Thursday, October 30, 2014



   இந்தியாவில் ‘வித்தியாசமான’ தமிழ்நாடு (1)




இந்திய விடுதலைக்கு முன் இந்திய துணைக் கண்டத்தில், அரசமைப்பு(kings) என்ற அரசியல் வடிவத்தில்  பல அரசர்களின் கீழ் தமிழ் நாட்டிலும், அது போலவே இந்தியாவின் பிற பகுதிகளிலும், இயங்கிய இந்திய சமூகம், கிழக்கிந்திய கம்பெனியில் சிக்குண்டு, காலனிய ஆட்சியில் தமது அரசியல் அடையாளத்தில் மாற்றம் பெற்றது. வெள்ளையர் வருகைக்கு முன் இந்திய சமூகம் மன்னராட்சியில்  ஒரு சீரற்ற(heterogeneous) ,மையமற்ற (decentralized) ,கிராம அளவிலான‌ கிடைத்தள சுய ஆட்சித் தன்மை (horizontal autonomous ) உள்ளவையாக இருந்தன. இந்திய ஆட்சியிலும் அரசியலிலும் கிறித்துவ பாணி மையப்படுத்தப்பட்ட‌(centralized), செங்குத்து (vertical),  தரஏணி( hierarchical)  பாணியைத் தமது சுயநல்ன்களுக்காக காலனி ஆட்சி அறிமுகப்படுத்தியது.

1857‍இல் இந்திய மன்னர்கள் ஒன்று சேர்ந்து முதல் இந்திய விடுதலைப் போரை நடத்திய வியப்பூட்டும் தகவல்கள் வீர சவர்க்காரின் 'எரிமலை' (தமிழில் ‘1857 War of Independence’) நூலில் உள்ளன. வீரத்துடனும், தியாகத்துடனும் போரிட்ட இந்துக்கள் முஸ்லீம்கள் பற்றியும், துரோகம் செய்த இந்துக்கள் முஸ்லீம்கள் பற்றியும் பாரபட்சமற்ற முறையில் தகவல்கள் அந்நூலில் வெளிவந்துள்ளன.

அதாவது இந்திய மக்களிடையே தத்தம் பகுதி அரசர் சார்பு அரசியல் அடையாளமானது, 'இந்தியர்' என்ற அடையாளத்தில்  மாற்றம் பெறத் தொடங்கியது. ஆனால் அந்த போக்கில் தென்னிந்தியா, குறிப்பாக தமிழ்நாடு இடம் பெறவில்லை. 1857‍க்கு முன்னேயே வெள்ளையரை எதிர்த்து தமிழ்நாட்டில் வீரமும் தியாகமும் மிக்க போராட்டங்கள் நடந்திருந்தாலும், மேற்குறிப்பிட்ட மாற்றம் நடந்த போக்கில் தமிழ்நாடு இடம் பெறவில்லை.

அதன்பின் இந்தியர் என்ற அடையாளத்தை வளர்த்த‌ காங்கிரசிலிருந்து விலகி, நீதிக்கட்சி ஆதரவாளராக செயல்பட்டு, பின் பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் நீதிக்கட்சியின் தலைவரானார். காங்கிரசில் இருந்த 'சுய‌ராஜ்ய'  பிரிவினரைப் போன்றே, 'இந்தியர்' என்ற அடையாளத்துடன் காலனி ஆட்சியில் பங்கேற்றது நீதிக் கட்சியாகும். நீதிக்கட்சியில் செல்வத்திலும் புலமையிலும் ஒழுக்கத்திலும் மேம்பட்ட பிராமண‌ரல்லாதோருடன் பிராமணர்களும் இருந்தனர். அண்ணாதுரையின் செல்வாக்கில் பெரியார் நீதிக்கட்சியை 1944இல் 'திராவிடர் கழகம்' என்று மாற்றினார். பிராமணர்களுக்கு திராவிடர் கழகத்தில் இடமில்லை என்பதோடு,  செல்வத்திலும் புலமையிலும் ஒழுக்கத்திலும் உயர்ந்திருந்த நீதிக்கட்சியில் இருந்த‌ பிராமணரல்லோதோரும் இல்லாமல், 'திராவிடர் கழகம்' பயணித்தது.

இடையில் பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் 'தனி திராவிட நாடு' என்ற கோரிக்கையை முன்வைத்து, அதனுடன் தாழ்த்தப்பட்ட, பிறபடுத்தப்பட்ட மக்களின் வகுப்புரிமை கோரிக்கையுடன் செயல்பட்டு, அவரின் செல்வாக்கு வளர்ந்த வேகத்தில், ‘தமிழர்’, ‘திராவிடர்’ என்ற குழப்பங்கள் தமிழ்நாட்டில் வளர்ந்து வந்த சூழலில்,  'இந்தியர்' என்ற அடையாளம் இந்தியாவின் மற்ற பகுதிகளில் வளர்ந்த அளவுக்கு தமிழ்நாட்டில் வளரவில்லை.

இந்திய விடுதலைக்குப் பின் 1952இல் நடந்த முதல்  பொதுத் தேர்தலில், தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் மட்டுமே வித்தியாசமாக இருந்தன. இந்திய விடுதலையைத் ‘துக்க நாளாக’ அறிவித்து, ராஜாஜியும் ஆதரித்த 'தனி திராவிட நாடு' கோரிக்கையை முன்வைத்த பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் ஆதரித்த கூட்டணிக் கட்சிகள் பெற்ற பெரும் வெற்றியில், காங்கிரசுக்கு 'மெஜாரிட்டி' கிடைக்கவில்லை. பின் காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்ற கட்சிகளில் சிலவற்றை தமது பக்கம் இழுத்து, ராஜாஜி முதல்வராக, காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. அதன்பின் 'குலக் கல்வி' பிரச்சினையில் ராஜாஜி பதவி விலக, காமாராஜர் முதல்வரானார். அதன்பின் 1967‍ வரை பெரியார் ஆதரவுடன் காங்கிரஸ் ஆண்டது. ராஜாஜி துணையுடன் 1967‍‍இல் தி.மு.க ஆட்சியைப் பிடித்த பின், பெரியாருடன் நேசமாக, பெரியார் ஆதரவுடன் தி.மு.க ஆண்டது.பெரியார் மறைவிற்குப் பின்,  1977இல் எம்.ஜி.ஆரின் அ.இ.அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. 

1989‍இல் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின், அ.இ.அ.தி.மு.க பிளவின் காரணமாக தி.மு.க ஆட்சிக்கு வந்தது. ஒன்றுபட்ட அ.இ.அ.தி.மு.க, ஜெயலலிதா தலைமையில் மீண்டும் 1991 இல் ஆட்சியைப் பிடித்தது. அதன்பின் தி.மு.க தலைவர் குடும்ப செல்வாக்கு மேல் மக்கள் கொண்ட அதிருப்திக்கும், அ.இ.அ.தி.மு.கவில் சசிகலா குடும்ப செல்வாக்கு மேல் மக்கள் கொண்ட அதிருப்திக்கும், ஏற்றவாறு இரண்டு கட்சிகளும் மாறி, மாறி ஆட்சிக்கு வந்தன. தற்போது எந்த குடும்ப செல்வாக்கிலும் இல்லாதவராக தன்னை வெளிப்படுத்தியுள்ள ஜெயலலிதா அளவுக்கு தமிழ்நாட்டில் வேறு எந்த தலைவருக்கும் செல்வாக்கில்லை என்பதும் உண்மையே.ஒப்பீட்டளவில் தி.மு.க தலைவர்களை விட, ஜெயலலிதா தமிழர் என்ற அடையாளத்துக்கு இணக்கமாக ‘இந்தியர்’ என்ற அடையாளத்தின் மீது பற்றுள்ளவர் என்பதும் உண்மையே.ஆட்சிக் கலைப்புக்குள்ளான சமயங்களில் பல தி.மு.க தலைவர்கள் மத்திய அரசை அச்சுறுத்தும் வகையில் 'தனித் தமிழ்நாடு' கோரிக்கைகளை எழுப்பி, அக்கோரிக்கையை கேலிக்குள்ளாக்கினார்கள் என்பதையும் மறுக்க முடியாது.ஆங்கில வழியில் படித்து கல்லூரி மாணவர்களாயிருப்பவர்களிடையே, இத்தகையப் போக்குகள் 'தமிழ், தமிழுணர்வு' போன்ற‌வற்றையும் கேலிக்குள்ளாகியதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.


 அவர் தமது வழக்குகளிருந்து மீண்டு, மீண்டும் தமிழ்நாட்டின் முதல்வராகவில்லையென்றால், தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் வேகமாக வலிமையாகும். குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டிலம் போன்று, அரசியலில் பெரும் குழப்பங்கள் ஏற்படும் அபாயமும் அதனால் ஏற்பட வாய்ப்புள்ளது. முள்ளி வாய்க்கால் போரின் போதும், அதற்குப் பின்னும் தமிழ்நாட்டு கல்லூரி மாணவர்களிடையே, அவை அவர்களின் உரையாடலில் கூட இடம் பெறவில்லை. அதே போல்,  ஜெயலலிதா சிறைக்கு சென்ற பின்னும், தமிழ்நாடெங்கும் போராட்டங்கள் நடந்த ஊடகச் செய்திகள் அவர்களின் உரையாடலில் கூட இடம் பெறவில்லை.அந்த அளவுக்கு தமது கல்வி, வேலைவாய்ப்பு, சினிமா. கிரிக்கெட், காதல், பலவகையான பொழுது போக்குகள் போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்தி, 'அந்நியமாக' வாழ்வதும், குறைந்த அரசியல் காற்றழுத்தத் தாழ்வு மண்டிலத்தின் அறிகுறிகளா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.


இத்தகைய சூழலில் வியப்பூட்டும் தகவல் என்னவென்றால், கடந்த பாராளுமன்ற தேர்தலில் தொகுதியில் நல்ல பெயரற்ற ஆளுங்கட்சி பிரதிநிதிகளை தங்கள் பகுதிக்கு வரக்கூடாது என்று பொதுமக்கள் தடுத்ததும், தங்கள் பகுதி நீண்டகால குறைகள் தீர்க்கப்படாததால், தேர்தலைப் புறக்கணிப்பதாக மக்கள் அறிவித்ததும் நடந்தன. அவர்கள் மற்ற கட்சிகளையும் நம்பவில்லை. இன்றும் தினமும் தமிழ்நாட்டில் ஆங்காங்கே தமது பிரச்சினைகளுக்கு பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் வீதியில் இறங்கி, கட்சிகள் சம்பந்தமில்லாமல் போராடி வருகிறார்கள். ஆங்காங்கே திருடர்களைப் பொதுமக்களே பிடித்து, உதைத்து, காவல்துறையிடம் ஒப்படைத்தும் வருகிறார்கள்.பொது வாழ்வில் 'குறுக்கு வழி'களில் வளர்ந்த‌ 'அதிவேக பணக்கார' திருடர்களை நோக்கி பொது மக்களின் கோபம் வருங்காலத்தில் செயல்பட்டு, அவர்களின் சொத்துக்கள் பறிமுதலுக்குள்ளாகி பொது காரியங்களுக்கு பயன்படும் விளைவுகள் ஏற்பட்டாலும் வியப்பில்லை.


இத்தகைய சூழலில், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும், இளைஞர்களும் எந்தவித அரசியல் பற்றுமின்றி, தமது கல்வி, வேலைவாய்ப்பு, புலனின்பங்கள் போன்றவற்றிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வாழ்கிறர்கள். அவர்கள் மத்தியில் 'தமிழ், தமிழ் உணர்வு' போன்றவை அதிவேகமாக வலுவிழந்து வருகிறதா? அவர்கள் மத்தியில் படித்த மற்றும் வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களில் பெரும்பாலோரிடம் ''இந்தியர்' என்ற அடையாளம் அதிசயிக்கும் அளவுக்கு செல்வாக்குடன் வளர்ந்து வருகிறதா?

கிராமங்கள் உள்ளிட்டு வெளிநாடுகளில் வேலை பார்ப்போர் தமது சொந்த ஊருக்கு வந்து ஏற்படுத்தும் பாதிப்புகளும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளும், கிரிக்கெட் உள்ளிட்ட பொழுது போக்குகளும், இதற்குக் காரணமா? பொறியியல் உள்ளிட்ட உயர்க்கல்வி படிக்கும் மாணவர்கள் மத்தியில் 'இந்தியர்' என்ற அடையாளம் அதற்கான சமூகத் தேவைகளை உணர்ந்து வளர்ந்து வருகிறதா?அவர்களில் பெரும்பாலோர் பாரம்பரியப் பண்பாடுகளை மதித்து வாழும் படித்த பெற்றோர்களின் பிள்ளைகளாகவும், அல்லது கல்வியில் நன்கு படிக்கும் பிள்ளைகளாகவும் இருக்கிறார்கள் என்பது எனது அனுபவமாகும்.சென்னை 'சர்ச்பார்க் கான்வெண்டில்' படித்த ஜெயலலிதா கல்வியில் சிறந்து விளங்கினார் என்பதும், 'இந்தியர்' என்ற அடையாளத்தில் அவருக்குள்ள பற்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிருந்தால், வியப்பில்லை. தமிழ்நாட்டில் பா.ஜ.க உள்ளிட்டு அனைத்து கட்சிகளும் நடத்திய பொதுக் கூட்டங்களில் அதிக அளவில் பங்கேற்காத படித்த இளைஞர்கள்,  திருச்சியில் நடந்த மோடி பேசிய கூட்டத்தில் பங்கேற்றது ஆழ்ந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டிய ஒன்றாகும்.

இந்தியாவில் 'இந்தியர்' என்ற அடையாள வளர்ச்சியில் வித்தியாசமானப் போக்கில் இருந்த தமிழ்நாடு, அந்த வித்தியாசத்தை இழந்து, இந்தியாவில் உள்ள மற்ற பகுதிகளைப் போல 'இந்தியர்'ஆக மாறி வருகிறதா? அந்த போக்கிற்கு 'மோடி அலை' அதிவேக வலுவூட்டி வருகிறதா? என்பது போன்ற கேள்விகளை விட, அடுத்து வரும் கேள்வியே அதிர்ச்சியும் கவலையும் தரும் கேள்வியாகும்.

தமிழ்நாட்டில் 'இந்தியர்' என்ற அடையாளம் வலுப்பெற்று வந்தாலும், 'தமிழ், தமிழ் உணர்வு' போன்றவை படித்த இளைஞர்களிடமும், சாதாரணத் தமிழர்களிடமும் வலுவிழந்து வருகிறதா? ஆதாயத் தொண்டர்கள் மற்றும் முதல் தலைமுறையாகப் படித்த, எண்ணிக்கையில் 'வேகமாக'குறைந்து வரும் ‍- தீக்குளித்தும் போராடியும் தமது வாழ்வைத் தொலைக்கும் திறமையுள்ள‌-  குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகள் பலத்தில் மட்டுமே ,'தமிழ், தமிழுணர்வு' அமைப்புகள் பயணிக்கின்றனவா?

இந்தியாவில் மற்ற மாநிலங்களில் 'இந்தியர்' என்ற அடையாளத்துடன் இணக்கமாக தமது மொழி, மொழியினர் என்ற அடையாளங்களும் வலுவாக இருக்கின்றன.குஜராத் மாநிலம் இதற்கு சிறந்த முன்னுதாரணமாகும்.அங்கு குஜராத்தி மொழியும், குஜராத்தியர் என்ற அடையாளமும் தமிழ்நாட்டில் தற்போதுள்ள தமிழ், தமிழர் என்ற அடையாளங்களை விட வலுவாக இருப்பதுடன், 'இந்தியர்' என்ற அடையாளத்துடன் இணக்கமாக இருப்பதும் கவனிக்கத் தக்கதாகும்.

எனவே தமிழ்நாட்டில் 'இந்தியர்' என்ற அடையாளம் வலுப்பெற்றாலும், 'தமிழ், தமிழ் உணர்வு' போன்றவை பலகீனமாவதன் மூலம், மீண்டும் இந்தியாவில் தமிழ்நாடு வித்தியாசமாகப் பயணிக்கிறதா?

இக்கேள்விகளுக்கான விடைகளைப் பெற, 1944வரை, 1944 முதல் 1949 வரை, 1949 முதல் 1967 வரை, 1967 முதல் 1977 வரை, 1977 முதல் 1989 வரை,  1989 முதல் 1991 வரை, 1991 முதல் இன்று வரை, என்ற காலக் கட்டங்களில் தமிழ்நாட்டில் இருந்த போக்குகளை ஆராய்வது பலனளிக்கும்.

'தமிழ், தமிழ் உணர்வு' போன்றவை பலகீனமாகி, ஆங்கில வழி மோகத்துடன்,  திரிந்த மேற்கத்தியப் பண்பாட்டு அடிமைகளாக தமிழ்நாட்டில் தமிழர்கள் இருக்கும் சூழலில், 'இந்தியர்' என்ற அடையாளத்திலும் தமிழ்நாடு வித்தியாசமான போக்கில் வளர்வதும் ஆபத்தாகும். எனவே மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கான விடைகளே அந்த ஆபத்திலிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்றும்.அனைத்து கட்சிகளிலும் 'சுயலாப' நோக்குள்ளவர்கள் அதிகரித்துவரும் சூழலில், சுயலாப நோக்கமின்றி, தமிழின் மீதும், தமிழர்கள் மீதும், தமிழ்நாட்டின் மீதும் உண்மையான அக்கறையுள்ளவர்கள், தத்தம் கொள்கை வேறுபாடுகளுக்கப்பால், வாய்ப்புள்ள வழிகளில் ஒன்று சேர்ந்து செயல்பட்டால் தான் , அந்த ஆபத்திலிருந்து தப்பிக்க முடியும்.

No comments:

Post a Comment