Sunday, October 12, 2014



      உணர்ச்சி பூர்வ 'இரைச்சலில்’ சிக்கிய தமிழ்நாடு



தமிழ்நாட்டில் உணர்ச்சிபூர்வ இரைச்சலில்,  அறிவுபூர்வ 'சிக்னல்கள்'(signals) சுவடில்லாமல் மறைந்து வரும் போக்குகள் பற்றிய எனது அனுபவங்களை இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன். 

'பெரியார்' ஈ.வெ.ரா தமது நிலைப்பாடுகளை பேச்சுக்கள், எழுத்துகள் மூலம் வெளிப்படுத்தியபோது, எதிர் நிலைப்பாடுகளில் இருந்த பலர் 'பெரியார்' ஈ.வெ.ரா மீது  கோபப்பட்டதுண்டு; அவை சில சமயம் வன்மூறையாகவும் வெளிப்பட்டதுண்டு. ஆனால் 'பெரியார்' ஈ.வெ.ரா தமது நிலைப்பாடுகளை எதிர்த்தவர்கள் மீது கோபப்பட்டதுமில்லை; வன்முறையைத் தூண்டியதுமில்லை; ஆதரவாளர்களிடம் தாமாகவே வெளிப்பட்ட வன்முறையை அவர்  ஆதரித்ததுமில்லை.

'பெரியார்' ஈ.வெ.ரா வெளியிட்ட இதழ்களும், புத்தகங்களும் அரசால் பலமுறை தடை செய்யப்பட்டிருக்கின்றன; ஆனால் 'பெரியார்' ஈ.வெ.ரா எந்த புத்தகத்தையும் திரைப்படத்தையும்  தடை செய்யக் கோரவில்லை. எதிர்க்க வேண்டிய கருத்துக்கள் கொண்ட புத்தகம் தொடர்பான‌  எதிர்ப்பை,  மக்கள் மன்றத்தில் விளக்குவதும், பொது மக்களுக்கு இடைஞ்சலின்றி சம்பந்தப்பட்ட புத்தகங்களை எரிப்பதுமே அவர் கையாண்ட பிரச்சார போராட்ட வழிமுறைகளாகும். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும், பொது மக்களைப் பாதிக்கும் போராட்டங்கள் போன்றவை எல்லாம், காந்தியின் 'சத்தியாகிரகம்' மூலம்,   இந்தியாவில் அறிமுகமான‌ 'காலித்தனம்' என்று அவர் வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.

தாகூரும் அதே போல் காந்தியை எச்சரித்திருக்கிறார். அவரின் எச்சரிக்கையை மீறி,  காந்தி செயல்பட்டதன் பலன்களை இன்றுவரை இந்தியா 'அனுபவித்துக்' கொண்டிருக்கிறது.(Tagore to Gandhi, March 1921, Gandhi, Collected Works, XX (Navajivan Trust, Ahmedabad, 1966), 539, 540-1.)

கருத்து சுதந்திரத்தையும், விமர்சனங்களையும் வரவேற்று பயணித்தவர் 'பெரியார்' ஈ.வெ.ரா. தனது அறிவு, அனுபவ, அடிப்படையிலான‌ அறிவுபூர்வ ‘சிக்னல்களின்’ வலிமையில், உணர்ச்சிபூர்வ இரைச்சலைப் பலகீனமாக்கி பயணித்தவர் அவர். காலதேச மாற்றங்களில் தமது கருத்துக்களும் 'பிற்போக்காக' ஒதுக்கப்படும்  வாய்ப்பிருப்பதையும் அவரே கணித்துள்ளார் என்பதும் முக்கியமாகும்.

ஆனால் 'பெரியாரின் அந்த உள்ளடக்கத்தை(content)  அகவயப்படுத்தாமல், அவரையும், அவர் காலத்திற்குப் பின் வந்த தலைவர்களையும் வழிபாட்டுப் பொருளாக்கி,  உணர்ச்சிபூர்வமாக 'பெரியார்' ஈ.வெ.ரா கொள்கையாளர்களில் பலர் பயணிக்கிறார்களோ என்ற ஐயம், திருச்சி பெரியார் மைய செயல்பாட்டில் நான் இருந்த போது ஏற்பட்டது. அந்த ஐயம் ஏற்பட்டது தொடர்பான தகவல் வருமாறு;

பெரியாருக்குப் பிந்திய தலைவர்களில் பெரியாரைப் போன்றே எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டவர் திரு.வே.ஆனைமுத்து என்பதை திருச்சி பெரியார் மையத்தில் இருந்தது வரை நான் அறிவேன். அதிலிருந்து அவர் பின்னர் மாறியிருக்க வாய்ப்பில்லை என்பதும் என் கருத்து. அந்த முறையில் அவரை மதித்தாலும், அவரின் கருத்துக்களை விமர்சனதிற்குள்ளாக்க வேண்டிய தருணம் வந்தபோது அதில் நான் பின்வாங்கவில்லை.

அவர் 1988-இல் தனது 'சிந்தனையாளன்' இதழில், நீதிக்கட்சி காலத்தில் பெரியாரின் நிலைப்பாடுகள் பற்றி தவறான தகவல்களை வெளிப்படுத்தி, அந்நிலைப்பாடுகளைக் குறை கூறியிருந்தார். ;குடிஅரசு' இதழ்களை அடிப்படையாகக் கொண்டு, அவரின் தகவல்களும், விமரிசனமும் தவறு என்று நிரூபித்து, 'சிந்தனையாளன்' முகவரிக்கு , 'திருச்சி பெரியார் மையம்' சார்பில் விளக்கம் அனுப்பப்பட்டது. பதில் ஏதும் இல்லாத நிலையில், அதை சில நூறு படிகள் உருட்டச்சு ( அப்போது  Xerox  கிடையாது) செய்து, பெரியார் தொண்டர்களின் பார்வைக்குக் கொண்டு சென்றோம்.ஆதரித்தோ, எதிர்த்தோ எந்த பதிலும் வரவில்லை. பின் அதையே 1988 மே மாதத்தில் சில ஆயிரம் படிகள் அச்சிட்டு, ரூ 1 ந்ன்கொடை என்று விநியோகிக்கப்பட்டது. அனைத்தும் தீர்ந்து போன நிலையில், 1989 டிசம்பரில் இரண்டாவது பதிப்பாக சில ஆயிரம் படிகள் அச்சிடப்பட்டு, விநியோகிக்கப்பட்டது. 'ஆனைமுத்துவுக்கே மறுப்பா' என்று வியப்புடன் அதை வாங்கிச் சென்றவர்கள் கூட, அப்புத்தகம் பற்றிய தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை.

அதன்பின் அவரின் 'மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் சார்பில், வெளியிடப்பட்ட 'கொள்கை விளக்கமும் விதி முறைகளும்' என்ற புத்தகம் எனது பார்வைக்கு வந்தது. பெரியாரியல் நோக்கில் அப்புத்தகத்தில் இருந்த குறைபாடுகளை உரிய சான்றுகளுடன் விளக்கி,அந்நூலின் மீது 'பெரியார் மையத்தின் விமர்சனம்' என்ற தலைப்பில் சிறு நூலை சில ஆயிரம் படிகள் அச்சிட்டு,நன்கொடை 50 காசுகள் என்று விநியோகிக்கப்பட்டது. 

நான் திருச்சி பெரியார் மையத்திற்கு பங்களிப்பு வழங்கிய காலம் வரை மேலேக் குறிப்பிட்ட இரண்டு புத்தகங்களுக்குமே எந்த மறுப்பும் வரவில்லை.அதன்பின் மறுப்பேதும் வந்துள்ளதா என்பது பற்றி எனக்கு ஏதும் தெரியாது. (நான் இசை ஆராய்ச்சிக்கு திரும்பியதும்,  திருச்சி பெரியார் மையம் செயல் இழந்ததன் மூலம் என்னை நம்பியே செயல்பட்டது வெட்ட வெளிச்சமானது எனக்கே அதிர்ச்சியானது. இயல்பில் திரிந்தவர்கள் , ‘திராவிட மனநோயாளிகளாக’  வளர இடமளித்ததும் வெளிப்பட்டது கூடுதல் அதிர்ச்சியாகும்.இது போன்ற ‘அதிர்ச்சிகள்’ காரணமாக மேற்கொண்ட ஆய்வுகளே, " 'காலனிய' மனநோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும் " என்ற பதிவாகக் கீழே வெளிவந்துள்ளது.)

ஆனைமுத்துவிடமும், அவரின் ஆதரவாளர்களிடமும் அறிவுபூர்வமான மறுப்பை எதிர்பார்த்து முன்வைக்கப்பட்ட ஒரு அரிய விமர்சனம் – சிக்னல்(signal) - பெரியார் கொள்கையாளர்களிடம் இருந்த உணர்ச்சிபூர்வ 'இரைச்சலில்'(noise)  சுவடின்றி மறைந்ததா? என்பது ஆய்விற்குரியது, இது போன்ற ஆய்வுகளில் யாருக்கேனும் அக்கறையிருந்தால்.

பெரியார் இயக்கம் போன்றே, தமிழ்நாட்டில் பொதுவுடமை இயக்கமும் உணர்ச்சிபூர்வ இரைச்சலில் பயணித்ததா? என்ற கேள்வியை எழுப்பும் எனது அனுபவம் அடுத்து வருகிறது.

இன்று இசை ஆராய்ச்சியில் ஆழ்ந்து மூழ்கியுள்ளது போல், அதற்கு முன் பெரியார், மார்க்ஸ்,ஏங்கல்ஸ், லெனின்,ஆகியோர் படைப்புகளில் மூழ்கி வாழ்ந்தேன். அப்போது பொருள் உற்பத்தி முறை(Mode of Production), உற்பத்தி விசைகள்(Productive Forces), உற்பத்தி உறவுகள்(Production relations), அவற்றிற்கிடையிலான தொடர்புகள், உபரி மதிப்பு (Surplus Value), உபரி உற்பத்தி அப‌கரிப்பு ( Appropriation of the surplus product), முரண்பாடுகள்(contradictions) பற்றிய படைப்புகளில் ஆழ்ந்து மூழ்கி, இந்திய சமூகத்தில், தமிழ்நாட்டில், அவற்றின் பின்னணியில் உள்ள வித்தியாசமான தனித்துவ கூறுகளை அடையாளம் கண்டேன். அவற்றை மார்க்சிய‍ லெனினிய முகாம்களில் இருந்தவர்களோடு விவாதிக்க விரும்பி கட்டுரைகளும் வெளியிட்டேன். இடையில் 'மக்கள் யுத்தம்' பிரிவின் வெளியீடான 'வர்க்கப் போராட்டத்தின் கேந்திரமான கண்ணி' என்ற அவர்களின் கொள்கை விளக்கப் புத்தகம் பேரா.கோச்சடை மூலம் எனக்குக் கிடைத்தது. மேலேக் குறிப்பிட்ட எனது ஆய்வுகளின் அடிப்படையில் அப்புத்தகம் தொடர்பான விமர்சனத்தை எழுதி அவரிடம் கொடுத்தேன். இன்று வரை எந்த பதிலும் இல்லை. ஆக 'ஆனைமுத்துவின் மறுப்பு'க்கு ஏற்பட்ட விளைவுக்கும், இதற்கும் பெரிய வேறுபாடில்லை. 

உண்மையில் முனைவர் பட்டம் உள்ளிட்டு, ஆழ்ந்த ஆராய்ச்சியில் எவரேனும் ஈடுபடுபவர்கள் இருந்தால், அவர்கள் பார்வையில் படட்டுமே என்று, அது தொடர்பானப் பதிவையும் வெளியிட்டுள்ளேன்.( http://tamilsdirection.blogspot.in/2013/12/normal-0-false-false-false-en-us-x-none.html )
பொதுவுடமை முகாம்களில் இது போன்ற உணர்ச்சிபூர்வ இரைச்சல் தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது என்பதையும் எனது கீழ்வரும் அனுபவம் உணர்த்தியது.

1970களின் பிறபகுதியில் தஞ்சை பகுத்தறிவாளர் கழகத்தில் நான் பங்களிப்பு வழங்கிக் கொண்டிருந்த காலக் கட்டம் அது. அப்போது விசாகப்பட்டிணத்தில், 'இந்திய நாத்தீக மையம்' (Atheist Society of India) சார்பில் 'அகில இந்திய சாதி ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றுமாறு திராவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணிக்கு அழைப்பு வந்தது. அவர் என்னை அம்மாநாட்டுக்கு அனுப்பி வைத்தார். என்னுடன் மேலும் என்னுடன்  குப்பு.வீரமணி, தஞ்சை இரெத்தினகிரியின் தம்பியும், தற்போது தஞ்சை 'கிங் பொறியியல் கல்லூரி' நிர்வாக அதிகாரியுமான அண்ணாமலையும்  உடன் வந்தனர். விசாகப்பட்டிணத்தில் இருந்த பல்கலைக்கழக அரங்கில் அந்த நிகழ்ச்சி நடந்தது. அரங்கில் பல்வேறு நக்சலைட் குழுக்களின் ஆதரவாளர்களாயிருந்த மாணவர்களும், கல்லூரி ஆசிரியர்களும் அரங்கு முழுவதும் நிரம்பியிருந்தனர். மார்க்சியம்‍ லெனினியம் தொடர்பான மேலேக் குறிப்பிட்ட எனது ஆய்வுகளை விளக்கி, அந்த பின்னணியில் பெரியாரின் நிலைப்பாடுகளை விளக்கினேன். எனது உரை முடிந்து, அடுத்து இரண்டு நாட்கள் நிகழ்ச்சிகளின் ஊடேயும், உணவு இடைவேளைகளிலும், இரவு படுக்கப் போகும் வரையும், காலையில் விழித்து எழுந்து, காலை உணவை முடித்தது முதல், கடைசியாக விசாகப்பட்டிணத்தில் இரயிலில் ஏறும் வரை, என்னை எப்பொழுதும் சூழ்ந்து கொண்டு,  அந்த நக்சலைட் மாணவர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்து கேள்விகள் கேட்டு, பதில் பெறுவதிலும், என்னிடம் கையெழுத்து பெறுவதிலும் (Autograph), என்னை முழ்கடித்தனர்.  ஆக தமிழ்நாட்டு பொதுவுடமை முகாம்கள் உணர்ச்சி பூர்வ இரைச்சலில் கண்டுகொள்ளாமல் விட்ட 'சிக்னல்கள்',  ஆந்திராவில் அரிய பொக்கிசமாகக் கருதப்பட்டதை உணர்ந்தேன். கூடுதலாக 'முக்கியத்துவம்' என்பது , ஏமாந்தால், நம்மை போதையில் ஆழ்த்திவிடும் என்பதையும் உணர்ந்தேன். எனவே தப்பித்தவறியும் அதில் சிக்கிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன் இன்று வரை வாழ்ந்து வருகிறேன்.'முக்கியத்துவ'ப் போதை என்பது 'திராவிட மனநோயாளியாக' வளர்வதற்கான நுழைவு வாயில் என்பதை நான் அறிவேன். தமிழ்நாட்டில் அந்த போதையாளர்களுக்கு எனது சமூக வட்டத்தில் இடம் அளிக்காமல் வாழ்வதும் அந்த எச்சரிக்கை உணர்வின் அடிப்படையில் தான்.

தங்களுக்குப் பிடிக்காத புத்தகங்களையும் திரைப்படங்களையும் அரசு தடை செய்ய வேண்டும் என்று கோருதல், பெரியாரால் 'காலித்தனம்' என்று கண்டிக்கப்பட்ட போராட்ட வடிவங்களை செயல்படுத்துதல், உணர்ச்சிபூர்வ இரைச்சலில், அறிவுபூர்வ சிகனல்களை சுவ‌டின்றி மறையச் செய்தல் ஆகிய போக்குகளில் பெரியார் இயக்கங்கள் இருக்கின்றனவா? இல்லையா? என்பதை ஆய்வுக்கு உட்படுத்துதல் வேண்டும். இருந்தால், அதை விட மோசமாக பெரியாரை அவமதிக்க முடியுமா? என்பதையும் பரிசீலிக்க வேண்டும். இது போன்ற‌ கேள்விகளை எல்லாம் புறக்கணித்து, தனிநபருக்கு மட்டுமே விசுவாசமான 'ஆதாயத் தொண்டர்கள்' பலத்தில் பயணிக்கும் இயக்கங்கள் எல்லாம் காலப் போக்கில் 'சருகாகி' உதிர்வதைத் தவிர்க்க முடியுமா?


குறிப்பு:
இசை ஆராய்ச்சியில் ஈடுபட்டபின், அந்த துறையிலும் உணர்ச்சிபூர்வ இரைச்சலில் 'சிக்னல்களுக்கு' இடமில்லாமல் போனது பற்றிய‌ எனது அனுபவங்களை,  அடுத்து பதிவு செய்ய எண்ணியுள்ளேன். 'உணர்ச்சி பூர்வ 'இரைச்சலில்’ சிக்கிய 'தமிழ் இசை' ஆய்வுகள்' ; http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_13.html 

No comments:

Post a Comment