Monday, November 17, 2014


'மேற்கத்தியப் பகுத்தறிவு' (Western Rationalist) அணுகுமுறையின் வரை எல்லைகள் (Limitations)




ஒரு மனிதரின் அக வாழ்வும் புற வாழ்வும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாகத் தொடர்புடையது. தனது இயல்பை அடையாளம் கண்டு, இயல்போடு ஒட்டிய திறமைகளையும், உள்ளார்ந்த ஈடுபாடுகளையும்(Passions)  வளர்த்து வாழும் மனிதன்,  தனது வாழ்வோட்டத்திற்கான  கட்டுப்பாட்டு நெறிக்கருவி-  Steering -  மீது கட்டுப்பாடு செலுத்தி, தனது அகவாழ்வில் தான் விரும்பும் மாற்றங்களை ஏற்படுத்தி, அதன் மூலம் தனது புற வாழ்விலும் மாற்றங்கள் ஏற்படுத்த இயலும்.

மாறாக, சமூக ஒப்பீடு(social comparison)  நோயில் சிக்கி, உயர்வு தாழ்வு மன நோய்க்கு உள்ளான மனிதரின் வாழ்வோட்டத்திற்கான Steering,  அவர் வாழும் சமூகத்தின் புறவாழ்வின் கட்டுப்பாட்டிற்கு  போய்விடுவதைத் தவிர்க்க முடியாது. தன்னைவிட செல்வாக்கான நபரின் காலில் விழுந்து தனது செல்வம், செல்வாக்கை அதிகரித்தவுடன், தன்னை விட கீழானவர்கள், தனது காலில் விழ வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். எல்லா ஒழுக்க மதிப்பீடுகளையும் தனது செல்வாக்கு, செல்வம் வளர்ச்சிக்குக் காவு கொடுக்கத் தயங்க மாட்டார்கள். எனவே குற்ற உணர்வின்றி எல்லாவித சமூக ஒடுக்கல்களில் ஈடுபவதற்கும், துணை நிற்பதற்கும் தயங்க மாட்டார்கள். த‌மது செல்வாக்குக் கட்டுப்பாட்டில் சிக்கிய உணர்ச்சிபூர்வ‌ போதையாளர்களை 'போராட வைத்து, தீக்குளிக்க வைத்து'  தமது செல்வம், செல்வாக்கை குற்ற உணர்வின்றி வளர்ப்பதில் குறியாக இருப்பார்கள் அந்த 'மன நோயாளிகள்'.

மேற்கத்திய வரலாற்றில் அத்தகைய உச்சக் கட்ட சமூகக் கொடுமைகளுக்கு எதிராக வெடித்த பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கம், மேற்கத்திய உலகின் அரசியலில், இசை உள்ளிட்ட கலைகளில், தத்துவங்களில் மிகவும் ஆழமான விளைவுகளை ஏற்படுத்தியது. அப்படி உருவான தத்துவங்களின் வளர்ச்சிப் போக்கில் விளைந்த மார்க்சியம் புற வாழ்வை மாற்றினால், தானாக அக வாழ்வும் மாறும் என்ற நிலைப்பாட்டை, மேலேக் குறிப்பிட்ட இரண்டாம் வகை மனிதர்களை மட்டுமே கணக்கில் கொண்டு உருவானது.மேலேக் குறிப்பிட்ட முதல் வகை மனிதர்களைக் கணக்கில் கொள்ளாமல், இயல்பின் அடிப்படையில் இரண்டு மனிதர்கள் கூட உலகில் சமமாக இருக்க முடியாது என்பதையும்,எப்படிப்பட்ட சமூக அமைப்பிலும் சமூக செயல்பாட்டுக்கு ஒரு செயல் தர ஏணி (Functional hierarchy )  அவசியம் என்பதையும், அந்த செயல்பாட்டுக்கான அமைப்பில் அந்தந்த மனிதரின் தகுதி, திறமைகளுக்கு ஏற்ப, பணியிடங்களும் வாய்ப்பு வசதிகளும் தவிர்க்க முடியாதவை என்பதையும் கணக்கில் கொள்ளாமல், 'மனித உரிமை, சமத்துவம், சமூக நீதி' போன்றவற்றிற்கு உள்ள சமுக வரை எல்லைகளை (Social Limitations) மீறி, உணர்ச்சிபூர்வ‌ போக்கை வளர்த்தார்கள். (http://tamilsdirection.blogspot.sg/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html ) அதன் தொகு விளைவாக, சமூகத்தின் பல துறைகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டு, இறுதியில் கடுமையான பொருளாதாரச் சிக்கலில், மீள வழி தெரியாமல், மேற்கத்திய நாடுகளில் உள்ள அரசுகள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். 

சமூக செயல்பாட்டுக்கு செயல் தர ஏணியில் (Functional hierarchy ) செல்வாக்கான பணியிடங்களில் உள்ளவர்கள் உயர்வு தாழ்வு மன நோயில் சிக்கியவர்களாயிருந்தால், அவர்கள்  அந்த செயல் தர ஏணி தொடர்புள்ள சமூக அமைப்பையே ஒரு ஒடுக்கு முறைக் கருவியாக மாற்றுவதற்கும் வாய்ப்புண்டு. வரலாற்றில் அத்தகைய ஒடுக்கு முறை அமைப்புகளையே பார்த்தவர்கள், பண்டைய கால இலக்கியங்களையும், தொல் பொருள் சான்றுகளையும் திறந்த மனதின்றி, அதே பார்வையில் பார்க்கும் தவறையும் செய்ய வாய்ப்புள்ளது.

மேற்குறிப்பிட்ட நாடுகளில், அந்த போக்குகளின் ஊடே, திறந்த மனதுடன் பிரச்சினைகளை அலசி, தீர்வுகளைத் தேடுபவர்களின் கண்களுக்கு, இந்தியாவும் சீனாவும் வியப்பை ஏற்படுத்தியுள்ளன. உலகப் பொருளாதாரத்தின் ‍Engine ஆக,  இன்று அந்த இரு நாடுகளும் உள்ளன. அதிலும் இந்தியாவில் உள்ள சாதாரண மக்களின் சேமிப்புப் பண்பாடு இந்த அளவுக்கு   உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை என்பது ஆய்வுகள் மூலம் வெளிப்பட்டுள்ளது. தனி மனித உரிமைகள் என்பவை,  குடும்பம் என்ற அமைப்பின் வரையறைகளுக்குட்ப்பட்டது என்பது அவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இயற்கை வழிபாடு, பெண் பருவமடைதல் உள்ளிட்ட சமுகச் சடங்குகள் போன்றவை 'மூட நம்பிக்கைகள்' என்று கருதியதற்கு மாறாக,தனிமனிதரின் அக-புற வாழ்வு ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உதவுவதும், இயற்கை வளங்களை அழிப்பதைத் தடுப்பதும் அவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. 

தமிழ்நாட்டில் சமூக சடங்குகள் எல்லாம் காலனியத்தின் அறிமுகத்திற்கு முன், எவ்வாறு இருந்தன? 

காலனியம் தமது 'சுயநலன்களுக்காக' அறிமுகப்படுத்திய 'புதிய சாதி அமைப்பும்' (http://tamilsdirection.blogspot.in/2016/06/normal-0-false-false-false-en-in-x-none_8.html  );

சமூக ஒப்பீடு நோயும் (Social Comparison Infection), அதன் மூலம் வளர்ந்த  சமூக உயர்வு ஏற்ற தாழ்வுகளும்;

என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன? 'திராவிட' கட்சிகளின் ஆட்சியில், அவை எல்லாம் இன்னும் மோசமாக, எப்படி சீரழிந்தன?

என்ற ஆய்வுகளை எல்லாம், 'மூட நம்பிக்கைகள் எதிர்ப்பு' என்ற 'குருட்டு பகுத்தறிவு பார்வையில்',  இருட்டில் வைத்திருந்த போக்குகளும் முடிவுக்கு வரத் தொடங்கியுள்ளன.

மேற்கத்திய நாடுகளின் அரசுகளும், சிந்தனையாளர்களும், தமது நாடுகளில் உள்ள பொருளதாரச் சிக்கல்களுக்கும், கொலை, தற்கொலை, போதைப் பழக்கம், வன்முறை உள்ளிட்ட சமூகச் சிக்கல்களுக்கும் தீர்வுகளுக்கான சாவிகளை (Keys, ) இந்தியா, சீனா போன்ற நாடுகளில் உள்ள பாரம்பரியப் பண்பாடுகளில் தேடத் தொடங்கியுள்ளனர்.

தமிழில் சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களை மேலேக் குறிப்பிட்ட மேற்கத்திய 'முற்போக்கு, மார்க்சிய' பார்வைகளில் அணுகிய முயற்சிகள் எல்லாம் குருடர்கள் தேடிய ஓவியங்களின் கதையானது.  அத்தகையப் பார்வையில் சிக்கியதாலேயே, 'பெரியார்' ஈ.வெ.ரா அவர்கள், தமிழைக்  காட்டுமிராண்டி மொழியாகவும், தமிழ் இலக்கியங்களில் திருக்குறள் (அதிலும் குறை கண்டு) தவிர்த்து, மற்றவையெல்லாம் தமிழர்க்குக் கேடானவை என்றும் முடிவு செய்தார்.  (http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html       &        & http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_19.html  & http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_10.html  ).

'மொழி', 'இனம்', 'சாதி', உள்ளிட்டு தாம் முன்வைக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாக, உலக அளவில் வெளிப்பட்டு வரும் ஆய்வுகளையெல்லாம் கண்டு கொள்ளாமல், உணர்ச்சிபூர்வமாக பயணிக்கும் குருட்டு பகுத்தறிவாளர்கள், உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் வாழ்கிறார்களா? என்ற ஆய்வினை தொடங்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

அகத்தில் உருவாகி, புறத்தில் வெளிப்படும் எந்த படைப்புகளையும், புறப்பார்வையின் மூலம் மட்டுமே விளங்கிக் கொள்ள முயற்சித்ததே 'மேற்கத்திய பகுத்தறிவு'ப் பார்வையின் குறைபாடாகும். உலக அளவில் இந்த குறைபாட்டை விளங்கி,  Hermeneutics  என்ற அறிவியல் அணுகுமுறையை வளர்த்துள்ளார்கள். கணினி தகவல் அமைப்பிலும் அதைப் பயன்படுத்த வாய்ப்பிருப்பதும் வெளிப்பட்டுள்ளது. 
(http://en.wikipedia.org/wiki/Hermeneutics)

Hermeneutics science என்றால் என்ன என்பது பற்றியும், தொல் தமிழ், தொல் தமிழர் பற்றிய ஆய்விற்கு அதன் முக்கியத்துவம் பற்றியும் மலேசியாவில் வாழும் அறிஞர் உலகன் விளக்கியுள்ளார். (http://ulagank.tripod.com/simplehmsc.htm)  மனிதரின் அகப் பார்வையைப் புறக்கணித்து, புறப்பார்வையின் மூலமே பண்டைய இலக்கியங்களையும் புராணங்களையும் விளங்கிக் கொள்ள முடியாது என்பது பற்றிய ஆய்வுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. பண்டைய இலக்கியங்களை விளங்கிக் கொள்வதற்கான அந்த‌  அறிவுபூர்வ அணுகுமுறையை, தமது ஆய்வுகளின் மூலம் அவர் வளர்த்து வருகிறார்.

அமெரிக்காவில் வாழும் ராஜிவ் மல்கோத்ரா (http://rajivmalhotra.com/), மலேசியாவில் வாழும் உலகன் (https://sites.google.com/site/ulagansessays/), தமிழ்நாட்டில் வாழும் குருமூர்த்தி (http://www.gurumurthy.net/ )   போன்ற அறிஞர்களின் இணையதளங்களில் உள்ள கட்டுரைகள் மூலம்  பண்டைய இலக்கியங்களையும், புராணங்களையும், தொல்பொருள் சான்றுகளையும் விளங்கி, நிகழ்கால சிக்கல்கள்(Controversies)  பற்றி தெரிந்து கொள்வதில்,  'மேற்கத்தியப் பகுத்தறிவு' (Western Rationalist) அணுகுமுறையின் வரை எல்லைகள் (Limitations)  பற்றிய தெளிவினைப் பெறலாம். 

‘வந்தது வளர்த்து வருவது ஒற்றி’ (சிலப்பதிகாரம்; அரங்கேற்று காதை 65) என்ற அணுகுமுறையில், தம்மை வளர்த்துக் கொள்ள தவறுபவர்கள், கால ஓட்டத்தில் சருகாகி உதிர்வதைத் தவிர்க்க முடியாது. 'வந்ததை எல்லாம்', தமிழுக்கும் தமிழருக்கும் 'கேடு' என்று கருதி, தமது 'அறிவு வரை எல்லைகள்' (intellectual limitations) பற்றிய புரிதலின்றி, ஈ.வெ.ரா அவர்கள் பயணித்தன் விளைவாக, தமிழ்நாடானது 'குருட்டு பகுத்தறிவு பார்வை' நோயில் சிக்கி, உணர்ச்சிபூர்வ போக்குகளை வளர்த்து, தமிழ்நாட்டை 'அறிவுப் பாலைவனமாக்கி' வருகிறதா? என்ற விவாதம் அரங்கேற வேண்டிய நேரம் வந்து விட்டது.

குறிப்பு: மேற்கத்திய கிறித்துவ உலகில், அந்த சமூக வரலாற்றில் உருவான 'மனித உரிமை' கோட்பாட்டை, இந்தியாவில் 'இறக்குமதி' செய்து, இந்திய சமூகத்தின் பாரம்பரியம், பண்பாடு அடிப்படைகளில், இயற்கையுடனும், சமூகத்துடனும் ஒரு மனிதருக்குள்ள தொடர்பைத் துண்டித்து, 'மனித உரிமை' என்று முன் வைப்பது சரியா? http://tamilsdirection.blogspot.com/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html

No comments:

Post a Comment