Thursday, December 4, 2014


'காலனிய' மன நோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும் (2)



தமிழ்நாடு அறிவுத் துறையிலும், உடலுழைப்புத் துறையிலும் பதர்க்காடாக வளர்ந்து வருகிறதா?


" காலனி ஆட்சியில் அடிமைப்பட்டு, பின் 'விடுதலை'யான நாடுகளில் உள்ள மக்களின் சமூக மனவியலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டு,அவர்கள் வாழ்வைச் சீரழித்து வருகின்றன என்பது பற்றி உலகில் பல ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அத்தகைய 'காலனிய மனநோயாளிகள்' பற்றிய ஆய்வுகள் பற்றிய தகவல்களை முதலில் பார்ப்போம். அதன் அடிப்படையில் திராவிட இயக்க வரலாற்றின் 'பலனாக' மேலேக் குறிப்பிட்ட 'வித்தியாசமான மனநோயாளிகள்' தமிழ்நாட்டில் வளர்ந்து வருவதை விளங்கிக் கொள்வது எளிதாகும்." என்பது பற்றிய விளக்கத்தை ஏற்கனவே இத்தலைப்பின் முதல் பதிவில் பார்த்தோம்.
(http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html)

காலனியம் தூண்டிய கடுமையான தாழ்வு மனப்பான்மையில் உச்சக்கட்ட சமூக ஒப்பிடு (social Comparison) நோயிலும், அதனுடன் தொடர்புடைய தரகு நோயிலும் சிக்கி,'சாதனையான' ஊழல்களின் ஊடே தமிழ், தமிழ் பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றின் மரணப் பயணங்கள் தொடங்கி விட்டதா?  அதனால், த‌மிழ்நாட்டில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஆங்கிலோ இந்தியர்கள் போல், வேரற்ற 'தமிங்கிலிசர்களாக' தமிழர்கள் வரும் காலத்தில் மாறுவார்களா? போன்ற கேள்விகளையும் முந்தையப் பதிவுகளில் பார்த்தோம்.

1944இல் திராவிடர் கழகம் தோன்றியபின், பொது அரங்கில் அறிவுபூர்வமான விவாதங்கள் உணர்ச்சிபூர்வமாக தடம் புரண்டதால்,சமூக ரத்த ஓட்டத்தில் 'லாப,நட்டம்' பார்க்கும் கள்வர் நஞ்சு’ கலந்தது.(‘சமூக இழைகளும் , சமூகப் பிணைப்புகளும்   (Social Fibers & Social Bonds)’;https://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html)  அதனால்,  'திராவிட மன நோயாளித்தனம்' உருவாகி, 'காலனிய மனநோயாளித்தனத்தின்' பின்பலத்தில் 'வளர்ந்து',  இன்று என்ன நிலையில் இருக்கிறது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

தமிழ்நாட்டில் 1970‍களுக்கு முன் வாழ்ந்த ஆன்மிகவாதிகள் அனைவருமே புண்ணியவான்கள். 'இன்றைய பக்திகளின்' அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகளை, அவர்களால் 'கற்பனை' கூட  செய்திருக்க முடியாது.

தமது கட்சித் தலைவர்களின், நடிகர்களின் 'கட் அவுட்'களை கடவுளாக பாவித்து, பாலாபிசேகம் உள்ளிட்ட வழிபாடுகளுக்கு உட்படுத்தும் போக்கில் ஈடுபட்டுள்ள அனைவருமே 'காசுக்காக' அதை செய்வதாக கருத முடியாது. அவர்களுக்காக 'தீக்குளித்தவர்களில்' (தமது குடும்ப, ஊர் நலனுக்காக 'தற்கொலையை', மீடியா உதவியுடன் 'தீக்குளித்ததாக மாற்றியதாக சொல்லப்படுபவை தவிர்த்து)'உண்மையாக' தீக்குளித்தவர்கள்,  தமது 'கடவுளுக்காக', தமது உயிரையே அர்ப்பணிக்கும் அளவுக்கு, 'அந்த பக்தி'யை வெளிப்படுத்தியதை யாரும் மறுக்கமுடியாது. அவ்வாறு தீக்குளித்த பிரச்சினைகளில், அந்த 'கடவுள்' தலைவர்கள், எந்த அளவுக்கு உண்மையாக இருந்தார்கள், அல்லது சுயநலத்திற்காக 'வழுக்கினார்கள்', என்பது தனியாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.

1965 முதல் இன்றுவரை தமிழ்நாட்டில் தீக்குளித்தவர்கள் எல்லாம் முதல் தலைமுறையாகப் படித்த, பெரும்பாலும் கிராமப்புற குப்பன் சுப்பன் வீட்டு பிள்ளைகளே ஆவர். தமிழ்/திராவிட  இயக்க தலைவர்கள், தமிழறிஞர்கள், வசதியான தமிழர்கள், நன்கு படித்து 'செட்டிலான' தமிழர்கள், இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்து 'ஏழ்மையிலிருந்து மீண்டு வசதியான' இலங்கைத் தமிழர்கள்,உள்ளிட்ட‌ குடும்பப் பிள்ளைகள் எல்லாம், தமது 'கொள்கை, தலைவர், நடிகர்'  'பக்தியை' தமது கல்வியையும், வாழ்வையும் கெடுத்துக் கொள்ளும் அளவுக்கு (தீக்குளிக்கும் அளவுக்கு)   'எல்லை' தாண்டாமல்,   'புத்திசாலித் தனமாகவே' வாழ்ந்து வருகிறார்கள்.

தமிழர்களில் 'அறிவு ஆற்றல்' உள்ளவர்களில் 'புத்திசாலிகள்', தமது புலமையை வளர்ப்பது, ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது போன்ற 'புத்திசாலித்தனமற்ற' வகையில் வாழாமல், தமது 'கவர்ச்சிகரமான பேச்சு, எழுத்து, கவிதை'கள் மூலமாக‌  'தனித்துவமாக' மேலேயுள்ளவர்களுக்கு 'வாலாட்டி' 'வளரும்' 'புத்திசாலிகளாக'(?)  வாழ்கிறார்கள்.  இந்த 'புதிய' போக்கில் 'புத்திசாலித்தனமான' ஆன்மீக வழிகளில் பயணிக்க விரும்புபவர்களை 'பக்தர்களாக'க் கொண்டு,  'அதிர்ஷ்டம்' என்ற துருப்பு சீட்டினைப் பயன்படுத்தி, 'புதிய' சாமியார்களும் மடங்களும்  'வேகமாக' வளர்ந்து வருகிறர்கள்.

இந்த 'புதிய' போக்கில் 'வெற்றிகரமான கல்வி வியாபாரமாக' ஆங்கில வழிப் பள்ளிகள் புற்றிசல் போல் துவங்க, 'நன்கு படித்த' விபரமான தமிழர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்/திராவிட இயக்கத் தலைவர்கள் வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் 'ஆங்கில வழியில்' படிக்க, தமிழ்வழியின் அழிவுப் பயணம் தொடங்கியது;

விளையாட்டுப் பள்ளி முதல் ஆரம்பக் கல்வி வரை தாய்மொழி வழிக் கல்வியே குழந்தைகளின் புலன் உணர்வுகள் தொடர்புள்ள மூளை வளர்ச்சிக்கு (cognitive senses related brain growth) ஏற்றது என்ற உலகளாவிய ஆய்வு முடிவுகள் பற்றிய கவ‌லையின்றியே. ‍

தமிழில் 'கவர்ச்சிகரமாக','உணர்ச்சி போதையூட்டி', மேடையில் பேசுபவர்கள், எழுதுபவர்களில் பல‌ர், 'இழிவுக்கு இலக்கணமாக' வாழ்வதும், தமிழ்வழி வீழ்ச்சிக்கு துணையானது. மனிதருக்கான இழிவுகள் எல்லாம் ஒருவரிடம் இருப்பது அதிசயமாகும். திருச்சி பெரியார் மைய அனுபவம் மூலம், அது போன்ற 'அதிசய மனிதர்களை' அடையாளம் கண்டேன். அத்தகைய மனிதர்கள், தமிழ்நாட்டில் எப்போது, எப்படி உருவானார்கள்? என்று நான் மேற்கொண்ட ஆய்வே, இந்த கட்டுரைத் தொடருக்கு வழி வகுத்தது. நமக்கு ஏற்படும் 'கசப்பான' அனுபவங்களின், சமூகப் பின்னணி எவ்வளவு 'அரிய சிக்னல்களை'க் கொண்டிருக்கும் என்பதற்கும், அறிவுபூர்வமான விவாதத்தைத் தூண்டும் நோக்கிலான, இத்தொடர் சான்றாகிறது. 

இந்த போக்கில் வாழ்வதில் ஆர்வமின்றி, 'மனிதராக' வாழும் நன்கு படித்த தமிழர்கள் 'சித்தர்கள்' போல் சிறுபான்மையாகி வருகிறார்கள்.

எனவே புலமையாளர்களுடனும், உண்மையான ஆன்மீகத்துடன் வாழ்பவர்களுடனும் தொடர்புக்கு வாய்ப்பின்றி, முதல் தலைமுறையாக படித்த, பெரும்பாலும் கிராமப்புற குப்பன் சுப்பன் வீட்டு பிள்ளைகளில் 'வாலாட்டி வாழும்' போக்கில் சிக்காதவர்கள், தமக்குள்ள அறிவில் தமக்கு பிடித்த  'கொள்கை, தலைவர், நடிகர்'  மீது 'பக்தி' கொண்டு, முன்பு குறிப்பிட்ட வழிகளில் தமது கல்வியையும் வாழ்வையும் கெடுத்து வருகிறார்கள். படித்து ஓரளவு நன்கு ‘செட்டிலான’ குடும்பப் பிள்ளைகள், தமது 'ஆடம்பர செலவுக்காக' 'கொலை, திருட்டு, கொள்ளை, ஆட்கடத்தல்' போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள். 

1970‍களுக்கு முன் இக்குற்றங்கள் மிகக் குறைவாகவும், அதில் ஈடுபட்டவர்கள் வறுமையை சந்தித்த ஏழைகளுமாகவே இருந்ததும் கவனிக்கத் தக்கது. இக்குற்றங்களில் ஈடுபடும் 'வசதியான புத்திசாலிகள்' சட்டத்தின் பிடியில் சிக்காமலும், தவறி சிக்கினாலும் குறைவான' தண்டனையில், சிறையில் 'சுகமாக' வாழ்ந்து, விடுதலையாகி, தலைவர்களாகவும், வி.ஐ.பிக்களாகவும் வலம் வருகிறார்கள். அவ்வாறு வாழ்பவர்களை நேரில் பார்க்கும்போது மதிப்பதாகக் காட்டிக் கொள்பவர்களே, அவர்கள் முதுகுக்குப் பின்னால், அவர்கள் பணம் சம்பாதிக்க கடைபிடித்த வழிமுறைகள் பற்றி 'விலாவாரியாக' விளக்கி விவாதிக்க, அவை மீடியாக்கள் உதவியின்றியே மக்களிடம் வேகமாக பரவுகின்றன.

உடல் ரீதியாகவும்,உளரீதியாகவும் பாதிக்கப்பட்ட மக்களை நாம் அறிவோம். ஆனால் தாய்மொழிக் கல்வியற்ற, ஆங்கில வழிக் கல்வி மூலம் படைப்பாற்றல்(Creativity)/சுய உருவாக்கல் (originality) / நல்லொழுக்க மதிப்பீடுகள் (values) ரீதியில்,  பாதிக்கப்பட்ட மாணவர்கள்,  1970களிலிருந்து உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.

மனித உறவுகளில்  உண்மையான அன்புக்கு வறட்சி ஏற்பட்டுள்ள சூழலில்,  'அற்ப' காரணங்களுக்காக உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை 'தற்கொலைகள் செய்து கொள்வதும், கொலை செய்வதும், அபரீதமாக அதிகரித்து வருகிறது. தமது 'எதிர்பார்ப்புக்கு' ஏற்றவாறு இல்லாத குழந்தைகள்  மீது கோபமும் எரிச்சலும் கொள்ளும் பெற்றோர்கள் அதிகரித்து, அவர்களில் சிலர் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகின்றன. தமிழ்நாட்டில் 'ஆதிக்கத்துடன்' வலம் வரும் ‘சமூக ஒப்பீடு நோயே’,  இதற்குக் காரணம் என்பதை ஆய்வுகள் உணர்த்துகின்றன. (We find that people who spontaneously make frequent social comparisons experience more destructive emotions and behaviors. ‘Journal of Adult Development,’ Vol. 13, No. 1, March 2006 (_ 2006) ‘Frequent Social Comparisons and Destructive Emotions and Behaviors: The Dark Side of Social Comparisons’)

உண்மையான அன்புக்கு வறட்சி ஏற்பட்டு, சமூக ஒப்பிடு நோயில் சிக்கி, 'போட்டி போட்டு' முன்னேறும் மக்கள் சமுகத்தில் மனநோய்களும், குற்றங்களும் அதிக அளவில் அதிகரிக்கும் என்று உலக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Recent research suggests that rates of mental ill-health and crime are higher in competitive rather than caring societies (Arrindell, Steptoe, & Wardle, 2003) and are higher in materialistic societies (Kasser, 2002).

தமிழ்நாட்டில்  கட்டிட வேலைகளுக்கும், மொத்த வியாபாரக்கடைகளில் மூட்டை தூக்கும் வேலைகளுக்கும், கிராமங்களில் விவசாய வேலைகளுக்கும், வட நாட்டிலிருந்து 'தரகர்கள்' மூலம் வருவிக்கும் பணியாட்கள் குறைந்த சம்பளத்தில் அதிக வேலை செய்து, தமிழர்கள் உடலுழைப்புத் துறையில் 'பதராகும்' போக்கை வளர்த்து வருகிறர்கள். இந்த 'பதராகும்' போக்கின் ஊடே,   தமிழ்நாட்டில் தமிழர்களில் பலர் , எல்லா வகையான தரகுப் பணிகளிலும் 'நிபுணர்களா'க  செல்வம், செல்வாக்குடன் வளர்ந்து வள‌ர்கிறார்கள். 

தமிழ்ச் சமுகத்தில் உள்ளார்ந்த ஈடுபாடு (Passion)  என்றால் என்ன என்றே தெரியாத அளவுக்கு அறிவுப் புலத்தில் 'பதர்ப் போக்கு' வேகமாக வளர்ந்து வருகிறது.  உணவு, உடை, நாகரிகம், மொழி உள்ளிட்டு. நமது பாரம்பரியத்திடமிருந்தும், இயற்கையிலிருந்தும்  விலகி, 'சமூகம் எக்கேடு கெட்டால் என்ன?' என்று 'தெளிவாக' 'நாமும் நமது குடும்பமும் புத்திசாலித்தனமாக' வாழ்கிறோம். அதன் விளைவாக, நமது குழந்தைகள் பாரம்பரிய ஒழுக்கம், படைப்பாற்றல், தமது இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடு (Passions) அகியவற்றை இழந்து, 'எந்த வழியிலும்' போட்டி போட்டு 'மேலான மேற்கத்திய நாகரிக' வாழ்வுக்கு ஏங்கும் மனித ரோபோக்களாக வளர்கிறார்கள். குடும்பமானாலும், நட்பானாலும் இந்த போக்கிற்கு துணை புரியும் உறவுகளே வலிமை பெறுவதும், மற்றவை வலிவிழப்பதும்,  'பதர்ப் போக்கு செயல்நுட்பமாக' வெளிப்படுகிறது.

தனது வாழ்வில் லாபநட்டம் பார்க்காத உண்மையான அன்புடன், குடும்பத்தில், நட்பு வட்டத்தில், சமூகத்தில்  வாழ்பவர்கள், சமுகத்தை வளர்ச்சிப் பாதையில் பயணிக்க துணை புரிபவர்கள் ஆவர். அத்தகைய அன்போ, ஒழுக்க மதிப்பீடுகளோ இல்லாமல், வசதியிலும் செல்வாக்கிலும் இருப்பவர்களுக்கு 'வாலாட்டி' தமது வசதி வாய்ப்பை உயர்த்துவதிலேயே தமது வாழ்வின் 'இலட்சியமாக' கருதி வாழ்பவர்கள் 'ஆதிக்கத்தில்', அதன் விளைவான 'பதர்ப் போக்கு செயல்நுட்பத்தில்',  தமிழ்நாடு சிக்கியுள்ளதா? சிக்கியிருந்தால், அது 'திராவிட மன நோயாளித் தனத்தின்' விளைவா? என்பது ஆய்விற்குரியதாகும். அத்தகைய 'திராவிட இலட்சியவாதிகள்' , எந்த தவறுகளையும் 'அஞ்சாமல்' ( 'அச்சம் என்பது மடமையடா' என்ற போக்கில்) செய்யும் திறமைகளில் , வெளிப்படுத்திய 'வாழ்வியல் வெற்றி இரகசியங்கள்' ஏற்கனவே பதிவாகியுள்ளன.  
(http://tamilsdirection.blogspot.com/2013_10_01_archive.html

வசதியிலும் செல்வாக்கிலும் இருப்பவர்களுக்கு 'வாலாட்டி', தமது வசதி வாய்ப்பை உயர்த்துவதையே, தமது வாழ்வின் 'இலட்சியமாக' கருதி வாழ்பவர்கள் எல்லா காலத்திலும் இருந்திருக்கலாம்.  அத்தகையோர் சமூகத்தில் மிக சிறுபான்மையாகவும், சமூகத்தின் 'வி.ஐ.பி'க்களாக மதிக்கப்படாமலும், சங்க காலம் முதல் 1967 வரை தமிழ்நாட்டில் இருந்ததாக,  நானறிந்த வரலாற்றுச் சான்றுகள் உணர்த்துகின்றன.

தமிழ்நாட்டுத் தொலைக் காட்சிகளில் 'இசைப் போட்டிகளில்' அதிகமாக வெற்றி பெறுபவர்கள், குறிப்பாக சிறுவர், சிறுமியர்களில்,பெரும்பாலும், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று கேள்விப்படுகிறேன். இந்தியாவிலேயே முதல் முதலாக தமிழ்நாட்டில் தரத்தில் உயர்ந்த பொறியியல் கல்லூரிகளில், இசைத் தகவல் தொழில்நுட்பம்'  (Music Information Technology) என்ற பாடத்தை நான் அறிமுகப்படுத்தியுள்ளேன். அதில் ஒப்பீட்டளவில்,  தமிழ்நாட்டு மாணவர்களை விட , பிற மாநிலங்களிலிருந்து வந்து தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்களே எனக்கு வியப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். எனது சமூக வட்டத்தில் உள்ள 'திராவிட அபிமானிகளில் பலர்', எனது ஆய்வுகள் பற்றி தெரிந்து கொள்வதை விட, அந்த ஆய்வுகள் மூலம் எனக்கு எவ்வளவு செல்வம், செல்வாக்கு கிடைக்கிறது/கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதில் தான் அதிக ஆர்வத்துடன் உள்ளார்கள்.

எனவே தமிழ்நாடு அறிவுத் துறையிலும், உடலுழைப்புத் துறையிலும் பதர்க்காடாக வளர்ந்து வருவதும், 'யாரை/எதை ஏணியாகப் பயன்படுத்தி , போட்டி போட்டு 'மேலான மேற்கத்திய நாகரிக' வாழ்வு வாழ்வதே வாழ்வின் முக்கிய நோக்கமாக வளர்வதும்,  ஒரே நோயின் இரு அம்சங்களாகும். இந்த அபாய எச்சரிக்கையை உணர்ந்து, தமிழ்நாட்டைக் காப்பாற்ற நினைப்பவர்கள் , கொள்கை வேறுபாடுகளை சற்று தள்ளி வைத்து, ஓரணியில் இணைந்து செயல்பட்டால் மட்டுமே, தமிழ்நாடு தப்பிக்கலாம். தப்பிக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பதும் எனது கணிப்பாகும். உணர்ச்சிபூர்வ சமூக சூழலில் தமது சுயநலப் போக்குகளை 'மறைத்து', 'தமிழுணர்வு, பகுத்தறிவு, பொதுவுடமை, ஆன்மீகம், இந்துத்வா, இஸ்லாம்' 'கொள்கையாளர்களாக'(?) வாழ்பவர்களை ஒதுக்கி, அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவித்து, 'சமூக ஒப்பீடு நோய்', 'தரகு நோய்' எதிர்ப்பு, 'தாய்மொழிக் கல்வி' ஆதரவு போன்று,  வாய்ப்புள்ள பிரச்சினைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது சாத்தியமே

.Note: ' பணக்கார மாநிலமாகி வரும் தமிழ்நாட்டில்; தமிழர்கள் வளர்ந்து வருகிறார்களா? வீழ்ந்து வருகிறார்களா?'; http://tamilsdirection.blogspot.com/2016/09/1967.html

No comments:

Post a Comment