Monday, December 29, 2014


உணர்ச்சிபூர்வ போக்கில்  இளையராஜாவும் ‘பலி’யானாரா?
          
பொது அரங்கில் முக்கிய இடம் பிடித்துள்ள, தனிநபர்களை  ஒன்று பாராட்டுவது, அல்லது கண்டிப்பது என்ற நிலைப்பாடுகளில் 'சிறையுண்டவர்கள்’, இரண்டிற்கும் இடையே புதைந்திருக்கும் உண்மைகளைப் பார்க்கத் தெரியாத 'சமூக வண்ணக் குறைபாடு'(Social Colour Blindness)  என்னும் சமூக நோயில் சிக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு. 
( http://tamilsdirection.blogspot.in/search?updated-min=2013-01-01T00:00:00-08:00&updated-max=2014-01-01T00:00:00-08:00&max-results=32  ) 

தாம் பாராட்டும் தலைவர்களிடம் உள்ள குறைபாடுகளையும், தாம் கண்டிக்கும் தலைவரின் நல்ல செயல்பாடுகளையும் சுட்டிக்காட்டி, 1925 முதல் 1944 வரை 'குடி அரசு' உள்ளிட்ட தனது இதழ்களில் எழுதியவர் ,நானறிந்த வரையில்,  பெரியார் ஈ.வெ.ரா. மட்டுமே. அவரிடம் வெளிப்பட்ட அந்த அபூர்வ போக்கும், 1944இல் 'திராவிடர்  கழகம்' உருவாகி, உணர்ச்சிபூர்வ போக்கு வளர்ச்சியின் ஊடே மிகவும் பலகீனமானதா?  அந்த போக்கை முற்றிலும் இழந்ததற்கு, அவர் தமது கடைசி காலத்தில் வெளியிட்ட பாராட்டுரைகள் சாட்சியங்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

முந்தையப் பதிவான, 'பெரியார் ஈ.வெ.ரா வின்  'ஆன்மீக'ப் பெருந்தவறு' உள்ளிட்டு, எனது பதிவுகளில், எனது அறிவு அனுபவத்தின் அடிப்படைகளில், பெரியார் ஈ.வெ.ராவின், அந்த முன்மாதிரியான ' அபூர்வப் போக்கை'ப் பின்பற்றி வருகிறேன்.

அந்த‌  உணர்ச்சிபூர்வ போக்கு வளர்ச்சியின் ஊடே , அறிவுபூர்வ விமரிசனங்களை ஓரங்கட்டி, தமிழினம் கடுமையான தாழ்வு மனப்பான்மையில் சிக்கி, அதை ஈடுகட்ட உலகில் யாருமே செய்திராத இழிவான முறையில்,  தாம் உயர்ந்தவர் என்று 'வெளிச்சம்' போடும் சமூக மன வியாதியில் தமிழினம் சிக்கியுள்ளதா என்பதும் ஆய்விற்குரியதாகும்.  
( http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html )   அந்த நோயில் தெரிந்தோ,தெரியாமலோ சிக்கி விடும் ஆபத்திற்கு இளையராஜாவும் பலியானாரா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

திரை இசையில் இளையராஜா நிச்சயமாக ஒரு மைல் கல். அதன் காரணமாக அவரது தவறுகளைச் சுட்டிக் காட்டாமல், 'தமிழ் இன உணர்வு' அடிப்படையில் அத்தவறையே உலகளாவிய 'சாதனை'யாக பாராட்டுவது என்பது சரியா?

உலகில் இசை பற்றிய விபரமறிந்தவர்கள் பார்வையில், தமிழினம் என்பது,  தவறானவைகளைக் கூட 'சாதனைகளாக' தமக்குள்ளே பாராட்டிக் கொள்ளும் அளவுக்கு, மிகுந்த தாழ்வு மனப்பான்மையில் உழலும் இனம் என்ற கருத்து உருவாவதற்கு அது காரணமாகி விடாதா?

 'சிம்பொனி' என்று அறிவித்து, வெளிவராத, எந்த சிம்பொனி இசை நிபுணராலும் 'சிம்பொனி' என்று சான்றளிக்கப்ப‌டாத‌  'சாதனைக்கு', 'கெளரவ' டாக்டர் பட்டம் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகம் வழங்கியது,  தமிழருக்கு பெருமையா?, சிறுமையா? அதற்குப் பிறகாவது 'அந்த' இசையை வெளிப்படுத்தி, சிம்பொனி இசை நிபுணரால் அது பரிசீலிக்கப்படும் முயற்சியை இளையராஜாவும் மேற்கொள்ளவில்லை. 'தமிழ் இன உணர்வில்' அச்'சாதனையை' வரைமுறையில்லாமல் பாராட்டிய தமிழ்ப் பற்றாளர்களுக்கும், அந்த அறிவு இல்லாமல் போனது.

உலகில் இசை அறிஞர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலையின்றி, மீண்டும் 'திருவாசகம் சிம்பொனி' என்று ஒரு 'சாதனை' அறிவிக்கப்பட்டது. 'தமிழ் இன உணர்வு'த் தலைவர்களின் அழுத்ததிற்கு 'பயப்பட்டு', குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டு இந்திய அரசில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் எல்லாம் அச்'சாதனையைப்' பாராட்ட, உலகில் இசை அறிஞர்கள் பார்வையில் இந்தியாவே சிறுமைக்குள்ளானது. 

அதுவும் 2005 சூன் முதல் வார 'ஆனந்த விகடன்' பேட்டியில் 'தான் இசைத்தது சிம்பொனி(symphony) அல்ல, ஓரடோரியா (Oratorio) என்ற இசை வடிவம்' என்று இளையராஜா தெரிவித்த பின்னும், இக்கூத்து தொடர்ந்தது. 

அதன்பின்  அது 'சிம்பொனி ஓரடோரியா ' என்று - மேற்கத்திய இசையில் இல்லாத - ஒரு புதுப் பெயரில் ( 'எலிக் குதிரை' என்பது போல் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத இரண்டு வெவ்வேறு இசை வடிவப் பெயர்களை ஒட்ட வைத்து) வெளியிடப்பட்டது. ஏன் இந்த தவறுக்கு இளையராஜா துணை போனார் என்பது அவரின் மனசாட்சிக்கே வெளிச்சம். இது தவறில்லையா என்று குரல் எழுப்பிய தமிழ்நாட்டு இசை நிபுணர்கள் மிரட்டப்பட்டு, 'மீடியா' பலத்துடன் அந்த குரல் வீழ்த்தப்பட்டது தமிழினத்திற்கு பெருமையா? சிறுமையா? அவர்கள் இது தொடர்பாக, இந்திய பிரஸ் கவுன்சிலுக்கு (Press Council) புகார் தெரிவித்து,  இப்பிரச்சினையில் தமது பங்களிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்துக் கொண்டார்கள். இவை தொடர்பான விவரங்களுக்கும், பிரஸ் கவுன்சிலுடன் நடத்திய கடித பரிமாற்றங்கள் பற்றிய விபரங்களுக்கும்: https://www.scribd.com/document/57563206/In-Praise-of-Shiva-priests-Invest-Rs-15-Million-float-Company-Worth-Rs-100-Crores

தமிழ்நாட்டில் செலவமும் செல்வாக்கும் உள்ள நபர்கள் எவ்வளவு அபத்தமாக புத்தகங்கள் வெளியிட்டாலும், 'சாதனைகள்' வெளியிட்டாலும், அவற்றைப் பாராட்டி தம்மை வளர்த்துக் கொள்ளும் தமிழ்  'அறிஞர்கள்' (?)  'தமிழின உணர்வாளர்கள்' மிகுந்து வரும் நாடாக‌ தமிழ்நாடு,  1970களிலிருந்து 'வளர்ந்து' வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.
( http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_14.html  ) இத்தகைய சூழலில் தவறு செய்தவர்களில் இளையராஜா முதல் நபருமல்ல; கடைசி நபருமல்ல; இச்சூழலை ஆதரித்து வளர்த்து வருபவர்களும் பகுதி குற்றவாளிகளே ஆவர்.

அறிவுபூர்வ விவாதத்திற்கு உள்ளாக வேண்டிய 'சாதனைகளையும், நிலைப்பாடுகளையும், உணர்ச்சிபூர்வமாக 'பார்ப்பன சூழ்ச்சி', தமிழ்த் துரோகி' என்று பயமுறுத்தி இருட்டில் தள்ளி, அந்த 'இரைச்சலில்' குறுக்கு வழிக் கொள்ளையர்கள் ஆதிக்கத்தில், தமிழ்நாடு சிக்கியதன் விளைவு பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன். 
( http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none.html ) 'தமிழ், தமிழ் உணர்வு, பெரியார், இந்துத்வா, முஸ்லீம், தலித்' போர்வைகளில் உள்ள உணர்ச்சிபூர்வ போதையாளர்கள் எல்லாம் தமக்குப் பிடிக்காத, திரைப்படங்களையும், புத்தகங்களையும் தடை செய்வதில் 'ஒற்றுமையாக' உள்ளார்கள். அந்த அமைப்புகளில் உள்ள நேர்மையாளர்கள் எல்லாம் 'அறிவுபூர்வ விவாதத்தை' ஊக்குவிப்பதில் 'ஒற்றுமையாக' செயல்பட்டால் தான், தமிழ்நாடு அந்த 'குறுக்கு வழிக் கொள்ளையர்களிடமிருந்து' தப்பிக்க முடியும்.

எனக்கும் இளையராஜவுக்கும் இருந்த தொடர்பு பற்றி நன்கு அறிந்த லண்டனில், திருக்குறள் ( 788) இலக்கணமாக வாழும்,  எனது உயிர் நண்பர் தொல்காப்பியன், மேலேக் குறிப்பிட்ட 'சர்ச்சையில்' நான் ஈடுபட்டிருக்க வேண்டியதில்லை என்று அறிவுறுத்தினார். தொல்காப்பியன் உள்ளிட்டு எனக்கு நெருக்கமான எவரிடமும் வெளிப்படும் குறைகளை,  அவர்களிடமே சுட்டிக்காட்டுவது எனது இயல்பு என்பதையும் அவர் அறிவார். ஆனாலும் எனது 'வாழ்வியல்' நன்மைக்காகவே, அவர் அவ்வாறு அறிவுறுத்தினார் என்பதைக் கீழ்வருபவை தெளிவுபடுத்தும்.

நான் சென்னை மாநிலக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றிய காலத்தில் சகப் பேராசிரியரான கவிஞர் மு.மேத்தா எனது இல்லத்திற்கு வந்து, இசைக்கருவிகள் துணையின்றி, கணினி மூலமே நான் இசையமைத்த பாடல்களை கேட்டு பாராட்டி சென்றார்.

அதன்பின் தனது வாழ்வில் இசையில் தான் விரும்பிய அளவுக்கு பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என்றும், என்னுடன் சேர்ந்து ஒரு இசைத் திட்டம்(Music Project)  செய்ய வேண்டுமென இளையராஜா விரும்புவதாக இளையராஜாவுக்கு மிகவும் நெருக்கமான Dr. அமுதகுமார் தெரிவித்ததாக, இன்னொரு சக பேராசிரியர் எம். இளங்கோ தெரிவித்தார்.

அதன்பின் நான் இளையராஜாவை பிரசாத் ஸ்டுடியோவில் அவருக்கான ஒலிப்பதிவு கூடத்தில் சந்தித்தேன். மிகுந்த அன்புடனும், மரியாதையுடனும் என்னிடம் பழகினார். இந்திய இசை வளர்ச்சி பற்றிய வரலாறு ரீதியிலான ஒரு இசைத் திட்டம்(Music Project)  பற்றி கூறியபோது, மிகுந்த ஆர்வம் காட்டினார்.

பின் அவர் வீட்டிலும், ஒலிப்பதிவு கூடத்திலும், நான்கைந்து முறைகள் சந்தித்து பேசினேன். சேர்ந்து செயல்படுவதற்கான கூறு இன்றி, அவர் தமக்குள் ஒரு வகையிலான மனச்சிறையில்(mental prison)  சிக்கியிருப்பது போல், எனக்கு தெரிந்ததால், நான் அதிலிருந்து ஒதுங்கினேன். இடையில் முனைவர் வீ.ப.கா சுந்தரம், சென்னைப் பல்கலைக்கழகத்தில் அப்போது இசைத் துறை தலைவராகயிருந்த பேரா.என்.ராமநாதன் போன்ற இசை அறிஞர்களை இளையராஜாவைச் சந்திக்க வைத்து, உரையாட வைத்தது குறிப்பிடத் தக்கவையாகும்.

இளையராஜாவிடம் இருக்கும் கடின‌ உழைப்பு, சுய கட்டுப்பாடு(self discipline) ,புலனடக்கம் போன்றவை என்னை வியப்பில் ஆழ்த்தின. அவர் 'ஹார்மோனியத்தை' விட்டு , கணினி மவுசை(mouse)  'கையகப் படுத்தி’ ,இசை அமைத்தால், மீண்டும் ஒரு பெரிய அளவில், உலக அளவில் வலம்(round)  வரலாம். அதை அவரிடம் சொல்லி, ஒரு வாரத்தில் அவருக்கு நான் ‘பயிற்சி தருகிறேன்.' என்றும் சொன்னேன். சிரித்துக் கொண்டே 'அதெல்லாம் நமக்கு சரி வராது சார்' என்று என்னிடம் சொன்னார்.

என்னை மிகவும் மதித்து அன்பு செலுத்திய காரணத்தால், என்னுடன் பழகுபவர்கள் செய்யும் தவறை நான் கண்டிக்காமல் விட்டதில்லை. என்னுடன் பழகியவர்கள்/ பழகுபவர்கள் அதை அறிவார்கள். இளையராஜாவும் அதற்கு விதி விலக்கல்ல. "பிறந்த போது எதையும் கொண்டு வராத நாம் இறக்கும் போதும் எதையும் எடுத்துச் செல்லப் போவதில்லை. நமது இயல்பை ஓட்டிய தகுதி, திறமைகளை வளர்த்து, உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன்(Passions) வாழ்பவர்களே மரணத்தை மன நிறைவுடன் தழுவ முடியும்." என்பதை ஏற்கனவே நான் பதிவு செய்துள்ளேன். 
( http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html ) இடைப்பட்ட வாழ்க்கையில், மனித உறவுகளில், லாப நட்டம் பார்த்துப் பழகி, 'கள்வராகி' (திருக்குறள் 813) 'குவிக்கும்' செல்வமும், செல்வாக்கும், அதற்குத் தடையாகாதா?

No comments:

Post a Comment