Tuesday, July 28, 2020

நேர்மையான இந்துத்வா ஆதரவாளர்களின் பார்வைக்கு;


இந்துத்வா முகாம்களிலும் 'கறுப்பர் கூட்டம்'?


'கறுப்பர் கூட்ட சமூக நோயை' பாரபட்சமின்றி எவ்வாறு எதிர்ப்பது?





பாஜக, இந்து முன்னணி உறுப்பினர்க‌ள் கைது!

பட்டுக்கோட்டையில் பாஜக உறுப்பினராக இருப்பவர்  தியாகராஜன் கார்த்திகேயன்.

11.05.1953 விடுதலை நாளிதழில் கீழ்க்கண்ட செய்தி இருப்பதாகத் தன் முகநூலில் பதிவு செய்திருந்தார்.





பெரியாரை அவமதிக்கும் இச்செய்தி குறித்துப் பட்டுக்கோட்டைக் கழகத் தோழர்கள் காவல்துறையில் புகார் செய்தனர். 11.05.1953 இல் வெளிவந்த விடுதலை இதழின் நகலையும் காவல்துறையிடம் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து அவதூறு செய்தி பரப்பிய பாஜக தியாகராஜன் கார்த்திகேயன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த இந்து முன்னணி உறுப்பினர் சிவாஜி என்பவரும் இரு தினங்களுக்கு முன் பெரியார் குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதற்காகக் கைது செய்யப்பட்டார்!






முகநூலில் சீரங்கம் கோவில் முன் உள்ள 'பெரியார்' சிலை புகைப்படத்தை வெளியிட்டு கீழ்வரும் வாசகம் பதிவாகியுள்ளது.

'பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள் 
தாங்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்லும் போது தயவுசெய்து  வாசலில் இருக்கும் பிச்சைக்காரனுக்கு உங்களால் முடிந்த  சில்லறையை போட்டு விட்டு செல்லுங்கள்.'

மேற்குறிப்பிட்டவாறு 'பெரியாரை' இழிவு செய்த போது, அதே பாணியில் காஞ்சி சங்கராச்சாரியரை 'பெரியார்' ஆதரவாளர்கள் இழிவு செய்ததை நான் அறிவேன்.

'கறுப்பர் கூட்டம்' பிராமண எதிர்ப்பு அமைப்புகளுக்கு ஆள் சேர்த்துக் கொடுக்கும் முகவர்களான‌ (Recruiting agents) பிராமணர்கள் வரிசையில் மேற்குறிப்பிட்டது போன்றவையும் முக்கிய இடம் பெறும். (https://tamilsdirection.blogspot.com/2020/07/recruiting-agents.html)

பல வருடங்களுக்கு முன், ஈரோடு அருகே, 'பெரியார்' கட்சிகள் மீது வீண் பழி சுமத்தும் நோக்கில்திருட்டுத்தனமாக‌ இந்து கடவுள்களின் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்த இந்துத்வா ஆதரவாளர்களை கையும் களவுமாகப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர் 'பெரியார்' கட்சிகளின் ஆதரவாளர்கள். இச்செய்தி ஊடகங்களிலும் வெளிவந்திருக்கிறது.

மேற்குறிப்பிட்ட பாணியில், எதிரெதிர் முகாம்களில் இந்த அளவுக்கு மோசமாக பகைமையை உணர்ச்சிபூர்வமாக தூண்டுவது என்பதானது, நானறிந்தது வரையில்  1991க்கு பின்பு அரங்கேறியவை ஆகும்.

தமிழ்நாட்டில் பிராமணரல்லாதார் 'உட்குழுவாகவும்', பிராமணர்கள் 'வெளிக்குழுவாகவும்' நீடித்து வந்த போக்கினை, எவ்வாறு தமது குடும்ப அறிவியல் ஊழலுக்கு உதவும் 'சமூக கீரி - பாம்பு சண்டை'யாக, 1969இல் முதல்வரான கருணாநிதி வளர்த்தார். (https://tamilsdirection.blogspot.com/2019/10/blog-post.html

1991 முதல் சசிகலா நடராஜன் குடும்பமானது, அறிவியல் ஊழலின் அடுத்தக்கட்டமாக, அந்த சண்டையை இன்னும் மோசமாக்கினார்க‌ள்; ஒரே நேரத்தில் சென்னை பெரியார் திடலுடனும், காஞ்சி சங்கரமடத்துடனும் நல்லுறவை வளர்த்துக் கொண்டு.

ஆனால் அந்த உணர்ச்சிபூர்வ போக்குகள் என்பவை எவ்வாறு 1944இல் விதைக்கப்பட்டு, 1949 முதல் வேகமாக வளர்ந்தது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

நான் 'பெரியார்' கொள்கையாளராகப் பயணித்த காலத்தில், 1925 முதல் 1944 வரை வெளிவந்த குடிஅரசு இதழ்களில் மூழ்கி வியந்திருக்கிறேன். அந்த பாணியில்  தமது இதழிலும், மேடையிலும்எதிர்முகாமில் உள்ளவர்களின் கருத்துக்களுக்கு இடமளித்து நிகழ்காலத்தில் பயணித்து வருவது துக்ளக் என்பதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் பயணித்த துக்ளக்கில், விடுதலைப்புலிகளை ஆதரித்து பழ.கருப்பையா எழுதிய கட்டுரை வெளிவந்தது. துக்ளக் விழா மேடையில் கம்யூனிஸ்ட் தலைவர் ராஜா துக்ளக்கை விமர்சித்த போது, அரங்கில் இருந்து எதிர்ப்புக்கூச்சல் வெளிப்பட்டது. அதனை சோ கண்டித்து அடக்கி, அமைதியை உண்டாக்கி, ராஜா தொடர்ந்து துக்ளக்கை விமர்சிக்க அனுமதித்தார். ஈ.வெ.ரா மேடையில் இருக்க ஜெயகாந்தன் ஈ.வெ.ராவை விமர்சித்த போது, அதே சோ பாணியில்  செயல்பட்டு ஜெயகாந்தனை பேச அனுமதித்ததை, ஜெயகாந்தனும் பதிவு செய்துள்ளார்.

அது போல, இன்று பெரியார் கட்சிகளின் மேடைகளில், ஈ.வெ.ராவின் கொள்கைகளையும், அந்தந்த கட்சிகளின் தலைவர்களின் செயல்பாடுகளையும் விமர்சிக்க அனுமதிக்கும் துணிச்சல் இருக்கிறதா? இல்லையா? என்பது, அந்தந்த கட்சிகளின் தலைவர்களின் மனசாட்சிகளுக்கே வெளிச்சம்.

திராவிடர் கழகத்தில் ஈ.வெ.ராவிற்கும் அண்ணா குழுவினருக்கும் இடையில் நடந்த மோதல்கள் பற்றி 1944 முதல் 1949 வரை வெளிவந்த ஈ.வெ.ராவின் இதழ்களில் படிக்கலாம். தி.மு.கவிற்கு எதிரான விமர்சனங்களை 1949 முதல் 1967 வரை வெளிவந்த விடுதலை இதழ்களில் படிக்கலாம். ஈ.வெ.ராவையும் காமராஜரையும் இழிவு செய்து கருணாநிதி வெளியிட்டவைகளை எல்லாம் 1967 வரை வெளிவந்த முரசொலியில் படிக்கலாம்.

'அண்ணதுரையா எனக்கு பொற்கிழி கொடுத்தார்?' என்ற தலைப்பில், 'குயில்' இதழில் பாரதிதாசன் வெளியிட்ட தொடர் கட்டுரைகளை இன்று வெளியிட‌, பாரதிதாசன் பிரியர்களில் எவருக்காவது  துணிச்சல் இருக்கிறதா? அதே போல ஜீவாவைக் கண்டித்து , 'குயில்' இதழில் பாரதிதாசன் வெளியிட்ட கட்டுரையை வெளியிட கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களில் எவருக்கும் துணிச்சல் இருக்கிறதா? அண்ணாவும், ஜீவாவும் அந்த காலக்கட்டத்தில், பாரதிதாசனைப் பற்றி வெளியிட்ட கருத்துக்களையும், அதில் சேர்த்து வெளியிடுவார்களா

1944 -இல் திராவிடர் கழகம் உருவானதற்கு முன், பெரியாரின் சமூக வாழ்வில், அவர் சந்தித்த கருத்து வேறுபாடுகள் பற்றிய விவாதங்கள் அறிவுபூர்வ தளத்தில் நடைபெற்றதையும், திராவிடர் கழகம் உருவான பின் அவருக்கும் அண்ணாதுரைக்கும் இடையில் உருவான கருத்து வேறுபாடுகள் பற்றிய விவாதங்கள் உணர்ச்சிபூர்வ தளத்தில் நடைபெற்றதையும் 'தமிழ்நாட்டு திராவிடஅரசியலில் சிக்கிய 'ஐந்திறம்' ' என்ற முந்தையப் பதிவில் பார்த்தோம். அதில் "'ஈ.வெ.ரா' என்ற பெயர் மறைந்து, 'பெரியார்' என்ற பட்டமே பெயரானதும்அந்த 'உணர்வுபூர்வ' போக்கின் விளைவா? இவ்வாறு பெயர் மறைந்து, 'பட்டமே' பெயரானது உலகில் வேறு எந்த தலைவருக்கும் நிகழ்ந்திருக்கிறதா?" என்ற கேள்விகளையும் பார்த்தோம்.

அதன் தொடர்ச்சியாகவே, பிற்காலத்தில் பாரதிதாசனுக்கும் அண்ணாதுரைக்கும், பாரதிதாசனுக்கும் ஜீவானந்தத்திற்கும் இடையே மிகவும் மோசமானஉணர்ச்சிபூர்வ விவாதங்கள் நடைபெற்றதற்கு, 'குயில்' இதழ்கள் சாட்சியாக உள்ளன. ஆக சமூகத்தில் 'உச்சத்தில்' இருக்கும் நல்லவைகளும், கெட்டவைகளும் அந்த சமூக வரலாற்றில் விதை கொண்டு, உரமூட்டப்பட்டுவளராமல், 'திடீரென' வந்து விடாது. 

எனவே இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் வெளிப்பட்டுள்ள 'கறுப்பர் கூட்டம்' போக்குகளின் வரலாற்றுப் பின்னணியை விவாதிக்காமல், அந்த சமூக நோயில் இருந்து தமிழ்நாடு விடுதலை பெற முடியாது.

தனது தராதரம், பாரம்பரியம், பண்பாடு ஆகிய அடிப்படைகளிலான, இயல்பின் அடிப்படையில், உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்பவர்கள், தமிழ்நாட்டில் அருகிவிடவில்லை. எந்த வழியிலும், போட்டி போட்டு, செல்வம், செல்வாக்கு சம்பாதிக்கும் நோயில் சிக்காமல் வாழுந்து வரும்அத்தகையோரின் அரவணைப்பில் , 'தராதரம், தகுதி, திறமை, பாரம்பரியம், பண்பாடு' போன்றவையெல்லாம் உயிருடன் இருக்கின்றன. அத்தகையோர் "சாதி, மத, கொள்கை வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, வாய்ப்புள்ள பிரச்சினைகளில் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே, தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது.

அவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுவதற்குக் காரணமாக‌ ,சமூக செயல்நெறி மதகுகள் ஆனவை, திராவிட மனநோயாளித்தன செயல்நுட்பத்தில் சிக்கி, பலிகடா ஆனதன் 'பலன்களை' பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேறுபாடின்றி, அனைத்து சாதி, மதத்தினரும் 'அனுபவித்து வருகின்றனர்.

எனவே சாதி, மத, கொள்கை வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, 'கறுப்பர் கூட்ட சமூக நோயை பாரபட்சமின்றி எதிர்ப்பது, தமிழ்த்தாய்மொழிவழிக்கல்வி மீட்சி என்பது போன்ற வாய்ப்புள்ள பிரச்சினைகளில் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே, தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது.


குறிப்பு :

'பிராமண எதிர்ப்பு செனோபோபியாவும், ஈ.வெ.ரா எதிர்ப்பு செனோபோபியாவும்'; 
https://tamilsdirection.blogspot.com/2018/11/5.html

No comments:

Post a Comment