Saturday, November 29, 2014



                               ஒரு மடலும், விளக்கமும்


திண்டுக்கல் திரு. முருகானந்தம் அவர்கள் எனது கட்டுரைகள் தொடர்பாக எழுதிய மடல் தொடர்பான  முன்னுரையும், பின்  அவரின் முழு மடலும், அதன் கீழ்,  எனது விளக்கத்தையும் பதிவு செய்துள்ளேன்.

முன்னுரை:1944க்கு முன் பெரியாருக்கும் முத்துச்சாமி வல்லத்தரசுக்கும், பெரியாருக்கும் ஜீவானந்தத்திற்கும் இடையே நடந்த அறிவுபூர்வமான விவாதங்கள் அந்த காலக்கட்ட 'குடி அரசு' இதழ்களில் வெளிவந்துள்ளன. அந்த இதழ்கள் சென்னை பெரியார் திடல் நூலகம் உள்ளிட்டு பல நூலகங்களில் இருக்கின்றன. 

1944க்குப் பின் பெரியாருக்கும் அண்ணாதுரைக்கும், பாரதிதாசனுக்கும் அண்ணாதுரைக்கும், பாரதிதாசனுக்கும், ஜீவானந்தத்திற்கும் இடையே நடந்த விவாதங்களைப் (பாரதிதாசன் வெளியிட்ட 'குயில்' இதழ்களில்) போல, அறிவுபூர்வ விவாதமானது உணர்வு பூர்வமாக தடம் புரளும்போது, விவாதப் பொருளின் எல்லையை விட்டு விலகி, விவாதத்தில் ஈடுபடுபவர்கள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதில் வெளிப்படும். திராவிடக் கட்சிகளில் அது வெளிப்படுவது என்பது, அந்த உணர்வுபூர்வ வரலாற்றுப் போக்கின் பாதிப்பகும்.

உதாரணமாக, கீழ்வரும்‌  மடலில், "பார்ப்பனர்களின் தனிப்பட்ட உறவுக்காக பெரியார் தொண்டர்கள்  பற்றி மிகைப்படுத்தி கருத்துக்கள் வெளியிடுவது சரியா?" என்று என்னை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளதானது, இந்த வகையைச் சாரும். அதிலும் சிலர் விவாதத்தின் ஊடே, தமது கருத்தை மறுப்பவர்களை 'தமிழின விரோதி', 'துரோகி' என்று கடவுளால் நியமிக்கப்பட்ட நீதிபதிகளைப் போல் 'தீர்ப்புகள்' வழங்குவதும் இந்த வகையைச் சாரும்.  

எனது செல்வம், செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ள, நான் "பார்ப்பனர்களின் தனிப்பட்ட உறவுக்காக" எனது கருத்துக்களை வெளியிடுவதாக வைத்துக் கொண்டாலும், 'எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' (திருக்குறள் 423) என்ற வ‌கையில் விவாதிப்பதே பயனுள்ளதாகும்.

மாறாக, 'யார், யார்' என்பவர்கள் மீது கவனத்தைச் செலுத்தி, அவர்களின் 'யோக்கியதைகளை' கண்டுபிடிக்க முயன்று, திசை திரும்பினால், 'அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு'  என்பதை இழக்க நேரிடும். அதிலும் பேச்சில், எழுத்தில் 'தீவிரமான' முற்போக்குகளாகத் தம்மை வெளிப்படுத்திக் கொண்டு, சொந்த வாழ்வில் இழிவாக வாழ்பவர்களைக் கண்டுபிடித்தால் கூட, அவர்களிடமிருந்து ஒதுங்கி வாழ்வது தான் தமிழ்நாட்டில் புத்திசாலித்தனமாகும். அந்த அளவுக்கு அவர்களுக்கு, மீடியா செல்வாக்கு உள்ளிட்ட 'சமூக பலம்' இருக்கிறது. விவாதங்கள் அறிவுபூர்வ தளத்திற்குள் நடைபெறுவதை ஊக்குவிப்பதன் மூலமே, அது போன்ற, சமூகத்திற்குக் கேடான 'சமூக பலங்களையும்' வெற்றி கொள்ள முடியும்.

திண்டுக்கல் திரு. முருகானந்தம் எழுதிய மடல்

பேரா.செ அ வீஅவர்களுக்கு,

வணக்கம்! தங்களது வலைப்பதிவில் படித்தவற்றில்  எனக்கு உள்ள மாற்றுக்கருத்துக்களைத் தங்களுடன் பகிர்ந்து  கொள்ளவிழைகிறேன்.

1. ”இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் ஒரு பெண் பருவமடைந்த பின் பாரம்பரிய முறையில் நடந்த சடங்குகள்(rituals)  ஆனவை, அந்த பெண்ணிற்கு உடலில் ஏற்படும் மாற்றங்களை வயதான பெண்கள் விளக்கி, மனவியல் நோக்கில் பக்குவப்படுத்தி, ஆக்கபூர்வமான வகையில் செயல்பட்டதை இன்று நவீன ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. (குறிப்புகீழே)அதுபோன்றசடங்குகளை 'மூடநம்பிக்கை' என்று 'பகுத்தறிவு' பிரச்சாரம்செய்ததுசரியா?”

.பூப்புனித நீராட்டுவிழா  தேவையா? அறிவுச்சுடர்  வெளியீடு  சிறுநூல் ஒன்று வெளிவந்துள்ளது. (தோழர்அரசெழிலன்- arasezhilanpr@gmail.com;   அவர்களைத் தொடர்பு கொண்டால் மேற்கண்ட நூல் கிடைக்கும்) அதில் மருத்துவர், பேராசிரியர்,  வழக்கறிஞர்  உள்ளிட்ட பெண்ணுரிமை ஆர்வலர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள் அதில் உள்ளன. கட்டுரையாளர்கள் அனைவரும் பெண்களே. பெண்விடுதலைக்  கோணத்தில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளைத் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். அறிவியல்ரீதியான அணுகுமுறையைக்கையாளாமல் மரபு, பண்பாடு என கூறி ஆணாதிக்க மரபுகளைக் காப்பாற்றுவது சரியா? ஒடுக்கப்படும் (சாதி) மக்களுக்கான உரிமையை விட உயர்சாதிப் பார்ப்பனர்களுக்காக பரிந்து பேசுவது சரியா?.
ஃப்ளக்ஸ் வைப்பது காதணிவிழா,வசந்தவிழா, திருமணம் உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கும் நடைபெற்று வருகிறது. அதில் பூப்புனித நீராட்டு விழாவும்தான்.பகுத்தறிவாளர்கள் இதற்கு  விழா எடுப்பதும்  இல்லை., ஃளக்ஸ் வைப்பதும் இல்லை.

2.     ”தமிழ்நாட்டில் பாரம்பரியப் பண்பாடு மதிப்புகளைக் காவு கொடுத்து, அந்த 'தரகு நோயில்' ஒப்பீட்டளவில் பிராமணர்களை விட அதிகம் சிக்கியவர்கள் பிராமணரல்லாதோரே என்பதும், அதில் 'தீவிரமாகசிக்கியுள்ளதாக' நான் கண்டவர்கள் பெரும்பாலும் பெரியார்இயக்கத்தில்உள்ளவர்களாகவும், கிறித்துவர்களாகவும்  உள்ளார்கள் என்பதும்  என் அனுபவமாகும்.”

சாதி  ஒடுக்குமுறையைக் கண்டுகொள்ளாமல் மொழி.   மரபுகளை மட்டும் உயர்த்திப் பிடிப்பது சரியா?

பார்ப்பனர்களின் தனிப்பட்ட உறவுக்காக பெரியார் தொண்டர்கள் பற்றி மிகைப்படுத்தி கருத்துக்கள் வெளியிடுவது சரியா?. பெரியார்அமைப்புகளையும், திராவிட அரசியல் கட்சிகளையும் பிரித்துப் பார்க்காமல் கருத்துரைப்பது சரியா?

3.தமிழ்நாட்டுப் பிராமணர்கள் தமிழ்வழிக் கல்வியைக் காப்பாற்றி, தமிழின் மரணப்பயணத்தைத் தடுத்துநிறுத்த வாய்ப்புள்ளது என்பது எனது ஆய்வுகளில் வெளிப்பட்டுள்ளது. அது தவறு  என்ற அறிவுபூர்வமாக நிரூபிப்பதை நான் வரவேற்கிறேன். தமிழ்நாட்ட ப் பிராமணர்கள் தமிழைக் காப்பாற்றுவார்கள் என்று எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ள வாய்ப்பானது, தமிழ்நாட்டிலிருந்து சென்னையை இழக்க பிராமணர்கள் விட மாட்டார்கள் என்ற  பெரியார்ஈ.வெ.ரா அவர்கள் வெளிப்படுத்திய நம்பிக்கையுடன் ஒப்பிடக்கூடியதாகும்”

.சமச்சீர்க்கல்வி, தாய்மொழிக்கல்வி நடைமுறைக்கு வர பார்ப்பனர்கள் போராடியதாக தகவல்உண்டா?தாய்த்தமிழ்த் தொடக்கப்பள்ளி நடத்தி நட்டப்பட்ட பெரியார்தொண்டர்களை ஆதாரம் காட்ட முடியும்.தாய்த் தமிழ்ப்பள்ளிகளை வளர்த்தெடுப்பதை விடுத்து பார்ப்பனர்களை நம்பியிருப்பது சரியா? தாய்மொழிக்கல்விக்கு தடையாய் இருப்பவர்கள் ஊழலரசியல்வாதிகளும், தனியார்பள்ளி வியாபாரிகளும்தான். இவர்களுக்குஎதிராகப்போராடுகிறார்களாபார்ப்பனர்கள்?

தமிழ்வழிக்கல்விக்காக தோழர்பொழிலன் அமைப்பினர் மேற்கொண்டு வரும் முயற்சிகள் வெற்றி பெற உதவத்தயாரா?

வீரசாவர்க்கர் ‘எரிமலை’ நூல்  எந்தபதிப்பகம் வெளியிட்டுள்ளது. தகவல் கொடுக்க இயலுமா?

நீதிக்கட்சியில் செயல்பட்ட பார்ப்பனர்கள் பற்றிய குறிப்புகள் எந்த நூலில்  அல்லது இதழ்களில் கிடைக்கும்?

1944 க்கு  முன் நடைபெற்ற  அறிவுப்பூர்வவிவாதங்கள்  உள்ள செய்தித்தொகுப்புகள் கிடைக்குமா? அதற்குரிய   செலவுகளை  ஏற்றுக்கொள்ளத் தயாராய்   உள்ளேன்.

தங்களது இசை பற்றிய கட்டுரைகள் வெளிவந்துள்ள நூல் தமிழில் இருந்தால் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

தங்களது  “தமிழர்திசை”  வலைப்பதிவில்  உள்ள கட்டுரைகளைப் படித்து வருகிறேன். எனது நட்பு வட்டத்தில்  விவாதித்து   வருகிறேன்.

சிலமாதங்களுக்கு முன் நான் படித்த நூல் ஜெ.கயல்விழிதேவி எழுதிய “குடியரசுஇதழ்கவிதைகள்” எனும்  முனைவர் பட்ட  ஆய்வு. அதில் தான்  நீதிக்கட்சியில் பார்ப்பனர்களும் இருந்தார்கள் எனகுறிப்பு  இருந்தது.  விரிவான செய்திகள் இல்லை. விரிவான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள உதவும் நூல்கள், குறிப்புகளுக்கு வாய்ப்பு  இருந்தால் தெரியப்படுத்த முடியுமா?

தங்களது கட்டுரைகளில் விவாதத்திற்குரிய செய்திகள்  நிறைய  உள்ளன. தொடர்ந்து எனது கருத்துக்களைப் பதிவு செய்வேன். தங்களது வலைப்பதிவில் உள்ளவற்றை நூலாக்கினால் அது விரிவான வட்டத்தினைச் சென்றடைய ஏதுவாகும்.

முருகானந்தம்,
திண்டுக்கல்.

விளக்கம்: அடுத்து மடலில் எழுப்பப்பட்டுள்ளவைக்கான விளக்கங்கள் வருமாறு: 
1."பூப்புனிதநீராட்டுவிழாதேவையா?அறிவுச்சுடர்வெளியீடுசிறுநூல்ஒன்றுவெளிவந்துள்ளது"

 .அந்த வெளியீட்டில் உலக அளவில் நடந்துள்ள, நான் குறிப்பிட்டுள்ள ஆய்வுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதா? உலக அளவில் நடந்துள்ள, நான் குறிப்பிட்டுள்ள ஆய்வுகள் 'அறிவியல்ரீதியான அணுகுமுறையைக்' கையாளவில்லையா?( குறிப்பு கீழே) அதை விடுத்து, "அறிவியல்ரீதியான அணுகுமுறையைக் கையாளாமல், மரபு, பண்பாடு என கூறி ஆணாதிக்க மரபுகளைக்  காப்பாற்றுவது சரியா?" என்று கேள்வி எழுப்புவது சரியா? கூடுதலாக "ஒடுக்கப்படும் (சாதி) மக்களுக்கான உரிமையை விட, உயர்சாதிப் பார்ப்பனர்களுக்காக பரிந்து பேசுவது சரியா?" என்ற கேள்விக்கு இந்த விவாதப் பொருளில் இடம் இருக்கிறதா? காதணிவிழா, வசந்தவிழா, திருமணம், பூப்புனித நீராட்டுவிழா உள்ளிட்ட சடங்குகள் ஒவ்வொன்றும் சமூக வரலாற்றில் எந்தெந்த காலக்கட்டத்தில், எந்த சமூக சூழலில் உருவானது, அதன்பின் என்னென்ன காரணங்களால், என்னென்ன மாற்றங்கள் நடைபெற்று இன்றுள்ள நடைமுறைகளாகியுள்ளன, என்பது பற்றி உலக அளவில் என்ன ஆய்வுகள் நடந்து வந்துள்ளன என்பதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல்,அவை தொடர்பான விவாதத்தில்,அந்த கேள்வியை எழுப்புவது சரியா?  'ஆரியப் படையெடுப்பு' தொடர்பாக அண்மைக் காலங்களில் வெளிப்பட்டுள்ள ஆய்வுகளைக் கணக்கில் கொள்ளாமல், இன்னும் அதையே கிளிப்பிள்ளைப் போல் சொல்லும் அணுகுமுறையில் இது போன்ற கேள்விகள் எழுப்பப் படுகிறதா?

2 . “தமிழ்நாட்டில் பிராமணர், பிராமணரல்லாதோர் வேறுபாடுகளின்றி, பெரும்பாலான, குறிப்பாக வசதி வாய்ப்புகளில் உயர்ந்து வாழும் குடும்பங்களில், ஆங்கில வழி, மற்றும் திரிந்த மேற்கத்திய மோகத்தில், சமூக ஒப்பீடு நோயில் சிக்கியுள்ள‌ பெற்றோர்களின் கனவுகளுக்காக, ஒரு வகையிலான சமூகச் சிறைக் கூண்டுகளில் குழந்தைகள் வளர்வது சகிக்க முடியாத கொடுமையாகும்.” என்பதை முந்தையப் பதிவில் பார்த்தோம். அதே போல், “ செல்வாக்குள்ள ந‌பர்களிடம் நாய்போல் குழைந்து காரியம் சாதிக்கும் திறமைகளை வளர்ப்பதில் அறிவு உழைப்பைக் குவியப்படுத்தி(focused) , செயல்பட வைப்பது இந்த 'தரகு' நோயின் சிற‌ப்பம்சமாகும்.” என்பதையும் முந்தையப் பதிவில் பார்த்தோம். “(Dt. October 19, 2014 -தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (8) தமிழ்நாட்டுப் பிராமணர்கள் தமிழைக் காப்பாற்றுவார்கள்)

சமூக ஒப்பீடு நோய் பற்றியும், அதனுடன் தொடர்புள்ள 'தரகு' நோய் பற்றியும் உள்ள விவாதத்தில்," சாதிஒடுக்குமுறையைக்  கண்டு கொள்ளாமல் மொழி. மரபுகளை மட்டும் உயர்த்திப் பிடிப்பது சரியா?" என்ற கேள்விக்கு என்ன தொடர்பு உள்ளது? 'மொழி. மரபுகளை மட்டும் உயர்த்திப் பிடிப்பது' என்பது அந்நோய்கள் தொடர்பான விவாதத்தில் சம்பந்தமில்லாதது.  

பிராமணர், பிராமணரல்லாதோர் வேறுபாடுகளின்றி,  அந்நோய்களால் பாதிக்கப்பட்டதைக் குறிப்பிட  பின், " 'தீவிரமாக சிக்கியுள்ளதாக' நான் கண்டவர்கள் பெரும்பாலும் பெரியார் இயக்கத்தில் உள்ளவர்களாகவும், கிறித்துவர்களாகவும் உள்ளார்கள் என்பதும் என் அனுபவமாகும். விரிவான சமுக ஆய்வின் மூலம் இது சரியா/ அல்லது தவறா? என்பதும் வெளிப்படலாம்." என்ற‌ எனது அனுபவத்தை நான் வெளிப்படுத்தக் கூடாதா? அது சரியா? தவறா? என்று ஆராயப்பட வேண்டியது என்றும் தானே குறிப்பிட்டுள்ளேன்.

 அதன்பின்னும், "பார்ப்பனர்களின் தனிப்பட்ட உறவுக்காக பெரியார் தொண்டர்கள் பற்றி  மிகைப்படுத்திகருத்துக்கள் வெளியிடுவது சரியா?" என்று என் மீது தனிப்பட்ட முறையில், 1944க்குப் பின் உருவாகி வளர்ந்த 'உணர்வுபூர்வ போக்கில்', குற்றம் சுமத்துவது சரியா? 

கூடுதலாக‌.
"பெரியார்அமைப்புகளையும், திராவிட அரசியல் கட்சிகளையும் பிரித்துப் பார்க்காமல் கருத்துரைப்பது சரியா?" என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறதா?

3. இந்துத்வா ஆதரவு 'சுதேசி இயக்கம்' இந்தியாவில் தாய்மொழிக் கல்வியை ஆதரித்து செயல்படும் இயக்கமாகும். பல வருடங்களுக்கு முன், முதலில் தியாகு அவர்கள் 'தாய்த் தமிழ்ப் பள்ளி' தொடங்கியபோது, அதன் அழைப்பிதழில் 'புரவலர்களாக' இடம் பெற்றவர்களின் குடும்பப் பிள்ளைகளெல்லாம் ஆங்கில வழியில் படித்துக் கொண்டிருந்தவர்கள். தமது குடும்பப் பிள்ளைகளை ஆங்கில வழியில் படித்து வைத்துக் கொண்டு,  தமிழ் வழியை ஆதரித்து எழுதும் , மேடையில் பேசும், போராட்டம் நடத்தும்  தமிழ்.திராவிடக் கட்சித் தலைவர்களின், தமிழ் அறிஞர்களின், பேராசிரியர்களின் 'இரட்டை வேட'ப் போக்கை எதிர்த்து, எவராவது, எந்த இயக்கமாவது, குறைந்த பட்சம் கண்டித்திருக்கிறார்களா? அத்தகையோரைப் புரவலராகக் கொண்டு, 'தாய்த் தமிழ்ப் பள்ளிகள்' தொடங்குவது சரியா? அரசுப் பள்ளிகளில் படிக்கும் குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகள் மட்டும் தமிழ் வழியில் படிக்க வேண்டுமா? அந்த 'தாய்த் தமிழ்ப் பள்ளி' புரவலர்களின் வழியில், குப்பனும் சுப்பனும் பயணிக்கத் தொடங்கி விட்டார்கள். தமிழ்வழி அரசுப் பள்ளிகள் படிக்க மாணவரின்றி மூடப்பட்டு வருகின்றன. தமிழ்வழி அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகள் மூடப்படுவதைத் தடுக்க, என்னால் இயன்ற முயற்சிகளை நான் மேற்கொண்டு வருகிறேன்.

சமச் சீர்க் கல்வியானது தமிழ் வழிக் கல்வித் திட்டம் அல்ல. அது தொடங்கிய பின், தமிழ்நாட்டில்  International schools   புற்றீசலாகத் தொடங்கப்பட்டு வருகின்றன. அந்த கல்வி வியாபாரத்திற்கு உதவவே, சமச் சீர்க் கல்வி தொடங்கப்பட்டுள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

வீர சவர்க்காரின் 'எரிமலை'      கிடைக்குமிடம்: ‘எரிமலை அல்லது முதலாவது இந்திய சுதந்தர யுத்தம்’ - வீர சாவர்க்கர் - அல்லையன்ஸ்

நீதிக்கட்சியில் செயல்பட்ட பார்ப்பனர்கள் பற்றிய குறிப்பு: “The party began to accept Brahmin members only in October 1934.” pp. 102–103; Irschick, Eugene F. (1986). Tamil revivalism in the 1930s. Madras: Cre-A.

‘தமிழ் இசையியல் - புதிய கண்டுபிடிப்புகள்’ -  செ. அ. வீரபாண்டியன் (2009)-  சேகர் பதிப்பகம், சென்னை‍ 78

எனது ஆய்வுக் கட்டுரைகளை (தமிழிலும் ஆங்கிலத்திலும்) படிக்க‌ : http://www.musicresearch.in/categorywise.php?flag=R&authid=13

எனது "கட்டுரைகளில் விவாதத்திற்குரிய செய்திகள் நிறைய உள்ளன" என்பது முற்றிலும் சரியே. உணர்வுபூர்வ போக்குகளைத் தவிர்த்து, விளிம்பு வழி(Tangential)  வெளியேறாமல், விவாத வட்டத்திற்குள் ஆழ்ந்து வெளிவரும் மறுப்புகளை வரவேற்கிறேன். அவற்றைப் பரிசீலித்து, தவறுகள் இருப்பது வெளிப்பட்டால், சிக்கல் இன்றி, பகிரங்கமாக அதை அறிவித்துத்  திருத்திக் கொள்வதில் எனக்கு தயக்கமில்லை.

"தங்களது வலைப்பதிவில் உள்ளவற்றை நூலாக்கினால் அது விரிவான வட்டத்தினைச் சென்றடைய ஏதுவாகும்." என்ற ஆலோசனைக்கு நன்றி. செயல்படுத்த வாய்ப்பு கிடைக்கும் போது, நிச்சயம் செய்கிறேன்.

குறிப்பு 1: 'மேற்கத்தியப் பகுத்தறிவு' அணுகுமுறையின் வரை எல்லைகள்(Limitations) பற்றிய புரிதலுடன் ( post Dt.November 16, 2014  'மேற்கத்தியப் பகுத்தறிவு' (Western Rationalist) அணுகுமுறையின் வரை எல்லைகள் (Limitations)') மேற்கொள்ளப்படும் 'அறிவியல் அணுகுமுறை'  தான்,பெரியார் ஆதரவாளர்கள் பின்பற்றும்  'அறிவியல் அணுகுமுறை' யா?என்பதும் ஆய்விற்குரியதாகும்.

குறிப்பு 2:மரபு, சடங்கு போன்றவைகள் சமூக வரலாற்றில் எந்தெந்த காலக்கட்டத்தில், எந்த சமூக சூழலில் உருவானது, அதன்பின் என்னென்ன காரணங்களால், என்னென்ன மாற்றங்கள் நடைபெற்று இன்றுள்ள நடைமுறைகளாகியுள்ளன, என்பது பற்றி உலக அளவில் நடைபெற்று வந்த ஆய்வுகளைக் கணக்கில் கொள்ளாமலேயே, பெரியார் மையம் உள்ளிட்ட 'பகுத்தறிவு' வெளியீடுகள் தமிழ்நாட்டில் வெளிவந்துள்ளன. அவற்றில் சேர்ந்துள்ள 'அழுக்குகளை' அகற்றி, அவற்றை , உலகில் நடந்து வரும் ஆய்வுகளின் அடிப்படையில் வளர்த்தெடுக்காமல் ஒழிக்க முயல்வது தவறு. தமிழை ஒழித்துவிட்டு, ஆங்கிலத்தை வீட்டு மொழியாக்கினால் உருப்படலாம் என்று பெரியார் வெளிப்படுத்திய கருத்தானது, அந்த வகை தவறே ஆகும்.

தமிழ்நாட்டில், வெள்ளைக்காரர் வருகைக்கு முன், 'அதிக' கல்வியறிவு பெற்றிருந்தவர்கள் 'கம்மாளர்கள்', பிராமணர்கள் அல்ல என்பது பற்றிய சான்றுகள் தெரியாமலேயே,பெரியார் மையம் உள்ளிட்ட 'பகுத்தறிவு' வெளியீடுகள் தமிழ்நாட்டில் வெளிவந்துள்ளன. இசையில் உயர்வு, தாழ்வு, தீண்டாமை போன்றவையெல்லாம் காலனியத்தின்' நன்கொடை' என்று எனது ஆய்வுகளின் அடிப்படையில் பதிவு செய்துள்ளேன்.

'பறை, பறையர்' தொடர்பாக நான் மேற்கொண்ட ஆய்வுகளில், தமிழ்நாட்டில் இன்றுள்ள சாதி அமைப்பு சங்க காலத்தில் இல்லை.  எனவே தமிழ்நாட்டில் சமூக செயல்தர  ஏணி (Social Functional Hierarchy ) ,   எந்த காலக் கட்டத்தில்  உயர்வு, தாழ்வு, தீண்டாமை போன்றவையாக வெளிப்பட்டன என்பது குறித்த ஆய்வுகளுக்கான அவசியம் எழுந்துள்ளது.

ஆரியர், திராவிடர் உள்ளிட்டு பெரியார் வெளிப்படுத்திய நிலைப்பாடுகள் தொடர்பாக, இன்று உலகில் என்னென்ன ஆய்வுகள் நடைபெற்று, என்னென்ன முடிவுகள் வெளியாகி வருகின்றன என்பது பற்றிய 'அறியாமையில்' உழன்று, 'உணர்வுபூர்வமாகவும், பெரியாரால் கண்டிக்கப்பட்ட போராட்ட வடிவங்களை 'உணர்வுபூர்வமாக'க் கையாண்டும், சாதாரண மக்களிடமிருந்தும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்தும் அந்நியமாகியும், அறிவுபூர்வ விமர்சனப் போக்கை இழந்து , 'உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ்பவர்கள் விட்டில் பூச்சிகள் போல் அழிய,  சமூக ஒப்பீடு நோயிலும், தரகு நோயிலும் சிக்கிய 'கள்வர்கள்' ' ஆதிக்கத்தில், தமிழின், தமிழ் பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றின் மரணப் பயணம் தொடங்கி விட்டதா? த‌மிழ்நாட்டில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஆங்கிலோ இந்தியர்கள் போல், வேரற்ற 'தமிங்கிசர்களாக' தமிழர்கள் வரும் காலத்தில் மாறுவார்களா?  என்ற கவலை எனக்கு வந்துள்ளது. அது தவறானால், எனக்கு மகிழ்ச்சியே. 


No comments:

Post a Comment