Tuesday, July 14, 2020


மேல் தட்டு மக்களுக்குப் பாதகமாகவும், கீழ்த்தட்டு மக்களுக்கு சாதகமாகவும்,


கட்சிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியமாகி வரும் கொரோனா புரட்சி?




நாம் ஓவ்வொரு வேளையும் சாப்பிடும் சாப்பாட்டில் கை வைக்கும் போது,

கீழ் வரும் குற்ற உணர்வுகள் இன்றி சாப்பிடத் தொடங்கும் போது, நமக்குள்ள மனநிலையானது எவ்வாறு கொரொனா தொற்றில் இருந்து நம்மை காப்பாற்றும்? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். 

1. ஊழல், தரகு, அரசுநிதித் திருட்டு

2. நமது மனசாட்சிக்கு இழிவான நபர் என்று தெரிந்தும், அந்த நபரைத் தலைவராக ஏற்று காலில் விழுந்தது

3. அவரின் பலகீன தேவைகளுக்கு உதவும் தரகராக செயல்பட்டது

4. ஊழல்தரகுஅரசுநிதித் திருட்டு, கொலை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபட்டு சட்டத்தின் பிடியில் சிக்காமல் தப்பித்தது

போன்ற வழிகளில் 'அதிவேகப் பணக்காரர் ஆனவர்கள் எல்லாம் மற்றும் அவர்களின் அடிவருடிகள் எல்லாம், தன்மானத்துடன் தாம் சாப்பிடும் சாப்பாட்டில் கை வைக்க முடியுமா?

அவ்வாறு தன்மானத்துடன் வாழ முடியாதவர்கள் எல்லாம்,  கொரோனா நோய்த்தொற்றில் இருந்து தப்பிக்கும் வகையில், தமது நோய் எதிர்ப்புத்திறனை ஏன் அதிகரிக்க இயலாது? என்பதையும்,

மேலுள்ள தன்மானக்கேடான வழிகளுக்கு கொரொனா மூலம் விளைந்துள்ள சிக்கல்கள் பற்றியும்,

மேற்குறிப்பிட்ட பதிவில் விளக்கியுள்ளேன்.

கொரோனாவின் விளைவாக, தமிழ்நாட்டில் கீழ்வரும் போக்குகள் வெளிப்பட்டுள்ளன

மேல் தட்டு மக்களுக்குள்ள பாதிப்புகள்:

1. அதிக சம்பளமுள்ள வாங்குபவர்கள் அதிக அளவில் வேலை இழப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். கொரோனா தொடங்கும் முன் பெற்ற பணிநியமன ஆணைகள் ரத்தாகி வருகின்றன.

2. ஒப்பிட்டளவில் அடிமட்டத்தினரை விட, மேல் மட்டத்தில் அதிக சம்பளத்தை நம்பி பலவகைக் கடன்களில் சிக்கியிருப்பதால், பணி இழப்பால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாகும்.

3. மேல் தட்டு வாழ்க்கைக்கான சுகங்களுக்கு கொரோனா மூலமாக விளைந்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, ஒப்பீட்டளவில் உளவியல் பாதிப்புகள் அதிகமாக வாய்ப்புகள் உள்ளன.


கட்டுப்பாடுகள் தளர்வுகளுக்கு உள்ளான மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் விவசாய வேலைகள் நடைபெறுகின்றன. விளைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்ற விளை பொருட்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள பயனாளிகளிடம்  விற்பதற்கு கூடுதல் வசதிகள் (பயன்படுத்தாத பேருந்து நிலையம், நகருக்கு வெளியே நடமாட்டம் உள்ள சாலைகளின் ஓரங்கள், கூடுதல் தள்ளு வண்டிகள்) உருவாகி வருகின்றன. மாவட்ட சுதேசி வியாபாரப் போக்குகள் வளர்ந்து வருகின்றன.

பெரிய மார்க்கெட்டுகள் செயல்படுவது தடைபட்டதால், மொத்த வியாபாரிகளின் நலன்களுக்காக, விவசாயிகள் விளைவித்த பொருட்களின் விலை நிர்ணய செயல்நுட்பம் முடங்கியுள்ளது. விவசாயிகளும் சிறு வியாபாரிகளும் அந்தந்த மாவட்டத்திற்குள் நேரடியாக பயனாளர்களை (customers) சந்தித்து விற்கும் வாய்ப்புகள் கூடியுள்ளன. தெருக்களில் காய்கறிகளும் மளிகை சாமான்களும் விற்பது கூடி வருகின்றன. இதனால் புதிய வேலை வாய்ப்புகள் பெருகி வருகின்றன. கல்லூரி மாணவர்களும் கிராமத்தில் விளைபவைகளை  வாங்கி, அருகாமை நகரத்தில் விற்பதும் அதிகரித்து வருகிறது.

அதாவது அதிகம் படித்து அதிக சம்பளம் பெறும் வாய்ப்புகள் குறைந்து வரும் போக்கில், கிராம மக்களும், நகரத்தில் சிறு மற்றும் தெருவோர வியாபாரிகளும் புதிய வேலை வாய்ப்புகளும், கூடுதல் வருமானமும் பெறத் தொடங்கியுள்ளனர்.

அத்தகையோரெல்லாம் முகக்கவசங்களுடன் வெளியில் நடமாடுவதும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே திறந்த காற்றோட்டமுள்ள வாழ்க்கை வாழ்ந்து வரும் அவர்களுக்கு,  திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ஏர்கண்டிசன் மூலம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் வாய்ப்புகளும் குறைந்து விட்டது. கேளிக்கைக்களுக்கான செலவினங்களும் குறைந்து விட்டன.

தமது செல்வத்தையும் செல்வாக்கையும் வெளிச்சம் போட, அந்த போட்டியில் பல குடும்பங்கள் கடனில் மூழ்கக் காரணமான, ஆடம்பரத் திருமணங்களுக்கும் இடம் இல்லாமல் போய்விட்டது. மீறி நடக்கும் ஒரு சில கட்சிக்காரர்களின் குடும்ப ஆடம்பர நிகழ்ச்சிகள் உள்ளூர் மக்களின் வெறுப்பையும் கோபத்தையும் ஈட்டியுள்ளன; ஊடகங்களில் வெளிவந்து அந்தந்த கட்சிகளுக்கு தலைக்குனிவையும் ஏற்படுத்தியுள்ளன.

தமிழ்நாட்டில் ரேசன் கடைகளிலில் இலவச அரிசியுடன் குறைந்த விலையில் விற்கப்பட்ட மளிகைப் பொருட்களும் கடந்த சில மாதங்களாக இலவசமாகி விட்டது. கூடுதலாக பணமும் கிடைத்துள்ளது. ஒரு குடும்பத்தில் பெண் குழந்தைகள் மட்டும் இருந்தால் கிடைக்கும் உதவி, திருமணத்தின் போது, கலப்புத் திருமணத்தின் போது, கருவுற்ற பின்பு, குழந்தை பிறக்கும் போது, பிறந்த பின்பு, விளையாட்டுப் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை இலவசக்கல்வி, சீருடைகள், காலணி, பாடப்புத்தகங்கள், சைக்கிள், மடிக்கணினி போன்ற இன்னும் பல உதவிகள்;

ஒவ்வொரு கிராமத்திலும் பல மகளிர் சுய உதவிக் குழுக்கள்;

கணவனை இழந்தவர்கள் மற்றும் முதியோர்க்கு உதவி, 100 நாள் வேலைத்திட்டம் என்பது போன்ற இன்னும் பல உதவிகளைக் கணக்கில் கொண்டால்;

இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே தமிழ்நாடு அளவுக்கு மக்கள் நல உதவிகள் செயல்படும் நாடு வேறு எங்கும் கிடையாது.

ஆனால் மேற்குறிப்பிட்ட உதவிகள் பெற பெரும்பாலும் அந்தந்த கிராமத்தில் உள்ள தி.மு.க அல்லது அ.இ.அ.தி.மு.க முக்கிய புள்ளிகளின் தயவும், உதவிகள் வழங்கும் ஊழல் அரசு ஊழியர்களின் தயவும் அவசியமாகும். அதன் மூலமாக, மேற்குறிப்பிட்ட கட்சிகளின் உள்ளூர் மேய்ப்பர்களின் வலைப்பின்னலும், ஊழல் வலைப்பின்னலும், எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் வலுவாகவே உள்ளது. ஆனால் கொரோனா மூலமாக, அந்த மேய்ப்பர்களின் வலைப்பின்னல்கள் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளன. ஆங்காங்கே  இளைஞர்கள் மூலமாக டிஜிட்டல் வழிகளில் ஊழல் வலைப்பின்னல்களும் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளன.

மேற்குறிப்பிட்ட திட்டங்களில் உள்ள மாதாந்திர பணப்பலன்கள் அவரவர் வங்கிக்கணக்கில் மாதாமாதம் வரவு வைக்கப்படுகின்றன. கூடுதலாக கொரோனா காரணமான பண உதவிகளும் வரவு வைக்கப்படுகின்றன. பிரமிக்கும் வகையில் தனி நபர்கள் அடிமட்ட மக்களுக்கு உதவி வருகிறார்கள். கூடுதலாக கட்சிகளும் போட்டி போட்டு உதவ வேண்டிய நெருக்கடிகளில் சிக்கியுள்ளார்கள்.‌

திறமைமிகு மாவட்ட ஆட்சியர்கள் தத்தம் மாவட்டங்களில் மக்கள் பங்கேற்புடன் தொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும், உதவி நடவடிக்கைகளையும், மக்களின் பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். சில கிராமங்களில் மக்கள் தாங்களாகவே, கொரோனா தடுப்பிற்கான ஊர்க்கட்டுபாடுகளை தாமாகவே உருவாக்கி அமுல்படுத்தி வருகின்றனர்.


‘Making Democracy Work: Civic Traditions in Modern Italy (ISBN 9780691037387) is a 1993 book written by Robert D. Putnam’ என்ற நூலில் முன்வைக்கப்பட்டுள்ள கீழ்வரும் ஆய்வு முடிவினை பரிசோதிக்கும் களங்களாக, அந்தந்த மாவட்டங்கள் வெளிப்பட்டு வருகின்றன.

'குடிமக்களுக்கிடையில் பரிமாற்ற நம்பிக்கையும், கிடைத்தள ஆட்சி முறையும் (horizontal system of governing) ஜனநாயகத்தின் வெற்றிக்கு வழி வகுக்கும்.'

'for democracy to be successful there needs to be a level of mutual trust among the citizens and a more horizontal system of governing’ (https://en.wikipedia.org/wiki/Making_Democracy_Work)

கொரோனா தொற்று அதிகரித்து வரும் போக்கும், மேய்ப்பர்களின் அடிவயிற்றைக் கலக்கி வருகின்றன. 

வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று சம்பாதிப்பதற்கான முதலீடாகக் கருதி, ஏற்கனவே ஊழல் வழிகளில் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியையும், பெரும் வியாபாரிகளிடமிருந்தும் தொழில் அதிபர்களிடமிருந்து கட்டாய நன்கொடை மூலமாக பெற்ற நிதியையும் கொரோனா உதவிகளுக்காக செலவழிப்பது என்பது இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும்? கட்டாய நன்கொடைகளைப் பெறவும், உதவிகள் வழங்குவதற்காகவும் வெளியில் நடமாடும் போது, கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன ஆகும்? உயிர் பிழைப்போமா?  கொரொனா மூலமாக, தேர்தல் தள்ளி போனால் என்ன ஆவது? மோடி ஆட்சியில் தமிழ்நாட்டில் ஊழல் ஒழிப்பு சூடு பிடித்தால், என்ன ஆவது?

வெள்ள நிவாரணத்தின் போது, மக்களுக்கு சுயலாப நோக்கின்றி உதவியவர்கள் எல்லாம், உள்ளூர் கட்சி மேய்ப்பர்கள் மூலமாக பலவித தடைகளை சந்தித்தார்கள். ஆனால் கொரொனா மூலமாக, மேய்ப்பர்கள் அது போன்ற தடைகளை ஏற்படுத்தும் வலிமையை இழந்து வருகிறார்கள். உதவுபவர்களும், உதவி பெறுபவர்களும் மனவலிமையில் வளர்ந்து வருவதால், மேய்ப்பர்களின் செல்வாக்குகள் தேய்பிறையாகி வருகின்றன.

மேய்ப்பர்களை ஒரு அளவுக்கு மேல் மிரட்டி வேலை வாங்க முடியாமலும், வாக்கு சேகரிப்பு வலைப்பின்னலை இழக்க விரும்பாமலும் தடுமாறி வரும் கட்சிகளின் தலைமைகள், தேர்தல் வியூக வல்லுநர்களிடம் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அதன் தொடர்விளைவாக, அமாவாசைகளாக வளர்ந்துள்ள மேய்ப்பர்களுக்கும் தேர்தல் வியூக வல்லுநர்களுக்கும் இடையே, 'சபாஷ், சரியான போட்டி' துவங்கி விட்டது
(https://tamilsdirection.blogspot.com/2020/06/blog-post_23.html)

ஒவ்வொரு கட்சியின் தொழில்நுட்பப் பிரிவுகளில் வேலை பார்க்கும் இளைஞர்களில் பெரும்பாலோர் 'LKG' திரைப்பட கதாநாயகர்களைப் போலவே வெளிப்படுவார்கள், என்பதும் எனது யூகமும் ஆகும். கவர்ச்சிகர பேச்சில் எழுத்தில் ஏமாந்த எனது தலைமுறையானது, எளிதில் அவர்களிடம் ஏமாற வாய்ப்பிருக்கிறது.

தமிழ்நாட்டில் நோஞ்சான் கட்சிகள் தொடர்வதும், அந்த கட்சிகள் மூலமாக சிரமமின்றி எளிதில் தமிழ்நாட்டை கையாளலாம் என்ற திசையில் மத்தியில் ஆளும் கட்சிகள் பயணிப்பதும் தமிழ்நாட்டிற்கும் நல்லதல்ல; இந்தியாவிற்கும் நல்லதல்ல.' என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். 

'இந்தியாவில் 'நோஞ்சான் தமிழர்கள்' வளரும் போக்கில்‌ தமிழ்நாடு இருப்பதானது, தமிழ்நாட்டிற்கும் கேடாகும்; இந்தியாவிற்கும் கேடாகும்' என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

தம்மிடம் ஏமாந்த அமைப்பில் இருந்து ஆற்றலை உறிஞ்சி அச்சுறுத்தும் அளவுக்கு பூதாகாரமாகக் காட்சி தரும் நோஞ்சான் தலைவர்கள் எல்லாம், அந்த ஆற்றல் உறிஞ்சும் தொடர்பைத் துண்டித்தவுடனேயே, காற்று போன பலூன் போல, தமது சுய நோஞ்சான் தோற்றத்திற்கு விரைவில் சுருங்கி விடுவார்கள்.

தமிழ்நாட்டில் போலியான வலிமைத் தோற்றத்தில் வலம் வந்த நோஞ்சான் தமிழர்களும், நோஞ்சான் கட்சிகளின் தலைவர்களும்,‌ கொரோனா புரட்சி மூலமாக, தமது சுய நோஞ்சான் தோற்றத்திற்கு விரைவில் சுருங்கும் போக்கானது தொடங்கி விட்டது.

நல்ல தலைவர்கள் வெளிப்படுவதற்கான தடைகளும் நீங்கத் தொடங்கியுள்ளன.

ஈ.வெ.ரா-வின் 'பொதுத்தொண்டனுக்கானஅளவுகோலின்படி வாழ்பவர்களே இனி தமிழ்நாட்டின் பொது அரங்கில் வலம் வர முடியும். 

மக்களின் தேவைகளும், அதை உணர்ந்து (sensitize),  செயல்பூர்வமாக உதவும் மனிதர்களும், இணைய வழி விரிந்த சமூக சூழலில், ஒத்திசைவான முறையில் (Social Resonance), செயல்பாடுகளுக்கான அமைப்புகளானவை(structures), திட்டமிடாமலேயே, அந்த ஒத்திசைவு போக்கிலேயே உருவாகும் போக்கு தொடங்கி விட்டதற்கான சிக்னல்களையே மேலே பார்த்தோம்.

எனவே தமிழின் மற்றும் தமிழ்நாட்டின் மீட்சியும் நிச்சயமாகி வருகிறது.

No comments:

Post a Comment