Saturday, December 13, 2014


இந்தியாவில் ‘வித்தியாசமான’ தமிழ்நாடு (2) 


சமூகத்தில் முக்கியமானக் கட்டங்களில் வெளிப்படும் 'சிக்னல்கள்'


சமூகத்தில் வெளிப்படும் 'சிக்னல்களை',  தலைவர்கள் சரியாக உணர்ந்தறிந்து, செயல்படாவிட்டால், அந்த சமூகம் எவ்வளவு மோசமான சீரழிவைச் சந்திக்க நேரிடும் என்பதற்கு தமிழ்நாடு வரலாற்றுச் சான்றாக உள்ளதா? என்ற ஆய்வைத் தொடங்க வேண்டியது அவசியமாகும். 

ஒரு சமூகத்தில் உள்ள மனிதர்களின் தராதரம்,தகுதி,திறமை, அர்ப்பணிப்பு ஆகிய அடிப்படைகளிலேயே, சமூகத்தில் உள்ள செயல்நெறி மதகுகளின்(Social Functional checks)  வலிமைக்கேற்ப,  அந்த சமூகத்தில் அந்தந்த மனிதருக்கான செல்வாக்கான 'இடம்' இருக்கும். இந்திய விடுதலைக்கு முன், அந்த அடிப்படைகளில், காங்கிரசில் செல்வாக்குடன் இருந்த ராஜாஜியின் முயற்சியால், பெரியார் ஈ.வெ.ரா பொது வாழ்வில் 'இந்திய தேசிய’ வாதியாக அடியெடுத்து வைத்தார். கல்வித் தகுதியில் ராஜாஜி உள்ளிட்ட மற்ற தமிழ்நாட்டுத் தலைவர்களை விட, கீழானவராக இருந்தாலும், செல்வத்திலும், சமூகத்திலும் அவர்களுக்கு சமமான இடத்திலிருந்த அவரின் அர்ப்பணிப்பும், தியாகமும் அவருடன் தொடர்பில் இருந்த மற்றவர்கள் 'மலைக்கும்' அளவுக்கு இருந்தது. அன்று சமூகத்தில் வெளிப்பட்ட 'சிக்னல்களை', திரு.வி.க உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் சரியாக உணர்ந்தறிந்து, செயல்பட்டிருந்தால்,பெரியார் ஈ.வெ.ரா காங்கிரசை விட்டு வெளியேறியிருக்க மாட்டார். 'திராவிடர் கழகம்' உருவாகி, தமிழ்நாட்டில் 'தேசியத்திற்கு' எதிரான 'திராவிடர், தமிழர், திராவிட' போன்ற அடையாளக் குழப்பங்கள் ஏற்பட்டு, இந்தியாவில் வித்தியாசமான மாநிலமாக தமிழ்நாடு பயணித்திருக்காது. இந்திய விடுதலைக்குப் பின், 'வித்தியாசமானக் கீழ்வரும் திசையிலும்' தமிழ்நாடு பயணித்திருக்காது. ஆக சமூகத்தில் முக்கியமானக் கட்டங்களில் வெளிப்படும் 'சிக்னல்களை' உணர்ந்தறிந்து,  தலைவர்கள் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்தே, அந்த சமூகம் சரியான, அல்லது  தவறான திசையில் பயணிக்கும் என்பதும் இதனால் தெளிவாகிறது. 
 “இந்திய விடுதலைக்குப் பின், 1952இல் நடந்த முதல்  பொதுத் தேர்தலில், தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் மட்டுமே வித்தியாசமாக இருந்தன. இந்திய விடுதலையைத் ‘துக்க நாளாக’ அறிவித்து, ராஜாஜியும் ஆதரித்த 'தனி திராவிட நாடு' கோரிக்கையை முன்வைத்த பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் ஆதரித்த கூட்டணிக் கட்சிகள் பெற்ற பெரும் வெற்றியில், காங்கிரசுக்கு 'மெஜாரிட்டி' கிடைக்கவில்லை. பின் காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்ற கட்சிகளில் சிலவற்றை தமது பக்கம் இழுத்து, ராஜாஜி முதல்வராக, காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. அதன்பின் 'குலக் கல்வி' பிரச்சினையில் ராஜாஜி பதவி விலக, காமாராஜர் முதல்வரானார். அதன்பின் 1967‍ வரை பெரியார் ஆதரவுடன் காங்கிரஸ் ஆண்டது. ராஜாஜி துணையுடன் 1967‍‍இல் தி.மு.க ஆட்சியைப் பிடித்த பின், பெரியாருடன் நேசமாக, பெரியார் ஆதரவுடன் தி.மு.க ஆண்டது.பெரியார் மறைவிற்குப் பின்,  1977இல் எம்.ஜி.ஆரின் அ.இ.அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்தது.

1989‍இல் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின், அ.இ.அ.தி.மு.க பிளவின் காரணமாக தி.மு.க ஆட்சிக்கு வந்தது. ஒன்றுபட்ட அ.இ.அ.தி.மு.க, ஜெயலலிதா தலைமையில் மீண்டும் 1991 இல் ஆட்சியைப் பிடித்தது. அதன்பின் தி.மு.க தலைவர் குடும்ப செல்வாக்கு மேல் மக்கள் கொண்ட அதிருப்திக்கும், அ.இ.அ.தி.மு.கவில் சசிகலா குடும்ப செல்வாக்கு மேல் மக்கள் கொண்ட அதிருப்திக்கும், ஏற்றவாறு இரண்டு கட்சிகளும் மாறி, மாறி ஆட்சிக்கு வந்தன.” (Refer post Dt. October 29, 2014; ‘இந்தியாவில் ‘வித்தியாசமான’ தமிழ்நாடு’ )

இன்று சமூகத்தில் உள்ள மனிதர்களின் தராதரம்,தகுதி,திறமை, அர்ப்பணிப்பு ஆகிய அடிப்படைகளிலேயே, அந்தந்த மனிதருக்கான செல்வாக்கான 'இடம்' ஆனது,  அவரவரின் குடும்பத்திலும், அவர் பணியாற்றுமிடம், சார்ந்துள்ள கட்சி,அமைப்பு உள்ளிட்ட சமூக வட்டத்திலும்.இருக்கிறதா? அல்லது அதீதமான செல்வம் செல்வாக்கை ஈட்ட துணை புரியும் வன்முறை,பலவகையான இழிவான தரகு, நம்பிக்கைத் துரோகம் உள்ளிட்ட மனித உறவுகளில் லாப நட்ட கணக்கில் 'வெற்றி பெற்ற', 'வாழ்வியல் புத்திசாலித்தனம்' ஆகிய அடிப்படைகளிலேயே, அந்தந்த மனிதருக்கான செல்வாக்கான 'இடம்' ஆனது,  அவரவரின் குடும்பத்திலும், அவர் பணியாற்றுமிடம், சார்ந்துள்ள கட்சி,அமைப்பு உள்ளிட்ட சமூக வட்டத்திலும்.இருக்கிறதா?

எந்த ஒரு கொள்கையையும் முன்னெடுப்பவர்கள் 'யோக்கியதையைப்' பொறுத்தே, அந்த கொள்கைக்கு மக்களிடம் செல்வாக்கு அதிகரிப்பு அல்லது வீழ்ச்சி ஏற்படும்.' தமிழ், தமிழ் உணர்வு, பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு' போன்றவற்றை முன்னெடுத்தவர்கள், தங்கள் குடும்பப் பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்துக் கொண்டு, 'தமிழ்வழியை' ஆதரித்து முன்னெடுத்த பிரச்சாரங்கள் ஆனது, மக்களிடையே த‌மிழ்வழி வீழ்ச்சிக்கே வழி வகுத்தது. தமிழ்நாட்டில் குக்கிராமம் வரை, 2 வயது முடிந்தவுடன், ஆங்கில வழி விளையாட்டுப் பள்ளிகளில் சேர்க்கும் போக்கானது, 'புற்றீசல்' போல் வளர்ந்து வருகிறது.

"தமிழ்நாட்டில் குடி நீர், சாலை வசதி, கழிவு அகற்றல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக 'தினமும்' ஆங்காங்கே பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் போராடி வருகிறார்கள்.  தமிழ் அமைப்புகள் எல்லாம், இத்தகைய தமிழ்நாட்டு மக்களின் போராட்டங்களில் 'பங்கேற்காமல்' ஒதுங்கியிருப்பதில் 'ஒன்றாக' உள்ளார்களா? என்பதும் ஆய்விற்குரியது." என்பதை ஏற்கனவே பார்த்தோம். (Refer Post Dt. December 6, 2014;’ தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு ;  'தமிழ் ஈழம்'‍  - நேற்று, இன்று, நாளை; கேள்விக்குறியாகி வரும் தமிழரின் தர அடையாளம் (benchmark)’).

அது போன்ற அமைப்புகள் முன்னெடுக்கும் ' தமிழ், தமிழ் உணர்வு, பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு' போன்றவையும், சாதாரணத் தமிழர்களிடையே 'தமிழ் வழியை' போல், செல்வாக்கிழந்து வருகின்றனவா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அதிலும் தற்போது 'இந்தியர்' என்ற அடையாளம் தொடர்பாகவும்,' தமிழ், தமிழுணர்வு, பகுத்தறிவு' என்பது தொடர்பாகவும் என்னென்ன 'சிக்னல்கள்' வெளிப்பட்டு வருகின்றன என்று தெரியாமலேயே,தமிழ்நாட்டில் பெரும்பாலான கட்சிகளும், இயக்கங்களும், இந்திரா காந்தியின் நெருக்கடி கால ஆட்சியில் 'ஆட்சிக் கலைப்பு'க்கு உள்ளாவதற்கு முன் இருந்த, தி.மு.க போல, செயல்பட்டு வருகின்றனவா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

இந்தியாவில் 1970களின் பிற்பகுதியில் அன்றையப் பிரதமர் இந்திராகாந்தி 'நெருக்கடி நிலை' ஆட்சியை அமுல்படுத்தினார். பின்னர் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் வட மாநிலங்களில் படுதோல்வியைச் சந்தித்த காங்கிரஸ், தமிழ்நாட்டில் மகத்தான வெற்றியைப் பெற்றது. நெருக்கடிகாலத்தில் 'ஒடுக்குமுறைக்குள்ளான' தி.மு.க படுதோல்வியைத் தழுவியது. அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் , தி.மு.க ஆட்சியில் தலைவிரித்தாடிய‌,  'லஞ்சமும், ஊழலும்', நெருக்கடி கால ஆட்சியில், பெருமளவில் குறைந்திருந்ததும், அதற்குக் கூடுதல் காரணமாகும். தமிழ்நாட்டு மக்களின் கோபத்திற்கும் வெறுப்பிற்கும் உள்ளானால், மத்திய அரசின் ஒடுக்கு முறைக்குப் பின்னும், மக்களின் அனுதாபத்தையும், ஆதரவையும் பெறமுடியாது என்ற வரலாற்றுப் பாடம் அதன் மூலம் வெளிப்பட்டது.

"'தமிழ், தமிழர், தமிழ்நாடு' சம்பந்தப்பட்ட எந்த கோரிக்கையும்- சராசரி பொதுமக்கள் ஆதரவைப் பற்றிய கவலையற்ற பணபலம், 'மீடியா' பலம் ஆகிய காற்றினால் -  'பலூனை'ப் போல் ஊதிப் பெருத்து, வெடித்து ஒன்றுமில்லாமல் போய்விடும் ஆபத்தைத் தவிர்க்க முடியாது. தமிழ்நாட்டில் வாழும் 'ஆங்கிலோ‍இந்தியர்களை' போல, தமிழ்நாட்டிலேயே 'வேரற்ற மனிதர்களாக' 'தமிங்கிலீசர்களாக' தமிழ்நாட்டுத் தமிழர்கள் வாழும் நிலையும் வரும்." என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.(Refer post Dt.December 6, 2014;தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு;'தமிழ் ஈழம்'‍  - நேற்று, இன்று, நாளை; கேள்விக்குறியாகி வரும் தமிழரின் தர அடையாளம் (benchmark) )

தமிழ்நாட்டில் "கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும், இளைஞர்களும் எந்தவித அரசியல் பற்றுமின்றி, தமது கல்வி, வேலைவாய்ப்பு, புலனின்பங்கள் போன்றவற்றிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வாழ்கிறர்கள். அவர்கள் மத்தியில் 'தமிழ், தமிழ் உணர்வு' போன்றவை அதிவேகமாக வலுவிழந்து வருகிறதா? அவர்கள் மத்தியில் படித்த மற்றும் வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களில் பெரும்பாலோரிடம் ''இந்தியர்' என்ற அடையாளம் அதிசயிக்கும் அளவுக்கு செல்வாக்குடன் வளர்ந்து வருகிறதா?

 வெளிநாடுகளில் வேலை பார்ப்போர், கிராமங்கள் உள்ளிட்டு, தமது சொந்த ஊருக்கு வந்து ஏற்படுத்தும் பாதிப்புகளும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளும், கிரிக்கெட் உள்ளிட்ட பொழுது போக்குகளும், இதற்குக் காரணமா? பொறியியல் உள்ளிட்ட உயர்க்கல்வி படிக்கும் மாணவர்கள் மத்தியில் 'இந்தியர்' என்ற அடையாளம் அதற்கான சமூகத் தேவைகளை உணர்ந்து வளர்ந்து வருகிறதா?" என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். (Refer post Dt. October 29, 2014; ‘இந்தியாவில் ‘வித்தியாசமான’ தமிழ்நாடு’ )

1925இல் காங்கிரசிலிருந்து பெரியார் வெளியேறி, பின்னர் 1944இல் 'திராவிடர் கழகம்' தொடங்கி, உணர்வுபூர்வ போக்குகள் தலைதூக்கி, 'சமூக நீதி, பார்ப்பன எதிர்ப்பு, தமிழ் உணர்வு' என்ற போர்வைகளில் எண்ணற்ற குப்பன் சுப்பன் குடும்பங்களையும், அவர்களின் முதல் தலைமுறையாகப் படித்த பிள்ளைகளையும் (திராவிடர், திராவிட, தமிழர் குழப்பங்களை வளர்த்த போக்கில்) 'இன விடுதலை' என்ற பெயரில் காவு கொடுத்து, கடந்த சுமார் 40 வருடங்களுக்கும் மேலான திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளின் விளைவாக, இன்றுள்ள தமிழ்நாட்டில் யார் யாருக்கு, எந்தெந்த அடிப்படைகளில் சமூகத்தில் செல்வாக்கான இடங்கள் இருக்கின்றன?

எந்த சமூகத்திலும் பொதுப்பிரச்சினைகளுக்காக உருவாகும் சமூக ஆற்றலானது அந்த சமூகத்தில் உள்ள தனிமனிதர்களின் ஆற்றலோடு எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.(refer post Dt. September 13, 2014;’ சமூக இழைகளும் , சமூகப் பிணைப்புகளும்(Social Fibers & Social Bonds)’  )

'தவறான நபர்கள் சமூகத்தில் உள்ள (குடும்பம், கட்சி,  ) அமைப்புகளின் செயல்பாட்டிற்கான அமைப்பின் தர ஏணி நிலையில் (socio-structural functional hierarchy)   முக்கிய பொறுப்புகளில் இடம் பெறும்போது, அமைப்பின் நோக்கங்களை தமது சுயநலத்திற்கு திசை திருப்பும் ஆபத்து நேரிட வாய்ப்புண்டு. அதில் அவர்கள் வெற்றி பெற, மற்ற முக்கிய பொறுப்பில் உள்ள நபர்களையும் படிப்படியாக, அமைப்பின் செயல்பாட்டின் ஊடே, தம்மைப் போன்றே சுயநலவாதிகளாக மாற்றும் தொத்து நோய்க் கிருமி மூலங்களாக செயல்படுவதும் நேரிடலாம்.அந்த போக்கில் அமைப்பில் உள்ள மனிதர்களின் ஆற்றல்கள் எல்லாம் அந்த அமைப்பை சீரழிவுப் பாதையில் பயணிக்கவே செலவாகும்.' என்பதையும் அந்தப் பதிவில் பார்த்தோம்.

"தனது தராதரம், பாரம்பரியம், பண்பாடு ஆகிய அடிப்படைகளிலான, இயல்பின் அடிப்படையில், உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்பவர்கள், தமிழ்நாட்டில் அருகிவிடவில்லை. எந்த வழியிலும், போட்டி போட்டு, செல்வம், செல்வாக்கு சம்பாதிக்கும் நோயில் சிக்காமல் வாழுந்து வரும்,  அத்தகையோரின் அரவணைப்பில் , 'தராதரம், தகுதி, திறமை, பாரம்பரியம், பண்பாடு' போன்றவையெல்லாம் உயிருடன் இருக்கின்றன." என்பதை முந்தையப் பதிவுகளில் பர்த்தோம். 

அத்தகையோரெல்லாம், தமக்குள்ள 'கொள்கை, அபிமானம்' அடிப்படையில் தங்களின் சமூக ஆற்றலானது, மேலேக் குறிப்பிட்டுள்ளவாறு,தமிழ்நாட்டைச் சீரழிவுப் பாதையில் பயணிக்கவே செலவாகிறதா? அல்லது ஆக்கபூர்வமான வளர்ச்சிக்குச் செல்வாகிறதா? என்று கண்காணித்து, சமூகத்திற்கான தமது ஆற்றல் பங்களிப்பை நெறிப்படுத்த வேண்டிய காலக்கட்டம் வந்துவிட்டது.

அந்த முயற்சி யில் அவர்கள் பெறும் வெற்றிக்கு ஏற்பவே, தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சியும் வரும் காலத்தில் வெளிப்படும்.

No comments:

Post a Comment