Thursday, July 30, 2020


தமிழ்நாட்டில் பிணமாக வாழ்பவர்களை எவ்வாறு அடையாளம் காண்பது?


பிண வாடையற்ற சமூகவெளியில் வாழ்வதால் கிடைக்கும் பலன்கள்?




சாகும் போது எவரும் எதையும் தம்முடன் எடுத்துச் செல்ல முடியாது. இது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

பின் ஏன் தன்மானம் இழந்து ஊழல் வழிகளிலும், ஊழல் பேர்வழிகளுக்கு வாலாட்டியும் சொத்து சேர்க்கும் போட்டா போட்டி ஓட்டப்பந்தயத்தில் தமிழ்நாட்டில் எண்ணற்றோர் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். 

1.ஆடம்பரமாக ஏர்கண்டிசனுடன் பெரிய‌ வீடு, ஏர்கண்டிசன் கார், விமானப் பயணங்கள் என்று சொகுசான வாழ்க்கையை வாழ வேண்டும்.

2. தமது சாதி சனங்கள் நமது செல்வத்தை செல்வாக்கைக் கண்டு மயங்க வேண்டும். நாம் நமக்கு மேலுள்ளவர்களுக்கு வாலாட்டுவது போல, நமக்கும் பலர் வாலாட்ட வேண்டும்.

தமிழ்நாட்டில், நானறிந்தது வரையில், வேறு எங்கும் இல்லாத அளவுக்கு, புலமையாளர்களில் பெரும்பாலோர் தத்தம் புலமையை வளர்ப்பதை விட, செல்வாக்கான நபர்களுக்கு வாலாட்டி வளரும் திறமைகளையும், அதற்கான ஊடக வலிமையுள்ள சமூக வலைப்பின்னலுடன் ஒட்டிப் பயணிக்கும் திறமைகளையும், வள‌ர்ப்பதிலேயே குவியமாக வாழ்கிறார்கள்.

மேற்குறிப்பிட்ட முதல் நோக்கத்தில் வெற்றியாளர்களாக வலம் வருபவர்களின் வாழ்க்கை என்பதானது, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணிக்கும் வாய்ப்புகள் அதிகமுள்ள வாழ்க்கையாகி விட்டது.

தமது இளமை காலம் வரை வசதியின்மை காரணமாக, இயற்கையான காற்றோட்டத்துடனும் வியர்வை அவ்வப்போது வெளியேறும் வகையிலும் வாழ்ந்தவர்களில், குறுக்கு வழிகளில் அதிவேக பணக்காரராகி ஏ.சி வாழ்க்கையில் வாழத்தொடங்கியவர்களில் 60 வயதைக் கடந்தவர்கள் எல்லாம், சிறுநீரக பாதிப்பு(Kidney damage), சர்க்க‌ரை நோய் (diabetes) இருதய பாதிப்பு (Heart damage), மூளை பாதிப்பு (Brain Damage) உடலின் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்ட நோயாளிகளாகவே வெளிப்பட்டுள்ளனர். அத்தகையோரின் நோய் எதிர்ப்பின்மை காரணமான, கொரோனா நோயில் சிக்கி விட்டால் தப்பிப்பது கடினமாகும். 

மேற்குறிப்பிட்ட இரண்டாம் நோக்கத்திற்கான வாய்ப்புகளை எல்லாம் கொரோனா சீரழித்து விட்டது.

தமது முதுகுக்குப் பின்னால் தமது 'குறுக்கு வழி யோக்கியதையை' சிசுகிசுப்பது தெரிந்தும், தெரியாதது போல;

தமது உற்றம், சுற்றம் உள்ளிட்ட சமூக வட்டங்களில் வெளிப்படும் 'போலி' மரியாதைகளில், கள்ளுண்ட வண்டு போல மிதந்து வாழ்ந்த‌வர்கள் எல்லாம்,

ஆடம்பரமாக தமது குடும்ப நிகழ்ச்சிகளை நடத்த முடியாமலும், காவல் துறை கண்களை மூடிக்கொள்ள நடத்தினாலும் சமூக வலைதளங்களில் அசிங்கப்படும் வகையிலும்,  கூடுதல் மன அழுத்தம் மூலமாக நோய் எதிர்ப்புத்திறனைக் குறைக்கும் வலிமையில் இரண்டாம் நோக்கமும் ஆபத்தாகி விட்டது. தமது பணபலத்தையும் செல்வாக்கையும் வெளிச்சம் போட முடியாத அளவுக்கு, பல மாதங்களாக எந்த சமூக நிகழ்ச்சிக்கும் இடம் இல்லாமல் போய்விட்டது.

கூகுள் நிறுவனம் தமது பணியாட்களை எல்லாம் 2021 சூன் வரையிலும் தத்தம் வீடுகளில் இருந்தே பணியாற்றுமாறு ஆணையிட்டுள்ளது. எனவே 2021 சூன் வரையில் இதே நிலை தொடருமா? இன்னும் நீடிக்குமா? அதுவரை நாம் உயிரோடு இருக்க கொரோனா அனுமதிக்குமா?

என்று மேற்குறிப்பிட்ட இரண்டு நோக்கங்க‌ளுக்காக  தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்து வருபவர்கள் எல்லாம் குழம்பிக் கிடக்கிறார்கள்.

அத்தகையோருக்கு எல்லாம் கூடுதலாக இன்னொரு தண்டனையானது நெருங்கும் வாய்ப்பும் அதிகரித்து வருகிறது.

சுமார் 8 வருடங்களுக்கு முன்பு, ஆங்கிலத்தில் 'நீங்கள் பிணங்களுடன் வாழ்ந்து வருகிறீர்களா?' (‘Are you living with the 'dead bodies'? ;

என்ற தலைப்பில் எனது பதிவு வெளிவந்தது. கடந்த பல மாதங்களாக, உலகில் பல நாடுகளில் இருந்தும் அந்தப் பதிவினை படிப்பவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் கிராமங்களில் கூட, 'நம்மில் யார் யார் கொரொனோவிற்குப் பின் இருக்கப்போகிறோம்?' என்ற உரையாடல்கள் அதிகரித்து வரும் அளவுக்கு, உலக மக்களிடையே மரண பயத்தையும் கொரோனா தூண்டி வருகிறது. எனவே சாகும் வரை எவ்வாறு நன்கு ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வது? என்ற தேடலும் உலகில் அதிகரித்து வருகிறது. 

மேற்குறிப்பிட்ட பதிவினை உலக அளவில் படிப்பவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருவதற்கு, அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

நீண்ட வருடங்களுக்கு முன்பு நான் கேள்விப்பட்டிருந்த கீழ்வரும் தகவலானது, அந்தப் பதிவின் தொடக்கத்தில் இடம் பெற்றது.

புதுக்கோட்டை அருகே ஒரு மடத்தின் தலைவர் தம்மையே ஆண்டவனாக அறிவித்து வாழ்ந்தார். அவர் இறந்தவுடன் அம்மடத்தில் இருந்தவர்கள் 'அவர் சாகவில்லை.உறங்கிக் கொண்டிருக்கிறார்.' என்று நம்பி சில நாட்கள் காத்திருந்தார்கள். பிண வாடை அதிகரித்து, பின்னர் தான் அடக்கம் செய்தார்கள்.

எனக்கு தெரிந்த ஒருவருக்கு மூக்கில் நடந்த தவறான அறுவைச்சிகிச்சை காரணமாக, அவர் மூக்கின் மூலமாக நாற்றத்தை உணரும் தன்மையை இழந்து விட்டார். அவ்வாறு நாற்றம் உணரும் திறனை இழந்தவர்கள் பிண வாடையுடன் வாழ்வதில் சிரமம் இருக்காது.

தமக்கு ஒரு நீதி, பிறருக்கு ஒரு நீதி என்று வாழ்வது, லாப நட்ட கணக்குகளின் அடிப்படையில் எவரையும் மதிப்பது அல்லது உதவுவது என்ற போக்கில் வாழ்பவர்கள் எல்லாம் மனிதத்தை இழந்து பிணமாக வாழ்பவர்கள் ஆவார்கள். எனவே மேற்குறிப்பிட்ட இரண்டு நோக்கங்களுக்காக வாழ்பவர்கள் எல்லாம் அவ்வாறு பிணமாக வாழ்பவர்கள் ஆவார்கள்.

எரிக்கப்படாத பிணம் அழுகும் வேகத்தில் நோய்க்கிருமிகளை ஈர்த்துப் பெருக்கவே உதவும். அது போலவே சமூகத்தில் 'பிணமாக' வாழும் மனிதர்களும், சமூக நோய்க்கிருமிகளாக வாழும் மனிதர்களைப் பெருக்கவே உதவுவார்கள். சமூக மூச்சுத்திணறல் (Social suffocation) மிகுந்த சமூக வெளியில் (Social space) வெளிப்படும் பேச்சுக்களும், எழுத்துக்களும், பெரும்பாலும் ஆதாயத்திற்கு வாலாட்டும்/கண்டிக்கும் மேற்குறிப்பிட்ட பிணங்களாக வாழ்பவர்களிடமிருந்து வெளிப்படும்.

வெளியில் 'எலியும் பூனையுமாகக்' காட்சி தரும் இந்துத்வாவாதிகளும் இந்துத்வா எதிர்ப்பாளர்களும் சங்கமமான இடங்கள் கருணாநிதி அல்லது சசிகலா நடராஜன் குடும்பங்கள் ஆகும். அந்த சங்கமம் பற்றிய புரிதலின்றி, எதிரெதிர் முகாம்களில் உள்ள பிணங்களை எல்லாம் மனிதராக மதிப்பதானது, சமூகத்திற்குக் கேடான அறியாமை ஆகும்.

பிணங்களின் வாடை மிகுந்த சமூக மூச்சுத் திணறல் மிகுந்த சமூக வெளியில் வாழ்பவர்கள் எல்லாம், பொது ஒழுக்க நெறியை 'நுகரும்' திறன் இழந்து வாழ்ந்தால் மட்டுமே, சமூக மூச்சுத் திணறல் இன்றி வாழ முடியும்.

நமக்கு பொது ஒழுக்க நெறியை 'நுகரும்' திறன் இருந்து, சமூக மூச்சுத் திணறல் மிகுந்த சமூக வெளியை விட்டு துணிச்சலுடன் விலகி, அதனால் விளையும் இழப்புகளையும் விரும்பி ஏற்று பயணிப்பதால் கிடைக்கும் பலன்கள் அதிகமாகும்.

சுயலாபக் கள்வர்களான‌ பிணங்கள் மிகுந்த சமூக மூச்சுத் திணறல் மிகுந்த சமூக வெளியில்,

நமது நேரம், ஆற்றல், பணம் போன்றவற்றை கட்டுப்படுத்த முடியாமல், அந்த கடிவாளங்களில் சிக்கிய பிணைக்கைதி போல பயணிப்பதிலிருந்து விடுபட்டு;

பிணங்களின் சமூக வெளியில் இருந்து விடுபட்டு, நமக்கு நாமே எவ்வாறு எஜமானராகப் பயணிப்பது?

என்ற கேள்விக்கு விடையாக நாம் வாழத் தொடங்கினால், நமது வாழ்க்கையானது நமக்கு தெரியாமலேயே, ஒரு ஆக்கபூர்வ சமூக பொறியியல் வினை ஊக்கியாக (Social Engineering Catalyst) அமையும்.

நமது (சமூக வட்டத்தில் நாம் ஏமாந்து அனுமதித்தவர்களின்) 'பாராட்டு, புகழ் ஏக்கம்' மற்றும் 'சமூக ஒப்பீடு நோய்' (Social Comparison sickness) வழிகளில் செலவாகிக் கொண்டிருந்த நமது நேரம், ஆற்றல், பணம் போன்றவைகள் எல்லாம் மீதமாகி, நல்ல சமூக சுவாசத்திற்கான (social breathing) சமூகவெளியில், நமது உள்ளார்ந்த ஈடுபாடுகளோடு (passions) ஒட்டி, நாமும் வளர்ந்து, திருக்குறள்(469) வழியில், விளம்பரமின்றி தகுதியானவர்களுக்கு உதவி, மனநிறைவோடு வாழ்வது எளிதாகும்.

அவ்வாறு வாழ்ந்து வரும் போக்கில் தான், உலக அளவில் பிரமிப்பூட்டும் கண்டுபிடிப்புகள் என்னிடமிருந்து வெளிப்பட்டு வருகின்றன‌. கீழ்வரும் புரிதலில், என் மூலமாக வெளிப்படும் கண்டுபிடிப்புகளுக்கு, நான் ஓர் ஊடகமே, என்ற தெளிவுடனேயே, நான் பயணிக்கிறேன்.


வாழ்கின்ற மனிதர்கள் எல்லாம், மூளைக்கான சிக்னல்கள் தொடர்புடைய 'ட்ரான்ஸ்டியூசர்'(Transducer)
(https://en.wikipedia.org/wiki/Transducer) ஆகவும், அண்டத்தில் வரும் சிக்னல் ஏற்பியாகவும்(Receiver), சிக்னல் பரப்பியாகவும்(Transmitter), ஒரே நேரத்தில் செயல்பட்டு, அந்த செயல்பாட்டின் விளைவுகளுக்கு ஏற்ற வகையில் வாழ்ந்து வருகிறார்கள்.

எனவே எனது கண்டுபிடிப்புகள் மூலமாக‌ வெளிப்படும் 'புகழ், சொகுசு வாழ்வு' வாய்ப்புகளில் தடுமாறி, 'தடம் புரண்டு', பொது ஒழுக்க நெறியை 'நுகரும்' திறன் இழந்து, சமூக மூச்சுத்திணறல் (Social Suffocation) மிகுந்த சமூக வெளியில் (Social Space) சிக்கிவிடக்கூடாது, என்பதிலும் மிகுந்த கவனத்துடன் வாழ்கிறேன்.

அகத்தில் உரிய மாற்றங்கள் இன்றி, மேலே குறிப்பிட்டதானது சாத்தியமாகாது. சாத்தியமானபின் நமது சொல்லும், செயலும் மிகுந்த வலிமை பெறும் போக்கில் பயணிக்கத் தொடங்கும். 'பதரான' மனிதர்கள் தாமாகவே நம்மை விட்டு விலகுவதும், மணியான மனிதர்களை நோக்கி நாமும், நம்மை நோக்கி அவர்களும் ஈர்க்கப்படுவதும், 'இயற்கையின் விதியோ?' என்று அதிசயிக்கும் வகையில் அரங்கேறும்.

அவ்வாறு அரங்கேறியதன் விளைவாக, நமது கருத்து பரிமாற்றங்களும் பதரான மனிதர்களை விட்டு விலகி, மணியான மனிதர்களை நோக்கி, இயற்கையின் விதியோ? என்று அதிசயிக்கும் அளவுக்கு முன்னேறும். 

கொரொனாவின் மூலமாக, பிணங்களாக வாழ்பவர்களின் சமூக வெளியில் இருந்து, பிண வாடையற்ற சமூகவெளி பிரியும் 'சமூக தளவிளவு' (Social Polarization) என்பதானது, அதிசயமான முறையில் அரங்கேறி வருகிறது. 

No comments:

Post a Comment