Wednesday, December 24, 2014


              தமிழ்நாட்டு சமூக நோயும், தீர்வும்



ஒரு சமூகம் திருப்புமுனைக் கட்டத்தில் இருக்கும்போது வெளிப்படும் 'சிக்னல்களை'ச்(Signals) சரியாக உணர்ந்து செயல்படும் மனிதர்களும், அமைப்புகளுமே, அந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்க முடியும்.


தமிழ்நாட்டில், இளைஞர்கள், குறைந்த 'பட்ஜெட்டில்' 'சூது கவ்வும்', 'கோலி சோடா','ஜிகிர்தண்டா''சதுரங்க வேட்டை' போன்ற பல 'வெற்றிப் படங்களை வெளியிட்டு, திரை 'இமேஜை' அரசியல் முதலீடாக 'வெற்றிகரமாக'ப் பயன்படுத்திவரும் போக்கிற்கு, 'வேட்டு' வைத்து வருகிறார்கள்.


அதாவது 'உணர்ச்சிகரமான பேச்சும், எழுத்தும்' தமிழ்நாட்டில் தமது தகவல் பரிமாற்ற வலிமையை (Communication strength) இழந்து, மேலேக் குறிப்பிட்டது போன்ற திரைப்படங்களுக்கான,‌  'விறுவிறுப்பு'  போக்கிற்கான‌,  திரைக்கதை வசன‌ உள்ளடக்கமாக மாறி வருகின்றன.


இளைஞர்களை மேடைப்பேச்சு மூலம் இனிமேல் யாரால் ஈர்க்க முடியும்?

அதற்கு விடையாய், அண்மையில் தமிழ்நாட்டில் ஒரு பொறியியல் கல்லூரி மாணவர்களிடையே, ஊசி விழுந்தாலும் கேட்கும் அளவுக்கு அமைதியும் (silence), கேட்கும் ஆர்வமும் வெளிப்பட்ட மேடைப்பேச்சாக, முனைவர்.ஆனந்த சங்கர் ஜெயந்த் (http://www.anandashankarjayant.com/)  அவர்களின் உரை இருந்தது, எனக்கு மறக்க முடியாத அனுபவமானது.புற்றுநோய்க்குள்ளாகி,இன்று வரை எவ்வாறு மனஉறுதியுடன் போராடி வருகிறேன் என்பதை ஒளிவு மறைவின்றி,, வாழ்வியல் தொடர்பான நவீன ஆராய்ச்சிகள் பற்றிய தகவல்களுடன் வெளிப்படுத்திய அவர் பேச்சின் வலிமைக்கு‍ -அவ்வாறு அவர் வாழ்ந்து கொண்டிருப்பதே‍-  முக்கிய‌ காரணமாகும்.


அகவாழ்வில் 'கொள்ளையர்களாகவும், கொள்ளையர்களின் எடுபிடிகளாகவும்' வாழ்ந்து கொண்டு, புற வாழ்வில் தமது எழுத்து, பேச்சு திறமைகளைக் கொண்டு, 'தமிழ், தமிழ் உணர்வு, பகுத்தறிவு, ஆன்மீகம்' என்று மாற்றி வந்தவர்கள், 'விவரமான' இளைஞர்களின் 'கேலிப் பொருளாக' - மேற்குறிப்பிட்ட திரைப்படங்களுக்கான உள்ளட்டக்க மூலங்களாக (source materials) ‌- மாறி வருகிறார்கள். தமது அக வாழ்வில் உண்மையாகவும், நேர்மையாகவும், சமூக அக்கறையுடனும் இருப்பதை, விளம்பரமின்றி தமது புற வாழ்வில் வெளிப்படுத்துப‌வர்களின் பேச்சுக்கும், எழுத்துக்கும், அந்த இளைஞர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு நம்பமுடியாத அளவுக்கு வளர்ந்து வருவதை, மேற்குறிப்பிட்டது போன்ற அனுபவங்கள் எனக்கு உணர்த்தி வருகின்றன. 


“மனிதரின் அகவாழ்வும் புறவாழ்வும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாகத் தொடர்புடையது. திராவிட மனநோயாளிகளின் அகத்தில் வளர்ந்த சீரழிவும் தான், புறத்தில் விளைந்த சீரழிவுகளுக்கும், அதன் தொடர் விளைவாய் புலமையில் ஏற்பட்ட சீரழிவுக்கும் காரணமாகும்.' என்பதையும்,


“தமிழ்வழியின் மரணப்பயணப் போக்கில் , தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளிடம் தொடர்பற்று, வருடம் தோறும் எண்ணிகையில் அதிகரித்து வரும் மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் 'இந்தியர்' என்ற அடையாளம் அதிசயிக்கும் அளவுக்கு வேகமாக வளர்ந்து வருவதையும்,'தமிழ், தமிழ் உணர்வு' தொடர்பானவை வருத்தம் தரும் அளவுக்கு வீழ்ந்து வருவதையும் ஏற்கனவே பார்த்தோம். (‘இந்தியாவில் ‘வித்தியாசமான’ தமிழ்நாடு’; 
http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_29.html)” என்பதையும்


முந்தையப் பதிவில் பார்த்தோம்.


“உணர்வு பூர்வ போதையில் பயணிக்கும் தமிழ்/திராவிட அமைப்புகளில் தங்களுக்கான சமூக வெளி(social Space)  குறைந்து வரும் போக்கை பற்றிய அறிவும், விவாதமும் இருப்பதாகத் தெரியவில்லை என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.” (‘தமிழ்நாட்டில் சமூக மூச்சுத் திணறலின் முடிவும், திறந்த காற்றோட்டமும்’ ( The end of the social suffocation in Tamilnadu & Free Ventilation); 
http://tamilsdirection.blogspot.com/2014/09/v-behaviorurldefaultvmlo.html )


தமது தாய்மொழி, பாரம்பரியம்,பண்பாடு போன்ற சமூக ஆணிவேர்களுடன், ஒரு சமுகம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வேண்டுமானால், அச்சமூக மக்களிடம் கீழ்வரும் மூன்று பண்புகள் முக்கிய இடம் பெற்று இருத்தல் வேண்டும்.


1. தனது தவறுகளை ஏற்று, திருத்தவும்,பிறர் தவறுகளை துணிச்சலுடன் தட்டிக் கேட்கவும் கூடிய‌ தனி மனிதருக்கான‌ சமூக முதுகெலும்பு


2.    தனது இயல்பின் அடிப்படையிலான தனி அடையாளம்


3. மனித வாழ்க்கையின் உயிரோட்டமான‌, தனது இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடு (Passion)


இப்பண்புகளில் வலிமை மிக்கோரே சமூகத்தில் மிகவும் மதிக்கப்பட வேண்டும்.


இன்று தமிழ்நாட்டில் எந்த பண்புகளின் அடிப்படையில், யார் மதிக்கப்படுகிறார்கள் என்பதை வைத்தே, தமிழ்நாடு சமூக நோக்கில் வளர்கிறதா? அல்லது வீழ்கிறதா? என்பது தெளிவாகும்.


சுமார் 10, 20, 30 வருடங்களுக்கு முன் கள்ளச்சாராயம் காய்ச்சிப் பிழைத்தவர்களாக, அரசுப் பணியில் லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டு பணி  நீக்கத்திற்குள்ளானவர்களாக, கூலி வேலை செய்தவர்களாக,  அடியாளாக இருந்தவர்களெல்லாம், 'அரசியல்' பலத்துடன், இன்று பலநூறு கோடிகளுக்கு அதிபதிகளாக வலம் வருவது;அந்த  'புதிய' பணக்காரர்களுக்கு திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளில் வி.ஐ.பி ஆக மதித்து கிடைக்கும் 'சமூக கெளரவம்' , அவர்கள் குடியிருக்கும் பல கோடி ரூபாய்கள் மதிப்புள்ள வீடு, பயன்படுத்தும் அதிக விலையுள்ள கார் போன்றவை எல்லாம் 'வீரியமான சமூக தொத்து நோய்க் கிருமிகளாக’  சமுகத்தை வேகமாகப் பாதித்து வருகின்றன‌.  இந்த தொத்து நோய் பரப்பு மையங்களாக , திருமணம் உள்ளிட்ட சமூக நிகழ்வுகள் செயல்படுவதால், அந்நிகழ்வுகளில் கலந்து கொள்வோர் அந்நோய்க்கு இலக்காகும் வாய்ப்பு அதிகரிக்கிறது.


அதன் விளைவாக, எப்பாடுபட்டாலும் சீக்கிரமாக பணம்,செல்வாக்கு சம்பாதிப்பது எப்படி ? என்ற வெற்றியின் இரகசியத்தை அறிந்து செயல்படுத்துவதில் தமிழ்நாட்டில் ஒரு கணிசமான மக்கள் 'புத்திசாலிகள்’  (நோயாளிகளாக‌) ஆக முயற்சித்து வருகின்றனர். (‘தமிழ்நாடு வீழ்ச்சியும் மீட்சியும்‍ - வெற்றிக்கான எலும்புத் துண்டு இரகசியம்’; 
http://tamilsdirection.blogspot.com/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_27.html  ) 


அன்பின் அடிப்படையில் இருக்க வேண்டிய குடும்ப உறவுகள், மனித உறவுகள் எல்லாம் எந்த வழியிலும் வரும் பணம். செல்வாக்கு போன்ற ‘நோய்த் தூண்டில் மீன்’களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோய்க் குடும்பங்கள் போல் வாழும் நாடாக தமிழ்நாடு 'வளர்ந்து' வருகிறது. இவ்வளர்ச்சியின் ஊடே கீழ்வரும் பண்புகள் வேகமாக வளர்ந்து வருகின்றன.


1. தனது தவறுகளை தப்பித் தவறியும் ஒத்துக்கொள்ளாமல்,பிறர் எவ்வளவு தவறுகள் புரிந்திருந்தாலும், அவற்றைப் பற்றி கவலைப்படாமல், அவர்களிடம் தமக்கு கிடைக்கும் ஆதாயத்தின் அளவுக்கேற்ப அவர்களின் காலில் விழுவது உள்ளிட்ட பணிவுகளுடன் கூடிய‌ தனி மனிதருக்கான‌  சமூக முதுகெலும்பற்ற பண்பு;


2. தனது இயல்பின் அடிப்படையிலான தனி அடையாளம் என்ன என்றே தெரியாமல், வாழ்வதே குறுக்கு வழியில் சீக்கிரம் மற்றவர் (?) பொறாமைப் படும் அளவுக்கு சம்பதிப்பதற்காகத் தான் என்ற‌ மன நோயையே அடையாளமாகக் கொண்டு வாழ்தல்;

3. மனித வாழ்க்கையின் உயிரோட்டமான, தனது இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடு(passion) என்ன என்ற தெளிவேயில்லாமல், நமக்கு கிடைத்திராத விலை மதிப்பு உயர்வான வீடு, கார், பொருட்கள், வேறு நபர்களிடம் இருக்கிறதா என்பதிலேயே தமது வாழ்வின் முழு கவனத்தையும் செலுத்தி, அதைப் பெறுவதற்காக வாழ்வதே வாழ்வின் இலட்சியம் என்ற வெளிப்பாடு;

இவ்வாறு தனி மனிதருக்கான  சமூக முதுகெலும்பற்ற பண்புடனும், வாழ்வதே குறுக்கு வழியில் சீக்கிரம் மற்றவர் (?) பொறாமைப் படும் அளவுக்கு சம்பதிப்பதற்காகத் தான் என்ற மன நோயுடனும்,தனது இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடு(passion) என்ன என்பதே தெரியாமலும் வாழ்பவர்கள் அதிகரிக்கும் வேகத்தில், தமிழ்நாட்டிலுள்ள சமூகம் அழிவுப் பாதையில் பயணிக்கும்.

நாட்டில் அதிகரித்து வரும் லஞ்சம், கொலை, கொள்ளை,கற்பழிப்பு உள்ளிட்டவையெல்லாம்- குறிப்பாக மாணவர்களிடையே வெளிப்படுவது,-  சமூகம் அழிவுப் பாதையில் பயணிப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளாகும். அக்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு நேரடியான பொறுப்பிருந்தாலும்,மேலேக் குறிப்பிட்ட நோயுடன் வாழ்பவர்கள் எல்லாம் அக்குற்றங்களுக்கான மறைமுக பொறுப்பாளிகள் ஆவர்.

நல்ல வழியில் வாழும் போது, தவிர்க்கமுடியாமல் இழப்புகளை சந்தித்தாலும் நல்ல சமூக வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கி, சாகும் போது குற்ற உணர்வின்றி சாக இயலும். மாறாக நேர்மை, உண்மை, உழைப்பு, நன்றி, பிரதிபலன் பாராத சேவை போன்ற நல்ல பண்புகளை தனது செல்வம், செல்வாக்கைப் பெருக்குவதற்காக இழந்து, ஒரு மனிதர் வாழ்வது எவ்வளவு பெரிய சமூகக் கேடு. அத்தகையோரை 'பெரிய மனிதராக' வழிபட்டு, அப்படி வாழவது தான் புத்திசாலித்தனம் என்று பெரும்பான்மையோர் வாழ முற்படுவது சரியா? அதன்பின் சமூகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சாதாரணமாகாமல், வேறு எப்படி இருக்க முடியும்?

தமிழ்நாட்டில் எந்த பிரச்சினை வெளிப்பட்டாலும்  ,அதை மேலேக் குறிப்பிட்ட நோயின் வெற்றிக்குப் பயன்படுத்தி செயல்படும் கட்சிகள், அமைப்புகள் எல்லாம் அந்நோயின் கூடாரங்கள் ஆகும்.

இச்சமூக நோய்க் கூடாரங்களின் சமூக அடித்தளம் ஏறத்தாழ முற்றிலும் அழிந்து வருவதன் காரணமாகவே, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள், தமது பிரச்சினைகளுக்கு தாமாகவே போராடுவது அதிகரித்து வருகிறது. போராட்டங்கள் வலுவடைந்து மீடியாக்களின் வெளிச்சம் படும்போது, அரசியல் கட்சித் தலைவர்கள் 'வெளிச்சம்' போடுவதும், மீடியாக்களின் வெளிச்சம் குறைந்தவுடன் அவர்களும் காணாமல் போய்விடுவதுமான நகைச் சுவை காட்சிகளும் தமிழ்நாட்டில் அரங்கேறி, மேலே சொன்ன போக்கை உறுதிப்படுத்துகின்றன. 
  

முதலில் குறிப்பிட்ட, பாராட்டுதலுக்குரிய‌,  மூன்று பண்புகளுடன் வாழ்பவர்களே பணியாற்றும் இடத்தில், வாழுமிடத்தில் மதிக்கப்படுகிறார்கள். பின்னால் குறிப்பிட்ட இழிவான மூன்று பண்புகளுடன் வாழ்பவர்களை நேரில் பார்க்கும்போது மதிப்பதாகக் காட்டிக் கொள்பவர்களே, அவர்கள் முதுகுக்குப் பின்னால், அவர்கள் பணம் சம்பாதிக்க கடைபிடித்த வழிமுறைகள் பற்றி 'விலாவாரியாக' விளக்கி விவாதிக்க, அவை மீடியாக்கள் உதவியின்றியே மக்களிடம் வேகமாக பரவுகின்றன.

எனவே தமிழ்நாடு நல்ல திசையில் பயணிக்க வாய்ப்புள்ளதற்கான அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன.

பத்திரிக்கைகளிலும் தொலைக் காட்சிகளிலும் படிக்க பண உதவி கேட்கும் ஏழை மாணவர்களுக்கு, விளம்பரமின்றி உதவிகள் கிடைத்து வருவது தமிழ்நாட்டில் ஒரு புதிய போக்காகும்.

படிக்க மாணவரின்றி பல அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வரும் சூழலில், மனித தெய்வங்கள் போன்ற சில அசிரியர்களின் விளம்பரமற்ற உழைப்பால், தனியார்ப் பள்ளிகளையும் விஞ்சி, மாணவர்கள் போட்டி போட்டு சேரும் அரசுப் பள்ளிகளும் தமிழ்நாட்டில் இருப்பதும் ஒரு புதிய போக்காகும். 
                                                                                            
வாழ்க்கைக்குப் பணம் தேவை தான். ஆனால் வாழ்வதே குறுக்கு வழியில் சீக்கிரம் மற்றவர் (?) பொறாமைப் படும் அளவுக்கு சம்பதிப்பதற்காகத் தான் என்பது ஒருவகை மன‌ நோயே,’ என்பதில் தெளிவுள்ளவர்கள், தமது இயல்புக்கேற்ற நாட்டமுள்ள‌ தாய்மொழி, பல மொழிகள், நாடு, ஆன்மீகம், இலக்கியம், இசை, ஓவியம் போன்ற பல‌ துறைகளில் ஈடுபட்டு, அர்த்தமுள்ள வகையில் வாழ்வதும், அவர்களில் பலர் உலக அளவில் பாராட்டு பெறும் சாதனைகளைப் படைத்து வருவதும் நடந்து வருகிறது.                                                                                       

முதலில் குறிப்பிட்ட, பாராட்டுதலுக்குரிய‌,  மூன்று பண்புகளும் மீண்டும் தமிழ்நாட்டில் வளரத் தொடங்கியுள்ளதன் விளைவே மேலேக் குறிப்பிட்ட போக்குகளுக்கு காரணமாகும். கொள்கை அடிப்படையிலான தொண்டர்கள் மறைந்து, ஆதாயத் தொண்டர்களின் பலத்திலேயே அரசியல் கட்சிகள் இழிவானப் போக்கில், செயல்படுவதற்கும் அதுவே காரணமாகும். வீழ்ச்சி பாதையிலிருந்து திரும்பி, வளர்ச்சி நோக்கிய திருப்புமுனை கட்டத்தில் தமிழ்நாடு இருப்பது,  தெளிவாகி வருகிறது. அந்த திருப்புமுனைக் கட்டத்தில் தமிழ்நாடு இருப்பதையே மேலேக் குறிப்பிட்ட திரைப்படங்களின் வெற்றி உள்ளிட்ட பல 'சிக்னல்கள்' உணர்த்துகின்றன.

No comments:

Post a Comment