பற்றி அறியாமல்;

ஆண்டாள் சர்ச்சையின் மூலம் வைரமுத்து வரலாற்றின் சுயநினைவற்ற வினை ஊக்கியாக (Catalyst) செயல்பட்டு, பெய்யத் தொட‌ங்கியுள்ள அறிவுபூர்வ விவாத மழையின் மூலமாக;

'இந்துத்வா எதிர்ப்பு சமூக சோளக்கொல்லை பொம்மைகள்' எல்லாம் சாயம் வெளுக்கத் தொடங்கியுள்ளனவா? என்ற கேள்வி எழுவதை குறை சொல்ல முடியுமா?

இந்துத்வா எதிர்ப்பானது 'திராவிட ஊழல் திமிங்கிலங்களை' உரசாமலும், வெளியில் தெரிந்தும், தெரியாமலும் நேசமாகவும் பயணித்து, ஊக்குவித்த ஊழல் சுனாமியில், ஆங்கிலவழிக்கல்வி வியாபாரமானது குக்கிராமங்கள் வரை 'வீரியத்துடன்' பரவி, தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) மரணப்பயணத்தை துவக்கி விட்டது. அந்த சூழலில் 'அமாவாசைகளாக' போட்டி போட்டு, பணம் செல்வாக்கு சம்பாதிக்கும் தமிழர்களும், நானறிந்த 'பெரியார்' சமூக கிருமிகள் உள்ளிட்டு, தங்களின் பிள்ளைகளை ஆங்கிலவழியில் படிக்க வைத்துள்ளார்கள்; அவர்களிலும் 'இந்துத்வா எதிர்ப்பு' வீரர்கள் இருக்கிறார்கள்.

'இந்துத்வா எதிர்ப்பாளர்களில்' அரிதாக தமது குழந்தைகளை தமிழ்வழிக்கல்வியில் படிக்க வைத்தவர்களை நான் மிகவும் பாராட்டுகிறேன்; எனது சமூக வட்டத்திலும் அனுமதிக்கிறேன்.

'சரக்கு இருந்தால் அவிழ்த்து விடு; இல்லே, சலாம் போட்டு ஓடி விடு';

என்று ஒரு திரைப்படத்தில் எம்.ஆர்.ராதா பாடியது ஞாபகத்திற்கு வருகிறது.

இந்துத்வா ஆதரவானாலும் சரி, இந்துத்வா எதிர்ப்பானாலும் சரி,

'உணர்ச்சி பூர்வ செருப்பு அரசியல்'  போக்கில் பயணிப்பவர்களை ஒதுக்கி;

அறிவுபூர்வமாக விவாதிக்க முன் வருபவர்களுக்கு எனது அறிவிப்பும் அது தான்.

'சரக்கு இருந்தால் அவிழ்த்து விடு; இல்லே, சலாம் போட்டு ஓடி விடு'

No comments:

Post a Comment