Thursday, July 23, 2020

பா.ஜ.கவின் அனுகூல சத்ருவாக‌


தி.மு.கவிற்கு உதவும் மாரிதாஸ்



திமுகவினர் செய்யும் முறைகேடுகளை, தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆதாரத்துடன் வெளியிட்டு  விமர்சிப்பவர் மாரிதாஸ்.  அதே போல்  மத்திய பாஜக அரசு கொண்டுவரும் ஒவ்வொரு மக்கள் நல திட்டங்களையும் ஆதரித்து தனது தனது கருத்துக்களை சமூக வலைதளங்களில் அவர் பதிவு செய்து வருகிறார். பாஜகவின் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மாரிதாஸ், திமுகவினர் மீது நான் வைத்து குற்றசாட்டிற்கு இதுவரை பதில் இல்லை என்றார் மாறாக  தினமும் காலை முதல் இரவுவரை தொலைபேசியில் அழைத்து திமுகவினர் கீழ்த்தரமான வார்த்தைகளால் வசைபாடி வருகின்றனர் என்றார்.இன்னும் ஒரு சிலரோ, திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் முதல் குறி உனக்குதான் என்றும் என்னை எச்சரிக்கின்றனர்  என்று அவர் கூறினார்.- ‘திமுக ஒரு ரவுடி கட்சிதான்...!! ஸ்டாலினை கழுவி ஊத்தி... உப்புகண்டம் போட்ட மாரிதாஸ்...!!... 

"தி.மு.க ஒரு ரவுடி கட்சிதான்...!!" என்பதை ஒத்துக்கொண்டால், 'அ.இ.அ.தி.மு.க அதை விட பெரிய ரவுடி கட்சி' என்பதை மாரிதாஸ் ஒத்துக்கொண்டாக வேண்டும்.

கருணாநிதியின் 'அறிவியல் ஊழலில்' தப்பித்திருந்த ஏரிகள், ஆறுகள், மலைகள், காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் எல்லாம் 1991க்குப் பின் தான், ஊழல் பேராசைக்கு இலக்காகியது, என்பது மாரிதாசுக்குத் தெரியாதா? கங்கை அமரன், அமிர்தாஞ்சன், பாலு ஜிவல்லரி, ஏ.ஆர்.ரகுமான், தொடங்கி சத்யம் தியேட்டர்ஸ்  வரை எண்ணற்றோரின் தனியார் சொத்துக்களை கொலை செய்தும், அச்சுறுத்தியும் அபகரிக்கும் போக்கும், தமிழ்நாட்டில் 1991 முதல் தான் அரங்கேறியது என்பதும் மாரிதாசுக்குத் தெரியாதா?

ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க, சசிகலா தலைமையிலான அ.இ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அந்த ஆட்சியானது 'தாய்க்கழகம்'  தி.கவுக்கு நேசமான ஆட்சியாக இருக்கும். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின், சசிகலாவை ஆதரித்து தி.க தலைவர் கி.வீரமணி கீழ்வரும் கருத்தினை வெளிப்படுத்தியது மாரிதாஸுக்கு தெரியாதா?

"சசிகலா இதுவரை கேடயமாய்ப் பயன்பட்டவர். இனி வாளும்-கேடயமாய் நின்று அதிமுகவுக்குப் பயன்படுவார் என்பது நம் இனமானக் கண்ணோட்டமாகும். போகப்போக இது மற்றவர்களுக்குப் புரியும். வாய்ப்பே தராமல் எவரையும் மதிப்பிடலாமா? நமக்கு தனிப்பட்ட எந்த அபிமானமும் இல்லை. இந்தக் காலகட்டத்தில் தாய்க்கழகம் ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றியுள்ளது'' என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்."

சசிகலா தலைமையிலான அ.இ.அ.தி.மு.கவா? ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கவா? என்ற கேள்வி எழுந்தால், நான் உள்ளிட்டு நானறிந்த மோடி ஆதரவாளர்கள் எல்லாம், தமிழ்நாட்டிற்கு ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க பரவாயில்லை என்றே முடிவெடுப்போம்.

தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் 'இந்திரா காங்கிரஸ் - தி.மு.க' கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்ததை மனதில் கொண்டு, கருணாநிதியின் அழுத்தத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சியை அன்றைய பிரதமர் இந்திராகாந்தி கலைத்தார். அடுத்த சில மாதங்களில் நடந்த சட்டசபை பொதுத்தேர்தலில் இந்திரா காங்கிரஸ் - தி.மு.க கூட்டணிக்கு அவமானகரமான தோல்வியைக் கொடுத்து, எம்.ஜி.ஆரை மீண்டும் முதல்வராக்கியது தமிழ்நாடு. எம்.ஜி.ஆர் மரணிக்கும் வரை ஆட்சியைப் பிடிக்க முடியாத அளவுக்கு கருணாநிதி குடும்ப அரசியல் மீது வெறுப்பு ஆழமாக தமிழ்நாட்டில் இருந்தது. 1991 முதல் அரங்கேறிய ஊழல் சுனாமி ஆட்சியில், ஜெயலலிதாவை முன்னிறுத்தி செயல்பட்ட‌ சசிகலா குடும்ப அரசியல் மீது இன்னும் ஆழமான வெறுப்பு அரங்கேறியதன் காரணமாகவே, 1996இல் கருணாநிதி முதல்வராக முடிந்தது. 

இவையெல்லாம் தெரியாமல், இன்று "தி.மு.க ஒரு ரவுடி கட்சிதான்...!!"  என்ற வாதத்தினை மாரிதாஸ் முன்வைத்ததும், அதனை பா.ஜ.கவினர் ஆதரித்ததும் ஆகிய போக்குகள் தொடருமானால், வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி பெறுவது நிச்சயமாகி விடும்.

ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலில் முதலில் ஒத்தி வைப்பு, சோதனை, கைது, பின் குற்றவாளி ஜாமினில் வெளிவந்து, அடுத்து நடந்த அதே இடைத்தேர்தலில் பா.ஜ.க-வை நோட்டா கட்சியாக்கி, சட்டசபை எதிர்க்கட்சியான தி.மு.கவை டெபாசீட் இழக்க வைத்து, ஆளுங்கட்சியையும் தோற்கடித்து, ஜெயலலிதா வாங்கிய வாக்குகளை விட சுயேட்சையாக போட்டியிட்டவர் அதிக வாக்குகள் பெற்றதானது, மத்திய அரசின் ஊழல் ஒழிப்பானது வடிவேல் பாணி காமெடியா?  என்ற கேள்வியை எழுப்பியது.
(https://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_25.html)

2014 முதல் மோடி பிரதமராக ஆட்சி செய்து வருகிறாரே. தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க பிரமுகர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளும், நடந்த ஊழல் ஒழிப்பு சோதனைகளும் என்ன ஆயிற்று? என்பதைப் பற்றி மூச்சு விடாமல், தி.மு.க‌ ஊழல்களைப் பற்றி புள்ளி விபரங்களுடன் மாரிதாஸ் உள்ளிட்ட‌  மோடி ஆதரவாளர்கள் சமூக வலை தளங்களில் பரப்புரை செய்வது கோமாளித்தனம் ஆகாதா
(‘தேசிய அரசியலில் தமிழ்நாட்டைக் காவு கொடுத்த பிரதமர் இந்திரா பாணியில் பிரதமர் மோடியும் பயணிக்கிறாரா? தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து துண்டிக்கச் செய்யும் வாய்ப்பு கூடுகிறதா?’; https://tamilsdirection.blogspot.com/2020/06/14.html)

தி.மு.கவின் குடும்ப அரசியலை தீவிரமாக எதிர்த்து வரும் மாரிதாஸ், சசிகலா குடும்ப அரசியலை ஆதரிக்கிறாரா? என்ற கேள்வியை, கீழ்வரும் காணொளி எழுப்பியுள்ளது.

"சசிகலா" அவர்கள் விடுதலை சாத்தியமா? Sasikala will be released on August 14? | Maridhas Answers ;

சிறையில் சசிகலாவின் நன்னடத்தையின் யோக்கியதையை கீழ்வரும் சான்று வெளிப்படுத்தியுள்ளது.

The 295-page report by retired IAS officer Vinay Kumar confirmed then DIG (Prisons) D Roopa's claims in July 2017 that Sasikala was given preferential treatment and a separate kitchen functioned for her at the Parappana Agrahara Central Jailhere, RTI activist Narasimha Murthy said. (https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/sasikala-given-preferential-treatment-in-prison-inquiry-report/articleshow/67614876.cms?from=mdr)

ஆக கர்நாடகத்தில் உள்ள பா.ஜ.க அரசும், மத்தியில் உள்ள மோடி அரசும் பின்பற்றும் 'நன்னடைத்தையின் யோக்கியதை' மாரிதாஸ் தெரிவித்தபடி இருக்குமானால், அது நாட்டிற்கு கேடு விளைவிப்பதாகி விடும்.

மேற்குறிப்பிட்ட சான்று பற்றி மூச்சு விடாத மாரிதாசின் காணொளியானது,மாரிதாஸ், சசிகலா குடும்ப அரசியலை ஆதரிக்கிறாரா? என்ற கேள்வியை எழுப்பாதா?

ஜெயலலிதாவின் மர்மமான மருத்துவ சிகிச்சை மற்றும் மரணம் காரணமாக‌, ஜெயலலிதாவின் விசுவாசிகள் மற்றும் 'சட்டத்தின் ஆட்சி' (Rule of Law) விரும்பிகள் மத்தியில் வளர்ந்து வரும் சமூகக் கோபமானதுஅறிவியல் ஊழலை அறிமுகப்படுத்திய கருணாநிதி மீது இருந்த கோபத்தை பின்னுக்கு தள்ளி விட்டது.

மத்தியில் ஆளும் பா.ஜ.க அமைச்சர்கள் மற்றும் தமிழக ஆளுநர் ஆகியோர் சசிகலா குடும்பத்தின் கட்டளைக்கு உட்பட்டு அப்பொல்லோவில் (ஒளிபரப்பான) கீழ்தளத்தில் நின்று பேசிய பேச்சுக்களும், ஜெயலலிதாவால் தமக்கு எதிராக சூழ்ச்சி செய்ததாக‌ (ஊடக வெளிச்சத்துடன்) குற்றம் சாட்டப்பட்டவர்கள் (ஜெயலலிதாவின் ரத்த உறவுகள் அவமதிக்கப்பட்டு) மட்டுமே சூழ, ராஜாஜி மண்டபத்தில் இருந்த ஜெயலலிதா உடலுக்கு (நேரடி ஒளிபரப்பில்) அஞ்சலி செலுத்தி, சசிகலாவையும் நடராஜனையும் வணங்கிய‌ மோடி தாமாகவே வலிய வந்து மேற்குறிப்பிட்ட கோபத்தின் குவியமாகி, ஸ்டாலினைக் காப்பாற்றி விட்டார். அதன்பின் 2ஜி குற்றவாளிகள் விடுதலையான பின் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க நோட்டாக்கட்சியானது.

தமிழக மக்களின் நாடித்துடிப்புடன் தொடர்புள்ள‌ அந்த சமூக செயல்நுட்பம் புரியாமல், இன்று வரை தமிழக பா.ஜ.க பயணித்து வருவது தமிழ்நாட்டின் தூரதிர்ஷ்டமே ஆகும்.

மாரிதாஸ் போன்றவர்களின் சசிகலா ஆதரவுப் போக்கானதுமேற்குறிப்பிட்ட கோபத்தின் குவிய வலிமையை நிச்சயமாகக் கூட்டும் அபாயமும் இருக்கிறது.


மோடி அரசின் ஊழல் ஒழிப்பில் உள்ள பலகீனங்களை கீழ்வரும் Tweets-இல் மோடி ஆதரவாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

‘Despite scam after scam involving #MafiaQueen of @INCIndia, she still continues to run amok.
Is it because she has dossiers on all important politicians cutting across party lines?
She is known for her blackmail skills!’  - Madhu Purnima Kishwar on twitter

Comment on the above tweet

‘Despite scam after scam involving Dravida Mafia families, they continue to run amok, probably with similar skills.’ 

குடும்ப ஊழல் கட்சிகளை ஒழிக்க வாய்ப்பு கிடைக்கும் வரையில், தமிழக வாக்காளர்கள் முடிந்த அளவுக்கு தேர்தல்களில் அறுவடை செய்வார்கள். எனவே தமிழ்நாட்டில் ஊழல் பெருச்சாளிகளை பாரபட்சமின்றி ஒழிக்கும் வரையில், தமிழக பா.ஜ.க நோட்டாக்கட்சியாகத் தான் பயணித்தாக வேண்டும். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், பொதுவாழ்வில் கொள்ளையடித்த பணத்தைப் பாதுகாக்க, மத்திய அரசுடன் நேசமான கட்சியாகவே இருக்கும். தேர்தலில் தமிழக பா.ஜ.க  எந்த கட்சியுடனும் கூட்டணி சேர்ந்து, அந்தக்கட்சியின் வெற்றி வாய்ப்பினைக் குறைக்கும் வாய்ப்பும் இருக்கிறது.

சசிகலா குடும்ப அரசியலை ஆதரித்துக் கொண்டு, கருணாநிதியின் குடும்ப அரசியலை மட்டுமே எதிர்த்து மாரிதாஸ் மேற்கொண்டு வரும் முயற்சிகள் எல்லாம் அதே போக்கில் தொடருமானால், வரும் சட்ட மன்ற தேர்தலில் பா.ஜ.கவிற்கு நம்பமுடியாத அதிர்ச்சித் தோல்விக்கு முக்கிய காரணமான 'அனுகூல சத்ருவாக' மாரிதாஸ் பங்களித்தது வெட்ட வெளிச்சமாகி விடும்.

ஈ.வெ.ராவிற்கு 'யுனெஸ்கோ விருது' என்பதில் உள்ள தவறையும், வைக்கம் போராட்டத்தில் ஈ.வெ.ராவின் பங்கை வழிபாட்டுப்போக்கில் மிகைப்படுத்தும் தவறையும், தி.க தொடர்பான விமர்சனத்தில் மாரிதாஸ் சுட்டிக்காட்டுவது சரியே. அந்தப் போக்கில், வைக்கம் போராட்டத்தில் ஈ.வெ.ராவின் பங்கினை சிறுமைப்படுத்துவது என்பதானது, பா.ஜ.கவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் பெரிய தவறாகும்;

என்பதை பழ.அதியமான் எழுதிய 'வைக்கம் போராட்டம்' நூலைப் படித்தவர்கள் அறிவார்கள்.

கடந்த கால தலைவர்களை எல்லாம் தனிப்பட்ட முறையில் எடை போடுவதற்கும், அவர்களின் கொள்கைகளை 'காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு' உட்படுத்தி எடைபோடுவதற்கும், உள்ள வேறுபாட்டினை மறந்து;

இரண்டும் கெட்டானாக எடை போட்டு, அவர்களை பாராட்டுவதும், தூற்றுவதும் அறிவுபூர்வ அணுகுமுறையாகாது. 
(https://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_17.html)

மாரிதாஸ் பாணியில், எச்.ராஜா ஈ.வெ.ராவை விமர்சித்து வருவது தொடர்பாக, கீழ்வரும் எச்சரிக்கையை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

சீனப் போருக்குப் பின், தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்த பிரதமர் நேரு, பொதுக்கூட்டத்தில் ஈ.வெ.ராவின் பிரிவினை கோரிக்கையைக் குறிப்பிட்டு, கோபமாக 'இந்தியாவில் இருக்கப் பிடிக்கவில்லையென்றால், இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்' என்று பேசினார்.  அதற்குப் பின் நடந்த 1967 தேர்தலில் தமிழ்நாட்டின் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட‌ காங்கிரஸ் கட்சியானது, இன்றுவரை திராவிடக்கட்சிகளின் வாலாகவே பயணித்து வருகிறது.

எனவே எச்,ராஜா போன்ற பா.ஜ.க தலைவர்கள் எல்லாம் ஈ.வெ.ராவை, நேரு பாணியில், உணர்ச்சிபூர்வமாக கண்டிக்கும் வரையில், தமிழ்நாட்டில் பா.ஜ.கவானது நோட்டாவுடன் தான் போட்டி போட வேண்டியிருக்கும். 
(https://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_10.html

மாரிதாஸ் ஒரு கல்லூரி ஆசிரியர் என்று அறிகிறேன். படித்த  காலத்திலும், பணியாற்றுகிற காலத்திலும் தம்மைச் சுற்றி நடந்த, நடக்கும் அநீதிகளை எல்லாம் தம்மால் இயன்ற அளவுக்கு எதிர்த்து வந்துள்ளாரா? அல்லது 'வாழ்வியல் புத்திசாலித்தனத்துடன்' ஒதுங்கி பாதுகாப்புடன் பயணித்து வந்துள்ளாரா? என்று எனக்கு தெரியாது.

நான் பள்ளி மற்றும் கல்லூரி மாணவராக 1965 முதல் 1968 வரை நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டவன். 1971 இல் கல்லூரி ஆசிரியரானது முதல் பணி ஓய்வு பெறும் வரை நான் பணியாற்றிய கல்லூரிகளில் நீதிக்காக நடந்த போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறேன். முதல் முறையாக கல்லூரி ஆசிரியர்கள் சிறை சென்ற போராட்டத்தில், ஆசிரியர் கழக செயலாளர் ஒதுங்க, அவர் கோரிக்கையை ஏற்று நான் செயலாளராகி போராட்டத்தை முன்னெடுத்து நூற்றுக்கணக்கான ஆசிரியர்களுடன் சிறை சென்றேன். அதன்பின் நடந்த சிறை செல்லும் போராட்டங்கள் அனைத்திலும் கலந்து கொண்டவன். நானாயிருந்தாலும், எனக்கு மிகவும் வேண்டியவர்களாயிருந்தாலும் எந்த பாராட்சமின்றி செயல்பட்டு வருவதே எனது வலிமையாகும். தமக்கு ஒரு நீதி, தமக்கு பிடிக்காதவருக்கு வேறு நீதி, என்ற போக்கில் நான் செயல்பட்டதில்லை.

ஆனால், மாரிதாஸ் 'தமக்கு ஒரு நீதி, தமக்கு பிடிக்காதவருக்கு வேறு நீதி' என்ற போக்கில் செயல்படுகிறாரா? என்ற ஐயம் எழுந்துள்ளது.

தினமும் காலை முதல் இரவுவரை தொலைபேசியில் அழைத்து திமுகவினர் கீழ்த்தரமான வார்த்தைகளால் வசைபாடி வருகின்றனர் என்றார்.இன்னும் ஒரு சிலரோ, திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் முதல் குறி உனக்குதான் என்றும் என்னை எச்சரிக்கின்றனர்  என்று மேலே குறிப்பிட்ட சான்றில் மாரிதாஸ் தெரிவித்துள்ளார்.

மத்தியில் மோடி ஆட்சி. தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க ஆட்சி. தொலைபேசியில் அச்சுறுத்தியவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்கவில்லை என்றால், அதை மாரிதாஸ் கண்டிக்க வேண்டாமா?

மாரிதாஸ் தூண்டி, 'தினமும் காலை முதல் இரவுவரை தொலைபேசியில் அழைத்து கீழ்த்தரமான வார்த்தைகளால் வசைபாடி வருகின்றனர். உயிருக்கு அச்சுறுத்தல் விட்டுள்ளனர்' என்று பேரா.சுப.வீ காவல் துறையிட‌ம் உரிய சான்றுகளுடன் புகார் கொடுத்துள்ளார்.
(https://www.youtube.com/watch?v=FDsRSG1O1C4)

அவ்வாறு சுப.வீக்கு அச்சுறுத்தல் விடுத்தவர்களை எல்லாம் கடுமையாகக் கண்டித்து ஒரு காணொளி வெளியிட்டு, சுப.வீயை நேரில் சந்தித்து அவருக்கு தமது பேச்சால் விளைந்த துயரங்களுக்கு மன்னிப்பு கேட்டு அவரின் புகாருக்கு நீதி வேண்டி துணையாக மாரிதாஸ் நின்றிருக்க வேண்டும்;

என்னைப்போல பாரபட்சமின்றி செயல்படுபவராக இருந்தால். 

ஆனால் 'சுப.வீக்கு அச்சுறுத்தல் விடுத்தவர்களைக் கண்டிக்காமல், 'அச்சுறுத்தல் விடுத்தவர்களை நான் தான் தூண்டினேன் என்று நிரூபித்தால்?' என்ற சாதாரண அரசியல்வாதியைப் போல மாரிதாஸ் பேசிய காணொளி என்னைக் கவலைக்குள்ளாகியது. இன்றைய மாணவர்களுக்கு மோசமான முன்னுதாரணமாக மாரிதாஸ் வெளிப்படுவார், அதே போக்கில் பயணித்தால். 

இளம் வயது. திருந்தி பயணிக்க அவகாசம் இருக்கிறது. எனவே தாமதமின்றி,

சுப.வீக்கு அச்சுறுத்தல் விடுத்தவர்களை எல்லாம் கடுமையாகக் கண்டித்து ஒரு காணொளி வெளியிட்டு, சுப.வீயை நேரில் சந்தித்து அவருக்கு தமது பேச்சால் விளைந்த துயரங்களுக்கு மன்னிப்பு கேட்டு அவரின் புகாருக்கு நீதி வேண்டி துணையாக மாரிதாஸ் நிற்க‌ வேண்டும்.

எந்த கட்சியின் சார்பாகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் தொலைபேசியில் வசைபாடி துன்புறுத்தும் சிற்றின நபர்களை டிஜிட்டல் யுகத்தில் தண்டிக்காத அரசுகள் எல்லாம் கையாலாகாத அரசுகளே ஆகும். சுப.வீயும் மாரிதாஸும் ஒன்று சேர்ந்து முயற்சித்தால், இருவரையும் துன்புறுத்திய நபர்கள் தண்டிக்கப்படுவதும் சாத்தியமாகும்.

தமிழ்நாட்டில் பொது அரங்கில் பிரபலமான சுப.வீ, மாரிதாஸ் போன்ற கல்லூரி ஆசிரியர் பணியில் இருந்தவர்களும், இருப்பவர்களும் சமூகப் பொறுப்புடன் கூடிய நாகரீக அரசியலை முன்னெடுக்க வேண்டும். அது தான் அவர்களுக்கும் நல்லது; தமிழ்நாட்டிற்கும் நல்லது. 
 


குறிப்பு:


சசிகலாவின் பினாமி ஆட்சியாக கூவத்தூரில் ஈ.பி.எஸ் முதல்வரானார். பின் ஓ.பி.எஸ் 'புரட்சி' நடந்தது. பின் அணிகள் இணைய ஓ.பி.எஸ் துணை முதல்வரானார். சசிகலா, மத்தியில் மோடி அரசு, தி.மு.க என்ற மும்முனையின் பின்னணியில் உள்ள அழுத்தங்களை இன்றுவரை வெற்றிகரமாக சமாளித்து வருகிறது ஈ.பி.எஸ் ஆட்சி.

எந்திரவியலில் இயக்கத்தன்மையில் (dynamic) உள்ள மூன்று திசைகளில் செயல்படும் விசைகளின் (Forces) தொகுவிளைவாக (Resultant) 'தற்காலிக சமநிலை' (Temporary Equilibrium) உருவாக வாய்ப்புண்டு. தமிழ்நாட்டு சமூக எந்திரவியலில், அத்தகைய சமநிலையில் ஈ.பி.எஸ் அரசானது நீடித்து வருகிறது. சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த பின் தான், அந்த சமநிலையின் யோக்கியதையும் தெளிவாகும். அதன்பின் தான், ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் தலைமையிலான கட்சியானது, மேற்குறிப்பிட்ட விவாதத்தில் இடம் பெறும் யோக்கியதைக்கு உள்ளாகும்.



படிக்கவும்:

February 8, 2017 'நிமிர்ந்தது ஓபிஎஸ் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் சுயமரியாதையும் கூட' ;  https://tamilsdirection.blogspot.com/2017/02/digital-age-2017.html



July 12, 2017 ‘'it’s a Mad Mad Mad Tamilnadu' என்ற, உலக அளவில் பெரும் வெற்றி பெறக்கூடிய திரைப்படத்திற்கான‌ சம்பவங்கள் பல அரங்கேறி வருகின்றன:


அமைச்சர் ஓ.எஸ்.மணியன், 'கருணாநிதி பட்டுக் கூட்டுறவு சங்கம்' எனக் கூறியதற்கு, தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பி.பி.சாமி, 'எப்படி கருணாநிதி பெயரை உச்சரிக்கலாம்' என, எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது, ஓ.எஸ்.மணியன், 'அவர் எங்கள் ஊர்க்காரர்' என, ஊர் பாசம் காட்ட, தி.மு.க.,வினர் திகைத்தனர்.


அமைச்சர்கள் பதிலுரையின் போது, கருணாநிதியை விமர்சிப்பதையும், தி.மு.க., அரசு மீது, கடுமையான குற்றங்கள் சுமத்துவதையும் தவிர்த்தனர். சட்டசபையில் ஒரு நாள், துரைமுருகன் எழுந்து, அமைச்சர் உதயகுமாரை, 'லாபி'க்கு வரும்படி கூற, அமைச்சர் ஓடிச் சென்றதை காண முடிந்தது.’ (https://tamilsdirection.blogspot.com/2017/07/blog-post_12.html)

March 17, 2020 ராஜாஜியும், ஈ.வெ.ராவும், அண்ணாவும் தோற்ற இடத்தில், எம்.ஜி.ஆர் வெற்றி பெற்ற சமூக செயல்நுட்பம்?’

No comments:

Post a Comment