Friday, December 12, 2014


திராவிட மனநோயாளித்தனத்தின் பலிகடா:(Social Functional Checks) சமூக‌ செயல்நெறி மதகுகள் (3) 

'இயல்பில் திரிந்தவர்கள்' ஆதிக்கத்தில் தமிழ்நாடு? 


வசதியில் குறைந்த நிலையில் இருப்பவர்கள் தமது வசதி வாய்ப்புகளை உயர்த்திக் கொள்ள விரும்புவது மனித இயல்பாகும்.அவ்வாறு உயர்த்திக் கொள்ள, கல்வியிலோ, அல்லது தொழில் வியாபாரத் துறைகளிலோ அதற்குரிய தகுதி, திறமைகளை வளர்த்துக் கொள்வதில் ஈடுபட வேண்டும். அதற்கு மாறாக, மனித இயல்பில் 'திரிந்து',  வன்முறை, பல வகையான, இழிவான, தரகுப் பணிகள் போன்ற‌வற்றில் தகுதி, திறமைகளை வளர்த்துக் கொண்டால் தான், வசதி, வாய்ப்புகளைப் பெற முடியும் என்ற நிலை தமிழ்நாட்டில் இருப்பது உண்மையா? இல்லையா? அப்படிப்பட்டவர்கள் 'செல்வாக்கில்' உள்ள எந்த சமூகமும் 'தர அடையாளத்தில்', கீழாவதைத் தடுக்க முடியுமா? 
http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html

வாழும் 'இயல்பில் திரிந்தவர்கள்', 'குறுக்கு வழியில்' வசதியாக வாழ, 'வாய்ப்பு'க் கிடைத்தால் எவ்வளவு இழிவாக வாழ்வார்கள் என்பது பற்றி முந்தையப் பதிவில் பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_10.html )

மனித ‘இயல்பில் திரிதல்’ என்பது எவ்வளவு கேடான நிகழ்வு என்பதை விளங்கிக் கொள்ள, பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள 'இயல்பு' என்ற சொல் கூடுதல் வெளிச்சத்தைத் தரும்.  

பழந்தமிழ் இலக்கியங்களை உரையாசிரியர்கள் தரும் விளக்கங்கள் அல்லது அவ்விளக்கங்கங்களின் அடிப்படையில், தமிழில் புலமையுள்ளோர் எழுதிய புத்தகங்கள் மூலம் மட்டுமே அணுகுபவர்களாகவே, தமிழார்வளர்களில் பெரும்பாலோர் இருக்கின்றனர்.  

ஆனால் சொற்களால் விவரிக்க முடியாத இன்பத்தை அனுபவிக்க வேண்டுமானால், தமக்கிருக்கும் தமிழறிவு பற்றிய பயமின்றி, ஆர்வத்துடன் கூடிய உழைப்புடன் துணிச்சலாக பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள வரிகளை (texts) அணுகலாம். புதையல் தேட தமது பயணத்தைத் தொடங்குபவர்கள், புதையல் வேட்டையின் ஊடேயே, வேட்டைக்கான திறமைகளை அடையாளம் கண்டு வளர்த்து, இறுதியில் வெற்றியும் பெறுவார்கள். பழந்தமிழ் இலக்கியங்களிலும் புதையல் தேடி வெற்றி பெற முடியும் என்ற தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் ஆர்வமுள்ளவர்களுக்கு ஏற்படுத்தும் நோக்கிலான 'அனுபவபூர்வ' கட்டுரையைக் கீழ்வரும் இணைய தளத்தில் படிக்கலாம்.
(http://musicresearchlibrary.net/omeka/items/show/2444  )

பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள சொற்களின் பொருளானது, இன்று அதே சொற்களுக்கு உள்ள பொருளுடன் வேறுபட்டிருக்க வாய்ப்புண்டு, என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

உதாரணமாக சங்க இலக்கியங்களில் 'கழகம்' என்ற சொல்லுக்கு 'சூதாடும் இடம்' (திருக்குறள் 937) என்பதே பொருளாகும். எனவே திறந்த மனதுடன் ஆர்வத்துடன் ஆராய்ந்தால், உரைகள் வெளிப்படுத்தாத பொருளையும், நம்மால் கண்டுபிடிக்க முடியும் என்பதையும், மேற்குறிப்பிட்ட‌ கட்டுரை மூலம் புரிந்து கொள்ளலாம்.

அதே போல் இன்றும் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உற்சாகமாக நான் ஆராய்ந்து வரும் சொற்கள் 'இயல்பு' , மற்றும் (திராவிடக் கட்சிகளின் 'தமிழர்', 'திராவிடர்', 'திராவிட', குழப்பங்களுக்குள்ளாகியுள்ள,)  'இனம்' போன்றவையாகும். தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்டு பழந்தமிழ் இலக்கியங்களில் இந்த சொற்கள் இடம் பெற்றுள்ள பகுதிகள், என்னை மிகவும் ஈர்த்து வரும் பகுதிகளாகும்.

உதாரணமாக 'இயல்பு' என்ற சொல் கீழ்வரும் திருக்குறளில் இடம் பெற்றுள்ளது.


‘ இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை’ -  திருக்குறள் - 47 

இல்வாழ்க்கையின் பண்பும் பயனும் பற்றி கீழ்வரும் திருக்குறள் விள‌க்குகிறது.

‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது’  -திருக்குறள்  - 45

இன்று தமிழ்நாட்டில் உள்ள‌ குடும்பங்கள் பற்றி, எனது அறிவு, அனுபவ அடிப்படையில், என்ன 'பண்பும் பயனும்' உள்ளன என்றும் ஆராய்கிறேன். அப்பா, அம்மா, கணவன்,மனைவி, சகோதரன், சகோதரி, மகன், மகள் உள்ளிட்ட குடும்ப உறவுகளில் எந்த அளவுக்கு 'அன்பும் அறனும்' செல்வாக்கு செலுத்துகின்றன‌ என்பதும், அந்த ஆராய்ச்சியில் அடக்கம். 'அன்பும் அறனும்' பலகீனமாகி, குடும்ப உறவுகள் உள்ளிட்ட மனித உறவுகளில் 'லாப நட்டம்' பார்த்து பழகும் 'பண்பும்', அதன் மூலம் கிடைக்கும் 'செல்வம், செல்வாக்கு' ஆகிய பயன்களும் பெறுவது என்பதும் 'வாழ்வியல் புத்திசாலித்தனம்' ஆகிவிட்டது. அந்த அளவுக்கு, தமிழ்நாட்டு 'இல் வாழ்க்கையில்', திராவிட மனநோயாளித்தன 'கள்வர்' ஆதிக்கத்தில், 'வாழ்வியல் புத்திசாலித்தனம்'  'அதிர்ச்சி தரும்' அளவுக்கு அதிகரித்து வருகிறது. அத்தகைய செல்வாக்கிற்கு அடிமைப்பட்டுள்ள மனிதர்களின் 'இயல்பு' எப்படி ‘திரிகிறது’ என்பதும் அந்த ஆராய்ச்சியில் அடக்கம்.

திருக்குறள் 45இல் குறிப்பிடப்பட்ட 'பண்பும் பயனும் ’ என்பது, மேலேக் குறிப்பிட்ட 'வாழ்வியல் புத்திசாலித்தனத்தில்' , இன்றுள்ள சமுகத்தில், மேலேக் குறிப்பிட்ட போக்கில் பெற்று வரும் மாற்றத்தை .’இயல் திரிதல்’ என்று தொல்காப்பியம் (எழுத்து 1:10 ) குறிப்பிடும் சொற்களால் விளக்குவதே சரியாக இருக்கும்.   

இந்த காலத்திலும் திருக்குறள் 45 குறிப்பிடும் 'அன்பும் அறனும் உடைய‌ இல்வாழ்க்கை' வாழ்பவர்கள் வணங்குதற்குரிய மனித தெய்வங்களே ஆவர். அவர்கள் தொல்காப்பியம் (எழுத்து 1:20)  குறிப்பிடும் சொற்களின்படி, இல்வாழ்க்கைக்கான 'இயல் திரியா' மல் வாழ்பவர்கள் ஆவர்.

‘இயல்பில் திரிவது’ பற்றி விளங்கிக் கொள்ள, ஒரு சொம்பு பாலில் சில துளிகள் தயிர் சேர்ந்தவுடன் பாலின் இயல்பில் தொடங்கும் 'திரிதல்' எவ்வாறு வளர்கிறது என்பது பற்றிய ஆய்வுகள் மிகவும் துணைபுரியும். 1944இல், 'திராவிடர் கழகம்' உருவாகி, உணர்ச்சிபூர்வ விவாதங்கள் தோன்றி வளர்ந்த போக்கில், தமிழ்நாட்டு பொது அரங்கில் அது போன்ற‌ , 'இயல்பில் திரிதல்' முளை விட்டு வளர்ந்ததா? என்பது ஆய்விற்குரியதாகும். அதை முதலில் கண்டுபிடித்த பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் (1948 தூத்துக்குடி மாநாடு உரை), அதனை எதிர்க்க முடியாமல், அந்த 'திரிதல் சுனாமி'யில் சிக்கி, 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அவமானத்திற்குள்ளாகி, பலியானாரா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அந்த 'திரிதல் சுனாமி'யின் வளர்ச்சியும், தமிழ்நாட்டில் கிறித்துவ என்.ஜி.ஓக்களின் வளர்ச்சியும், எந்த அளவுக்கு, ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது? தமிழ் ஈழ விடுதலை முயற்சிகள், அந்த 'திரிதல் சுனாமி'யில் சிக்கியதும், முள்ளிவாய்க்கால் முடிவும், எந்த அளவுக்கு, ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

1960களிலிருந்து, இன்று வரை தமிழ்நாட்டில் சமூக அளவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை கவனிக்கும் வாய்ப்புகள் எனக்கு இருந்தன; இருக்கின்றன. தமிழ்நாட்டுக் குடும்பங்களில் மேலேக் குறிப்பிட்ட 'இல்வாழ்க்கைக்கான இயல்பில்' திரிதல் போக்கில், கவனிக்கத்தக்க அளவுக்கு மாற்றங்கள் 1970களில் துவங்கி, 1980 களில் திரிதல் வேகம் அதிகரித்து, 1990 களில் இன்னும் அதிகமாகி, இப்போது உச்சக்கட்டத்தை அடைந்து, அதன் அழிவுப் பயணமும் தொடங்கிவிட்டதற்கான அறிகுறிகளும் வெளிப்படத் தொடங்கி விட்டன. 

இந்திய சமூகமானது ஒரு சீரற்ற தன்மையில் (heterogeneous) இருந்தாலும், அந்த ஒரு சீரற்றத் தன்மையின் ஊடே , தகவல் தொடர்பு, பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்ட பல காரணிகள் மூலம் ஒன்றுடன் ஒன்று தொடர்புக்குள்ளாகி மாற்றங்கள் பெற்று வருகின்றன.

இந்திய விடுதலைக்குப் பின்னுள்ள வரலாற்றில், ‘மோடி செயல்முறை’ (Modi Phenomenon)   என்று அடையாளம் காணும் அளவுக்கு,'இந்துத்வா' என்ற போர்வையிலும், 'இந்துத்வா எதிர்ப்பு' என்ற போர்வையிலும் செயல்பட்ட சுயநல சக்திகள் தனியாகவும், உண்மையாகவும் நேர்மையாகவும் நாட்டுப்பற்றுடன் செயல்பட்டவர்கள் தனியாகவும் பிரியும் அளவுக்கு, ஒரு சமூகத் தள விளைவு (Social Polarization) நடைபெற்று வருகிறது.


குஜராத்தில் தொடங்கிய மாற்றம், வட மாநில அரசுகள், மத்திய அரசு, அதன்பின் மராத்தி, அரியானா என்று அடுத்தடுத்து ஆட்சியைப் பிடித்து வளர்ந்து வருகிறது. மோடி இரண்டாவது முறையாக குஜராத் தேர்தலைச் சந்தித்த போது,இந்துத்வா போர்வைகளில் இருந்த சில சக்திகளும் மோடியை ஏன் எதிர்த்தன? கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் மத மோதல்கள் நடக்காத, வெகுசில மாநிலங்களில் குஜராத்தும், பா.ஜ.க ஆட்சியில் இருந்த மற்ற வட மாநிலங்களும், இடம் பெற்றது எப்படி? இந்துத்வா போர்வைகளில் மோடி பிரதமாராவதை வெளிப்பட்ட எதிர்ப்புகளின் உள் நோக்கங்கள் என்ன? முஸ்லீம் பெரும்பான்மைத் தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றி பெற்று வருவது எதை உணர்த்துகிறது?

மத்தியிலும் தனிமனித பலகீனங்கள் உள்ள அரசியல் வாதிகளின் செல்வாக்கில் வளர்ந்து, உச்சக்கட்டத்தை, லட்சக்கணக்கான கோடி ஊழல்களில் தொட்டு, அத்தகைய ஊழல் பெருச்சாளிகள் செல்வாக்கிலிருந்து பெருமளவில் விடுப்பட்டவர்களிடம் , மோடி தலைமையில், ‘புதிய' மத்திய ஆட்சி தொடங்கியுள்ளது.எம்.ஜே.அக்பர் போன்ற இந்துத்வா எதிர்ப்பு எழுத்தாளர்களும் மோடி  ஆதரவாளர்களாக மாற (http://www.youtube.com/watch?v=8KD8dSioiKU),  பா.ஜ.க அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. வாஜ்பாய்  ஆட்சியானது, 'கூட்டணியில்' சிக்கி தவித்த ஆட்சியாகும். இந்திய விடுதலைக்குப் பின், முதன் முதலாக, தனிமனித பலகீனங்கள் செல்வாக்கு செலுத்த முடியாத, மத்திய ஆட்சியானது, இந்தியாவில் மோடியைப் பிரதமராகக் கொண்டு, வலுவான தனிப் பெரும்பான்மையுடன்  செயல்படத் தொடங்கியுள்ளது. உலக அரங்கில் இந்தியாவின் தர அடையாளம் உயரத் தொடங்கியுள்ளது என்பதை, உலக வர்த்தக அமைப்பு(WTO), மற்றும் உலக ஊழல் நாடுகள் தரவரிசைப் பற்றிய தகவல்களும் உணர்த்துகின்றன. 

30 வருட பொது வாழ்வில் ஊழல், வேண்டியவர்களுக்கு சலுகை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு கூட உள்ளாகாதவர் பிரதமர்  மோடி என்று இந்துத்வா எதிர்ப்பாளராகிய 'OUTLOOK' ஆசிரியர் வினோத் மேத்தா கருத்து தெரிவித்துள்ளார். (“He is dynamic, clean, keen to introduce change and in three decades he has been in public life, corruption or nepotism has not touched him. I could go on singing his praises and risk being expelled by the secular fraternity.”- Vinod Mehta on “Which Way Will He Turn?” http://www.outlookindia.com/- குறிப்பு கீழே)


'இந்துத்வா' என்ற போர்வையிலும், 'இந்துத்வா எதிர்ப்பு' என்ற போர்வையிலும், வெளிநாட்டு நிதி உதவி பெறும் கிறித்துவ‌ என்.ஜி.ஓ(N.G.O)  அமைப்புகளின் 'உற்சாகமான' ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட, 'மோடி எதிர்ப்பு',  வலுவிழந்து வந்தன. ஆனால் இந்துத்வாக்குள் உள்ள மோடி எதிர்ப்பு சக்திகள் அதை கெடுக்கின்றனவா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

ஊழலற்ற, பாரபட்சமற்ற, உண்மையான நாட்டுப்பற்றுள்ள ஆட்சியானது, எல்லா வகையான பிரிவினை மற்றும் சுயநல சூழ்ச்சிகளை முறியடித்து, அனைத்து சாதி, மக்களின் ஆதரவுடன் செயல்படும் ஆட்சியாக வரவேற்கப்படுகிறது. 'இந்துத்வா' என்ற போர்வையிலும், 'இந்துத்வா எதிர்ப்பு' என்ற போர்வையிலும் தூண்டப்பட்டு வரும், சாதி, மத மோதல்களுக்கும், பயங்கரவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் காலம் அதிக தொலைவில் இல்லை.

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் முகப்புத்தகத்தில் 'உணர்ச்சி போதை' போக்கிற்கு எதிராக வெளிப்பட்ட கருத்து, இந்துத்வா தொடர்புள்ள முகப் புத்தகத்தில் பாராட்டுதலுடன்  வெளியாகியுள்ளது. சமூகத்திற்கு கெடுதலான வகையில் இயல்பில் திரிந்தவர்கள் தனிமைப்பட்டு பலகீனமாகும் போக்கும் தொடங்கி விட்டது. 'இந்துத்வா' என்ற போர்வையிலும், 'இந்துத்வா எதிர்ப்பு' என்ற போர்வையிலும் 'உணர்ச்சிபூர்வ போதைகளை' தூண்டி வாழும் சுய‌நலவாதிகள் சருகாகி, உதிரச் செய்யும், அறிவுபூர்வ விவாதங்கள் தமிழ்நாட்டில் அரங்கேறத் தொடங்கியுள்ளன.

தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்றவையை மீட்பதற்கு, அந்த செயல்முறை தமிழ்நாட்டில் அரங்கேறுவது தவிர்க்க முடியாத வரலாறாக நிரூபணமாகப் போகிறது என்பது எனது கணிப்பாகும். தமிழ்நாட்டில் உணர்ச்சிபூர்வ விவாதங்களை விட்டு விலகி, அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவிப்பது அதற்கு மிகவும் துணை புரியும் என்பதும் என் கருத்தாகும்.

குறிப்பு: பெரியார் ஈ.வெ.ரா அவர்கள், காங்கிரசை எதிர்த்துக் கொண்டே, முதல்வர் காமராசரை ஆதரித்தார். காமராசர் ஆட்சியில் சட்ட எரிப்புப் போராட்டத்தில், பெரியார் இயக்கத்தினர் அளவுக்கு, தி.மு.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்டு எந்த எதிர்க்கட்சியும் சிறைத் தண்டனைகள் அனுபவிக்கவில்லை.அந்த சிறைத்தண்டனைகளை அனுபவித்த பின்னும் பெரியார் ஈ.வெ.ரா அவர்கள், முதல்வர் காமராசரை ஆதரித்தார், காந்தியையும் நேருவையும் 'கடுமையாக' எதிர்த்துக் கொண்டே. எனவே மேலேக் குறிப்பிட்ட எம்.ஜே.அக்பர் போன்ற‌ 'இந்துத்வா' எதிர்ப்பாளர்கள், நாட்டின் நலன் கருதி, மோடியை ஆதரித்து, கருத்துகள் வெளியிடுவதில் வியப்பில்லை. 

No comments:

Post a Comment