Thursday, November 6, 2014

Republishing the article on 21 Feb 2021


'குற்ற உணர்வின்றி' மன நிறைவுடன் மரணத்தைத்  தழுவ முடியுமா?


1944 -இல் திராவிடர் கழகம் உருவானதற்கு முன், பெரியாரின் சமூக வாழ்வில், அவர் சந்தித்த கருத்து வேறுபாடுகள் பற்றிய விவாதங்கள் அறிவுபூர்வ தளத்தில் நடைபெற்றதையும், திராவிடர் கழகம் உருவான பின் அவருக்கும் அண்ணாதுரைக்கும் இடையில் உருவான கருத்து வேறுபாடுகள் பற்றிய விவாதங்கள் உணர்ச்சிபூர்வ தளத்தில் நடைபெற்றதையும் 'தமிழ்நாட்டு ‘திராவிட’ அரசியலில் சிக்கிய 'ஐந்திறம்' ' என்ற முந்தையப் பதிவில் பார்த்தோம். அதில் "'ஈ.வெ.ரா' என்ற பெயர் மறைந்து, 'பெரியார்' என்ற பட்டமே பெயரானதும்,  அந்த 'உணர்வுபூர்ச்சி' போக்கின் விளைவா? இவ்வாறு பெயர் மறைந்து, 'பட்டமே' பெயரானது உலகில் வேறு எந்த தலைவருக்கும் நிகழ்ந்திருக்கிறதா?" என்ற கேள்விகளையும் பார்த்தோம். 


அதன் தொடர்ச்சியாகவே, பிற்காலத்தில் பாரதிதாசனுக்கும் அண்ணாதுரைக்கும், பாரதிதாசனுக்கும் ஜீவானந்தத்திற்கும் இடையே ‘மிகவும் மோசமான’ உணர்ச்சிபூர்வ விவாதங்கள் நடைபெற்றதற்கு, 'குயில்' இதழ்கள் சாட்சியாக உள்ளன. ஆக சமூகத்தில் 'உச்சத்தில்' இருக்கும் நல்லவைகளும், கெட்டவைகளும் அந்த சமூக வரலாற்றில் ‘விதை கொண்டு, உரமூட்டப்பட்டு’ வளராமல், 'திடீரென' வந்து விடாது.

இன்று தி.க தலைவர் ' கி. வீரமணி'யின் பெயர் மறைந்து, (விடுதலை) 'ஆசிரியர்' என்றும், 'மு.கருணாநிதி' மறைந்து,'கலைஞர் ' என்றும் அழைக்கப்படுவதைப் பார்க்கிறோம். ஈ.வெ.ரா, கி.வீரமணி, மு.கருணாநிதி என்று நமது பேச்சில், எழுத்தில் குறிப்பிட்டால், அவர்களை அப்பெயர்கள் மூலம் நாம் அவமதிக்கிறோமோ? என்று நமக்கு ஐயம் வரும் வகையில், அவர்கள் ஆதரவாளர்கள் நினைப்பது உண்மையா? பொய்யா? என்பதும் ஆய்விற்குரியதாகும். மதிப்பதற்கும் வழிபடுவதற்கும் இடையில் உள்ள வேறுபாடு தமிழ்நாட்டில் மறைந்து விட்டதா?  இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே இந்த போக்கு தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.


இன்று தமிழ்நாட்டில் அறிவுபூர்வ விவாதங்கள் உணர்ச்சிபூர்வ போக்குகளில் மூழ்கியுள்ளதும் அப்போக்குகளின் விளைவா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

‍பெரியாருக்கு முன் தமிழ்நாட்டில் சமூகத்தளத்தில் நடைபெற்ற சீர்திருத்த முயற்சிகள் இருட்டில் போனதற்கும் அப்போக்குகள் காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

'இந்து' ஆங்கில நாளிதழ் நிறுவனர் ஜி. சுப்பிரமணிய ஐயர் தமது மகளுக்கு 'விதவைத் திருமணம்' செய்தபோது பெரியாருக்கு வயது 10. சென்னையில் குப்பத்தில் உள்ளவர்களுக்கு இரவுப் பள்ளிகள் நடத்திருக்கிறார். ( G.Subramania Iyer used the newspaper as a vehicle for the promotion of widow remarriage, the suppression of infant marriage, the abolition of caste distinctions, the upliftment of the untouchables, etc : Madras, Chennai: ‘A 400-year Record of the First City of Modern India, Volume 1’ edited by S. Muthiah). இன்று நெடுமாறன் கட்சியில் இருக்கும் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் புதுக்கோட்டை மதிவாண ன் கீழ்வரும் தகவலைத் தெரிவித்தார்.
 
அவர் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அரசுப் பள்ளியில் படித்த போது, அவரின் 'பிராமண' ஆசிரியர், மதிவாணனைப் போன்று கிராமங்களிலிருந்து தினமும் பள்ளிக்கு வந்து படிக்கும் மாணவர்களை, தேர்வு காலங்களில் இரவில் தன் வீட்டிலேயே தங்கி தேர்வுக்காகப் படிக்க வைப்பாராம். காலையில் அம்மாணவர்களுக்கு தனது வீட்டிலேயே பழைய சாதத்தைக் காலை உண்வாகக் கொடுத்து பள்ளிக்கு அழைத்து செல்வாராம்.

திரு.வி.க வாழ்க்கை வரலாற்றில் வெளிப்பட்ட ஒரு அரிய தகவல்: “ (வேலை நிறுத்த போராட்ட காலத்தில்) தொழிலாளர் பட்டினியைப் போக்கபலப்பல வழியில் உதவி நல்கியவர் எஸ்.சீனிவாச ஐயங்கார். வ.வே.சு ஐயர் முனிவரைப் போல தொழிலாளருடன் ஏகித் திருவல்லிக்கேணியில் அரிசி தண்டியதை இங்கே குறிப்பிடாமற் போக மனமெழவில்லை.  பக்கம் 497, திரு.வி.க. வாழ்க்கை குறிப்புகள் பாகம் 2

திரு.வி.க வாழ்க்கை வரலாற்றில் பிராமண‌ரல்லாத உயர்சாதியைச் சேர்ந்த அவரும், 'தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த அயோத்திதாசப் பண்டிதரும் நண்பர்களாகப் பழகிய தகவல் உள்ளது.பிராமண‌ரல்லாத உயர்சாதியைச் சேர்ந்த வ.உ.சியின் வாழ்க்கையில்,  தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த ஒரு 'இந்து' சாமியாரை தனது வீட்டில் மிகவும் மரியாதையுடன் உபசரித்த தகவல் உள்ளது. ஆக பெரியாரின் 'சீர்திருத்ததிற்கு' முன்னேயே இது போன்று நிகழ்ந்தவை எல்லாம் 'இருட்டில்' உள்ளனவா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

இன்று நிலைமை எப்படி உள்ளது? சென்னையில் சில வருடங்களுக்கு முன் ஒரு குறிப்பிட்ட சாதி அமைப்பின் சார்பில் ஒரு விழா நடந்தது. அவ்விழாவில் 'அந்த சாதியை'ச் சேர்ந்த ' கம்யூனிஸ்ட், திராவிட, முற்போக்கு, ஆன்மீக'  புலமையாளர்களாக இருந்த, 'முற்போக்கு, பிற்போக்குகள்' எல்லாம் கெளரவிக்கப்பட்டார்கள். அந்த அளவுக்கு 'இரட்டை வேட' 'சீர்திருத்த' 'புலமையாளர்கள்' தமிழ்நாட்டில் செல்வாக்குடன் வளர்ந்து வருகிறர்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். வேறு (பெரும்பாலும் தம்மை விட மேலான) சாதியில் திருமணம் செய்து, நல்ல வசதி வாய்ப்புகளுடன் பேராசிரியர்களாகவும், மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் இருப்பவர்கள் தமக்கும், தமது பிள்ளைகளுக்கும் கல்வியில் வேலையில் இட ஒதுக்கீடு பலன்களை (தமது சாதியில் முதல் தலைமுறையாகப் படித்த குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகளின் வாய்ப்புகளை அபகரித்து) அனுபவித்து வாழ்பவர்களில் பலர், 'சாதி ஒழிப்பு'  வீரர்களாகப் பாராட்டப்படும் நிகழ்வுகளும் தமிழ்நாட்டில் உண்டு.

1944 -இல் திராவிடர் கழகம் உருவானதற்கு முன்,  விவாதங்கள் அறிவுபூர்வ தளத்தில் நடைபெற்று வந்த போக்கு,, திராவிடர் கழகம் உருவானபின் மாறி,  உணர்ச்சிபூர்வ தளத்தில் நடைபெறத் துவங்கியதானது,  'ந‌ன்கு வளர்ந்து'(?), இன்று மேலேக் குறிப்பிட்ட‌  'இரட்டை வேட முற்போக்குகள்' செல்வாக்குடன் அறிவுப் புலத்திலும் ஆதிக்கம் செலுத்தும் விளைவை உண்டாக்கியதா? என்பதும் ஆய்விற்குரியது. 

சமூக நீதி அணுகு முறையில் அடி மட்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி, அவர்கள் கல்வியிலும், வாழ்விலும் உயர்த்தும் முயற்சிகள், வியப்பூட்டும் அளவுக்கு,இன்றும் இருட்டில் இருக்கும் அளவுக்கு சரியாகப் பதிவு செய்யப்படாமல் , 'திராவிடர் கழகம்' உருவாவதற்கு முன் தமிழ்நாட்டில் நடைபெற்றது பற்றி ஏற்கனவே பார்த்ததோம். இசையில் தீண்டாமையும், உயர்வு தாழ்வும் காலனியத்தின் நன்கொடை என்பதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். தமிழ்நாட்டில் வெள்ளைக்காரர் வருகைக்கு முன் கல்வியில் அதிக சதவீதத்தினராக பிராமணர்களை விட, 'கம்மாளார்'(இன்றைய 'விஸ்வகர்மா' சாதிகள்) இருந்ததையும், காலனிய ஆட்சியிலேயே பிராமண‌ர்கள் கல்வியிலும் அரசுப் பணிகளிலும் அதிக சதவீதத்தினராக மாறியுள்ளார்கள் என்பதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். "பழங்காலத்தில் பிராமணர்களைவிட அதிக எண்ணிக்கையில் படித்தது சூத்திரர்களும் தலித்துகளுமே!";
http://www.dinamani.com/junction/azhagiya-maram/

இன்றைய சாதி முறைக்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் இல்லை என்பதையும், விவசாயம், மீன் பிடித்தல் உள்ளிட்டு அனைத்து தொழில்களில் ஈடுபட்டிருந்தவர்கள், 'பறை' வகை இசைக் கருவிகளை இசைத்தார்கள் என்பது பற்றியும் பதிவு செய்துள்ளேன். 
( http://tamilsdirection.blogspot.in/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html  ) அரசும், சமூகமும் பின்னிப் பிணைந்திருந்த நிலையில், செயல்பாட்டு தர ஏணியாக (Functional hierarchy) இருந்த 'வருணம்' என்ற சமூக செயல் நுணுக்கம் (social Mechanism) , தமிழ்நாட்டில் எந்த காலத்தில், எந்த சமூகக் காரணங்கள் அடிப்படையில் ' சமூக உயர்வு, தாழ்வு, தீண்டாமை' உள்ளடக்கிய செயல் நுணுக்கமாக மாறியது என்பது ஆய்விற்குரியது.

பெரியார் கொள்கையை ஏற்று, 'மனித சமத்துவம்' என்ற அடிப்படையில் மனிதர்களின் 'தரா தரம்,குலம் கோத்திரம்' பற்றி கவலைப் படாமல், லாப நட்ட நோக்கின்றி சமூகப் பற்றுடன் பேராசிரியராகப் பணியாற்றிய எனது சமுக வட்டத்தில், அத்தகையோரை அனுமதித்த‌தால் விளைந்த பாதிப்புகள் இந்த Blog-இல் உள்ள பதிவுகளுக்கான மிகவும் மதிப்பு வாய்ந்த உள்ளிடுகளாக (inputs) அமைந்தன‌. (http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

Quantum Mechanics- இல் ஒரு அணுவில் உள்ள எலெக்ட்ரான்களில் இயல்பின் அடிப்படையில் 'சமத்துவமாக' இரண்டு எலெக்ட்ரான்கள் இருக்க முடியாது. இது பவுலியின் 'தவிர்ப்புத் தத்துவம்' (Pauli’s Exclusion Principle)  என்று அழைக்கப்படுகிறது. அதே போல், உலகில் உள்ள மனிதர்களில் இயல்பின் அடிப்படையில் 'இரண்டு மனிதர்கள்' கூட 'சமத்துவமாக' இருக்க முடியாது. எல்லா மனிதர்களையும் , ‘இயல்பைப் புறக்கணித்து’ , குடும்பம், நட்பு உள்ளிட்ட நமது சமூக வட்டம் உள்ளிட்டு, நமது வாழ்வில், அவர்களைச் 'சமத்துவமாக' நடத்துவது எவ்வளவு முட்டாள்த்தனமானது, ஆபத்துகள் நிறைந்தது என்பது எனது வாழ்க்கையில், நான் கற்ற 'அசாதாரண' பாடமாகும். புலமையை வளர்ப்பதில் ஆர்வமின்றி,  யாரிடம் என்ன பேசுவது, எப்படி பேசுவது, என்ற அடிப்படை நாகரீகம் கூட தெரியாத, 'சராசரி பொது அறிவின்' அடிப்படையில், கேள்விகள் கேட்டு, புலமையையும், புலமையாளர்களையும், 'கிண்டல்' செய்து மகிழும், 'சமூக கிருமிகள்', தமிழ்நாட்டில் வளர்ந்த 'பாவத்தில்' , எனது 'தொண்டுகளுக்கும்' பங்கு உண்டு.

உயிரணுவியல்(Genetics), உயிர் பன்முக வேறுபாடு (Bio-Diversity), etc போன்றவை தொடர்பாக வெளிவந்துள்ள ஆய்வுமுடிவுகள் எல்லாம்  உயிரணுக்கள்(Genes) ஒரு மனிதரின் தகுதி, திறமை, உடல் நலம், மனநலம் போன்றவற்றில் எவ்வளவு செல்வாக்கு செலுத்துகின்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளன. அந்த பின்னணியில் ஒவ்வொரு மனிதரும் தமக்குள்ள இயல்பின் அடிப்படையில் தகுதி திறமைகளை வளர்த்து, தமது இயல்போடு ஒன்றிய உள்ளார்ந்த ஈடுபாடுகளை(Passion)  அடையாளம் கண்டு,வளர்த்து வாழ்வதே உண்மையான 'வாழ்வியல் புத்திசாலித்தனம்' என்பதையும், அப்படி வாழும் போது, கிடைக்கும் பலன்கள் காரணமாக, நமது வாழ்வில் நாம் சந்திக்கும் பாதிப்புகளும், அவமானங்களும் கூட மதிப்பு மிக்க உள்ளீடாக அமையும் என்பதையும் இது போன்ற பதிவுகள் உணர்த்துகின்றன..

குடும்பமாகட்டும், கட்சியாகட்டும், அரசு அல்லது தனியார் நிறுவனமாகட்டும், அந்தந்த மனிதர்களின் இயல்புகள், தகுதி, திறமைகளைப் பொறுத்து செயல்பாட்டுக்கான தரஏணியில்  (Functional hierarchy) அவரவருக்கான பணியிடங்கள் சரியாக ஒதுக்கி செயல்பட்டால் தான், குடுமபமும், கட்சியும், நிறுவனங்களும் ஆக்கபூர்வமான திசையில் பயணிக்கும். இன்றும் மார்க்சிய‍ லெனினிய 'தீவிர வாத இயக்கமாகட்டும், இடது, வலது கம்யூனிஸ்ட் கட்சிகளாகட்டும், தி.க, தி.மு.க போன்ற திராவிடக் கட்சிகளாகட்டும், அந்தந்த கட்சித் தலைவர்களை யார் யார் எந்தெந்த அளவு விரைவாக, அல்லது தாமதமாகக் காத்திருந்து சந்திப்பது என்பதற்கு அந்தந்த கட்சிகளின், தலைவர்களின் 'இயல்புகளை'ப் பொறுத்து, ஒரு 'நவீன கால வருணாசிரம' முக்கியத்துவ தர வரிசையானது செயல்பாட்டில் உள்ளதா? இல்லையா?

இயல்புகள், தகுதி, திறமைகளுக்குப் பதிலாக, லஞ்சம், செல்வாக்கு, பலவகையான தரகுப் பணிகளில் திறமை, எந்த தவறுகளையும் 'அஞ்சாமல்' ( 'அச்சம் என்பது மடமையடா' என்ற போக்கில்) செய்யும் திறமை போன்றவற்றில் 'திறமைசாலிகளே', குடும்பம், கட்சி, நிறுவனம் உள்ளிட்டு சமுகத்தில் உள்ள அனைத்து அமைப்புகளிலும் முக்கிய இடங்களை ஆக்கிரமித்த பின், அந்த சமுகம் அழிவுபூர்வ திசையில் பயணிப்பதில் வியப்புண்டோ?

தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்டுள்ள கேடுகள் இத்தகைய காரணங்களால் விளைந்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

'மனிதர்களின் மனங்களில் உள்ள தேவைகள் மற்றும் ஈடுபாடுகள் அடிப்படைகளில் வெளிப்படும் ஆற்றல்களில் (Energy) வெளிப்படும் விசைகள்(Forces) ஆனவை, வெவ்வெறு வகையிலான மனித உறவுகள் அடிப்படையிலான  சமூக இழைகளின் தோற்றங்கள் மற்றும் வளர்ச்சிகளின் ஊடே செயல்பட்டு, பலவகைப்பட்ட சமூகப் பிணைப்புகள்(Social Bonds)  மூலம் அந்த மனிதர்கள் சம்பந்தப்பட்ட வெவ்வேறு அமைப்புகளை (குடும்பம், நிறுவனம், அரசு, etc ) உருவாக்கி, அந்தந்த‌ அமைப்புகளின் செயல்படுகளுக்கான சமூக ரத்த ஓட்டம் நடைபெறுகிறது என்பதை  ஏற்கனவே பார்த்தோம்.  
( http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html )


'தவறான நபர்கள் சமூகத்தில் உள்ள (குடும்பம், கட்சி, etc ) அமைப்புகளின் செயல்பாட்டிற்கான அமைப்பின் தர ஏணி நிலையில் (socio-structural functional hierarchy)   முக்கிய பொறுப்புகளில் இடம் பெறும்போது, அமைப்பின் நோக்கங்களை தமது சுயநலத்திற்கு திசை திருப்பும் ஆபத்து நேரிட வாய்ப்புண்டு. அதில் அவர்கள் வெற்றி பெற, மற்ற முக்கிய பொறுப்பில் உள்ள நபர்களையும் படிப்படியாக, அமைப்பின் செயல்பாட்டின் ஊடே, தம்மைப் போன்றே சுயநலவாதிகளாக மாற்றும் தொத்து நோய்க் கிருமி மூலங்களாக செயல்படுவதும் நேரிடலாம்.அந்த போக்கில் அமைப்பில் உள்ள மனிதர்களின் ஆற்றல்கள் எல்லாம் அந்த அமைப்பை சீரழிவுப் பாதையில் பயணிக்கவே செலவாகும்.' என்பதையும் அந்தப் பதிவில் பார்த்தோம்.

திராவிடர் இயக்க வரலாற்றில் அறிவுபூர்வ போக்குகள் பலகீனமாகி, உணர்ச்சிபூர்வ போக்குகள் செல்வாக்குடன் வளர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நிலையை எப்போது, எப்படி அடைந்தது? தமிழ்நாட்டு சமூக அமைப்புகளின் (குடும்பம், கட்சி, etc  ) செயல்பட்டுக்கான சமூக ரத்த ஓட்டத்தில் (மனித உறவுகளில் லாப நட்டம் பார்க்கும்) 'கள்வர் பண்பு' ( திருக்குறள் 813  ) எப்போது, எப்படி நுழைந்து கெடுத்தது? என்பது போன்ற கேள்விகளைத் திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும் ஆராய வேண்டிய கட்டத்தில் தமிழின்,தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்பு நோக்கிய முயற்சிகள் இருக்கின்றன‌. 

திராவிட இயக்க வரலாற்றில், சமூக ரத்த ஓட்டத்தில்,  லாப நட்டம் பார்க்கும், 'கள்வர் பண்பு' நுழைவதற்குக் காரணமான அந்த ' திராவிடத் திறமைசாலிகளின்' வளர்ச்சியானது, திரைப்படத் துறையில், குறிப்பாக, 'வேலைக்காரி', 'பராசக்தி' போன்ற திரைப்பட வெற்றிகளின் பலப் பின்னணியில் வளர்ந்ததா? தமிழக அரசியலில் திரை உலகச் செல்வாக்கும்,குடும்ப அரசியல் செல்வாக்கும், இந்தியாவிலோ, உலகிலோ, வேறு எங்கும் காண முடியாத அளவுக்கு, எவ்வாறு தோன்றி வளர்ந்தது? என்ற கேள்விகளை ஆராய வேண்டிய நேரம் வந்து விட்டது. 

'தரா தரம், தகுதி, திறமை, குலம், கோத்திரம்'  எல்லாம் 'பார்ப்பன சூழ்ச்சி' என்று சொல்லி, அந்த 'திறமைசாலிகள்' தமது உண்மை உருவங்களை மறைத்து, இன்னும் எவ்வளவு காலம் வாழ‌  முடியும்? ‘தேச விரோத சுயலாப வலைப் பின்னலில்’ (network) சிக்கியோ, அல்லது தொட்டால் 'ஷாக்'(Shock)  அடிக்கும் என்று வெளியில் தெரியாமல் பயந்து ஒதுங்கியோ, ராஜ‌பட்சேயை ஐ.நா உள்ளிட்ட உலக அரங்குகளில் காப்பாற்றி வரும் சீனாவைக் கண்டிக்காமலும், தமிழ்நாட்டில் சீனப் பொருட்கள் ( கடந்த பல வருடங்களில் உற்பத்தித் தொழிலைச் சிதைத்து, லட்சக்கணக்கானவர்கள் வாழ்வாதாரங்களை இழந்து வரும் நிலையிலும் கூட)  விற்கப்படுவதை எதிர்க்காமலும், 'தமிழ் உணர்வு, பார்ப்பன எதிர்ப்பு' என்று எவ்வளவு காலம் தான் ஏமாற்றி வாழ முடியும்? 

தமிழ்நாட்டில் 'தமிழ் உணர்வு' ஆனது, 'பொது வாழ்வு' வியாபாரிகளிடம் சிக்கி சீரழிகிறதா? அதே நேரத்தில், 'இந்தியர்' என்ற உணர்வு வலிவு பெற்று வருகிறதா? என்ற கேள்வியை, கீழ்வரும் செய்தி எழுப்புகிறது.


"டெல்லியில் உள்ள பட்டாசு கடைக் காரர்கள் தேச நலனுக்காக சீன பட்டாசுகளை புறக்கணித்துள்ளனர். இதனால் அங்கு சிவகாசி பட்டாசுகள் விற்பனை களைக்கட்டத் தொடங்கியுள்ளது. சீன வரவுகளால் இந்திய பட்டாசு தொழில்கள் நலிவடைந்து வருவதாலும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாலும், இந்த ஆண்டு சீன பட்டாசு களை புறக்கணிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் அண்மையில் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடங்கப்பட்டது. அதற்கு உரிய பலன் டெல்லி சதார் பஜாரில் தற்போது கிடைத்துள்ளது. “

'தீக்குளித்து, போராடி, தமது வாழ்வைக் கெடுத்துக் கொள்ளும் திறமையுள்ள' குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகளின் எண்ணிக்கையும் வெகு வேகமாகக் குறைந்து வருகிறதா? இல்லையா? கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் 'ஆதாயத் தொண்டர்கள்' தவிர்த்து, மற்றவர்களெல்லாம்,அந்த 'திறமைசாலிகள்' பற்றி நன்றாக அறிந்து, அவர்களில் திரைத்துறைகளில் நுழைந்தவர்கள் , 'சூது கவ்வும்' 'ஜிகிர் தண்டா' போன்ற -வியாபார ரீதியிலும் வெற்றி பெற்ற, சமூக X Ray  - திரைப்படங்களை எடுத்து கலக்கி வருகிறார்கள்.எனவே  அந்த 'திராவிடத் திறமைசாலிகளின்' அழிவும் தொடங்கி விட்டது.


உணர்ச்சிபூர்வ போதையில் சிக்கி 'கள்வராக' இருப்பவர்களை, நாம் பெரியாரியல் 'தோழர்' என்று கருதி, 'தோழமையுடன்' பழகுவது மிகவும் ஆபத்தானது. அவர்கள் நம்மை 'ஏணியாக'ப் பயன்படுத்துவதோடு நின்று விடாமல், தமது சுய‌நலனுக்கு நம்மையேக் 'காவு கொடுக்க'த் 'தயங்காத'வர்கள். அத்தகைய அனுபவங்கள் மூலமே தமிழ்நாட்டில் 'வாழ்வியல் வெற்றியின் இரகசியத்தைக்' கண்டுபிடித்து, பதிவு செய்துள்ளேன். ( http://tamilsdirection.blogspot.in/2013_10_01_archive.html ) 'தரா தரம், குலம், கோத்திரம்' 'பார்ப்பன சூழ்ச்சி' என்றும், 'தகுதி திறமை' மோசடி' என்றும் நினைத்து, இயல்பைப் புறக்கணித்து, 'மனித சமத்துவம்' கடைபிடிக்கும் போக்கு வளர்ந்த வேகத்தில், இத்தகைய 'கள்வர்கள்' வளர்ந்து, தமிழ்நாட்டில் 'செல்வாக்கு' பெற்றார்களா? என்பதும் ஆய்விற்குறியதாகும்.

   

பிறந்த போது எதையும் கொண்டு வராத நாம், இறக்கும் போதும், நல்ல/தீய வழிகளில் சம்பாதித்த சொத்து எதையும், எடுத்துச் செல்லப் போவதில்லை. நமது இயல்பை ஓட்டிய தகுதி, திறமைகளை வளர்த்து, உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன்(Passions) வாழ்பவர்களே, மரணத்தை மன நிறைவுடன் தழுவ முடியும். நமது இயல்பைத் தொலைத்து, காலனி ஆட்சிப் பாதிப்பில் இன்றும் உழலும் மனநோயாளிகளாக வாழ்பவர்கள் எல்லாம், வாழும் போது,
( http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html  )  இரவில் படுத்தவுடன் தூங்க முடியுமா? 'குற்ற உணர்வின்றி' மன நிறைவுடன் மரணத்தைத்  தழுவ முடியுமா?

No comments:

Post a Comment