Friday, July 10, 2020


'முள்ளும் மலரும்' ரஜினியிடம் கேட்ட கேள்வி;


அப்படி கூட எவரும் கேட்காத நிலையில், இன்றும் தமிழ்நாடு நீடிக்கிறதா?



உணர்ச்சிபூர்வ போக்கில் பயணிக்கும் தலைவர்களும், அத்தலைவர்களைக் கண்மூடித்தனமாக பின்பற்றும் தொண்டர்களும் எப்படி இருப்பார்கள்?

'முள்ளும் மலரும்' திரைப்படத்தில் வரும் கீழ்வரும் காட்சியானது எனக்கு மறக்க முடியாததானது.

ரஜினி சண்டை போடும் காட்சியைக் காட்டி விட்டு, பின் திரையில் கொத்து புரோட்டா உருவாகும் காட்சி திரையில் இடம் பெறும். அடுத்து சண்டை முடிந்து ரஜினி நடந்து வருவார். ரஜினியுடன் சேர்ந்து எதிரியை அடித்த ரஜினியின் கூட்டாளி ரஜினியிடம் கீழ்வரும் கேள்வியைக் கேட்பார்.

'எதுக்கண்ணே அந்த ஆளை அடிச்சீங்க?'

அப்படி கூட எவரும் கேட்காத நிலையில், 1967 ஆட்சி மாற்றத்திற்குப் பின், தமிழ்நாடு இருந்தது.

'தீ பரவட்டும்' என்று கம்ப ராமாயணத்தைச் சாடிய அண்ணா, 1967இல் முதல்வராகி கம்பனுக்கு சிலை வைத்தார்.

'எதுக்கண்ணா, கம்பராமாயணத்தை தாக்கினோம்?' என்று எந்த உடன்பிறப்பும் அண்ணாவைக் கேட்டதாகத் தெரியவில்லை.

பலர் தீக்குளிக்க தி.மு.கவில் இருந்து வெளியேறிய வை.கோ, இன்று 'தி.மு.க தலைவர் ஸ்டாலினை முதல்வராக்குவதே தமது இலட்சியம்', என்று அறிவித்துள்ளார்.

'எதுக்கண்ணா, தி.மு.கவை விட்டு வெளியே வந்தோம்?' என்று எந்த ம.தி.மு.க உடன்பிறப்பும் வை.கோவைக் கேட்டதாகத் தெரியவில்லை.

மேற்குறிப்பிட்ட உணர்ச்சிபூர்வ தொண்டர்களின் பலத்தில் ஆளுங்கட்சியாக பயணித்த தி.மு.கவின் 'அறிவியல் ஊழல்' ஆட்சியில்  மக்கள் பட்ட அவதிகளைக் கணக்கில் கொள்ளாமல்,

'தமிழ் உணர்வு, தனித்தமிழ்நாடு' என்று பயணித்த கட்சிகளும் நபர்களும், தி.மு.கவின் முதுகில் பயணித்தவர்களாக,

பிரதமர் இந்திரா காந்தியின் நெருக்கடி கால ஆட்சியில் வெளிப்பட்டார்கள்.

'அறிவியல் ஊழல்' ஆட்சியில் மக்கள் பட்ட அவதிகளைக் கணக்கில் கொள்ளாமல்,

'எதுக்கு நாம் த‌னித்தமிழ்நாடு கேட்டோம்?' என்ற கேள்வியானது, அவர்கள் மத்தியில் எழுந்ததாகத் தெரியவில்லை.

அவ்வாறு ஆட்சியில் மக்கள் பட்ட துயரங்களைப் பற்றி கவலைப்படாமல், பயணித்தால் என்ன ஆகும்?

நெருக்கடி காலத்தில், தி.மு.க ஆட்சியைக் கலைத்து, தி.க/தி.மு.க தலைவர்களில் பெரும்பாலோரை சிறையில் அடைத்து, அரசு துறைகளில் ஊழலை குறைத்து, பின் நடந்த பாராளுமன்ற தேர்தலில், இந்திரா காங்கிரஸ் மத்தியில் ஆட்சியை இழந்து, ஆனால் தமிழ்நாட்டில் பிரமிக்க வைக்கும் வெற்றியை ஈட்டியது; 'பிரிவினை' சூட்டில், 'மாநில சுயாட்சி' என்ற பெயரில், அரங்கேறிய ஊழல் ஆட்சிக்கு, தமிழ்நாட்டு மக்கள் வழங்கிய தண்டனையாக. 

அவ்வாறு தமிழ்நாட்டு மக்கள் வழங்கிய தண்டனையில் இருந்து பாடம் கற்காமல், தமிழ்நாட்டை கொள்ளையடித்த குடும்பங்களை அனுசரித்து, ஒட்டுண்ணிகளாக வாழும் நோஞ்சான்களாகப் பயணித்தார்கள்.

அறிவிலோ உடலிலோ நோஞ்சான்களாக இருக்கும் மனிதர்கள், விரும்பினால் கடும் முயற்சிகள் மூலமாக, அறிவிலும் உடலிலும் வலிமை மிக்கவர்களாக வளர முடியும். அதற்கு மாறாக, தாம் நோஞ்சானாக இருப்பதை மறுத்து, வாய்ப்பேச்சு வீரர்களாக பிறரை ஏமாற்றி, ஒட்டுண்ணிகள் போலவும் வாழ முடியும். அவ்வாறு ஒட்டுண்ணிகள் போல வாழ்பவர்கள் எல்லாம், தத்தம் 'நேர்மை வழிகாட்டியை' தன்மானக்கேடான திசையில் அவ்வப்போது திருத்தி பயணிப்பதையும் தவிர்க்க முடியாது. 

தமிழ்நாட்டு சமூக ஆற்றலில் ஊற்றுக்கண்களாக தாய்மொழித்தமிழும், தமிழ் இலக்கியங்களும் பண்பாடுகளும் இருக்கின்றன. அவற்றில் இருந்து 'பெரியார் தந்த புத்தியில்' அந்நியமாகி தனித்தமிழ்நாடு போதையில் பயணித்தவர்களுக்கு, ஆண்ட/ஆளும் கட்சிகளின் ஆட்சிகளில் மக்கள் பட்ட அவதிகளுடன் 'ஏம்பதைஸ்' (Empathise) பண்ணாமல், அந்த கட்சிகளின் தலைவர்களை எல்லாம் 'தனித்தமிழ்நாடு புரவலர்களாக' ஏற்றுக்கொண்டதில் வியப்பில்லை. அது போன்ற பயணங்கள் வீழ்ச்சியை எவ்வாறு சந்திக்கும்? என்ற சமூக செயல்நுட்பம் வருமாறு:

ஒரு சமூகத்தின் கடந்த கால வளர்ச்சிப் போக்குகளில ஆக்கபூர்வமான கூறுகளும் அழிவுபூர்வமான கூறுகளும் கலந்திருக்கும். சமூக ஆற்றல் செயல்பாட்டில் இரண்டு வகைக் கூறுகளில் ஒன்றிற்கு ஆற்றல் பங்களிப்பு அதிகரிப்பினால், அவை வளர்ச்சிப் போக்குகளில் இருக்கும். சமூக ஆற்றல் செயல்பாட்டில் இரண்டு வகைக் கூறுகளில் ஒன்றிற்கு ஆற்றல் பங்களிப்பு அதிகரித்து வருமானால், பிறிதொன்றுக்கு  ஆற்றல் பங்களிப்பு வறண்டு வரும். அதனால் பிறிதொன்று கூறுகள்  பலகீனமாகி மடியும் போக்குகளில் இருக்கும். அந்த பலகீனமாகி மடியும் போக்குகளில் பிணைத்துக் கொண்டு 'உற்சாகமாக' ஈடுபடும் மனிதர்களின் போராட்டங்களும் வன்முறைகளும் விட்டில்பூச்சிகளாகவே அமையும். அவ்வாறு அழிவுபூர்வ கூறுகள் மடிந்த பின்பு தான், ஆக்கபூர்வமான கூறுகளின் வளர்ச்சியானது வெளிப்படையாகும்.  இந்த செயல்நுட்ப அடிப்படையிலேயே, தனிமனிதரும், அமைப்புகளும், சமூகமும் பயணிக்கின்றன. 

1980களில் இலங்கையில் ஈழத்தமிழர்களின் ஆதரவுடன் வளர்ந்து வந்த ஈழ விடுதலைக்குழுக்களின் 'கெட்ட நேரமாக', 1980களில் தமிழ்நாட்டில் தடம் பதித்தார்கள்.

அந்தந்த குழுக்களின் பண வசதி, ஆயுதவலிமைக் கவர்ச்சியைப் பொறுத்தும், ஒட்டுண்ணி நோஞ்சான்களாகப் பயணித்த நபர்களின் யோக்கியதையை பொறுத்தும்,

தமிழ்நாட்டில் வெளிப்பட்ட‌ ஈழ விடுதலை ஆதரவாளர்களையும், அவர்கள் இருந்த பகுதிகளையும், ஈழ விடுதலைக்குழுக்கள் அவரவர் வலிமைக்கேற்றவாறு கூறு போட்டுக் கொண்டார்கள். அந்த செல்வாக்கு போட்டியில், தமிழ்நாட்டில் அவர்களுக்குள் மோதல் சம்பவங்களும் அரங்கேறின.

பண பலம், சொந்த பத்திரிக்கை பலம், ஆயுத பலம், ஆட்கள் பலம் என்ற அடிப்படைகளில், அந்த போட்டியில் உமா மகேஸ்வரன் தலைமையிலான 'புளோட்'(PLOTE) முதல் இடத்திலும், சிரி சபாரத்தினம் தலைமையிலான, கருணாநிதி ஆதரவு பெற்ற 'டெலோ' (TELO) இரண்டாவது இடத்திலும், பிரபாகரன் தலைமையிலான 'விடுதலைப் புலிகள்' மூன்றாம் இடத்திலும் இருந்தார்கள். 'ஈ.பி.ஆர்.எல்.எஃப்' (EPRLF), 'ஈரோஸ்' (EROS) போன்ற இன்னும் சில குழுக்கள் அதற்கடுத்த இடங்களில் இருந்தார்கள்.

மற்ற குழுக்களின் தலைவர்களையும் ஆயுதப்பயிற்சி பெற்ற போராளிகளையும் ஈவிரக்கமின்றி ஒழித்து, விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழ்நாட்டில் எவ்வாறு வளர்ந்தது? என்பதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். 

மேற்குறிப்பிட்ட பதிவில், கீழ்வரும் பகுதியானது இங்கு கவனிக்கத் தக்கதாகும்.

‘'தமிழ்நாட்டில் முளை விட்டு ' தடம் புரண்ட‌' பிரிவினை போக்கும், இலங்கையில் 'ஆயுதப் போராட்டமாக' 'பாதை மாறிய' பிரிவினைப் போக்கும், 1980களில் சங்கமமான சமூக செயல்நுட்பத்தினை ஆராய்வதும் அவசியமாகி விட்டது.  TELO, PLOTE, EPRLF ஆகிய குழுக்களின் தலைவர்களையும், போராளிகளையும், ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்ற விடுதலைப்புலிகளை கண்டிக்காமல், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாக பயணித்த‌, அந்த குழுக்களின், தமிழ்நாட்டு ஆதரவாளர்களுக்கும், ஜெயலலிதாவை காலில் விழுந்து வணங்கி, பின் ஜெயலலிதாவின் மர்ம சிகிச்சை/மரணம் குறித்து, பாரபட்சமற்ற நீதி விசாரணை கோராமல், சசிகலாவின் காலில் விழுந்து வணங்கியவர்களுக்கும், வேறுபாடு உண்டா? அந்த சமூக செயல்நுட்பத்திலிருந்து விடுதலை ஆகாமல், தமிழ்நாட்டிற்கு மீட்சி உண்டா?’

'வன்முறை மூலமாக, ஒரு அரசை எதிர்த்து ஏன் வெற்றி பெற முடியாது? என்பதை ஈ.வெ.ரா அவர்கள் விளக்கியுள்ளார். 'பெரியார் தந்த புத்தியில்' பயணித்த 'பெரியார்' கட்சிகளில் உள்ள தொண்டர்கள் எவரும், 'எதுக்கு நாம் பிரபாகரனை ஆதரித்தோம்?' என்று கேட்டதாகத் தெரியவில்லை.

'முள்ளும் மலரும்' திரைப்படத்தில், 'எதுக்கண்ணே அந்த ஆளை அடிச்சீங்க?' என்று ரஜினியிடம் கேட்ட கேள்வியை,

எவரும் கேட்காத நிலையில், 1967 ஆட்சி மாற்றத்திற்குப் பின், தமிழ்நாடு இருந்தது. இன்றும் அவ்வாறே இருக்கிறதா?

சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்களில் சிலர், அவ்வாறு  இருக்கலாம். சீமான் கட்சியின் யோக்கியதை பற்றி ஏற்கனவே விவாதித்துள்ளேன். 

இன்றைய மாணவர்களும் நன்கு படித்த இளைஞர்களும் எப்படி இருக்கிறார்கள்?

தமது சொந்த வாழ்வில் 'இழிவான' சமரசங்களுடன், பொதுவாழ்வு வியாபாரிகளிடமிருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் பலன்கள் பெற்றுக்கொண்டு, மீடியா வெளிச்சத்துடன் முற்போக்காக வலம் வருபவர்கள் 'சாயமானது', இன்றைய மாணவர்களிடமும், படித்த இளைஞர்களிடமும் 'வெளுக்க' தொடங்கி விட்டது. தமது சொல்லுக்கும், வாழும் வாழ்வுக்கும், இடையிலான 'முரண்பாடுகளை', தமது 'எடுபிடி' வலைப்பின்னலின் துணையுடன், இனி மறைத்து வாழ்வதும், 'டிஜிட்டல் யுகத்தில்' கடினமே.

தமது சமூக வட்டத்தில் அநீதிகளையும், அயோக்கியர்களையும் சகித்துக் கொண்டு;

தமிழ்நாட்டு அரசியல்/உலக‌  கொள்ளைக்காரர்களில் ஒரு சாராரின் எடுபிடியாக இருந்து கொண்டு, மறுசாராரின் ஊழல்களையும், உலக அநீதிகளையும் எதிர்க்கும் 'பொதுவாழ்வு வியாபாரிகளாக' வாழாமல்;

இழப்புகளை சந்தித்து, சுயலாப நோக்கற்ற‌ பொது நோக்கில் பயணிக்கும் 'அறிவு ஜீவிகள்' எல்லாம், வணங்கத்தக்கவர்களே ஆவர்.

அத்தகையோரின் வளர்ச்சியும், எழுச்சியும் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வருவதால், பொதுவாழ்வு வியாபாரத்திற்கு ஆப்பு அடிக்கும் காலம் நெருங்கி வருகிறது. 

1949 இல் தி.மு.க தோன்றி, மைக்ரோ உலகத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர் மத்தியில் வேர் பிடித்து, அவரவர் சொந்த காசை செலவு செய்து தி.மு.க வளர்ந்தது. அவ்வாறு தி.மு.க வளர்ந்த போக்கில், காங்கிரஸ் கட்சியானது, மேக்ரொ உலகில் இருந்த தமது செல்வாக்கானது, மைக்ரோ உலகில் தி.மு.கவின் வளர்ச்சி மூலம் ஆபத்துக்குள்ளாகும் அபாயம் பற்றி சுதாரிக்காமல் இருந்ததாலேயே, தமிழையும், தமிழ் உணர்வையும் தி.மு.க-வானது தமது சுயநல அரசியலுக்காக‌ சிறை பிடித்து, தேசியத்திற்கு எதிராக வளர்க்க முடிந்தது. அதன் தொடர்ச்சியாகவே, 1967இல், ராஜாஜியின் துணையுடன், தி.மு.க  ஆட்சியைப் பிடித்தது.  அதன்பின் தொண்டர்களுக்கு குவார்ட்டர், பிரியாணி, பணம், கட்சியில் கீழிருந்து மேல் வரை, சர்க்காரியா குறிப்பிட்ட 'அறிவியல் ஊழல்' வழிகளில் பணம் சேர்த்தல் உள்ளிட்ட‌ ஆதாய அரசியலில்  தி.மு.க சிக்கியது. அந்த போக்கில்,, 1967க்கு முந்தைய காங்கிரசை விட இன்னும் மோசமாக மேக்ரோ உலகிலேயே ஆதாய அரசியல் பலத்தில் பயணித்து வருகிறது. 

ஆதாய அரசியலில் பயணிக்கும் கட்சிகள் தி.மு.க உள்ளிட்டு எந்த கட்சியாக இருந்தாலும், அக்கட்சிகள் எல்லாம், அடித்தளம் செல்லரித்த கட்டிடங்கள் பூமிக்குள் புதைவது போல, புதைபடும் காலமும் நெருங்கி வருகிறது. ஈ.வெ.ரா மற்றும் ராஜாஜி அகியோரின் நிறைகுறைகளில் இருந்து பாடங்கள் கற்று, மேலே குறிப்பிட்டவாறு நாம் முயற்சித்தால்; பொதுமக்களுக்கும், பொதுச்சொத்துக்களுக்கும் சேதம் அதிகமின்றியும், விரைவிலும் அது நடக்கும். 

அதற்கு முதல் படியாக, தம்மையும் தமது குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு, ஊரான் வீட்டுப்பிள்ளைகளைத் தூண்டி தீக்குளிக்கவும், பொதுமக்களுக்கும், பொதுச்சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கவும் தூண்டி வரும் நோஞ்சான் தலைவர்களையும், நோஞ்சான் கட்சிகளையும் ஓரங்கட்ட வேண்டும்.

அதற்கு முன்னுதாரணமாக, நமது சமூக வட்டத்தில் இருந்து அத்தகையோரை அகற்ற வேண்டும்; அதனால் விளையும் இழப்புகளை விரும்பி ஏற்று.

அத்தகையோரிடமிருந்து விலகி வாழ்வதானது, நமது.நோய் எதிர்ப்புத் திறனை (immunity) வளர்க்கவும் உதவும்

தமிழ்நாட்டின் சமூக சூழலும் அதற்குச் சாதகமாக கனிந்து வருகிறது.

தமிழ்நாட்டில் மைக்ரோ உலகமானது, மேக்ரோ உலகத்திலிருந்து 'அரசியல் நீக்கம்' (Depoliticize) காரணமாக துண்டிக்கப்பட்டு பயணித்து வருவதையும்;

மேக்ரோ உலகமானது 'தன்மான மீட்பு' நோக்கி, மாற வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளது என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (‘தமிழ்நாட்டில் மைக்ரோஉலகம் கோவணம் கட்டியவர்கள் ஊராகவும், மேக்ரோஉலகமானது அம்மணங்களின் ஊராகவும்?’; 

மடியில் கனமிருந்தால், டிஜிட்டல் யுகத்தில், அந்தரங்கம் எல்லாம் தொந்திர(வு)ங்கமே. எனவே தமிழ்நாட்டில் ' வீரியமாக' செயல்பட்டு வரும் 'ஊழல் பிரமீடை' ஒழிப்பது என்பது மத்திய அரசுக்கு சாத்தியமே. (https://tamilsdirection.blogspot.com/2017/07/blog-post_12.html)

தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுமே மத்தியில் பா.ஜ.க கூட்டணி அரசில் இடம் பெற்ற கட்சிகளாகும். அது தெரிந்தும், கருணாநிதி மற்றும் சசிகலா குடும்பங்களுடன் ஒட்டிப் பயணித்த இந்துத்வா எதிர்ப்புக்கட்சிகள் எல்லாம் நோஞ்சான் கட்சிகளே ஆகும். 

எனவே தமிழ்நாட்டில் 'வீரியமாக' செயல்பட்டு வரும் 'ஊழல் பிரமீடை' ஒழிப்பது என்பது மத்திய அரசுக்கு சாத்தியமே.  கருணாநிதி, நடராஜன் இருவரும் மறைந்துள்ள சூழலில், சசிகலாவும், ஸ்டாலினும் மத்தியில் ஆளுங்கட்சியை வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரிக்க வேண்டிய நெருக்கடியில் சிக்கியிருந்தால் வியப்பில்லை.

எந்த கட்சியில், எந்த கொள்கையில் இருந்தாலும், தமிழ்நாட்டை ஊழலில் சூறையாடியவர்களுக்கு நெருக்கமாகப் பயணித்த எவரும் தமிழ்நாட்டை உண்மையில் நேசித்தவர்களாக இருக்க முடியுமா? தமிழ்நாட்டை நேசிக்காமல், இந்தியாவை நேசிப்பது ஏமாற்று வேலையாகாதா? அத்தகையோரின் பேச்சில் எழுத்தில் இனியும் நாம் ஏமாற வேண்டுமா? நமது ஆதரவில் அந்த நோஞ்சான்கள் மத்தியில் ஆண்ட, ஆளும் கட்சிகளை மிரட்டி ஊழல் குடும்பங்களுக்கு உதவிய போக்கு இனியும் தொடருவதானது, தமிழ்நாட்டுக்கு நல்லதா?

தம்மிடம் ஏமாந்த அமைப்பில் இருந்து ஆற்றலை உறிஞ்சி அச்சுறுத்தும் அளவுக்கு பூதாகாரமாகக் காட்சி தரும் நோஞ்சான் தலைவர்கள் எல்லாம், அந்த ஆற்றல் உறிஞ்சும் தொடர்பைத் துண்டித்தவுடனேயே, காற்று போன பலூன் போல, தமது சுய நோஞ்சான் தோற்றத்திற்கு விரைவில் சுருங்கி விடுவார்கள். மத்தியில் தாமதமின்றி ஊழலை ஒழிக்கும் அரசு செயல்படுமானால்தமிழ்நாட்டு நோஞ்சான் தலைவர்கள் எல்லாம், அவ்வாறு தமது சுய நோஞ்சான் தோற்றத்திற்கு சுருங்கி சமூக குப்பைத்தொட்டியில் ஒதுங்கி விடுவார்கள். 

எனவே தமிழின் தமிழ்நாட்டின் மீட்சியும் நெருங்கி வருகிறது.

No comments:

Post a Comment