Wednesday, July 8, 2020


புதிய தீண்டாமையை அரங்கேற்றிய 'குருட்டுப் பகுத்தறிவாளர்கள்'

    சனாதனம், வர்ணாஸ்ரமம், முரண்பாடுகள்



'பார்ப்பன எதிர்ப்பை முன்வைத்து, காலனி அரசு நன்மை செய்தது,

பார்ப்பனர்கள் சனாதனத்தை நிறுவ முயன்றார்கள்.'

பெரும்பாலான வாதங்கள் இந்த அடிப்படையிலேயே வைக்கப்படுகிறது.

காலனியம் பொருளாதாரச் சுரண்டல் மட்டுமே செய்கிறது,

பார்ப்பனியம் சமூகச் சுரண்டல் செய்கிறது என்பதான வாதம் வைக்கப்படுகிறது.

இதில் உள்ள முரண்பாடுகளைப் புரிந்துகொள்வது எப்படி?’

ஒரு 'பெரியார்' ஆதரவாளரிடமிருந்து வந்த மேற்குறிப்பிட்ட ஐயம் தொடர்பான விளக்கத்தினை இங்கு பார்ப்போம்.

காலனிய ஆட்சிக்கு முன், உலகில் உள்ள பிற நாடுகள், குறிப்பாக மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரம், தொழில் நுட்பம், கல்வி, சாலைகள், தர்ம ஸ்தாபனங்கள் எவ்வாறு இருந்தன? இந்தியாவில் எவ்வாறு இருந்தன? என்பது தொடர்பாக உலக அளவில் வெளிவந்துள்ள ஆய்வுகளைப் பற்றி அறியாதவர்களே, இந்தியாவில் 'காலனி அரசு நன்மை செய்தது' என்ற பிரச்சாரத்தை முன்னெடுப்பார்கள். 

'சாதி' மற்றும் 'இனம்' என்பது போன்ற தமிழ்ச்சொற்கள் எல்லாம், காலனிய சூழ்ச்சியில் எவ்வாறு பொருள் திரிபுக்கு (Semantic distortion) உள்ளாகின? தமிழர்களில் தற்குறிகளை வளர்த்ததில் காலனிய சூழ்ச்சி எவ்வாறு முதன்மைப் பங்கு வகித்தது?

என்பது பற்றி அறியாதவர்களே, 'சனாதனம்' மற்றும் 'வர்ணாஸ்ரமம்' போன்றவற்றை தவறாக புரிந்து கொண்டு,

'பார்ப்பனியம் சமூகச் சுரண்டல் செய்கிறது' என்ற வாதத்தினை முன் வைப்பார்கள்.

தமிழ்நாட்டில் காலனியத்திற்கு முன், கல்வியிலும் தொழில்நுட்பத்திலும் பிராமணர்கள் உள்ளிட்ட எவரும் ஆதிக்கம் செலுத்தியதான சான்றுகள் மற்றும் தீண்டாமை தொடர்பான சான்றுகள், எனது தேடலில் வெளிப்படவில்லை. இருப்பதாக எவரும் தெரிவித்தால், நன்றியுடன் அவ்வாறு முன்வைத்த சான்றுகளை நான் ஆராய இயலும்.

அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் பகுத்தறிவு, பொதுவுடமை பிரச்சாரங்கள் முளை விடுவதற்கு முன்பு, தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்ட சமூக சமத்துவத்திற்காக தமிழ்நாட்டில் பக்தர்களாக வாழ்ந்த பிராமணர்களிலும், பிராமணரல்லாதோரிலும் எவ்வளவு பேர் தமது சொந்த பணத்தை, அறிவு மற்றும் உடல் உழைப்பை செலவழித்தார்கள்? சிறை சென்றார்கள்? தமது உறவுகளின் வெறுப்பை சம்பாதித்தார்கள்? என்பது தொடர்பான தகவல்களை  எல்லாம் சேகரித்து,

இன்று சமூகநீதி பேசும் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் அந்த அளவுக்கு தமது சொந்த பணத்தை, அறிவு மற்றும் உடல் உழைப்பை செலவழித்தார்களா? சிறை சென்றார்களா? தமது உறவுகளின் வெறுப்பை சம்பாதித்தார்களா? என்பது தொடர்பான தகவல்களுடன் ஒப்பிட்டால்,

மேற்குறிப்பிட்ட  பக்தர்கள் பின்பற்றிய சனாதனம் பற்றிய தெளிவு கிடைக்கும்.

சனாதனம் என்ற பெயரிலும், வர்ணாஸ்ரமம் என்ற பெயரிலும் தீண்டாமையை நியாயப்படுத்துவது எவ்வளவு தவறான புரிதல்? என்று அவர்கள் அந்த காலக்கட்டங்களில் முன் வைத்த வாதங்களும் புரியும்.

அந்த சனாதனவாதிகளைப் போல சமூக நேர்மையுடன் வாழாமல், அகத்தில் சாதி வெறியுடன், புறத்தில் 'சாதி ஒழிப்பு' வீரர்களாக வேடமிட்டு, சாதி மோதல்களைத் தூண்டி விட்டு, எதிரெதிர் முகாம்களில் அதிவேகப் பணக்காரர்களை வளர்த்து வரும் 'புதிய சனாதனம்' பற்றியும் விளங்கும்.

'சனாதனம்' மற்றும் 'வர்ணாஸ்ரமம்' என்ற பெயரில் இன்றைய சமூக ஏற்ற தாழ்வையும், தீண்டாமையையும் நியாயப்படுத்திய சனாதனவாதிகளிடமிருந்து,

அந்த வாதத்தை தவறு என்று நிரூபித்து, செயல் பூர்வமாக தீண்டாமையை எதிர்த்து போராடிய சனாசனாதனவாதிகளைப் பிரித்து,

முரண்பாடுகள் பற்றிய அணுகுமுறையில் பார்க்கத் தெரியாத பகுத்தறிவு தான், 'குருட்டுப்பகுத்தறிவின்' இலக்கணமாகும்.

சமூகத்தில் உள்ள முரண்பாடுகளைப் பார்க்கத் தெரியாத 'குருட்டுப் பகுத்தறிவாளர்கள்' எல்லாம் 'சமூகக் கறுப்பு வெள்ளை' நோயில் சிக்கியவர்களே ஆவார்கள்.

தமது இயக்கத்தில் உள்ளவர்களைக் கருத்து கறுப்பு வெள்ளைநோய்க்கு அடிமைப் படுத்தி வைப்பதானது, தலைவர்களின் சுயநல வாழ்வுக்கு மிகவும் உதவும். குறிப்பாகத் தம் மீது அறிவுபூர்வமான விமர்சனங்களை முன் வைப்பவர்களைத் துரோகிகள் (கறுப்பு) என்று பட்டம் கட்டி, தமது தொண்டர்களைக் தூண்டி, அவர்கள் மீது வன்முறையை ஏவ அத்தலைவர்களால் முடியும். அப்பாவித் தொண்டர்களும் தம்மைப் போராளியாகக் கற்பனை செய்து கொண்டு உண்மையில் அடியாளாகச் செயல்படுவார்கள். தமது தொண்டர்களை அந்தத் துரோகிகளுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாதுஎன்ற புதிய தீண்டாமைக்குப் பழக்கப்படுத்தும் போக்கும் வளர்ந்து வருகிறது. தமிழக அரசியலில், பொதுவாழ்வில் ரவுடிகளும் ரவுடியிசமும் பெற்றுள்ள செல்வாக்கிற்கும் கருத்து கறுப்பு வெள்ளைநோயின் செல்வாக்கிற்கும் தொடர்பு இருக்கிறது. 

முரண்பாடுகள்(Contradictions) பற்றிய புரிதலின்றி, 'இந்து, முஸ்லீம், தலித், பெரியாரிஸ்ட், மார்க்சிஸ்ட்' போன்ற இன்னும் பல,‌  புற 'லேபிள்களை' வைத்து, அந்த 'லேபிள்'களுக்குள் உள்ள ஆக்கபூர்வ/அழிவுபூர்வ முரண்பாடுகள் (இயக்கத் தன்மையிலான சமூக தள விளைவு - dynamic social polarization) பற்றிய புரிதலின்றி, எந்த ஒரு மனிதரையும், கட்சியையும் விரும்பி/வெறுத்து வாழ்பவர்கள் எல்லாம் மனித எந்திரர்கள்ஆவர். நான் சந்தித்த சாமான்யர்களிடம், அந்த 'மனித எந்திரர்' போக்கு வெளிப்பட்டதில்லை. இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் பாதுகாப்பின்மை மனநோயில்(Insecurity) சிக்கியவர்களும், 'சொகுசு பாதுகாப்பு மண்டிலத்தில்'(Comfort Zones) வாழ்பவர்களும், அவ்வாறு மனித எந்திரர்களாக வாழ்வதையே விரும்புவார்கள்.

படித்த இடத்தில், பணியாற்றிய இடத்தில், வாழ்ந்த இடத்தில் எந்த அநீதிக்கும் எதிராக போராடாமல், சாதாரண தமிழர்களின் குறைபாடுகள் பற்றிய 'மறுபக்கம்' தொடர்பான நூல் எழுதிய எழுத்தாளர் 'புத்துசாலித்தனமான சமரசத்துடன்' வாழ்ந்தார்.

திராவிட அரசியல் கொள்ளையர்களுக்கு 'வாலாட்டி' பயணித்து, ஜென் தத்துவம், ரமண மகரிஷி தத்துவம் உள்ளிட்ட 'மேல்மட்ட அறிவுஜீவி' கவசங்களுடன், 'உபதேசிகளாகவும்' 'பாதுகாப்பு மண்டிலத்தில்' வாழ்ந்து வருபவர்களை நான் அறிவேன்; அத்தகையோரிடம் 'சாமான்யனாக’, அவமானங்களை, சமூகவியல் பரிசோதனை நோக்கில், விரும்பி அனுபவித்திருக்கிறேன். 

ஒரு மனிதர் எந்த அளவுக்கு நேர்மையானவர், புலமையுள்ளவர், சமூக அக்கறையுள்ளவர்? அல்லது சுயலாப நோக்கில், பொது ஒழுக்க நெறிகளை சீர் குலைத்து வாழ்பவர்? என்பதைப் பற்றிய கவலையின்றி:

கொள்கை 'புற லேபிள்கள்' அடிப்படையில், நம்மை விரும்பியவர்கள், நமது அறிவு அடிப்படையில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக 'வெறுக்கவும் செய்வார்கள்' என்பதை, 'சில பெரியார் ஆதரவாளர்கள்' அனுபவபூர்வமாக எனக்கு புரிய வைத்துள்ளார்கள்; 'கருத்துரிமைக்கு வழியற்ற குருட்டுப் பகுத்தறிவும்' ஈ.வெ.ரா அவர்களின் தொண்டால் அரங்கேறியுள்ளதா? என்ற ஆய்வுக்கும் வழி வகுத்து.(‘Rationalism cannot be a basis for subscribing to a political party based on any dogma, or to express an a priori affiliation or support for a non-dogma based political party.’ ; 

பிராமணர்களை எதிரியாக சித்தரித்து, இயக்கம் நடத்திய 'பெரியார்' ஈ.வெ.ரா அவர்கள், இந்திய விடுதலைக்கு முன், 'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கைக்கு, ராஜாஜி மற்றும் அவர் சார்பு பிராமணர்களின் ஆதரவை கோரி, பெற்று, பகிரங்கமாக அறிவித்தது ஏன்? என்ற செயல்பாட்டை, அந்த மனித எந்திரர்களால் விளங்கிக் கொள்ள முடியாது.

சமூகத்தில் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகளுக்குள் உள்ள இயக்கத்தன்மையில் (Dynamic) செயல்படும் முரண்பாடுகளை (Contradictions), கண்காணித்து, அழிவுபூர்வ கூறுகளை அடையாளம் கண்டு பலகீனப்படுத்தும் அறிவுபூர்வ அணுகுமுறையை விடுத்து, உணர்ச்சிபூர்வ போக்கில், தமக்கு பிடிக்காத கட்சிகளையும், அமைப்புகளையும் ஒட்டு மொத்தமாக, வெறுத்து ஒதுக்கும் (உணர்ச்சிபூர்வ அடிமைகள் அல்லது 'பிழைப்புக்கு வழி'யாக கொண்டவர்கள் கடைபிடிக்கும்) போக்கானது, ஈ.வெ.ராவிடம் வெளிப்பட்டத்தில்லை. காங்கிரசையும், நேருவையும் கடுமையாக எதிர்த்துக்கொண்டே, காமராஜரை அவர் ஆதரித்ததும், அந்த அறிவுபூர்வ அணுகுமுறையில் தான், என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 
https://tamilsdirection.blogspot.com/2015/12/normal-0-false-false-false-en-us-x-none_11.html)

1989 தமிழக சட்டசபைத் தேர்தலில், கருப்பையா மூப்பனாரை முதல்வர் வேட்பாளராக ராஜிவ் காந்தி அறிவித்த போது;

'போபர்ஸ்' ஊழலில் ராஜிவ் காந்தியை எதிர்த்த சோ, 'முதல்வராக கருப்பையா மூப்பனர் வருவதே தமிழ்நாட்டிற்கு நல்லது' என்று துணிச்சலுடன் ஆதரித்தார்; குருமூர்த்தி உள்ளிட்ட இந்துத்வா ஆதரவாளர்களின் எதிர்ப்பையும் மீறி. 

இன்று 'விடுதலை'யும். அந்த இதழால் 'மவுண்ட் ரோடு மகா விஷ்ணு' என்று நீண்ட காலமாக கண்டிக்கப்பட்ட 'இந்து' இதழும், 'சசிகலா'-விடமும், தி.மு.க தலைவர் ஸ்டாலினிடமும் 'சங்கமம்' ஆனதை, 'பெரியார்' ஆதரவாளர்கள் ஆதரித்தார்களா? எதிர்த்தார்களா? அது 'ஆரிய திராவிட சங்கமமா'? அந்த சங்கமமானது, 'ஆரியர்களுக்கு' நலன் தருமா? 'திராவிடர்களுக்கு' நலன் தருமா? அல்லது சம்பந்தப்பட்டவர்களின் நலன்களின் சங்கமமா? என்று ஆராய்ந்தார்களா? என்பது எனக்கு தெரியாது. எவராவது தெரிவித்தால், நன்றியுடன், அதனை நான் ஆய்வுக்கு உட்படுத்துவேன்.
(https://tamilsdirection.blogspot.com/2018/12/blog-post_29.html)

சர்வதேச சமூக, அரசியல்,  பொருளாதார போக்குகள் பற்றிய புரிதலுடன், நாட்டின் போக்குகளை ஓரளவாவது சரியாக கணிக்க முடியுமானால், அந்த போக்குகளில் உள்மறைந்துள்ள (Latent) முரண்பாடுகள் (Contradictions)  பற்றிய தெளிவு கிடைக்கும். அந்த தெளிவின் மூலமே, நமது வரைஎல்லைகளுக்குட்பட்டு (Limitations), நமக்குள்ள ஆற்றலின் மூலம், அந்த முரண்பாடுகள் மீதும், நாடு பயணிக்கும் திசையின் மீதும், ஆக்கபூர்வமாக செல்வாக்கு செலுத்த முடியும்;

அல்லது மனசாட்சியை அடகு வைத்து, குறுக்கு வழிகளில் 'செல்வம், செல்வாக்குடன்' சமூக கிருமியாகி, இயல்பில் பலகீனமானவர்களை எல்லாம்,  தமது 'வால்களாக்கியும்', வாழவும் முடியும்; 'வித்தியாசமான பொதுவாழ்வு விபச்சாரத்தை' சமூக நோயாக வளர்த்துக் கொண்டு.

தமிழ்நாட்டில் அந்த 'வித்தியாசமான பொதுவாழ்வு விபச்சாரம்' எவ்வாறு வளர்ந்தது? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். 

சுயலாப நோக்கின்றி, தாம் ஆதரிக்கும்/எதிர்க்கும் கட்சிகளுக்குள் உள்ள முரண்பாடுகளை (Contradictions) பகிரங்கமாக கையாண்டதில், இந்திய பொது வாழ்வில், ஈடு இணையற்ற முன்னுதாரணம் 'பெரியார்' ஈ.வெ.ரா ஆவார்; தமது 'அறிவு வரை எல்லைகள்' (intellectual limitations)  பற்றிய புரிதலின்றி பயணித்திருந்தாலும். காங்கிரசில் பிரதமர் நேருவை கடுமையாக எதிர்த்துக் கொண்டே, முதல்வர் காமராஜரை தீவிரமாக ஆதரித்தார். 

ஒரு சமூகத்தில் உள்ள மனிதர்களின் மன‌ங்களில் உள்ள தேவைகளும், அத்தேவைகளின் அடிப்படையில் எழும் ஈடுபாடுகளும், அவற்றின் அடிப்படையில் வெளிப்படும் செயல்பாடுகளும்  சமூக செயல்நுட்பத்தில் அமைதியான சமநிலையில் (peaceful equilibrium)  இருந்தால், அந்த சமூகத்தில் போராட்டங்களுக்கும், வன்முறைகளுக்கும் இடம் இருக்காது.

அதற்கு மாறாக, போராட்டங்களும், வன்முறைகளும் வெடித்தால்,  அந்த சமூக செயல்நுட்பத்தில் அமைதியற்ற சமநிலை (turbulent equilibrium)  இருப்பது வெட்ட வெளிச்சமாகிவிடும். அந்த போராட்டங்களின், வன்முறைகளின் பண்புகளை ஆராய்வதன் மூலம், அந்த சமூக செயல்நுட்பத்தில் உள்ள அமைதியற்ற சமநிலையின் பண்புகளை ஆராய முடியும். அதிலிருந்து அந்த சமூகத்தின் தேவைகள், ஈடுபாடுகள் போன்றவற்றிற்கும், சமூக செயல்நுட்பத்திற்கும் இடையிலான‌ முரண்பாடுகள் பற்றி ஆராய இயலும்.

மனித செயல்பாடுகளின் தூண்டுகோலாக மனிதர்களின் மனங்களில் உள்ள ஈடுபாடுகள் இருக்கின்றன. சம்பந்தப்பட்ட மனிதர்களின் ஈடுபாடுகளில் உள்ள அறிவுபூர்வமான கூறுகளும், உணர்வுபூர்வமான கூறுகளும் அவர்கள் பங்கேற்கும் போராட்டங்களிலும், வன்முறைகளிலும் வெளிப்படும். உணர்வுபூர்வ கூறுகள் போராட்டங்களில் பங்கேற்பதற்கான சமூக ஆற்றலின் வலிமையையும்அறிவுபூர்வ கூறுகள் போராட்டங்களின் வழிமுறைகளையும்  பண்புகளையும் தீர்மானிக்கின்றன.

எனவே போராட்டங்களிள் ஈடுபட்டுள்ளோரின் பங்கேற்பு வலிமையும், வன்முறைகள் உள்ளிட்ட போராட்ட வழிமுறைகளும், அவற்றின் பண்புகளும், அவர்களின் அறிவுபூர்வ கூறுகளையும், உணர்வுபூர்வ கூறுகளையும் கண்டுபிடிக்கத் துணை செய்பவையாகும். இத்தகைய ஆய்விற்கு சம்பந்தப்பட்ட சமூகத்தின் கடந்த காலமும் முக்கியமாகும். அவ்வாறு கடந்து காலத்திற்கும் நிகழ்கால போராட்டங்களுக்கும் இடையிலான தொடர்பு விளங்கினால் தான், அடுத்து நடக்க இருப்பவைகளைச் சரியாகக் கணிக்க இயலும். அதற்கு இசை தொடர்பாக சிலப்பதிகாரம் வெளிப்படுத்தியுள்ள கீழ்வரும் இசைத் தொழில் நுட்பம் வழி காட்டும்.

'வந்தது வளர்த்து வருவது ஒற்றி' (அரங்கேற்றுக் காதை 65) என்பதே அந்த தொழில்நுட்பமாகும்.

ஒரு சமூகத்தின் கடந்த கால வளர்ச்சிப் போக்குகளில ஆக்கபூர்வமான கூறுகளும் அழிவுபூர்வமான கூறுகளும் கலந்திருக்கும். சமூக ஆற்றல் செயல்பாட்டில் இரண்டு வகைக் கூறுகளில் ஒன்றிற்கு ஆற்றல் பங்களிப்பு அதிகரிப்பினால், அவை வளர்ச்சிப் போக்குகளில் இருக்கும். சமூக ஆற்றல் செயல்பாட்டில் இரண்டு வகைக் கூறுகளில் ஒன்றிற்கு ஆற்றல் பங்களிப்பு அதிகரித்து வருமானால், பிறிதொன்றுக்கு  ஆற்றல் பங்களிப்பு வறண்டு வரும். அதனால் பிறிதொன்று கூறுகள்  பலகீனமாகி மடியும் போக்குகளில் இருக்கும். அந்த பலகீனமாகி மடியும் போக்குகளில் பிணைத்துக் கொண்டு 'உற்சாகமாக' ஈடுபடும் மனிதர்களின் போராட்டங்களும் வன்முறைகளும் விட்டில்பூச்சிகளாகவே அமையும். அவ்வாறு அழிவுபூர்வ கூறுகள் மடிந்த பின்பு தான், ஆக்கபூர்வமான கூறுகளின் வளர்ச்சியானது வெளிப்படையாகும்.  இந்த செயல்நுட்ப அடிப்படையிலேயே, தனிமனிதரும்அமைப்புகளும், சமூகமும் பயணிக்கின்றன.

ஒரு தனி மனிதரும் சரி, சமூகத்தை வழி நடத்தும் வலிமையுள்ளவர்களும் சரி, அவர்கள் வாழ்வின் பயணத்தில், மேலேக் குறிப்பிட்ட செயல்நுட்ப அடிப்படையில்,  ஒவ்வொரு கட்டத்திலும் ஒன்றுக்கும் மேற்பட்ட திசைகளில் வழிகளானது, அவரவரின் அறிவு அனுபவத்தைப் பொறுத்து, அவர்களின் பார்வைகளில் படும். அவர் எந்த திசையில் உள்ள வழியைத் தேர்ந்தெடுத்துப் பயணிக்கிறார்களோ அந்த பயணத்தின் முடிவில் அதற்கான நன்மை, தீமைகளை அனுபவிப்பதிலிருந்து தப்ப முடியாது. ஒரு சமூகம் நன்மைகளை அனுபவிக்கும் போது, சமூகத்தை வழி நடத்திய தலைவர்கள் பாராட்டு பெறுகிறார்கள். அந்த சமூகம் மிக மோசமான விளைவுகளை அனுபவிக்கும்போது,அந்த தலைவர்களை உணர்வுபூர்வமானவர்கள் கண்டிப்பார்கள்.அந்த தலைவர்களின் பெயரில் பிழைப்பு நடத்துபவர்களும், அவர்களின் உணர்வு போதைத் தொண்டர்களும் அதை 'துரோகம்' என்று கூக்குரல் எழுப்புவதும் உண்டு.அந்த மோசமான விளைவுகளிலிருந்து சமூகத்தைக் காப்பாற்ற நினைப்பவர்கள், அந்த தலைவர்கள் எந்தெந்த கட்டத்தில் என்னென்ன தவறுகள், தமது பயணத்தில், புரிந்தார்கள் என்பதை திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும் ஆராய்வார்கள்.

விருப்பு வெறுப்பற்று ஆய்வது என்பது 'திறந்த மனது'என்றும், தனக்கு தவறு என்றும், பொய்யானது என்றும் தெரிந்தும் அதை வாதத்தில் பயன்படுத்துவது 'அறிவு நேர்மையற்றது' என்றும் நான் விளங்கியுள்ளேன்.

சுயநலமில்லாமல் உண்மையில் சமூக முன்னேற்றத்திற்காக உழைத்துக் கொண்டிருப்பவர்களில் பெரும்பாலோர் கருத்து கறுப்பு வெள்ளைநோய்க்கு உள்ளாகியிருப்பதால் அவர்களின் உழைப்பும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மேற்சொன்ன 'புதிய தீண்டாமை' அரங்கேற்றத்திற்கேத் துணை புரிந்து வருகிறது. குறிப்பாகத் திறந்த மனதோடும் (Open minded)  அறிவு நாணயத்தோடும் தொடர்ந்து திறனாய்வு செய்யும் திறன் நம்மையறியாமலேயே நம்மை விட்டு விலக நேரிடுகிறது.

திறந்த மனதோடும் அறிவு நாணயத்தோடும் தாம் ஏற்றுக் கொண்டுள்ள கொள்கைகளை நிலைப்பாடுகளை ஈ.வெ.ராவைப் போல் தொடர்ந்து திறனாய்வு செய்யத் தவறினால் கருத்து கறுப்பு வெள்ளைநோய்க்கு நாம் அடிமையாவதைத் தவிர்க்க முடியாது.

ஈ.வெ.ரா அவர்கள் பிராமணர்கள் சங்கத்திலேயே உரையாற்றியிருக்கிறார். அது போல் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் பெரியாரியல் நிபுணரும் பெரியார் இயக்கக் கூட்டத்தில் இந்துத்வா நிபுணரும் உரையாற்றும் வகையில் கருத்து வேறுபாட்டை மதித்துக் கூட்டம் நடத்தும் ஆரோக்கியமான சூழல் வர வேண்டும். அவ்வாறு பங்களிக்க இயலாத எதிரெதிர் முகாம்களில் உள்ள நோஞ்சான்கள் தாமாகவே ஒதுங்கும் அல்லது அவர்களை ஒதுக்கும் சமூக சூழலை உருவாக்க, நாம் முயல வேண்டும். கருத்து கறுப்பு வெள்ளைநோய் ஒழிய அது வழி வகுக்கும். 

முரண்பாடுகள் பற்றிய அறியாமையில் அரங்கேறியுள்ள 'புதிய தீண்டாமை' என்ற சமூக நோயில் இருந்து தமிழ்நாடும் விடுதலை பெறும்.  

No comments:

Post a Comment