Sunday, December 7, 2014


                   தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு 

                     'தமிழ் ஈழம்'‍  - நேற்று, இன்று, நாளை 

 

கேள்விக்குறியாகி வரும் தமிழரின் தர அடையாளம் (benchmark)



தமிழ்நாட்டில் எண்ணிக்கையில் 'அதிகமாக வளர்ந்து' வரும் தமிழ் அமைப்புகள் இடையே 'பல கசப்புகளும், வேறுபாடுகளும்' இருந்தாலும், 'தமிழ் ஈழம்' என்ற கோரிக்கை ஈடுபாட்டில் 'யார் முதலில்?' என்ற கடும்போட்டியில் ஏன் உள்ளார்கள்? அதே போல் தமிழ்நாட்டில் குடி நீர், சாலை வசதி, கழிவு அகற்றல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக 'தினமும்' ஆங்காங்கே பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் போராடி வருகிறார்கள். படிக்க மாணவரின்றி , ஆயிரக்கணக்கில் அரசுப் பள்ளிகள் மூடப்படுகின்றன. அதனால் தமிழ்வழிக் கல்வியும், தமிழும் மரணப்படுக்கையில் உள்ளன. 'தமிழ் ஈழம்' என்ற கோரிக்கைக்கு எண்ணிக்கையில் வளர்ந்து வரும் தமிழ் அமைப்புகள் எல்லாம், இத்தகைய தமிழ்நாட்டு மக்களின் போராட்டங்களில் 'பங்கேற்காமல்' ஒதுங்கியிருப்பதில் 'ஒன்றாக' உள்ளார்களா? என்பதும் ஆய்விற்குரியது.

அதே போல் ஐ.நா உள்ளிட்டு உலக அரங்குகளில் ராஜபட்சேயின் 'பாதுகாவலராக' செயல்படும் (தமிழ்நாட்டில் கடந்த பல வருடங்களில்,கட்டுப்பாடின்றி சீனப் பொருட்களை அனுமதித்து, பல தொழில்களை சிதைத்து, லட்சக் கணக்கானவர்களின் வாழ்வாதாரங்களைச் சிதைத்து வரும்) சீனாவை, இது வரை, கண்டிக்காமல்,சத்தற்ற‌ 'காமன்வெல்த் புறக்கணிப்பு', 'கத்தி திரைப்பட எதிர்ப்பு' போன்றவற்றில் 'யார் முதலில்?' என்ற கடும்போட்டியில் 'ஒன்றுபட்டுள்ளார்களா'? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

மேலேக் குறிப்பிட்ட ஆய்வுகளை திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும் முன்னெடுத்தாக வேண்டிய நெருக்கடியில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிக்கியுள்ளார்கள.

இல்லையென்றால்,

'தமிழ் ஈழம்,சமூக நீதி,தமிழ் வளர்ச்சி'மட்டுமல்ல, 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' சம்பந்தப்பட்ட எந்த கோரிக்கையும்- சராசரி பொதுமக்கள் ஆதரவைப் பற்றிய கவலையற்ற பணபலம், 'மீடியா' பலம் ஆகிய காற்றினால் -  'பலூனை'ப் போல் ஊதிப் பெருத்து, வெடித்து ஒன்றுமில்லாமல் போய்விடும் ஆபத்தைத் தவிர்க்க முடியாது. தமிழ்நாட்டில் வாழும் 'ஆங்கிலோ‍இந்தியர்களை' போல, தமிழ்நாட்டிலேயே 'வேரற்ற மனிதர்களாக' 'தமிங்கிலீசர்களாக' தமிழ்நாட்டுத் தமிழர்கள் வாழும் நிலையும் வரும்.

மீள முடியாத (irreversible)  வகையில் அந்த பயணமும் தொடங்கி விட்டதா?  என்ற கவலையும் எனக்கு உண்டு. ஏனெனில் தமிழ்/திராவிட அமைப்புகளின் தோற்றங்களுக்கு முன் , தமிழ்நாட்டில் குழந்தைகளின் பெயர்கள் பெரும்பாலும் தமிழில் இருந்தன. இன்று பத்து வயதுக்குட்பட்ட  'இந்து' குடும்பப்பிள்ளைகளின் பெயர்கள் பெரும்பாலும் 'மேற்கத்திய போக்கில் திரிந்த' சமஸ்கிருத பெயர்களாகவும், 'கிறித்துவ' குடும்பங்களில் 'மேற்கத்திய கிறித்துவ'ப் பெயர்களாகவும் உள்ளன. முஸ்லிம் குடும்பங்கள் மட்டும் அந்த 'நோயில்' இதுவரை சிக்கியதாகத் தெரியவில்லை. கிராமங்கள் முதல் பெருநகரம் வரை,  2 வயதைக் கடந்த குழந்தைகளையெல்லாம் ஆங்கில வழி விளையாட்டுப் பள்ளிகளில் சேர்த்து, திரிந்த மேற்கத்தியப் பண்பாட்டுச் சூழலில், 'ஆங்கில வழியில்' குழந்தைகளை வளர்க்கும் நோயானது 'அதி வேகமாக' வளர்ந்து வருகிறது. தமிழ், பாரம்பரியம், பண்பாடு போன்றவை, அதே வேகத்தில் மரணப் பயணத்தில் சிக்கி,வேரற்ற 'தமிங்கிலிசர்களாக', தமிழர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

அந்த போக்கைத்  தவிர்க்க,  நம்மால் ஆன முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில், தமது வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வதை நோக்கமாக கொள்ளாமல், சுயலாப கணக்கின்றி, உண்மையான ஈடுபாட்டுடன் 'தமிழ், தமிழர், தமிழ்நாடு'' ஆதரவாளர்களாக இருப்பவர்கள் பார்வைக்கு, இதனை எழுதினேன்.

ஒரு நல்ல தர  அடையாளத்துடன் (bench mark) உள்ள‌ பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான தகுதி இல்லாதவர்கள் , அங்கு நுழையமுடியாது. 'குறுக்கு வழிகளில்' நுழைந்தாலும், அங்குள்ள நெறிமுறைகளின் செயல்பாடுகளானது, தகுதி இல்லாதவர்கள் தாமாகவே வெளியேறும்/வெளியேற்றப்படும் விளைவை உண்டாக்கும். படிப்புகளின் தேர்வு தொடர்பான நெறிமுறைகளின் செயல்பாடுகளானது , தகுதியற்றவர்கள் பட்டங்கள் பெற அனுமதிக்காது. தர அடையாளம் மிகவும் மோசமாக உள்ள பல்கலைக் கழகங்களே தர வரிசையில் அடிமட்டத்தில் இடம் பெறும். தர அடையாளத்தில் கீழுள்ளவற்றில் படித்த மருத்துவர்களும், பொறியாளர்களும், மற்ற பட்டதாரிகளும், நல்ல தர அடையாளம் உள்ள நிறுவனங்களில் வேலை பெற முடியாது.

பல்கலைக்கழகத்திற்கு மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் பாரம்பரியம், பண்பாடு அடிப்படைகளில் செயலில் உள்ள சமூக நெறிமுறைகளின் வலிமையும், அல்லது குறைபாடுகளும்,  அச்சமூகத்தின் தர அடையாள(benchmark) வலிமையாகவோ அல்லது குறைபாடாகவோ வெளிப்படும். ஒரு சரியான தர அடையாளமுள்ள சமூகத்தில், தொழில், வியாபாரம் உள்ளிட்ட துறைகளில் 'உரிய' தகுதியும் திறமையும் உள்ளவர்களே செல்வம் சம்பாதிக்க முடியும்.கல்வியில் தகுதியும் திறமையும் உள்ளவர்களே அச்சமூகத்தில் 'அறிவு' சம்பந்தப்பட்ட துறைகளிலும், அமைப்புகளிலும் மேல் நோக்கி முன்னேற முடியும்.

அதற்கு மாறாக, மேலேக்குறிப்பிட்ட எந்த வகை தகுதி, திறமைகளும் இல்லாமல், மனசாட்சியையும், ஒழுக்க நெறிமுறைகளையும் ஒதுக்கி வைத்து,எல்லா வகையான 'தரகு'ப்(Broker) பணிகளிலும் எந்த அளவுக்கு தகுதி, திறமைகள் உள்ளதோ, அந்த அளவுக்கு செல்வம், செல்வாக்கு சம்பாதிப்பதும், 'அறிவு' சம்பந்தப்பட்ட துறைகளிலும், அமைப்புகளிலும் கூட மேல் நோக்கி முன்னேறவதும் ஆன போக்கு , தமிழ்நாட்டில் எப்போது தோன்றி, எப்படி வளர்ந்தது, இன்று என்ன நிலையில் உள்ளது என்பது ஆராய்ச்சிக்கு உரியதாகும். அந்த ஆராய்ச்சியே தமிழ்நாட்டின் தர அடையாளம் எப்படி உள்ளது என்று தெளிவாக்கும். அந்த ஆராய்ச்சிகள் பற்றிய கவலையின்றி,'தமிழ் ஈழம்,சமூக நீதி,தமிழ் வளர்ச்சி' என்று எந்த குறிக்கோளுக்கும் கிடைக்கும் 'ஆதரவுகள்' ஆனது, மேற்குறிப்பிட்ட தரகர்களை மேலும் வலிமைப்படுத்தி, தமிழ்நாட்டுத் தமிழர்களின் தர அடையாளத்தை இன்னும் கீழிறக்கும் விளைவையே ஏற்படுத்தும்.

எந்த கோரிக்கையும் வெற்றி பெற வேண்டுமானால், அந்த முயற்சியில் ஈடுபடுபவர்கள் கீழ்வரும் திருக்குறளைக்(471)  கருத்தில் கொண்டே செயல்பட வேண்டும்.

“ வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
  துணைவலியுந் தூக்கிச் செயல் “

மேலேக் குறிப்பிட்ட குறளின் அடிப்படையில் செயல்பட வேண்டுமானால், தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு 'தனி ஈழம்' என்ற கோரிக்கைக்கு நேற்று எப்படி இருந்தது, இன்று எப்படி இருக்கிறது என்று பாரபட்சமற்ற நோக்கில் சரியாகக் கணித்தால் தான், நாளை எப்படி இருக்கும் என்று ஓரளவு சரியாக யூகிக்க முடியும்.

அவ்வாறு கணிப்பதற்கு சராசரி மக்களிடமிருந்து அந்நியமாகாமல், உணர்வுபூர்வ போதைக்குள்ளாகாமல், பாரபட்சமற்ற முறையில் (objective) அவர்களின் போக்கை கவனிக்கும்(observe) வாய்ப்பு இருக்க வேண்டும். 

தமிழ்நாட்டில், பொதுவாக, யார் யாரிடம் பேசினாலும், அந்த உரையாடலின் பின் விளைவுகள் எல்லாம் தமக்கு சாதகமா? பாதகமா? என்று யோசித்து பேசும் போக்கானது பொதுவாகவும், குறிப்பாக மேல் நடுத்தர, வசதியான பிரிவினரிடம், அதிகரித்து வந்துள்ளது. தமது வாழ்வின் மூலம் மனசாட்சிக்கும், உண்மைக்கும், நேர்மைக்கும் கட்டுப்பட்டு வாழ்பவர்கள் என்று தமக்கு தெரிந்தவர்களிடம் மட்டுமே, அத்தகையோர் எல்லாம், தமது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் ‘மீடியா’ பார்வையில் பிரபலமான மனிதர்களாக வாழ்பவர்கள் சராசரி மக்களிடமிருந்து அந்நியப்பட்டே வாழ முடியும். அது மட்டுமல்ல படைப்பாற்றலின் ஊற்றுக் கண்கள் இயற்கையும், சாதாரணமாக வாழும் மக்கள் சமூகமும் என்பதையும் நான் அறிவேன். எனவே இயன்றவரை அந்த ஊற்றுக்கண்களோடு தொடர்பில் உள்ளவாறே நான் வாழ்ந்து வருகிறேன். 'பாராட்டு, புகழ், முக்கியத்துவம்' போன்றவை, அத்தகைய வாழ்வைக் கெடுக்கும் காரணிகள் என்ற எச்சரிக்கை உணர்வும், அவ்வாறு வாழ துணை புரியும். ‘திராவிட மன நோயாளிக் கள்வர்களின்’  வாடையில்லாமல் வாழவும் துணை புரியும்.

அது மட்டுமல்ல, கணிப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை பற்றிய ஆழ்ந்த அறிவும், அனுபவமும் அவசியமாகும்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அறிமுகமானவர்; ஆன்டன் பாலசிங்கம், மாத்தையா, பேபி சுப்பிரமணியம், பேராசிரியர்கள் நித்தியானந்தம், நிர்மலா உள்ளிட்டு, 1980‍களில் விடுதலைப்புலிகளின் முக்கியத் தலைவர்களுடன் நெருக்கமாகப் பழகியவர்; நெடுமாறன் தவிர்த்து, வை.கோ, கொளத்தூர் மணி, கோவை.இராமகிருட்டிணன் உள்ளிட்ட தமிழ்நாட்டு முக்கிய நபர்களுக்கு முன்னரே, விடுதலைப்புலித் தலைவர்களுடன் நெருக்கமாகப் பழகியவர்; ஆள் பலத்திலும், ஆயுதபலத்திலும் அன்றைய கட்டத்தில் மூன்றாம் இடத்தில் இருந்த விடுதலைப் புலிகள், அன்று 'மிகுந்த செல்வாக்குடன்' இருந்த திராவிடர் கழகத்தின் ஆதரவால் முதல் இடத்திற்கு வர துணை புரிந்தவர்களில் ஒருவர்; -  என்ற தகுதிகளோடு, எனது இசை ஆய்வுத்திட்டப் பணிகளின் (R & D Projects)  ஊடே, தமிழர்களின் நலன் கருதி, விருப்பு வெறுப்பற்ற அறிவியல் அணுகுமுறைப் போக்கில், இதனை எழுத முனைந்தேன். இம்முயற்சியில் நான் ஈடுபட, திருச்சி பெரியார் மையம் மூலம் கிடைத்த, லாப நட்ட போக்குள்ள 'திராவிட மனநோயாளிக் கள்வர்க‌ள்' மூலம் கிடைத்த‌, கசப்பான, ஆனாலும் மதிப்பு மிக்க (very valuable) ‌, அனுபவங்களும், கீழ்வரும் போக்கும், காரணங்களாகும். அத்தகைய அனுபவங்கள் மூலம் வெளிப்பட்ட அரிய கண்டுபிடிப்பே ‘தமிழ்நாடு வீழ்ச்சியும் மீட்சியும் - வெற்றிக்கான எலும்புத் துண்டு இரகசியம்’. 
(http://tamilsdirection.blogspot.com/2013_10_01_archive.html  )

கடந்த பாராளுமன்ற தேர்தலில் 14 தொகுதிகளில் - தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சியாகக் கருதப்பட்ட  - விஜயகாந்த் கட்சி பெற்ற வாக்குகளை விட , அதிக வாக்குகளை 7 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்ட பி.ஜே.பி (கூட்டணி 2 தொகுதிகளில் - தி.மு.க கூட்டணி முழுவதும் தோற்ற நிலையில்) வென்று, தமிழ் நாட்டில் மூன்றாவது பெரிய கட்சி என்ற நிலையை அடைந்த‌து. பாராளுமன்ற தேர்தலுக்கு முன் திருச்சியில் மோடிக்கு கூடிய, படித்த இளைஞர்கள் பெருமளவில் திரண்ட‌, கூட்டமானது, தமிழ்நாட்டில் ஒரு அதிசயம் என்றும், தமக்கு தமிழ்நாட்டில் 'புதிதாக வெளிப்பட்ட' ஆதரவு (positive slope)  பற்றிய புரிதலின்றி, தமிழக பா.ஜ.க - மக்கள் செல்வாக்கில் இறங்குமுகத்தில் (negative slope) இருந்த‌ - மற்ற கட்சிகளுடன் கூட்டு சேர்ந்த தவற்றைத் தவிர்த்திருந்தால், திருச்சி உள்ளிட்டு இன்னும் கூடுதலான தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம் என்றும், திருச்சி பெரியார் மையத்தில் என்னுடன் பங்காற்றியவருடன் நடத்திய உரையாலில் வெளிப்பட்ட கருத்தும், தமிழ்நாட்டின் போக்கைப் பற்றிய முக்கிய 'சிக்னல்' ஆகும். திராவிடக் கட்சிகளின் 'சந்தர்ப்ப வாத' 'தனி நபர் துதி' உள்ளிட்ட‌ நோய்கள் தமிழக பா.ஜ.கவைப் பற்றி,  அதன் விளைவாக‌ சறுக்கியிருந்தால், அதில் வியப்பில்லை.

மேற்குறிப்பிட்ட பின்னணியில் 'தமிழ் ஈழம்' பற்றிய தமிழ்நாட்டு மக்களின் ‍' நேற்று, இன்று, நாளை' பற்றிய ஆய்வினை மேற்கொண்டேன்.

1983 சூலை இனப்படுகொலைக்குப் பின், தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்கள் ந‌கரம், கிராமம் என்ற வேறுபாடின்றி, தாமாகவே கொதித்தெழுந்து, பல வாரங்கள் அந்த கொதிப்பு நீடித்ததை நேரில் அனுபவித்தவன் நான். அந்த கொதிப்பில் உருவான ஆதரவாளர்கள் பலத்துடன், விடுதலைப் புலிகள், PLOT, EPRLF, TELO, EROS      போன்ற பல ஈழ விடுதலைக்குழுக்கள்,  தமிழ்நாட்டை தததம் ஆதரவு மண்டலங்களாகக் கூறு போட்டுக் கொண்டனர். அத்துடன் ஆயுதப்பயிற்சிகள், புத்தகங்கள், இதழ்கள் வெளியிடுதல், கண்காட்சிகள் நடத்துதல் உள்ளிட்டு பலவேறு வழிகளில் தம்மைப் பலப்படுத்திக் கொண்டனர். அக்குழுக்களின் தமிழ்நாட்டு ஆதரவாளர்களிடையே ஆங்காங்கு மோதல்கள் நடந்த சம்பவங்களும் உண்டு.

அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் எம்.ஜி ஆரின் ஆதரவில், அதிக பலன் பெற்றவர்கள் விடுதலைப் புலிகள். அன்று மிகவும் வலிமையுடனும், செல்வாக்குடனும், இருந்த டெலோ தலைவரையும், நூற்றுக்கணக்கான ஆயுதப் பயிற்சி பெற்ற போராளிகளையும், விடுதலைப் புலிகள் இலங்கையில் சுட்டுக் கொன்றனர். அதிலும் கைகளைத் தூக்கி சரணடைந்தவர்களையும் கொன்றனர். அதே போல்  EPRLF   போராளிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். தமிழ்நாட்டில் அந்த அமைப்புகளுக்கு எவ்வளவு ஆதரவாளர்கள் இருந்தனர்? அவர்கள் மனநிலையில் என்னென்ன பாதிப்புகள் விளைந்தன? என்பது பற்றி, எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் விவாதம் நடக்கவில்லை. என்னைப் போன்று, அன்று விடுதலைப்புலி ஆதரவாளர்களாக செயல்பட்டவர்கள் தங்களுக்குள் வருத்தத்தைப் பரிமாறிக் கொண்டோம். ஒரு பெரிய இலட்சியத்திற்காகப் போராடும் இயக்கத்தில், இது போன்று நடக்கும் தவறுகளை, சகித்துக் கொள்வதைத் தவிர வேறு , என்று 'அன்று' இருந்த ‘அறிவில்’(?)  சமாதானம் சொல்லிக் கொண்டோம். 'விடுதலைப் புலிகள் மீண்டும் ஏமாறப் போகிறர்களா?' (மார்ச் 1988} உள்ளிட்ட பல (திருச்சி பெரியார் மையம்) வெளியீடுகளின் அபாய எச்சரிக்கைகள் காரணமாக, விடுதலைப்புலிகள் என்னை வெறுக்கத் தொடங்னார்கள்.

பின் எம்.ஜி ஆர் மறைந்து , தி.மு.க ஆட்சிக்கு வந்தது (1989-91). தி.மு.க ஆட்சியில் 1990 சூனில்  சென்னையில் தலைவர் பத்மநாபா உள்ளிட்டு பலரை  விடுதலைப்புலிகள் கொன்றது தமிழ்நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. ஏனெனில் எம்.ஜி.ஆர் ஆட்சியில் இது போன்ற கொலைகளை இலங்கையில் தான் செய்தனர்; தமிழ்நாட்டில் செய்யவில்லை.
( On 19 June 1990 the Tamil Tigers attacked an EPRLF meeting in Madras, murdering thirteen EPRLF members including leader K. Padmanaba, Jaffna District MP G. Yogasangari and former North Eastern Province Finance Minister P. Kirubakaran

தி.மு.க தொண்டர்களில் பெரும்பாலோர் ‘டெலோ’(TELO) ஆதரவாளர்களாக இருந்த சூழலில், தி.மு.க முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும், விடுதலைப்புலி ஆதரவு போக்கில் இருந்தது, வித்தியாசமான போக்காகும். அந்த சமயத்தில் ஆன்டன் பாலசிங்கத்தின் மிரட்டலுக்குப் பயந்தே,  அவர் அந்த ஆதரவு போக்கில் இருந்ததாக விகி லீக்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.
(Another, perhaps more credible theory is that the LTTE has threatened Karunanidhi with a significant increase in the level of militant violence in Tamil Nadu, enough perhaps to lead to the imposition of President’s rule, if he doesn’t boost their cause,” says a cable from the U.S. Consulate in Chennai to its Embassy in New Delhi and the State Department (90MADRAS1249_a, CONFIDENTIAL)

"அண்ணா (கருணாநிதி) உங்களது ஆட்சி தமிழகத்தில் மீண்டும் வந்துள்ளதையடுத்து நான் பெருமைப்படுகிறேன். "

பிரபாகரன் வைகோ மூலமாக, அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பிய மடலில். http://tamil.thehindu.com/tamilnadu

விடுதலைப்புலிகள் ஆதரவு போக்கைக் காரணம் காட்டி , தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டது. அதன்பின் 1991 மே மாதத்தில் ராஜிவ்காந்தி கொலைசெய்யப்பட்டார். தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் மீது கோபம், வருத்தம், வெறுப்பு என்று பல்வேறு அளவுகளில் மக்களிடையே வெளிப்பட்டது. தி.மு.க அதன் காரணமாகவே, பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தது.

அதன்பின் விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டில் 'ஏகபோக' செல்வாக்கில் வளர்ந்த போக்கில், மற்ற குழுக்களின் ஆதரவாளர்களாக இருந்த 'முக்கிய' நபர்களில் பலர் விடுதலைப்புலி ஆதரவாளர்களாக 'மாறினார்கள்'. தாம் ஆதரித்த குழுக்களின் தலைவர்களையும், ஆயுதப்பயிற்சி பெற்ற போராளிகளையும் விடுதலைப் புலிகள் கொன்றது 'சரி தான்' என்று 'தெளிந்து' மாறினார்களா? அல்லது சுயலாபத்திற்கு மாறினார்களா? என்பது அவர்களின் மனசாட்சிக்கே வெளிச்சம். அப்படி மாறியவர்களைத் தவிர்த்து, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலுள்ள மற்ற குழுக்களின் ஆதரவாளர்கள் மனநிலை பற்றிய விவாதம் சமூகப் பொறுப்புடன் தமிழ்நாட்டில் நடந்ததாகத் தெரியவில்லை.

அதன்பின் தமிழ்நாட்டில் மக்களிடையே 'தமிழ், தமிழ் உணர்வு, இந்தி எதிர்ப்பு, தனி நாடு' என்று பேசுபவர்கள் அந்நியமாகத் தொடங்கிய போக்கும், தமிழ்நாட்டு மக்கள் அது போன்ற பிரச்சினைகளிடமிருந்து அந்நியமாகும் போக்கும் வளர்ந்தன. அது போன்ற பிரச்சினைகளுக்கு தாமாக கூடிய மக்கள் கூட்டம் குறைவதும், சினிமாக் கவர்ச்சி உள்ளிட்ட‌, பல வகையான 'தூண்டில் மீன்களை'ப் பயன்படுத்தி ,ஆள் சேர்த்து பொதுக் கூட்டங்களும், அறைக் கூட்டங்களும் நடத்துவதும் அதிகரித்தது. இதில் வியப்பென்னவென்றால், அந்த போக்கினில், தமிழ் அமைப்புகளின் எண்ணிக்கையும்  அதிகரித்தது. ஏன் என்பது ஆய்விற்குரியது.

முள்ளி வாய்க்கால் போர் தொடங்குவதற்கு முன்னும், போர் நடந்த போதும், அதற்குப் பின்னும் இன்று வரையிலும் சாதாரண பொது மக்கள் தத்தம் பிரச்சினைகளில் 'மூழ்கி', அந்தப் பிரச்சினைகளுக்காக 'மட்டுமே' தாமாகவே வீதியில் இறங்கி போராடி, வாழ்ந்து வருகிறார்கள். 1983 சூலை இனப்படுகொலைக்குப்பின் தாமாகவே கொந்தளித்து, நீண்ட காலம் நீடித்த தமிழ்நாட்டு மக்கள் ஆதரவாகப் பெருகிய 'சமூக ஆற்றலானது’, எந்தெந்த வழிகளில் விரயமானது என்று ஆராய்ந்தால் தான், .( ‘சமூக இழைகளும், சமூகப் பிணைப்புகளும்   (Social Fibers & Social Bonds)’;
http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html) , தமிழ் நாட்டு  சராசரி மக்கள், இன்று 'தமிழ் ஈழம்' மட்டுமல்ல, 'தமிழ் உணர்வு, இந்தி எதிர்ப்பு' போன்றவற்றிலிருந்தும் அந்நியப்பட்டு வாழ்வது ஏன் என்பது தெளிவாகும்.

மேலே குறிப்பிட்ட 'தமிழ் ஈழம்' ஆதரவு சமூக ஆற்றலானது, ஈழ விடுதலைக் குழுக்கள் தமக்குள் கூறு போட்டு 'பயன்படுத்திய' போக்கிலும், அதன்பின் ஒருவரையொருவர் அழித்த போக்கிலும், அதனூடே பணபலம் அதிகரித்த போக்கில், தமிழ்நாட்டு 'தனி ஈழம்' ஆதரவாளர்கள் பலரின் வசதி வாய்ப்புகள் வளர்ந்து, சராசரி வாழ்க்கையிலிருந்து 'மேல் தட்டு' வாழ்க்கைக்குத் தாவிய போக்கிலும், அந்த போக்கின் ஊடேயே, சராசரியாக வாழும் பொதுமக்களிடமிருந்து அந்நியமாகியும், 'திராவிட அரசியல் கொள்ளையர்களான 'புரவலர்களிடம்' நெருக்கமாகி வரும் போக்கிலும், அந்த ஆற்றல் விரயமாகி,  வற்றி வருகிறது.

தமிழ்நாட்டில் 'அரசியல் நீக்கம்' முடிவுக்கு வந்து, ஆதாய அரசியல் ஒழிந்து, உண்மையான மக்கள் நல அரசியல் அரங்கேறும் காலக்கட்டத்தில்;

தமிழின், தமிழ்நாட்டின் சீரழிவுக்கு காரணமான, திராவிட அரசியல் கொள்ளையர்களான 'புரவலர்கள்' மட்டுமின்றி, அக்கொள்ளையர்களுக்கு நெருக்கமாகி, 'பலன்கள்'(?) பெற்று பயணித்த விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும், தமிழ்நாட்டு மாணவர்களின், இளைஞர்களின், 'சமூக குற்றவாளி கூண்டில்' நிறுத்தப்படும் காலமும், அதிக தொலைவில் இல்லை.(http://tamilsdirection.blogspot.sg/2017/02/blog-post_19.html )

சுயலாப நோக்கின்றி 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீது அக்கறையுள்ளவர்கள், தமிழ்/திராவிட. தேசிய, உள்ளிட்ட பல அமைப்புகளில் சிதறி இருக்கின்றனர். அந்தந்த அமைப்புகளில் உள்ள அத்தகையோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. மேலேக் குறிப்பிட்ட 'தரமற்ற தரகர்களாக‌',  அந்தந்த அமைப்புகளின் கொள்கைகளை வெளிப்பூச்சாக ஏமாற்றி (camouflage ) 'வளர்ந்து' வரும் ஆசாமிகளிடம்,  'இவர் நம்மாளு' என்று ஏமாறாமல், அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும். தமிழ்/திராவிடம், தேசியம் என்று பல வகைகளில் கொள்கையில் வேறுபட்டிருந்தாலும்,  சுயலாப நோக்கின்றி வாழ்பவர்களை அடையாளம் கண்டு,  அறிவுபூர்வமான விவாதங்களில் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்ற ஆணி வேர்களின் தொடர்புகளை மேற்கத்திய போக்கில் சிக்காதவாறு நவீனமயத்திற்கு (modernization without westernization)  வளர்த்தெடுக்கும் போக்கை ஊக்குவிக்க வேண்டும். எந்த கொள்கை, அமைப்புகளுக்குள் 'ஒளிந்திருந்தாலும்' , 'தரமற்ற தரகர்களை' தனிமைப்படுத்தி, மற்றவர்கள் ஓரணியில் திரளும் சமூக தள விளைவுக்கான (social polarization)  நேரம் நெருங்கி விட்டது.

உணர்ச்சிபூர்வ போக்குகளிலிருந்து ஒதுங்கி, அமைப்பு வேறுபாடுகளைத் தாண்டி, சுயலாப நோக்கின்றி, 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீது அக்கறையுள்ளவர்கள்எல்லாம்,  ஓரணியில் திரண்டாக வேண்டும். உணர்ச்சிபூர்வப் போக்கைத் தவிர்த்து, அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவித்து, தமிழரின் தர அடையாளத்தை(Benchmark)  உயர்த்தவும், வேரற்ற 'தமிங்கிலீசர்களாக' தமிழர்கள் மாறுவதைத் தடுக்கவும் அதுவே ஒரே வழியாகும். 

குறிப்பு:

1944இல் 'பெரியார்' ஈ.வெ.ரா திசை திரும்பியதைப் போல, பிரபாகரனும் பாதகமாக திசை திரும்பினாரா? என்ற ஆய்வுக்குதவும் தகவல் வருமாறு:

தனது வரைஎல்லைகள்(limitations) பற்றிய புரிதலின்றி, பிரபாகரன் 'திசை திரும்ப' தொடங்கிய காலத்தில், அது பற்றி ஆன்டன் பாலசிங்கம், பேராசிரியர்கள் நிர்மலா, நித்தியானந்தம், நான் உள்ளிட்ட நால்வரும் விவாதித்தோம். பிரபாகரனை 'கவனமாக' கையாண்டு நெறிப்படுத்தலாம், என்று பாலசிங்கம் கருத்து தெரிவித்தார். அதை ஏற்றுக்கொள்ளாமல், பேராசிரியர்கள் நிர்மலா, நித்தியானந்தம் இருவரும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறினர். அதன்பின் நிர்மலா, திருச்சியிலிருந்த எனது இல்லத்திற்கு வந்து, 'விடுதலைப்புலிகளை ஆதரிப்பது தவறு' என்று கோபமாக பேசினார். பின், எனது முயற்சியில், சென்னை பெரியார் திடலில் கோவை.இராமகிருட்டிணனை சந்தித்து, அவர் பேச ஏற்பாடு செய்தேன். அவரிடமும் நிர்மலா கோபமாக பேசியதை கோவை.இராமகிருட்டிணன் மறந்திருக்கமாட்டார் என்று நம்புகிறேன். அதன்பின் கடைசியாக, ஆண்டன் பாலசிங்கத்தை சந்தித்த போது, சர்வதேச அரசியல் சூழலில், 'தனி ஈழம் சாத்தியமில்லை' என்று நான் விளக்கியபோது, அதற்கு தகுந்த மறுப்பு சொல்லாமல், மொட்டையாக 'ஆனாலும் வாங்கி விடுவோம்' என்றார். அந்த சந்திப்பில் கூட இருந்த விடுதலை இராசேந்திரன், அதை மறந்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். அதன்பின் இசை ஆராய்ச்சியில், நான் திசை திரும்பினேன்.

நிர்மலாவின் தங்கையான, யாழ் பல்கலைக்கழக மனித உரிமை அமைப்பின் நிறுவனருமான,  பேரா.முனைவர்.ரஜனி திரநாகமா, விடுதலைப்புலிகளை விமர்சித்து, 21 செப்டம்பர் 1989இல் ' The Broken Palmyra' என்ற புத்தகத்தை வெளியிட்டார். அடுத்து சில வாரங்களிலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
https://en.wikipedia.org/wiki/Rajini_Thiranagama & Rajini Rajasingham Thiranagama: Unforgettable Symbol of Sri Lanka’s Tamil Tragedy
By D.B.S. Jeyaraj; http://dbsjeyaraj.com/dbsj/archives/33112 

பின் பல வருடம் கழித்து,'ஏன் தமிழ்நாடு தனிநாடாக வேண்டியதில்லை?' என்று விளக்கிய, கீழ்வரும் பாலசிங்கம் பேட்டி, என் கண்களுக்கு பட்டது." " There is a state government of its own there. There are political parties. The state is prospering. Why should Tamilnadu separate from India? There is no need to do so" said Balasingham." Page 127; Frontline December 24, 1999. பிரபாகரனை 'கவனமாக' கையாண்டுவந்த , ஆண்டன் பாலசிங்கம் 2006 டிசம்பரில் மறைந்தார். 

நான் ‘ON GROWTH AND FORM’ (‘வளர்ச்சி மற்றும் வடிவம் பற்றி’) BY D'ARCY WENTWORTH THOMPSON’ என்ற புத்தகத்தைப் படித்து, சமூகவியல் நோக்கில் குறிப்புகள் எடுத்து வருகிறேன். (http://en.wikipedia.org/wiki/D%27Arcy_Wentworth_Thompson  )

எனது இசை ஆராய்ச்சிகளின் ஊடே, இயன்ற வரை இதற்கும் நேரம் ஒதுக்கி மெனக்கெடுவதற்கு, மேற்குறிப்பிட்டது போன்ற பல அனுபவங்களிலிருந்து, தமிழ், தமிழர், தமிழ்நாடு மீட்சிக்கான வழிமுறைகளை கண்டுபிடிக்கவேயாகும்.
http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html

No comments:

Post a Comment