Monday, July 27, 2020


'கறுப்பர் கூட்டம்' பிராமண எதிர்ப்பு அமைப்புகளுக்கு


ஆள் சேர்த்துக் கொடுக்கும் முகவர்களான‌ (Recruiting agents) பிராமணர்கள்?


சசிகலாவின் இன்னொரு 'பி.டீமாக' தமிழக பா.ஜ.க?



கந்த சஷ்டி கவசம்சர்ச்சையில் 'கறுப்பர் கூட்டம்' சார்பாக கைதானவர்களில் மூளைச்சலவைக்கு உள்ளாகிய அப்பாவிகளும் இருக்கக்கூடும், என்பதை மாரிதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு மூளைச்சலவைக்கு உள்ளான இளைஞர்கள் தமிழ்நாடெங்கும் இருப்பார்கள் அல்லவா?

ஸ்டாலின் கட்சி அல்லது சசிகலா கட்சி ஆகிய இரண்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மூளைச்சலவைக்குள்ளாக்கிய 'பெரியார்' கொள்கையாளர்கள் ஆட்சிக்கு வந்த கட்சியுடன் ஒட்டிப் பயணிக்கும் வாய்ப்புகளும் இருக்கின்றன.

எனவே 'கறுப்பர் கூட்டம்' பிரச்சினையை 'தி.மு.க எதிர்ப்பு' என்ற திசையில் குவியப்படுத்துவதில் உள்ள படுகுழி பற்றிய எச்சரிக்கையும் அவசியமாகும்.

ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க, சசிகலா தலைமையிலான அ.இ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அந்த ஆட்சியானது 'தாய்க்கழகம்'  தி.கவுக்கு நேசமான ஆட்சியாக இருக்கும். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின், சசிகலாவை ஆதரித்து தி.க தலைவர் கி.வீரமணி கீழ்வரும் கருத்தினை வெளிப்படுத்தியது மாரிதாஸுக்கு தெரியாதா?

"சசிகலா இதுவரை கேடயமாய்ப் பயன்பட்டவர். இனி வாளும்-கேடயமாய் நின்று அதிமுகவுக்குப் பயன்படுவார் என்பது நம் இனமானக் கண்ணோட்டமாகும். போகப்போக இது மற்றவர்களுக்குப் புரியும். வாய்ப்பே தராமல் எவரையும் மதிப்பிடலாமா? நமக்கு தனிப்பட்ட எந்த அபிமானமும் இல்லை. இந்தக் காலகட்டத்தில் தாய்க்கழகம் ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றியுள்ளது'' என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்."

ஸ்டாலின் கட்சி அல்லது சசிகலா கட்சி ஆகிய இரண்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், பொதுவாழ்வில் கொள்ளையடித்த பணத்தைப் பாதுகாக்க, மத்திய அரசுடன் நேசமான கட்சியாகவே இருக்கும்.

பிராமண எதிர்ப்பிற்கு தூபம் போட்டுக் கொண்டே, பிராமண‌ர்களையும் அனுசரித்து, இரு சாராரையும் முட்டாள்களாக்கிய 'சமூக கீரி பாம்பு சண்டையை' தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தி, அதன் மூலமாக வெற்றிகரமாக அரசியல் நடத்தியவர் தி.மு.க தலைவர் கருணாநிதி ஆவார். 

கருணாநிதி குடும்பத்துக்கும், சசிகலா நடராஜன் குடும்பத்துக்கும் நெருக்கமான 'பெரியார்' ஆதரவாளர்களுக்கும், இருவரில் எவர் ஆட்சியில் அமர்ந்தாலும் அவர்களுக்கு நல்லதே ஆகும்.

இன்று தி.மு.க ஆளுங்கட்சி இல்லை. அப்படிப்பட்ட சூழலில் தி.மு.கவை  மட்டுமே குவியப்படுத்தி எதிர்ப்பது, யாருக்கு லாபமாகும்?  (குறிப்பு கீழே: சசிகலாவின் இன்னொரு 'பி.டீமாக' தமிழக பா.ஜ.க ?)

2014இல் பிரதமரான மோடியின் ஆட்சியில், தமிழ்நாட்டில் ஊழல் ஒழிப்பானது வடிவேல் பாணி காமெடியாகி விட்டது. எனவே பா.ஜ.கவிலும், மத்திய அரசிலும் 'திராவிட ஊழல் பாதுகாப்பு கவசங்கள்' இருக்கக்கூடும். அது உண்மையானால், 'கறுப்பர் கூட்டத்தின்' பின்னணியில் செயல்பட்ட செல்வாக்கான நபர்கள் சிக்குவார்களா? தப்பிப்பார்களா? என்ற குழப்பத்திற்கும் இடம் இருக்கிறது.

தமிழ்நாட்டின் ஊழல் வலைப்பின்னல் நீடிக்கும் வரையில், எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், மேற்குறிப்பிட்ட மூளைச்சலவைகுள்ளான இளைஞர்களை பலிகடாக்கள் ஆக்கி, வெவ்வேறு பெயர்களில் புதிது புதிதாக 'கறுப்பர் கூட்டம்' போன்ற அமைப்புகளின் கண்ணாமூச்சி ஆட்டங்கள் தொடரும்..

கந்த சஷ்டி கவசம்  சர்ச்சையில் 'கறுப்பர் கூட்டம்' குற்றவாளிகள் கைதாகியிருப்பதானது, தாற்காலிக வெற்றியே, நிரந்தர வெற்றி அல்ல என்றும், மாரிதாஸ் சரியாகவே கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்து கடவுள்களை இழிவு படுத்தும் போக்கிலிருந்தும், பிரிவினைவாதப் போக்கிலிருந்தும் தமிழ்நாட்டை மீட்டு, நிரந்தர வெற்றி பெற இரண்டு வழிகளே உள்ளன.

1. கொள்கைப் போராட்டம் (Theoritical) 

2. செய்முறைப் போராட்டம் (practical)


      1. கொள்கைப் போராட்டம் :

உணர்ச்சிபூர்வ பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் ஏமாந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களை எல்லாம் மூளைச்சலவைக்குள்ளாக்கிய 'பெரியார்' கொள்கையாளர்கள் எல்லாம் அறிவு வலிமையற்ற நோஞ்சான்களா ? என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது. 

ஏமாந்த இளைஞர்களை எல்லாம், மூளைச்சலவைக்குள்ளாக்கி வரும் 'பெரியார்' கொள்கையாளர்கள் எல்லாம் அறிவு வலிமையற்ற நோஞ்சான்களே; என்பது தொடர்பான அறிவுபூர்வ விவாதத்தினை முன்னெடுக்க வேண்டும்.

இந்துத்வா ஆதரவு முகாம்களில் எச்.ராஜா, மாரிதாஸ் உள்ளிட்ட இன்னும் சிலர் ஈ.வெ.ரா மற்றும் அண்ணா தொடர்பாக முன்வைக்கும் இரண்டும் கெட்டான் போக்கிலான விமர்சனங்கள் எல்லாம், மேற்குறிப்பிட்ட முயற்சிகளுக்கு தடைகளாக நீடித்து வருகின்றன. 
(https://tamilsdirection.blogspot.com/2020/07/blog-post_22.html)

'நேர்மையான இந்துத்வா ஆதரவாளர்களின் பார்வைக்கு;
இந்துத்வா முகாம்களிலும் 'கறுப்பர் கூட்டம்'?
'கறுப்பர் கூட்ட சமூக நோயை' பாரபட்சமின்றி எவ்வாறு எதிர்ப்பது?; 
https://tamilsdirection.blogspot.com/2020/07/blog-post_27.html

2. செய்முறைப் போராட்டம்

எச்.ராஜாவும் இந்துத்வா முகாமில் அவரை ஆதரிப்பவர்களும், தமிழ்நாட்டில் 'பிராமண எதிர்ப்பை' குறைக்கும் நோக்கிலாவது, சென்னை ஐ.ஐ.டியில் விஞ்ஞானி வசந்தா கந்தசாமிக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து குரல் கொடுத்திருந்தால், நீண்ட கால போராட்டத்திற்குப் பின், உயர்நீதிமன்றம் மூலமே அவருக்கு நீதி கிடைக்க வேண்டிய அளவுக்கு (Madras HC slams IIT-M’s gross irregularities in selection of professors; https://www.deccanchronicle.com/nation/in-other-news/230816/madras-hc-slams-iit-ms-gross-irregularities-in-selection-of-professors.html ) தாமதமாகியிருக்காது. இன்று 'கறுப்பர் கூட்டம்' போன்ற அமைப்புகளை ஆதரிக்கும் 'பெரியார்' கட்சிகள் அவரின் போராட்டத்திற்கு ஆதரவளித்து 'நல்ல பேர்' வாங்கியிருக்க முடியாது. சமுக நீதிக்கு எதிராக பாரபட்ச போக்கு இருக்கும் வரை, பிராமண எதிர்ப்பு சூழல் தொடரும். பிராமண எதிர்ப்பும் சரி, பூணூல் அறுப்பு சம்பவங்களும் சரி, 1944இல் திராவிடர் கழகம் தொடங்குவதற்கு முன்பே இருந்திருக்கின்றன. திராவிடர் கழகம் தொடங்கிய பின் பூணூல் அறுப்பு சம்பவங்கள் எண்ணிக்கையில் குறைந்து விட்டதாக, ' ஈ.வெ.ராவின் 'பட்டுக்கோட்டை சொற்பொழிவு' ஒலிப்பதிவில் நான் கேட்டிருக்கிறேன்.

ஈ.வெ.ரா அவர்கள் வலியுறுத்திய 'காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு' அவரின் கொள்கையை அறிவுபூர்வமாக உட்படுத்தி வளர்த்தெடுக்காமல், உணர்ச்சிபூர்வமாக பயணித்து 'சருகாகி' வரும் ' பெரியார்' கட்சிகளுக்கு எச்.ராஜா போன்றவர்கள் ஆக்ஸிஜன்வழங்கி 'உயிருடன் நீடிக்க உதவி வருவதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்
(‘ஈ.வெ.ரா அவசர சிகிச்சைப் பிரிவில்; காப்பாற்றப் போவது எச்.ராஜாவா? திராவிடர் தளமா?’; 

பேரா. வசந்தா கந்தசாமி பிரச்சினை ஊடகத்தின் மூலமாக பிரபலமான ஒன்றாகும்.

ஊடகத்தில் வெளிவராமல், தமிழ்நாட்டில் ஆங்காங்கே சில பிராமணர்கள் மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் தமக்கு தெரிந்த வழிகளில் போராடி வருகிறார்கள்.

உதாரணமாக,  பிராமணரல்லாத பேராசிரியர் ஒருவர்  கல்லூரிகளில், பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில், ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொண்ட காலத்தில் 'பிராமணரல்லாதார்' என்ற அடிப்படையில் பிராமணப் பேராசிரியர்களிடம் நிறைய கொடுமைகள் அனுபவித்து, மனம் தளராமல் உழைத்து முனைவர் பட்டம் பெற்று, அந்த துறையில் நிபுண‌ரானார். தன்னிடம் முனைவர் பட்டம் பெற, பிராமண‌ரல்லாதாரை மட்டுமே ஆய்வு மாணவர்களாக எடுத்தார். தனது நண்பரான பிராமணப் பேராசிரியரிடமே நன்கு படிக்கும் பிராமணரல்லாத மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, தன்னிடம் அனுப்பி வைக்குமாறு கோரியிருக்கிறார். அதை என்னிடம் தெரிவித்த அந்த பிராமணப் பேராசிரியர், அதற்காக அவர் மீது குறை சொல்லவில்லை.

பிராமண‌ர்களிடம் பாரபட்சத்தை அனுபவித்த ஒரு பிராமணரல்லாத பேராசிரியர் வெளிப்படையாக, ஆக்கபுர்வமாக பிராமண‌ரல்லாதார் வளர்ச்சிக்கு உதவினார் , தனது பிராமண நண்பர்களே அதை குறை சொல்லாத வகையில். 

சாதி அடிப்படையிலான பாரபட்சத்தை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு போராடி வருவதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். 

தமிழ்நாட்டில் சுயலாப நோக்கற்ற இந்துத்வா ஆதரவாளர்கள் விழிப்புடன் தாம் இருக்கும் பகுதிகளில் பாரபட்சத்துடன் செயல்படும் பிராமணர்களைக் கண்காணித்து திருத்தும் நடவடிக்கைகள் வெளிப்பட வேண்டும்.

ஏனெனில் தமிழ்நாடெங்கும் 'கறுப்பர் கூட்டம்' போன்ற பிராமண எதிர்ப்பு அமைப்புகளுக்கு ஆள் சேர்த்துக் கொடுக்கும் முகவர்கள் (Recruiting agents) போல, அது போன்ற பிராமணர்கள் பங்களித்து வருகிறார்கள்.

அதைவிட இன்னும் பாதகமாக, தமிழர்களில் பெரும்பாலோர் பிராமணர்களை 'வெளிக் குழுவாக' (out-group is a social group with which an individual does not identify; https://en.wikipedia.org/wiki/In-group_and_out-group#Out-group_derogation) கருதவும், தேசியத்தை தமிழ்நாட்டில் வேர் பிடிக்க விடாமலும், அது போன்ற பிராமணர்கள் பங்களித்து வருகிறார்கள்.

இன்றும் அது போன்ற பிராமணர்களால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள 'பெரியார்' கட்சிகளின் பொறுப்பாளர்கள் மூலமாகவே, நிவாரணம் தேடும் போக்கு தொடரும். அது தொடரும் வரை, மாரிதாஸ் குறிப்பிட்ட‌  நிரந்தர வெற்றி கிடைக்காது.

அது மட்டுமல்ல, தமக்கும் தமக்கு தெரிந்த பிராமணர்களுக்கும் இடையில் உள்ள சொந்த பிரச்சினைகளை 'பார்ப்பன ஆதிக்க வெளிப்பாடு' என்று பொய் சொல்லி, 'பெரியார்' கட்சிகளை முட்டாள்களாக்கி, அவர்களின் ஆதரவைப் பெற்ற சம்பவங்களும் உண்டு. அதனையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

இன்று உணர்ச்சிபூர்வமாக இந்துத்வா எதிர்ப்பில் பேசி, எழுதி வரும் அறிவுஜீவிகளில் எவரும் அனுபவித்திராத எதிர்ப்புகளை, ஜி.சுப்பிரமணிய ஐயர், மதுரை வைத்தியநாத ஐயர் உள்ளிட்டு இன்னும் பல பிராமணர்கள் தமது சொந்த பந்தங்களிடமிருந்து அனுபவித்தனர். அவர்களின் முயற்சிகளை பெரும்பான்மையான பிராமணர்கள் ஆதரித்திருந்தால், 'திராவிடர் கழகம்' தோன்றியிருக்காது. தி.க வளர்ச்சியின் போக்கில், ஆத்தீகத் தமிழர்களை உள்ளடக்கிய தமிழ் அமைப்புகளும் 'பிராமண எதிர்ப்பு' திசையில் பயணித்திருக்க மாட்டார்கள்.

காங்கிரசில் இருந்த போது, ஈ.வெ.ரா பல முறை முன்னெடுத்த 'வகுப்புரிமை' தீர்மானத்தை, ராஜாஜி, சத்தியமூர்த்தி உள்ளிட்ட பிரபலமான பிராமண தலைவர்களில் யாராவது ஒருவர் ஆதரித்திருந்தாலும்,

இன்றைய ஆர்.எஸ்.எஸ் தேசிய நிலைப்பாட்டில், அந்த காலக்கட்டத்தில் பயணித்த ஈ.வெ.ரா, 1925இல் காங்கிரசை விட்டு வெளியேறியிருக்க மாட்டார். அதன் தொடர்விளைவாக, இன்று தமிழ்நாடு 'கறுப்பர் கூட்டம்' சிக்கலைச் சந்தித்திருக்காது.

மேற்குறிப்பிட்ட‌ 1. கொள்கைப்போராட்டம் (Theoritical)  2. செய்முறைப் போராட்டம் (practiசல்) ஆகிய இரண்டு வழிகளிலும் முன்னேற வேண்டும். அப்போது தான் எதிரெதிர் முகாம்களில் உணர்ச்சிபூர்வ பரிமாற்ற பகையைத் தூண்டி பிழைத்து வரும் பொதுவாழ்வு வியாபாரிகளை வீழ்த்தி, நிரந்தர வெற்றியை ஈட்ட முடியும்.

பொது இடங்களில் இந்து கடவுள்களை கேலி செய்வதைக் கண்காணித்து ஆங்காங்கே முளையிலேயே கிள்ளும் அளவுக்கும் நிரந்தர வெற்றியை ஈட்ட முடியும்.

.தாம் வாழும் இடத்தில், பணியாற்றும் இடத்தில் உள்ள குறைகளைக் களையும் ஆக்கபூர்வ முயற்சிகளில் பாரபட்சமின்றி பங்களிப்பதன் மூலமாக நமது  வலிமையைக் கூட்டி, மேற்குறிப்பிட்ட எதிர்ப்பினை நாம் வெளிப்படுத்துவதும் அதிக பலனைத் தரும்.

1970களின் பிற்பகுதியில் தஞ்சை சரபோசி கல்லூரியில், 'பெரியார்' கொள்கையாளராக நான் பாரபட்சமின்றி முன்னெடுத்த போராட்டங்களை, எனது சக பிராமணப் பேராசிரியர்களும் ஆதரித்து வெற்றி பெற்ற அனுபவ‌ங்கள் மூலமாகவே, அதனை நான் உணர்ந்தேன்.

  
குறிப்பு:

'கறுப்பர் கூட்டம்' பிரச்சினை தேர்தல் அரசியல் பிரச்சினை அல்ல. தி.க, தி.மு.க, அ.இ.அ.தி.மு.க போன்ற திராவிடக்கட்சிகளின் பிடியில் தமிழ்நாட்டை சிக்க வைத்த 'குருட்டுப் பகுத்தறிவாளர்கள்' தொடர்புடைய பிரச்சினை. அறிவுபூர்வ எதிர்ப்பின் மூலமாக, அந்த மூலத்தினை (source) சமூக சருகாக்கி, சமூகக்குப்பைத்தொட்டியில் ஒதுக்கப்படும் வரையிலும்,

ஸ்டாலின் கட்சி அல்லது சசிகலா கட்சி ஆகிய இரண்டு கட்சிகளில் எந்தக்கட்சி ஆட்சியில் இருந்தாலும் தொடரும்.

'கறுப்பர் கூட்டம்' பிரச்சினையை 'தி.மு.க எதிர்ப்பு' என்ற திசையில் குவியப்படுத்தி,  அதனடிப்படையில் வரும் தேர்தலில் தி.மு.கவை வீழ்த்த வேண்டும்.' என்று தமிழக பா.ஜ.க ஆதரவாளர்கள் செயல்பட்டால் என்ன ஆகும்?

சசிகலாவின் இன்னொரு 'பி.டீமாக' தமிழக பா.ஜ.க இருக்கிறதா? என்ற கேள்விக்கு இடம் தரும்.

சசிகலா நடராஜன் குடும்பத்தின் 'ஏ டீம்'  (A-Team) ஆக தினகரன் கட்சியைக் கருதினால், ‘ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் தலைமையில் உள்ள ஆளும் கட்சியானது 'பி டீமா? (B team: The second-best team a club has) என்ற கேள்வி எழும் வகையில் ஆளும் கட்சி அமைச்சர்கள் சிலர் சசிகலாவிற்கு ஆதரவாக அவ்வப்போது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

சசிகலாவின் பினாமி ஆட்சியாக கூவத்தூரில் ஈ.பி.எஸ் முதல்வரானார். பின் ஓ.பி.எஸ் 'புரட்சி' நடந்தது. பின் அணிகள் இணைய ஓ.பி.எஸ் துணை முதல்வரானார். சசிகலா, மத்தியில் மோடி அரசு, தி.மு.க என்ற மும்முனையின் பின்னணியில் உள்ள அழுத்தங்களை இன்றுவரை வெற்றிகரமாக சமாளித்து வருகிறது ஈ.பி.எஸ் ஆட்சி.

எந்திரவியலில் இயக்கத்தன்மையில் (dynamic) உள்ள மூன்று திசைகளில் செயல்படும் விசைகளின் (Forces) தொகுவிளைவாக (Resultant) 'தற்காலிக சமநிலை' (Temporary Equilibrium) உருவாக வாய்ப்புண்டு. தமிழ்நாட்டு சமூக எந்திரவியலில், அத்தகைய சமநிலையில் ஈ.பி.எஸ் அரசானது நீடித்து வருகிறது.

சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த பின் தான், அது சசிகலாவின் 'பி டீமா?  இல்லையா? தெளிவாகும்.

கூடுதலாக, சசிகலாவின் இன்னொரு 'பி.டீமாக' தமிழக பா.ஜ.க இருக்கிறதா? என்ற கேள்விக்கும் இடம் தரும் வகையில்,

தி.மு.க எதிர்ப்பினைக் குவியப்படுத்தி, 'கறுப்பர் கூட்டம்' பிரச்சினை முன்னேறுவது சமூக அபத்தமாகும்.

No comments:

Post a Comment